வருவான் -1


வருவான்-1

    மருத்துவமனையை நோக்கி ஆட்டோ விரைந்து கொண்டிருந்தது... பாதி உயிர் போன நிலையில் கூந்தல் கலைந்து, முகமெல்லாம் கண்ணீராக, "வேகமா போங்கண்ணா!" என்று நொடிக்கொரு தரம் கெஞ்சியபடி, அவள்  இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தாள்.

      "நீ முதல்ல ஆட்டோவுக்குள்ள தள்ளி உக்காருமா. ..    ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள விழுந்து கிழுந்து தொலச்சுறாத..." என்றார் ஆட்டோக்காரர்.
 
      அவர் பேசியது எதுவும் கேட்கும் நிலையில் அவள் இல்லை.

       "என் மேலதான் தப்பு... முட்டாள்தனமா பண்ணிட்டேன்... கடவுளே எனக்கு உயிரே போற மாதிரி இருக்கே... என் காதுல விழுந்த செய்தி தப்பாயிருக்கனுமே... என்று புலம்பியபடி தனக்குத் தானே அரற்றியவாறும், ஊரிலுள்ள அனைத்து தெய்வங்களையும் மனதில் கும்பிட்டவாறும் இருந்தவளைப் பார்த்த ஆட்டோ காரருக்கு, ' என்ன விஷயம் மா?' னு கேட்க திரும்புவதும், அவள் "சீக்கிரம் போங்கண்ணா!" என்றதும் ரோட்டைப் பார்த்து ஆட்டோவை ஒட்டுவதுமாக இருபது நிமிடங்கள் கழிந்தது... ஆட்டோ, அந்த அரசு மருத்துவ மனைக்குள் நுழைந்ததுமே ரூபாயை ஆட்டோக்காரரிடம் கொடுத்து விட்டு ஓடினாள்.

       பிரேதப்பரிசோதனை கூடம் என்று போர்டைப் பார்த்தவளுக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. உள்ளே...

      சுற்றிலும் இருந்தவர்கள் விலக, கட்டிலில் துடித்துக் கொண்டிருந்தவனின் கண்களில் அவள் தெரியவும், "வந்துட்டியா?... நான்தான் சொன்னேன் ல... என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியாதுனு. .. எப்பவும் உன்னை பார்த்துக் கிட்டே ...." கண்கள் அவள் முகத்திலேயே நிலைத்தது....

           ****************

    எவ்வளவுதான் காலையில் சீக்கிரம்  எழுந்தாலும், நம் கதாநாயகி காலேஜ் புறப்படுவதற்குள் ஹரிபரி யாகிவிடும்,ஒட்டுமொத்த குடும்பத்திற்கும்.


     அழகான சிறிய குடும்பம் தான். அப்பா சண்முகராஜன். பிரபல வழக்கறிஞர்.அன்பானவர்.

    சண்முகராஜன்
 
        அம்மா வள்ளி, குடும்பத்தலைவி. ரொம்ப பயந்த சுபாவம், இந்தக் குடும்பம்தான் வள்ளிக்கு உலகம். கொஞ்சம் கோபம் வரும்.



          வள்ளி (அம்மா)
 


        நம் கதாநாயகி பூவினா (பூவின் இனம்). சிவகாமி ஆர்ட்ஸ் கல்லூரியில், B.sc தடயவியல் (Forensic science.) முதல் வருடம் படிக்கிறாள். எதையும் ஒரு புது கோணத்தில் சிந்திப்பவள். வாழ்க்கையில் த்ரில் இருக்கவேண்டும்  என்று நினைப்பாள். இந்த குணாம்சமே தடயவியல் சேர்வதற்குக் காரணமாக அமைந்தது.


                                                                    பூவினா

            தம்பி விஜய்விஷ்வா, பிரபல மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். .. அக்கா என்றால் அவனுக்கு உயிர்... ஆனால் சீண்டி விளையாடுவதும் உண்டு. பார்ப்பதற்கு  அமைதியான பையனாகத் தெரிவான். ஆனால் பயங்கர சேட்டை... சிறுவனாக இருந்தாலும் பொறுப்பான, புத்திசாலி இவன். பல நேரங்களில் அம்மாவையும் ,  அக்காவையுமே வழிநடத்துபவன்.  எல்.கே.ஜி. படிக்கும் போது, படிச்சு, முடிச்சு ஆட்டோ டிரைவர் ஆவேன்னு சொன்னான்... கொஞ்சம் பெரியவன் ஆனதும் லாரி டிரைவர்... இப்ப பைலட்...அவனோட எய்ம் ஆக இருக்கிறது.

                                                                   விஜய்விஷ்வா

            "நேரமாச்சு! நேரமாச்சு! வேக வேகமா சாப்பிடுங்க! என்று பிள்ளைகளைப் பணித்தவாறு, மதிய உணவு பேக் ஐ எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் வள்ளி...

            எட்டுமணிக்கு காலேஜ் பஸ்சும், ஸ்கூல் பஸ்சும் வந்துவிடும் என்பதால்    சண்முகராஜனும் பிள்ளைகள் புறப்படுவதற்கு உதவிக்கொண்டிருந்தார்... இவர் பத்து மணிக்கு கோர்ட்டுக்குப் போனால் போதும்...

              "அடுத்த வாரம் இன்டஸ்ட்ரியல் விசிட் டுக்குப் போறதா சொன்னியேக்கா? ஒன்னும் பேசாம இருக்க? ரத்து பண்ணிட்டாங்களா?" என்று விஜய்விஷ்வா, பூவினாவைக் கேட்டான்.

              "இல்லடா!  நாந்தான் போகல." என்றாள் பூவினா.

              "ஏன் வெளியூரா? வெளிமாநிலமா?" என்று விஜய்விஷ்வா கேட்டான்.

              "ப்ச்.." என்று சலித்தவாறு, "அதெல்லாம் ஒன்னும் இல்லடா" என்றாள்.

              இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட சண்முகராஜன், "இன்ட்டஸ்டிரியல் விசிட் போகாமல் இருக்கக் கூடாதுமா. ..  அதுதான் அனுபவ அறிவைக் கொடுக்கும். புத்தகத்தில் இருப்பதைப் படித்து புரிஞ்சுக்கிறதுக்கும், நேரில் பாத்து புரிஞ்சுக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்மா. " என்றார்.

              சிறிது தயங்கிய பூவினா, "அதில்ல ப்பா! இந்த தடவ அரசு மருத்துவ மனையில பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு கூட்டிட்டுப் போறாங்க ப்பா. .. "

               "அதுவும் உன் படிப்புக்கு ரொம்ப அவசியமானதுதானேம்மா?"

              "ஆமாம் ப்பா ரொம்ப அவசியம்தான், கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டியதும்கூட. பிரேத பரிசோதனைல நாங்க என்னவெல்லாம் தெரிஞ்சுக்கனுமோ, அதெல்லாம் நேரடியா காட்டுவாங்களாம்.   ஆனா... பயப்படுற வங்க,  பயத்துல மயக்கம் போடுறவங்க வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க ப்பா. .. "

              "அதனால தான் நீ போகலயா? பயந்தாங்கொள்ளி! ஹே...! "என்று விஜய்விஷ்வா  கலாய்த்தான்.

              "இதுக்குத் தான் நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். இதெல்லாம் நமக்கு, குறிப்பா பொம்பளப் பிள்ளைக்கு ஒத்துவராது... வேற ஏதாவது படி ன்னு, நூறு தடவை தலையால அடிச்சுக்கிட்டேன். யாரு எம்பேச்ச கேட்டா? இவ இந்த படிப்பு... அவன் பைலட்! இந்த  கால பசங்க  ரோட்டுல வண்டி ஓட்டும்போதே  வயித்துக்குள்ள புளிய கரைக்குது. ..   இதுல ஏரோப்ளேன் ஓட்டப்போறாராம்... மொத்தத்துல நான் நிம்மதியா வீட்டில இருக்கக்கூடாது அதுதானே " என்று வழக்கம்போல அங்கலாய்த்தார் வள்ளி.

              "அம்மா நான் உங்க பிள்ளைமா! வானத்துல ஏரோப்ளேன் ஐ சைக்கிள் ஐ விட மெல்ல ஓட்டுறேன் போதுமா?" என்று வள்ளி ஸ்கூட்டி ஓட்டும் வேகத்தோடு ஒப்பிட்டு கிண்டலடித்தான் விஜய்விஷ்வா.

               எல்லோரும் சிரிக்கவும் கோபமடைந்த வள்ளி, " என்னைய கிண்டல் பண்றத விட்டுட்டு காலேஜ்க்கும் ஸ்கூலுக்கும் வேகமா கிளம்புங்க... காலேஜ் பஸ் வந்துடும்." என்று மிரட்டி விட்டு,

            "உங்கள சொல்லனும்." என்று தேமேன்னு ஷூ பாலீஷ் போட்டுக்கிட்டிருந்த சண்முகராஜனிடமும் எகிறி விட்டு அடுப்படிக்குள் சென்றார்.

              வள்ளி உள்ளே போனதும், "சரி நீ சொல்லுமா எப்ப இன்டஸ்ட்ரியல் விசிட் போறீங்க?" என்று கேட்டார் ராஜன் ( ஒவ்வொரு தடவையும்  நீளமா வா கூப்பிடுவாங்க? அதனால, இனி சண்முகராஜன் ஐ ராஜன் னு சுருக்கி கூப்பிடுவோம் சரியா? )  

              அடுப்படியை எட்டிப்பார்த்தவாறு, "எனக்குக் கொஞ்சம் உதறலாதான்பா இருக்கு... கட்டாயம் போகனுமா? எலி ய  கட் பண்றதுக்கு பயந்துக் கிட்டு தானப்பா அந்த பிரியட் வரும்போது    நான் ஸ்கூல்க்கு லீவ் எடுத்தேன்..." என்றாள் பூவினா.

               "அப்புறம் எதுக்கு இந்த டிபார்ட்மெண்ட் ஐ எடுத்த?" என்று விஜய்விஷ்வா கேட்டதும், 

               "பயப்படுறவங்க கிட்ட  இப்படித்தான் பேசுறதா விஷ்வா?" என்று அவனை அதட்டினார் ராஜன்.

               பிறகு பூவினாவிடம், "எதையும் யோசிக்காம பெயரைக் கொடுத்துட்டு வாம்மா... அப்படி என்ன அதுல இருக்குன்னு நாம பாத்துடலாம்." என்றார்.

              "என்னது நாம வா? என்ன பேசுறீங்க ன்னு யோசிச்சுதான் பேசுறீங்களா?" என்று வள்ளி கேட்க,

               "நாம ன்னா நாங்க ரெண்டு பேரும்." என்றார் ராஜன்.

               "அதான் எப்படிங்கிறேன். அவ எங்க போறதா சொன்னா? அங்க நீங்களும் போகப்போறீங்களா?"

              "அங்க எப்படிமா நான் போகமுடியும்? இங்க வீட்டிலேயே..."

               "அடப்பாவி மனுசா என்ன சொல்றீங்க? வீட்டில என்ன பண்ண போறீங்க?"

               "ஏண்டி என்னைப் பேசவே விட மாட்டியா?"

              வள்ளி கலக்கத்துடன் ராஜனைப் பார்க்க. அவள் முகத்தில் தெரிந்த பயம் அவருக்கு சிரிப்பை வரவழைத்தது.

              "இங்க பாரு மா. நாங்க கம்ப்யூட்டர் -ல இன்டர்நெட் மூலமா இவ சொல்ற சப்ஜெக்ட் சம்மந்தமா எவ்வளவு தெரிஞ்சுக்கனுமோ அவ்வளவு  தெரிஞ்சுக்கலாம் னு சொன்னேன். போதுமா?" என்றார் சமாதானமாக.

              "அப்படியா?" என்று சிரித்தார்  ஒரு பெருமூச்சு விட்டபடி.

              அவருடன் சேர்ந்து விஜய்விஷ்வாவும் ராஜனும் சிரித்தனர். பூவினா மட்டும் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

              "என்னம்மா? இதுதான் உன் எதிர்கால வேலைந்னு முடிவெடுத்த பின்நாடி, அதுல இருக்கிற எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறது தானே புத்திசாலிக்கு அழகு? நீ இனி வேலை சம்மந்தப்பட்ட அனைத்தையும் ஒரு ஆப்ஜெக்ட்டாக பார். பயம் விலகி, அதில் என்ன இருக்கும்? என்ற ஆர்வம் வரும். ஒரு கம்ப்யூட்டரை சர்வீஸ் பண்ற போது எப்படி ஆர்வமாக கவனிப்பாயோ அப்படி கவனிச்சுப் பாரு. சரியா?" சிரித்தபடி கேட்டார்.

               பூவினா விற்கு கொஞ்சம் தைரியம் வந்தது... "சரிங்கப்பா! நான் பேர் குடுத்துடுறேன்." என்றவள் காலேஜுக்கு ஆர்வமாக கிளம்பினாள்.

              இதுதான் ராஜன்! யாரிடம் எப்படிப் பேசவேண்டுமோ அப்படிப் பேசி, அவர் நினைத்தபடி எதிரிலிருப்பவரை பேச வைத்து விடுவார். இது தான் இவர் இவ்வளவு பிரபலமான லாயரா இருப்பதன் ரகசியம்.

  ஆனால்  இப்பொழுது அவர் பேசி சம்மதிக்க வைத்ததின் விளைவுகள், ராஜன் குடும்பத்திற்கு சந்தோஷத்தைக் கொடுத்ததா? 

   அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்....

      💍💍💍💍💍💍 

Post a Comment

0 Comments