36
🌹🌹🌹🌹🌹🌹
தீபிகா, அவளுடைய கிளாஸ் மேம் மிருத்திகா
கல்யாணத்திற்கு, புது டிரஸ் கேட்டு அவள் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்...
மிருத்திகாவைத் தேடுவதற்காக வெளியே
கிளம்பிய சிபிக்கும், மேகனுக்கும் தீபிகா கூறியது காதில் விழ, சிலையாக நின்றனர்.
பின் வேகமாக வீட்டிற்குள் வந்து, தீபிகாவிடம்,
"மிருத்திகாவிற்கு கல்யாணமா? உனக்கு
எப்படித் தெரியும்? மிருத்திகா எங்கே இருக்கிறாள்?" என்று மேகன் அடுத்தடுத்து
கேட்டுக்கொணடே போக,
"சித்தப்பா அலறுவாருன்னு
நினைச்சேன். நீங்களுமா மாமா?"
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா ப்ளீஸ்!"
என்று மேகன் தீபிகாவிடம் கெஞ்ச,
"அப்போ கல்யாணத்துக்கு புது டிரஸ்
வாங்கித்தரச் சொல்லுங்க அம்மாவை."
"நானே வாங்கித்தரேன், முதல்ல பதில்
சொல்றியா?" என்றான் மேகன் பொறுமை இழந்து.
'மாமா ஏன் இவ்வளவு பதட்டப்படுறாங்க?'
என்று யோசித்தபடி பார்த்தாள் தீபிகா..
"தீபி அவன் கேட்டுக்கிட்டு
இருக்கான். நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க?" என்று சிபி சற்று அதட்டவும்,
"ஹும்!" என்று சிபியிடம் தலையை
சிலுப்பி விட்டு, மேகனைப் பார்த்தவள்,
"மிருத்திகா மேம் க்குத்தான்
கல்யாணம் மாமா."
"உனக்கு யார் சொன்னா?"
"என் கிளாஸ் மெட் ரஞ்சனியின்
சித்தப்பாவைத்தான் எங்க மேம் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க..."
"எங்க? எப்ப கல்யாணம்?"
"இன்னும் மூன்று நாள்தான் இருக்கு,
ஞாயித்துக்கிழமை கல்யாணம். ரஞ்சனி வீட்லதான் கல்யாணம்.. யாருக்குமே சொல்லலையாம்.
ஸ்கூல்லயும் யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னா ரஞ்சனி. லவ் மேரேஜ். மேம்
வீட்ல ஒத்துக்க மாட்டேன்னுட்டாங்களாம். அதனால யார்ட்டயும் சொல்லாம ரகசியமா
கல்யாணம் பண்றாங்க... என்னை எங்க மேம் க்கு ரொம்பப் பிடிக்கும்ல? அதான் என்னையும்
என் தோழிகளையும் மட்டும் கூட்டிட்டு வா ன்னு மேம், ரஞ்சனி வீட்டுக்குக் கூட
தெரியாம, ரஞ்சனிகிட்ட கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்களாம். அதனால ரஞ்சனி, 'என்
ஃபிரண்ட்ஸ் ஐ மட்டும் ரகசியமா கூட்டிட்டு வர்றேன்னு ' அவங்க வீட்ல அனுமதி
வாங்கியிருக்கா. அதான் யாருக்கும் தெரியாம நாங்க கல்யாணத்துக்கு
போகப்போறோம்." என்றாள் தீபிகா.
ஒருவித அதிர்ச்சியில் இருந்ததால், தீபிகா
சொன்ன வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை மனதில் ஓடவிட்ட மேகனுக்கு, மிருத்திகாவின்
எண்ணம் நன்றாகப் புரிந்தது. 'தீபிகாவை கல்யாணத்திற்கு வரச்சொன்னா, அந்த விசயம்
சிபிக்குத் தெரிஞ்சு, மிருத்திகாவை மீட்டு கூட்டிவந்துடுவோம்னு நினைச்சுத்தான்
மிருத்திகா, தீபிகாவை கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கா,’ என்பது
தெளிவாக. அவள் என்ன நிலையில் இருக்கிறாளோ? என்று தோன்றியதுமே தீபிகாவிடம்,
"ரஞ்சனி சித்தப்பா யாரு? அவர் எங்க
இருக்கார்?"
"ரஞ்சனியோட சித்தப்பா, தாத்தா,
அப்பத்தா எல்லோரும் வந்தவாசிங்கிற ஊர்ல இருக்காங்க."
'வந்தவாசியா? அது அழகு இருக்கும்
ஊராச்சே... அவ அங்கே இருந்தால் நாங்க ஆட்டோல போய்த் தேடும்போது ஏன் வரல? அவளை
கட்டிபோட்டா வச்சிருப்பாங்க?' என்று நினைத்த மேகன்,
"ரஞ்சனி சித்தப்பா பேரென்னடா?"
"தெரியலையே!"
"கல்யாணத்துக்கு வந்தவாசிக்கா
போற?"
"இல்லை மாமா! கல்யாணம் இந்த ஊர்ல
தான்."
"உங்க மேம் எங்க இருக்காங்க?"
"தெரியல."
"ஞாயித்துக்கிழமையா கல்யாணம்?"
"ஆமா!"
" உங்கிட்ட ரஞ்சனி வீட்டு ஃபோன்
நம்பர் இருக்கா?"
"இருக்கே! ஏன் மாமா நீங்களும்
கல்யாணத்துக்கு வர்றீங்களா? யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னும், யாரையும்
கூட்டிட்டு வரக்கூடாதுன்னும் ரஞ்சனி சொல்லியிருக்கா மாமா."
'என்ன ஒரு திட்டம்?' என்று நினைத்தவன்
சிபியிடம்,
"மிருத்திகா, நமக்கு விஷயத்தை
தீபிகா மூலமா தெரியப்படுத்தியிருக்கா சிபி"
"எனக்கும் புரியுது... இனி என்ன?
நேரா போயிடுவோம்."
"எங்கே போகப்போறோம்? ரஞ்சனி
வீட்டுக்கா?"
"ஆமா!"
" என்ன சிபி! அவனுங்களைப் பத்தி
தெரிஞ்சிருந்தும் இப்படி பேசுற? இது அந்த அழகு வேலைதான் சிபி... முதல்ல மிருத்திகா,
எங்கே? என்ன நிலையில் இருக்கான்னு தெரிஞ்சுக்குவோம். நீயே யோசி! இந்த நிமிசம்வரை மிருத்திகா இருக்கும்
இடத்திலிருந்து அழகுக்கு ஒரு ஃபோன் கூட வரல... அவனும் போய் பாக்கலைன்னா என்ன
அர்த்தம்? அவனுக்கு ரொம்ப நம்பகமான இடத்ததுல மிருத்திகா இருக்கா. பக்காவா திட்டம் போட்டிருக்கானுங்க சிபி... இப்ப நாம ரஞ்சனி
வீட்டுக்குப் போனா, அழகு கிட்ட , 'நமக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு'ன்னு சொல்லிடுவாங்க...
அப்புறம் அவன் திட்டத்தை மாத்திடுவான்... மறுபடியும் நமக்குத்தான் கஷ்டம். நம்மால்
மிருத்திகாவை கண்டு பிடிக்க முடியவில்லைன்னு அவன்
நினைக்கட்டும். அப்பதான் அவன் அசால்டா இருப்பான்... நாம ஏதாவது செஞ்சு
மிருத்திகாவை காப்பாத்திடலாம். என்ன?" என்று கேட்டான்.
மேகன் சொன்னது தான் சரியென்று பட, சிபி
"ஆமா!" தலையாட்டினான்.
மேகன் அங்கும் இங்கும் யோசித்தபடி
நடந்தான். அவன் டென்சனாக இருப்பதைப் பார்த்த தீபிகா சிபியிடம்,
"மாமாவுக்கு என்ன ஆச்சு சித்தப்பா?
என்னென்னவோ சொல்றாங்க.. எனக்கு ஒன்னும் புரியலயே?" என்று தீபிகா கேட்க, சிபி
தீபிகாவிடமும் அருகில் நின்றிருந்த அண்ணியிடமும், மேகன், மிருத்திகாவைப் பார்த்தது
முதல் அனைத்தையும் சொன்னான்.
"அடக்கடவுளே என்ன பண்றது
இப்ப?" என்று அண்ணி கேட்டாள்.
"தீபி நினைச்சா, மிருத்திகாவை
காப்பாத்தும் வழி நமக்குக் கிடைக்கும்." என்று கூறி விட்டு மற்ற மூவரையும்
பார்த்தான் மேகன்.
"இவளால என்ன பண்ண முடியும் தம்பி?
சின்...ன பொண்ணு இவ... அவனுங்க பொல்லாதவங்களா இருக்காங்களே?" என்று அண்ணி
பயப்பட,
மேகன் தீபிகாவைப் பார்த்து, "மாமா
இருக்கேன்.... உனக்குக் கஷ்டம் வர விடமாட்டேன் நம்பு தீபி,"
"சொல்லுங்க மாமா! நான் என்ன
பண்ணட்டும்?" என்றாள் தைரியமாக.
"ரஞ்சனிகிட்ட ஃபோன் பண்ணி,
வெள்ளிக்கிழமை இரவே நாங்க மதுரைக்கு போறோம். என்னால மேம் கல்யாணத்துக்கு வர
முடியாது... அதனால, நாளைக்கே மேம் கிட்ட கிஃப்ட் டை கொடுத்துட்டு போயிடுறேன்னு
சொல்லு. அவளை எப்படியாவது மிருத்திகாகிட்ட உன்னை கூட்டிட்டுப் போக வை. அடுத்து
என்ன செய்யலாம்னு அப்புறம் சொல்றேன்." என்று கூறி தீபிகாவைப் பார்த்தான்.
"சரிங்க மாமா!" என்று கூறி
விட்டு ரஞ்சனி வீட்டுக்கு ஃபோன் பண்ணி ரஞ்சனியிடம் பேசினாள். பிறகு ஃபோனை வைத்து
விட்டு,
"அவ அம்மாகிட்ட பேசிவிட்டு சொல்றாளாம்
மாமா!"
"தம்பி இவ மாட்டிக்க
மாட்டாளா?" என்று அண்ணி கேட்டாள்.
"தீபி எதுவும் செய்ய வேண்டாம்
அண்ணி. ஒரு கிஃப்ட் எடுத்துக்கிட்டு மிருத்திகாவை போய் பார்க்கட்டும். எதுவுமே
தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம். மிருத்திகா எப்படி இருக்கா? என்ன பேசுனாங்கிறதை
மட்டும் கேட்டுட்டு வரட்டும். பதில் கூட சொல்லவேண்டாம். நான் எனக்குத் தெரிஞ்ச போலீசை
தீபிக்குப் பாதுகாப்பா அனுப்பி வைப்பேன் பயப்பட வேண்டாம் அண்ணி!" என்று
அண்ணியிடம் சொல்லிவிட்டு தீபிகாவைப் பார்த்து,
"என்ன தீபி? பயப்படாம செஞ்சுடுவேல?"
என்று கேட்டான்.
"ம்ம்ம்!" என்றாள் தீபிகா.
"தீபியை பின்தொடர்ந்து போயி, நம்ம
ரெண்டு பேரும் மிருத்திகாவை கூட்டிட்டு வந்துடலாமே மேகன்?" என்றான் சிபி.
அவனுக்கும் தீபிகாவைத் தனியே அனுப்ப உதறலாகத்தான் இருந்தது.
"எனக்கு உன் பயம் புரியாமலில்லை
சிபி! ஆனா, நான் என்ன பண்றேன்னு நிச்சயமா அழகு கண்கானிச்சுக்கிட்டு தான்
இருப்பான். அதாவது என்னை, யாராவது பின்தொடரலாம்.
மே பி... மிருத்திகா அம்மாதான்
என்னைப்பற்றிய விபரங்களை அழகு குடும்பத்துக்கு கொடுத்திருப்பாங்க . .. மிருத்திகா
அம்மாவுக்கு உன் சம்மந்தப்பட்ட யாரையும் தெரியாது... அதனால், 'தீபிகா யார்?' என்றே
அழகுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... ஆனா நாம தீபியைப் பின் தொடர்ந்து போனா
அழகு உஷார் ஆயிடுவான். முதல்ல மிருத்திகா எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்குவோம். தீபிக்கும்
பிரச்சனை ஆகிவிடக்கூடாது. தீபியிடம் நிச்சயம் மிருத்திகா ஏதாவது சொல்வாள். அதை
கேட்டுவிட்டு தீபி பத்திரமாக வீடு வரட்டும். தீபிக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசே
மஃப்டியில், தீபி செல்லும் வீட்டிற்கு அருகில் ஏதோ வேலை செய்வது போலதான் நிற்கப்
போகிறார்கள்... தீபி வரத் தாமதமானால் மட்டுமே வீட்டிக்குள்ள போவாங்க... தீபி அந்த
வீட்டிற்குள் போனதும் போலிஸ் நமக்கு அவள் இருக்கும் இடம் பற்றி ஃபோன்
பண்ணுவார்கள். அதன்பிறகே நாம் தீபி செல்லும் வழியில் போகாம, வேற வழியில்லை போயி,
தீபி செல்லும் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி, ஏதோ செய்தவாறு இருப்போம். 'தீபி
வெளியே வந்து விட்டாள்' என்ற தகவல் வந்த பிறகும் தீபியை போய் பார்க்காம, நாம என்
வீட்டுக்கு போயிடுவோம்... பிறகு நீ உன் வீட்டுக்கு போய்விடு. தீபி வீட்டுக்கு வந்த
பிறகு என்ன செய்யலாம்னு யோசிப்போம். மிருத்திகா இருக்குற இடம் தெரிஞ்சுட்டா
போதும்." என்றான் மேகன்.
மேகன் சொன்ன விபரங்களை மீண்டும்,
மீண்டும் அலசி ஆராய்ந்தார்கள். .. பிறகு தீபிகாவிடம் திரும்பத்திரும்ப என்ன
செய்யவேண்டும் என்று கூறினார்கள்...
"உணர்ச்சிவசப்பட்டு என் பெயரை
சொல்லிடாத தீபி! மிருத்திகா என்ன சொன்னாலும், தலையாட்டிவிடு. .. உனக்குப்
புரியலைனாலும் அவ பேசுறத மறக்காம கவனிச்சு கேட்டுவந்து சொல்லு... முகத்தில்
டென்ஷன் தெரியக்கூடாது. ம்ம்? மாமாவுக்காக இந்த பெரிய உதவி செய் தீபி."
என்றான் மேகன் கலக்கத்துடன்.
"உங்களுக்காக எதுவும் செய்வேன்
மாமா... அதோட எங்க மேம் ஐயும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... கவலைப்படாதீங்க.
நீங்களே அசந்து போற அளவுக்கு சக்ஸஸ் பண்ணிட்டு வர்றேன்."
"அப்புறம், நீ அங்க போறது எனக்குத்
தெரியும்னு மிருத்திகாவுக்கு மட்டும் புரியனும்." என்றவன் தன் கையில்
இருந்த ப்ரேஸ்லெட்டை தீபிகாவின் வலது கையில் மாட்டிவிட்டான். பிறகு தீபிகாவிடம்,
"நீ மிருத்திகாவைப் பார்த்ததும்
இந்த ப்ரேஸ்லெட் மாட்டியிருக்கும் வலது கையால் சல்யூட் அடித்து "குட்மார்னிங்
மேம் என்று கூறு. மிருத்திகா பார்வையில் இந்த ப்ரேஸ்லெட் பட்டுவிட்டால் போதும். நான்
அனுப்பித்தான் நீ போயிருக்கன்னு அவ புரிஞ்சுக்குவா. அப்புறம் அவள் பேசும் ஒவ்வொரு
வார்த்தையையும் கவனித்து வந்து சொல்லு ஓகேயா?" என்று இரண்டு மூன்று முறை
தீபிகாவிடம் கூறினான் மேகன்.
"போதும் மாமா எத்தனை தடவை சொல்வீங்க?
ஆமா? இந்த ப்ரேஸ்லெட்டைப் பார்த்தா வித்தியாசமா அழகா இருக்கே மாமா? எங்கே
வாங்கினீங்க?" என்று தீபிகா கேட்டதும்,
'எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன் இவ
என்ன கேக்றா பாரு! இவ இன்னும் வளரல. ... இந்தச் சிறு பெண்ணை நம்பி இவ்வளவு பெரிய
காரியத்தை ஒப்படைத்திருக்கிறேன். .. இது சரி வருமா?' என்று முதன்முதலாக சந்தேகம்
வந்தது மேகனுக்கு.
"என்ன மாமா நான் கேட்டதுக்கு
ஒன்னும் சொல்லலையே? இத எங்க வாங்கினீங்க?"
"இது வாங்கினது இல்லை தீபி செஞ்சது.
மிருத்திகா எனக்கு செஞ்சு கொடுத்தா. அதனால்தான் சொல்றேன் இதைப் பார்த்தா அவ
புரிஞ்சுக்குவா." என்றதும்
"அப்படியா? அப்ப ஓகே... மேம்
வந்ததும் இதே மாதிரி எனக்கு ஒன்னு செஞ்சு தரச் சொல்லுங்க மாமா!"
"சரி!"
ஒருவழியாக எல்லோருக்கும்
திருப்தியானதும், மேகனும், சிபியும் வீட்டிலிருந்து வெளியேறி மிருத்திகாவைத்
தேடுவதுபோல சுற்றிவந்து விட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.
தன் வீட்டிற்கு வந்ததும் இன்று நடந்த
அனைத்தையும் தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறினான்.
அனைவருக்குமே, 'தீபிகா சரியாக
செய்யவேண்டுமே!' என்று பயமாக இருந்தது.
பூஜை அறைக்குச் சென்று, 'எல்லாம் நல்ல
படியாக நடக்க வேண்டும்.' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு தன் அறைக்கு சென்றான்.
கையில் ப்ரேஸ்லெட் இல்லாதது ஒரு மாதிரி
இருக்க, தன் மணிக்கட்டை தடவிப் பார்த்தான். அவனுக்கு மிருத்திகா, அந்த ப்ரேஸ்லெட்டை
மாட்டிவிட்ட நாள்... கண்முன் வந்தது.
"கண்ணை மூடிக்கிட்டு, உங்க கையை
நீட்டுங்க. " என்று மேகனிடம் கூறினாள் மிருத்திகா.
அவள் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பை மீறிய
பிரகாசம் தெரிந்தது.
புருவத்தை சுருக்கி அவளைப் பார்த்தவன்,
"என்னடி பண்ண போற? என்னவோ முத்தம்
கொடுக்கப் போறவ மாதிரி கைய நீட்டுன்னு சொல்ற? கொடுக்கறதுன்னு முடிவுக்கு
வந்துட்டா, கையில எதுக்கு? என் முகத்தில் எத்தனை நல்ல இடம் இருக்கு, அங்க குடுக்க
வேண்டியது தானே?" என்று கூறி கண்களை மூடி, அவனுடைய முகத்தை மிருத்திகாவை
நோக்கிக் கொண்டு சென்றான்.
அவன் தலை முடியைக் கலைத்து விட்டு,
"ஆசையைப்பாரு!" என்றாள்.
"அப்போ... கையில்தான் முத்தம்
கொடுப்பாய் அப்படித்தானே?" என்றான் குறும்புமின்ன.
அவன் கண்களில் குறும்பைக் கண்டவளுக்கு,
'அவனை இழுத்து முத்தம் கொடுக்கலாமா?' என்று தோன்றியது.
அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக்
கவனித்தவன்,
" ம்ம்!! சீக்கிரம்!! உனக்கு மூடு
மாறுவதற்குள் சீக்கிரம் குடுத்துடு" என்று கூறி அவனுடைய உதட்டைக்
குவித்தான்...
"படவா! சும்மாவே இருக்க முடியாதா?
வேணும்னே ஆசையைக் கிளப்பிவிட்டுக்கிட்டு..."
"அதான் ஆசை வந்துருச்சுல?
குடுத்துடு... ஆசையையெல்லாம் இந்த வயசுல அடக்கக் கூடாதுமா... "
"ம்ம்ம்!!.... அப்புறம்?"
"அப்புறம் என்னனு நான் சொன்னா
அடிக்க வருவ... அது எதுக்கு? நீ வந்த வேலையை கவனி." என்று கூறி மீண்டும்
மேகன் உதட்டைக் குவிக்க,
அவன் சேட்டைகளை ரசித்தபடி பார்த்தவள்,
சட்டென்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டாள்!..
"ஆஹா! ஜஸ்ட் மிஸ்!! சரி
பரவாயில்லை... கையில் கொடுப்பதற்கு கன்னம் பரவாயில்லை... இன்னொரு கன்னத்தில்
கிடைக்குமா? இந்தக் கன்னம் மட்டும் என்ன பாவம் செய்தது? "
"போதும்! நாம வேற பேசுவமா?"
"போதும்னு நான்தான்டி
சொல்லனும்..."
"ப்ச் மேகன்!!" என்றாள்
செல்லமாக முறைத்து
"இப்படி கல்யாணத்துக்கு பிறகுதான்
கூப்பிடனும்... இப்ப "மேஏஏகன்" னு ரொமான்டிக்கா கூப்பிடனும்."
"இப்ப கையை நீட்ட போறிங்களா
இல்லையா?"
"மறுபடியும் முதல்ல இருந்தா? பேஷ்
பேஷ் தேறிட்டியே!!" என்று விளம்பர பாணியில் மேகன் பேச,
"நீங்க ரொம்ப மோசம்!"
"யாரு நானா டி? சும்மா இருந்தவனை,
கையை நீட்டு முத்தம் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு, கன்னத்தில் முத்தம் கொடுத்தது
நீ!! நீ கொடுத்ததை திருப்பிக் கூட குடுக்காத நான் மோசமா?" என்று போலியாக
சோகமானான்.
'இவன் அடங்க மாட்டான்...' என்று
நினைத்தவள், மேகனின் கையைப் பற்றி இழுத்து ப்ரேஸ்லெட்டை மாட்டிவிட்டாள்.
தங்கச்செயினில், மாட்டும் வளையத்தில்
டிரான்ஸ்ஃபிரன்ட்டான பிளாஸ்டிக் ஹார்ட் தொங்கியது. அதற்குள் பன்னீர் ரோஜாப் பூவின்
ஒரு இதழ் மட்டும் இருந்தது.
"என்னடி இது! வித்தியாசமா
இருக்கே?" என்று மேகன் கேட்டதும்,
"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, கோயிலில்
கதாகாலட்சேபம் நடந்த அன்னைக்கு, உங்கள் கழுத்தில் பன்னீர் ரோஸ் மாலை போட்டாங்க
இல்லையா?"
"ஆமாம்!"
"அன்னைக்கு நாங்க நடத்திய நாடகம்
சொதப்பவும் என்னை மயங்கி கீழே விழுவது போல நடிக்கச் சொன்னா என் ஃபிரண்ட்... அப்படி
நான் விழுந்த போது உங்கள் கால்களுக்கு அருகில் மாலை கிடந்தது... அந்த மாலையில்
இருந்த ரோஜாவின் இதழ்தான் இது..."
என்றாள்.
அவளையே இமைக்காமல் பார்த்தான் மேகன்..
எவ்வளவு காதல் என் மேல் இவளுக்கு!!' என்று நினைத்தான்.
"அந்த பூவில் இருந்த இதழ்கள்
உதிரவும், அதன் ஒவ்வொரு இதழையும் ஒரு நகையாக மாற்றினேன். பாலிதீன் கவரில் மைதா
மாவை திரட்டி வைத்து, அதன் மேல் இதயவடிவில் இருந்த என் டாலரை வைத்து, அதில் க்ளூ
கன் (glue gun ) னை உபயோகித்து இதயவடிவில் பாதி நிரம்பி,
ரோஜாவின் இதழை வைத்து மீண்டும் க்ளூ கன் னால் நிரப்பி, காயவிட்டேன்,
காய்ந்ததும் இப்படி ஆகிவிட்டது. இதேபோல செயின்ல டாலர், தோடு, மோதிரம், ஹேர்
கிளிப், கீ செயின், இன்னொரு ப்ரேஸ்லெட் என்று செய்து வச்சிருக்கேன்." என்றவளை
இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.. முதலில் உதற முற்பட்டவள், மேகனின் பிடி
இறுகி இருக்கவே... கண்களை முடி, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்...
மேகனின் திட்டபடி தீபிகா நடந்து
கொண்டாளா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். ..
❤❤❤❤❤❤
1 Comments
அருமையான நகர்வு சூப்பர்
ReplyDelete