வருவான்- 42

 வருவான்- 42


கிரேசா சொன்னபடி பத்மாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு, செல்வம், செந்தில், ஜெயராமுடன் சென்றான் வேலு.


வீட்டின் காலிங்பெல் பெல் சப்தம் கேட்டு வாசலுக்கு வந்த வேலுவின் அம்மா ஷோபியா. மகனையும் அவனுடைய ஃபிரண்ட்ஸ்சையும் பார்த்ததும், "வாங்க!" என்றவர், பத்மாவையும், செல்வத்தையும், அவர்கள் யார் என்று தெரியாத போதும், மகனுடன் வந்திருப்பதால் அவர்களையும் வரவேற்று ஹால் ஷோபாவில் அமரவைத்து விட்டு, 


"குடிக்க எதாவது கொண்டு வரேன்." என்று கூறி நடந்த ஷோபியாவை, பத்மா கூர்ந்து பார்த்தார். அவருக்கு சரியாகச் சொல்லத் தெரியாமல் விழிக்க, 


வேலு, அவனுடைய அம்மா அப்பா கல்யாணம் செய்த புதிதில், ஜோடியாக எடுத்துக் கொண்ட ஃபோட்டோவைக் காட்டினான்.


"எனக்கு நாலு வயசு இருக்கும்போது, எங்கம்மா அப்பா இப்படிதான் இருந்திருப்பாங்க... இருபது வருஷங்களுக்குப் பிறகு பார்க்கிறதால, உங்களுக்கு என் அம்மாவை இப்ப அடையாளம் தெரியலைனாலும், இந்த ஃபோட்டோவைப் பார்த்தா, ஆஸ்பத்திரில கண்டெடுத்த ரகுநந்தனோடமறுபிறவிப் பையனை, கோயிலில் இவங்ககிட்டதான் ஒப்படைச்சீங்களான்னு சொல்லமுடியுந்தானே?" என்று கூறி விட்டு பத்மாவையே பார்த்தான் வேலு. 


பழைய ஃபோட்டோவில் ஷோபியாவைப் பார்த்ததுமே பத்மாவிற்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. இருப்பினும், ஷோபியா வந்து, எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்து விட்டு அமரும்வரை, ஷோபியாவையே கவனித்துப் பார்த்தார் பத்மா. பிறகு ஷோபியாவைப் பார்த்து, 


"என்னை யார்னு தெரியலையாங்க?" என்று பத்மா, ஷோபியாவிடம் கேட்டதும்,


"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா சரியா தெரியலையே?" என்றார் ஷோபியா.


“உங்க மகனுக்கு நாலு வயசிருக்கும்போது, அரசு ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல  இருக்குற கோயில்ல, காணாமல் போனவனை தூக்கி வந்து..." என்று பத்மா முடிக்கும் முன்பே,


"ஆமா! ஞாபகம் வந்துடுச்சு... எப்படி இருக்கீங்க? அன்னைக்கு இருந்த பதட்டத்துல நாங்க உங்களுக்கு நன்றி கூட சொல்லலை... நீங்க யாரு? எங்கே இருக்கிறீங்கன்ற விபரமும் தெரியல, அதுக்கப்புறம் அந்தக் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் உங்களைத் தேடுவேன்." என்று நன்றியுடன் பேசிய ஷோபியாவைப் பார்த்த வேலு,


" சின்னப்பிள்ளையா இருக்கும்போது நான் தொலைஞ்சு போனதில்லைனு சொன்னீஙகளேம்மா?" என்று ஆதங்கத்துடன் கேட்டான் வேலு.


"அன்னைக்கு நீ எங்கள்ட்ட கிடைச்ச பிறகு, அடிக்கடி தூக்கத்தில் பயந்தோ, அழுதபடியோ எந்திரிச்ச. அடுத்தநாளே உனக்குக் காய்ச்சல் அடிச்சது. ஆஸ்பத்துரிக்குக் கூட்டிட்டுப் பொய்க் காட்டினப்ப, நீ எதுக்காகவோ பயப்படுறதாலதான், வாராவாரம் காய்ச்சல் வருதுன்னும், பயத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு, அதைச் சரிசெய்யப் பாருங்கன்னும் டாக்டர் சொன்னார். 


அப்புறம், அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க சொல்லி, உனக்கு மந்திரிக்கப் போனோம். அங்கேயும், 'நீ பயப்படுறதால் தான் காய்ச்சல் வருது'ன்னு சொன்னாங்க.


அதுக்கப்புறம் தான் நீ தூங்கும்போது, உளறும் வார்த்தைகளைக் கவனிச்சோம். 'உன் கனவுல, எங்களைக் காணாமல, பயந்து, தேடி, அழுது, தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிற’ன்னு புரிஞ்சுச்சு. எதனாலோ! நீ எங்களை விட்டுப் பிரிஞ்சு போயிடுவியோன்னு உங்க அப்பா ரொம்ப பயந்துட்டாங்க... 


ஏற்கனவே நம்ம வீட்டுத் தலைப்பிள்ளை ரகுநந்தன் காணாம போயிட்டதால, எனக்கும் ரொம்ப பயமாயிடுச்சு. 


தொலஞ்சு பொயிடுவோம்கிற பயத்தை உன் மனசிலிருந்தே வெளியேற்ற நினைச்சாங்க உங்கப்பா. 


அடுத்துவந்த ராத்திரிகள்ல, நீ அசந்து தூங்கும்போது எழுப்பி, உனக்குப் பிடிச்ச பொம்மை, சாக்லெட், பட்டர்பிஸ்கட் இதெல்லாம் கொடுப்பார். தூக்கக்கலக்கத்துல, நீ அதைக் கையில வாங்கிக்கிட்டு மறுபடியும் தூங்கினதும், உங்கிட்டக் கொடுத்த பொருட்களை எடுத்து மறைச்சு வச்சுடுவார். 


மறுநாள் காலைல எந்திரிச்சுப் பார்க்கும்பொது அந்தப் பொருட்கள் உன் கையில இல்லைன்னதும், எங்கள்ட்ட வந்து கேட்ப, 


அப்போ உங்க அப்பா, "நான் எதுவும் குடுக்கலையேடா? நீ கனவு கண்டிருக்க." என்று கூறி உன்னை சமாதானப் படுத்துவார்.


இதேமாதிரி அடிக்கடி செஞ்சோம். 


மறுபடியும் ஒரு நாள் ராத்திரி தூங்கும்போது, நீ தொலஞ்சு போனதை நினைச்சு, பயந்து அழுத,


அப்போ, "அது கனவு டா. நீ தொலைஞ்சு போனதேயில்லை. சாக்லெட் சாப்பிட்ட மாதிரி, புது பொம்மை வாங்கின மாதிரியெல்லாம் கனவு கண்டாய் தானே? அது மாதிரிதான் நீ தொலைஞ்சு போனதா, கனவுதான் கண்டாய்னு சொல்லிச் சொல்லி, உன் மனசுல, நீ தொலைஞ்சு போனதே ஒரு கனவுன்னு பதியவச்சோம். அதுக்குப் பின்னாடிதான் உனக்கு அந்த பயமே இல்லாமல் போச்சு... 


அப்படியொரு விஷயம் நடந்ததை உன்கிட்ட எப்பவுமே சொல்லக்கூடாதுன்னு உங்கப்பா என்கிட்ட ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டார். அதனாலதான் நீ கேட்டபோது, "இல்லை"னு சொன்னேன்." என்று முடித்தார் ஷோபியா.


வேலுவிற்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


இதைக் கேட்டு சந்தோஷப்பட்ட செல்வம் ஷோபியாவிடம், இதுவரை வைதேகி, ரகுநந்தன் சம்மந்தமாகக் கண்டுபிடிச்ச விஷயங்களைக் கூறி, அவர் மகளின் மறுபிறவியான மஞ்சுவிற்கும், வேலுவிற்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து வைத்துவிடுவோம் என்று கூற,


"அப்போ பூவினா?" என்று மகனைப் பார்த்துக் கேட்டார் ஷோபியா.


"அதெல்லாம் சின்னபுள்ள விவகாரம்ங்க... அத மறந்துடுவோம். நம்ம பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுடுவோம்." என்று மீண்டும் செல்வம் அதையே கூறவும், 


தயக்கத்துடன் தன்னுடைய மகனைப் பார்த்த ஷோபியா,


"அவனோட அப்பா வரட்டும் பேசுவோம்... அதுமட்டுமில்ல மஞ்சு வீட்லயும் இந்த விஷயத்தையெல்லாம் நம்பி, கல்யாணம் செஞ்சு வைக்க ஒத்துக்கிறனுமே?" என்றார் ஷோபியா.


"அவங்கக் கிட்டயும் பேசிட்டு வர்றோம்." என்று கூறி விட்டு, பத்மாவுடன் புறப்பட்டுச் சென்றார் செல்வம்.


அவர் சென்றபிறகு, கிரேசாவிற்கு ஃபோன் செய்து, நடந்த விஷயங்களைக்கூறினர். 


பிறகு, எல்லாவற்றையும் கேட்டும் அமைதியாக இருந்த வேலுவைப் பார்த்த ஷோபியா,




அனைவரும் சென்றதும் தன் மகனிடம் வந்து, "நீ என்னடா நினைக்கிற? அந்தப் பொண்ணு பூவினா மனசுல ஆசைய வளர்த்துட்டு, இப்ப இந்த மாதிரி செய்றது சரியாபடலடா." என்றார் மனம் கலங்கி. 


பூவினா???


'நான் இங்க இருந்தா தேவையில்லாத குழப்பமே ஏற்படும்... எனக்கும் ஒரு தெளிவு வரும்வரை, கொஞ்ச நாட்கள் வேறு எங்காவது போயிட்டு வரலாம்' என்று முடிவெடுத்த பூவினா, தன்னுடைய பெற்றோர்களிடம் அனுமதி கேட்க, 


மகள் நிலைமை புரிந்த அவர்கள், அவளுடைய தாத்தா ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


ஊர்விட்டு ஊர் செல்வதைப் பற்றி, பூவினா கிரேசாவிடம் கூடச் சொல்லவில்லை. ஊருக்குச் சென்றபிறகும் 'எந்த ஊருக்கு வந்திருக்கிறாள்' என்ற விபரத்தையும் யாருக்கும் தெரிவிக்கவில்லை. 


தன் பெற்றோரிடமும், "என்னைத் தேடி யார் வந்தாலும், நான் இருக்குற இடத்தப் பத்திச் சொல்ல வேண்டாம்." என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள். 


ஆனால்...


என்னதான் முயற்சித்தாலும், வேலுவை மறந்து, பூவினாவால் எதுவும் செய்ய முடியவில்லை... எல்லா நேரமும், 'அவன் இப்போ என்ன செய்து கொண்டிருப்பான்?' என்ற எண்ணமே வந்து நின்றது. 


குளித்து உடைமாற்றி, கண்ணாடி முன் நின்று, தன் பிம்பத்தைப் பார்த்தவளுக்கு, கண்ணாட்டியில் தன் பிம்பம் மறைந்து வேலுவின் பிம்பம் தோன்றியது. 


உடனே வேலுவின் நினைவு வர, 'வேலு என்ன கலர் உடை உடுத்தியிருப்பான்?' என்று யோசித்தாள். கூடவே மஞ்சுவின் ஞாபகமும் வர, வேலு, மஞ்சுவின் தோளைத்தொட்டு அணைத்தவாறு நின்றான் கண்ணாடியில். 


பூவினாவிற்கு நெஞ்சில் நெருப்பைப் பற்றவைத்ததுபோல் எரிந்தது. 


'இதைப் பார்க்கத்தான் இன்னும் உயிரோடிருக்கிறேனா? அவனால் எப்படி இன்னொரு பெண்ணின் தோளைத் தொட முடிந்தது? !! அவனுக்கு என் ஞாபகம் வரவில்லையா?!!... இன்னொரு பெண்ணுடன் அவன் இருந்தால் என் மனம் வலிக்கும் என்று தெரியாதா?... என்னால் இதையே பார்க்க முடியலையே… கடவுளே! என் உயிர் என்னை உருக்கி எடுக்கிறதே!!’ என்று நினைத்தவள், தன் கண்களை இறுக்கி மூடிக்கொள்ள, 


"இதற்கே இப்படியா? அப்போ நாங்க கல்யாணம் பண்..." என்ற வேலுவின் குரல் காதருகில் கேட்டதுமே, 



"வேண்டாம்! வேண்டாம் வேலு! உன்னை இன்னொரு பெண்ணுடன் பார்க்கும் சக்தி எனக்கில்லை..." என்று தன்னையும் மீறிக் கத்தியவளுக்கு, கொதிநீராய் கண்ணீர் வழியத் தொங்கியது. 


அப்படியே மடங்கி அமர்ந்து, அண்ணாந்து பார்த்தபடி, அழ ஆரம்பித்தவளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லாமல் வாய்விட்டு அழ ஆரம்பித்தாள்.


சிறிது நேரத்திற்குப் பிறகு ஓய்ந்து போனவள், தன்னிடமே பேச ஆரம்பித்தாள்...


"அழக் கூடாது பூவினா!" என்றவளுக்கு, வேலு அவளை அழைக்கும் முறை ஞாபகம் வர, இனி "நானே என்னை 'வினி' என்று அழைத்துக்கொள்கிறேன்." என்று கூறிக்கொண்டு, 


"அழாதே வினி! வேலு, ரகுநந்தன், மஞ்சு மூவரும் நல்லா இருக்கனும். இல்லையா? அவங்க நல்லா இருந்தா, உனக்கு சந்தோஷமாத் தானே இருக்கனும்? அழுகை வரலாமா?" என்று தன்னைத் தானே தேற்றிக்ககொண்டாள். 


பின் அவளே, "மஞ்சு! நான் உன் தோழி தானே? வேலுவை எனக்கு விட்டுக் கொடுக்கக்கூடாதா?" என்று கேட்டு அழுவாள்.


"இல்லை வினி! ரகுநந்தன் பாவம்! அவனுக்கென்று எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காதவன், நீ நல்ல தோழி என்றால், அவன் ஆசையை நிறைவேற்றுவது முக்கியம்" என்று நினைத்து, எதுவும் நடக்காதது போல இருப்பாள். 


பிறகு அவளே, "ரகுநந்தன்! உங்களுக்கு என்மேல் பிரியம் இருக்குதானே? என்னையும் வேலுவையும் சேர்த்துவைக்கக் கூடாதா?” என்று கெஞ்சிக் கேட்டு அழுவாள்.


பிறகு, கடவுளிடம்! 'மறந்து வாழும் மனவலிமையை' வேண்டுவாள். பிறகு அவரிடமே, "ஏதேனும் அதிசயத்தை நடத்தி, யாரும் மனக்கஷ்டப்படாமல், என்னையும் வேலுவையும் சேர்த்து வையுங்கள்" என்று வேண்டுவாள்.


இப்படியே மிகவும் போராடி, நாட்களை நகர்த்த முயற்சித்தாள். 


ஆனால்...


அவளுடைய மொபைல் ஃபோன் பூவினாவை மேலும் வதைத்தது. 


வேலுவிற்கு ஃபோன் செய்யாமல் இருப்பதற்கே பூவினா பெரும்பாடு படவேண்டியிருந்தது. 


ஃபோன் அலறினால். சட்டென்று தன் மொபைலை எடுத்துப் பார்ப்பாள். அதில் வேலுவின் நம்பர் ஓளிரவில்லை என்றால்,


'அவனும் தன்னைவிட்டு விலக முயற்சிக்கிறானோ!' என்று பூவினா எண்ணும்போதே,


"உங்களால் என்னை மறந்து வாழ முடியுமா வேலு?... உங்களுக்கென்ன, ஜென்மம் கடந்து வந்து, உங்களைக் கைபிடிக்கும் காதல் மனைவி அருகில் இருக்கும்போது, என் நினைப்பு வருமா என்ன?" என்று எண்ணிடும் போதே, வேலுவும், மஞ்சுவும் நெருக்கமாக இருப்பதுபோல் தோன்ற,


"இல்லை!... என்னை விட்டு நீங்க போகக் கூடாது வேலு. நான் செத்துடுவேன்! என்னால் உங்களை வைதேகிக்கு விட்டுக்கொடுக்க முடியாது" என்று வாய்விட்டே கத்திவிடுவாள். மீண்டும் அழுகை அதிலிருந்து வெளிவர வெகுநேரமாகிவிடும்.


மொபைல் ஃபோனில் வேலு நம்பர் ஒளிர்ந்தால், 'இவன் என்னை மறக்கவில்லை... என்னை விட்டு அவனால் இருக்க முடியாது... என்னாலும் முடியாது... நான் ஏன் என்னை விரும்பும் வேலுவை, வைதேகிக்கு விட்டுக் கொடுக்கனும்?' என்று நினைத்து ஃபோனை எடுத்து விடுவாள். 


ரிசீவரில், "வினி!" என்ற வேலுவின் அழைப்பு பூவினாவின் உயிரை அழிக்கப் போதுமானதாக இருந்தது, மீண்டும், உடைந்து அழ ஆரம்பித்து, தன் வாயைக் கையால் இறுக முடிக்கொண்டு அழுதாள். 


மூச்சுமுட்டி, கேவல் சப்தம் வெளிவர, சட்டென்று ஃபோனை ஆஃப் பண்ணிவிட்டு, அப்படியே சுவரில் சரிந்து அழ ஆரம்பித்து விடுவாள். 


"என்னால் முடியலையே வேலு. உங்களை விட்டுக் கொடுக்கவும் முடியல, மனசாட்சியைக் கொன்று உங்களுடன் சேரவும் முடியல." என்று அழுது தீர்த்துவிடுவாள்.


இவளின் இந்த நிலை அவளுடைய அப்பத்தா, தாத்தாவிற்குப் பயத்தை ஏற்படுத்த, வள்ளிக்கு ஃபோன் பண்ணி வருந்தினர். 


வேலு…


இரண்டு நாட்கள்! 'பூவினா எங்கே போனாள்?' என்றே வேலுவிற்குத் தெரியவில்லை... அவள் வீட்டிற்கு ஃபோன் செய்தால் யாரும் எடுக்கவே இல்லை. கிரேசாவிடம் கேட்டால், அவள் இன்னும் மோசமான நிலையில் இருந்தாள். 


ஒரே முடிவாக, செந்தில், ஜெயராம், கிரேசா, வேலு நால்வரும் பூவினா வீட்டிற்கு வந்து, திருமணம்பற்றிய வேலுவின் முடிவைக் கூறினர். 


"இறந்து போனவர்களுக்காக வாழ வேண்டியவர்கள் ஏன் கஷ்டப்படனும்?" என்று கேட்டனர். 


ஆனால் ராஜன், "ஏற்கனவே ரகுநந்தனால் பட்டது போதும்! என் மகளுக்காக மனிதர்களோட மோதலாம்... ஆத்மாவைப் பகைச்சுக் கிட்டு என் மகளை வாழவைக்க முடியுமா? வேண்டாம்பா இந்த விபரீத முடிவு. நீயும் நல்லா இருக்கனும், என் மகளும் நல்லா இருக்கனும்..." என்று முடித்து விட்டார். 


"இப்போ ரகுநந்தன் தான் பிரச்சனையா? நான் போய் அவன்கிட்டப் பேசுறேன்." என்று வேலு கூறியதும், 


ரகுநந்தனை சந்திக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள் கிரேசா.


அங்கே! 

பூவினா அழுவதை வேடிக்கை பார்க்க முடியாமல் தவித்தான் ரகுநந்தன். 


'என் காதலை சேர்த்து வைத்தால், அவளுடைய காதல் தோற்றுவிடும்.' என்று தெரிந்தும், என்மேல் வைத்திருக்கும் பாசத்திற்காக, இவளுடைய உயிருக்கும் மேலாக நினைக்கும் வேலுவை விட்டுக்கொடுக்கத் துணிஞ்சுட்டாளே!! வேலுவைப் பிரிந்தால் இவள் வாழ்க்கை நரகமாகிவிடும்... இருந்தாலும் என்னைத் தன் நண்பனாக, என்னிடம் பிரியம் வைத்ததற்காக நரகவாழ்க்கையை ஏற்க தயாராகிவிட்டாளா?!! என்மேல் இவ்வளவு பாசமா? இப்படியொரு பாசம் கிடைக்க, நான் என்ன தவம் செய்தேனோ? இவளுக்காக எதையும் செய்வேன்!' 


'என்னவாக இருந்தாலும் சரி! பூவினா எடுக்கும் முடிவே இறுதியானது. அதையே நான் சந்தோஷத்துடன் ஏற்பேன்.' என்ற முடிவுக்கு வந்தான் ரகுநந்தன், 


பூவினா என்ன முடிவெடுக்கப் போகிறாள்?


பூவினா, ரகுநந்தன் இருவரும் ஒருவருக்காக ஒருவர் தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுத்துவிட்டனர்.


இருவரில் யார் காதல் ஜெயிக்கும்?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்... 


💍💍💍💍💍💍💍💍💍



Post a Comment

0 Comments