வருவான் -38

 வருவான் -38


மனதில் வலி இருந்தாலும் வேலு சொன்ன விஷயங்கள் சரியெனத் தோன்ற பூவினா, அனைவருடன் ஹோட்டலுக்குச் சென்றாள்.


எல்லோருக்கும் காபி சொல்லிவிட்டு, பூவினாவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் வேலு.


பூவினா மனதிற்குள், ரகுநந்தனை நினைத்து, 'மஞ்சுதான் வைதேகியா? என்னால் வேலுவை விட்டு வாழ முடியாது... ஆனால் உங்களுக்கும் உதவாமல் இருக்க முடியாது... என்ன செய்யப் போறேன் நான்... எனக்கு வேலுவும் வேண்டும்... உங்கள் தோழமையும் வேண்டும்... ஏதாவது வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்!' என்று கூறியபடி சுற்றிலும் தேட, ரகுநந்தனைக் காணவில்லை.


"யாரத் தேடுற? ரகுவையா?" என்று கேட்டான் வேலு. 


பூவினா எதுவும் சொல்லாமல் வேலுவைப் பார்க்க.


"அவனைத்தான் காணோமே! இனி என்ன செய்றதுன்னு பார்ப்போமா? முதல்ல நீங்க எல்லாரும் என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க." என்று அனைவரையும் பார்த்துக் கூறினான் வேலு.


கிரேசா, ஜெயராம், செந்தில், பத்மா நால்வரும் பூவினாவைப் பார்க்க,


"சரி! நீயே ஆரம்பி..." என்று பூவினாவிடம் வேலு கேட்டான். 


நால்வரும் தன்னைப் பார்ப்பதன் அர்த்தம் புரிந்த பூவினா. சிறிது நேரம் அமைதியாக, தன்னைத்தானே தயார் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள். 


"எனக்கென்னவோ மஞ்சுதான் வைதேகின்னு தோணுது. நீங்க எல்லாரும் என்ன நினைக்கிறீங்க?" ஐவரையும் கேட்டாள்.


"எனக்கும் அப்படிதான் தோணுது ஆனா... அது நிஜமா இருக்கக்கூடாதுனு என் மனசு அடிச்சுக்குது." என்றாள் கிரேசா.


"தயவுசெஞ்சு என்னை மனதில் வச்சு யோசிக்காத. நமக்கு உண்மைதான வேணும்?" என்று பூவினா கேட்டதும்,


"எனக்கு ஒன்னு தோணுது. நாம ரகுவிடமே வைதேகி யார்னு கேட்டுடுவோம்." என்று கூறினார் செந்தில். 


"மஞ்சுதான் வைதேகின்னு நமக்கேத் தெரியுது. அதை ஏன் அவர்ட்ட கேட்கனும்?" என்று பூவினா கேட்டதும்.


"அப்போ... மஞ்சுதான் வைதேகினு நீ உறுதியா சொல்றியா?" என்று வேலு பூவினாவின் கண்களைப் பார்த்துக் கேட்டான்.


"ஆமா! அப்படி இல்லைனா ரகுநந்தன், மஞ்சுவை நாம் பார்ப்பதை தடுத்திருக்க மாட்டாரா?" என்று பூவினா கேட்க, 


மற்ற நால்வரையும் வேலு பார்த்தான். அவர்களும் "ஆமா" என்று தலையசைத்தனர். 


"அவ்வளவுதான்.... விஷயம் முடிஞ்சது. வைதேகிக்குரிய மோதிரத்தை மஞ்சுவிடம் கொடுத்து விடலாம். மஞ்சுவிற்கு ஃபோன் பண்ணி பக்கத்துல இருக்கும் கோயிலுக்கு வரச் சொல்லு." என்றான் பூவினாவிடம்.


"இவ்வளவு அவசரம் வேணாம் வேலு. இன்னும் யோசித்து முடிவெடுப்போம்." என்றான் சற்றே குழம்பிய மனநிலையில் ஜெயராம்.


"இதுல யோசிக்க என்ன இருக்கு?" என்று வேலு கேட்டதும்,


"நிறைய இருக்கு... ரகுநந்தனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகவே தற்கொலை செஞ்சுகிட்ட, வைதேகியின் காதலை, ஒரு மோதிரம் கொடுத்து முடிச்சுடக் கூடாது. வைதேகியின் கல்யாணத்துக்கு நான் மறுபடியும் தடையா இருக்க விரும்பல." என்று பூவினா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 




"இதுக்கு என்ன அர்த்தம்?" என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான் வேலு.


வேலுவின் கோபம் பூவினாவிற்கு இதமாக இருந்தது. அவனுடைய கோபம், தன் மீதுள்ள காதல் என்பதை அறிந்தும், அவன் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பது தெரிந்தும், வேலுவை விட்டுக்கொடுக்க நினைக்கும் காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள் பூவினா.


"ஆரம்பத்துலயே 'நான் வைதேகி இல்லை!' என்று தெரிந்துதான் ரகுநந்தனுக்கு உதவ நினைத்தேன். ஆனால்..." என்று நிறுத்தியவள், 


மற்றவர்களைப் பார்த்து, "உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்... நான்தான் அந்த சுதாஎஒஈஈன்னு...."


"அதெப்படி முடிவுக்கு வந்த? உனக்குத்தான் எந்தப் பூர்வஜென்ம ஞாபகங்களும் இல்லையே?" என்று, 'பூவினா என்ன சொல்வாள்' என்று தெரிந்தும் கேட்டான் வேலு. 


"பழைய ஞாபகங்கள் வரும் அளவுக்கு சுதா மனசால பாதிக்கப்படல... அதாவது மனசு பாதிக்கும் அளவுக்கு சுதா, ரகுநந்தனை விரும்பல... தினமும் கண்ணில் படும் திறமையான ஆணின்மேல் ஏற்பட்ட பிடிப்பு தான் அது. அதை அவள் புரிஞ்சுகாகாம காதல்னு தப்பா நெனச்சுட்டா... அதனால்தான், தன் காதலை ஏத்துக்காம, வேறு பெண்ணை ரகுநந்தன் விரும்பியது, சுதாவிற்கு அவளுடைய அழகு, திறமை இரண்டையும் ரகுநந்தன் உதாசினப் படுத்தியதாகத்தான் தோனுச்சே தவிர, 'தன் காதலன், வேறொரு பெண்ணை விரும்புகிறானே!' என்று தவிக்கவில்லை... வீம்பு வேறு, காதல் வலி வேறு. உண்மையான காதல் இருக்கும் மனசு, கடைசிவரைத் தன்னால் காதலிக்கப்படுபவரோட சந்தோஷத்தையே விரும்பும். ஆனால் சுதா?... அதுமட்டுமில்லாம அவளுக்கு இருந்த கோபத்தையும், ரகுநந்தனைக் கொன்று, தீர்த்துக்கிட்டா... அதனால, ரகுநந்தனும், வைதேகியும் நிரந்தரமாப் பிரிஞ்சுட்டாங்க.... சுதா விரும்பினது நடந்துருச்சு. அவள் மனசு, உயிரோட

இருக்கும்போதே சாந்தியடைஞ்சிருச்சு.... அதனாலதான் எனக்கு எந்த ஞாபகங்களும் இல்லை.... அதுமட்டுமில்ல, இப்ப எனக்கு ரகுநந்தனைப் பார்க்கும்போது காதல் வரல... அதேபொல அப்போ, சுதா வைதேகியின் தோழி! இப்போ நான் மஞ்சுவின் தோழி!" 


"ஆனா நீ ரொம்ப நல்லவ பூவினா! சுதாவின் குணத்திற்கும், உன் குணத்திற்கும் எத்தனை வித்தியாசம்? அன்னைக்கு அவ நிலையில் நீ இருந்திருந்தா ரகுவ விட்டு விலகிப் போயிருப்ப... உன் மனசுல வன்மம் வந்திருக்காது." என்று வாதாடினான் வேலு.


"மஞ்சு என்னைவிட நல்லவ வேலு. நான் கொஞ்சம் அடாவடி... மஞ்சு அமைதியானவ... உங்களுக்கே நல்லாத் தெரியும் வேலு. நான்தான் சுதான்னு... என்மேல் உள்ள பிரியத்தில் பேசுறீங்க... நீங்க சொன்ன மாதிரி, இப்ப நான் நல்லவிதமாக இருக்கிறதால தான் ரகுநந்தன் என்னை எதுவும் செய்யல... ஆனால் என்கிட்டயிருந்து மோதிரத்தை வாங்கிட்டாரே?... போதும் வேலு... உண்மையை அப்படியே ஏத்துக்கிறதுதான் எப்பவுமே நல்லது. பத்மா ம்மா கூட என்னை எங்கேயோ பார்த்த ஞாபகம்னுதான் சொல்றாங்களே தவிர, அவங்க வைதேகினு சொல்லலையே?" என்று கூறி அதற்கு மேல் தாங்கமாட்டாமல் வெடித்து அழுதுவிட்டாள் பூவினா.


உடனே அவள் அருகில் வந்த பத்மா,

"மஞ்சுவிடமும் எனக்குப் பாசம் வரலையே பூவினா!!!! நீ அழாதம்மா... உன் வேதனை எனக்குப் புரியுது... கொஞ்சம் சமாதானமாகு... அப்பத்தான் சரியான முடிவெடுக்க முடியும்..." என்று ஆறுதல் செய்ய. கிரேசா, பூவினாவை அணைத்துக் கொண்டாள். 


"போதும் வினு! போதும்... என்னால் தாங்க முடியல..." என்று கூறியபடி பூவினாவின் முதுகைத் தடவிக் கொடுக்க, சட்டென்று கிரேசாவின் பிடியிலிருந்து பூவினாவை விலக்கி, பூவினாவின் தோள்களைப் பற்றி, அவளுடைய கண்களை நேராகப் பார்த்து,


"இருக்கட்டும்... நீ சொல்ற மாதிரியே நீ சுதாவாவே இருக்கட்டும்... அதற்காக? என்னை ஏன் பிரிய நினைக்கிற? நான் இந்தப் பூவினாவைத்தானே உயிருக்கும் மேலா விரும்புறேன். உன் பாஷையில் சொல்லனும்னா, நான் இந்த சுதாவைத்தானே விரும்புறேன்... அது ஏன் உன் மரமண்டையில் ஏறமாட்டேங்குது... உனக்கு, ரகுமேல் இருக்குற பிரியம் என்மேல் இல்லையா? என் காதலை விட, அவன் காதல் பெரிசா இருந்துட்டுப் போகட்டும்... அதுக்காக? என்னை உயிரோடு வதைப்பாயா? நான் என்னடி பண்ணேன் உனக்கு? தேம்பித் தேம்பி அழுதுகிட்டு, விட்டுக் கொடுக்கிறேன்னு சொல்ற? விட்டுக்கொடுக்க நான் என்ன...? என்று கோபமாகப் பேசிக்கொண்டிருந்தவன் தோளில், ஜெயராம் கையை வைத்து அழுத்த, கோபத்தை அடக்கிவிட்டு, பூவினாவின் முகத்தைப் பார்த்தான்…


 அவள் மனம் படும் வேதனையில் முகமெல்லாம் ரெத்தமெனச் சிவந்திருக்க, கண்களில் உயிரின் உச்ச வலி தெரிந்தது... 


'இவள்! என்னைய விட்டுக் கொடுக்கிறாளாம்! மூஞ்சிய பாரு!' என்று நினைத்தவன், அருகில் இருந்த தண்ணீரைக் குடித்து விட்டு, பூவினாவையும் குடிக்கவிட்டு, அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலானான். 


திடீரென்று கண்களில் வெளிச்சம் பாய, "ரகு, என்னிடம் மோதிரத்தை கொடுத்துட்டு, அதை வைதேகியிடம் சேர்த்துவிடு... அவளை வாழவை ன்னு தானே சொன்னார்?!! இதற்கு என்னை ஏன் நீ பிரியனும்? நானா ரகுநந்தன்?!!! அவரோட ரெத்த பந்தம் அவ்வளவுதான்... ரகுநந்தனின் மறுபிறவியைத் தேடுவோம்... அவரோட மஞ்சுவை சேர்த்து வைப்போம்..." என்ற வேலுவை அனைவரும் ஆர்வமாகப் பார்க்க, 


செந்தில், "என்னப்பா சொல்ற?" என்று கேட்டார்.


"என்ன டாக்டர் நீங்களும்... ஒருவேளை போன ஜென்மத்தில் ரகுவின் காதலைப் பிரிச்ச பாவத்துக்கு, இந்த ஜென்மத்துல், அவங்களைச் சேர்த்துவைத்து, பரிகாரம் செய்யத்தான் சுதா, பூவினாவாகப் பிறந்திருக்கலாமே?!!!" என்று வேலு சொல்லும்போதே,


"அதைத்தானே நானும் சொல்றேன்..." என்று பூவினா கேட்டதும்,


"கிழிச்ச... அதுக்கு ரகுநந்தனைத் தேடியிருக்கனும். அதை விட்டுட்டு அவரோட தம்பி மகனா பிறந்த ஒரே பாவத்துக்கு, என்னைப் பலி கொடுக்கத் கூடாது.... " என்றவன்,


 பூவினாவிடம் இன்னும் புரியலைல? என்று கேட்டதும், பூவினா, "ஆமாம்" என்றும் "இல்லை" என்றும் தலையாட்ட,


"சுத்தம்... உனக்குப் புரியற மாதிரியே கேட்கிறேன். ரகு இறந்தபோது, என் தாத்தா உயிரோட இருந்தார்தானே?" என்று கேட்டான்.


"ஆமாம்"


"அதனால, அப்ப உயிரோட இருந்த வைதேகியை என் தாத்தாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பியா? அப்ப நான் மட்டும் ஏன்?" என்று கேட்டதும், 


பூவினாவிற்கு மட்டுமல்ல அனைவருக்குமே நிம்மதி பெருமூச்சு வந்தது... அனைவர் முகத்திலும் சந்தோஷம் நிரம்பி வடிய,

சட்டென்று எழுந்த பூவினா, வேலுவின் முன் மண்டியிட்டபடி, நாற்காலியில் அமர்ந்திருந்த வேலுவை இறுக்கி கட்டிக்கொண்டாள். அந்த உணவகமே அவர்களை வேடிக்கை பார்க்க,


"அடிப்பாவி! எல்லோரும் பார்க்கிறாங்க... உனக்கு இந்த மாதிரி இடத்துல வச்சுதான் என்மேல காதல் பொங்கும். நல்லா வாய்ச்சாய் எனக்குன்னு..." என்றபடி பூவினாவை மென்மையாக விலக்க, அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை... அவளை அசைக்கவே முடியவில்லை...


"என் செல்லம்ல... நான் ஒரு போலீஸ் அதிகாரி... எவனாவது மொபைல் ஃபோன்ல வீடியோ எடுத்து, நெட் ல விட்டுடப்போறான்... 


'பொது இடத்தில் போலீஸ் ஆபிசரின் கிளுகிளுப்புன்னு." என்று வேலு கூறியதும், அவனை விட்டுத் தள்ளி அமர்ந்தவள், கண்களில் கண்ணீர் வடிய சிரித்துக் கொண்டிருந்தாள்...


'அப்பாடா! சமாதானமாயிட்டா!' என்று பூவினாவையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த வேலுவிடம்,


"இப்ப என்ன பண்ணலாம் வேலு? ரகுநந்தனின் மறுபிறவியை எப்படிக் கண்டுபிடிக்கிறது? கொஞ்ச நாளாவே ரகுவையும் காணோமே?" என்று ஜெயராம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, 


அவன் பின்னால் அமர்ந்திருந்த ரகு திரும்பி ஜெயராமைப் பார்த்தான்.... அவன்தான் பூவினா நினைத்தால் வந்துவிடுவானே!




இது தெரியாமல்,


பூவினாவின் செயல்களைப் பார்த்த பத்மா, "இவள் சுதாவாகவே இருந்தாலும், இவள் விரும்பும் வேலுவுக்கே திருமணம் செய்துவிட வேண்டும்.' என்ற எண்ணினார்... 


'மீண்டும் மஞ்சுவைத் தனியாக சந்தித்து, பூவினாவின் காதலை எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்...' என்று முடிவுக்கு வந்தார்.


ரகுநந்தனின் மறுபிறவி எங்கே?


பூவினாவின் காதலை மஞ்சுவிடம் சொல்வது சரியா?


மீண்டும் வைதேகி தன் காதலைத் தியாகம் செய்யத்தான் வேண்டுமா?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...


💍💍💍💍💍💍💍💍💍






Post a Comment

0 Comments