வருவான்-40
நாடி ஜோதிடர், 'ரகுநந்தன் மற்றும் வைதேகியின் மறுபிறவி யார்?' என்று கண்டுபிடிக்கக் கொடுத்த தாயத்தையும், திருநீறையும் அனைவரிடமும் காட்டினார் செல்வம்.
இதில் முழுநம்பிக்கை இல்லையென்றாலும், செல்வத்திற்காக, மகள்மேல் அவர் வைத்திருக்கும் பாசத்திற்காகவும், இத்தனை வருடம் நம்பிக்கையுடன் கூடிய அவருடைய பக்திக்காகவும், நாடி ஜோதிடர் சொன்னபடி செய்து பார்க்க முடிவுசெய்தனர் இளயதலைமுறையினர்.
'செல்வமும், ஜெயராம் வீட்டில் இருப்பதே நல்லது' என்று அவரை சம்மதிக்க வைத்து, செல்வத்தை, ஜெயராம் வீட்டில் விட்டுவிட்டு,
பத்மாவை அழைத்துக் கொண்டு, அவர்களின் வீடான வைதேகியின் வீட்டிற்குச் சென்று, வைதேகியின் சேலையில் சிறுதுண்டும், ரகுநந்தன் சட்டையின் சிறு துண்டையும் எடுத்து வந்து செல்வத்திடம் கொடுத்தனர்.
அதற்குள், காவி உடையிலிருந்து, சாதாரண உடைக்கு மாறியிருந்தார் செல்வம்!
ஜெயராம் வீட்டின் பூஜைஅறைக்குச் சென்று, விளக்கு ஏற்றி, 'எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்' என்று அனைவருமே தெய்வத்தின் ஆசீர்வாதத்தை வேண்டினர்.
பிறகு செல்வம், ஜோதிடர் சொன்னது போல, தாயத்தின் ஒரு ஓரத்தில் இருந்த மூடியைக் கழட்டி, அதனுள் ரகுநந்தனோட சட்டைத் துணியின் சிறு துண்டை வைத்து, அதன்பின் ஜோதிடர் கொடுத்த மூலிகை வேரை வைத்து, இறுக்கி மூடினார். அதே போல மற்றொரு தாயத்தில் வைதேகியின் சேலை துண்டு மற்றும் மூலிகைவேரை வைத்து மூடினார்.
இரண்டு தாயத்துகளையும் இறைவன் முன் வைத்து மீண்டும் வணங்கினர்.
"முடிஞ்சுடுச்சு... இனி ரகுவையும் வைதேகியையும் கண்டுபிடிக்க வேண்டியதுதான். சொல்லுங்க... யாரிடமிருந்து ஆரம்பிக்கலாம்?" என்று செல்வம் மற்றவர்களைப் பார்த்துக் கேட்டார்.
பத்மா, பூவினா, கிரேசா, ஜெயராம், செந்தில் அனைவரும் வேலுவைப் பார்க்க, அவனோ பூவினாவைப் பார்த்தான்.
'அவளிடம் சோதனை செய்து பார்க்க நினைக்கிறானோ?' என்று நினைத்த பூவினா, கண்களில் கெஞ்சுதலாக 'வேண்டாம்' என்பது போல மெல்லத் தலையசைத்தாள்.
பூவினாவின் மனம் புரிந்த வேலு,
"ஐயா, தப்பா எடுத்துக்கலைனா நான் நினைப்பதை சொல்லட்டுமா?" என்று கேட்டான், செல்வத்தைப் பார்த்து,
"எதுவாக இருந்தாலும் சொல்லு ப்பா. இப்போ நாம இருக்கும் நிலைல, எல்லோருடைய கருத்துக்களும் தேவைதான். அதனால அவங்கவங்க மனசுல என்ன இருக்கோ அதைச் சொல்லிடுங்க..." என்று அனைவரையும் பார்த்து, செல்வம் கூறினார்.
எல்லோருக்குமே செல்வம் சொன்னது சரியென்று பட, "சரி" என்று ஆமோதித்தனர்.
பிறகு அனைவரும் 'வேலு என்ன சொல்லப் போகிறான்?' என்று வேலுவைப் பார்த்தனர்.
"வந்து... இதில் யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப் படுத்துறதாவோ, போலீஸ்காரர் கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவோ நினைக்க வேண்டாம்..." என்று நிறுத்தியவன்,
சிறிது தயக்கத்துடன் "முதல்ல... ரகுவாகவோ வைதேகியாகவோ இருக்கமாட்டாங்கனு, நாம நினைக்கிற அதாவது, நம்ம சந்தேக லிஸ்ட்ல இல்லாதவங்களுக்கு இந்தத் தாயத்தைப் போட்டு, திருநீறு பூசிப் பார்ப்போம்... நமக்கே ஒரு நிச்சயம் அதாவது முழு நம்பிக்கை கிடைத்தால்... சந்தேகப்படுறவங்க கிட்ட சோதிச்சு பார்க்கும்போது, எதிர்பாக்கும் முடிவு அல்லது எதிர்பார்க்காத முடிவு எது வந்தாலும், சஞ்சலமில்லாமல் அந்த முடிவை நம்மால ஏத்துக்கிற முடியும்... என்ன சொல்றீங்க?" என்று அனைவரையும் பார்த்துக் கேட்டான்.
செல்வம் உட்பட, வேலு சொல்வது சரியென அனைவருக்கும் தோன்ற சம்மதித்தனர்.
அதன் படியே வைதேகியா இருக்கமாட்டாள் என்று அனைவரும் நம்பும் கிரேசாவிற்கு முதலில், வைதேகியின் தாயத்தை அதாவது வைதேகியின் சேலைத்துண்டு இருக்கும் தாயத்தை அணிவித்து, முப்பது நிமிடங்கள் முடிய காத்திருந்தனர்.
அருகிலிருப்பவர்களின், இதயத்துடிப்பு நன்றாகக் கேட்கும் அளவுக்கு அனைவரின் இதயமும் வேகமாகத் துடித்தது.
கிரேசாவிற்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. முப்பத்தைந்து நிமிடமானதும், செல்வம் திருநீறை எடுத்து கிரேசாவிற்குப் பூசிவிட்டார்.
அடுத்து பதினைந்து நிமிடம் ஆனபோது... வெள்ளையாக இருந்த திருநீறு கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாற அனைவரின் கண்களும் தெறித்து வெளியே வரும் அளவு விரிந்தது.
பதினாறாவது நிமிடத்தில் கிரேசாவின் நெற்றியில் சிவப்பான குங்குமம் ஆனது. இதைப் பார்த்த பூவினா அலறி கிரேசாவின் அருகிலிருந்து எழுந்துவிட்டாள்.
"ஹேய்! லூசு நீ கத்தி, அவளைப் பயமுறுத்தாதே!" என்று பூவினாவை அதட்டி கிரேசாவிடம் கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டினான் வேலு.
"நீயும் கத்திடாதம்மா! நெற்றியில் குங்குமமாகத்தான் மாறியிருக்கு... உனக்கு வலிக்குதா என்ன?" என்று சிரித்தபடி கிண்டலடித்தான் ஜெயராம்.
"பெரிய இவரு!.. எல்லாம் எங்களுக்குத் தெரியும்!" என்று ஜெயராமை கிண்டல் அடித்த கிரேசா, செல்வத்திடம் கேட்டுவிட்டு, தன் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்தவள், பூவினாவிடம் நெருங்கி,
"வினு! நீயா இப்படி நடந்துக்கிற? புலியப் பார்த்து எலியெல்லாம் கிண்டல் பண்ணுது பாரு." என்று ஜெயராமைப் பார்த்தபடி கூற,
ஜெயராமின் முகம் போன போக்கைப் பார்த்த பூவினா, சிரித்துவிட்டாள்.
அதைப் பார்த்த ஜெயராம்,
"வேலு! பாருடா... சில்லுவண்டெல்லாம் என்னைக் கிண்டல் பண்ணுது. நீயும் சேர்ந்து சிரிக்கிற... நீயெல்லாம் ஒரு ஃபிரண்ட்டா டா?" என்று எகிற,
"விடு ஜெயராம்! இதெல்லாம் நமக்குப் புதுசா என்ன?" என்று கூறி வேலு மேலும் சிரிக்க,
அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.
சூழ்நிலையை சந்தோஷமானதாக மாற்றிய வேலுவும், ஜெயராமும் ஒருவரை ஒருவர் அர்த்தமுள்ள பார்வை பார்த்துக் கொண்டனர்.
எல்லோரும், குறிப்பாக பூவினா நல்ல மனநிலைக்கு மாறும்வரை ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டனர்.
ஒரு வழியாக பூவினா மலர்ந்து சிரிக்கவும்,
"சரி! இப்போ உனக்குப் போட்டுப் பார்க்கலாமா? நமக்கு உதவ வந்த கிரேசாவே, சோதனை செய்துபார்க்க சம்மதம் சொன்னபிறகும், நீ தயங்குவது நல்லாவா இருக்கு வினி?" என்று கேட்டான் வேலு.
"நான்தான் வைதேகி இல்லையே! பிறகு எதற்கு நான் செய்யனும்?" என்று தயங்கியபடி கேட்டாள் பூவினா.
அவளை வற்புறுத்த விரும்பாத பத்மா, "பரவாயில்லை விடு வேலு, நாம மஞ்சுவிற்கே செய்து பார்த்துடலாம்." என்று கூற,
"மஞ்சுகிட்ட என்ன சொல்லி இதுக்கு சம்மதம் வாங்குறது?" என்று கேட்டார் செந்தில்.
"மஞ்சுகிட்ட உண்மைய சொல்லிடலாமா வேலு?" என்று கேட்டான் ஜெயராம்.
"இல்லை ஜெயராம்! இதக் கொஞ்சம் யோசிச்சுச் செய்வோம். அந்தப் பொண்ணு மனநிலை பத்தி முதல்ல தெரிஞ்சுக்குவோம்." என்றான் வேலு.
"அப்படியெல்லாம் யோசிக்கத் தேவையில்லை... மஞ்சு, வைதேகி மாதிரி பயங்கரத் தைரியசாலி... நம்ம பூவினாவுக்குத் தான் மென்மையான மனசு." என்று கிரேசா வேலுவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது,
வேலு, சீரியஸாக முகத்தை வைத்தபடி, தன் கண்களால் பூவினாவைப் பார்க்கச் சொல்லி ஜாடை காட்ட,
கிரேசா தன் அருகில் இருந்த பூவினாவைப் பார்த்தாள்.
பூவினாவின் கண்களில் அலைப்புறுதல் தெளிவாகத் தெரிந்தது...
அவள் மனம் படும் பாட்டை உணர்ந்த கிரேசா, பேச்சை நிறுத்தி, பூவினாவின் கைகளோடு தன் கையைக் கோர்க்க, ஒரு துணை கிடைத்த பரிதவிப்பில் சட்டென்று கிரேசாவின் உள்ளங்கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டாள் பூவினா.
அதைப் பார்த்த வேலு, ‘இவள் ஏன் இப்படித் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாள்? 'நான் ரகுநந்தன் கிடையாதுன்னு' எத்தனை முறை சொல்வது?’ என்று அவள்மேல் கோபம்வந்தாலும், பூவினாவை நெருங்கி, அவள் முகத்தைத் தன் இரு உள்ளங்கையால் தாங்கி,
"வினி! ஏன்டி என் உயிரை வாங்குற? நீ நினைக்கிற மாதிரி நான் ரகுநந்தனாவே இருந்தாலும், இப்ப உன்னைத்தானே விரும்புறேன். உன்னை விட்டு என்னால் எப்படி இன்னொருத்தி கையைப் பிடிக்க முடியும்? உன் காதலை விட, என் காதல் மட்டும் எந்த விதத்துல குறைஞ்சது? மொத மொத உன்னைப் பார்த்த நாளிலிருந்து, நான்தானடி உன் பின்னாடி வரேன்... நான் எந்தக் காரணத்துக்காகவும் உன்னை விட்டுப் பிரியிறதில்லைன்னு உறுதியா இருக்கேன்.... அதனாலதான் கலங்காம நிக்கிறேன்... நீ ஒருநிலையில் நிக்கல... அதான் இப்படிக் கிடந்து தவிக்கிற." என்று பூவினாவை வேலு தேற்றிக்கொண்டிருக்க,
அதிர்ச்சியான செல்வம், வேலுவைத் தடுக்கும் பொருட்டுக் கையை நீட்ட,
பத்மா செல்வத்தைத் தடுத்து, 'வேண்டாம்!' என்பது போல் தலையசைத்தார்.
செல்வத்திற்கும் வேலு, ரகுநந்தனாக இருக்கக்கூடும் என்று சிறு நம்பிக்கை இருந்ததால், 'பூவினா தன் மகளின் காதலுக்கு எதிரியாகிவிடுவாளோ?' என்று தோன்ற,
வேலுவையும் பூவினாவையும் நெருக்கமாகப் பார்க்க முடியாமல் வேறுபுறம் திரும்பிக் கொண்டார்.
அவரின் செய்கையைப் பார்த்த பத்மா, ஜெயராம், செந்தில், கிரேசா நால்வரும் அதிர்ச்சியடைந்து, பூவினாவையும், வேலுவையும் பார்த்தனர்.
ஒரு வழியாகப் பூவினாவும் சமாதானமடைய,
"என்னப்பா வேலு நம்ம அடுத்து செய்யவேண்டியதைப் பார்ப்போமா?" என்ற செல்வத்தின் குரலில் இருந்த கோபம், அனைவருக்குமே, குறிப்பாக வேலுவிற்கும், பூவினாவிற்குமே செல்வத்தின் கோபத்திற்கான காரணத்தைப் புரிய வைத்தது.
"நாம மஞ்சுவிடம் எப்படிப் பேசப்போகிறோம் வேலு?" என்று ஜெயராம் பேச்சைத் திருப்ப,
"வேலு சொன்ன மாதிரி, 'மஞ்சுதான் வைதேகி!' என்று தெரியாமல்? மஞ்சுவைக் குழப்புவது சரியில்ல. ஏற்கனவே இதில் ஒரு வில்லங்கம் இருக்கிறது..." என்று பூவினாவைக் குறிப்பாகப் பார்த்தபடி கூறிய செல்வம்,
"புதுசா ஒன்றை நாமே உருவாக்க வேண்டாம். அதனால எதுவும் சொல்லாமல் மஞ்சுவிடம் காரியத்தைச் சாதிக்க அவ தோழி பூவினாவால் தான் முடியும்." என்று வைதேகியைக் கண்டறியும் பொறுப்பை நேரடியாகப் பூவினாவிடம் கொடுத்தார் செல்வம்.
இவ்வாறு செய்தால், பூவினாவிற்கு 'தான் வைதேகி இல்லை! வைதேகியை ரகுநந்தனுடன் சேர்த்து வைக்கும் தோழி மட்டுமே!' என்று ஒவ்வொரு நிமிடமும் உணர்த்தும் என்று நம்பினார்.
அவர் மனம் புரிந்த ஜெயராம், பூவினாவிடம், "வினு! 'வேலுதான் ரகுநந்தனாக இருப்பானோ?'ன்னு உனக்குத் தோணுற மாதிரி, எங்களுக்கும், 'நீ வைதேகியா இருப்பாயோ?'ன்னு தோணுது... அதனால முதல்ல நீ உன்னை சோதிச்சுப் பார்... நீ வைதேகி இல்லைனா மட்டும் மஞ்சுவிடம், எந்த உண்மையும் சொல்லாமல் சோதிச்சு பார்த்திடு." என்றான்.
பூவினா மிகவும் தடுமாறவே, செல்வத்தின் முன்னிலையில் பூவினாவை சோதித்துப் பார்க்க விரும்பாத வேலு, "நீ இந்தத் தாயத்தையும் சிறிது திருநீறையும் எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ! அங்கே வைத்து வைதேகி, நீயா? இல்லை மஞ்சு வா என்று கண்டுபிடி" என்று கூறி, வேகமாகப் பூவினாவை அந்த இடத்திலிருந்து கிளப்பினான்.
பூவினாவும் கிரேசாவும், பூவினாவின் வீட்டிற்கு வந்ததும், பூவினா, மஞ்சுவிற்கு ஃபோன் செய்து வரச்சொன்னாள்.
"அவளை ஏன் இப்பவே வரச்சொன்ன? உன்னைச் சோதிச்சு பாரு..." என்று கிரேசா கூறியும், அசையாமல் அமர்ந்திருந்த பூவினாவிடம்,
"மஞ்சுவிடம் எப்படி பேசி சம்மதிக்க வைக்கப் போறோம்?" என்று பிரச்சனையில் தன்னையும் சேர்த்து சொன்னாள் கிரேசா.
'பூவினா எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை!' என்பதை உணர்ந்த கிரேசா,
'தோழிகள் இருவரையும் எப்படி வழிக்குக் கொண்டு வருவது?' என்று யோசித்தாள். ஒரு நல்ல ஐடியா தோன்ற,
"மஞ்சு வந்ததும், நமக்கு ஒரு மேஜிக்கல் தாயத்துக் கிடைச்சுச்சு. பாரேன் இதோட அதிசயத்தை!... இந்தத் தாயத்தைப் போட்டு, இந்தத் திருநீறை பூசினால் ஒருத்தர் நெற்றியில் திருநீராகவும், மற்றவருக்குக் குங்குமமாகவும் மாறும். அப்படி மாறிட்டா கடைசிவரை நம்ம ரெண்டு பேரும் தோழிகளாகவே இருப்போம்' னு சொல்லலாம். அவ ஒத்துக்குவா. சரியா? என்று தோழியிடம் கிரேசா கேட்க,
கண்கலங்கியபடி, "அவதான் வைதேகின்னு சொல்றேன்... நீ என்னடான்னா..." என்று விரக்தியாகக் கூறிய பூவினாவிடம்,
"சோதிச்சுப் பார்க்காம அப்படியொரு முடிவுக்கு வர வேண்டாம் வினு! ஒருவேளை அவளும் வைதேகி இல்லைனா?!!... வைதேகியைத் தேட வேண்டாமா?" என்று கிரேசா சொல்லும் போதே, அருகில் உள்ள கோவில் மணி ஒலிக்க,
"கேட்டியா? கோயில்ல மணி அடிக்குது. இருவரையும் சோதிக்கிறதுதான் நல்லது." என்று கிரேசா கூற, சரியென்று சம்மதித்தாள் பூவினா.
கோயில் மணி உணர்த்தியதென்ன? மஞ்சு, வைதேகி இல்லை என்றா?
அப்படியென்றால், வைதேகி யார்?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
💍💍💍💍💍💍
0 Comments