சிம்டாங்காரன்: அத்தியாயம் -37

 

37

காதலுக்குத் தூது செல்ல

கடவுளின் பிம்பமாய்

குழந்தையே தூதானால்

குறையொன்றிருக்குமோ?

🌹🌹🌹🌹🌹🌹

 

தீபிகாவுக்கு ரஞ்சனியிடமிருந்து ஃபோன் வந்தது.

 

"நீ மேம் ஐ பார்க்க வரலாம்னு சொல்லிட்டாங்க தீபி. நீ ரெடியாகிவிட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் வந்து கூட்டிட்டு வரேன்." என்று கூறினாள்.

 

"ரொம்ப உஷாரா இருக்கானுங்க மேகா... வீட்டு பெரியவங்கள கூட, கூட்டிட்டு வர விடமாட்டேன்றானுங்க பாரேன்." என்றான் சிபி.

 

"ம்ம்... சரி தீபியை ரெடி பண்ணி அனுப்பிட்டு நீ எங்க வீட்டுக்கு வந்துடு." என்றான் மேகன்.

 

தீபிகாவை அனுப்பிவிட்டு வந்த சிபியின் மனம் தத்தளித்தது.... அவள் சென்று பதினைந்து நிமிடங்கள் ஆகிறது. இன்னும் போலீஸ்காரர்களிடமிருந்து ஃபோன் வரவில்லை... சிபிக்கு மட்டுமல்ல மேகன் வீட்டினர் அனைவருக்குமே பதட்டம் அதிகரித்தது.

 

சிறிது நேரத்தில் ஃபோன் வர, தீபிகா இருக்குமிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே வண்டி எடுத்துக் கொண்டு சிபியும், மேகனும் பறந்தனர்.

 

ஏற்கெனவே சொல்லி வைத்ததைப்போல், தீபி சென்று இருக்கும் வீட்டுக்கு, இரண்டு தெரு தள்ளியிருந்த தெருவிற்குள். மேகனும், சிபியும் சென்றனர். அந்தப் பகுதியில் எல்லா சந்துகளுமே குட்டிக் குட்டியாக இருக்கவே,

 

"இந்தச் சின்ன சந்தில் சும்மா சுத்திவர முடியாது சிபி... சந்தேகம் வந்துவிடும்.. உனக்கு இந்த ஏரியாவுல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?"

 

"இந்த ஊரில் எனக்கு யாரடாத் தெரியும்? "

 

"ஓகே! குத்து மதிப்பா ஏதாவது ஒரு வீட்டிற்குள் போயி, மிருத்திகாவைத் தேடுவதுபோல நடித்து, நேரத்தைக் கடத்துவோம் வா!" என்று மேகன் கூறிவிட்டு, அருகில் இருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.

 

கதவு திறந்தது. அழகான ஒரு பெண் நின்றிருந்தாள். இரு நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 'என்ன அழகுடா யப்பா!!"

 


"வாங்க மேகன்! உள்ள வாங்க!" என்று அழைத்தாள் அந்தப் பெண்.

 

ஏற்கனவே அவள் அழகில் அதிர்ச்சியான நண்பர்கள் மேலும் அதிர்ச்சியானார்கள். .

 

'இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும்?' என்று மேகனும்,

 

'ஊர்ல இருக்கிற எல்லா அழகான பொண்ணுங்களுக்கும் இவனை தெரிஞ்சு வச்சிருக்கு' என்று சற்றே பொறாமையுடன் சிபியும்.

 

இதுவரை அந்தப் பெண்ணை எங்கும் பார்த்ததாக ஞாபகமே இல்லை மேகனுக்கு. இருப்பினும் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து வீட்டினுள் சென்றான். அவனைத் தொடர்ந்து வந்த சிபி,

 

"யார்டா இந்தப் பொண்ணு? இவ்வளவு அழகா இருக்கா? " என்று மேகனின் காதில் கிசுகிசுத்தான் சிபி.

 

"தெரியலை." என்று மேகன் கூறியதும் அதிர்ச்சியுடன் சிபி நின்றுவிட்டான். சிபி நின்றுவிட்டதைப் பார்த்த அந்தப் பெண் ஹாலில் இருந்த ஷோபாவில் அமரச் சொன்னாள். மேகன் அமர்ந்து விட்டான். ஆனால் சிபி யோசனையாக அந்தப் பெண்ணையும், மேகனையும் மாற்றி மாற்றிப் பார்த்தான்.

 

"இன்னொரு அத்தை பெண்ணா? !! உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா மேகா!' என்று நினைத்தான் சிபி.

 


"உட்காருங்க." என்றாள் அந்தப் பெண்.

 

"ஆமா! நீங்க யாரு?" என்று கேட்டான் சிபி.

 

"நான் யாருன்னு உங்களுக்கு மட்டுமில்லை. இப்ப இதை படிச்சுக்கிட்டிருக்கிற இவங்களுக்குக் கூட நான் யாருன்னு தெரியாது. மேகன், மிருத்திகாவைக் காப்பாத்தினாதான் என் மேல் எல்லோருக்கும் பிரியம் வரும்... அப்பொழுதுதான் என்னைத் திரும்பியே பார்ப்பார்கள்... அதனாலதான் தீபிகா, மிருத்திகாவைப் பார்த்துட்டு வரும் வரை, நீங்க இருப்பதற்காக சரவணவேல்தான் இந்த வீட்டை , இன்று ஒரு நாள் வாடகைக்கு எடுத்துருக்கார்."

 

"ஏம்மா நீயே யாருன்னே தெரியல... இதுல சரவணவேல் யாரு?"

 

"அவர் ஐ.பி.எஸ் ஆஃபீஸர்..."

 

"புரியல"

 

"மேகன்! இவர எங்க புடிச்சீங்க?"

 

"பார்த்த பத்து நிமிஷத்துல இப்படி கரெக்ட்டா கேட்டுட்டீங்க?" என்று மேகனும் கலாய்த்தான்.

 

"டேய்! யாருன்னே தெரியாதவங்க வீட்ல அசால்டா உட்கார்ந்து என்னை கலாய்ச்சுக்கிட்டிருக்க.."

 

"நீ இவங்கள பேசவிட்டா இன்னேரம் இவங்க யாருன்னு சொல்லியிருப்பாங்க..." என்றான் மேகன்.

 

"கரெக்ட்டா சொல்லிட்டீங்க மேகன்.. என் பேரு. .."என்று அந்தப் பெண் சொல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் மேகனுக்கு ஃபோன் வந்தது. தீபிகா வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்னு போலீஸ் கான்ஸ்டபிள் கூறினார். சட்டென்று எழுந்து,

 

"வா! சிபி.. தீபி கிளம்பிட்டாளாம்." என்று கூறிய மேகன், அந்தப் பெண்ணிடம் திரும்பி,

 

"தேங்க் யூ!" என்றான்.

 

"சரி வா!" என்று கிளம்பிய சிபி, "மேம் உங்களை அப்புறம் வந்து பார்க்கிறோம்." என்றான்.

 

"ம்ம்ம்! நினைத்தால் போதும் வருவேன்!"

 

" இது அடுத்த கதையோட தலைப்பாச்சே!" என்று கூறியபடி வாசலை நோக்கி நடந்தான்.

 

"அதுல வர்ற ஹீரோயின்தான் நான்!"

 

"அப்படியா?!!" என்று மேகனின் பைக்கில் ஏறிய சிபி..

 

"டேய் அந்த பொண்ணு என்ன சொன்னா கேட்டியா?" என்று கேட்பதற்குள் வண்டி தெருவைத் தாண்டி ஓடிக் கொண்டிந்தது.

 

மேகன் வீட்டை அடைந்ததும். வீட்டிற்குள் சென்று, சிபியின் அண்ணிக்கு ஃபோன் பண்ணினார்கள். தீபிகா வீட்டுக்கு வந்ததும் ஃபோன் பண்ணச்சொல்லிவிட்டு ஃபோனை கட் பண்ணினான் சிபி. சிறிது நேரத்தில் சிபியின் அண்ணி ஃபோன் செய்து, தீபிகா வீட்டிற்கு வந்த விபரத்தைச் சொல்ல, சிபி சென்று தீபிகாவை மேகன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

 

"மிருத்திகாவைப் பார்த்தாயா தீபி?" என்று தீபிகா வண்டியை விட்டு இறங்கும் முன் கேட்டான் மேகன்.

 

"ம்ம் பார்த்தேன் மாமா" என்று தீபிகா கூறினாள்.

 

"வீட்டுக்குள்ள போயி பேசிக்கலாம் உள்ள வாங்க!" என்று தாத்தா அழைக்கவே, வீட்டிற்குள் சென்றனர். தயாராக வைத்திருந்த ஜூஸை ஆச்சி கொடுக்க, தீபிகா குடித்து முடிக்கும் வரை காத்திருந்தனர். அவ்வளவுநேரம் பொறுத்திருந்த மேகனுக்கு, தீபிகா ஜூஸ் குடிக்கும் நேரம் நீண்டுகொண்டே இருப்பதைப் போல் தோன்ற, 'நீங்க தான் ஜூஸ் கொடுத்ததா?' என்பதைப் போல ஒரு பார்வை பார்த்தான் ஆச்சியை

 

"மிருத்திகா எப்படி இருக்கா?" என்று தீபிகா ஜூஸ் டம்ளரைக் கீழே வைக்கும் போதே கேட்டான்.

 

"பார்க்க நல்லாதான் இருக்காங்க... கட்டிப்போடலை. .. ரூமுக்குள் வைத்து பூட்டலை மாமா."

 


 

"ஏன் தீபி இப்படி சொல்ற?" என்று ஆச்சி கவலையுடன் கேட்க,

 

"நான் அப்படி எதிர்பார்த்துதான் போனேன் ஆச்சி!"

 

"அவ உங்கூட சகஜமா பேசினாளா? ப்ரேஸ்லெட் டை பார்த்தாளா?" என்று மேகன் மீண்டும் கேட்க,

 

"கொஞ்சம் அமைதியா இரு மேகா." என்று மேகனிடம் கூறிவிட்டு, "நீ போனதிலிருந்து என்ன நடந்துச்சு சொல்லுமா." என்று தீபிகாவிடம் கேட்டார் பிறைசூடன்.

 

"நான் போனதும் மேம் இருந்த அறைக்கு கூட்டிட்டு போனாங்க." என்று நடந்ததை அப்படியே விவரிக்க ஆரம்பித்தாள் தீபிகா.

 

மிருத்திகா, தீபிகாவை அமைதியாக கண்ணுக்குள் பார்த்தாள். அதே நேரத்தில் திபிகாவும் மிருத்திகாவை கூர்ந்து கவனிக்க, தீபிகாவின் ஆராயும் பார்வை, மிருத்திகாவிற்கு மேகன் சொல்லித்தான் தீபிகா வந்திருக்கிறாள் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.

 

"வா! தீபிகா! உன்னால கல்யாணத்துக்கு வர முடியாதாமே ரஞ்சனி சொன்னா..." என்று சகஜமாக பேச்சை ஆரம்பித்தாள் மிருத்திகா.

 

மிருத்திகா சிரித்தபடி சகஜமாக பேசுவதைக்கண்ட தீபிகாவிற்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிய...

 

"ஏன் இந்தப் பொண்ணு இப்படி முழிக்கிறா?" என்று ரஞ்சனியின் அம்மா கேட்டதும்தான் தீபிகா உஷாரானாள்.

 

"இல்லை! . எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமான்னு யோசிக்கறேம்மா." என்றாள்

 

"அப்படி என்ன சந்தேகம் உனக்கு?"

 

"அது! அது..." என்று மீண்டும் மிருத்திகாவைப் பார்த்தாள் தீபிகா.

 

மிருத்திகாவிற்கு 'இவள் எதையோ உளறி கொட்டப் போகிறாள்' என்று பயத்தில் தொண்டை அடைக்க, தீபிகாவைத் தடுக்கும் வழிதெரியாமலும், முகத்தை சாதாரணமாக வைத்திருக்கவும் பெரும்பாடு பட்டுவிட்டாள்.

 

'இவளை நம்பியிருக்கக் கூடாதோ? இவள் மேகன் மேல் பிரியம் வைத்திருந்தாளே! கடவுளே! இருக்கும் ஒருவழியும் அடைபட்டுவிட்டதா?' என்று பலவிதமான பயம் நெஞ்சில் ஓட, அது முகத்தில் தெரியாதவாறு இருக்க மிகவும் கஷ்டமாகயிருந்தது... ஒரு நிமிடத்தில் உலகின் கடைசி நிமிடம் வரை சென்று வந்தது மிருத்திகாவின் மனது .

 


 

'இவள் ஏன் வந்தாள்? காப்பாற்றவா? காட்டிக்கொடுக்கவா?' என்று மிருத்திகா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே...

 

"கல்யாணத்துக்குப் பிறகு ஸ்கூலுக்கு வருவாங்களா?" என்று கூறிவிட்டு தீபிகா பயந்ததைப் போல ஒரு நடிப்பை போட்டாள் பாருங்க... ‘ஆஸ்கர் அவார்டு வாங்க வேண்டியவள்’ என்று தோன்றும். அதைப் பார்த்த மிருத்திகாவிற்கு கண்ணீரே வந்துவிட்டது.

 

"இதுக்குத் தான் இந்த முழி முழிச்சியா? சின்னப்பிள்ளைகள்ன்றது சரியாதானிருக்கு. " என்று கூறி விட்டு, சிரித்தபடியே அறையைவிட்டு வெளியேறினார் ரஞ்சனியின் அம்மா!

 

'மேம் என் கையில் இருக்கும் ப்ரேஸ்லெட்டைப் பார்க்கவில்லை போலிருக்கே? முகத்தில் ஒரு மாறுதலையும் காணோம்?' என்று நினைத்த தீபிகா . சட்டென்று

 

"குட் மார்னிங் மேம்" என்று சல்யுட் அடிக்க, மிருத்திகா ப்ரேஸ்லெட்டைப் பார்த்து விட்டாள். அதற்காகத்தான் தீபி விஷ் பண்ணுகிறாள் என்றும் புரிய கண்களில் மட்டும் சிரிப்பைக் காண்பித்தாள் மிருத்திகா.

 

பிறகு அனைவரும் சேர்ந்து வெட்டி அரட்டை அடிக்க, இரண்டு மூன்று முறை வந்து கவனித்த ரஞ்சனியின் அம்மாவிற்கு துளிகூட சந்தேகம் இல்லாமல் போனது.. அதற்காகவே தீபிகா, மிருத்திகா அருகில் உட்காராமல் சற்று தள்ளி தோழிகளுடன் அமர்ந்து இருந்தாள். ப்ரேஸ்லெட்டை மட்டும் காட்டாமல் இருந்திருந்தால், மிருத்திகாவிற்கே 'தீபி வந்தது மேகனுக்குத் தெரியாது' என்றே முடிவெடுத்திருப்பாள்... அந்த அளவு அந்நிய முகபாவனையில் இருந்தாள் தீபிகா..

 

"ஓகே போதும் புறப்படுவோம்" என்று தோழிகள் கூறிவிட்டு, ஒவ்வொரு தோழியாக தனியாக சென்று, கிஃப்ட் கொடுத்து, பேசிவிட்டு விடைபெற, மிருத்திகாவை நெருங்க நெருங்க மிருத்திகாவின் கண்களை அடிக்கடி அர்த்தமுள்ள பார்வை பார்த்தாள் தீபிகா.

 

"வாழ்த்துக்கள் மேம்! கல்யாணம் முடிந்தபிறகு ஒருமுறை வருகிறேன்.." என்று தீபி முடிக்கும்முன் அவளின் கண்களைப் பார்த்து,

"அழகுதான் ... எப்ப வேணும்னாலும் வா! உனக்காக நான் காத்திருப்பேன்... அப்பாவ பத்திரமா பார்த்துக்க... அவர் நல்லா இருந்தாதான் மகள் நல்லா இருக்கமுடியும். முதல்ல அப்பாவ பிரச்சினைகளிலிருந்து வெளியே கொண்டு வா! நம் ஆதிமுதல் இந்த நிமிடம் வரை அந்த அகிலாண்டேஸ்வரி நடத்துவது... எல்லாம் சரியாகிவிடும்.. கிளம்பு." என்றாள்

 

"உங்கப்பாவுக்கு என்ன?" என்று மற்றொரு தோழி கேட்க,

 

"உடம்பு சரியில்லை!" என்று கூறி விட்டு வெளியேறினாள்.

 

அவளை நெருங்கி, கண்கள் கலங்க, "நீ பெரியவளா இருந்தா உன் காலிலேயே விழுந்திருப்பேன்... என் மிருத்திகாவை காப்பாற்ற வழிகொடுத்தாய்... நீ என் தெய்வத்திற்கு சமம்.. நீ என்ன வேண்டுமோ கேள்! என் உயிர் இருக்கும் வரை நீ கேட்கும் அனைத்தையும் உனக்குத் தருவேன்" என்றான் மேகன் உணர்ச்சியின் வேகத்தில்...

 

"டேய் யார்ட்ட போயி என்ன வாக்கு குடுக்குற?" என்று கலாய்த்தான் பிரச்சனை முடிந்து விட்ட சந்தோஷத்தில் சிபி...

 

"முதல்ல மிருத்திகாவை எப்ப கூப்பிட்டு வர போறீங்க?" என்று கேட்டார் ஷோபனா.

 

"தீபியிடம் மிருத்திகா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சொல்லப்பட்டதும்மா... அவள், "அழகுதான்" என்றது, அழகு தான் மாப்பிள்ளைன்னு அர்த்தம்... அடுத்து "எப்பொழுது வேண்டுமானாலும் வந்து அழைத்துச் செல்" அப்படின்னு சொல்லியிருக்கா. அடுத்துதான் புரியவில்லை.. அப்பாவைப் பத்திரமா பாத்துக்கிற சொல்றா... அவர் நல்லா இருந்தாதான் அவளை வெளியே கூட்டிட்டு வர முடியும் என்கிறாள்... அவ அப்பா நல்லாதானே இருக்கார்? அவருக்கு எனன? கதிரையும், விக்னேஷையும் வரச்சொல்லிக் கேட்கனும். .. அடுத்தது, இவை அனைத்தையும் செய்பவள் அகிலாண்டேஸ்வரி என்று ஈஸ்வரியைச் சொல்கிறாளா? ... அவ ஏன் இப்படி பண்றா? அவ நல்லவன்னு கதிர் சொன்னான்!" என்று கூறி விட்டு கதிருக்கு ஃபோன் பண்ணி,

 


அகிலாண்டேஸ்வரி என்ற ஈஸ்வரி

"கதிர்! யாரிடமும் சொல்லாம வீட்டுக்கு நீயும், விக்னேஷும் வாங்க... மாமா எப்படி இருக்கார்?" என்று கேட்டான்.

 

"அவர் மனசளவுல உடைஞ்சிட்டார்... அன்னைக்கு பார்த்தீங்கள்ல? அப்படியேதானிருக்கார்."

 

"சரி! அங்கிருந்து எதுவும் பேச வேண்டாம் வா!"

 

"மீரா எங்கே இருக்கான்னு ஏதாவது தெரிஞ்சதா?"

 

"அதுக்குத் தான் வரச் சொல்றேன் பேசிக்கிட்டிருக்காம வா!" என்றான் பொறுமை இழந்து...

 

மிருத்திகா என்ன சொல்லி அனுப்பினாள்? சரியாகப் புரிந்து கொண்டானா மேகன்?!!

 

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். . .

 

❤❤❤❤❤❤❤

Post a Comment

1 Comments