வருவான்-36
பத்மாவின் கண்கள் இலக்கு இல்லாமல் எங்கோ வெறித்து இருந்தது.
வேலு, பூவினா, கிரேசா, ஜெயராம், செந்தில் அனைவரும் கண்களிலிருந்து வரும் கண்ணீரை துடைக்க மறந்து அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, பத்மா சுய உணர்வு வந்து, மற்றவர்களைப் பார்த்து, மெல்ல செருமி, குரலை சரிசெய்து,
"எங்க கதையைச் சொல்லி, வீட்டுக்கு வந்த பிள்ளைகளை அழவச்சுட்டேன்." என்று வருத்தப்பட்டார்.
பத்மாவின் குரல் எல்லோரையும் தன்னிலைக்குக் கொண்டுவர,
வேலு, பூவினாவைப் பார்த்து, "அம்மாட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு, எல்லோருக்கும் ஒரு காபி போட்டுக் கொண்டு வாயேன்." என்று சூழ்நிலையை எளிதாக்கும் விதத்தில் பேசினான்.
அதைப் புரிந்து கொண்ட பூவினா, "நீயும் வா கிரேசா!" என்று கூறி விட்டு, அடுப்படிக்குள் சென்ற பூவினாவைப் பார்த்த பத்மா,
"இரும்மா! நான் காபி போடுறேன்." என்றார்.
"பரவாயில்லை! தினமும் நீங்க, ரொம்ப டேஸ்ட்டா காபி போட்டுக் குடிச்சிருப்பீங்க. இன்னைக்கு என் கையால காபிங்கிற பேர்ல கஷாயம் கலந்து தரேன்." என்று கூறி சிரித்த பூவினாவைக் கூர்ந்து பார்த்த பத்மா,
'இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேன்." என்று நினைத்தார். அவர் ஞாபகத்துக்குக் கொண்டு வர முயற்சி செய்வதைப் பார்த்த, ஜெயராம்,
"என்னம்மா பூவினாவையே பார்க்கிறீங்க? எங்கேயோ பார்த்ததுபோலிருக்கா?" என்று கேட்டான்.
"ஆமா ஜெய்!" என்று யோசனையுடன் கூறிய பத்மாவிடம், ஆர்வத்தை அடக்கமுடியாமல்,
"உங்க வைதேகி மாதிரி தெரியுறாங்களா?" என்று கேட்டான் ஜெயராம்.
"வைதேகி மாதிரி தெரிஞ்சா இப்படியா உங்கிட்ட விளக்கம் கொடுத்துக்கிட்டிருப்பேன்? வைதேகி மாதிரி இல்லை. ஆனா இந்தப் பொண்ண எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு." என்று பத்மா கூறியதும்,
வேலு, ஜெயராம் இருக்குமே மனதில் இறுக்கம் ஏற்பட்டது.
'பூவினா, வைதேகி இல்லைனா, யார் வைதேகி? ரகுநந்தன் மறுபடியும் பிறந்துவிட்டாரா? அவன் யார்? எங்கே இருக்கிறான்?' என்று யோசித்து பத்மாவை பார்த்தனர்.
ஏனோ வேலுவிற்கும், ஜெயராமிற்கும், ரகுநந்தன் மறுபிறவியைப் பற்றிக் கேட்க முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டன.
அதற்குள் காபி வரவே, யாரும் எதுவும் பேசாமல் காபி அருந்தினர். மற்ற யாரும் பேசாமலிருக்கவே, செந்தில்,
"மறுபடியும் உங்க மனசைக் கஷ்டப்படுத்துறதா நினைக்க வேண்டாம்... அந்தக் குழந்தை அதாவது வைதேகி இறந்த நேரத்தில் பிறந்த குழந்தை இப்ப எங்கே இருக்காங்க? நாங்க போய்ப் பார்க்கலாமா? அப்புறம்.... ரகுவின் மறுபிறவிப் பையனை நீங்க பார்த்தீங்களா? அவன் இப்போ எங்கே இருக்கிறான்?" என்று கேட்டார்.
"அந்தக் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதுன்னு சொன்னதும் எனக்கு மனம் பதறியது. என்னையும் அறியாமல், ரகுவைத் தேட ஆரம்பித்தேன். பிரசவ வார்டு முழுவதும் தேடிட்டு அடுத்த வார்டிலும் இல்லை. அதற்கடுத்து விபத்து சிகிச்சை வார்டு இருந்தது. அங்கு தேடிச் செல்லும்போது என் அண்ணன் அட்மிட் ஆகியிருந்த அறையைத் தாண்டிச் செல்லும்போது, ஏதோ உள்ளுணர்வு உந்த, திரும்பிச் சென்று, லேசாகத் திறந்திருந்த அந்த அறைக் கதவைத் திறப்பதற்காக அந்தக் கதவின் மேல் கையைத்தான் வைத்தேன். அந்த நொடியில் அருகில் ஒரு குழந்தையின் அழும் குரல் வந்ததும், குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன். அப்போ மட்டும் அந்தக் கதவைத்திறந்து, என் அண்ணனைப் பார்த்திருந்தால், வைதேகியை காப்பாற்றியிருப்பேன்." என்ற பத்மா அன்றைய நினைவில் சிறிது கலங்கி பேச்சை நிறுத்தினார்.
"அப்படி நீங்க செஞ்சுடக்கூடாதுங்கிறது தானே ரகுவோட ஆசை." என்று முனங்கினான் வேலு. வேலுவின் வார்த்தைகள் பத்மா காதிலும் விழவே, பதறிப்போன பத்மா,
"இல்லை தம்பி அப்படி இருக்காது... ரகு, வைதேகி மேல உயிரையே வச்சிருந்தான். நீ சொல்வதைக் போல ரகு நினைத்திருந்தால், எதற்காக நான்கு வருஷம் காத்திருக்கனும்? சுதாவைக் கொன்றபோதே, வைதேகியையும் கொன்றிருக்கலாமே?!!! அவன் ஆவியாக அலைந்ததைக்கூட வைதேகிக்குக் காட்டவில்லையே! வைதேகியாகத் தேடியதால்தானே விஷயம் தெரிந்தது." என்ற பத்மா,
"ரகு ரொம்ப நல்லவன் ய்யா... " என்று கூறி சிறிது இடைவேளை விட்டு மீண்டும் தொடர்ந்தார்...
"அந்த அழுகுரல் கேட்டு நான் போன திசையில் நான்கு வயது ஆண் குழந்தை சுற்றிலும் தேடியவாறு, அழுதபடி நடந்து கொண்டிருந்தான். அந்த ஒரு நிமிஷம், என் வயிறு கலங்கியது... அவன் என்னோட மகன் ரகுநந்தன் தான் என்று நிச்சயமாக என் உள்ளுணர்வு கூற, ஓடிச்சென்று அவனைப் பிடித்து நிறுத்தி,
"என்னடா ராஜா ஏன் அழறீங்க? " என்று கேட்டேன்.
என்ன நினைத்தான்? என்று தெரியவில்லை... யாரென்றே தெரியாத என்னிடம் ஓடிவந்து என் கால்களைக் கட்டிக் கொண்டு,
"அம்மா!,,,, அம்மா..." என்று கேவினான்.
இவன் என் உயிர்... பேசாமல் நான் அவனைத் தூக்கிக் கொண்டு கண் காணாத தேசத்துக்குப் போய் விடலாமா?' என்று கூட நினைத்தேன்....
ஆனால் அந்தக் குழந்தையின் முகம் என் உயிரின் அடிவரை பிசைய, அவனைத் தூக்கிக்கொண்டு, நேராக அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றேன்.
ஜோதிடர் சொன்னதைப் போலவே, அங்கே ஒரு தம்பதிகள், அழுது, கதறியவாறு, சுற்றி இருந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும், ரகு, "அம்மா!... அப்பா!" என்று கத்த, அவர்களும் எங்களைப் பார்த்துவிட்டு ஓடிவந்து ரகுவை வாங்கி, கொஞ்சி, கட்டியணைத்து,
"எங்கடா போன?" என்று கேட்டதும், குழந்தை பதில் சொல்லத் தெரியாமல் மலங்க மலங்க முழித்தவன்,
என்னைக் காட்டி, "அம்மா! கூட்டி வந்தா..." என்று கூறினான்.
ரகு என்னையும் அம்மா என்று சொன்னதும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போனவளுக்கு,
ஜோதிடர் சொன்ன 'வைதேகியின் இறுதிநேரத்தில் நான் ரகுவின் மறுபிறவிப் பையனுடன் இருக்க வேண்டும்' என்ற வார்த்தைகள் ஞாபகம் வந்தது...
'அப்போ என் வைதேகி? ' என்று தோன்றியதுமே, ரகுவின் பெற்றோர்களிடம், அவசரமாக விடைபெற்று, என் வீட்டை நோக்கி ஆட்டோவில் போனேன்.
அங்கு போய் இறங்கியதுமே, அண்ணன் ஆஸ்பத்திரியில் இருக்கும் விபரம் தெரிய, தவறாக எதுவும் நடந்து விடக்கூடாதே!' என்று ஊரிலுள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டி நான் போய்ச் சேரும்முன் எல்லாமே முடிந்து விட்டது.
நான் போகும் முன்னரே வைதேகி... என் வைதேகி... " என்று அதற்கு மேல் சொல்லமுடியாமல் தொண்டை அடைக்க, அமைதியினார்.
"அந்தப் பெண் குழந்தை? அதன் பெயராவது தெரியுமா?"
"இல்லை! அன்று எனக்கு வைதேகியைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே இருந்ததால், அந்தக் குழந்தையை நான் பார்க்கவேயில்லை... எல்லாம் முடிந்தபிறகு என் அண்ணன் நிலை மோசமானது...
வைதேகி, "மீண்டும் வருவேன்" என்று எழுதியிருந்த கடிதத்தைக் காட்டியே என் அண்ணனைப் பிழைக்க வைத்தேன்.
அதன் பிறகுதான் அந்தப் பெண் குழந்தையின் ஞாபகம் வந்து விசாரித்தபோது அவர்கள் வேறு ஊருக்குச் சென்று விட்டதாகவும், அந்தக்
"என்னப்பா சொல்ற? இவ்வளவு நடந்துருக்கா? நிஜமாவே நீ ரகுவைப் பார்த்தாயா ஜெய்?" என்று பத்மா ஆர்வமுடன் கேட்க,
"ஆமாம் ம்மா." என்றான்.
"என்னைப் பார்க்கவே தோணலையா ரகுவிற்கு?" என்ற பத்மாவிடம்,
"அவன், ஜெய்யிடமும், பூவினாவிடமும் மட்டும்தான் பேசியிருக்கான். என்னைப் பார்க்கவும் வரவில்லை." என்றார் மிகவும் கவலையாக செந்தில்.
செந்தில், பூவினாவின் பெயரைச் சொன்னதும், அவளைத் திரும்பிப் பார்த்த பத்மா,
"உனக்கு எங்க ரகுவை எங்கயாவது பார்த்த மாதிரி இருந்ததா ம்மா? " என்று கேட்டார்.
"இல்லை! அன்னைக்குத்தான் முதன்முறையாக ரகுநந்தனை பார்த்தேன்." என்றாள் பூவினா.
"உன்னை எங்கோ பார்த்தது போல இருக்கு. நீ என்னை, எங்காவது பார்த்திருக்கிறாயா ம்மா?'
"இல்லைங்க. இதுவரை நான் உங்களை எங்கேயுமே... " என்று பூவினா சொல்லி முடிப்பதற்குள் வைதேகியின் புகைப்படம் கீழே விழ,
பதறிப்போன பத்மா ஓடிப் போய் எடுத்துப் பார்க்க நல்லவேளையாக ஃபோட்டோ உடையவில்லை.
அந்த ஃபோட்டோவை நெஞ்சில் வைத்து அணைத்துக் கொண்ட பத்மா ஏதோ யோசித்தவளாக, மீண்டும் பூவினாவிடம் வந்தவள், வைதேகியின் புகைப்படத்தைக் காட்டி,
"இது யார்னு தெரிகிறதா ம்மா? என்று கேட்டார்.
பூவினா அந்தப் புகைப்படத்தைக் கூர்ந்து பார்த்தாள். ஆனால் அது யாரென்று தெரியவில்லை.
பூவினாவிற்கு வைதேகியைத் தெரியவில்லை என்று புரிந்து கொண்ட பத்மா,
"நீங்க தேடிவந்த வைதேகிதான் இவள்." என்று கூறினார்.
அனைவரும் வைதேகியின் புகைப்படத்தைப் பார்த்தனர்.
பிறகு தங்கள் மொபைல் ஃபோனில் வைதேகியின் படத்தை ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர். குழந்தைக்கு டாக்டர் சொன்ன பெயர் வைத்ததும் மட்டுமே தெரிந்தது."
"அது என்ன பெயர் ஞாபகமிருக்கா?"
"இங்குள்ளவர்களுக்கே அது சரியாகத் தெரியவில்லை... ஏதோ மாரியம்மனின் முதல் பாதிபெயர்னு சொன்னாங்களாம்."
"மாரியம்மனா?" என்ற அனைவருக்குமே அது பூவினா இல்லை என்பது தெள்ளத்தெளிவானது.
"உங்க அண்ணன் எங்கே?" என்று வேலு கேட்டதும்,
"ரகு, வைதேகி இருவரையும் பற்றியும் தெரியாமல் போகவே, மீண்டும் அந்த நாடி ஜோதிடரிடம் சென்று நடந்ததைக் கூறி, ரகு, வைதேகி இருவரும் இருக்கும் இடம் பற்றிக் கேட்டோம்.
இனி அவர்களாகத் தேடி வரும் வரை எங்களுக்கு அருகிலேயே இருந்தாலும், எங்களுக்கு அவர்களை அடையாளம் காண முடியாதென்றும், இந்த ஜென்மத்திலாவது, அவர்கள் இருவரும் சேரவேண்டும் என்று வேண்டி சிவன் கோயில்களுக்கு யாத்திரை போகச் சொன்னார்.
அதன்படி நாங்கள் இருவரும் கோயில், கோயிலாகச் சென்றோம். இப்பொழுதெல்லாம் என்னால் அலைய முடியல... மூட்டுவலி! அதனால் அண்ணன் மட்டும் போய் வருகிறார்... " என்று கூறி முடித்தார்.
அனைவருமே ரகு மற்றும் வைதேகியின் மறுபிறவி யார்? என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்களேயன்றி சுதாவை சுத்தமாக மறந்ததுதான் விதி!
பத்மா, ஜெய்யைப் பார்த்து, "வைதேகியைத் தேடி வந்ததாகக் கூறினாயே? ஏன்? உனக்குப் பூர்வ ஜென்ம ஞாபகம் வந்ததால் உனக்குத் தெரிந்தவர்களைத் தேடுகிறாயா?" என்று கேட்டார்.
"அதுவும் ஒரு காரணம்தான் ம்மா. ஆனால் இதுவரை எனக்கு சுயஉணர்வோடு இருக்கும் போது பழைய ஞாபகங்கள் வந்ததில்லை. இங்கே நம் வீட்டிற்கு வந்தபிறகுதான் எனக்கும் முழுவதும் ஞாபகம் வருது." என்று நிறுத்தியவன்,
"முதலில் இவங்கல்லாம் யார்னு அறிமுகப் படுத்துறேன்." என்று கூறி, அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தான். பிறகு இதுவரை நடந்த விஷயங்களை ஜெயராம் கூறவும், அதிர்ச்சியடைந்த பத்மா,
பத்மாவிடம், தங்களது மொபைல் நம்பரைக் கொடுத்து விட்டு, "ஏதேனும் தகவல் தெரிந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்." என்று கூறிவிட்டு விடைபெறும் சமயம்,
ஜெய், பத்மாவிடம், "உங்க அண்ணன் வரும் வரை நீங்க ஏன் தனியா இருக்கீங்க? என்னுடன் எங்க வீட்டுக்கு வாங்கம்மா. நானும் எங்க அம்மாவும் மட்டும் தானிருக்கிறோம். நீங்க வந்தீங்கன்னா எங்கம்மாவுக்கும் துணையா இருக்கும். அதே சமயம் அடுத்த முறை ரகு என்னைப் பார்க்க வந்தா நீங்களும் பார்க்கலாம்." என்று சொன்னதும்,
ரகுநந்தனை பார்க்கும் ஆசையில் உடனே ஒத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
எல்லோருக்குமே இது நல்லதாகப் பட்டது. ஏனென்றால் ரகுநந்தன் சம்மந்தப்பட்ட ஒருவர் தங்களுடன் இருப்பது, மேலும் பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பி, அனைவரும் பத்மாவை அழைத்துக் கொண்டு ஜெயராம் வீட்டிற்குச் செல்ல,
செந்தில் தன் வீட்டுக்குக் கிளம்பினார். காரில் செல்லும்போது தனது கைபேசியிலிருந்த வைதேகியின் புகைப்படத்தைப் பார்த்து,
"நீ எங்கம்மா இருக்க? ரகுவின் மறுபிறவி முருகனைப் பார்த்துட்டியா? அவனுக்காக உயிர்விட்ட நீ எங்கோ அமைதியாக இருந்தா, உன் ரகுவை எப்படித் திருமணம் செய்ய முடியும்? " என்று மானசீகமாக செந்தில் கேட்டுக் கொண்டிருந்த போதே,
அவருடைய காரில் ஏதோ ஒரு இருசக்கர வாகனம் மோத,
அதிர்ந்து வண்டியை பிரேக் போட்டு வேகமாக இறங்கி, 'யாருக்கும் அடிபட்டுவிட்டதா?' என்று பார்த்தார்.
யாரோ ஒரு பெண்! தன் இருசக்கர வாகனத்தை எடுத்து நிறுத்திக் கொண்டிருக்க, 'நல்ல வேளை அடிபடவில்லை!' என்று நிம்மதியடைந்த செந்தில்,
"பார்த்து வரக்கூடாதாம்மா?" என்றார் அனுசரணையாக,
"நான் சரியாத்தான் வந்தேன்… உங்க கண்ணைப் பிடறியில் வச்சுக்கிட்டா கார் ஓட்டினீங்க?" என்று கோபமாகப் பொரிந்தபடி திரும்பி செந்திலைப் பார்த்தவள்,
"உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே?..." என்று யோசிக்கும் போதே,
"டாக்டர் செந்தில்! நீங்களா? உங்களைப் பார்ப்பேன்னு..." என்று கூறி முடிக்கும் முன் மயங்கிச் சரிந்தாள்.
பதறிப்போன செந்தில், "யம்மா! யார் நீ? உனக்கு என்னாச்சு?" என்று தானும் ஒரு டாக்டர் என்பதை மறந்து, "யாரேனும் உதவிக்கு வருகிறார்களா?' என்று பார்த்தார்.
யார் அந்தப் பெண்? செந்திலுக்கு அவள் யாரென்று தெரிந்ததா?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...
💍💍💍💍💍💍
0 Comments