42
காதல் எனும் கொரோனா
இடைவெளியைக் கடைபிடித்தால்
வாழ முடியும்…
நெருங்கினால்
வாழ்வே முடியும்
🌹🌹🌹🌹🌹🌹
"உன்னால தான் நான் இப்படி
ஆயிட்டேன்" என்ற படி ஈஸ்வரி கோபமாக மிருத்திகாவை நெருங்க... சற்று
பின்வாங்கிய மிருத்திகா...
"சொல்லு... நானும்
தெரிஞ்சுக்கிறேன்..." என்றாள்.
"உங்க அண்ணனுக்கு என்னைய பொண்ணு
பார்க்க கோயிலுக்கு வந்திருந்தாயே அன்னைக்குத்தான் நான் உன்னை முதன் முதலாய்
பார்த்தது. உன்னைப் பார்த்தவுடன் எனக்குப் பிடிச்சுப் போச்சு ... நாத்தனாராக
வரப்போகும் பெண் சிடுமூஞ்சியாக இருப்பாளோ என்று பயந்தேன் ஆனா நீ சிரித்த முகமாக
இருந்தாய். .. உன் அண்ணன்களும் எதற்கெடுத்தாலும் உன்னையே அழைத்தனர்... என்
சொந்தக்காரங்க எல்லார்கிட்டேயும் உன்னைப் பற்றி பெருமையாக பேசி
அறிமுகப்படுத்தினார்கள்... அப்பொழுதே என் அப்பா சொன்னார். 'மாப்பிள்ளை தங்கச்சி
தங்கச்சின்னு உயிர விடுவாரு போலம்மா. நீ ஜாக்கிரதையா இருக்கனும். ..
கல்யாணத்துக்குப் பின்னாடி அவருக்கு நீதான் எல்லாமா இருக்கனும்... நீ சொல்றத தான்
மாப்பிள்ளை கேட்கனும்.. அந்த மாதிரி சூதானமா நடந்துக்கனும். .. முதல் வேலையா அந்த
மீராவை மாப்பிள்ளை கிட்டயிருந்து தள்ளி நிறுத்து...' என்றார். ஆனா நான் உன் கூட
தோழியாகிவிடலாம்னு நினைச்சேன். உன்னுடன் தோழியாவது சுலபம்னு நினைச்சேன்...
அன்னைக்கு உன்னைத் தான் பாத்துகிட்டு இருந்தேன்... நீ என்னைப் பார்த்த போது நான்
உன்னைப் பார்த்து கொஞ்சம் தயக்கமாக சிரித்தேன்... முன்னபின்ன தெரியாத பொண்ணப்
பார்த்து சிரிக்கிறோமே... என்ன நினேப்பாளோன்னு தயக்கம் எனக்கு. ஆனா நீ என்னை
பார்த்து பளிச்சுனு சிரிச்ச... சின்ன யோசனை கூட உன் முகத்துல இல்ல...
ஆனா அப்ப எனக்குத் தெரியல, உன் சுபாவமே,
யார் உன்னைப் பார்த்து சிரித்தாலும் நீ சிரிப்பேன்னு... நான் ஒரு முட்டாள் நீ
சிரித்ததும், உனக்கும் என்னை பிடிச்சிருக்குனு நினைச்சேன்... எனக்கும் உன்
அண்ணனுக்கும் கல்யாணமே நடந்துவிட்டதைப் போல உணர்ந்தேன். உனக்கும் என்னைப்
பிடிச்சிருக்கிறதால, உன் அண்ணனிடம் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்வேன்னு
நம்பினேன். உன்னைதானே தலைல தூக்கி வச்சு ஆடுறானுங்க... ஆனா அதே பாசம் தான் என்னை
அவர்கிட்டயிருந்து பிரிச்சுடும்னு எங்கப்பா சொன்னப்ப நான் நம்பல..." என்ற
ஈஸ்வரி மிருத்திகாவையே பார்த்தபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். மிருத்திகா
எதுவும் பேசாமல் இருக்கவே மீண்டும் தொடர்ந்தாள்.
அந்த நேரத்துலதான் என் ஒன்று விட்ட
அண்ணன் அழகு சுந்தரம், உன்னைக் காட்டி, என்னிடம் விசாரித்தான். எனக்கு ரெட்டை
சந்தோஷம்... நீ எனக்கு அண்ணியாகிவிட்டால் உன் அண்ணனை என் கைக்குள் வைத்துக்
கொள்ளலாம்னு நினைச்சேன். என் அண்ணனிடம் உன்னைப் பற்றி ரொம்ப பெருமையா சொல்லி
ஏத்திவிட்டேன். .. ஏற்கனவே அவன் உன்னிடம் மயங்கிக் கிடந்தான்... நானும் ஏத்திவிட
வே அவனுக்கும் நம்பிக்கை வந்தது. அப்பொழுது தான் நீ மேகனைப் பார்க்க போன, 'அவ
தனியா போறா, போய் பேசு' ன்னு நான்தான் அழகுவை அனுப்பி வச்சேன். ஆனா திரும்பி
வந்தவன், நீ, மேகனை விரும்புகிறாயோன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்லி உங்களுக்குள்
நடந்த விஷயங்களை சொன்னான். அன்றைய நிலையில் மேகன் மட்டும் தான் உன்னை
விரும்புறான், உன்னிடம் அவனுடைய காதலை சொல்லவில்லைனு தப்புக் கணக்குப் போட்டேன்.
உங்களுக்குள் பழக்கம் வருவதற்குள் உன்னை என் அண்ணியாக்கிவிட நினைச்சேன். அதே சமயம்
உனக்குக் கல்யாணம் ஆகாததைக் காரணம் காட்டி, எங்க கல்யாணத்தைத் தள்ளிப் போட்டார்
உன் அப்பா. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்து,
அந்த இடத்தில் வைத்தே என் சொந்தக்காரங்க
கிட்ட, அண்ணனுக்கு உன்னை பிடிச்சிருக்கும் விஷயத்தை சொன்னேன். உடனே அவர்களும்
உன்னைப் பெண் கேட்க, அப்பொழுதும் உங்கப்பா பிடிகுடுக்காமல் பேசினார். எங்கப்பா
கிட்ட விஷயத்தைச் சொன்னேன். உடனே எங்கப்பா உங்கம்மாவிடமும், உன் அண்ணனிடமும்
பேசினார்.
அன்று வீட்டுக்கு வந்ததும் எங்கப்பா,
"கவலைப்படாதம்மா கதிர் உனக்குத் தான். மாப்பிள்ளையோட அம்மா சரியான மாங்கா...
சொந்த அறிவே இல்லாத பொம்பளை. அந்தப் பொம்பளைக்கு ஐஸ் வச்சுட்டு வந்திருக்கேன்.
இந்நேரம் அந்த பொம்பளை நமக்கு சாதகமாதான் பேசும்... அந்த வீட்ல அந்த பொம்பளை பேச்ச
தான் கேட்கிறானுங்க. .. இனி கவலை இல்லை. என்றார்.
'அடப்பாவி இப்படியெல்லாம் எங்க அம்மா
முன்னாடி சொல்ல மாட்டீங்களே?' என்று மிருத்திகா மனதிற்குள் நினைத்தாள்
நான் என் கல்யாணத்தைப் பத்தி கனவு காண
ஆரம்பிச்சுட்டேன். .. அப்போதுதான் நீ மேகனோட ஓடிப்போயிட்டனும் உங்களுக்குள்ள ஏதோ
பிரச்சனை வந்து நீ கடல்ல விழுந்துட்ட னும் செய்தி கிடைச்சது. அன்னைக்குத்தான்
எனக்கு, உன்மேல் இருந்த பிரியம் மாறி, உன்னால் என் கல்யாணத்துக்கு வில்லங்கம்
வந்துடுமோன்னு பயம் வந்தது....
என் கல்யாணம் என்னாகுமோன்னு நான்
பயந்ததும், எங்கப்பா உன்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தார்.. அங்குள்ள சூழ்நிலையைப்
பார்த்துட்டு வீட்டுக்கு வந்தவர், நீ கவலப்படாதம்மா, அந்தப் பொண்ணு
செத்துப்போனாலும், பிழைச்சு வந்தாலும், உன் கல்யாணம் நடக்கும்னார்.
'எப்படிப்பா?' னு கேட்டதுக்கு,
செத்துட்டாள்னா பெரிய பீடை ஒழிஞ்சது... அதோட, எழவு வீட்ல நல்ல காரியம் நடத்தனும்னு
சொல்லி கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடுவேன்... இல்ல... பிழச்சுக்கிட்டாள்னா அழகு பெரிய
தியாகி, கெட்டுப்போன பொண்ணுக்கு வாழ்க்கை குடுப்பான்னு சொல்லி அழகுக்கு கல்யாணம்
பண்ணிவச்சுடுவேன். 'னார்.
'நல்ல அப்பா!' என்றது மிருத்திகாவின்
மனம்.
அப்பக்கூட, நீ கெட்டுப் போயிருக்க மாட்டேன்னு
அழகுக் கிட்ட சொன்னேன். அதுக்கப்புறம் எங்கப்பா சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல. ..
நீ உங்கம்மாகிட்ட அடி, உதை வாங்கியும் கூட அழகுவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல. ..
உனக்கு கல்யாணம் நடக்காம உங்கண்ணன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டான். ..
அப்பகூட நான், மீராவுக்கு அழகுவை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைனா விட்டுடுங்கப்பா.
என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னேன். எங்கப்பா அதை ஒத்துக்கல. ..
உங்கம்மாவை கையில போட்டுகிட்டு உன்னை எங்க அழகுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்
திட்டம் போட்டார். ஆனா உங்கண்ணனோட ஊரைவிட்டே வந்துட்ட... அப்பாடி! தொலைஞ்சான்னு
சொல்லி, உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சார் எங்கப்பா. உன் வீட்டில், வேலைக்காரியைப்
போல எல்லா வேலையும் செஞ்சேன்... உன் ஆத்தாளுக்கு கால்கூட அமுக்கிவிட்டேன். ஏன்?...
அது என் புகுந்த வீடுன்னு நெனச்சுதான் சந்தோஷமா அம்புட்டு வேலையும் செஞ்சேன். உன்
அண்ணனும் கல்யாணத்துக்கு சம்மதிச்சான். மறுபடியும் நம்பிக்கையோட என் வீட்டுக்கு
வந்தேன். அதுவரை அடங்கி உன் அண்ணன் வீட்டில இருந்தவ கொழுப்பெடுத்து எங்கேயோ
ஓடிப்போயிட்டனு தெரிஞ்ச அன்னைக்குத்தான் உன்னை நான் முழுசா வெறுத்தேன். இனி உன்
மூஞ்சியிலேயே முழிக்கக் கூடாதுன்னு முடிவுக்கு வந்தேன்...
ஆனா உன் அண்ணன் மறுபடியும் முருங்கை
மரத்தில் ஏறிட்டான். அதுவரை, மீராவுக்கு கல்யாணம் ஆகாம நான் கல்யாணம் பண்ணிக்க
மாட்டேன்னு சொன்னவன், நீ ஓடிப்போனதுக்கு எங்கப்பா, பெரியப்பா தான் காரணம்னு நீ
சொன்ன பொய்யை நம்பி, யாரைக் கட்டினாலும் ஈஸ்வரியை கட்டிக்க மாட்டேன்னுட்டான். நீ
ஓடிப்போனதுக்கு என் தலையில் மொத்தமா இடி விழுந்தது..." என்றவளிடம்
"நிஜமாவே உங்க பெரியப்பா
சொல்லித்தான் நான் என்...." என்று கூறிய மிருத்திகாவை,
"நிறுத்து டி! " என்று
ஆங்காரமாய் கத்தியபடி மிருத்திகாவை அடிக்க ஈஸ்வரி கையை ஓங்க, அப்பிடியே பிடித்தாள்
மிருத்திகா.
"கை என் மேல் பட்டுச்சு, கையை ஒடைச்சு
ஒன்னுக்கும் உதவாம பண்ணிடுவேன்." என்று கூறி, ஈஸ்வரியின் கையை ஒரு இறுக்கு
இறுக்கி உதறினாள் மிருத்திகா.. பிறகு,
'இவ இருக்கும் நிலையில் சொன்னா புரியாது'
ன்னு அமைதியாக பார்த்தாள் மிருத்திகா.
'அம்மாடிஈஈ! டீச்சர் வேலைக்குப் போனதால,
இவ கை காச்சு போயி இரும்பு மாதிரி இருக்கே! ஒரு பிடிதான் புடிச்சா, வலி கொல்லுதே!'
என்று அதிர்ந்து சற்று தள்ளி நின்றபடி தொடர்ந்தாள்
"உன் பொய்யை நம்ப நான் என்ன உங்கண்ணன்கள்
மாதிரி கேனை சிறுக்கியா? யார் கிட்ட உன் புளுகு மூட்டையை அவுத்து விடுற? உங்கண்ணன்
எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்ச பிறகு எங்க பெரியப்பா உன்னை ஏன் தொந்தரவு பண்ண
போறாரு?"
"உண்மையை சொன்னா நீ கேட்கும்
நிலையில் இல்லை... நீ சொல்லு." என்று மிருத்திகா கூற, அவளை நம்பாத பார்வை
பார்த்தபடி தொடர்ந்தாள் ஈஸ்வரி.
"முடிஞ்சது என்னோட கல்யாண கனவுகள்.
கல்யாணத்துக்குப் பின்னாடி எப்படி இருக்கனும்? அப்படி இப்படினு என்னவெல்லாம்
நினைச்சிருப்பேன்? எத்தனைக் கனவுகள் கண்டிருப்பேன். ..உன் அண்ணனுக்கு என்னென்ன
பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டு அதையெல்லாம் எனக்கு பிடிச்சதா ஆக்கினேன். இல்ல
தெரியாமதான் கேட்கிறேன், முன்னபின்ன தெரியாத, நல்லவனா, கெட்டவனா கூட தெரியாம,
குடும்ப பின்னணி தெரியாம, அவனுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்குமான்னே தெரியாம, நீ
பண்ற காதல் உயர்ந்ததுன்னா... இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்...ன்னு
பெத்தவங்களால அடையாளம் காட்டப்பட்டு, நல்ல பையன், நல்ல குடும்பம் னு அறிமுகம்
செய்யப்பட்ட பிறகு, நான் உன் அண்ணனை நினைத்தது மட்டும், எந்த விதத்தில் குறைந்தது?
எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? எத்தனைநாள் சோறு, தண்ணி இறங்காம
அழுதுகிட்டு இருந்திருப்பேன்... எத்தனைக்கெத்தனை அழுதேனோ, அத்தனை தூரம் உன்னை
வெறுத்தேன்... உங்க அண்ணனை மறக்க முடியாமல், அவனுக்கு பிடித்ததுனு நான் செய்த
எல்லாத்தையும், சாப்பாடு விஷயத்தில் கூட எல்லாத்தையும் ஒரேயடியா தூக்கி எறிய
முடியாம அழுதேன். அவனுக்கு பிடிச்ச கலர்னு ஆசைஆசையாய் எனக்கு எடுத்த டிரஸ்ஸை
எல்லாம் எரித்தேன். .. என்னையே எரிச்சது மாதிரி துடிச்சேன். .. என்னை இந்த
நிலைக்கு ஆளாக்கிய உன்னை, நான் துடிச்ச மாதிரி துடிக்க வைக்க நினைச்சேன்...
எங்கப்பாட்ட சொன்னேன், "என்
கல்யாணத்தை நிறுத்தியவளுக்கு இந்த ஜென்மத்தில கல்யாணமே நடக்கக்கூடாதுன்னு
சொன்னேன்... மேகனோட மட்டுமில்லை, அழகுகூடவுமே உனக்கு கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு
சொன்னேன்.
"உன்னை இந்த பாடு படுத்துனவளை நான்
கல்யாணம் பண்ணுவேனா?" னு அழகு உன்திசைக்கே ஒரு கும்பிடு போட்டு விலகினான். ..
மேகன் உயிரோட வர சாத்தியமில்லைனு தெரிஞ்சது... எனக்கு பத்தல... கல்யாணம்
மட்டுமில்லை உனக்கு ஆதரவுன்னு யாரும் இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன். உங்கம்மாவை
உனக்கெதிரா தூண்டிவிட்டுக்கிட்டே இருந்தோம்... உறவுகள் இருந்தும் நீ அனாதை மாதிரி
ஹாஸ்டலில் சேர்ந்த. அந்த சமயத்துல உங்கண்ணனுக்கு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிவச்சாங்க
உங்கப்பாவும், உன் பெரிய அண்ணனும்... எனக்கு உடம்பெல்லாம் பத்தி எரியிற மாதிரி
இருந்துச்சு...
இனி நீ, உன் குடும்பத்தோட
சேரக்கூடாதுன்னு உங்கம்மாவுக்கு வெறியேத்தினோம். ஒரு வேலை, பார்க்காம உக்கார வச்சு
சோறு போட்ட மருமகளையும் அதான் தீபாவை, பிரிச்சுட்டேன்னு உங்கம்மாவுக்கு, உன்மேல்
இருந்த கோபத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டேன். அப்பப்போ எங்க வீட்டுக்கு
உங்கம்மாவை வரவச்சு, அவ சாப்பிட்ட தட்டைக் கூட கழுவ விடாம, உங்கம்மாவை என் தலைல
வச்சு தாங்கின மாதிரி நடிச்சேன்... சோம்பேறி பொம்பளை, மூனு நேரமும் உக்கார வச்சு
சோறு போட்டதுக்கு நல்லாவே எனக்கு விசுவாசமா இருந்தா... எவ்வளவோ நல்லா இருந்திருக்க
வேண்டிய உங்க குடும்பம், அந்தளை, சிந்தளையாக சிதறிப்போனதற்கு நீ மட்டுமே காரணம்னு
உங்க அம்மாவை நம்ப வச்சோம். .. உங்கம்மாவுக்கு உன்னைக் கண்டாலே ஆகவிடாம
பண்ணினோம்... அவள நாங்க சொன்னபடி யெல்லாம் ஆட வைச்சோம். .." ஹா ஆஆஆ. ...
வாயைத் திறந்து தொண்டை வழியாக மூச்சை வெளியிட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு
தொடர்ந்தாள் ஈஸ்வரி.
“அதுக்கப்புறமும் உன்னை வேவு
பார்த்துக்கிட்டே இருந்தேன்... நீ போற வர்ற இடத்துக்கெல்லாம் உன்னை
பின்தொடர்ந்தபடியே இருந்தேன். உன் அண்ணன்கள் குடும்பத்தையும், உன் கிட்டயிருந்து
பிரிக்க எவ்வளவோ கஷ்டப்பட்டேன். உன் அண்ணிகளை உனக்கெதிரா திருப்ப பல தடவை
என்னென்னவோ செஞ்சு பார்த்தேன்... ஆனா என்னால அது முடியல... அவளுக உங்கம்மா மாதிரி
இல்ல... புத்திசாலிகளா இருந்து தொலைச்சாளுக... என்னால ஒன்னும் பண்ண முடியாம,
தொலையட்டும்னு விட்டுட்டேன்... ஆனா அவங்க வீட்லயும் நீ நிரந்தரமா தங்கிட
கூடாதுன்னு, அப்பப்ப உங்கம்மாவுக்கு வெறியேத்தி உங்கண்ணன் வீடுகளுக்கு போகச்
சொன்னேன். நான் நினைச்ச மாதிரியே உங்கம்மாவுக்கு பயந்து கிட்டு உன்னை ஹாஸ்டலிலேயே
வைத்திருந்தார்கள். நான் இருக்க வேண்டிய இடம்னு நித்யாவையும் உங்கம்மாவுக்கு
ஆகவிடாம பாத்துக்கிட்டேன்.
நா...லு வருஷம்... உன் முகத்துல இருந்த
சிரிப்பு மொத்தமா அழிஞ்சுடுச்சு. கண்ணுல எப்பவுமே சோகம் இருந்துச்சு. தினமும்
கோயிலுக்கு போயி, அழுதுகிட்டு இருந்த... தனியா கோயில் மண்டபத்துல உக்கார்ந்து கோயில்
கோபத்தையே வெறிச்சு பார்ப்ப... முடிஞ்சது உன் வாழ்க்கையே முடிஞ்சுருச்சுன்னு
சந்தோஷப் பட்டேன்.
அதுக்கப்புறம்தான் எங்கப்பா கிட்ட வேற
கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். எங்க வீட்ல மறுபடியும் சந்தோஷம் திரும்புச்சு....
எனக்கு மாப்பிள்ளை பார்க்க, என்னுடைய ஜாதகத்தை புரோக்கர் கிட்ட குடுத்தார்
எங்கப்பா.
ஆனா! நாங்க எதிர்பார்க்காத ஒன்னு
நடந்துச்சு...
அப்படி என்ன நடந்திருக்கும்?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
❤❤❤❤❤❤
1 Comments
Hero anga poi irupaaru😂😂😂😂
ReplyDelete