வருவான்-39
"ரகுநந்தனின் மறுபிறவி யார் என்பதை எவ்வாறு கண்டு பிடிக்கப்போகிறோம்?" என்று ஜெயராம் கேட்க,
"பழைய பாணி தான்... முருகன்ன்ற பெயரில் இந்த ஊர், மற்றும் சுற்றுவட்டாரத்தில் எத்தனை பேர், இருபத்தைந்து வயதில் இருக்காங்கன்னு விபரம் சேகரித்துக் கண்டு பிடிக்க வேண்டும்." என்றான் வேலு.
"முருகன்ன்ற பேர்ல இருப்பவன் எல்லோரும் ரகுநந்தன் ஆகிவிடுவார்களா? அவனுக்கு முற்பிறவி ஞாபகம் வேறு இருக்காதுன்னு பத்மா சொன்னாங்களே" என்று செந்தில் கேட்டார்.
"ஆனா பத்மாம்மா கண்டுபிடிப்பாங்க... அவங்களுக்குத்தான் அந்த முருகனின் பெற்றோரைத் தெரியுமே!!! பத்மா ம்மா ஜெயராம் வீட்லயே இருக்கட்டும். நமக்கு எந்த முருகன் மீதாவது, அவன்தான் ரகுநந்தனின் மறுபிறவின்னு தோணுச்சுனா, உறுதி செய்ய மட்டும் இவங்கள கூட்டிட்டுப் போகலாம் சரியா?" என்று வேலு கேட்டான். அனைவரும் சம்மதித்தனர்,
அதன்படியே முருகன் என்ற பெயர் கொண்ட இருபத்தைந்து வயது ஆண்பற்றிய விபரங்களைச் சேகரித்து, வைதேகியை தேடிய முறையில் தேடியும், ரகுநந்தனின் மறுபிறவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு சில முருகனின் பெற்றொர்களை பத்மாவிடம் அழைத்துச் சென்று காட்டியபொழுது, யாருடைய பெற்றோரும் ரகுநந்தனின் மறுபிறவியான 'முருகனுடைய தாய் தந்தை இல்லை.' என்று பத்மா கூறிவிட்டார்.
சிலர் சாயலில் முருகனின் பெற்றோர் போலிருந்ததாலும் இருபது வருடங்களுக்கு முன்பு அந்த முருகன் தொலைத்து போகவில்லை…
அப்படியே தொலைந்து போன முருகனும் கோயில் திருவிழாவில் அல்லது ஆறு, கடற்கரையில் காணாமல் போய்க் கிடைத்திருக்கின்றனர்.
பிறகு அடுத்தடுத்த ஊர்களில் முருகனை இவர்கள் தேடியும் கிடைக்கவில்லை…
'வேறு ஊருக்குப் போயிருக்கலாம்' என்று நினைத்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற இணைய தளங்களில் ஏதேதோ விதங்களில் ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் கொடுத்தும், முருகன் மட்டும் கிடைத்தபாடில்லை...
அனைவருக்குமே நம்பிக்கையற்று போன நிலையில், ஜெயராம் வீட்டில் வைத்துக் கலந்து பேசும்போதுதான் பத்மா கவனித்தார்.
'இவர்கள் முருகன் என்ற பெயரில் மட்டும் ஒருவனைத் தேடிகின்றனர்' என்று. அதைமற்றவர்களிடம் கேட்டு உறுதி செய்தவர்,
"முருகன் என்ற தெய்வத்தின் பெயர்களில் ஏதோ ஒரு பெயரில் அந்தப் பையன் இருப்பான்னு தானே சொன்னேன்? ஒரு அடையாளத்திற்காக முருகன்ன்னு வைத்துக்கொள்வோம் என்று தானே அந்தப் பெரியவர் சொன்னதாகச் சொன்னேன். நீங்க என்ன அந்தப் பெயரில் மட்டுமா தேடுறீங்க?" என்று பத்மா கேட்டதும்.
"போச்சு டா! இது வேறயா? கடவுள் முருகனுக்கு எத்தனை பெயரோ? அத்தனை பேரையும் தேடி கண்டு பிடிக்க முடியுமா? எங்க தெருவிலேயே பத்து பேருக்கு முருகன் பெயர் இருக்குமே!... இப்ப என்ன பண்ண போறோம் வேலு?" என்று கூறி சிரித்தான் ஜெயராம்.
வேலு மட்டுமல்ல அனைவருக்குமே 'என்ன செய்யப் போகிறோம்?' என்று மலைப்பாக இருந்தது... ஆனால் பூவினா மட்டும் யோசனையில் இருந்தாள்.
'இவ மண்டைக்குள்ள ஏதோ ஐடியா வண்டு குடையுது போலிருக்கே!' என்று நினைத்த வேலு,
"என்னம்மா?.... என்ன?... கண்டுபிடிச்சுட்டியா?" என்று கேட்டான்.
"அதெல்லாம் இல்லை! ஆனா சந்தேகம் இருக்கு." என்றாள் வேலுவை பார்த்தபடியே.
"நீ விஷயத்தைச் சொல்லு! முயற்சி செய்து பார்த்துடலாம்." என்றான் வேலு.
"அது... வந்து... எனக்கு ஒரு சந்தேகம்... உங்களுக்குக் கூடதான் முருகன் பெயர்... சரவணவேலு... நாம தேடுற நபர், நீங்களா இருக்க வாய்ப்பு நிறைய இருக்கே?" என்றவளைப் பார்த்த வேலு,
"இததான்! இவ்வளவு நேரமா யோசிக்கிறியா?" என்று கூறி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவன்,
"லூசாடி நீ!... என்னைக் கலட்டி விடுறதுல உனக்கு இவ்வளவு ஆசையா?" என்று மேலும் சிரித்தவனிடம்,
"அவ கேட்கிறதும் நியாயம்தானே வேலு?" என்று கிரேசாவும் கேட்க,
"ஏம்மா நீயுமா?!! இதை நான் யோசிச்சிருக்க மாட்டேனா? அன்னைக்கு, உன் தோழி பெரிய்ய்ய தியாகிமாதிரி பேசின போதே எனக்குச் சந்தேகம் வந்துச்சு... எங்கம்மா கிட்ட பக்குவமா விசாரிச்சேன்... ஆனா நான் தொலைஞ்சே போனதில்லையாம். ஏற்கனவே எங்க குடும்பத்துத் தலைப்பிள்ளை தொலைஞ்சு போயிட்டதால, என்னை ரொம்பக் கவனமா பார்த்துக்கிட்டதா எங்கம்மா சொன்னாங்க... அதுமட்டுமில்ல. ரகு இறந்து ஒரு வருஷம் கழிச்சுல்ல நான் பிறந்தேன்?" என்று கேட்டதும்.
"நீங்க முதல்ல சொன்னது வேணும்னா சரியா இருக்கலாம்... ஆனா இரண்டாவது சொன்னது யோசிக்க வேண்டிய விஷயம். ஏன்னா... ரகு இறந்த ஒரு வாரத்தில் சுதாவும் இறந்தாச்சு... ஆனா நான் மூனு வருஷம் கழிச்சுல்ல பிறந்தேன்.! அதனால உங்க ரெண்டாவது விஷயம் நடக்க வாய்ப்பு இருக்கு." என்று பூவினா கூறியதும்.
"உனக்கு இருபது வயது ஆகுதாம்மா? என்று பூவினாவிடம் கேட்டார் பத்மா.
பூவினா "ஆமாம்!" என்றதும்,
யோசனையுடன் பூவினாவை பார்த்தவர்,
"உன் தோழி மஞ்சுவிற்கு என்ன வயசு?" என்று கேட்டார்.
"நீங்க என்ன காரணத்துக்காகக் கேட்கிறீங்கன்னு புரியுதும்மா. ஒருவேளை நான் வைதேகியா இருப்பேன்னு தானே? ஆசையுள்ள நெஞ்சம், தன் வசதிப்படி யோசிக்கும் னு சொல்வாங்க. அப்படித் தான் நீங்க சொல்றது... மஞ்சு என் வகுப்புத் தோழி. அவளுக்கும் என் வயதுதானே இருக்கும்? அதோட, எங்க அப்பா வக்கில். உங்க வைதேகியின் அப்பா ஆடிட்டர்கிட்ட வேலை பார்க்கிறார்னு தானே அவங்க அம்மா சொன்னாங்க?"
என்று நீண்ட விளக்கம் அளித்தாள் பூவினா.
"சரி! நம்ம முருகன் விசயத்துக்கு வருவோமா? " என்று கேட்டாள் கிரேசா.
"அப்போ நீ முருகன் இல்லைன்னு நிச்சயமா தெரியுமா?" என்று செந்தில், வேலுவிடம் கேட்டார்.
"ம்ம் தெரியும்!" என்றதும்.
"போதும் இதுக்கு மேல யோசிச்சா என் மூளை வெளியே வந்துடும். நாம் நாளை பார்த்துக்கலாமே." என்று ஜெயராம் கூறியதும்,
அதுவே சரி என்று அனைவருக்கும் தோன்ற, அவரவர் வீட்டிற்க்குப் புறப்பட்டுச் சென்றனர்.
'இன்று அதிகக் கூட்டம்... காலையில் ஒன்பது மணியிலிருந்து காத்திருக்கேன்... இன்னும் நம்மை அழைக்கவில்லையே? எதற்காக என்னை நேரில் வரச்சொன்னார்?' என்று யோசித்தபடியே தன் பெயரைச் சொல்லி அழைக்கின்றனரா? கவனித்துக் கொண்டிருந்தார் செல்வம்...
நம்ம வைதேகியின் அப்பா தான்!
அவர், தாடி, மீசை காவி உடை என்று ஒரு சிவனடியார் போலக் காட்சி தந்தார்.
சிறிது நேரத்தில் செல்வம் அழைக்கப் படவே, எழுந்து சென்று, அந்தப் பெரியவர் முன் அமர்ந்தார்...
நீங்கள் நினைத்தாற் போல வைத்தீஸ்வரன் கோயில், நாடி ஜோதிட பெரியவரேதான்!
"ஐயா வரச் சொன்னதாக இங்கிருந்து ஃபோன் வந்தது... என்ன விஷயம்னு தெரிஞ்சுக்க வந்திருக்கேன்." என்று கூறினார் செல்வம்.
"உங்க சகோதரி எங்கே இருக்கிறாங்க?" என்று கேட்டார் பெரியவர்.
"எங்க வீட்ல இருக்காங்க. அவங்களையும் வரச்சொல்லவா?" என்று கேட்டார் செல்வம்.
"அவங்க உங்க வீட்ல இருக்கமாட்டாங்க... இடம் பெயர்ந்து ரகுநந்தனுக்கு நெருக்கமானவங்க கூட இருப்பாங்க…"
"ஐயா!"
"இத்தனை வருசம் நீங்க சிவனின் கோயிலுக்குச் சென்று வந்த பலனை, அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது... உங்க சகோதரி இருக்கும் இடத்துக்கே நீங்களும் செல்லுங்கள்."
"சரிங்க"
"அங்கே சில குழப்பங்கள் நிலவுகின்றன. ரகுநந்தன் யார்?... உங்க மகள் யார்?... மற்றும் இன்னொரு பெண், இவர்களில் யார்? யாரென்று தெரியாமல் தவிக்கின்றனர்…"
"ரகுவும், வைதேகியும் கிடைச்சுட்டாங்களா?"
"நான்தான் சொன்னேனே… யார் ரகுநந்தன், யார் வைதேகின்னு அங்கு இருக்கிறவங்களுக்குத் தெரியல."
"இப்ப என்ன பண்றது?"
"நான் இரண்டு தாயத்துகள் தருகிறேன். அதில் ஒரு தாயத்தில், உன் மகளோட உடையின் சிறு துண்டும், இரண்டாவது தாயத்தில், ரகுநந்தனோட உடையின் சிறு பகுதியையும் வைத்து, அதனுடன் இந்த மூலிகை வேரையும் சேர்த்து மூடிவிடுங்கள்" என்று தாயத்துகளையும் மூலிகை வேரையும் செல்வத்திடம் கொடுத்துவிட்டு,
"யாரை ரகுநந்தனின் மறுபிறவி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவன் கழுத்தில் ரகுநந்தனின் துணி வைத்த தாயத்தையும், வைதேகியின் மறுபிறவிப் பெண் என்று நினைக்கும் பெண்ணின் கழுத்தில், வைதேகியின் துணி வைத்து மூடிய தாயத்தையும் அணிந்து கொள்ளச் சொல்.
அவர்களின் உடல் வெப்பம், மூலிகைக்கு வர முப்பது நிமிடங்கள் ஆகும்.
முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, இந்தத் திருநீறை ரகுநந்தனோட அல்லது வைதேகியோட மறுபிறவி என்று நீ சந்தேகப்படும் நபரைப் பூசச்சோல்லு.
திருநீறு, நிறம்மாறாமல் வெள்ளையாக இருந்தால், அது நீ நினைத்த மனிதன்தான்... திருநீறு குங்கும நிறத்திற்கு மாறினால் அவர்கள் ரகுநந்தனோ அல்லது வைதேகியோ இல்லை... புரிகிறதா?" என்று கேட்டார் பெரியவர்.
பெரியவர் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த செல்வம், புரிகிறது ஐயா! ஆனால்! எத்தனை பேரிடம் சோதனை செய்வது? நடைமுறையில் ஒத்துவருமா?" என்று செல்வம் கவலையுடன் கேட்டார்.
"பெரும்பாலும் கண்டுபிடிச்சுடலாம்... ஏன்னா, ஏற்கனவே பல வேலைகளை ரகுநந்தன் பார்த்து முடித்து வைத்திருக்கிறான்... அவனுக்கு சிலர் உதவவும் செய்கிறார்கள்... நீ செய்ய வேண்டியது. ரகுநந்தனின் மறுபிறவியையும் உன் மகளின் மறுபிறவியையும் கண்டுபிடித்து, அவர்களைச் சேர்த்து வைப்பதுதான்."
"பத்மா அவர்களோடுதானே இருக்கிறாள்... அவளால் ரகுநந்தனையும், வைதேகியையும் கண்டுபிடிக்க முடியலைன்றபோது என்னால் மட்டும் எப்படி முடியும்?"
"உன்னுடன் இருக்கும் தெய்வசக்தி, உனக்கு வழிகாட்டும்... ஒருவேளை உனக்கு நம்பிக்கை குறையும் பட்சத்தில், வேறு வழி இல்லை எனும் நிலையில்... இறுதி கட்ட முயற்சியாக, ரகுநந்தனின் மறுபிறவிக்கோ அல்லது உன் மகளின் மறுபிறவிக்கோ நீ நம்பும் வேறொரு வரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்."
"புரியவில்லை ஐயா!"
"நீ அங்கு சென்றபிறகு வைதேகியின் மறுபிறவி யார்க்கிறது மட்டும்தான் உறுதியாகத் தெரிஞ்சிருக்குன்னு வச்சுக்குவோம். அந்த வைதேகியை, ரகுநந்தனா இருப்பாரோன்னு உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்குமோ, இல்லையோ... அந்தப் பையனுக்கே திருமணம் முடிக்க ஏற்பாடு செய்."
"கடவுளே! இத்தனை வருடம் நான் கோயிலுக்குச் சென்றதெல்லாம் வீணாகிவிடாதா ஐயா!"
"நிச்சயம் வீணாகாது. ஏன்னா ஆள் மாற்றித் திருமணம் செய்வதை ரகுநந்தன் ஆத்மா விரும்பாது... எப்படியும் உனக்கு வழிகாட்டும்... அங்கே ரகுநந்தனின் ரெத்த உறவில் ஒருவன் இருக்கிறான்... அவனை வைத்து நீ உன் காரியங்களில் வெற்றி பெற்று வா!" என்று கூறி அனுப்பி வைத்தார்.
வைத்தீஸ்வரன் கோயில் பஸ் நிறுத்தத்திலிருந்து, பத்மாவிற்கு ஃபோன் செய்து, ஜெயராமின் முகவரியை வாங்கிக் கொண்டு, செல்வம், பேருந்தில் ஏறினார்.
செல்வத்துடன் ஃபோன் பேசியதும், வேலுவிற்கு ஃபோன் செய்து வரச்சொன்னார் பத்மா.
வேலு, பூவினாவிற்குத் தகவல் சொல்லிவிட்டு, காவல்நிலையத்தில் வேலைசெய்யும் நேரம் முடிந்ததும், ஜெயராமுடன் கிளம்பிவந்துசேர்ந்தான். அவர்கள் இருவரிடமும் செல்வம் வந்து கொண்டிருக்கும் விஷயத்தை, பத்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே பூவினா, கிரேசா, செந்தில் மூவரும் வந்து சேர்ந்தனர். சிறிது நேரத்திலேயே செல்வமும் வந்து விட்டார்.
செல்வத்தை, சிவனடியார் கோலத்தில் எதிர்பார்க்காத அனைவரும் (பத்மா தவிர) ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றனர்.
'தன் மகளுக்காக நம்பிக்கையுடன் வாழ்திருக்கிறாரே மனிதர்!' என்று கண்சிமிட்டாமல் அவரையே பார்த்தனர்.
"என்ன பத்மா? பசங்க எல்லாம் தைரியசாலின்னு சொன்ன? என்னைப் பார்த்தே மிரண்டுட்டாங்களே!" என்று கூறி அவர் சிரிக்க,
வேலுவும் சிரித்தபடி, "என்னங்கம்மா ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டீங்க ளா?" என்று பத்மாவிடம் கேட்டான்.
"சுருக்கமாய்ச் சொல்லிருக்கேன் வேலு... என்னைவிட நீங்க எல்லாரும் சொன்னா தானே, சரியா இருக்கும்? நீங்களே சொல்லிடுங்க..." என்றார் பத்மா.
அனைவரும் நடந்ததை செல்வத்திடம் கூறிவிட்டு, முருகனை கண்டுபிடிக்கத்தான் முயற்சி செய்கிறோம்னு முடித்தார்கள்.
செல்வம் வைத்தீஸ்வரம் சென்று வந்ததைப் பற்றிக் கூற,
'நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ முயற்சி செய்து பார்த்துடலாம்' என்று முடிவுக்கு வந்தனர்.
அவர்களின் நம்பிக்கை பலித்ததா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
💍 💍 💍 💍 💍 💍 💍 💍 💍
0 Comments