சிம்டாங்காரன்: அத்தியாயம் -34

 

34

தேடித் தேடி தேடும் மனசு

தொலைகிறதே....

- துள்ளாத மனமும் துள்ளும்.

🌹🌹🌹🌹🌹🌹

 

      மிருத்திகா, அழகு வீட்டிலும், ஈஸ்வரி வீட்டிலும் இல்லை என்று தெரிந்ததும் மேகனுக்கு, என்ன செய்வது? எங்கே போய்த்தேடுவதென்று தெரியவில்லை. 'வேற வழியில்லை மாமியாரிடம் விசாரிக்க வேண்டியதுதான்,' என்று நினைத்து, விக்னேஷிடம்,

 

  "விக்னேஷ் நீங்க உங்க அம்மா கிட்ட கொஞ்சம் விசாரிங்க... எனக்கென்னவோ உங்கம்மாவுக்கு மிருத்திகா எங்கே இருக்கான்னு தெரியும்னு தோணுது." என்றான்.

 

  "எனக்கும் அப்படித் தான் தோணுது... கதிர் நம்மை அனுப்பி வச்சுட்டு எங்கம்மா கிட்ட விசாரிக்கிறான்னு நினைக்கிறேன். முதல்ல அவனுக்கு ஃபோன் பண்ணி பாக்கறேன்." என்று கூறியவாறு மொபைல் ஃபோனை விக்னேஷ் எடுக்கும்போதே அவனுடைய ஃபோன் ரிங் ஆனது. யார் என்று பார்த்தான். 'கதிர்!!"

 

  "கதிர். .." என்று விக்னேஷ் ஆரம்பிக்கவுமே,

 

  "அண்ணா! அம்மா மயக்கம் போட்டுட்டாங்க. .. என்ன செஞ்சும் மயக்கம் தெளியாததால பக்கத்துல இருக்கும் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கேன். ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க சீக்கிரம் வாண்ணா!" என்று அழுதபடி கூறினான் கதிர்.

 


  விஷயத்தை மேகனிடமும் சிபியிடமும் கூற, மூவரும் காரில் ஏறினர்.

 

மூவருமே  ஆஸ்பத்திரிக்குள் நுழையவும் தீபா எதிரில் வந்தாள்.

 

  "என்னங்க... அத்தைக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்காம். ஐசியூ வில் சிகிச்சை நடக்கிறது. மீரா எங்கே இருக்கான்னு தெரிஞ்சதா?" என்று விக்னேஷிடம்  கேட்ட தீபா மேகனைப் பார்த்து முறைக்கலாமா வேண்டாமா என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.  

அப்பொழுது அங்கு வந்த நித்யாவும் கதிரும் மேகனிடம்,

 

  "சாரி மேகன்! அம்மாவை விசாரிக்கிறேன்னு ஆரம்பிச்சு உங்களுக்கும் மீராவுக்கும் நடந்ததை உளறிட்டேன்." என்று கூற,

 

  "என்ன நடந்தது? உங்களுக்குள்ள சண்டையா மேகன்?" என்று மேகனிடம் விக்னேஷ் கேட்டான்.

 

  என்ன சொல்வதென்று தெரியாமல் அனைவரும் முழிக்க அங்கு செண்பகமும் வந்து சேர்ந்தாள்.

 

  "என்ன நீயும் வந்துட்ட? மாமா தனியா இருப்பாரே?" என்று நித்யா கேட்டபடி மிருத்திகாவின் அப்பா அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றாள்.

 

  "எல்லா பெண்களும் இப்படித்தானா? அவங்க கேள்விக்கு பதில் சொல்றாங்களா! இல்லையான்னு கூட கேட்காம போயிட்டாங்க?" என்று மேகன் ஆச்சரியப்பட,

 

  "உங்களுக்கு எத்தனை பெண்களைத் தெரியும் தம்பி?" என்று தீபா வினயமாகக் கேட்டதும்,

 

  "தீபா என்ன இப்படியெல்லாம் பேசுற?" என்று விக்னேஷ் கண்டிப்பான குரலில்  அதட்டினான்.

‘நடந்த விசயங்களை முழுசா சொல்லவிடாததுமில்லாம, அதை அத்தையிடமும் உளறிய இவனை...’ என்று எண்ணிய படியே மேகன் கதிரைப் பார்த்து,

  "எல்லாம் நீ செய்த வேலைதானே? " என்று கேட்டவன். தீபாவிடம்

 

  "அக்கா! கதிர் தப்பா புரிஞ்சு ஊருக்கே பரப்பிட்டான். . நான் சொல்றத நம்பலைன்னா, சிபி கிட்ட நடந்தது அத்தனையையும், கதிரிடம் பேசமுன்னாடியே சொல்லிட்டேன்." என்று தீபாவிடம் கூறிவிட்டு சிபியிடம் "நடந்ததை சொல்லுடா.." என்றான் மேகன்.

 

  "நீங்களே சொல்லுங்க மேகன். உங்கள நம்பாம யார நம்பப் போறோம்?" என்று கேட்டான் கதிர்.

 

  அங்கு என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும் பேசுபவர் முகத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தானர் விக்னேஷும், செண்பகமும்.

 

  "நீங்க எல்லாரும்  எங்கவீட்டில இருக்கும்போது, நான் உங்க வீட்டுக்கு  வந்தேன்... "

 

  "எப்ப? எப்படி? எங்கம்மாதான் உங்களையே பார்த்துக் கிட்டிருந்தாங்களே?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் விக்னேஷ்.

 

அவனைப் பார்த்து, "எங்க வீட்டில் இன்னொரு மாடிப்படி இருக்கு." என்று கூறிவிட்டுத் தொடர்ந்தான்.

 

  "மிருத்திகாவும் உங்களைப்போல தான் அதிர்ச்சியானாள். நான் வரமுடியாதுங்கற தைரியத்துல, கன்னா பின்னா னு பேசி என்னை கிளப்பிவிட்டுட்டா. நான் வந்து நின்னதும் அவளுக்கு பயத்தில் பேச்சு வரல... சரி சும்மா பயமுறுத்தி பாக்கலாமேன்னு நானும் அவளை..."

 

  "என்ன செஞ்சீங்க?" -கதிர்

 

  " நீ ஒழுங்கா யோசிக்க மாட்டியா?"

-சிபி

 

      "வந்து,...  பிடிக்க முயற்சி செஞ்சேன்பா. அவ ஓடுனா. உங்க வீட்டு  முற்றத்தில இருந்த தண்ணில வழுக்கி விழுப்போனவளை, விழாமல் பிடிச்சேன்?"

 

  "அதெப்படி மீரா விழும் போதெல்லாம் கரெக்ட்டா பிடிச்சுடுறீங்க?" என்று தீபா கேட்டதும்,

 

 

  அவளை மெல்லிய, அசட்டு சிரிப்பு  சிரித்தபடி பார்த்துவிட்டு,

 

  "ஆனாலும் அவளுக்கு காலில் அடிபட்டு, ரெத்தக்கட்டு போல இருந்தது. அவளை அவளுடைய அறையில் உட்கார வைத்து, மருந்து போட்டுவிட்டேன். என்னால தானே விழுந்துட்டான்னு  எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. அவளுக்கு வலி இருந்தாலும் நான் கஷ்டப்படுவேனேன்னு பொறுத்துக்கிட்டா. ஆனாலும் வலியில் அவ கண்ணு கலங்கியது... அவட்ட  சாரி சொல்லிட்டு வெளிய வந்தேன். அவளால நடந்து வந்து கதவை பூட்ட முடியாததால கதிருக்கு ஃபோன் பண்ணினேன். நான் பதட்டத்தில் அரைகுறையா பேச கதிர் வேற மாதிரி கற்பனை பண்ணிட்டான்." என்று மேகன் முடித்ததும்,

 

  "அப்போ உங்களுக்குள்ள ஒன்னும் நடக்கலையா? " என்று கதிர் கேட்டதும்,

 

  "உனக்கு ஏன்? அதான் நடந்ததை இவ்வளவு விளக்கமா சொல்றான்ல?" என்று சிபி, கதிரிடம் கேட்டான்.

 

  "அச்சோ! நான் அம்மாகிட்ட தப்பா சொல்லிட்டேனே? அதுனால தான் அம்மாவுக்கு மயக்கமே வந்துச்சு."

 

  "என்னடா உளருற? மீரா விழுந்ததுக்கெல்லாமா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்?" என்று விக்னேஷ் கேட்க,

 

  மேகன் சொன்ன விஷயத்தையும், அதை கதிர் புரிந்து கொண்ட லெச்சனத்தையும் கூறினான் கதிர்.

 

  "இதை இன்னும் எத்தனை பேர்கிட்ட ராசா சொல்லியிருக்க?" என்று சிபி  கேட்டான்.

 

  "இல்லை! அம்மாகிட்ட மட்டும் தான் சொன்னேன்."

 

  "அந்த மட்டும் உன் மானம் தப்பிச்சுடுச்சுடா." என்று சிபி, மேகனிடம் கூற, சிரித்த மேகன்,

 

  "அத்தை ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாங்களே கதிர்!" என்று கலாய்க்க...

 

  "அம்மா ஆடிப் போயிட்டாங்க...அவங்க கண்முழிச்சதும் உண்மையை சொல்லிடனும்." என்றான் கதிர்.

 

  "நீ அம்மாவிடம் விசாரித்ததா சொன்னியே அவங்க மீரா எங்க இருக்கான்னு சொன்னாங்களா?" என்று விக்னேஷ் கதிரிடம் கேட்டான்.

 

  "அதெப்படி சொல்வாங்க? இப்பவும் அழகுதான் நல்லவன்னு சொல்லி, எங்களை மனசு மாத்த பார்த்தாங்க... அப்பதான் கதிர் இப்படி சொல்லிட்டார்." என்றாள் தீபா.

 

  "நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. கதிர், அத்தைகிட்ட சொன்னது அப்படியே இருக்கட்டும்.. உண்மையைச் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சுருச்சுன்னு நினைச்சாவது மிருத்திகா இருக்கும் இடத்தை அத்தை சொல்லட்டும்.  இதுக்கு மேல வேறொருத்தருக்கு கல்யாணம் செய்து வைக்க யோசிப்பாங்கல்ல?" என்று மேகன் கேட்டான்.

 

  அவர்கள் அம்மா இதுக்கெல்லாம் கவலைப்படுறவங்க இல்லைன்னு தோணினாலும். அதை மேகனிடம் சொல்ல சங்கடப்பட்டு எல்லோரும் "சரி" என்று தலையாட்டினர். பிறகு,

 

  "அம்மாவை மட்டும் எதிர் பார்க்க வேண்டாம் மேகன். அவங்களுக்கு உடம்பு சரியாகும் வரை காத்திருக்க முடியுமா? நாம வேற வழியை தேடுவோம்." என்றான் கதிர்.

 

  கதிர் சொன்ன விதத்திலேயே, 'அவன் அம்மா மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை' என்று தெரிந்தது மேகனுக்கு.

 

  "ஈஸ்வரி, அழகு  ரெண்டு பேர் வீட்லயும் இல்லைனா மிருத்திகாவை வேற எங்க மறைச்சு வச்சிருப்பாங்க?  உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" என்று அனைவரிடமும் கேட்டான் மேகன்.

 

  "எங்களுக்கு ஈஸ்வரி குடும்பத்தை, கதிருக்கு பெண் பார்க்க போன பிறகுதான் பழக்கம். மற்றபடி அவங்க  எங்க  சொந்தக்காரங்க இல்லை. இருந்தாலும் அவங்களுக்கு  தெரிஞ்சவங்க கிட்ட விசாரிப்போம்." என்று விக்னேஷ் கூறினான்.

 

  "ஒருவேளை அத்தை சொன்னது போல அழகு குடும்பம் மீராவை தூக்கிட்டு போயிருக்கலைனா?" என்று தீபா கேட்டதும்,

 

  "இத்தனை வருஷமா விட்டுட்டு இப்ப எங்களுக்கு கல்யாணம் பேசும்போது இப்படி செஞ்சிருக்காங்கன்னா? அது நாங்க கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்காதவங்களாத்தானே இருக்கும்? அழகு தவிர வேற யார் செய்யப்போறாங்க?" என்று மேகன் கேட்டான்.

 

  "அதேதான் என் சந்தேகமும் ஏன் இத்தனை வருஷம் மீரா  தனியாதான இருந்தா? அழகுக்கு மீராவை கல்யாணம் பண்ணிக்கனும்னு இருந்திருந்தா அஞ்சு வருஷம் என்ன பண்ணினான்? சும்மாதான் இருந்தான். எந்த வகையிலும், ஒருதடவை கூட பிரச்சனை பண்ணலையே! தூக்கிட்டு போயி கல்யாணம் பண்ற ஐடியா இருந்திருந்தால், அத்தை நினைச்சிருந்தா முடிஞ்சிருக்குமே?" என்று புது சந்தேகத்தைக் கிளம்பினாள் தீபா.

 

  "அண்ணி சொல்றது சரியோ இல்லையோ? அழகுதான் பண்ணியிருப்பான்ங்கிற ஒரே பக்கம் யோசிக்காம, இன்னொரு  வழி எதுவும் இருக்கான்னு யோசிப்போம்."

 

  'எல்லோருக்கும் அப்படியும் இருக்குமோ?' என்று தோன்ற,

 

  "எதற்கும் போலிஸ் உதவியை கேட்போமே?" என்று மேகன் கேட்டதும்,

 

  "சரி!" என்றனர் மிருத்திகா குடும்பத்தினர்.

 

  "வேறு யாருக்காவது மிருத்திகா மேல் கோபம் இருக்கா?" என்று  மேகன் கேட்க, மிருத்திகா குடும்பத்தினர் யோசித்தனர். ஆனால் செண்பகம் வேகமாக,

 

  "அவ தனியா இருந்ததால ரொம்ப கஷ்டபட்டுட்டா. ரமேஷ்ன்னு எங்க சீனியர் ஒருத்தன் மிருத்திகாவை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருந்தான். அப்பதான் மிருத்திகா, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னும் புருஷன் வெளிநாட்டுல இருக்கார்னும் சொன்னா... அதற்கப்புறமும் அந்த ஆள் விடல. ஒருநாள் அவர் மிருத்திகாவிடம், "புருஷன் கூட மட்டும் தான் வாழ்வேன்னு இருந்துட்டா பத்தினின்னு சிலையா வைக்கப்போறாங்க" ன்னு கேட்டான். இதற்கு மேலும் இங்க வேலை பாக்க முடியாதுன்னு மிருத்திகா  ராஜினாமா கடிதம் கொடுத்தாள். ஸ்கூல்ல மிருத்திகாவிற்கு நல்ல பேரு. அதனால பள்ளி நிர்வாகம் அந்த ஆளை எச்சரிக்கை செய்தனர். அன்றிலிருந்து மிருத்திகாவைக் கண்டாலே அவனுக்கு ஆகாது" என்றாள்.

 

  "எங்க இருக்கான் அவன்? வீடு தெரியுமா?" என்று மேகன் கேட்டவிதத்திலேயே அவன் கோபம் புரிய,

 

  "மேகன் இப்ப நாம அவன் வீட்டுக்கு போவோம். ஆனா கோபத்தில் ஏடாகூடமா எதுவும் பண்ணிடாதீங்க. மீராவை தேடுவதுதான் முதல் வேலை." என்று கூறி மேகன், சிபி, விக்னேஷ் செண்பகம் நால்வரும் கிளம்பினர். கதிரையும் நித்யாவையும்  அப்பா அம்மாவுக்குத் துணையாக இருக்கச் சொல்லிவிட்டு சென்றனர்.

 

ரமேஷின்  வீட்டை பார்க்கும் தொலைவில் காரிலிருந்தபடியே காட்டிவிட்டு, காரிலேயே அமர்ந்து கொள்ளச் சொன்னதால் செண்பகம் காரில் இருக்க, ஆண்கள் மூவரும் ரமேஷ் வீட்டுக் கதவைத் தட்டினர்.

 

  ஒரு பெண் கதவைத்திறந்ததும் விடுவிடுவென்று வீட்டிற்குள் புகுந்து எல்லா இடத்திலும் தேட ரமேஷ் வந்து,

 

  "யார் நீங்க?" என்றதும்.

 

  "மிருத்திகா எங்கே? " அவள எங்க ஒழிச்சு வச்சிருக்க?" என்று கேட்டான் விக்னேஷ்.

 

  "என்ன ஓடிட்டாளா?  பெரிய பத்தினி...."

 

"நங்ங்ங்க்" சப்தம் வந்த பிறகு தான் தெரிந்தது மேகன் கையிலிருந்த ஜாடியை ரமேஷ் தலையிலேயே இறக்கியது.

 

  "மேகன்!" என்று கத்தியவாறு மேகன் அருகில் வந்த சிபி, ரமேஷைப் பார்க்க, தலையில் ரத்தம் வடிய அமர்ந்து இருந்தான்

 

  "விட்டுடுங்க தெரியாம சொல்லிட்டேன்." என்று ரமேஷ் சொன்னதும், அவனுக்காக சண்டைக்கு வந்த அவன் மனைவியிடம் இவன் பண்ணிய வேலையைச் சொல்லி,

 

  "அடங்கி இருக்கனும் இல்ல தொலைச்சுத் தொங்கப் போட்டுடுவேன்." என்று கூறி, மேகன் மீண்டும் அவனை அடிக்க பாய,

 

  "செத்துத் தொலைஞ்சிடப் போறான்! விடுங்க மேகன்." என்று விக்னேஷ் தடுத்தான்.

 

  "இரு! மிருத்திகா கிடைச்சதும் வந்து, ஒரு பூஜை வைக்கிறேன்." என்று கூறி விட்டு வெளியேறி விட்டான் மேகன்.

 

  "மேகன் கோபத்தைக் குறைங்க... நீங்களும் இருந்தாதான் மீராவ எங்களால தேட முடியும்..." என்று கெஞ்சினான் விக்னேஷ்.

 

    அடுத்தடுத்து மிருத்திகாவிற்கு தொந்தரவு கொடுத்த இரு அசிங்கம் பிடித்த ஜென்மங்கள் வீட்டுக்கும் சென்று, அதில் ஒருவன்  முகறையை உடைத்து, மற்றொருவனின் கையை முறுக்கி அடித்தும் போட்டுவிட்டு வெளியேறினர்.

 

  செண்பகத்தை அவள் வீட்டிலும், விக்னேஷை ஆஸ்பத்திரியிலும் விட்டுவிட்டு, கதிரையும் நித்யாவையும் சிபியையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் மேகன்.

 

  மேகன் வீட்டினர் அனைவரும் மிருத்திகா காணாமல் போன தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். போலீசுக்குப் போகவேண்டாம் என்றும் மறுத்தனர். "ஏன்?" என்று மேகன் கேட்டதும், சற்றே தயங்கிய ஆச்சி,

 

  "ஒரு இரவு கழியப்போகிறது... இனி மிருத்திகா வந்தாலும் அனைவருக்கும் அவள் சுத்தமானவள் என்று நிரூபிக்க வேண்டும். ஏனென்றால் இந்த கேடுகெட்ட சமுதாயம், அசிங்கம் பண்ணுபவர்களை விட்டு விட்டு,  சீதையைத்தான் தீகுளிக்கச் சொல்லும். கண்டவர்களுக்கு நாம் ஏன் விளக்கம் சொல்லனும்?  நம்மால் தேடிக் கண்டு பிடிக்கமுடியும்." என்றார் மரகதம் ஆச்சி.

 

  'என்னை விட்டுப் பிரிந்து, எத்தனை துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறாய் ரித்தி? உன்னை எப்படி மீட்கப்போகிறேன்' என்று நொந்து போன மேகன், மாடியில் உள்ள பால்கனிக்கு வந்து நிலவைப் பார்த்தான்.

 


  "என் ரித்தி எங்கே? இத்தனை நாள் அவள் பட்ட கஷ்டம் போதாதா? தயவுசெய்து ஒரு வழிகாட்டு. என் ரித்தியைக் காப்பாற்றி கொடு." என்று கண்ணீருடன் வேண்டினான்.

 

  மிருத்திகா எங்கே?

 

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

 

         ❤❤ ❤ ❤ ❤ ❤

Post a Comment

0 Comments