39
நிலவைச் சிறைமீட்க
மேகம் வருவதில்லை...
நின்னைச் சிறைமீட்காமல்
மேகன் விடுவதில்லை...
🌹🌹🌹🌹🌹🌹
மேகன் சொன்னது போல, கதிர் தன்னுடைய
மொபைல் ஃபோனை பாலசௌந்தரி கட்டிலுக்கு அருகிலிருந்த டேபிளில் வைத்து விட்டு, நித்யாவிடமும்
தீபாவிடம் பேச ஆரம்பித்தான்... ஆஸ்பத்திரி விஷயங்களைப் பற்றி பேசினர். பிறகு,
"மீரா எங்கே இருக்கான்னு ஏதாவது
தெரிஞ்சதா தம்பி?" என்று தீபாவே ஆரம்பித்து வைக்க, மேகன் கூறியது போல கதிர்
பேசினான்.
"இல்லண்ணி! எங்கே இருக்கான்னு
தெரியல... நாம சந்தேகப்பட்ட மாதிரி அழகு கடத்திட்டுப் போகல...ஏன்னா...
அழகு, மீராவை கல்யாணம் பண்ற எண்ணத்துலதானே
கூட்டிட்டுப் போயிருப்பான்? அப்போ, மீராவை அவன் கல்யாணத்துக்கு கட்டாயப் படுத்தும்
போது மீரா, அவளுக்கும், மேகனுக்கும் எல்லாம் முடிஞ்சுருச்சுன்னு சொல்லியிருப்பா.
.. அப்படிச் சொன்ன பிறகு அழகு, மீராவைக் கல்யாணம் பண்ணுவானா? வெளியே
அனுப்பியிருப்பான்... ஆனா இன்னும் மீரா இருக்குமிடம் தெரியலையே... அப்போ வேற
எங்கேயோ தான் இருக்கா. தேடிக்கிட்டு தான் அண்ணி இருக்கோம்... " என்று
கவலையுடன் கூறினான் கதிர்.
கதிர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட
பாலசௌந்தரிக்கு, 'அடக்கடவுளே! இதை மறந்துட்டேனே! அந்த திமிரு புடிச்சவ அழகு கிட்ட,
மேகனோட தப்பு பண்ணிட்டேன்னு சொல்லிடுவாளே? இப்ப என்ன பண்றது? அழகுக்கு ஃபோன்
பண்ணலாம்னா, என்னை ஐ.சி.யு விற்குள் அனுப்பும் போது, என் புருஷன் கிட்ட என் மொபைல்
ஃபோனைக் குடுத்துட்டாங்களே ' என்று யோசித்தபடியே சுற்றும் முற்றும் பார்த்த
பாலசௌந்தரியின் கண்களில் கதிரின் மொபைல், அருகிலிருந்த டேபிளில் இருப்பதை
பார்த்துவிட்டார். அம்மா, மொபைலை பார்த்து விட்டதைக் கவனித்த கதிர்,
"எனக்கு தலைவலிக்கிற மாதிரி இருக்கு
கேன்டீன் வரை போயிட்டு வரட்டுமா அம்மா! உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லைல?"
என்று பாலசௌந்தரியிடம், கதிர் கேட்டான்.
"இப்ப பரவாயில்ல... நீ போயிட்டு
வாப்பா.. இவங்களையும் கூட்டிட்டுப் போப்பா. .. 'தீபா, நித்யா ரெண்டு பேரும் கதிர்
கூட போயி எதாவது சாப்பிட்டுட்டு வாங்க.' அப்பா வெளியே இருப்பார் அவரையும்
கூட்டிட்டு போயி எதாவது வாங்கிக் கொடு." என்று பாசமழை பொழிந்தார்...
‘என்ன திடீர்னு பாசம் பொங்குது நம்ம
மேல... இதுல ஏதாவது வில்லங்கம் இருக்குமோ?’ என்று நினைத்த தீபாவும், நித்யாவும்
ஒரே நேரத்தில்,
"அவங்க போயி சாப்பிட்டுட்டு,
எனக்கும் வாங்கி வரட்டும் அத்தை.. நான் இங்கே இருக்கேன்." என்றனர்.
பாலசௌந்தரிக்கோ 'போய்த் தொலையாம உயிர
வாங்குறாளுகளே? நான் அழகுக்கு ஃபோன் பண்ணனுமே' என்று தோன்ற, அதேநேரத்தில் கதிரும்,
'இப்பத்தானா... இவங்க ரெண்டு பேரும்
உஷாராவாங்க! இவங்க கடமை உணர்ச்சிக்கு....' என்று நொந்து கொண்டான்.
"எனக்குத் தூக்கம் வருது. நீங்க கிளம்புங்க"
என்று கூறி விட்டு அசந்து படுப்பதுபோல படுத்து, கண்களையும் மூடிக்கொண்டார்
பாலசௌந்தரி.
'அத்தையோட நடிப்பு பயங்கரமா இருக்கே
எதுக்கு?' என்று யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த நித்யாவை சுரண்டி 'வா!' என்பது
போல சைகை காட்டினான். அவள் அவனுடன் வர, "அண்ணியையும் வரச்சொல்!" என்று
ஹஸ்கி வாய்சில் கூறினான்.
"அக்கா இங்கே இருக்கட்டும்.. நாம
அவங்களுக்கு வாங்கிட்டு வருவோம்." என்றாள் நித்யா, அவனைப் போலவே ஹஸ்கி
வாய்சில்.
நெற்றியில் அடித்துக் கொண்டு,
"வா!" என்று கூறி அறைக்கு வெளியே அழைத்துச் சென்று,
"ஒரு காரணமாதான் சொல்றேன் அண்ணியையும்
கூட்டிட்டு வா!" என்றான்.
"அத்தை ஏதோ... " என்று நித்யா
கூறிக்கொண்டிருக்கும் போதே,
"எல்லாம் எனக்கும் தெரியும்! என்
உயிரை வாங்காம போயி அண்ணிய கூட்டுட்டு வா!" என்று எரிந்து விழுந்தான் கதிர்.
'இவருக்கு என்னாச்சு?' என்று நினைத்தவாறு
தீபாவை அழைத்து வரச் சென்றாள் நித்யா.
கதிர், அவனுடைய அப்பாவை அழைத்துக்கொண்டு
முன்னால் நடக்க, பின்னாடியே நித்யாவும், தீபாவும் உலகத்தையே புரட்டிபோடும் அளவு
தீவிர சிந்தனையுடன் கதிரைப் பின்தொடர்ந்தனர்.
அவர்கள் சென்றுவிட்டார்களா? என்று மெல்ல
வந்து எட்டிப் பார்த்தார் பாலசௌந்தரி. நால்வரும் கண்ணை விட்டு மறைந்ததும், அவசரமாக
ஓடிவந்து, கதிர்ரின் மோபைலை உயிர்ப்பித்தார்.
அழகு நம்பருக்கு டயல் செய்ய, முழுவதும்
ரிங் போய் கட்டானது. 'இவன் வேற, ஃபோனை எடுக்காம என்ன பண்ணிக்கிட்டிருக்கான்?. ..'
என்று அழகைத் திட்டியவாறே மீண்டும் டயல் செய்தார். அழகு, ஃபோனை அட்டெண்ட்
பண்ணுவதற்கும், கதிர் வந்து அறையின் ஜன்னலோரம் நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஏதோ
ஒரு உள்ளுணர்வில் திரும்பி கதவைப் பார்த்தார் பாலசௌந்தரி,
"ப்ச்! தின்னிபண்டாரங்க... நல்லா
மொக்கிட்டுதான் வருங்க. .." என்று கூறி விட்டு,
அழகு "ஹலோ!" என்று
தயக்கத்துடன் சொல்ல,
"நான் தான் மாப்பிள்ளை! அத்தை
பேசுறேன். கல்யாண வேலையெல்லாம் எப்படி இருக்கு?" என்று கேட்டார்.
"இது கதிர் நம்பர் தானே
அத்தை!!" என்றான் அழகு பதட்டமாக,
"இவன் என்ன?
கதிருக்கே பயப்படுறான்!!. .. அந்த மொரட்டு மேகனை எப்படிச் சமாளிக்கப் போறானோ?'
என்று நினைத்தவர், 'நமக்கென்ன, அந்த மீரா பிசாசை, இவன் தலையில கட்டிவச்சுட்டா
முடிஞ்சது .. அப்புறம் அவனுங்க தலையெழுத்து...' என்று நினைத்துக் கொண்டிருக்கும்
பொழுதே, முன்று முறை "அத்தை!" என்று ஏலம் விட்டுவிட்டான்.
"எல்லா மாடும் கொட்டிக்க கேன்டீனுக்கு
போயிருக்குதுக... வர முக்காமணி நேரமாகும்... கதிர் ஃபோனை வச்சிட்டு போயிட்டான்.
நீங்க பேசுங்க..." என்றார் பாலசௌந்தரி.
"எதுக்கும், அவங்க வர்றாங்களான்னு பார்த்து பேசுங்க அத்தை."
"சரி! நீ சொல்லு.. அங்க என்ன
ஆச்சு?"
"நம்ம நினைச்ச மாதிரியே தான் நடக்குது
அத்தை... மீரா எங்க ஈஸ்வரியோட சொந்தக்காரங்க வீட்ல பத்திரமா இருக்கா."
"அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம்.
இந்த கல்யாணத்தை நிறுத்த மீரா என்னவேணுமானாலும் செய்வா .. சொல்லுவா.. நீங்க அவ
பேச்சை நம்பி மோசம் போயிடாதீங்க. .."
"இல்லை! அத்தை அவள கூட்டிட்டு வந்தபோது
பார்த்ததுதான், இந்த நிமிசம்வரை, உங்க ஊர்பக்கம் தலைவச்சுக் கூட படுக்கலை.
.."
'இவன் ஒருத்தன்... இவன்ட்ட எப்படி
சொல்றது? சரியான மாங்கா மடையன்!" என்று அவனைத்திட்டியவாறே,
"ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை! அவ
கழுத்தில தாலி கட்டும் வரைக்கும் அவகூட பேசாதீங்க... ஏதையாவது சொல்லி, கல்யாணத்தை
தடுக்கப் பார்ப்பாள்... அவ என்ன சொன்னாலும் எங்கிட்ட விபரம் கேளுங்க.... நான்
உங்களுக்கு நல்லதுதான் செய்வேன்... அவ பேச்ச கேட்காதீங்க... "
"சரி அத்தை!" என்று அவர்கள்
பேசிக்கொண்டிருக்கும் போதே கதிர்,
"இந்த அம்மா, உடைத்து பேசாம பூடகமா
சொல்லுதே. .. அவன் ஒரு மடையன் புரிஞ்சும் தொலைக்க மாட்டானே... ஆகா ஃபோனை
வச்சுட்டாங்க... இப்ப என்ன பண்றது?' என்று நினைத்தவன், ஐந்து நிமிடம் கழித்து
எதார்த்தமாக நுழைவது போல, அறைக்குள் சென்று டேபிள் மேலிருந்த ஃபோனை எடுத்து
கொண்டு, அசந்து தூங்குவதுபோல பாசாங்கு செய்த அம்மாவை, ஒரு பார்வை பார்த்து விட்டு
வெளியேறி, மேகனுக்கு டயல் செய்தபடியே மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான். மேகன்
ஃபோனை எடுக்க, நடந்த விபரத்தைக் கூறினான் கதிர்.
"ஷிட்! உங்க அம்மா இருக்காங்களே...
எமகாதகி! அழகுக்கு எந்த சந்தேகமும் வராதபடி எச்சரிக்கையும் பண்ணிவிட்டாச்சு... இனி
நாம தான் தலைமுடியை பிச்சுக்கனும்... ஒகே! மதியம் வரை பார்ப்போம் கதிர்..."
"வேண்டாம் மேகன்! அழகு ஒரு
மடச்சாம்பிராணி! இனி அவன் கல்யாணம் முடியும்வரை, மீராவிடம் பேசவே மாட்டான். நாம
நேரத்தை வேஸ்ட் பண்ணாம, மீராவை காப்பாத்திடுவோம்." என்று கதிர் சொன்னதும்,
"சரி! மாமா எங்கே இருக்கார்?"
"கேன்டீன்ல"
"வெரிகுட்! நீ மாமாகிட்ட போயி,
'அப்பா நீங்க ஒத்துழச்சாதான் மீராவ காப்பாத்த முடியும்' னு ரகசிய குரலில் சொல்லிட்டு,
ஒரு பேப்பரை எடுத்து, 'தயவுசெய்து நான் சொல்லும்படி செய்யுங்கள். பதில் பேசவேண்டாம்!
பாத்ரூமிற்குச் சென்று இந்தப் பையில் இருக்கும் நைட்டியைப் போட்டுக்கொண்டு,
துண்டால் உடம்பை போர்த்தியவாறு, முகத்தையும் மூடிக்கொண்டு
மருத்துவமனையிலிருந்து வெளியேறி, அங்கே நிற்கும் ஆட்டோவில் சிபி இருப்பான். அதில்
ஏறிச் சென்று விடுங்கள்." என்று எழுதி ரூபாய் நோட்டுக்குள் வைத்துக்
கொடு...பார்த்து கவனமா செய்... நான் மிருத்திகா இருக்கும் வீட்டுக்கு பக்கத்துலதான்,
என் போலீஸ் நண்பனுடன் இருப்பேன். இங்க மாமா ஆட்டோல ஏறியதும் சிபி எனக்கு ஃபோன்
பண்ணி விடுவான். நான் என்னுடைய போலீஸ் நண்பனுடன் மீரா இருக்கும் வீட்டுக்குள்ள போயி
மிருத்திகாவ கூட்டிட்டு வந்துடுவேன்... அதுக்குள்ள அத்தை, மாமாவை தேடாதமாதிரி
பார்த்துக்க... கவனம் கதிர்... ஓகே யா?
"சரி! நான், நீங்க சொன்னபடி செஞ்சுட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்..." என்று
கூறி வைத்தவன், 'கடவுளே! இந்த திட்டம் வெற்றி பெற உதவுங்கள்! " என்று
கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்டு கேன்டீன் நோக்கி நடந்தான்...
மேகன் சொன்னது போலவே ஒரு பேப்பரை
எடுத்து, எழுதவேண்டியதை எழுதிக் கொண்டான். மற்றொரு பேப்பரை எடுத்து, "அப்பா
நீங்க ஒத்துழைத்தால் மட்டுமே மீராவை காப்பாற்ற முடியும்." என்று எழுதி,
ரூபாய் நோட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் அப்பாவிடம் சென்று, "அப்பா இந்த
ருபாய் நோட்டுக்குள் இருக்கும் பேப்பரை படிங்க... சந்தேகம் எதுவும் இருந்தா பேப்பர்ல
எழுதிக் கொடுங்க. தயவுசெஞ்சு பேசிடாதீங்க" என்று மிகவும் மெல்லிய குரலில்
கூறினான்.
அவனை ஒரு புருவ சுழிப்புடன் பார்த்து
விட்டு, கதிர் கொடுத்த ருபாயைப் பிரித்துப் படித்தார். ஒன்றும் பேசாமல் கதிரை ஒரு
பார்வை பார்த்தார்... பிறகு கதிரிடமிருந்த பையை, வாங்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி
நடந்தார்....
திட்டமிட்டபடி சிபி, ஒரு ஆட்டோவைப்
பிடித்து அதில் செண்பகத்தையும் ஏற்றிக்கொண்டு, பாலசௌந்தரியை அட்மிட் செய்திருந்த
மருத்துவமனை வாசலுக்கருகில் காத்திருந்தான்...
சிபியிடம், மேகன் முன்கூட்டியே , மிருத்திகாவின்
அப்பாவை, செண்பகத்துடன், அவள் வீட்டில் விட்டுவிட்டு, பின் சிபியை, மேகன்
வீட்டிற்குச் செல்ல சொல்லியிருந்தான். அதனால் மிருத்திகாவின் அப்பா வருகைக்காக
ஆட்டோவில் காத்திருந்தனர் சிபியும், செண்பகமும்...
அதே போல், மேகனும் போலீஸ் நண்பரும்
மிருத்திகா இருக்கும் வீட்டிற்கு அடுத்த சந்திலுள்ள, ‘நினைத்தால் போதும் வருவேன்’
கதையின் நாயகி வீட்டில் இருந்தபடி, சிபி மற்றும் கதிரின் ஃபோனுக்காகக்
காத்திருந்தனர்.
கூடுதலாக ஒரு வாரம் அந்த வீட்டை
வாடகைக்கு எடுத்திருந்தார் ஐ.பி.எஸ் ஆபிசர் சண்முகவேல்... ஏனென்றால் மிருத்திகாவைக்
கூட்டிவந்த பிறகு, பிரச்சனை முடியும்வரை மிருத்திகா தங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பான
இடம் ஐ.பி.எஸ் ஆஃபீஸர் வீடுதான். என்று மேகன் கேட்டுக்கொண்டான். அதன்படி எல்லாம்
செய்தார் சரவணவேல் ஐ.பி.எஸ்... (வேற என்ன பண்றது? மிருத்திகா பத்திரமாக மேகனிடம்
வந்து சேர்ந்தால்தானே, நம் சகோதர, சகோதரிகள் சண்முகவேல் ஐ.பி.எஸ் ஐயும், அந்த
ஹீரோயினையும் ஆர்வத்துடன் கவனிப்பார்கள்!)
சிறிது நேரத்திலேயே அப்பா! நைட்டியுடன் முகத்தைத் துண்டால் மறைத்தபடி
பாத்ரூமிலிருந்து வெளியே வர, அவர் கையைப் பிடித்து வாசலை நோக்கி நடந்தான் கதிர்.
அவன் பின்னால் ஒரு பெண் குரல் "அண்ணே! அண்ணே!" என்று அழைப்பது கேட்டு,
'ஆகா நர்ஸா இருக்குமோ' என்று நினைத்து திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தான். அப்பா,
அவர் கையை உதற, 'இவர் நர்ஸ்க்கெல்லாம் பயப்படுவார். ..' என்று நினைத்து வாசலைப்
பார்த்தபடி, அவனுடைய அப்பாவின் காதருகில்,
"கவனிக்காம வாங்கப்பா!" என்றான்.
"யாரு நீங்க? ஏன் இழுத்துக் கிட்டு போறீங்க?"
என்று கேட்டது பின்னாலிருந்து வந்த நர்ஸ்... அதேநேரம் நித்யா கதிருக்கு முன்னால்
வந்து நின்று முறைக்க,
"இவ வேற நேரங்காலம் தெரியாம' என்று நித்யாவை விளக்கிக் கொண்டு கதிர் நடக்க,
"எவ்வளவு தைரியமிருந்தால்! என் முன்னாடியே ஒரு பொண்ண இழுத்துக்கிட்டு
ஓடுவீங்க. " என்று நித்யா கோபப்பட,
"ஐயோ! கொஞ்சம் பொறுத்துக்க! கத்தி ஊரை கூட்டிடாத... நான்
அவசரமா..."என்று சொல்லும்போதே
"அடப்பாவி! நான் ஏன் பொறுத்துக்கனும்?" என்று கேட்டபடி கதிரிடமிருந்து,
அப்பாவின் கையை வெடுக்கென்று பறித்து,
"யார்டி நீ! ஆஸ்பத்திரில வந்து அசிங்கம் பண்ற?" என்று கேட்க,
'இவ எல்லாத்தையும் கெடுத்துடுவா
போலிருக்கே! இவளுக்கு மட்டும் தெரியும்படி, அப்பாவை முகத்தை காட்டச் சொல்லாம்'
என்று நினைத்து திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்! !
அவனுக்கருகில் நின்றது அப்பா இல்லை!! ஒரு
பெண்!!
"யாரும்மா நீ?" என்று கதிர் அதிர்ச்சி விலகாமல் கேட்க,
"நீ தான் என் கையை புடிச்சு இழுத்துட்டு வந்துட்டு, பொண்டாட்டிய பாத்ததும்,
நல்லவன் மாதிரி என்னை யார்னு கேக்கிறாயா?" என்று
அந்தப் பெண் எகிற
'இங்கே என்ன நடக்குது?' என்று பேந்த பேந்த முழித்த கதிரை இழுத்துக் கொண்டு நித்யா
மருத்துவமனையின் வாசலுக்கு வர, அங்கே சிபி அருகில் அமர்ந்தபடி, அப்பா கையை ஆட்டி
டாட்டா காட்டி விட்டதும் ஆட்டோ பறந்தது....
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
❤❤❤❤❤❤
1 Comments
Adei kathir unaku 😂😂😂செருப்பு அடி confirm😂😂😂
ReplyDelete