சிம்டாங்காரன்: அத்தியாயம்-41

 

41

எனக்கென நீ இருக்கிறாய்

 என்ற நம்பிக்கையே

         என் பலம்...

🌹🌹🌹🌹🌹🌹

 

  மிருத்திகாவை எப்படி ரஞ்சனியின் வீட்டிற்கு அழைத்து போனார்கள்? என்று  போலீஸ் ஆபிசர் கேட்டதும், நடந்த விபரங்களைக் கூறினாள் மிருத்திகா.

 

  காலில் அடிபட்டதும், மேகன் மிருத்திகாவிற்கு முதலுதவி செய்து விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே வந்த ஈஸ்வரி,

 

  "காலில் அடிபட்டு விட்டதாமே மீரா? ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல மேகன் டாக்ஸி கொண்டு வந்திருக்கிறார்.. கொஞ்சம் என்னைப் பிடித்தபடி வருகிறாயா?" என்று மிகவும் அக்கரையாகக் கூறினாள்,

 

  "மேகன் எங்கே?" என்று மிருத்திகா அறையில் அமர்ந்து படி கண்களால் துழாவ,  

 

  "அவர் டாக்ஸியில் இருக்கிறார்."

 

  "நீங்க எப்படி இங்கே?" என்று மிருத்திகா கேட்டதும்,

 

  "நானும், இவளும் கோயிலுக்குப் போறதுக்காக  இந்தப் பக்கம் வந்தோம்... அவர் பேர் என்ன? ம்ம்.. மேகனா? அவர் எங்களிடம், 'என் மனைவிக்கு, காலில் அடிபட்டு விட்டது. அவளைக் கொஞ்சம் இந்த டாக்ஸி வரை அழைத்து வர முடியுமான்னு கேட்டார்.

 

அவர் யாருன்னு முதல்ல எனக்குத் தெரியல மீரா. ஆனா இது விக்னேஷ் மாமா வீடுன்னு தெரிஞ்சதால, “இங்க யாரு கால்ல அடிபட்டுச்சு? நீங்க யாரு?” ன்னு கேட்டேன்.  “அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.. வீட்டுக்குள்ள இருக்கும் பொண்ண இந்த டாக்ஸிக்கு கூட்டிட்டு வாங்க”ன்னார்... நாங்களும் வந்துட்டோம்...  சரி! வா! பொய் கிட்டே பேசலாம்... நான் என்ன உனக்குத் தெரியாதவளா?" என்று கூறியபடி மிருத்திகா இறங்குவதற்குக் கை கொடுக்க,

 

  "அவர கூப்பிடுங்க... உங்களால என்னை எப்படி?"

 

  "எனக்கு ஒன்னும் சிரமமில்ல...  மத்ததெல்லாம் அங்க வந்து உன் ஆளுகிட்டயே   கேளு." என்று கேளியும் சிரிப்புமாக, பின்வாசல் வழியாக,  கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்

 

  "என்ன இந்த வழியா போறிங்க?" என்று மிருத்திகா கேட்டதும்,

 


  "அம்மா! தாயே! இந்தப் பக்கம்தான் டாக்ஸி நிக்குது...எது கேட்கிறதாயிருந்தாலும் அங்க வந்து கேளுன்னு சொன்னேனா இல்லையா? சிவனேன்னு ரோட்டுல போயிகிட்டிருந்தவளக் கூப்பிட்டுக் கலாய்க்கிறீங்களா?" என்று ரொம்பவும் சினேகபாவத்துடன் பேசி கிண்டலடித்த ஈஸ்வரியின் முகத்தில் தெரிந்த அப்பாவித்தனத்தை நம்பி ஈஸ்வரியையும், அவள் தோழியையும் பிடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறினாள் மிருத்திகா.

 

  டாக்ஸியில் ஏறி அமர்ந்தபிறகே மேகனைத் தேடியவள் டிரைவரிடம்,

 

  "அவர் எங்கே?" என்று கேட்க ஈஸ்வரியும் சேர்ந்து,

 

  "ஆமா? இங்கே இருந்தாரே அவர் எங்கே?" என்று கேட்டாள்.

 

  "அவர், அவரோட டூவீலரை எடுத்துக்கிட்டு வர்றேன்னு போயிருக்கார்." என்று கூறினார் டிரைவர்


“சரி! அப்ப நான் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்.”ன்னு சொல்லிட்டு ஈஸ்வரியும் இறங்கி விட்டாள்.


டாக்ஸியை ஸ்டார்ட் பண்ண...

  "அவர் வரலயே?" என்று மிருத்திகா கேட்டாள்.


  "அவருடைய வண்டில, இந்த  டாக்ஸியை தொடர்ந்து வருவார்." என்று கூறி டாக்ஸியை நகர்த்தினார்...


  டாக்ஸி, மிருத்திகாவுடைய வீட்டின் முன்வாசல் இருக்கும் தெருவிற்குள் நுழையவும், மேகனின் வண்டியில் மோதியது. மிருத்திகா பதற, டாக்ஸியை வேகப் படுத்தினான் டிரைவர். பின்னால் திரும்பிப் பார்த்த மிருத்திகா கண்களில், மேகன், டாக்ஸியைப் பின்தொடர்ந்து வருவது தெரிய, சற்று அசுவாசமாக டாக்ஸியில் சாய்ந்து அமர்ந்தாள்.

 

  டாக்ஸி ஒரு வீட்டின் முன் நிற்க,

 

  "ஆஸ்பத்திரிக்குப் போகலயா?" என்று கேட்டாள் மிருத்திகா.

 

  "உங்களுக்கு கால் பிசகி இருக்குதாமே இந்த வீட்லதான் சுளுக்கு எடுப்பாங்க." என்று  டிரைவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டிலிருந்து ரஞ்சனியின் அம்மா, ரஞ்சனி, இன்னொரு பெண் மூவரும் வந்து,

 

  "வாம்மா! பாத்து இறங்கு. தம்பி இப்ப வந்துரும்..." என்று கூறி  மிருத்திகாவை இறக்கி, வீட்டிற்குள் நடத்திச் சென்று ஒரு அறையில் இருந்த கட்டிலில் அமர வைத்தனர். ரஞ்சனியின் அம்மா 'தம்பி' என்று அழகு வைக் கூறியிருக்கிறார்கள் என்று பிற்பாடுதான் மிருத்திகாவிற்குத் தெரிந்தது. ஆனா ரஞ்சனியின் அம்மா, மேகனைக் குறிப்பிடுகிறார் என்று நினைத்து,

 

  "அவர் எப்ப வருவார்?" என்று மிருத்திகா கேட்க,

 

  "வண்டியில ஏதோ கோளாராம் சரி பண்ணிட்டு வந்துடும்... இது எங்க வீடுதாம்மா பயப்படாதே... என் பொண்ணோட டீச்சராமே நீ? அப்புறம் என்ன பயம்? உன் சொந்த வீடு போல இருக்கலாம்..." என்று கூறிய ரஞ்சனியின் அம்மா, அருகில் இருந்தவளைக் காட்டி,

 

  "இந்தஅக்கா உனக்கு சுளுக்கு எடுப்பாங்க... நான் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்" என்று அறையை விட்டு வெளியே சென்றார். ரஞ்சனி மிருத்திகா கட்டிலருகில் நின்றபடி புன்னகை தவழ நின்றாள்.

 

  வீட்டின் சூழ்நிலை பயப்படும்படி இல்லையென்றாலும்... மேகன் அருகில் இல்லாதது மிருத்திகாவிற்கு ஏதோ போல இருந்தது...

 

  மிருத்திகாவை ரஞ்சனியின் கைகளைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டு, அந்த சுளுக்கு எடுக்கும் அக்கா, சுளுக்கெடுக்க, மிருத்திகாவிற்கு உயிரே பறந்தது. பிறகு 'தென்னைமரக்கொடி எண்ணெயை' தடவி காலைச்சுற்றி கட்டு போட்டுவிட்டு,

 

  "சின்னதாக எலும்பு விலகி இருந்தது. இப்ப சரி பண்ணியாச்சு. .. நான் குடுக்குற மருந்தையும் குடிச்சுட்டு படுத்தா நாளைக்கு காலையில் எழுந்து ஓடலாம் சரியா?" என்று சிரித்தபடி கூறினார். 

 

  அந்த அக்காவிடம், "சரி" என்று தலையாட்டிவிட்டு, 'மேகன் வந்தா வீட்டுக்குப் போயிடலாமே, என்று நினைத்தபடி அறைக்கதவை பார்த்தவளிடம்,

 

  "இந்தாம்மா! இந்த மருந்த குடிச்சுட்டு படுத்துக்க. நாளைக்கு காலையில் வந்து பார்க்கிறேன்." என்றாள் அந்த அக்கா.

 

  "அவர் வரட்டும். எங்க வீட்ல போயி மருந்து குடிச்சுட்டு, நாளைக்கு இங்கே வர்றேன்." என்ற மிருத்திகாவை புருவத்தை சுளித்தபடி யோசனையாக பார்த்தவர்,

 

  "சரிமா, மருந்த இப்பவே குடிச்சுடு. .. நாளைக்கு காலையில் வந்து கட்ட பிரிச்சுடுறேன்." என்று கூறி விட்டு சென்றார். ரஞ்சனியும் போய் விட்டாள். 

 

  'தெரியாத இடத்தில் தனியா விட்டுட்டு மேகன் எங்க போனான்?' என்று நினைத்தவள், கால் வலிக்கவே மருந்தைக் குடித்துவிட்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். 

 

  கண்விழித்துப் பார்த்த பொழுது, கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஈஸ்வரி அமர்ந்திருந்தாள். சட்டென்று எழுந்து அமர்ந்த மிருத்திகா,

 

  "ஈஸ்வரி! மேகன் எங்கே?" என்று ஈஸ்வரியின் பின்னால் எட்டிப் பார்த்தவாறும், மேகனின் குரல் கேட்கிறதா? என்று காதுகளை தீட்டியவாறும் கேட்டாள்.

 

  "அவன் இனி வரமாட்டான்... நீ, நான் சொல்றபடி கேட்குற புரியுதா?" என்று ஈஸ்வரி கடின தொனியில் பேசவும்,

 

  "நான் எதுக்கு நீ சொல்றத கேட்கனும்? மேகன் எங்கே?"

 

  "அவன் மேல அப்படி என்னம்மா காதல்? அவனை மட்டும் கேக்குற? ஏன் உன் அண்ணன்கள் வெட்டியா? அவனுங்களும் ஆம்பளை தானே?"

 

  'இவ எனக்கு கோபத்தை தூண்டுறாளா?.... மேகன் எங்கே?? இவள் சரியில்லை... இவளை நம்பியிருக்கக் கூடாது... ' என்று நினைத்தவள் தன்னுடைய செல்ஃபோனைத் தேட, 'கடவுளே! வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். .. என்னைக் கடத்தி விட்டார்களா?...ஆனா மேகன் வேனை பின்தொடர்ந்து வந்தாரே?' என்று யோசித்துக் கொண்டிருந்தவளை,

 


  "என்ன பதிலயே காணோம்." என்று நக்கலாக கேட்டாள் ஈஸ்வரி.

 

  "நீ என்ன செய்றன்னு தெரிஞ்சுதான் செய்றியா? மேகனுக்குத் தெரிஞ்சது... நீ செத்த..."

 

  "ஐய்ய்ய்யோ அம்மா! பயந்துட்டேமா" என்று கூறி விட்டுச் சிரித்தாள் ஈஸ்வரி.

 

  ‘ம்ஹூம்! இவ எதுவும் சொல்லப் போறதில்லை.' என்று நினைத்த மிருத்திகா, மீண்டும் சாவகாசமாக சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

 

  "என்ன ரிலாக்ஸ் ஆயிட்ட?  பயமில்லை?!! பரவாயில்லை, நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்... உனக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம் நடத்த போறோம்."

 

     ஈஸ்வரியின் முகத்தில் தெரிந்த கிண்டலே மிருத்திகாவைத் தூண்ட, அவள் சொன்ன விஷயம் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் காட்டிக் கோள்ளாமல், சிரித்தபடியே,

 

  "அப்படியா?" என்று சிரித்தபடி கேட்ட மிருத்திகாவைப் பார்த்த ஈஸ்வரி,

 

  "என்னடி மூளை குழம்பிடுச்சா? தூக்கிட்டு வந்து எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணப் போறோம்னு சொல்றேன் சிரிக்கிற?"

 

  "இந்த  "டி" போடுற வேலையெல்லாம் வேண்டாம். அப்புறம் நடக்காத ஒரு விஷயத்தை சொன்னா சிரிப்பு வராம என்ன செய்யும்?"


  "எதுடி நடக்காதது?"

 

  "நீயெல்லாம்... சொன்னா புரியாத ரகம்."

 

  "என்ன தைரியத்துல இப்படி இருக்கன்னு தெரியாதவளா நான்? ஒன்னு, நீ தப்பி ஓடிடுவ... இல்ல, உன் வீட்ல இருந்து வந்து கூட்டிட்டு போயிடுவாங்க அதானே? அந்த வழியையெல்லாம் அடைக்காமலா உன் முன்னாடி வந்து நிக்கிறேன்." என்று கூறிய ஈஸ்வரி, மிருத்திகாவின் முகத்தைப் பார்த்தாள்.

 

மிருத்திகா, ஈஸ்வரி நினைத்த மாதிரி பயந்து நடுங்காமல், அசால்டாக பார்த்துக் கொண்டிருந்தாள். இவளுக்கு அந்த மேகன் இருக்கும் கொழுப்பு... ‘இருடி உன்னை கொஞ்ச நேரத்தில கதறி அழுது, என் காலில் விழ வைக்கிறேன்.' என்று  கருவியபடி,

 

  "ரொம்ப அலட்டாதடி, இந்தா இந்த வீடியோவைப் பாரு." என்று கூறி விட்டு தன்னுடைய மோபைலை உயிர்பித்து, எதையோ எடுத்து மிருத்திகாவிடம் காட்டினாள் ஈஸ்வரி.

 

  ‘இவ மூஞ்சிய  பாத்தா ஏதோ வில்லத்தனம் பண்ற மாதிரி இருக்கே? அப்படி எதைப் பார்க்கச் சொல்றா?' என்று நினைத்தபடி ஈஸ்வரி காட்டிய வீடியோவைப் பார்த்தாள் மிருத்திகா... அதில் ஐ.சி.யு அறை வாசலில், மிருத்திகாவின் அப்பா  துவண்டுபோய் படுத்திருந்தார். அதைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் பதறிய மிருத்திகாவின் கடைக்கண்களில் ஈஸ்வரி எகத்தாளமாக சிரிப்பது தெரிய, சட்டென்று தன் முகப்பாவத்தை மாற்றி, அசால்டாக இருப்பது போல் வைத்துக் கொண்டு,

 

  "எதுக்கு இத காட்ற?"

 

  "இதுல இருக்குறது உன் நொப்பன்! கண்ணும் போச்சா?" என்ற ஈஸ்வரியின் நக்கலைப் பொருட்படுத்தாத மிருத்திகா,

 

  "அது தெரியுது." என்று நிதானமாக கூற... மிருத்திகாவை ப் பார்த்த ஈஸ்வரி, 'என்ன இவ? அப்பா மேல பாசம் இல்லையோ? அழுத்தக்காரியா இருப்பா போலிருக்கே? இருடி, இதோ கதற விடுறேன்.' என்று நினைத்தவாறு,

 

  "உங்கப்பா எங்க கஸ்டடியில இருக்கார்... என்ன முழிக்கிற? எல்லாம் நான் போட்டுக் கொடுத்த ஐடியா...   உங்கம்மா இருக்காளே, அவளுக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்லி ஆஸ்பத்திரில இருக்கா. அந்த லூசுப் பொம்பளைக்குத் துணையா இருக்கிறதுக்கு உங்கப்பா அங்கே இருக்கார்... அந்த ஆஸ்பத்திரில எல்லாரும் எங்க ஆளுங்க... இப்பக் கூட, உங்கப்பா வீக்கா இருக்கார்னு பொய் சொல்லி, உங்கப்பாவுக்கு மயக்க ஊசி குத்தி தான்  படுக்க வச்சிருக்கோம்... இது ஜஸ்ட் சாம்பிள்தான்... நீ இங்கே இருந்து தப்பிக்க நினைச்சாலோ. .. உன்னை எவனாவது கூட்டிட்டுப் போனாலோ, அடுத்த நிமிஷம் ஒரே ஒரு ஊசிதான் உங்கப்பாவுக்கு போடுவோம். .. அவ்வளவுதான் இனி காலம்பூரா கை கால் வராம இருக்க வேண்டியதுதான்..." என்று கூறி மிருத்திகாவின் முகத்தைப் பார்த்தாள் ஈஸ்வரி.

அப்பொழுதும் மிருத்திகா முகத்தில் எந்த வித்யாசமும் தெரியாமல் போகவே,

 

  "என்னை நம்பல! இல்ல? இப்ப பாரு" என்று கூறி அவளுடைய மோபைல்  ஃபோனில் வீடியோ கால் செய்ததும் ஒரு நர்ஸ் எடுத்தாள்.

 

  "சொல்லுங்க அக்கா "

 

  "வார்டுபாய் கபாலிக்கு குடு."

 

  பிறகு ஒரு தடித்தாண்டவராயன் ஃபோனை எடுத்து,

 

  "சொல்லு க்கா." என்றான்.

 

  "இங்க இவ கொழுப்பெடுத்து உக்காந்திருக்கா... நான் சொல்றத நம்பலை போல. நீ என்ன பண்ற, இவ அப்பனை இழுத்துப் போயி,  மத்தியானம் சொன்ன  மாதிரி,  'வீக்கா இருக்கீங்க'ன்னு சொல்லி, ஊசிய போடு." என்று ஈஸ்வரி சொன்னதும் மிருத்திகாவிற்கு பயத்தில் தொண்டை அடைக்க,

 

  "இப்ப வேணாங்க்கா ஏற்கனவே போட்ட ஊசியோட மயக்கமே தெளியாம இருக்காரு... மறுபடியும் போட்டு உசிருக்கு ஆபத்தாயிடாம. ." என்றதும்,

 

  "பரவாயில்லை! இவ கண்ணால பார்த்தா தான் நம்புவா.. மறுபடியும் ஊசி போடு." என்று ஈஸ்வரி சொன்னதும், அந்த வார்டுபாய் மிருத்திகாவின் அப்பாவை எழுப்ப முயற்சி செய்து கடைசியில் கைத்தாங்கலாக தூக்கி உக்கார வைத்து, பெட்டியில் வைத்திருந்த ஊசியை எடுத்ததும். பதறிய மிருத்திகா,

 

  "நிறுத்து.. நான் தப்பிச்சு ஓடக்கூடாது அவ்வளவுதானே?" என்று அமைதியாகக் கேட்ட மிருத்திகாவை, இவ எந்த ரகம்? துளி பயம் இல்லையே?' என்று ஆச்சர்யமாக பார்த்தவாறே,

 


  "அதுமட்டுமில்ல... உன்னை தேடி யார் வந்தாலும் நீ இங்கிருந்து நகரக்கூடாது. அப்பொழுதும் உங்கப்பா எங்க கட்டுப்பாட்டுல இருக்கிறத மறக்காத... பார்த்தேல?   ஒரு நிமிஷம் ஆகாது ஊசி போட. .. புரிஞ்சு நடந்துக்க..." என்று ஈஸ்வரி கூறியதும்,

 

  "அவ்வளவுதானே! நான்  நீ சொல்றத கேட்கிறேன்... ஆனா உன்னை என்னால நம்பவே முடியாது. மணிக்கு ஒரு தரம் என் அப்பாவை நான் பார்க்கனும்... அவருக்கு இனி ஊசியே போடக்கூடாது. அவர் நடமாடுறதப் பார்க்கனும்... அடுத்த முறை எங்கப்பா படுத்திருக்கிறத பார்த்தா நான் பாட்டுக்கு கிளம்பிப் போயிகிட்டே இருப்பேன் புரியுதா?" என்று மிருத்திகா கேட்டதும்,

 

  'இவ என்ன எனக்கு கட்டளை போடுறா? கொழுப்பெடுத்தவ என்னை அடித்துபோட்டுவிட்டு போனாலும் போயிடுவா...   இருக்கட்டும் அழகுக்கு கல்யாணம் பண்ணினதும் வெளுத்து எடுக்கலாம்...' என்று எண்ணிய ஈஸ்வரி,

 

  "சரி! மணிக்கொருதரம், எங்க தூரத்து சொந்தமான இந்த  அண்ணி, அதான், ரஞ்சனியின் அம்மாவோட  ஃபோன்ல உங்கப்பாவப் பார்க்கலாம்... இன்னொரு முக்கியமான விஷயம், இங்க இருக்கும் எங்க அண்ணன், (ரஞ்சனியின் அப்பா) அண்ணிக்கு, நீயும், எங்கண்ணனும் (அழகு) லவ் மேரேஜ் பண்ணிக்க வீட்டை விட்டு ஓடிவந்துட்டனு சொல்லியிருக்கோம்... அதை மறுத்து, நீ எதுவும் சொல்லக் கூடாது.." என்று கூறி விட்டு அறையைவிட்டு வெளியேறினாள்.

 

  "கொஞ்சம் நில்லு!" என்று மிருத்திகா கூறவும், அறைக்கதவை திறக்கப் போன ஈஸ்வரி திரும்பி மிருத்திகாவைப் பார்த்தாள்.

 

எதற்கும் ஒரு முறை பேசிப் பார்ப்போம் என்று நினைத்த மிருத்திகா,

 

  "நீயும் ஒரு பொண்ணு தானே?  வேறொருத்தரை விரும்பும் என்னை, உங்க அண்ணனுக்கு கட்டிவைக்க நினைக்கிறியே? உனக்கு நான் என்ன பண்ணினேன்? உன்கூட நான் பேசுனது கூட இல்லையே?" என்று மிருத்திகா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கண்ணெல்லாம் சிவக்க பிசாசு போல மிருத்திகாவை நெருங்கி,

 

  "நீ எனக்கு என்ன பண்ணல? உன்னால தான் நான் இப்படி ஆயிட்டேன்..." என்று ஆங்காரமாக ஈஸ்வரி கத்த, பயந்து ஓரடி பின்வாங்கினாள் மிருத்திகா.  

 

  "அப்படி என்ன வன்மம் மிருத்திகா மேல் ஈஸ்வரிக்கு?"

 

  அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

 

                                                        ❤❤❤❤❤❤ 

Post a Comment

1 Comments