வருவான்-37
"யம்மா! யார் நீ? உனக்கு என்னாச்சு?" என்று தானும் ஒரு டாக்டர் என்பதை மறந்து, 'யாரேனும் உதவிக்கு வருகிறார்களா?' என்று பார்த்தார் செந்தில்.
அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து,
"என்னாச்சு சார்?... அடிபட்டமாதிரி தெரியலயே?.... தெரிஞ்சவங்க மாதிரி பேசிக்கிட்டிருந்தீங்களே?".... என்று பலரும் பல கேள்விகளுடன் வந்து, சோடாவை உடைத்து, அந்தப் பெண்ணின் முகத்தில் அடிப்பதுபோலத் தெளித்து, அந்தப் பெண்ணைக் குடிக்கவும் செய்து, மயக்கத்தைத் தெளிவித்துவிட்டு, அவரவர் வேலையே பார்க்கச் சென்றனர்.
எழுந்து அமர்ந்த அந்தப் பெண், மீண்டும், செந்திலை ஆராய்ச்சிப் பார்வை பார்த்து,
"என்ன டாக்டர் இப்படி ஆயிட்டீங்க? அடையாளம் கண்டு பிடிக்க முடியலையே?" என்று கேட்டாள்.
"நீ யாரும்மா? என்னை எப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்டார்.
"நீங்க, ரகுநந்தன், ஜெய்சஞ்சீவ் மூணு பேரும் நண்பர்கள்தானே?" என்று அவள் கேட்டதும்,
'இது யாரு, புதுப் பூகம்பம்? இந்தப் பெண்ணை எங்குமே பார்த்த மாதிரி தெரியலையே?' என்று யோசித்தவாறே,
"ஆமா நாங்க நண்பர்கள்தான். எங்களை உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டார் செந்தில்.
"என் பேரு மஞ்சு! எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா டாக்டர்? நான் ரகுநந்தனைப் பார்க்கனும்." என்றாள் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய,
'அடடா! ரகுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, தேடி வர்ற பெண்கள்ல ஒருத்தியா இந்தப் பொண்ணு?' என்று நினைத்தவர்
"ரகுநந்தனை உனக்கு எப்படித் தெரியும்? " என்று கேட்டார்.
"சொன்னா சிரிக்கக் கூடாது. நான் ரகுநந்தனை என் கனவில்தான் பார்த்தேன். ஆனால் அது 'கனவுபோலத் தெரியவில்லை...' என்று தோன்றியதால் ரகுநந்தனையோ, இல்ல... அவர் சம்மந்தப்பட்ட யாரையாவது பார்த்து விட மாட்டேனா?' என்று தினமும் தேடுகிறேன். கடவுள் புண்ணியத்துல, இன்னைக்குத் தான் உங்களைப் பார்க்கிறேன். என்னை ரகுநந்தனிடம் கூட்டிட்டு போகமுடியுமா?" என்று கெஞ்சுதலாகக் கேட்டாள்.
'என்ன சொல்லுது இந்தப் பொண்ணு? கனவுல ரகுவா?' என்று அதிர்ச்சியான செந்தில்,
"ரகுநந்தனை நீ எதுக்குப் பார்க்கனுங்கிற?" என்று இன்னும் குழப்பம் விலகாமலே கேட்டார்.
"நான் ரகுநந்தனை விரும்புகிறேன்." என்று மஞ்சு சொன்னது தான் தாமதம், சட்டென்று நாலடி தள்ளி நின்றவர், தன் மொபைலில் வேலுவை அழைத்தார்.
"வேலு! கொஞ்சம் எல்லோரும் நான் இருக்கும் இடத்துக்கு வாங்க!" என்று செந்தில், தான் நிற்கும் இடத்தைப் பற்றிய விபரங்கள் கூறி,
"ஒரு பொண்ணு, ஏதேதோ சொல்றாப்பா. நம்ம ரகுவை தெரியும்ங்கறா. சீக்கிரம்..." என்று செந்தில் கூறி முடிக்கும் முன் ஃபோன் கட் ஆனது.
பத்தே நிமிடத்தில் வேலுவின் கார் செந்தில் இருந்த இடத்துக்கு வந்தது. அனைவரும் இறங்கி, செந்திலை நோக்கி வந்து,
"யார் டாக்டர் அந்தப் பொண்ணு?" என்று கேட்டனர்.
அப்பொழுதுதான் செந்திலின் அருகில் நின்ற மஞ்சுவைப் பார்த்த பூவினா,
"ஹே! மஞ்சு! எப்படி இருக்கே?" என்று சந்தோஷமாகக் கேட்டதும், கிரேசாவும் வந்து குசலம் விசாரித்தாள்.
மூவரும் தோழிகள் என்பதைப் புரிந்து கொண்ட செந்தில், பூவினாவிடம்,
"பூவினா உனக்கு இந்தப் பொண்ண தெரியுமா? இந்தப் பொண்ணுதான் ரகுவைப் பற்றி எங்கிட்ட கேட்கிறாம்மா." என்றதும்,
அனைவருமே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் மஞ்சு, பூவினா மற்றும் செந்திலைப் பார்த்தனர். செந்தில் கூறுவதைக் கேட்ட பூவினா, மஞ்சுவைப் பார்த்து,
"மஞ்சு! உனக்கு ரகுநந்தனைத் தெரியுமா? எப்படி?" என்று கேட்க,
"நீ கல்லூரிக்கு வந்ததும் உன்னிடம் நிறைய சொல்லனும்னு காத்திருந்தேன் வினு. ஆனா நீங்க ரெண்டு பேருமே வரல… நாம இன்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்குப் போனோமே அன்னைலருந்து எனக்கு இரண்டு மாசமா ஒரே மாதிரியான கனவு வருது வினு, அந்தக் கனவில்தான் நான் ரகுநந்தன், செந்தில், ஜெய்சஞ்சீவ் எல்லோரையும் பார்த்தேன். அதில்..." தன் கனவுகளைக் கூற ஆரம்பித்தாள்.
கனவில் வந்த விஷயங்களைக் கூறும்போது, நிஜமாக நடந்த விஷயத்தைப் பற்றிச் சொல்வதுபோலவே மஞ்சுவின் முகமும், உணர்வுகளும் அந்தக் கனவு நடந்த இடங்களில் அவளும் இருந்திருப்பது போலவே இருந்தது. கனவு மொத்தத்தையும் சொல்லி முடித்தவள்,
"எனக்கு அந்த ரகுவை ரொம்பப் பிடிச்சிருக்கு வினு. கனவு போலவே இல்லை. அன்றிலிருந்து நான் ரகுவைத் தேடுறேன்... இன்னைக்குத்தான் டாக்டர் செந்திலைப் பார்த்தேன்... எனக்கு ரகுவைப் பார்க்கனும் வினு.
அந்தப் பாவி சுதா, அவர்கிட்ட ஏதோ ஒரு ஊசியைக் கொடுத்துப் போடச் சொன்னா வினு... அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல... டாக்டர் செந்தில்கிட்ட கேட்டா, நீங்கள் வந்தபிறகு பேசலாங்கிறார். என் வீட்டில் கூட யாரிடமும் சொல்லல... உனக்கு ரகுவைத் தெரியுமா வினு? தயவுசெஞ்சு என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போ!" என்று மஞ்சு சொல்லி முடிக்கும் முன்,
அவளின் துடிப்பு, அவள் ரகுநந்தனை எந்த அளவு விரும்புகிறாள் என்பதைத் தெளிவாக்க,
மஞ்சுவின் கைகளைப் பிடித்திருந்த பூவினாவிற்கு வியர்க்க ஆரம்பித்தது. மஞ்சு திரும்பத் திரும்பக் கேட்டும், பூவினா பதில் சொல்லாமல் திக்பிரமை பிடித்தார்போல மஞ்சுவையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மஞ்சு மற்றும் பூவினா அருகில் வந்த வேலு, மஞ்சுவிடம், "உன் பேர் என்னம்மா?" என்று கேட்டான்.
"மஞ்சு"
"மஞ்சு வா? இந்தப் பெயரில் அம்மன் பெயர் இருக்கா என்ன?" என்று மற்றவர்களைப் பார்த்து, வேலு கேட்டான். ஆனால் பதில் மஞ்சுவிடமிருந்து வந்தது.
"என் பெயரே அம்மன் பெயர்தான். எங்க இஷ்ட தெய்வம் மஞ்சமாரியம்மன். அவங்க பெயரில் முன் பாதியைத்தான் எனக்கு வச்சதா எங்கம்மா சொல்வாங்க." என்று மஞ்சு கூறியதும், வேலு, பத்மாவை பார்த்தான்.
பத்மாவோ, மஞ்சுவையே வைத்தகண் வாங்காமல் பார்த்தார். மற்ற அனைவரும் அதிர்ச்சியில் நிற்க,
வேலுவே மீண்டும் மஞ்சுவிடம்,
"உனக்கு வந்தது கனவுதானே? கனவில் வரும் நபரை யாராவது விரும்புவாங்களா?" என்று எதார்த்தமாகக் கேட்பது போல் கேட்டான்.
"அது கனவு போலவே இல்லை. ஏற்கெனவே என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நினைத்துப் பார்ப்பதைப் போலிருந்தது. நம்புங்கள்..." என்று மஞ்சு சொல்லியபோது அவள் முகத்தில் தெரிந்த தேஜஸ்!
எல்லோருக்குமே, 'மஞ்சு ஒருவேளை வைதேகியாக இருப்பாளோ?' என்ற ஐயத்தை உருவாக்கியது.
மேலும் தெளிவுபெற விரும்பிய வேலு,
"கனவில் வந்த வைதேகியும், ரகுநந்தனை விரும்புவதாகச் சொன்னாயே?" என்று மஞ்சுவின் முகத்தில் வரும் மாற்றத்தைக் கவனித்தபடி கேட்டான்.
"நீங்க வைதேகியைப் பார்த்திருக்கீங்களா? ஆனா அவ உணர்வுகளை நான் என் உணர்வுகளால் அறிகிறேன். அப்புறம்... ரகு என்னைத்தானே விரும்புகிறார்?" என்று கேட்டாள் மஞ்சு.
"நான் வைதேகியுடன் பழகியிருக்கேன்... ரகு உன்னை விரும்பினதா எப்ப சொன்னார்?" என்ற ஜெயராமை அப்பொழுதுதான் கவனித்த மஞ்சு,
"ஜெய்! நீங்களா? என்னை நன்றாகப் பாருங்கள் "நான் யார்?' என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. நான் உங்களை அடையாளம் கண்டு, உங்கள் பெயரைக்கூட சரியாகச் சொல்லும்போது, உங்களுக்கும் என்னைத் தெரியத்தானே செய்யும்? சொல்லுங்க! என்னை ரகுநந்தன் விரும்பவில்லையா? !" என்று
'ரகுநந்தன் தன்னை விரும்புகிறான்.' என்ற ஒற்றை வார்த்தைக்காகத் தவிப்புடன் கேட்டாள் மஞ்சு.
மஞ்சுவின் பதட்டத்தைப் பார்த்த அனைவருக்கும் அவள்மீது இரக்கம் ஏற்பட்டது... ஆனாலும் 'இவள்தான் வைதேகியா' என்பதை அறிந்து கொள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
"நீ வைதேகியை கனவில் பார்த்தேன் என்கிறாய். வைதேகி உன் சாயலிலா இருக்காங்க? நான், செந்தில்லாம் அதே சாயலில் தானே இருக்கிறோம்? " என்று ஜெயராம் சொன்னதும் புருவ சுளிப்புடன், செந்திலைப் பார்த்தவள், மீண்டும் ஜெயராமை பார்த்தாள். சிறிது நேர யோசனைக்குப் பிறகு,
"என்னை ரகுவிடம் கூட்டிச் செல்லுங்கள் ஜெய்! அவர் சொல்லட்டும், அவர் என்னை விரும்புகிறாரா? இல்லையா? னு." என்று சற்றுக் கலங்கிய குரலில் கூறிய மஞ்சுவிடம்,
"ரகு உங்களை விரும்புறார்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"
என்று வேலு கேட்டதும்,
"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க... ரகு, வைதேகியிடம் பேசும் ஒவ்வொரு வார்தையையும் என்னிடம் பேசுவதுபோலத்தான் உணர்ந்தேன்." என்று மஞ்சு கூறியபோது அவள் பொய் சொல்லவில்லை என்று, போலீஸாக வேலு, ஜெயராமுக்கும். டாக்டராக செந்திலுக்கும், நெருங்கிய தோழியாக பூவினா, கிரேசாவிற்கும். ஒரு பெண்ணாக பத்மாவிற்கும் நன்கு விளங்கியது.
யாராலும் எதுவும் பேச முடியவில்லை.
மஞ்சு பேசிய அனைத்தையும் கேட்ட பூவினாவிற்கு மஞ்சு தான் வைதேகி என்று நன்றாகவே புரிய, வேலுவின் அருகிலிருந்து, வேலுவைப் பார்த்தவாறே பின்பக்கமாக நடந்து விலகிச் செல்ல,
அதை உணர்ந்த வேலு, பூவினாவின் கையை இறுக்கப் பற்றினான். அவள் தன்னைவிட்டு நகராமல் பிடித்துக் கொண்டு, மஞ்சுவிடம்,
"ரகுநந்தனைச் சந்திக்கும்போது அவரிடம் கேட்டுட்டு, உங்களை அழைத்துச் செல்கிறேன். சரியா?" என்று கேட்டான்.
உடனே சந்தோஷத்தில் குதித்த மஞ்சு, "ரொம்ப நன்றி! இந்த உதவியை என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்." என்று கூறி,
தன் பேக்கிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துத் தன்னுடைய முகவரி, மொபைல் நம்பரை எழுதி, வேலுவிடம் கொடுத்து,
"என் வீடு, பூவினாவிற்கும், கிரேசாவிற்கும் நல்லாத் தெரியும். இருந்தாலும் உங்கட்டயும் இருக்கட்டும்." என்றும் கூறிவிட்டு, பூவினா, கிரேசாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.
மிகப்பெரிய புயல் அடித்து ஓய்ந்த அமைதி அந்த இடத்தில் நிலவியது. 'இந்தப் பெண்தான் வைதேகியா? அப்போ பூவினா?' என்று அனைவருமே பூவினாவின் மனநிலை பற்றிய கவலையில் அமைதியாக நிற்க. பூவினா யார் முகத்தையும் பார்க்காமல்,
"எனக்கு நேரமாச்சு நான் வீட்டுக்குப் போறேன்." என்று கூறி திரும்ப,
அப்பொழுதும் அவள் கையை வேலு பிடித்திருப்பதை உணர்ந்து, அவன் கைகளைப் பார்த்தவளின் கண்கள் ஈரமாக, சட்டென்று இமைகள் கொட்டி கண்ணீர் வெளிவராமல் தடுத்தபடி, தன் கையை வேலுவிடமிருந்து உருவியவாறு,
"என்னை விட்டுடுங்க." என்றாள் இரட்டை அர்த்தத்தில்.
அவள் என்ன நினைத்து இவ்வாறு சொல்கிறாள் என்று அனைவருக்குமே புரிந்தது,
ஆனால் வேலுவிற்குக் கோபமே வந்தது. இருப்பினும் கோபத்தை அடக்கியவானாக,
"எனக்கும் தலை வலிக்கிற மாதிரி தான் இருக்கு. வாங்க எல்லோரும் பக்கத்துல இருக்குற ஹோட்டலுக்குப் போவோம்." என்று வேலு அழைக்கவும்,
அனைவரும் அவனுடன் கிளம்ப, பூவினா மட்டும் நகராமல் அப்படியே நின்றாள்.
அவள் எந்த அளவிற்கு வேதனை படுகிறாள் என்பதை அவளுடைய அலைபாயும் கண்களும், கை விரல்களை இறுக்கிமூடியிருக்கும் விதமும், வெளிறிய முகமும் நன்றாகக் காட்டிக் கொடுத்தது.
பூவினாவின் தவிப்பைப் பார்த்த வேலுவிற்கு, இதுவரை அவன் மனதிலிருந்த சின்ன வலி மாயமானது.
'ரகுநந்தனுக்காக என்மேல் உள்ள காதலை, பூவினா விட்டுக்கொடுக்கிறாள் என்றால்! பூவினா மனதில், நான் அவள்மேல் வைத்திருக்கும் அளவு, காதல் அவளுக்கு என்மேல் இல்லையா?' என்று ஒவ்வொரு நிமிடமும் துடித்தவனுக்கு,
இன்றைய பூவினாவின் கலக்கம் பெரும் ஆறுதலாக இருந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல நினைத்தாலும், நடு ரோட்டில் நிற்பதால் அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டு, பூவினாவின் அருகில் சென்றவன்,
"ரகுநந்தனுக்காக ஓட ஆரம்பித்தவள் நீதான். உனக்காகத்தான் நானும், கிரேசாவும் உன்கூட ஓடினோம். எனக்காக ஜெயராம்... அப்படி, இப்படின்னு நாங்க எல்லாரும் உன் பின்னாடி நிற்க!... இப்பொழுது நீ செய்றது என்ன?!!... இதெல்லாம் எதிர்பார்த்துதானே நீ ஆரம்பிச்ச??... இப்ப நீ கவனம் சிதறினால் என்ன அர்த்தம்?... ரகுநந்தனுக்கு உதவ மனசில்லையா?... இப்ப இப்படி நீ பண்றது, அரைக் கிணத்தைத் தாண்டியது போலத்தான். எல்லாரும் கீழே விழனுமா?... எதுவா இருந்தாலும் கடைசிவரை பார்த்துடலாம்னு சொன்ன பூவினாவா இது? என்னாச்சு என் வீரமங்கைக்கு?" என்று சிரித்தான்.
தான் இவ்வளவு வருத்தத்தில் இருக்கும்பொழுது, வேலுவின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் சற்றே குழப்பினாலும், வேலுவுடன் நடந்தாள் பூவினா.
இனி பூவினா என்ன செய்யப் போகிறாள்?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments