சிம்டாங்காரன்: அத்துயாயம் -35

 

35

                 மேகத்தை

தூது அனுப்பிய காலம் தொலைந்து,

தொலைந்துபோன தன் புமியிடம்

   தூது போக நிலவிடம் உதவிகோருகிறதோ

                   மேகம்?

🌹🌹🌹🌹🌹🌹

 

மிருத்திகா எங்கே இருக்கிறாள்? என்று தெரியாததால், வழக்கம் போல மேகன் நிலவிடம் உதவி கேட்டான்.

 

காதலித்ததால், தன் வீட்டிலும், சமுதாயத்திலும் மிருத்திகா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா... இத்தனை துன்பம் அனுபவிச்சவளுக்கு காதல்னாலே கோபம் வந்திருக்கனும். ஆனா ரித்தி? அதே காதலோட காத்திருந்திருக்கான்னா, ரித்திக்கு என்மெல தீராத காதல் இருந்திருக்கிறது. ஆனால் நான்!... மீண்டும் அவளைத் தொலைத்து விட்டேன். இந்நேரம், என் உயிருக்கும் மேலா நினைக்கும் அவள், எங்கே? எப்படி இருக்கிறாளோ?" என்று கலங்கித் தவித்தான்.

 

நிலவிடம் பேசிவிட்டு தன் அறைக்குள் செல்லும் போது எங்கேயோ பாடும் பாடல் கேட்டது.

 

"பாடி பாடி அழைக்கின்றேன் ஜாடையாக சேதி சொல்வாய்...

பாதை ஒன்று கண்டுகொள்ள நீயும் பாடுவாய்

தயக்கம் என்ன கலக்கம் என்ன தேவி நீ குரல் கொடு.

ஓ பிரியா ஆ ஆ  ஓ பிரியா ஆ ஆ  ஓ பிரியா ஆ ஆ 

 

ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே அனுமான் உன்னை காக்க

சிறையில் மீட்க கடல் தாண்டி வந்தானம்மா

எதிர்போரை வெல்வானம்மா...

 

என்று பாடிக் கொண்டிருந்தது.

 

"நல்ல ஐடியா! நன்றி!" என்று நிலவிடம் கூறிவிட்டு வேகமாக அறைக்குள் வந்தவன். சிபி, கதிரிடம் பேசினான்.

 

"ஒரு ஐடியா! செயல்படுத்திப் பார்ப்போம்... ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு, அதில் ஸ்பீக்கர் வைத்து, நான் மிருத்திகாவை அழைப்பதைப்போல் பதிவு செய்து, அழகு இருக்கும் ஊரில் தெருத்தெருவாக, சுற்றி சுற்றி ஓட விடுவோம். நிச்சயம் மிருத்திகா எப்படியாவது அவள் இருக்குமிடத்தை நமக்குத் தெரியப்படுத்துவாள்." என்றான்.

 

எல்லோருக்கும், 'இந்த ஐடியா மிகவும் சரியாக வொர்க் ஔட் ஆகும்' என்று தோன்ற, அதற்கான வேலையில் ஈடுபட்டனர்.

 

"ரித்தி!.... நான் இங்கேதான் இருக்கேன் வா! எந்தவகையிலாவது நீ இருக்கும் இடத்தை எனக்குத் தெரியப்படுத்து."

 

என்ற, மேகனின் வாய்ஸை ரெக்கார்ட் செய்து, அதை ஒலிபரப்பியவாறே ஆட்டோவில் சுற்றி சுற்றி வந்தனர். ஒரு நாள் முழுவதும் ஆட்டோவில் சிபியும், மேகனும் சுற்றி வந்தனர்....

 


கதிரும், நித்யாவும் அழகுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்தனர்....

 

விக்னேஷும், தீபாவும் பாலசௌந்தரிக்கு சுயஉணர்வு வந்ததும், மிருத்திகா இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்வதற்காக, ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்...

 

செண்பகமும் அவள் வீட்டருகில் இருக்கும் தோழியும், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, குறிப்பிட்ட கம்பனி ஷாம்பு உபயோகப் படுத்துகிறார்களா? என்று கணக்கெடுப்பதுபோல் தேடினர்.

 

மேகனும், சிபியும் ஆட்டோவை எவ்வளவு மெதுவாக ஓட்ட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஒட விட்டனர். சாயந்தரம் ஆகியும் எந்த உபயோகமும் இல்லை! மிருத்திகாவிற்கு மேகன் குரல் கேட்டிருந்தால் கட்டாயம் எந்த விதத்திலாவது தெரியப்படுத்தியிருப்பாளே?!!...

 

கதிரும் நித்யாவும் அழகு வீட்டினருக்குத் தெரிந்தவர்கள் உறவினர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று தேடியும் எங்கும் மிருத்திகா இருப்பதற்கான அடையாளமே இல்லை.

 

பாலசௌந்தரிக்கு சிகிச்சை முடிந்து விட்டாலும், 'அவர் மனநிலையை பாதிக்கும் படி பேசவேண்டாம்' என்று டாக்டர்கள் கண்டிப்பாக கூறிவிட்டனர்.

 

யாருக்கும் தெரியாமல் மேகன், அவனுடன் படித்த நண்பனின் உதவியுடன் போலீஸ் கமிஷனரிடம் உதவிகேட்டதால்... ரகசியமாக போலீசும் மஃப்டியில் தேடினர்.

 

இரவு 8 மணியளவில் ஏற்கனவே சொல்லி வைத்ததைப்போல் அனைவரும் மேகன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அழகு, எந்த மாறுதலும் இன்றி அவனுடைய தினசரி வேலைகளைச் செய்தான்... போலீஸ் மூலமாக அழகுடைய மொபைல் ஃபோனை கண்காணித்ததில், எந்த வித்தியாசமான அழைப்பும் வரவில்லை... சாதாரணமாக வரும் ஃபோன் மட்டுமே வந்திருந்தது. எல்லோருடைய மனதிலும், 'மிருத்திகா காணாமல் போனதற்கும் அழகுவிற்கும் சம்மந்தம் இல்லையோ?' என்று சந்தேகம் வலுத்தது.

 

மிருத்திகா எங்கேதான் இருக்கிறாள்? அழகு சம்பந்தப்படவில்லை என்றால் வேறு என்னதான் நடந்திருக்கும்? எப்படி மாயமானாள்? !!

 


 

        கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போலிருந்தது...   மேகனுக்கு உயிரே போய் விட்டதைப் போலிருந்தது.. அவனால் இயல்பாகப் பேசக்கூட முடியவில்லை. அவனுடைய கண்கள் சிவந்து கலங்கியபடியே இருந்தது. தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று அவன் தவிப்பது தெரிந்தது. பற்களைக் கடித்தபடி இருந்ததை அவனுடைய தாடை காட்டிக் கொடுத்தது... மிருத்திகா இல்லாமல் இனி இவன் வாழ்வது கடினம் என்பது அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அவனைப் பார்த்து, சிபியும், மேகன் குடும்பத்தினரும் மிகவும் பயந்தனர்..... மீண்டும் பழைய நிலைக்கு மேகன் போய்விடக்கூடாதென்று டாக்டர்கள் எச்சரித்திருந்தனர்.... அதனால் மேகனை தனியே விடாமல் யாராவது கூடவே இருந்தனர். அனைவருக்குமே வேறு வழி தெரியவில்லை... ஆளாளுக்கு கடவுளைக் கும்பிட்டனர்.

 

எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போதே செண்பகத்திற்கு வலிப்பு போல வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது... அனைவரும் பதறி அருகிலிருந்த இரும்பு சாவியை செண்பகம் கையில் கொடுத்து இறுக்கி பற்றி கொண்டனர். சிறிது நேரத்தில் அவள் சகஜ நிலைக்கு வர,

 

"உனக்கு வலிப்பு வருமா?" என்று விக்னேஷ் கேட்டான்.

 

"இல்லை!"

 

சிபி, "நீங்க எல்லாரும் அடுத்து என்ன பண்றதுன்னு பாருங்க. நான் செண்பகத்தை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போயிட்டு வரேன்" என்று கூறி மற்றவர் பதிலை எதிர் பாராமல், தன் வண்டியில் செண்பகத்தை அமரவைத்து அழைத்துச் சென்றான்.

 

ஏற்கனவே மனதளவில் அனைவருமே சோர்ந்து இருந்தனர். இதில் செண்பகத்திற்கும் உடல்நிலை சரியில்லாமல் போகவே இன்னும் நொந்தபடி அமர்ந்திருந்தனர்.

 

அனைவரும் கிடைத்த அறைக்குள் சென்று உறங்க முயற்சி செய்தனர்.

 

நல்லிரவு கதவு திறக்கும் சப்தம் கேட்டு தாத்தா எழுந்து வர, மேகன் வாசல் கதவைத் திறந்து, வீட்டிற்கு உள்ளே வந்து கொண்டிருந்தான்.

 

"ஐயா! இந்த நேரத்துல எங்க போயிட்டு வர்ற?" என்று மேகனிடம் தாத்தா கேட்டார்.

 

"என்னால் படுக்க முடியல தாத்தா! அதான் கொஞ்ச தூரம் நடந்துட்டு வந்தேன்." என்று கூறியவனின் கால்கள் மிகவும் சிவந்து இருந்ததைப் பார்த்தவர்,

 

"செருப்பு போடாமலா போன?" என்று கவலையுடன் கேட்டார்.

 

"மறந்துட்டேன் தாத்தா!"

 

'மறந்துட்டானா?!! ' என்று அதிர்ச்சியடைந்தவர்,

 

"மேகா இப்படி வா!... பிரச்சனை வரும் போதுதான் நாம் திடமா இருக்கனும்... உடம்பைக் கெடுத்துக்கிட்டா பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? மனதளவில் உடைந்து விட்டால் சுற்றிலும் இருட்டாகத்தான் தெரியும். எப்படியும் மிருத்திகாவை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் போய் தூங்கு... நல்ல தூக்கத்திற்குப் பிறகு தெளிவு கிடைக்கும். வழியும் பிறக்கும்.  போ! போய் தூங்கு." என்று அவன் மாடி அறைக்குச் செல்லும்வரை பார்த்திருந்து விட்டு அப்படியே ஹாலில் இருந்த ஷோபாவிலேயே உறங்கினார்.

 

விடிகாலையில் மேகனின் மொபைல் அலறவே, கண்ணைக்கூட திறக்க முடியாதவனாய் ஃபோனை எடுத்து காதில் வைத்தான்.

 


"ஹலோ!"

 

"மேகன் நான் மிருத்திகா பேசுறேன். சீக்கிரம் வந்து என்னை கூட்டிட்டு போங்க... என்னால இங்க இருக்க முடியல."

 

"ரித்தீஈஈ! எங்க இருக்க?"

 

"எனக்குத் தெரியல"

 

"யார் உன்னை கூட்டிட்டுப் போனது?"

 

"மேகன் ப்ளீஸ் வாங்க... அவ... அவதான் என்னை ..."

 

'டக் ' ஃபோன் வைக்கப்பட, "ரித்தீஈஈ.." என்று அலறி எழுந்தான். அருகில் படுத்திருந்த கதிர்,

 

"மேகன்! ஒன்னும் இல்ல கனவு... மேகன்! என்னைப் பாருங்க.." என்று மேகனை உலுக்க, மேகனுக்கு தூக்கம் கலைந்தது. எழுந்ததுமே,

 

"கதிர்! மிருத்திகாவிற்கு பெண் எதிரி யாராவது இருந்தாங்களா?" என்று மேகன் கேட்டான்

 

"எனக்குத் தெரிஞ்சு இல்லை!"

 

"ஈஸ்வரி?"

 


"அவ கெட்டவ இல்லை மேகன்... அவளோட அம்மா, அப்பாதான் போல்லாதவங்க. ஒரு மாதம் எங்க வீட்டில்தான் இருந்தாள். எந்த விஷயத்திற்கும் கொஞ்சம் கூட  முகம் சுழிச்சதில்லை. எதற்காகவும் கோபப்பட்டதில்லை.... எப்பொழுதும் சிரித்த முகத்துடன் துறு துறு வென்றிருப்பாள்... ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டால், அவ ஒன்னு விட்ட அண்ணனான, அழகை கல்யாணம் செய்யச் சொல்லி மீரா வைக் காட்டயப் படுத்துவாங்களேன்னுதான் ஈஸ்வரியை நான் கல்யாணம் பண்ணிக்கல. மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி பெண் இல்ல அவ. அப்படியே இருந்தாலும் நம்ம மீரா அவளை அடித்துப் போட்டுவிட்டு வந்து விடுவாள்." என்றான்.

 

"அப்போ, செண்பகத்திடம் கேட்போம்." என்று கூறி விட்டு மொபைல் ஃபோனை எடுத்து சிபியின் நம்பரை டயல் செய்தான்.

 

"சொல்லு மேகா!"

 

"செண்பகம் எங்க?"

 

"இங்க ஆஸ்பத்திரில தான் இருக்கா."

 

"அவகிட்ட மிருத்திகாவுக்கு பெண் எதிரி யாராவது இருந்தாங்களான்னு. கேட்டு சொல்லுடா."

 

"சரி!"

 

ஃபோனை வைத்த மேகன். வேகமாகக் கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போனான். அங்கே செண்பகம் உறங்கிக் கொண்டிருக்க, அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து சிபி ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். தலை கலைந்து, இரவு முழுவதும் அவனும் உறங்கவில்லை என்பது சிபியின் கண்களைப் பார்த்தாலே தெரிந்தது.

 

'இந்த அளவா செண்பகத்தின் மேல் பிரியம் வச்சிருக்கான்? !! இது வெறும் பிரியம் போல தெரியலையே! விரும்புறானோ?' என்று நினைத்தவாறு சிபியின் அருகில் சென்று அவன் தோளைத் தொட, தூக்கிவாரிப் போட்டு எழுந்த சிபியை,

 

" மெல்ல டா. .. மெல்ல. .. தோளைத் தொடத்தானே செஞ்சேன்?" என்று மேகன், சிபியை ஆசுவாசப் படுத்தினான்.

 

"என்னடா இப்படி திடீர்னு வந்து நிக்கிற?" என்று சிபி கேட்டான்.

 

"அது இருக்கட்டும், செண்பகத்திற்கு எப்படி இருக்கு? அவ வீட்ல சொல்லிட்டியா?"

 

"நல்லா இருக்காடா... ஓவர் டென்ஷன், அலைச்சல், மனக்கஷ்டம் இதெல்லாம் தான் காரணம்னு டாக்டர் சொன்னார். அவங்க வீட்ல சொல்லிட்டேன். இவ்வளவு நேரம் இங்க இருந்துட்டு, இப்பத்தான் வீட்டுக்கு போறாங்க. "

 

மேகன் ஒன்றும் கூறாமல் சிபியை பார்த்தான்.

 

'செண்பகத்துக்குக் கல்யாணம் ஆகலன்னு இவனிடம் சொல்வோமா?' என்று யோசித்துக் கொண்டிருந்தவனை,

 

"என்னடா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன்.. நீ வேற ஏதோ நினைவில் இருக்க?"

 

"இல்ல நீ செண்பகத்திடம் கேட்டியா? எந்த பெண்ணாவது இவளுக்கு பிரச்சனை கொடுத்தாளா?" என்று மேகன் கேட்டான்.

 

"இப்ப தான் ஃபோன் பண்ணி சொன்ன... நான் ஃபோனை வக்கிறதுக்குள்ள நேரில் வந்து நிக்கிற... நான் எப்படி கேட்டிருக்க முடியும்? "

 

"இவ எப்ப கண் விழிப்பா?"

 

"இதோ! நாம பேசுற சத்தத்துல எந்திரிக்கிறா பாரு. " என்று கூறியவன், செண்பகம் கண்களைத் திறந்து பார்த்ததும்,

 

"உடம்பு எப்படி இருக்கு ரௌடிபேபி? மேகன் உங்கிட்ட ஏதோ கேட்கனுமாம். .. பதில் சொல்றியா?" என்று கேட்டான் சிபி.

 

" ம்ம். . வாங்க மேகன்." என்று கூறியவாறு எழுந்து அமரப் போனவளைத் தடுத்து,

 

"எந்திரிக்க வேண்டாம் செண்பா! மிருத்திகா மேல், கோபமோ?  அல்லது வெறுப்போ இருக்கும்  பெண்கள் யாராவது இருந்தாங்களா?" என்று கேட்டான் மேகன்.

 

"இந்த அளவுக்கு வெறுக்கும்  பெண்கள், யாரும் இல்லை! மிருத்திகா சின்சியரா வேலை பார்ப்பதால் மேலிடத்தில் நல்ல மரியாதை... இதனால் சிலர் பொறாமைப் படுவார்கள்... ஆனா பிடிக்காதுன்னு யாரும் இல்லை." என்றாள்.

 

"கொஞ்சம் யோசிச்சுப் பாரு... நீதான் அவ கூடவே இருந்தவ... அவளப் பிடிக்காதவங்க யாராவது இருந்தாங்களான்னு... ம்ம்? சரிமா!  உடம்பை பார்த்துக்க நான் போயிட்டு வர்றேன்." என்று விடைபெற்றான் மேகன்.

 

"இவரை கூட்டிட்டு போகலையா?" என்று செண்பகமும்,

 

"நானும் வரேன் கொஞ்சம் பொறு" என்று சிபியும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

 

சிபி, குளித்து, டிரெஸ் சேன்ஜ் பண்ணுவதற்காக, அவனுடைய அண்ணன் வீட்டிற்கு, மேகன், சிபி இருவரும் சென்றனர். வீட்டிற்குள் நுழையும் பொழுதே, சிபியின் அண்ணிக்கும், தீபிகாவிற்கும் வாக்குவாதம் நடந்தது கொண்டிருந்தது.

 

சிபி மாடியிலிருக்கும் அவன் அறைக்குச் செல்ல. .. மேகன் ஹாலில் காத்திருந்தான்.

 

மேகனைப் பார்த்ததும் அவனிடம் வந்த தீபிகா, "மாமா அம்மா கிட்ட புது ட்ரெஸ்  வாங்கித்தரச் சொல்லுங்க மாமா" என்றாள்.

 

      மற்ற நேரமாக இருந்தால் தீபிகாவிற்காக அண்ணியிடம் சிபாரிசு பண்ணியிருப்பான். . இன்று அவன் மனம் முழுவதும் மிருத்திகாவே நிறைந்திருந்ததால் ஒன்றும் பேசாமல் தலையை ஆட்டினான்.

 

"போங்க மாமா!" என்று கூறி விட்டு மீண்டும் தன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

"அம்மா ப்ளீஸ்! இந்த ஒரு முறை மட்டும்... இனி இதுமாதிரி உங்ககிட்ட கேட்கமாட்டேன்."

 

"இதெல்லாம் தப்பு தீபி! இருக்கிறதுல நல்லதா போட்டுக்க. .. புதுசாலாம் வாங்க முடியாது." என்று அண்ணி மறுத்துக்கொண்டிருந்தாள்.

 

"அம்மா ப்ளீஸ்!"

 

"முடியாது ஸ்கூலுக்குக் கிளம்பு"

 

சிபி கீழே இறங்கி வருவதைப் பார்த்த தீபிகா,

 

"சித்தப்பா நீங்களாவது சொல்லுங்க." என்று கேட்டாள்..

 

"எதுவா இருந்தாலும் சாயந்தரம் பேசிக்கலாம்... இப்ப ஸ்கூலுக்குக் கிளம்பு!" என்று கூறி விட்டு மேகனைப் பார்த்து, "வா!" என்று தலையசைத்து விட்டு வாசலை நோக்கி நடந்தான் சிபி.

 

"போங்க! எல்லாரும் மோசம்! எங்க க்ளாஸ் பிள்ளைகள் எல்லாரும் புது டரெஸ்ல கல்யாணத்துக்கு போவாங்க. நான் மட்டும் பழைய ட்ரெஸ்லயே போகவா?" என்ற தீபிகாவின் வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல் மேகனும், சிபியும் செருப்பை மாட்ட,

 

"உங்களுக்கு நல்லா வேணும் சித்தப்பா! நீங்க லவ் பண்ற பொண்ணுக்கெல்லாம் கல்யாணம் முடியட்டும்.." என்று கத்தினாள்.

 

"நான் யார லவ் பண்றேன்? அவங்களுக்கு கல்யாணம் முடிய. ." என்று வாசலில் இறங்கியபடி சிபி கேட்க,

 

"ம்ம்ம்... எங்க மிருத்திகா மேம் க்குத்தான்." என்று அவள் சொன்ன வினாடி சிபி, மேகன் இருவருக்கும் உலகமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

 

நமக்கும்தான்!...

மிருத்திகாவிற்கு கல்யாணமா? எல்லோரும் ஊரையே அலசித் தேடியும் கிடைக்காத மிருத்திகா இருக்குமிடம், தீபிகாவிற்குத் தெரியுமா?

தீபிகா, மிருத்திகாவை கண்டுபிடிக்க உதவுவாளா?

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். ...

 

❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments