வருவான்-45
சட்டென்று யாரோ தன்னைப் பிடித்து நிறுத்த, திரும்பி முகம் பார்த்த பூவினா அதிர்ச்சியடைந்தாள்...
அவள் எதிரில் ஜெய்சஞ்சீவ் நின்றிருந்தான்...
"கையை விடுங்க ஜெய்! ரகுவைப் பார்க்கப் போகனும்" என்று கூறி மீண்டும் ஓட,
ஜெயராம் அதிர்ச்சியானான்…
"பூவினாவிற்கு என்னாச்சு? என்னை ஜெய்னு கூப்பிட்ட மாதிரி இருக்கே?" என்று பதறிய ஜெயராமை யாரோ பிடித்து நிறுத்த,
"யாரது?" என்றபடி ஜெயராம் திரும்பிப் பார்த்தான்.
வேலு, தன் கையில் போட்டிருந்த சிறு கட்டைத் தடவியபடி, "என்னடா என்னைத் தானே பார்க்க வந்தீங்க? பின்ன ஏன் இந்தப் பக்கம் ஓடுறீங்க?" என்று கேட்டான்.
வேலுவிற்குச் சிறிய அடிதான் பட்டிருக்கிறது என்பதை கவனித்த ஜெயராமிற்கு மனம் நிம்மதியடையும் போதே, பூவினா பரிசோதனைக் கூடத்தை நோக்கி ஓடுவது ஞாபகம் வந்து,
"வேகமா வா வேலு... பூவினாவுக்கு என்னாச்சுன்னு தெரியல. அவளைப் பிடி முதல்ல" என்று கூறி பிரேத பரிசோதனைக் கூடத்தை நோக்கி ஜெயராம் ஓடினான்...
பிரேதபரிசோதனை கூடத்தைப் பூவினா நெருங்கியதும், சட்டென்று கதவுகள் திறந்தன,
ஆளில்லாத பரிசோதனை கூடம் முழுவதும் விளக்குகள் ஒளிர, உள்ளே போய்ப் பார்த்தவளிடம்,
"வந்துட்டியா?" என்று ரகுநந்தன் கேட்டான்.
பரிசொதிக்கும் கட்டிலில், நோயாளிபோல் சாய்ந்து அமர்ந்திருந்த ரகுநந்தனைப் பார்த்த பூவினாவிற்கு,
வைதேகி, ரகுநந்தனை சந்தித்ததிலிருந்து, கடைசியாக அவனைப் பரிசோதனைக் கூடத்தில், அவனுடைய இறுதி நேரத்தில் இதே கட்டிலில் பார்த்ததுவரை காட்சிகளாக ஞாபகம் வர,
"ரகுஊஊஊ... உங்க வைதேகி வந்துட்டேன். என்னை விட்டுப் போயிடாதீங்க..." என்று அலறிய பூவினா மயங்கிச் சரிய, ஓடிவந்து தாங்கினான் வேலு.
பூவினாவின் வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்ட வேலுவும், ஜெயராமும் இன்ப அதிர்ச்சியில் உறைய,
"டேய்! நம்ம பூவினா தான்டா வைதேகி!!!" என்று மகிழ்ச்சியில் கத்தினான் வேலு....
"அப்ப மஞ்சு?" என்று ஜெயராம் சிரித்தபடி கேட்க,
"அவதான் சுதா!" என்று அவர்களின் பின்னாலிருந்து குரல் வந்தது. வேலு திரும்ப,
"முதலில் பூவினாவை டாக்டரிடம் காட்டு!" என்றான் ரகுநந்தன் முதுகுகாட்டி நின்றபடி…
‘வைதேகி வந்துவிட்டாள்! அப்போ பூவினா? காதல் ஜெயிச்சுடுச்சு. நட்பு?!! பூவினாவும் மஞ்சுவைப் போல் நான் ரகுநந்தனின் உருவத்தையும் சேர்த்துதான் விரும்பினேன் என்று வேலுவைப் புறக்கணித்தால், நான், வேலு எங்கள் இருவர் காதலுமே தோற்றுவிடும்… என்ன செய்யப்போகிறாள்?’ என்று கவலை தோய்ந்த முகத்துடன் ரகுநந்தன், வேலுவின் கைகளில் பூமாலையாகச் சென்றவளைப் பார்த்தான்.
பூவினா வீட்டில்…
பத்மாவைப் பார்த்து வள்ளி குசலம் விசாரிக்க,
தூக்கத்திலிருந்து எழுந்து, முகம் கூடக் கழுவாமல் வந்த வள்ளியைப் பார்த்த பத்மாவிற்கு அடையாளம் தெரியவில்லை.
"என்னக்கா என்னைத் தெரியலையா? நான்தான் வள்ளி. உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்தோமே... நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தப்ப, உங்க வீட்லதானே..." என்று வள்ளி சொல்லும்போதே, அவரை அடையாளம் கண்டுபிடித்த பத்மா,
"நீயா?!!!" என்று அதிர்ந்த பத்மா, ‘வள்ளிக்கு வைதேகிதானே பிறந்தாள்?’ என்று குழப்பத்துடன் மஞ்சுவைப் பார்த்தவர், ‘மஞ்சுதானே வைதேகி? மஞ்சு வீட்டிற்கா வந்திருக்கோம்?’ என்று எண்ணி,
"பூவினா வீட்டிற்குப் போகாமல், உன் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டியா?" என்று கேட்டார்.
"இதுதான் பூவினா வீடு!"என்று மஞ்சுவும், வள்ளியும் ஒரே நேரத்தில் கூறினர்.
திரும்பி வள்ளியைப் பார்த்த பத்மா, "அப்போ, நீ ஏன் பூவினா வீட்டிற்கு வந்துருக்க?" என்று கேட்க,
ஷோபியா, பத்மாவின் தோளைத் தொட்டு, “என்னாச்சு? வள்ளிய உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்று கேட்டார்.
“வள்ளிதான், வைதேகி உயிரோட இருந்தபோது எங்க பக்கத்துவீட்டுல கர்ப்பிணிப்பெண்ணா இருந்தவ. இவளுக்குத்தான் வைதேகி பிறப்பாள்னு ஜோதிடர் சொன்னார். இல்லையா? அப்போ வள்ளி, மஞ்சுவொட அம்மாதானே? அதான் வள்ளிய, பூவினா வீட்டுல பார்த்ததும்…” என்று பத்மா கூறுவதைக்கேட்ட வள்ளி,
"இதுதான் என் வீடுக்கா... பூவினாதான் என் மகள்..." என்றதும்,
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் பத்மா.
மற்றவர்கள் பதற, வள்ளி பேசியதையெல்லாம் மீண்டும் நினைவு கூர்ந்த பத்மாவிற்கு, ‘பூவினாதான் வள்ளியின் மகளோ?’ என்று சந்தேகம் எழ,
"உன் கணவர் ஆடிட்டர் ஆபீஸ்ல வேலை பார்த்ததா அப்ப சொன்னியே?" என்று பத்மா தன் சந்தேகத்தை வள்ளியிடம் கேட்டார்.
"ஆமாக்கா. அப்ப, அவர் பி.காம் படிச்சுட்டு ஆடிட்டர்கிட்ட வேலை பார்த்தார். இரண்டு பிள்ளைகள் பிறந்ததும் சம்பளம் பத்தலை... அதுக்கப்புறம் பி.எல், எம்.எல்., படிச்சு வக்கில் ஆயிட்டார்." என்று வள்ளி கூறியதும், அடுத்து வந்த சந்தேகத்தைக் கேட்டார் பத்மா.
"உன் மகளுக்கு, டாக்டருடைய குலதெய்வத்தோட பெயர் வச்சதா கேள்விப்பட்டேனே?" என்ற பத்மாவிடம்,
"ஆமாங்க்கா! டாக்டரோட குலதெய்வத்தோட பேரு "பூவினத்து மாரியம்மன்". அதோட முன் பாதி பெயரைத்தான், 'பூவினா'ன்னு என் பொண்ணுக்கு டாக்டர் வைச்சாங்க." என்று வள்ளி கூறியதும்,
வள்ளியை சந்தோசமாக அழைத்துப் பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு, ஷோபியாவிடம்,
"நம்ம பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சுங்க... பூவினாதான் வைதேகி... வள்ளிதான் எங்க பக்கத்து வீட்டுல இருந்த கர்ப்பிணிப் பொண்ணு." என்று மீண்டும் பழைய விஷயங்களைக் கூறினார் பத்மா.
அங்கிருந்த அனைவருமே பெரிய பாரம் விலகிய சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போயினர்.
'பூவினாதான் வைதேகி!' என்ற விஷயத்தை வேலுவிடமும், பூவினாவிடமும் கூற நினைத்தவர்கள், பூவினா நம்பருக்கு கால் பண்ண,
ஃபோனை எடுத்த வேலு, 'பூவினா வீட்டிலிருந்து யார் பேசுகிறார்கள்?' என்று கூடக் கேட்காமல்,
"பூவினாதான் வைதேகி!" என்று ஆனந்தக் கூச்சலிட,
அந்த உலகமே ஒரு நிமிடம் ஆனந்த அதிர்ச்சியில் அசையாமல் நின்றது.
பத்மாவும், வேலுவும் ‘பூவினாதான் வைதேகி!’ என்பதை எவ்வாறு அறிந்து கொண்டனர் என்ற விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
வேலு, பூவினா, ஜெயராம் மூவரும் டாக்டர் செந்திலுடன் ஆஸ்பத்திரியில் இருப்பதாக வேலு கூறவும்,
“நாங்க உடனே அங்கே கிளம்பி வர்றோம்!” என்று கூறிவிட்டு அனைவரும் ஆஸ்பத்திரிக்குச் சென்றனர்.
"யாருக்கும் எதுவுமில்லையே? பின்னே ஏன் அவங்கள ஆஸ்பத்திரிக்கு வரச்சொன்னீங்க?" என்று பூவினா கேட்க,
"நான் எங்கடி வரச்சொன்னேன்? அவங்க வரேன்னாங்க நான் சரின்னேன். அதுமட்டுமில்ல, இங்கேதான் இருபத்தாறு வருஷமா ஒரு உயிர் தவிச்சிட்டிருக்கு... இப்பத் தான் அவனுக்குக் கோஞ்சம் நிம்மதி கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்... நம்ம எல்லோரும் குடும்பத்தோட ஒன்னா சேர்ந்திருக்கிறதைப் பார்த்தான் னா இன்னும் சந்தோஷப்படுவான் அதற்காகத்தான்." என்றான் வேலு.
"என்னால இன்னுமே நம்பமுடியலங்க... நான்தான் வைதேகின்னு..." என்று கண்கள் விரிய வேலுவிடம் கூறினாள் பூவினா.
அதைக் கேட்ட ரகுநந்தனுக்கு, ‘பூவினா தன்னை, வைதேகியாக உணராமல் பூவினாவாகவே இருப்பதும், அவளுக்கு வைதேகி வெறும் நினைவுகளாக இருப்பதும்’ புரிய,
"ஏன்?" என்று வேலுவின் பின்னேயிருந்து வந்தான் ரகுநந்தன்.
ரகுநந்தனைப் பார்த்த பூவினா, "ஏன்னு சொல்லத் தெரியல..." என்றாள்.
வேலுவை தனக்குப் பின்னால் இழுத்து நிறுத்திவிட்டு, பூவினா அருகில் அமர்ந்த ரகுநந்தன்,
"நீ நினைத்தாலே உன் முன் நான் வரும்போதே, நீ தான் என் உயிருக்கும் மேலான வைதேகின்னு புரிஞ்சிருக்க வேண்டாம்?" என்று சிரித்தான் ரகுநந்தன்.
"அதெல்லாம் சரி! ஆனா நீங்க, என்கிட்டயிருந்த மோதிரத்தை வாங்கி, வேலுகிட்ட கொடுத்ததுனாலதான், நான் வைதேகி இல்லைனு முழுசா நம்பினேன்."
"அந்த மோதிரம், நான் வைதேகிக்காக வாங்கிய நிச்சயதார்த்த மோதிரம். அதை நீயாக உன் விரலில் போட்டுக்கிட்டா என்ன அர்த்தம்? அதை வேலு, வைதேகிக்கு, அதாவது உனக்குப் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வந்தபிறகு, வேலு உன்னை நிச்சயம் பண்ணும்போது போட்டு விடனும்னு நினைச்சேன்."
"ஏன்? அதை அப்போதே சொல்லியிருக்கலாமே?"
"ஆஹா! நான் சொன்னதும், நீ வைதேகி ஆயிடுவியா? பூவினாவா தானே இருப்ப? நீதான் வைதேகின்னு உனக்குள்ள உணரனும். என்மேல் உள்ள காதல்தான் வைதேகியை வெளிக்கொண்டு வரும். ஒருவேளை நான் அப்பவே நீதான் வைதேகின்னு சொல்லியிருந்தா, உங்க ரெண்டு பேருக்கும் அதாவது வேலுவுக்கும், பூவினாவுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கும்... ஆனா வைதேகி?... அவளை நீ உணராத வரை நீ என் தோழி பூவினாதானே?... இந்த மோதிரம் என் காதலின் அடையாளம். அது வைதேகிகிட்டத்தான் சேரனும். அதைவிட… அப்பமட்டும் நான், நீ தான் வைதேகின்னு சொல்லியிருந்தா நீங்க நம்பனுமே?!!... எனக்குத்தேவை ஆத்மார்த்தமான காதல்."
"அப்போ நான் ஆத்மார்த்தமாக வேலுவை விரும்பவில்லையா?"
"அது மட்டும் போதுமா? நீயும் முன்புபோல் சுதாவின் பேச்சை நம்பிவிட்டால்?!! எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், வேலு உன் காதலாக இருக்கனும்னு எதிர்பார்த்தேன்... அதனாலதான் நீ என்னைத்தேடி இங்கே மருத்துவமனைக்கு வந்தபோது, வேலுவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ சந்தோஷமா இருப்பியா?ன்னு உன்னைக் குழப்பிவிட்டேன்... அன்னைக்கு நீ சொன்ன பதில்லருந்தே, ‘வேலுமேல நீ திடமான காதல் வச்சிருக்கேன்ன்னு புரிஞ்சுகிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஆனா மஞ்சுவை, வைதேகின்னு நீ நெனச்சதுமே எனக்கு வேதனை ஆரம்பமாயிடுச்சு... சமீபநாட்களா நீ எனக்காக வேலுவை விட்டுக் கொடுக்கத் தயாரானதும், எனக்கு ரொம்ப கஷ்மாயிடுச்சு... " என்று ரகுநந்தன் சொல்லிக்கொண்டிருக்கையில்,
"மஞ்சுவை, நான் ஒன்னும் வைதேகின்னு நினைக்கலை... செல்வம் அப்பா கொண்டு வந்த தாயத்து தான், தப்பா அடையாளம் காட்டிடுச்சு." என்றாள் பூவினா.
இதற்கு ரகுநந்தன் என்ன சொல்லப் போகிறான் என்று செல்வம் முதல் பூவினாவரை அத்தனை பேரும் வெண்மையான மேகம் போலிருந்த ரகுநந்தனையே பார்த்தனர்.
பூவினா கூறியதைக் கேட்டுச் சிரித்த ரகுநந்தன்,
"அன்னைக்கு உங்க பக்கத்துலதான் நானும் இருந்தேன்… தாயத்து தப்பான ஆள அடையாளம் காட்டல. நம்ம விதிதான் விளையாடிருச்சு."
"என்ன குழப்புறீங்க? தாயத்து தப்பா அடையாளம் காட்டலைனா என்ன அர்த்தம்?"
"பொறு… அன்னைக்கு மஞ்சு உன் வீட்டிற்கு வரும்போது, அவ அம்மாகிட்ட கோயிலுக்குச் போறதா பொய் சொல்லிட்டு உங்களைப் பார்க்க வந்தா... அதுனால, அவ அம்மாகிட்ட மாட்டிக்காம இருக்க, வீட்டிலிருந்து கொஞ்சம் திருநீறு, குங்குமத்தைத் தனித்தனி போட்டலமா மடிச்சு, மணிப்பர்ஸ்சுல வச்சு, கொண்டு வந்தா... நீயோ ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியான மனநிலையில் இருந்த…"
"ஆமா!"
"உனக்கு, கிரேசா தாயத்தைக் கட்டி, முப்பது நிமிசம் ஆனபோது, மொபைல் ஃபோன் ரிங் ஆச்சு… இல்லையா?"
"ஆமா! கிரேசா அம்மா பேசினாங்க."
"ஆனா… மஞ்சு, அவளோட அம்மாதான் ஃபோன் பண்றாங்கன்னு நெனைச்சு பதறி, அவளுடைய பர்ஸில் இருந்த மொபைலை எடுத்த வேகத்துல, அவ வீட்லருந்து எடுத்துட்டு வந்திருந்த திருநீறு, குங்கும பொட்டலங்கள் கீழே விழுந்துட்டது...
அதேநேரத்துல, கிரேசாவோட அம்மா ஃபோன் செஞ்சதால உன்னையே திருநீறு எடுத்துப் பூசிக்கச் சொல்லிட்டு கிரேசா அவளோட அம்மாகிட்ட பேச ஆரம்பிச்சா...
மஞ்சுவும், மஞ்சுவோட அம்மா கிட்டயும் கிரேசாவை விட்டே பேசவைப்போம்னு நினைச்சு, நீ என்ன பண்றன்னு கவனிக்காம. கிரேசா ஃபோனை எப்படா கட் செய்வானு கிரேசாவையே பார்த்துக்கிட்டிருந்தா…
இதுக்கிடையில எதிலும் கவனமில்லாத மனநிலையில் இருந்த நீ, மஞ்சு பர்ஸிலிருந்து விழுந்த குங்குமப் பொட்டலதிதிலிருந்த குங்மத்தை உன் நெற்றியில் வச்சுக்கிட்ட."
"என்ன சொல்றீங்க?" என்று பூவினாவுடன், அனைவருமே அதிர்ச்சியாக,
"ஆமா! நீ அன்னைக்கு நெத்தியில வச்சுக்கிட்டது மஞ்சு, அவ வீட்லருந்து எடுத்துட்டு வந்த குங்குமத்தை… நாடி ஜோதிடர் கொடுத்த திருநீறை இல்ல…" என்றதும் பூவினா, அவளருகில் அமர்ந்திருந்த கிரேசா, மஞ்சு ஒருவரை ஒருவர் அதிச்சியாகப் பார்த்துக் கொள்ள, ரகுநந்தன் தொடர்ந்தான்.
"உன் நெத்தியிலிருந்த குங்குமத்தைப் பார்த்து கிரேசா ஷாக் ஆகி நின்னுட்டா.
கிரேசா அசையாம நின்றதப் பார்த்த நீ, மஞ்சுவுக்கும், மஞ்சு கொண்டு வந்த திருநீறையே எடுத்து அவள் நெற்றில வச்சுவிட்டு, அவளை வைதேகி ஆக்கினாய் பாரு... எனக்கு மறுபடியும் உயிரே போனதுபோலிருந்துச்சு..." என்று ரகுநந்தன் கூறி முடித்ததும்.
அதைக் கேட்ட அனைவரும் ஷாக் ஆகி பேச்சிழந்து நின்றனர்.
அப்போ ஜோதிடர் குடுத்த திநீற்றுப் பொட்டலம் என்னாச்சு? என்று செல்வம் கேட்டார்.
“பதற்றத்துல மஞ்சு மொபைல் ஃபோனை எடுக்கும்போது பர்ஸிலிருந்து விழுந்த பொருட்களுக்கு அடியில் போயிடுச்சு.” என்றதும்,
இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தனுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? என்று வருந்தி அனைவரும் அமைதியாக,
மீண்டும் ரகுநந்தனே தொடர்ந்தான்…
"அதுக்கப்புறமா நானே உன்கிட்ட நீதான் வைதேகின்னு சொன்னா யாருமே நம்பமாட்டீங்க... குறிப்பா செல்வம் மாமா. உங்க காதலை சேர்த்து வைக்க, என் காதலை நான் விட்டுக்கொடுத்து, பொய் சொல்கிறேன்னு நினைப்பார்…” என்று செல்வத்தை ரகுநந்தன் பார்க்கவும், அவர் வேதனையாகத் தலையசைத்தார்.
“அப்புறம், என்ன செய்றதுன்னு நான் யோசிச்சுக்கிட்டிருக்கையில்... கிரேசா, மஞ்சுவை கூட்டிக்கிட்டு என்னைப் பார்க்க வந்தா... மஞ்சுவைப் பார்த்ததும், அவளைக் கொன்னுட்டா பிரச்சினை தீர்ந்துடும்னு முடிவுபண்ணி, அவளைக்கொல்ல நான் நெருங்கும்போது, நானே எதிர்பார்க்காத வகையில் நீ என்னை மனசால நினைச்சு, பார்க்கனும்னு வேற சொன்ன... உடனே உன்கிட்ட வந்தேன்… ஆனா நீ, மஞ்சுதான் வைதேகின்னு முடிவெடுத்து உட்கார்ந்திருந்த…”
பூவினா தலை கவிழ, இதமான புன்னகையுடன் அவளுடைய நாடியைத்தொட்டு, நிமிர்த்தி,
“வேலுவை, நீ காதலிக்கிறதை என்கிட்ட சொல்லி, என்னை விட்டுக்கொடுக்கச் சொல்வாய், நானும் "சரி நீ வேலுவை கல்யாணம் பண்ணிக்க "ன்னு சொல்லலாம்னு இருந்தேன்…"
"ரகுநந்தன்..."
"ம்ம்… ஆனா அப்பதான் நீ வேலுவை எந்த அளவு காதலிக்கிறன்னும்... எனக்காக நீ எதையும் செய்வனும் புரிஞ்சுக்கிட்டேன்... அப்ப எனக்கு இருந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை... அந்த நிமிஷமே, உன்னை அதாவது என் காதலி வைதேகியா மட்டுமில்ல... என் உயிர்த் தோழி பூவினாவையுமே விட்டுவிடக்கூடாதுன்னு முடிவுக்கு வந்தேன்…"
"..."
"அதுக்குமேல எனக்குப் பொறுமையில்ல. நீயாக வைதேகியை உணரும்வரை காத்திருக்க முடியாம, சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, உன்னுடனும் வேலுவுடனுமே இருந்தேன்...
ஜெய் உன்கிட்ட வேலுவிற்காக சண்டை போட்டபோது, நீயாவே வைதேகியை உணர்ந்த... ஆனால் வேலுவின் மேலுள்ள காதலில் அதைப் பற்றி யோசிக்காம ஜெய்யோட வெளியேறின. ஜெய் வீட்டுல, வேலு இல்லைனு எனக்குத் தெரியும்... உங்களை வேளியே வர வைக்க, வேலு மீது லேசாக டூவீலர உரச வச்சு, அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு, நானே ஜெய்க்கு ஃபோன் செஞ்சு ஆக்ஸிடன்ட் னு சொல்லிட்டு, நீங்கள் வெளியே வரக் காத்திருந்தேன்... வேலு உயிருக்குப் போராடுறான் என்ற பயம் உனக்கு, வைதேகியின் பழைய ஞாபகத்தைக் கொண்டு வரும்னு நம்பினேன்... ஜெய் வீட்டிலிருந்து வெளியே வந்த நீங்க பைக்கில் ஏறவும்தான்... நீ ஆட்டோவில் போனா இன்னும் நல்லா இருக்குமேன்னு தோணவும், அருகில் இருந்த ஆணியால் ஜெய்யின் பைக்கை பஞ்சர் ஆக்கிவிட்டேன்....
நான் நினைச்ச மாதிரியே நீங்க ஆட்டோல ஏறினதும், தானாகவே உனக்குப் போனபிறவியில் பரிதவித்து, அழுதபடி ஆட்டோவில் போனது ஞாபகம் வந்துருச்சு...
மறுபடியும் நீ சுய உணர்வுக்கு வந்த போதும், உன் கண்களுக்கு மட்டும் சுற்றிலும் இரவாகத் தெரியும்படி செய்தேன்... ஜெய்யை உன் கண்களுக்குத் தெரியாமல் மறைச்சேன்... நான் செஞ்சது வீண்போகாம, வைதேகி, பூவினாவை மீறி முழுவதுமாக வெளியே வந்தாள்..." என்று கூறி முடித்ததும்,
பூவினா, ரகுநந்தனின் கைமீது தனது கையை வைத்து, “ஸாரி ரகுநந்தன்!” என்று கண்களைச் சுருக்கி தலை சாய்த்து, தோழியாக மன்னிப்பு வேண்டினாள்.
பூவினா தன்னை, வைதேகியாக உணராததால், வேலுவே காதலனாகவும், தன்னை, அவள் நண்பனாகவே பார்ப்பதும் ரகுநந்தனுக்குப் புரிய,
பூவினாவின் நெற்றியில் முத்தமிட்டு, பின்னால் நின்ற வேலுவோடு கலந்தான்...
நான்கு வருடங்கள் உருண்டோடியது...
பிரபல பிரசவ ஆஸ்பத்திரியின், லேபர்வார்டு வாசலில், பதட்டத்துடன் அங்கும் இங்கும்நடந்தபடி, அலைமோதிக்கொண்டிருந்தான் வேலு.
'இந்த நேரத்தில் ஜெயராம் எங்கே போய்த் தொலைந்தான்?' என்று திட்டியபடி மணியைப் பார்த்தான்.
இரவு பதினொன்று ஆகிக்கொண்டிருந்தது...
திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் முதல் குழந்தை... 'நல்லபடியாகப் பிறக்கவேண்டுமே!' என்று நொடிக்கொருதரம் கடவுளைக் கும்பிட்டான்...
எதிரில் இருந்த நாற்காலிகளில், ஷோபியா, வள்ளி, ராஜன்.செல்வம், பத்மாவுடன் கிரேசாவின் பெற்றொரும் கண்டபடி சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
"உள்ளே ஒருத்தி பிரசவ வேதனையில் துடிக்கும்போது இவர்களுக்கு எப்படித் தூக்கம் வருகிறது?" என்று அவர்கள்மீது கோபம் கொண்டவனின் மொபைல் ஃபோன் அலறியது...
ஃபோனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவனின், கண்கள் மேலும் சிவக்க, கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்...
"இந்த நேரத்துல எங்கே போவான்? நீங்க மூணுபேரும் அப்படி என்னத்தை கிழிச்சுக்கிட்டிருக்கீங்க? நீயும், ஜெயராம்அம்மாவும் கிளம்பி வாங்க... இங்கே எல்லாரும் தூங்கிட்டாங்க... இனிமே சாப்பாடு செஞ்சு கொண்டுவந்து என்ன செய்ய? நீங்க கிழிச்சதுபோதும் நான் அவனைக் கூட்டிட்டு வரேன்." என்ற வேலுவின் பேச்சில் கண்விழித்த அனைவரும்,
"என்ன வேலு? என்ன ஆச்சு?" என்று பயந்து போய்க் கேட்க,
"ம்ம் இத்தனை பேர் இங்கிருந்தும் என்ன பிரயோஜனம்... சரி! மறுபடியும் தூங்காமல், பார்த்துக்குங்க இதோ நான் வரேன்."
"மொதல்ல விஷயம் என்னன்னு சொல்லிட்டுத் திட்டு!" என்ற ஷோபியாவிடம், ஆஸ்பத்திரி வாசல்வரை ஓடிய வேலு, திரும்பிப் பார்த்து,
"நந்துவைக் காணோமாம்." என்றவன்,
ஓடிப்போய்த் தன் புல்லட்டை உதைத்து வெளியே வரும்போது, ஸ்கூட்டியில் பூவினாவும், பில்லியனில் ஜெயராமின் அம்மாவும் எதிரில் வந்தனர்.
பூவினா, வேலுவைப் பார்த்ததும் ஜெயராமின் அம்மாவை இறங்கச் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை அப்படியே போட்டுவிட்டுத் தன் மேடிட்ட வயிற்றைப் பிடித்துக் கொண்டு, வேலுவை நோக்கி ஓடிவந்தாள்.
பூவினாவின் பயம் மனதைத் தாக்க, புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, ஓடிவந்து பூவினாவை அணைத்துக் கொண்டான்.
"ஓகே! ஓகே! இப்படித் தேம்பாத, வயிற்றில் இருக்கும் என் பொண்ணுக்கு கஷ்டமா இருக்கும்." என்று சிரித்தவன் நெஞ்சில் செல்லமாகக் குத்திய பூவினா,
"எந்த நேரத்தில் கிண்டல் பண்றதுன்னு இல்லையா? நானே நந்துவைக் காணோமேன்னு அலறிஅடிச்சு வரேன்."
"இப்ப வந்துடுவான் பாரு!"
"உங்களுக்கு என்னாச்சு? மூன்று வயசுக் குழந்தை, தானா எப்படி இங்கே வருவான்? போங்க... போய்த் தேடுங்க." என்றவளிடம்,
"நீ இப்படித் தவிக்கிறத பொறுக்க முடியாத ஜீவன் ஒன்னு இருக்கான்... அவன் நம்ம நந்துவைக் கூட்டிட்டு வந்துடுவான்." என்று வேலு சொல்ல,
"யாரச் சொல்றீங்க?"
"உன் உயிர்த்தோழன் ரகுநந்தனைத்தான்."
"என்ன உளறுறீங்க? அவர்தான் உங்களுக்குள் கலந்துட்டாரே?!!"
"இல்லை வினி! நம் கல்யாணத்துக்கு முதல்நாள், ரகு என்னிலிருந்து பிரிந்து வந்து விட்டான்... அவனுக்கு எப்பவுமே உயிர்த்தோழியாகப் பூவினா வேண்டுமாம்... அதோடு நம் வம்சத்தில் தலைச்சன் குழந்தை காணாமல் போவதால், இனி அந்த நிலை நம் வம்சத்திற்கு வரக் கூடாது என்பதாலும், நம் வம்சத்தில் யாரும் காதல் தோல்வியில் இறந்துவிடக் கூடாது என்பதாலும், ரகுநந்தனின் ஆத்மா காவலாக மாறிவிடுவதாகக் கூறி மறைந்து விட்டான்."
"நானும் பலதடவ யோசிச்சிருக்கேன்… எந்த சந்தர்ப்பத்திலயும் உங்கள்ட்ட ரகுநந்தனைப் பார்கக முடியலையேன்னு. அப்டீனா ரகுநந்தன் உங்களுக்குள்ள இல்லயா? "
"ஆமா… நீ கவலைப்படுவியோன்னு நினைச்சு உன் முன்னாடி ரகு வருவதில்லை... ஆனால் அவன் எப்பவும் உன் பக்கத்துலதான் இருக்கிறான்... நிச்சயம் அவன் நம்ம நந்துவைக் கூட்டிட்டு வந்துடுவான்..." என்று வேலு கூறும்போதே,
வேகமாக ஓடிவந்த நர்ஸ், அப்பொழுதுதான் டியூட்டி முடிந்து ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கொண்டிருந்த ஜெயராமிடம்,
"வாழ்த்துக்கள் சார்! உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு!" என்று சொல்ல, அனைவரும் கிரேசாவை நோக்கி ஓடினர்.
'இன்னும் நந்து வரலையே!' என்று கவலையுடன் வாசலைப் பார்த்த பூவினா,
'ரகுநந்தன்! எங்கே இருக்கீங்க?" என்று மனதிற்குள் பூவினா தேடிய நொடியில் ஆஸ்பத்திரி வாசலில்,
"நினைத்ததும் வந்தான் ரகுநந்தன்!"
அவன் கையில், வேலு- பூவினாவின் மூன்று வயது சுட்டிப்பையன் நந்து என்ற ரகுநந்தன்!
💍💍💍💍💍💍 சுபம் 💍💍💍💍💍💍
0 Comments