வருவான்-41

 வருவான்-41


மஞ்சுவை எப்படித் தாயத்து அணியவைப்பது என்று திட்டம் போட்டு அவளுக்காக, பூவினாவும், கிரேசாவும் காத்திருந்தனர்.


மஞ்சு வந்ததும், அவளிடம் தாயத்தைக் காட்டி, திட்டம் போட்ட படியே பேசினர். 


ஆச்சரியத்துடன் தாயத்தை வாங்கிப் பார்த்த மஞ்சு, "பார்த்தா வித்தியாசமா எதுவும் தெரியலையேபா!" என்று சிரித்தபடி கூறினாள்.


"பார்த்தாத் தெரியாது மஞ்சு... கழுத்தில் போட்டுப்பாரு." என்றாள் கிரேசா.


"இந்தத் தாயத்தை மொதல்ல நீ போட்டுக் காட்டேன் கிரேசா..." என்ற மஞ்சு கிரேசாவிடம் தாயத்தைக் கொடுத்தாள்.


"அட பயந்தாங்கொள்ளி! நீ பெரிய சூரப்புலி சிங்காரம்னு எல்லோர்கிட்டயும் சொல்லிவச்சிருக்கேன். நீ என்னடான்னா இத்துனூண்டு தாயத்தைப் போட்டுக்கப் பயப்படுறியே. ஹாஹ்ஹஹ்ஹஹ்ஹாஆஆ" என்று கிரேசா சிரிக்க,


"போடி! திடீரெனு ஒரு தாயத்தைக் கொடுத்து, பின்னாடியே, அது ஏதேதோ வித்தைகாட்டும்னு சொன்னா பயப்படாம?!!... ஆஹா! கொடு உன் ரத்தினமாலையைனு வாங்கியா போட்டுக்குவாங்க?" என்று மஞ்சு சிரிக்கவும்,


"ஏய்! என்னப்பா, வில்லங்கமான பொருளைக் கொடுத்து உன்னைப் போட்டுக்காட்டச் சொல்வேனா?" என்று கிரேசா கேட்க,


"நான் ஒன்னும் வில்லங்கம்னு சொல்லலையே? என்னை முட்டாளாக்க ஏதோ பண்றீங்கன்னுதான் சொன்னேன்."


"ஐய்! ஐய்! நல்லா சமாளிக்கிறா... பாரேன் வினு!" என்று பூவினாவைப் பார்த்த கிரேசா,'ஆண்டவரே! இவ ஏன் இப்படி முழிக்கிறா!!' என்று எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூவினாவை, கிரேசா உலுக்கிவிட்டாள்.


"இவ எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி யோசிக்கிறா?” என்று மஞ்சு பூவினாவைப் பார்த்துக் கேட்க, 



"நீ பயந்ததைப் பார்த்து, இவ அதிர்ச்சியாயிட்டா... சரி! நாம விஷயத்துக்கு வருவோமா?" என்று கிரேசா கேட்டதும்,


"அதானே! என்னடா இது? பேச்ச மாத்திட்டா விட்டுடுவாளோன்னு நினைச்சேன்... நீயா விடுறவ?... " என்று சிரித்த மஞ்சு, "நீ இதைப் போட்டுக்காட்டு... அப்பதான் நான் போடுவேன்." என்று கிரேசாவிடம் மஞ்சு அடம்பிடிக்க. 


'இதற்குமேல் வற்புறுத்தினால் காரியம் ஆகாது.' என்று நினைத்த கிரேசா,


"நீ வர்றதுக்கு முன்னாடியே நான் போட்டுப் பார்த்துட்டேன்... வேணும்னா வினுவுக்குப் போட்டுப் பார்க்கலாமா?" என்று கேட்டாள் கிரேசா.


"சரி" என்று மஞ்சுவும் ஆர்வத்துடன் சம்மதிக்க, 


பூவினாவிற்குத் தாயத்தை அணிவித்து, முப்பது நிமிடங்கள் முடிய காத்திருந்தனர். 


முப்பத்தைந்து நிமிடமானபோது, கிரேசாவிற்கு அவளுடைய அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது. 


மஞ்சுவிடம், “வினுட்ட திருநீறை எடுத்துக்கொடு” கூறிவிட்டு, 


தன் அம்மாவிடம் 'சிறிது நேரத்தில் வருவதாகக்' கூறி கிரேசா ஃபோனை வைத்தாள்.


அதற்குள் மஞ்சு, திருநீறு பொட்டலத்தைப் பூவினாவிடம் பூசிக்கொள்ளச் சொல்லிக் கொடுத்துவிட்டு, 


'கிரேசா எப்பொழுதடா ஃபோனை வைப்பாள்' என்று கிரேசாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


"அப்படியே எங்க அம்மாவுக்கும் ஃபோன் பண்ணி, நான் வர ஒரு மணிநேரமாகும்னு சொல்லிடு ப்பா. நான் சொன்னா கத்துவாங்க. ப்ளீஸ்!" என்று கிரேசாவிடம் கெஞ்சவும், 


மஞ்சுவின் அம்மாவிடமும் பேசிவிட்டு, கிரேசா, "போதுமா?" என்றபடி மஞ்சுவைப் பார்க்க, 


மஞ்சு எதையோ பார்த்துக் கண்கள் விரிய அசையாமல் நின்றாள்.


'இவளுக்கு என்ன ஆச்சு? ' என்று மஞ்சு பார்வை சென்ற திசையில் பார்த்த கிரேசாவிற்கு ஒரு நிமிஷம் இதயம் நின்று துடித்தது. அங்கே!...


பூவினாவின் நெற்றியில் பூசிய விபூதி, குங்குமமாக மாறியிருந்தது.


'இது எப்படி?' என்ற அதிர்ச்சியில் மஞ்சுவும்,


'நிஜமாவே பூவினா, வைதேகி இல்லையா?!!!' என்று நம்பமுடியாமல் பூவினாவின் நெற்றியையே பார்த்துக்கொண்டிருந்தாள் கிரேசா.


அதுவரை எந்த உணர்வும் இல்லாததுபோலிருந்த பூவினா, கிரேசா, மஞ்சுவின் முகங்களைப் பார்த்தே, தன் நெற்றியில் விபூதி, குங்குமமாகிவிட்டதைப் புரிந்து கொண்டவள், 'நான்தான் சொன்னேன்ல?' என்பது போல் கிரேசாவைப் பார்த்தாள் 


அதிர்ச்சியிலிருந்து மீண்ட கிரேசா, நடுங்கும் கைகளால் தாயத்தை பூவினாவின் கழுத்திலிருந்து கழட்டி, மஞ்சுவிற்கு மாட்டிவிட்டு, விபூதி பூசுவதற்காக மணியைப் பார்த்தாள். 


ஏனோ, 'பூவினா வைதேகியில்லை!' என்பதை கிரேசாவால் ஜீரணிக்க முடியவில்லை. 


முப்பது நிமிடங்கள் கடந்தும், கிரேசா விபூதியை எடுத்து மஞ்சுவிற்குப் பூசிவிடாமல் பூவினாவையே பார்த்தவண்ணமிருந்தாள். 


உலகபற்றையே துறந்தவள்போலப் பூவினா, விபூதியை எடுத்து மஞ்சுவின் நெற்றியில் பூசிவிட, முப்பது நிமிடங்கள் ஆகியும் திருநீறு வெள்ளை நிறத்திலேயே இருக்க. அதைப் பார்த்த பூவினாவின் கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது.


பூவினாவைப் பார்த்த மஞ்சு பயந்து போய்க் கண்ணாடியில் தன் நெற்றியைப் பார்க்க, அங்கே விபூதி வெள்ளையாகவே இருந்தது.


"ஆஹா நாம பிரியமாட்டோம் டி!!! நீ ஏன் அழற? " என்று கூறிய மஞ்சு சந்தோஷமாகப் பூவினாவையும், கிரேசாவையும் கட்டிக்கொண்டு குதித்தாள். 


மீண்டும் கிரேசாவின் அம்மா ஃபோன் செய்யவும்,


"சரிபா! நான் கிளம்புறேன்." என்று கிரேசா இரு தோழிகளிடம் விடைபெற,


"உங்க வீட்ல ஏதாவது விஷேசமா? எப்பவும், நீ பூவினாகூட இருந்தா, உங்கம்மா கூப்பிடமாட்டாங்களே கிரேசா! இப்ப 'என்ன ரிசல்ட் வருமோன்னு' இவ பயந்துட்டா போல கிரேசா... ப்ளீஸ் புரிஞ்சுக்க... நீ இருந்து இவள சமாதானப்படுத்திட்டு போ ப்பா... எங்க அம்மாவைதான் சமாளிக்க முடியாது. இப்பக்கூட நம்ம மூணுபேரும் கோயிலுக்குப் போறோம்னுதான் சொல்லிட்டு வந்திருக்கேன்... நான் கிளம்பறேன்... நீ இரு. இவள சிரிக்கவச்சுட்டுக் கிளம்பு” என்று கூறிவிட்டு, பூவினாவின் நெற்றியில் முத்தமிட்டு ஓடிவிட்டாள் மஞ்சு.


மஞ்சு சென்றதும், "நீயும் கிளம்பு." என்றாள் கிரேசாவிடம், பூவினா.


"நீ இப்படி இருந்தால், நான் எப்படி நிம்மதியா கிளம்புறது? ஆரம்பத்துலயே இதெல்லாம் தேவையான்னு தோணுச்சு. ஆனா உன்னை மட்டும் தனியா அனுப்பச் சங்கடப்பட்டுத்தான் நானும் வந்தேன்." மிகவும் வருத்தமாகப் பேசிய கிரேசாவின் நாடியைத் தொட்டு,


"எனக்கும் முன்னாடியே இப்படி ஆகும்னு தெரிஞ்சுதானே இறங்கினேன்... கொஞ்சம் அதிர்ச்சி... அவ்வளவுதான்... நீ கிளம்பு, நான் சரியாயிடுவேன்." என்று மென்மையாகச் சிரித்தபடி கூறிய பூவினாவைப் பார்க்கும்போது, கிரேசாவின் நெஞ்சம் பிசைந்தது...


அப்பொழுது வேலுவிடமிருந்து ஃபோன் வர, 


"இவரை மறந்துட்டோமே வினு!" என்ற கிரேசா, பூவினாவின் மொபைலை எடுத்து, நடந்த விபரங்களை வேலுவிடம் கூறினாள்.


"ஃபோனை அவ எடுத்துப் பேசாம, நீ எடுத்ததுமே புரிஞ்சுக்கிட்டேன்... இப்படிதான் நடந்திருக்கும்னு. வினி எப்படி இருக்கா?" என்று கவலையுடன் கேட்டான் வேலு.


"கொஞ்சம் சோர்வா தான் இருக்கா." என்ற கிரேசாவின் குரலில் இருந்த லேசான நடுக்கத்திலேயே பூவினாவின் மனநிலை புரிந்த வேலு,


"இந்த நிலையில எனக்கு சோதிக்க வேண்டாம் கிரேசா... நாளைக்குப் பார்த்துக்கலாம்." என்றதும், கிரேசா விடமிருந்து மொபைல் ஃபோனை வாங்கிய பூவினா,


"இன்னைக்கே உங்களுக்கும் பார்த்துடுங்க வேலு. நாளைக்குவரை எதுக்குத் தள்ளிபோடனும்? அதுதான் இன்னும் கஷ்டம்... சீக்கிரம் பார்த்துட்டு சொல்லுங்க." என்று கூறியதும், 


அவள் சொல்வதும் சரிதானென்று, பூவினா வீட்டில் நடந்த விஷயங்களை செல்வம், பத்மா, செந்தில், ஜெயராம் ஆகியோரிடம் வருத்ததுடன் வேலு கூறினான். 


செல்வம் தவிர மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்வத்திற்கு, மஞ்சுவைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் மிகுந்தது. 


வேலு, ரகுநந்தனின் துணி இருந்த தாயத்தை எடுத்துக் கட்டிக்கொண்டான்.


செல்வம் மிகவும் ஆர்வமாகப் பார்க்க, பத்மாவிற்கு, பூவினாவை நினைத்து மிகவும் வேதனையாக இருந்தது. 


செந்திலுக்கோ, 'வேலு ரகுநந்தனாக இருந்துவிட்டால் என்ன ஆகுமோ?' என்று பயமாக இருந்தது. 


ஜெயராம், 'வேலுவின் காதலைக் காப்பாற்றுங்கள்' என்று கடவுளைக் கும்பிட்டான்.


வேலுவின் நெற்றியில் விபூதி வெள்ளையாகவே இருக்க, பத்மா ஓடிவந்து வேலுவின் கைகளைப் பிடித்துக் கொண்டார். 


செந்திலும் அருகில் வந்து, வேலுவை அணைத்துக் கொண்டார். 


ஜெயராம்தான் கண்கலங்க 'இது சந்தோஷமா? கவலையா?' என்று புரியாமல் வேலுவையே பார்க்க, வேலுவும் கண்கலங்கியபடி ஜெயராமையே பார்த்தான்.


'இங்கே வைத்து எதுவும் பேச வேண்டாம்' என்று நினைத்த செந்தில்,


"நல்ல செய்தி கிடைச்சிருக்கு... வா வேலு நாம எங்காவது போகலாம்... எத்தனை வருஷமாச்சு நாம மூணுபேரும் சேர்ந்து ஊர்சுத்தி." என்று உணர்ச்சி வசப்பட்டு அழைக்க,


"கோயிலுக்குப் போங்க ப்பா நல்லது நடக்கட்டும்." என்றார் செல்வம்.


“முதல்ல பூவினாவிற்கு விஷயத்தைச் சொல்லிடுங்க ப்பா. " என்றார் பத்மா வேகமாக.


"அந்தப் பொண்ணுகிட்டக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுப்பா வேலு... இதுவரை, நீங்க யாருன்னு உங்களுக்கே தெரியாம ஏதோ பாசம் வச்சுட்டீங்க... இனி கொஞ்ச கொஞ்சமா…" என்று செல்வம் என்ன சொல்ல வருகிறார். என்பதைப் புரிந்து கொண்ட பத்மா, நண்பர்கள் மூவரையும் அவசரமாக வழியனுப்பி வைத்தார்.


வேலுவின் ஃபோன் வரத் தாமதமாகவுமே, பூவினா விரக்தியாகச் சிரிக்க ஆரம்பித்தாள். 


அதைக் கவனித்த கிரேசா, ஜெயராமிற்கு ஃபோன் செய்து விபரங்களைத் தெரிந்து கொண்டாள்.


“பூவினாவிடம் எப்படிப் பேசுவது?' என்று தெரியாமல், கிரேசா பூவினாவின் அருகில் அமர்ந்தவள்,


"உங்க வாழ்க்கையைப் பற்றிய விஷயத்தில் வேலு சொல்றபடி செய்வோம் வினு." என்றாள் மெல்லிய குரலில்.


"அது நல்லா இருக்காது கிரேசா... அவர்தான் ரகுநந்தனோட மறுபிறவின்னு தெரிஞ்சபிறகு, மஞ்சுவை அவருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் சரி. இந்தப் பிறவியிலும் அவங்க சேர்றதுக்கு நான் தடையா இருந்தா! அந்தப் பாவம் என்னைச் சும்மா விடாது." என்றாள் பூவினா. 


"மஞ்சு, வைதேகியா இருக்கலாம்! அதுக்காக?!! உன்னை ஏன் சுதான்னு நினைக்கிற?... கொஞ்சமாவது நீ சுதா மாதிரி இருக்கியா? சுதா, காதலிச்சவனையே, தனக்குக் கிடைக்கலைன்னதும், கொலை செஞ்ச பாவி.... நீ அப்படிச் செய்யக்கூடியவளா? நீ வைதேகியா இல்லாம இருக்கலாம்... அதுக்காக சுதான்னு மட்டும் சொல்லாதே வினு... கொஞ்சம்கூடப் பொருத்தமாயில்லை... அதேமாதிரி, வேலு உன்னைத்தான் விரும்புறார்… மஞ்சுவை எப்படிக் கட்டிக்குவார்?"


"அதெல்லாம் முடியும் கிரேசா... இந்தக் காலத்துல காதலிக்கிறவங்க எல்லோரும், காதலிச்சவரையே கல்யாணம் பண்ணிக்கிறாங்களா என்ன? குடும்பச் சூழ்நிலை காரணமா வேற ஒருத்தரைக் கட்டிக்கிறதில்லையா?"


"வினு தேவையில்லாம எதையாவது செஞ்சு, உன் தலையில நீயே மண்ணள்ளிப் போட்டுக்காத. மஞ்சுகிட்ட நான் பேசுறேன்."


"வேண்டாம் கிரேசா! அவ பாவம்... அவளாவது காதலிச்சவனையே கட்டிக்கட்டும்."


"அப்போ நீ? "


"எனக்கென்ன? கொஞ்ச நாள்ல சரியாகிவிடும்." என்று எங்கோ பார்த்துக் கொண்டு பேசுபவளைக் காணப் பொறுக்க முடியவில்லை கிரேசாவிற்கு.


வீட்டிற்கு வந்தும் கிரேசாவிற்கு மனம் அமைதியடையவில்லை. 


இன்னும் கொஞ்ச நேரம் கிரேசா, தன் அருகில் இருந்தால், தன்னுடைய மனதை மாற்றிவிடுவாள் என்று நினைத்தே பூவினா, கிரேசாவை வற்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தது, கிரேசாவிற்கு நன்கு புரிந்தது. 


'இதற்கு என்ன செய்யலாம்?' என்று தன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கிரேசாவிற்குத் திடீரென ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வர, வேகமாக மொபைல்ஃபோனை எடுத்து ஜெயராம் நம்பருக்கு ஃபோன் செய்தாள்.


கோவிலில், நண்பர்கள் மூவரும் அமர்ந்திருக்க ஜெயராமின் ஃபோன் ரிங் ஆனது. 


கிரேசா நம்பர் திரையில் தெரியவும், பூவினாவிற்குத்தான் ஏதோ பிரச்சனை என்று பயந்து ஜெயராம் ஃபோனை எடுக்கவும்,


"எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்று கிரேசா கேட்டாள். 


திரும்பி வேலுவைப் பார்த்த ஜெயராம், "ம் சொல்லுங்க." என்றான். 


"வந்து தப்பா எடுத்துக்காதீங்க... உங்க பக்கத்துல உங்க ஃபிரண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் தள்ளி வந்து பேசுங்க." என்றாள் கிரேசா ஹஸ்கி வாய்சில்.


'இவளுக்கு என்னாச்சு? ஏன் ஒரு டைப் பா பேசித்தொலைக்கிறா?' என்று நினைத்தவன்,


"சரி! சொல்லுங்க!" என்றான். 


"என்னால இதைத் தாங்கமுடியல... அதான், உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லிடலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்."


'இவ என்ன புதுசா ஒரு பூகம்பத்தைக் கிளப்புறா? ' என்று அரண்ட ஜெயராம்,


"நீங்க இந்த முடிவுக்குவந்தது பூவினாவிற்குத் தெரியுமா?"


"அச்சச்சோ! அவளுக்குத் தெரியாது. நான் அவளுக்குத் தெரியாமதான் பேசுறேன். ப்ளீஸ்! இப்போதைக்கு அவட்ட சொல்ல வேண்டாம்."


'பூவினாவுக்குத் தெரியாம என்கிட்ட என்ன சொல்லப் போறா? 'ஐ லவ் யூ!' னுடுவாளோ.' என்று நினைத்த ஜெயராம் அமைதியாக யோசிக்க,


"என்ன பேசாம இருக்கீங்க? இத்தனை மாசமா உங்களுக்கு என்னைத் தெரியும். இதுவரை நான் இந்த மாதிரி உங்க கிட்டப் பேசினதில்லை... இல்லையா?"


"ஆமா!" என்ற ஜெயராமின் குரல் அவனுக்கே கேட்கவில்லை. 


ஜெயராமின் குரல், உடல்அசைவுகள், வித்யாசமாகப் படவே, அவனைப் பார்த்த வேலு, "யாரு?" என்று கேட்க, 


அதற்கு ஜெயராம், உதட்டைக் குவித்து அதில் ஆள்காட்டி விரலை வைத்து 'உஷ்' என்று சப்தமில்லாமல் சொல்லிவிட்டு,


"என்ன கிரேசா நீங்க அமைதியாயிட்டீங்க? சும்மா சொல்லுங்க." என்று தைரியப்படுத்தினான்.


"வந்து... வேலு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று கிரேசா கேட்டதும்,


"என்னது?!!... வேலுவா?!!.. ஏம்மா ஏன்? என்னையெல்லாம் பார்த்தா எப்படித் தெரியுது?" என்று ஜெயராம் பொங்க,


"அப்படியெல்லாம் இல்லைங்க இந்த விஷயததை உங்ககிட்ட தான் என்னால கேட்க முடியும்..." என்ற கிரேசா 'எப்படி ஆரம்பிப்பது' என்று இழுக்க,


"ஏம்மா இருக்கிற பிரச்சினை போதாதா? ஏற்கனவே அவனுக்காக ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க... இதில் நீ வேற ஏன்? நீங்க மூணுபேரும் சேர்ந்து ஒருத்தனையே கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு ஏற்கனவே முடிவெடுத்து வச்சிட்டீங்களா?... இதெல்லாம்..." என்று பேசிக்கொண்டு போன ஜெயராமை,


"சார்! போலிஸ்காரர்னு பார்க்கிறேன். இல்லை... யார் என்ன சொல்ல வர்றாங்கன்னு முழுசாவே கேட்க மாட்டீங்களா? மூஞ்சிய பாரு!" 


"ஏய்! என்ன வாய் நீளுது... ஏதோ எங்கிட்ட காதல் சொல்லப்போறேன்னு அமைதியா பேசினா..." என்று குதித்த ஜெயராமிடமிருந்து ஃபோனை வாங்கிய வேலு,


"என்ன கிரேசா என்ன விஷயம்?" என்று கேட்க, அருகில் நின்ற ஜெயராம், வேகமாக ஸ்பீக்கர் மோட் ஐ ஆன் பண்ணினான். 


அவனை முறைத்துவிட்டு ஃபோனை காதில் வைத்த வேலுவிடம், கிரேசா மிகவும் தயங்கி,


"தப்பா எடுத்துக்காதீங்க... " என்று ஆரம்பித்ததும்,


"மறுபடியும் முதல்ல இருந்தா? இப்படித்தான் எங்கிட்டயும் கேட்டா வேலு." என்ற ஜெயராமை முறைத்து அடக்கிய வேலு.


"நீ சொல்லும்மா." என்றான்.


"எனக்கு ஒரு சந்தேகம்... நீங்க சின்ன வயசுல தொலைஞ்சு போனதில்லைனு உங்க அம்மா சொன்னாங்க இல்லையா? அதுனாலதான், நீங்கதான் ரகுநந்தனானு கொஞ்சம் உறுதிபடுத்திக்கத் தோணுது. பத்மா ம்மாவுக்கு, ரகுநந்தனின் மறுபிறவிப் பையனோட பெத்தவங்களைத் தெரியும்தானே? பத்மா ம்மாவை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி, உங்க அம்மா, அப்பாவை அறிமுகப்படுத்தி, அவங்களை அடையாளம் தெரியுதான்னு பார்க்கலாமே?" 


"சூப்பர் கிரேசா! பதட்டத்துல இதெல்லாம் மறந்துட்டேன் பாரு... சரி! இப்ப உங்க ரெண்டு பேராலயும் வரமுடியுமா? இல்ல... நாளைக்குப் பார்த்துக்கலாமா?"


"மறுபடியும் தப்பா எடுத்துக்காதீங்க... பூவினாகிட்ட இப்ப சொல்ல வேண்டாம்... நீங்க மூணுபேரும் மட்டும் போயிட்டு வந்து எனக்குச் சொல்லமுடியுமா?" கிரேசா தயங்கியபடி கேட்டதும், 


'பூவினா ரொம்பக் கஷ்டப்படுகிறாளோ?' என்று நினைத்த வேலு, "அவள கொஞ்சம் பார்த்துக்க கிரேசா... நான் சொல்றதைதான் கேட்கமாட்டேங்கிறா. நீயாவது சொல்லு... காதல்ல தியாகம்கிறது உயிரோட எரியிறதுக்கு சமம்.... இன்னொன்றையும் நான் சொன்னதாகவே அவகிட்ட சொல்லு... எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா, அது பூவினா கூடதான்... அவ என்னை யாருக்காவது விட்டுக்கொடுக்க, நான் ஒன்னும் உணர்ச்சி இல்லாத ஜடப்பொருள் இல்லை கிரேசா... அவ நினைக்கிற மாதிரி அவ விலகிட்டா நான் வேறொருத்திய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்... எங்காவது கண்காணாத தூரத்துக்குப் போயிடுவேன். இதை நான் சும்மா சொல்லலை... உனக்காவது புரிஞ்சா சரிதான்… ஓகே! நான் எங்கவீட்டுக்கு பத்மாம்மா வைக் கூட்டிட்டு போயிட்டு, உனக்கு ஃபோன் பண்றேன்." என்று கூறி ஃபோனை வைத்து விட்டான். 


ஃபோனை வைத்தவளுங்கு, வேலு, பூவினாவின் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்து, கிரேசாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.


‘வினு ஏன் இப்படிப் பண்றா? இந்த மாதிரிக் கணவன் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்க வேண்டாமா? சொல்லும் போல விட்டுக்கொடுக்கும் பொருளா உண்மையான காதல்?... இவ சும்மாவே ரகுநந்தனுக்காக யோசிப்பா... இப்ப மஞ்சு!!!’ என்று தலையில் கைவைத்தபடி அமர்ந்த கிரேசாவிற்கு, ஏனோ இந்த விஷயத்தில் மஞ்சு மேல் இரக்கம் வரவில்லை... 


மஞ்சுவை வைதேகியாக நினைக்கவே பிடிக்கவில்லை... மஞ்சுதான் வைதேகி என்று தெரிந்த நிமிஷத்திலிருந்து அவளைப் பார்த்தாலே கோபம்வந்தது, கிரேசாவிற்கு... 


'முடிந்தவரை வேலுவிற்கும் மஞ்சுவிற்கும் கல்யாணம் நடக்காமல் தடுத்துவிட வேண்டும்' என்று தோன்றியது. 


‘ரகுநந்தன் விடுவானா? மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன செய்துலிடுவான்... என்னைக் கொன்று விடுவானா? பரவாயில்லை!!!' என்று நினைத்தவள்,




"உயிரே போனாலும் உன்னை வேலுவுடன் சேரவிடமாட்டேன் மஞ்சு!...." என்று தன்னையும் அறியாமல் வாய்விட்டுக் கூறினாள் கிரேசா... அவள் கண்கள் இரண்டும் கோவைப்பழமாகச் சிவந்திருந்தது...


அவள் வீட்டையே வேதனையாகப் பார்த்தபடி ரகுநந்தன் நின்றிருந்தான்...


கிரேசாவின் கோபத்திற்கான காரணம் பூவினாவின் காதல் மட்டும்தானா?


நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும் ரகுநந்தன், என்ன செய்யப் போகிறான்?...


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…


💍💍💍💍💍💍


Post a Comment

0 Comments