வருவான்-43
'வேலு, பூவினா காதலுக்கு, பிரச்சனையாக இருக்கும் ரகுநந்தனை சந்திக்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்த கிரேசா, மஞ்சுவிடம் ஆஸ்பத்திரிக்குத் துணைக்கு வருமாறு அழைத்துக் கொண்டு சென்றாள்.
'இன்று என் முன் ரகுநந்தன் வந்தேயாகனும். இல்லைனா அவருடைய காதலி மஞ்சுவைக் கொன்னுடுவேன்.' என்று சூளுரைத்துக் கிளம்பினாள் கிரேசா.
அதே நேரம்,
'ரகுநந்தனை சந்தித்து, பூவினாவின் மேல் எனக்கு இருக்கும் காதல் பற்றியும், மஞ்சுவைப் பார்க்கும்போது எந்தவிமான உணர்வும் எனக்கு ஏற்படலைனும் ரகுநந்தனிடம் சொல்லிவிட வேண்டும். அதேசமயம் சுதா யாரென்று ரகுநந்தனிடமே கேட்டு, சுதாவை அழைத்து வந்து, ரகுநந்தனிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். அதோடு, அவர் ஆத்மா சாந்தியடைய என்ன செய்யச்சொன்னாலும், செய்து கொடுத்து விடுவதென்றும் முடிவுகட்டி, ரகுநந்தனை சந்திக்க வேலு சென்றான்.
அதேபோல் 'ரகுநந்தனைச் சந்தித்து, தன்னுடைய மனக் கஷ்டத்தை எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம்.' என்று நினைத்து, ரகுநந்தனை நேரில் சந்திக்க நினைக்கிறாள் பூவினா.
அரசு மருத்துவமனை வாசலில், கிரேசாவும், மஞ்சுவும் காலெடுத்து வைக்கும்போதே, வானம் இருட்டி மழைக்காற்று வேகமாக வீசத்தொடங்கியது.
கிரேசாவிற்கு, சிறிது பயமாக இருந்தாலும், மனதிற்குள், 'ரகு! இதெற்கெல்லாம் நான் பயந்துவிட மாட்டேன். உங்களிடம் பேசாமல் நான் திரும்பப்போறதில்லை.' என்று நினைத்தபடியே மஞ்சுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு பிரேதபரிசோதனைக் கூடம் இருக்கும் பிளாக் நோக்கி நடந்தாள் கிரேசா.
"வெளி நோயாளிகளுக்கு இந்தப்பக்கம் தானே பார்ப்பாங்க? நீ என்ன இந்தப்பக்கம் போற?" என்று கேட்டாள் மஞ்சு.
"நான் எனக்கு வைத்தியம் பார்க்க வரல... இங்கே நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரைப் பார்க்க வந்திருக்கேன்."
"நமக்குத் தெரிஞ்சவரா? யார் அது?"
"ரகுநந்தன்! டாக்டர் ரகுநந்தன்!" என்று கிரேசா கூறியதும்தான்,
தன் கனவில் இந்தப் பாதையைப் பார்த்த ஞாபகம் வந்தது மஞ்சுவிற்கு.
சுற்று சூழலே வித்யாசமாக இருந்தது... பகலே இரவுபோல் காட்சியளித்தது. மஞ்சுவின் கண்களுக்குச் சுற்றியுள்ள பகுதிகள் கருப்பு வெள்ளையாகத் தெரிய,
"கிரேசா! இந்த இடமே ஒருமாதிரி இருக்கே? வா! நாம இன்னொரு நாள் வரலாம்"
"நீ ரகுநந்தனைப் பார்க்கனும்னு சொன்னியே? அவர் இங்கேதானே இருக்கார்? எனக்கும் அவர்கிட்ட ஒரு வேலை ஆகவேண்டியிருக்கு. வா! ரகுநந்தனை இன்னைக்குத்தான் பார்க்க முடியும்" என்று கூறியவளிடம் மஞ்சு,
"எனக்கு என்னவோ போல இருக்கு கிரேசா! கண்ணுகூட இருட்டுது. எல்லாமே கருப்பு வெள்ளையா தெரியுது." என்ற மஞ்சுவைப் பார்த்த கிரேசாவிற்கு முதன்முறையாக,
'இவளை இங்கே கூட்டிட்டு வந்திருக்கக்கூடாதோ? எனக்கு சாதாரணமாகத் தெரியும் இடம், இவளுக்குக் கருப்பு வெள்ளையாகத் தெரியுதுன்னா! ஒருவேளை பழைய ஞாபகங்கள் வந்து இவதான் வைதேகின்னு தெரிஞ்சுடுமோ? இது தப்பாச்சே? நானே வேலு, மஞ்சு கல்யாணத்துக்குக் காரணமாயிடுவேனோ?' என்று தோன்ற,
"சரி வா! போயிடலாம்" என்று திரும்பிய செகண்ட் டில் அருகில் இருந்த மரம் வேரோடு சாய,
சிறு நூலிழையில் பின்பக்கமாக நகர்ந்த கிரேசாவும், மஞ்சுவும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும்முன்,
அவர்களின் பின்புறம் பயங்கர சிரிப்பொலி கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்த கிரேசாவிற்கு நெஞ்சில் பந்துபோல ஏதோ அடைத்தது.
அதேபொல எதிரில் நின்றவரைப் பார்த்து, மஞ்சுவும் பயந்துபோய் கிரேசாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
"யா... யார் இது கிரேசா... எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?" என்று நடுங்கும் குரலில் கேட்ட மஞ்சுவை திரும்பிப் பார்க்காமலே,
"நிஜமா யார் னு தெரியல?!!... உன் கனவுக் கதாநாயகன்!!..." என்று நக்கலாக கிரேசா கூறும்போதே, அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தான் ரகுநந்தன்!
கிரேசாவும் மஞ்சுவும் பயந்துபோய்ப் பின்னோக்கி நகர,
"என்ன சுதா? என்னையா பார்க்க வந்த? பிறகு ஏன் போற? இங்க வந்துட்டுத் திரும்பிப் போக முடியாது. போன ஜென்மத்திலயே விரட்டி விரட்டி நான் உன்னைக் கொன்னத மறந்துட்டியா? பின்னே எந்தத் தைரியத்தில் மறுபடியும் நானும் வைதேகியும் சேருவதற்குத் தடையா இருக்க? உன்னை உயிரோட விட்டேன்னா தானே எங்களைப் பிரிப்ப? நீதான் சுதான்னே உனக்கே தெரியாதபோதும் எங்களுக்குப் பிரச்சனையாதானே இருக்கே?" என்று கூறியபடி நெருங்க,
'ரகுநந்தன் யாரை சுதான்னு சொல்லித் திட்டுறார்? இங்கே நானும் மஞ்சுவும் தானே இருக்கோம்?' என்று நினைத்த கிரேசா,
தங்களுக்குப் பின்னால் 'எவளும் நிற்கிறாளா?' என்று பின்னாடித் திரும்பிப் பார்க்க பயந்து நிற்கையில்
அவர்களுக்கிடையே வேலு வந்து நின்றான்.
வேலு வந்ததும் சட்டென்று திரும்பி நின்றுகொண்ட ரகுநந்தன்,
"நீ எங்கே வந்த வேலு? உனக்குப் பூர்வ ஜென்ம ஞாபகம் எதுவும் இல்லாத பட்சத்தில் என் முகத்தை நீ பார்க்கக் கூடாது... விலகிப்போ! " என்று கத்தினான் ரகுநந்தன்.
"நான் உங்கிட்ட பேசத்தான் வந்தேன். உன் முகத்தை நான் பார்க்கல. ஆனா நான் சொல்றதுக்கு நீ சம்மதிக்கனும்." என்றான் வேலு.
"நீ தள்ளு வேலு, அவளைக் கொன்னாத்தான் நீ வைதேகியோட சேர முடியும்... உங்களைப் பிரிக்க இவ என்ன வேணும்னாலும் செய்வா." என்று வேலு பேசுவதைக் கவனிக்காமல், தன் விஷயத்திலேயே குறியாக இருந்தான் ரகுநந்தன்.
"நான் வைதேகியைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது ரகு... இப்ப நான் விரும்புறது பூவினாவைத்தான்... அவ கூடதான் வாழ விரும்புறேன்... பூவினாவை மனசுல வச்சுக்கிட்டு, என்னால வைதேகியோட வாழ முடியாது... என் நிலைமையைப் புரிஞ்சுக்க... உன் ஆத்ம சாந்திக்கு நான் என்ன பண்ணனும்? சொல்லு. கட்டாயம் செய்றேன். சுதாவை உன்னிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறேன்... சொல்லு நான் என்ன செய்யட்டும்?" என்று வேலு ரகுநந்தனின் முதுகைக்கூடப் பார்க்காமல் தரையைப் பார்த்துப் பேச,
"நீ வைதேகியை கல்யாணம் செஞ்சாத்தான் என் ஆத்மா உன்னோடு கலந்து அமைதியடையும்... "
"பூவினா மேல உனக்கு உண்மையிலேயே பிரியமிருந்தா, அவளை என்னோட சேர்ந்து வாழவிடு."
"நான் பூவினாவுக்காக எதையும் செய்வேன்... எங்கிட்ட அவளை சொல்லச் சொல்லு... அதுக்கு முன்னாடி, இப்ப நீ விலகு... நான் இவள கொன்னுடுறேன்." என்ற ரகுநந்தன் சட்டென்று மறைந்து கிரேசா, மஞ்சுவின் முன் தோன்றி சுதாவைக் கொல்ல கை நீட்டும் நேரம், பூவினாவின் குரல்...
"ரகுநந்தன்! நான் உங்கமேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கேன்... எனக்கு நீங்க உதவிசெய்யக்கூடாதா?... நான் நினைத்தாள் 'வருவேன்' ன்னு சொன்னீங்களே? ... இப்ப உங்களைப் பார்த்துப் பேச நினைக்கிறேன்." என்று தன்னுடைய தாத்தா வீட்டிலிருந்தபடியே மனப்பூர்வமாக ரகுநந்தனை அழைத்தாள் பூவினா...
பூவினாவின் குரல் கேட்ட நிமிடம் அனைத்தையும் மறந்து, பூவினா இருந்த திசையில் திரும்பிய ரகுநந்தன்.
"வேலு, நீ வைதேகியைக் கல்யாணம் பண்ணினா மட்டும்தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது... " என்று கூறி மறைந்தான்.
அங்கே...
பூவினாவின் முன் ரகுநந்தன் அமர்ந்திருந்தான்.
பூவினாவும் ரகுநந்தனைப் பார்த்துவிட்டாள்.
"சொல்லு பூவினா!.... உனக்காக! 'இந்த உலகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்மேல் பாசம் வைத்திருக்கும்' உனக்காக!... 'நான் ஆத்மா என்று தெரிஞ்ச பிறகும் எனக்காகத் துடித்த உனக்காக!... என்மேல் கடைசி வரை மாறாத பிரியம் வச்சிருக்கிற உனக்காக!, நான் எதையும் செய்வேன்... சொல்லு! நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்ட ரகுநந்தனைப் பார்த்ததும் பூவினாவின் மனம் மீண்டும் சஞ்சலமடைந்தது...
'இவர் பாவம்! இவரின் கடைசி ஆசையை நிறைவேத்துறதுதான் இவருக்கு நான் செய்யும் மிகப்பெரிய நன்மை... வேலு, வைதேகியைத் திருமணம் செய்யலைனா இவர் ஆத்மா சாந்தி அடையாதுன்னு தெரிஞ்சும், இவருக்கு அந்தக் கொடிய துன்பத்தை என்னால் செய்ய முடியாது. இவர் முகத்தைப் பார்த்து என்னால் வேலுவைக் கேட்கவே முடியாது.' என்று நினைத்தவள்,
"நான் சுதா தானே? என்மேல் உங்களுக்கு எப்படி இவ்வளவு பிரியம் ரகுநந்தன்? நான் நினைத்தால் உடனே வரும் அளவு..." என்று பூவினா கேட்டதும்,
கலகலவெனச் சிரித்த ரகுநந்தன்,
"நீயா சுதா?!!... உனக்கு யார் அப்படிச் சொன்னது? நீ சுதா இல்லை பூவினா."
"நிஜமாகவா? "
"ஆத்மா பொய் சொல்லாது பூவினா."
"ரொம்ப நன்றி ரகுநந்தன்... நான்தான் சுதான்னு நினைச்சு, ரொம்ப வேதனை பட்டேன். ஹப்பா! பெரிய மனபாரம் தீர்ந்தது... எனக்கு இன்னும் சில விஷயங்கள் தெரியனும் சொல்லுவீங்களா?"
"நீ கேட்டு எதையும் நான் மறைக்கமாட்டேன் பூவினா."
"உங்களுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத என் கண்களுக்கு நீங்க எப்படித் தெரியிறீங்க ரகுநந்தன்?"
'அப்போ, நான் உனக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாதவனா பூவினா?' என்று நினைத்த ரகுநந்தன், மனம் வலிக்க,
"மோதிரம்... என் வைதேகிக்காக நான் வாங்கிய மோதிரம். அதை நீ தொட்டதால்தான் உன் கண்களுக்குத் தெரிகிறேன்." என்றான்.
"அந்த மோதிரத்தை வைதேகி தன் பேக் ல தானே வச்சாங்க? அது எப்படி என் கோட் டுக்கு வந்துச்சு?"
"வைதேகி மோதிரத்தை எடுத்துக் கொண்டு என் அறையை விட்டு வெளியே வரும்போது, அவள் தடுமாறி விழுந்தாள் இல்லையா? அப்பொழுது அந்த மோதிரம் அங்கே இருந்த அலமாரியில் விழுந்துவிட்டது... நீயும் அதே மாதிரி, உங்க புரபசர் விழுந்ததைப் பார்த்துப் பின்னோக்கி நீ சாய்ந்தபோது, அந்த அலமாரி இடுக்கில் மாட்டியிருந்த மோதிரம் உன் கோட்டில் விழுந்துவிட்டது."
என்ற ரகுநந்தனின் முகம் பார்த்து, தயங்கி,
"வேலுதான் உங்க மறுபிறவியா ரகுநந்தன்?" என்று கேட்டாள் பூவினா.
பூவினாவின் மனம் புரிந்த ரகுநந்தன்,
"ஆமாம்!" என்ற பிறகு,
பூவினா மௌனமாக ரகுநந்தனை பார்க்கவும்,
"வைதேகி, சுதால்லாம் யாருன்னு கேட்கமாட்டாயா? " என்று கேட்டு ரகுநந்தன் பூவினாவிடம் பேச்சை வளர்த்தான்.
"வைதேகி யாருன்னு தான் எல்லோருக்கும் தெரியுமே... அதே மாதிரி, நான் சுதா இல்லை என்பதே போதும் எனக்கு. மற்றபடி சுதாவைப் பற்றித் தெரிஞ்சுக்க எனக்கு இஷ்டமில்லை." என்ற பூவினாவைப் பார்த்த ரகுநந்தன், அவள் தன்னை அழைத்த காரணம் அறிந்தும்,
"இததான் கேட்கத்தான் என்னை நினைத்தாயா?" என்று கேட்டான்.
சற்று தடுமாறிய பூவினா, "ஆமாம்!" என்றதும்,
"ஞாபகமிருக்கா பூவினா? நீயும், வேலுவும், நான் ஆத்மான்னு தெரிஞ்ச பிறகு, எனக்கு உதவ நினைச்சு ஆஸ்பத்திரிக்கு வந்தீங்களே? அப்ப நீ என்ன சொன்ன? 'யார் என்ன சொன்னாலும் வேலுவை நான் பிரியமாட்டேன்... உண்மையான காதல் இருக்கும் இடத்தில் பிரிவதற்கு காரணம் இருக்காது.' என்றாய்... '' என்று நிறுத்திய ரகுநந்தன், பூவினாவின் கண்களுக்குள் பார்த்தபடி,
"ஆனால் இப்போ! பிரியிறதுக்கு ஒரு காரணம் இருக்கு போலயே? அப்போ, உன் காதல் உண்மையான காதல் இல்லையா?" என்று பூவினாவின் முகத்தையே கூர்ந்து பார்த்தவண்ணம் ரகுநந்தன் கேட்டான்.
"என் காதல் என்னைக்குமே உண்மையானதுதான் ரகுநந்தன்! ஆனால் என் காதல் இன்னொரு உயிருக்கு ஒருபோதும் துன்பம் தராது... சேர்ந்து வாழ்ந்தால் தான் காதலா? நீங்கள் வைதேகியுடன் சேர்ந்தீர்களா? ஆனால் உங்கள் காதல் வாழ்கிறதே?!! அதேமாதிரி தான், என் கடைசிமூச்சுவரை வேலுதான் என் காதல், கணவன், எல்லாம்… 'வேலு தானே வைதேகி யுடன் வாழனும்' ங்கற கட்டாயம்?... ஆனா வேலுவை யாரும் விரும்பக் கூடாதுன்னு எந்த விதியும் இல்லையே? சோ, கடைசிவரை வேலுவையே நினைத்து என்னால் வாழ முடியும் ரகுநந்தன். இப்ப சொல்லுங்க என் காதல் பொய்யா?" என்று கேட்ட பூவினாவை, கண்களில் நீர் வழிய பார்த்தான் ரகுநந்தன்.
"இல்லை பூவினா! உன் காதல் பொய்யில்லை... உன் காதலே உண்மையான காதல் இல்லைனா, இந்த உலகத்தில் எந்தக் காதலும் உண்மைகாதல் இல்லை! இப்பவும் சொல்றேன்... உன்னைப் போன்ற தோழி, நான் வாழும்பொழுது கிடைத்திருந்தால், நான் உயிருடன் வாழ்ந்திருப்பேன். " என்றபடி மறைந்தான் ரகுநந்தன்.
வேலு வீட்டில்...
வேலுவின் அம்மா ஷோபியா, பத்மாவிற்கு ஃபோன் செய்து, "வேலுவும், பூவினாவும் சேர்வதுதான் நியாயம். அவர்களைப் பிரிப்பது பாவம்" என்று கூற,
அதை ஒத்துக்கொண்ட பத்மா, "நான் மஞ்சுவிடம் பேசுகிறேன்." என்றவர். மஞ்சுவிற்கு ஃபோன் செய்து, மஞ்சுவை வேலு வீட்டிற்கு வரச்சொன்னார்.
அப்பொழுதுதான், கிரேசாவும், மஞ்சுவும், வேலுவுடன் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினர்.
ரகுநந்தனைப் பார்த்த பயத்தில், மனம் இன்னும் நடுங்குவதால் தங்கள் வீடுவரை வேலுவைத் துணைக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சூழ்நிலையில் பத்மா ஃபோன் செய்து, மஞ்சுவை வேலு வீட்டிற்கு வரச்சொல்லவும் வேலு வீட்டுக்கு, மூவரும் வண்டியைத் திருப்பினர்.
அவர்களுக்கு முன் வேலு வீட்டிற்கு வந்த பத்மா,
மஞ்சு, கிரேசா, வேலு மூவரையும் அமரச்சொன்னார்.
'முதலில் எப்படி ஆரம்பிப்பது?' என்று தயங்கிய பத்மா, மனதைத் திடப்படுத்திக்கொண்டு, ரகுநந்தன், வைதேகி கதையை மஞ்சுவிடம் முழுவதும் கூறினார்.
பிறகு வேலு, பூவினாவின் காதல், … பூவினா ரகுநந்தனை சந்தித்தது, ... ரகுநந்தனுக்காக அவனுடைய பூர்வஜென்மத்தில், ரகுநந்தனுடன் வாழ்ந்த, செந்தில், பத்மாவைத் தேடிகண்டுபிடித்தது...
பிறகு, தாயத்தை வைத்து, ரகுநந்தனின் மறுபிறவி, வைதேகியின் மறுபிறவியைக் கண்டுபிடித்தது... மஞ்சுதான் வைதேகி என்று தெரிந்ததும், ரகுநந்தனுக்காக, வேலுவும்-வைதேகியும் சேர்ந்து வாழ, வேலுவிடமிருந்து பூவினா விலகிச்சென்றவரை சொல்லி முடித்தவர், மஞ்சுவின் முகத்தையே கூர்ந்து பார்த்தார்.
மஞ்சுவிற்கு, அவள்தான் வைதேகி என்றதும் சந்தோஷம் தாங்கவில்லை...
பத்மா சொல்லி முடித்ததும், "இப்ப என்கிட்ட இவ்வளவு விஷயங்களையும் எதுக்குச் சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று மஞ்சு கேட்டாள்.
'இன்னுமா இவளுக்குப் புரியவில்லை?!' என்று நினைத்த பத்மா, 'எப்படிச் சொல்வது?' என்று யோசித்தபடி ஷோபியாவைப் பார்க்க,
ஷோபியா, மஞ்சுவிடம்,
"என் பையன் வேலு, பூவினாவைத்தான் கட்டிக்குவேன்னு சொல்றான்... எங்களுக்கும் வேலு, பூவினா சேர்வதில்தான் விருப்பம்." என்று கூறி நிறுத்திவிட்டு, மஞ்சுவைப் பார்க்க,
"அப்போ... வைதேகியின் காதல்?" என்று மஞ்சு கேட்டதும்,
"காதல் பிரிவால் ஏற்படும் வலி வைதேகிக்குத் தெரியாதா? அவள் ஏன் வேலுவையும்- பூவினாவையும் சேர்த்து வைக்கக் கூடாது?" என்று ஷோபியா கேட்டதும்,
பத்மாவைப் பார்த்த மஞ்சு,
"வைதேகி உங்க வீட்டுப் பொண்ணுதானே? உங்களால் எப்படி?!! உங்களுக்கும் இந்த விஷயத்தில் சம்மதமா?" என்று கேட்டாள்.
"சம்மதம்தான்மா... உனக்கு என்மேல் கோபம் வந்தாலும் பரவாயில்லை... வேலு மீது பூவினா வைத்திருக்கும் காதல் அளவிற்கு வைதேகி, ரகுநந்தனைக் காதலிக்கலையோன்றதுதான் என் அபிப்ராயம்... யாரோ ஒருத்திப் பேச்சைக் கேட்டுகிட்டு, ரகுவோட வாழமுடியாதுன்னவதானே வைதேகி?... ஆனால் பூவினா? உங்களுக்காக, வேலுக்காக, ரகுக்காக, அவளோட காதலை விட்டுக்கொடுக்கிறாளே தவிர, வேலுவைப் பிரிய நினைக்கவில்லை... இன்னொன்நும் எனக்கு நிச்சயமாத் தெரியும். பூவினா, கடைசிவரை வேலுவை நினைத்தே தன் வாழ்நாளை கழிச்சுடுவாள்... " என்று பத்மா கூறவும்,
"ஓ! இப்ப நான் என்ன செய்யனும் எதிர்பார்க்கிறீங்க?" என்று மஞ்சு கேட்டாள்.
"நீ ரகுநந்தனை சமாதானப்படுத்தி, சாந்தி அடையச் செய்துவிடு போதும்." என்று ஷோபியா சொன்னதுதான் தாமதம்,
கடகடவெனக் கெக்கொலி கொட்டிச் சிரித்தவள், பத்மா, ஷோபியா மற்றும் வேலுவைப் பார்த்தாள்....
பத்மா, ஷோபியா சொன்னபடி மஞ்சு செய்வாளா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
💍 💍💍💍💍💍💍💍💍
0 Comments