வருவான்-44

 வருவான்-44


மருத்துவமனையை நோக்கி ஆட்டோ விரைந்து கொண்டிருந்தது... 


பாதி உயிர் போன நிலையில் கூந்தல் கலைந்து, முகமெல்லாம் வியர்வையிலும் கண்ணீரிலும் நனைந்திருக்க, "வேகமா போங்கண்ணா!" என்று நொடிக்கொருதரம் கெஞ்சியபடி, பூவினா ஆட்டோ இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தாள்.


பூவினா வா? ஏன்? யாரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகிறாள்?


இந்தக் கதை ஆரம்பித்த இடத்தில் இருந்த அதே வரிகள்! நம் பூவினாவிற்குமா? 


என்ன நடந்தது?


இதைத்  தெரிந்து கொள்ள நாம் இருபத்து நான்கு மணிநேரத்திற்கு முன் செல்வோம்...


பத்மாவும், ஷோபியாவும், வேலுவின் காதலை ரகுநந்தனிடம் கூறி, அவனை சமாதானப்படுத்தி ஆத்ம சாந்தி அடையச் செய்யுமாறு மஞ்சுவிடம் கூறவும், சப்தமாகச் சிரித்த மஞ்சு,


"உங்களுக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது? நான் சொன்னா ரகுநந்தன் கேட்பாரா? உங்க வேலு சொன்னதையே அவர் கண்டுக்கலை..." என்று சற்று முன் ஆஸ்பத்திரியில் ரகுநந்தன், நடந்து கொண்ட விதத்தைக் கூறியவள்,


"ஆனா, பூவினா சொன்னாக் கேட்பேன்னு, ரகுநந்தன் சொன்னார்." என்று மஞ்சு சொன்னதும்,


அதுவரை அமைதியாக அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த வேலு,


"பூவினா ரகுநந்தன்ட்ட, என்மேல அவளுக்கிருக்கும் காதலைச் சொல்லமாட்டாள் ம்மா... அவளைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்." என்று கூறி விட்டுக் கோபமாக வெளியேறினான்.


அவன் கோபத்தில் இருந்த வலியை உணர்ந்த மஞ்சு, மற்ற மூவரிடமும்,


"எல்லோரும் அவங்கவங்க பிரச்சனையிலேயே இருக்கீங்க... என் மனசைப்பத்தி யாராவது யோசிச்சீங்களா?" என்று கூறியவளை விரக்தியாகவும், கவலையாகவும் மற்றவர்கள் பார்க்க, 


மஞ்சு தொடர்ந்தாள்...


"நான் மஞ்சுவோ, வைதேகியோ யாரா இருந்தாலும், நான் விரும்பியது ரகுநந்தனைத்தான். வேலுவை இல்ல... எனக்கு வேலு மேல் எந்தவகையான பிரியமும் இல்லை... அப்படியிருக்கும்போது, என் தோழியின் காதலை பிரிச்சு, வேலுவை, என்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா?... நான் விரும்புனது ரகுநந்தனை, கல்யாணம் பண்ணிக்கிறது வேலுவையா? ரகுநந்தன்னு 

நினைச்சுக்கிட்டு, வேலுவோட என்னால எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?!! அருவருப்பா இல்லை?..." என்று மஞ்சு கேட்டதும், மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  


"நான், ரகுநந்தனோட திறமைய மட்டுமில்ல உருவத்தையும் சேர்த்துதானே விரும்பினேன். நான் விரும்புற ரகுநந்தனை நினைக்கும்போது 

யாரோட உருவத்த நெனச்சுப்பார்ப்பேன்? ரகுநந்தனோடத தானே? வேலு உருவத்தையா

 நினைச்சுப் பார்ப்பேன்?" என்று மற்ற மூவரிடமும் கேட்க,


மூவருமே ‘இல்லை’ என்று தலையசைத்தனர்.


"ரகுநந்தனின் உருவமும், அவரோட திறமையும் மறைஞ்சு போச்சுங்கிறதுக்காக அவர்மேல எனக்கிருந்த காதலும் மறைஞ்சு போயிடுமா என்ன?..." என்றவளைப் பார்க்க, பத்மா, கிரேசா மற்றும் ஷோபியாவிற்கு மிகவும் பாவமாக இருந்தது. 


‘இவளைப் போய் என்னென்னவோ செய்ய நினைச்சேனே’ என்று வருந்திய கிரேசா, மஞ்சுவின் கையைப் பற்றி “ஐயம் வெரி சாரி மஞ்சு” என்றாள்.


மஞ்சுவிற்கு ஆறுதல் கூறும் வழியறியாமல், ‘அவள் மனதைத் தேற்றிக்கொள்ள அருள்புரியவேண்டும்’ என்று கடவுளிடம் மூவரும் வேண்டும்பொழுதே, 


மஞ்சு, வேலுவை கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்று கூறிய அந்த விஷயம், அங்கிருந்த மூன்று பெண்களுக்கும், உயிர்போகும் நிலையில் அமிர்தம் கிடைத்ததுபோலவும் இருந்தது. 


"இதை நீ பூவினாவிடம் சொல்வாயா?" என்று மூவரும் மிகவும் தயங்கிக் கேட்க, 


ஒத்துக்கொண்டாள் மஞ்சு.


உடனே ஷோபியா, பூவினாவீட்டிற்கு ஃபோன் செய்து, "பூவினாவோட கஷ்டம் தீர நல்லவழி கிடைச்சுடுச்சு. அவளை நேர்ல பார்க்கனும்." என்று கூற, 


“அவள அப்படியே விட்டுறதத் தவிர வேற என்ன வழி இருக்குங்க?” என்றார் வள்ளி வருத்தமுடன் 


“இல்லைங்க, அவளுக்குத் இருந்த பெரிய தடை நீங்கிருச்சு.”


“அவள இங்க வரவைக்கிறதுக்காகத்தான் நீங்க இவ்ளோதூரம் பேசுறிங்கன்னு எனக்குத் தெரியாதா?”


“கடவுளே! நிஜமாவே வழி கிடைச்சுடுக்சு… பூவினா மேல எனக்கும் ரொம்பப் பிரியம் இருக்கு… நான் சொல்றத கொஞ்சம் நம்பி பூவினாவ வரவழைச்சுட்டு, எனக்கு ஃபோன் பண்ணுங்க ப்ளீஸ்”


"ப்ளீஸ்லாம் சொல்ல வேண்டியதே இல்லைங்க. வினு மேல உங்களுக்கு இருகிற பாசம் எனக்கும் தெரியும்! நீங்கஎன்ன அவளுக்குக் கெட்டதா செஞ்சுடப் போறிங்க?” 


“பின்ன என்னங்க?”


“நம்மனாலயே சமாளிக்க முடியாத பிரச்சனைகளைத்தானே அவ இழுத்துட்டு வந்துட்டா… இனி என்ன செய்ய முடியும்கிற வேதனைதான் எனக்கு. வேலு மாதிரி நல்ல பையனும், உங்கள மாதிரி பிரியமான மாமியாரும் கிடைக்க என் மகளுக்குக் கொடுத்து வைக்கல. வேறென்ன சொல்றது?” என்று மனம் வெறுத்து வள்ளி பேச,


“பூவினா மாதிரி ஒரு நல்ல மருமக  கிடைக்கதான் நானும் இந்தப்பாடு படுறேன். இந்த விசயத்துல நம்ம மட்டும் பேசி முடிவெடுக்க முடியாதுங்கிறதாலதான் அவள இங்கே வரச் சொல்லுங்கன்றேன்.”


“சரிங்க! பூவினாவை ஊருக்கு வந்துவிடச் சொல்லி, ஃபோன் பண்ணிடுறேன். இன்று இரவு பஸ் ஏறி, நாளைக்கு அதிகாலையில் இங்கிருப்பாள். வாங்க!" என்றார் வள்ளி. 


வீட்டை விட்டு, கோபமாகக் கிளம்பிய வேலு, தன் மொபைல்ஃபோனை வீட்டிலேயே விட்டுச்சென்றதால், அவன் வரவை எதிர்பார்த்து ஷோபியா, பத்மா, கிரேசா மற்றும் மஞ்சு நால்வரும் காத்திருந்தனர்.


நேராக ஜெயராம் வீட்டிற்குச் சென்ற வேலு, 


"பூவினா நினைத்தால் எங்கள் காதல் கைகூடும்... ஆனா அவ செய்யமாட்டா. அவளுக்கு என்னைவிட, ரகுநந்தன் மேலதான் பாசம் அதிகம்... பூர்வஜென்மமாவது ஒன்னாவது... எனக்கு எதுவுமே வேணாம்டா... பூவினாதான் வேணும்... அவ ஏன்டா என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா? அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்க முடியுமா? எனக்குப் பைத்தியம்தான்டா பிடிக்கப்போகுது..." என்று இரவு முழுவதும் புலம்பி அழுத வேலுவைப் பார்க்கும்பொழுது, 


ஜெயராமிற்கு, ரகுநந்தனின் கடைசிநாளில் ரகுநந்தன்பட்ட வேதனை கண்முன் தோன்ற, 


'போன முறை உனக்கு நடந்ததுபோல, இப்பவும் நடக்கவிடமாட்டேன் வேலு.' என்று ஜெயராம் உறுதியெடுத்தபடி,


வேலுவிற்குத் தெரியாமல் பூவினாவை சந்திக்க முடிவெடுத்து, அவள் வீட்டிற்கு ஃபோன் செய்தான். 


"நாளைக்கு அதிகாலையில் பூவினா வந்து விடுவாள்" என்று சொன்னார் ராஜன்.


ஜெயராம், விடிவதற்காகக் காத்திருந்தான்... 


அடுத்தநாள் இருள் பிரியும் முன்னரே, பூவினா வீட்டிற்குச் சென்ற ஜெயராம், பூவினாவின் வீட்டு காலிங்பெல் ஐ அழுத்தினான். 


பூவினாவே வந்து கதவைத் திறக்க, அவளை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றவன், வேலுவின் வேதனைகளை அவளிடம் கூறினான்... அவள் இல்லாமல் வேலுவால் வாழ முடியாது என்றான்... 


"வைதேகி, ரகுநந்தனை மனதளவில் கொன்றதுபோல நீயும் என் நண்பனைக் கொன்னுடாதே!" என்று ஜெயராம் கலங்கியதுதான் தாமதம், 


ரகுநந்தன் அங்குவந்து மறைவாக நின்றபடி பூவினாவைப் பார்த்தான்.


பூவினாவிற்கோ, ஜெயராம் ஏற்கனவே இதேபோல் தன்னிடம், தன் நண்பனின் காதலைக் காப்பாற்ற சண்டையிட்டதுபோலத் தோன்றியது. 


ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் பூவினாவின் கண்முன் விரிய, இரண்டு காட்சியிலுமே ஜெயராம் தன் நண்பனின் காதலுக்காக அவளிடம் சண்டையிடுகிறான்!...


‘என்ன நடக்குது இங்கே?’ என்று பூவினா யோசிக்கும்போதே, அவள் எண்ண ஓட்டத்தைத் தடுத்து,


பூவினாவின் ஆழ்மனம், வேலுவிற்கு ஏதோ ஆபத்து என்று உசுப்பிவிட... 


'ஜெயராமோடு, நான் சென்றால் மட்டுமே வேலுவைக் காப்பாற்ற முடியும்!' என்று பூவினாவிற்குத் தோன்றியது. 


'ஏன் தனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது?” என்று ஆராய அவகாசமில்லாமல்,


"வாங்க! உங்க நண்பனைப் பார்க்கப் போவோம்." என்றதும் தன் இருசக்கர வாகனத்தில், பூவினாவுடன் தன் வீட்டை நோக்கிப் பறந்தான் ஜெயராம்.


அவன் வீட்டிற்குள் செல்லும்போதே, அவன் வரவை எதிபார்த்திருந்த ஜெயராமின் அம்மா, 


எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் வேலு கிளம்பிப் போய்விட்டதாகக் கூறினார்....


வேலு...


‘அடுத்து நடக்கவேண்டியதை சரியா செய்றதுக்கு, கொஞ்சமாவது  மனச ஒருநிலைப் படுத்தி யோசிக்கனும்’ என்று எண்ணிய வேலு,  புல்லட்டில் லாங்க் டிராவல் பண்ண முடிவுசெய்து, ஜெயராம் வீட்டிலிருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் மிதவேகத்தில் சென்றுகொண்டிருந்தான்.


சுற்றுவட்டாரங்கள் மறைந்து புல்லட் செல்லச்செல்ல வேலுவின் மனம் பிரச்சனைகளை அலச ஆரம்பித்தது. 


 'பூவினாவிடம், நீ வைதேகியோ, சுதாவோ, பூவினாவோ யாராக இருந்தாலும் சரி, நம்ம ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்வோம். என்று எவ்வளவோ முறை எடுத்துரைத்தும், பூவினா ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறாளே! …’ என்று வருந்தி,


‘அவளையும் கஷ்டப்படுத்தி, என்னையும் வேதனைக்குள்ளாக்குற கல்யாணம் தேவையா?’ என்று கடுப்பாகி,


‘பூவினா, ஒருபோதும் தனக்காக ரகுநந்தனிடம் பேசப்போவதில்லை’ என்று எரிச்சலடைந்து, மிகவும் மனம் வெறுத்துப் போன வேலு, புல்லட்டை புயல் வேகத்தில் பறக்க விட்டான். 



முகத்தில் ஜில்லென்று குளிர்காலக் காற்று மோத, சிறிது மனம் லேசானது போல் உணர்ந்தவன், 

சாலை ஆளரவமில்லாமல் வெறிச்சோடிப் போயிருந்ததைக் கவனித்துவிட்டு, தன் கைகளை, புல்லட் டின், ஹேண்டில்பார் லிருந்து எடுத்து, இறக்கைபோல் இருபுறமும் விரித்து, வானத்தைப் பார்த்தவாறு, அண்ணாந்து, கண்களை முடி, பறப்பதைப் போல் உணர்ந்தவன்....


அவன் முன் திடீரென்று பளிச்சிட்ட வெளிச்சத்தை உணரும் முன்னே எதிலோ வேகமாக மோதினான்...


ஜெயராம் வீடு…


‘வேலு எங்கே போயிருப்பான்?’ என்று யோசித்து, அவன் நம்பருக்கு ஃபோன் பண்ணுவதற்குத் தன் மொபைலை ஜெயராம் எடுக்க, 


அதேநேரம், வேலுவின் நம்பரிலிருந்து, ஜெயராமுக்குக் கால் வந்தது. 


ஜெயராம் "வேலு எங்க போன?" என்று பதட்டமாகக் கேட்கவும், மறுமுனையில் வேறொரு நபர் பேசினார்.


வேலுவிற்கு ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டதாகவும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் கூற, 


அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்காக பூவினாவுடன் தன் பைக்கில் ஏறியபோது ஜெயராமுடைய பைக்கின் டயர் பஞ்சர் ஆகி இருந்தது. 


'இப்ப வந்து பைக்கை நிறுத்தும்போது, நல்லாத்தானே இருந்துச்சு? திடீர்னு எப்படிப் பஞ்சர் ஆச்சு?' என்று பைக்கை சோதித்தவன், 


அங்கே குறும்பாகச் சிரித்தபடி, கையில் ஆணியுடன் நின்ற ரகுநந்தனைக் கவனிக்கவில்லை…


பூவினா வீடு…


பூவினா, ஜெயராமுடன் சென்ற சிறிது நேரத்தில், 


வேலுவிற்காக இரவு முழுதும் காத்திருந்து பார்த்துவிட்டு, 


‘இப்போதைக்குப் பூவினாவை சம்மதிக்க வைப்போம். பிறகு வேலுவிற்கே இன்ப அதிர்ச்சி கொடுப்போம்' என்று எண்ணி, அதிகாலையில் பத்மா, ஷோபியா, கிரேசா மூவரும், மஞ்சுவுடன் பூவினா வீட்டிற்குச் சென்றனர்.


பூவினா, ஜெயராமுடன் வெளியே சென்றிருப்பதாகக் கூறிய ராஜன், அவள் வரும்வரை, தங்கள் வீட்டில் காத்திருக்கச் சொல்லி. ஹாலில் அமரவைத்து விட்டு,


அறையில் இருந்த தன் மனைவி வள்ளியிடம், 


"வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்குக் காபி போட்டுக் கொண்டு வா!" என்று கூறினார்.


வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்க ஹாலுக்கு வந்த வள்ளி, பத்மாவைப் பார்த்துவிட்டார். வேகமாக வந்து,


"அக்கா! எப்படி இருக்கீங்க?" என்று ஆச்சர்யத்துடன் குசலம் விசாரித்தார்.


ஜெயராம் வீடு…


'இப்ப வந்து பைக்கை நிறுத்தும்போது, நல்லாதானே இருந்தது? திடீர்னு எப்படிப் பஞ்சர் ஆச்சு?' என்று ஜெயராம் திருதிருவென விழிக்கவும்,


‘யோசிக்க நேரமில்லை ஜெயராம்! ஆட்டோல போவோம்… ’ என்று பூவினா பதற, 


ஜெயராம் ஆட்டோ பிடித்து வர, பூவினாவையும், ஜெயராமையும் சுமந்துகொண்டு ஆட்டோ, அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தது. 


பாதி உயிர் போன நிலையில் கூந்தல் கலைந்து, முகமெல்லாம் வியர்வையிலும் கண்ணீரிலும் நனைந்திருக்க, "வேகமா போங்கண்ணா!" என்று நொடிக்கொருதரம் கெஞ்சியபடி, பூவினா இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தாள்.


"நீ முதல்ல ஆட்டோவுக்குள்ள தள்ளி உக்காருமா... ஆஸ்பத்திரிக்குப் போறதுக்குள்ள விழுந்து கிழுந்து தொலச்சுறாத..." என்றார் ஆட்டோக்காரர்.


அவர் பேசியது எதுவும் கேட்கும் நிலையில் அவள் இல்லை. 


‘தப்பு செஞ்சுட்டேன்…’ என்று பூவினா நினைக்கும் போதே, 


அவளையும் அறியாமல் அவளுடைய நினைவலைகளில், ஏற்கனவே இதே போல,


"என் மேலதான் தப்பு... முட்டாள்தனமா பண்ணிட்டேன்... கடவுளே எனக்கு உயிரே போற மாதிரி இருக்கே... என் காதுல விழுந்த செய்தி தப்பாயிருக்கனுமே... என்று புலம்பியபடி தனக்குத் தானே அரற்றியவாறும், ஊரிலுள்ள அனைத்து தெய்வங்களையும் மனதில் கும்பிட்டவாறு மனம் பதைபதைக்க, அவள் இரவு நேரத்தில் ஆட்டோவில் செல்வதைப் போலிருந்தது... 


'இரவில் பயணிக்கிறேனா?!' என்று நினைத்தபடி கண்களைக் கசக்கிவிட்டு பார்க்க, 


சுற்றிலும் இருள் படர்ந்து ஆங்காங்கே தெருவிளக்கு எரிய,





'என்னாச்சு எனக்கு? ஆட்டோவில் ஏறும்போது காலைல ஆறு மணிதானே ஆகியிருக்கும்!!! கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போறதுக்குள்ள ராத்திரி ஆயிடுச்சா?!!' என்று குழம்பியவள், ஆட்டோகாரனிடம்,


"அண்ணா! மணி என்ன?"


"ஆறேகால் மா"


"பகல்தானே ? பின்னே ஏன் இருட்டா இருக்கு?”


“இருட்டா இருக்கா? உனக்கென்னமா ஆச்சு? மயக்கம் வருதா?” என்று கேட்டவாறு ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்தச் சென்ற ஆட்டோக்காரரை


அவள் "சீக்கிரம் போங்கண்ணா!" என்றாள் அவளையும் மீறி, 


'என்ன இது? என்னை மீறி என் வார்த்தைகள் வருது? என்னுடன் வந்த ஜெயராம் எங்கே? எனக்குப் பக்கத்துலதானே உட்கார்ந்திருந்தார்? எனக்கு முன்னால் ஆட்டோவில் ஏறினாரே?' என்று தன் அருகில் காலியாக இருந்த பகுதியையே உற்றுப் பார்த்தாள் பூவினா.


"என்னாச்சு பூவினா? ஏன் ஒரு மாதிரி முழிக்கிறீங்க? எதையாவது தேடுறீங்களா?" என்று கேட்ட ஜெயராமை பூவினா கவனிக்கவேயில்லை.


ஆட்டோ, அந்த அரசு மருத்துவ மனைக்குள் நுழைந்ததுமே ரூபாயை ஆட்டோக்காரரிடம் கொடுத்து விட்டு இறங்கியவள், 


பிரேதபரிசோதனை கூடத்தை நோக்கி ஓடினாள். அவள் பின்னாடியே ஓடிவந்த ஜெயராம்,


"பூவினா! எங்கே போறீங்க? இந்த பிளாக்கில் தான் ரிசப்ஷன் இருக்கு. அங்கே போய் விசாரிப்போம்" என்று கத்தியதும் திரும்பிப் பார்த்த பூவினா, 


மீண்டும் தன்வழியே பிரேதபரிசோதனை கூடத்தை நோக்கி ஓடினாள்... 


தன்னுடைய கால்களும் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்தவள், அதைத் தடுக்க நினைக்காமல், ஓடினாள்... 


சட்டென்று யாரோ தன்னைப் பிடித்து நிறுத்த, திரும்பி முகம் பார்த்தவள் அதிர்ச்சியடைந்தாள்... 


"பூவினாவிற்கு என்னாச்சு?" என்று பதறிய ஜெயராமை யாரோ பிடித்து நிறுத்த, 


"யாரது?" என்றபடி ஜெயராம் திரும்பிப் பார்த்தான். 




மஞ்சுவாகிய வைதேகியே, வேலுவாகிய ரகுநந்தனைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் நிலையில் 


வேலுவிற்கும் பூவினாவிற்கும் என்னாச்சு?


ரகுநந்தன் ஏன் ஜெயராமின் பைக்கை பஞ்சர் ஆக்கினான்?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்! 

      💍💍💍💍💍💍💍


Post a Comment

0 Comments