33
என் இதயம்
துடிப்பதைக் கேட்காத
தூரத்தில் நீ...
என் இதயம் எங்கே
🌹🌹🌹🌹🌹🌹
மிருத்திகா எங்கேயென்று
தெரியாமல் மேகன் உட்பட அனைவரும் கலங்கியிருந்தனர்... அனைவருக்குமே பாலசௌந்தரியின்
மேல்தான் சந்தேகம் இருந்தது...
மேகனும் சிபியும் விக்னேஷை அழைத்துக் கொண்டு அழகுசுந்தரம் வீட்டிற்கு
மிருத்திகாவைத் தேடிச் சென்றனர்.
மிருத்திகாவின் அப்பா, செண்பகத்தை அழைத்துக் கொண்டு ஈஸ்வரி வீட்டிற்குச்
சென்றார்...
கதிரும், நித்யாவும் உள்ளூரில் மிருத்திகா செல்லும் இடங்களுக்கு செல்வதாக கூறினர். மற்றவர்கள் மிருத்திகாவைத் தேடிச் சென்ற பிறகு, கதிர் தன்னுடைய
அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான்...
"அம்மா ப்ளீஸ்! மீரா எங்கே இருக்கான்னு தெரிஞ்சா, இப்பவாவது சொல்லிடுங்க...
நான் தேடிப் பார்த்து கூட்டிட்டு வந்தேன்னு சொல்லிக்கிறேன்." என்று கதிர்
கெஞ்சினான்.
"எனக்கு உண்மையிலேயே தெரியாது டா. .. நானே பயந்து போய் தான் இருக்கேன்."
"அம்மா இப்பவுள்ள நிலமை புரிஞ்சு பேசுங்க... முன்னாடி நீங்க பண்ணிய
அட்டூழியத்தையெல்லாம், 'அம்மாதானே' ன்னு நெனச்சு நாங்க பொறுத்துக்கிட்டோம். மேகன்
பொறுத்துக்க மாட்டார். மீராவை நீங்க திட்டுறதையே பொறுத்துக்க முடியாதவர்... மீராவுக்காக
என்ன வேணும்னாலும் செய்வார்.. அஞ்சு வருஷம்! நம்ம மீராவை நெனச்சே வாழ்ந்தவர், இவரைப்போல
நல்ல வரன் நம்ம மீராவுக்கு நம்மலாலேயே கொண்டு வரமுடியாதும்மா. ..
"அழகுசுந்தரத்துக்கென்ன? அவன் மீராவ தங்கமா தாங்குவான். "
"நினைச்சுக்கிட்டிரு! ஏம்மா உன் மூளை என்ன அடகுக்கடையிலயா
இருக்கு? இன்னொருத்தனை விரும்புறான்னு தெரிஞ்சும், மீராவ கட்டிக்கிறேன்னு சொல்ல
அவனுக்கு வெட்கமாவே இல்லையாம்மா? அழகு, கல்யாணம் முடிஞ்சபிறகு மீராவோட காதலை
குத்திக்காட்டியே கொன்னுடுவாம்மா... அப்ப. மீராவ
நம்ம வீட்டுக்கு கூட்டிவந்து வச்சுங்கிறதைத் தவிர நம்மால வேற என்ன பண்ண முடியும்?
அதுக்கப்புறம் அவ வாழ்க்கை என்னாகும்மா? அவ நல்லா வாழனும்னு தானே கல்யாணம்
பண்ணிவைக்கனும்? நமக்குப் பிறகு நம்ம மீராவை பத்திரமா பாத்துக்கிற இடத்துலதான அவளை
கட்டிக்கொடுக்கனும்?"
"இல்லைன்னு யார்டா சொன்னா? தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே தேவலைன்னு சொல்வாங்க
டா. .. மேகனைப் பத்தியும் அவன் குடும்பத்தை பத்தியும் நமக்கென்ன தெரியும்ங்ற? இந்த
காதல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் நல்லா இருக்கும். .. அப்புறம்? நம்ம அந்தஸ்துக்கு
தகுந்த பொண்ண கட்டியிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்னு மேகனுக்குத் தோணும். அழகு வீட்லயாவது, நீயே அண்ணனோட போய் சட்டைய புடிச்சு கேட்க
முடியும்... மேகன் வீட்ல?!! அப்பா கழுத்துல அவன் கைய வச்சப்பவே
வேடிக்கைதானே பாத்துக்கிட்டு இருந்தீங்க?"
"அதெல்லாம் நடக்காது அத்தை. மேகன் குடும்பத்தைப் பார்த்தா நல்லவங்க
மாதிரிதானே தெரியுது? அப்படியே இருந்தாலும், பிடிக்காத ஒருத்தனோட நூறுவருஷம்
வாழுறத விட பிடிச்சவனோட கொஞ்ச நாள் வாழ்ந்தாலே
போதுமே?" என்று நித்யா பேசவும், அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த
பாலசௌந்தரி,
"உங்கிட்ட யார் கேட்டா? எம்பொண்ணு விஷயத்தில தலையிட நீ யாரு?" என்று
எகிறவும்,
"நிறுத்தும்மா! நித்யா என் பொண்டாட்டி! அதோட நீயில்லாம, மேகனுமில்லாம மீரா
கஷ்டப்படுறப்போ... தாய்க்குத் தாயா, தோழிக்குத் தோழியா இருந்தது, நித்யாவும்,
அண்ணியும்தாங்கிறதை மறந்துட்டுப் பேசாத..." என்று பொங்கியவன், சற்று தணிந்து,
பாலசௌந்தரியைப் பார்த்து,
"அப்போ அழகுதான் கூட்டிட்டுப் போயிட்டானா?"
"நான் எங்கடா அப்படிச்சொன்னேன்?" என்று மறுத்தார் அவசரமாக.
"இப்ப ஏன் பதறுறம்மா? அம்மா! மேகன் கிட்ட மாட்டினா அழகு சட்டினிதான்...
உண்மைய சொல்லும்மா நாங்க போயி கூட்டிவந்துடுறோம். போலிசுக்குப் போறேன்னு சொன்னவரை
நான்தான் தடுத்து நிறுத்தியிருக்கேன். .. பெத்த பொண்ணா இருந்தாலும், அவ இஷ்டத்துக்கு
மாறா வற்புறுத்தினா, சட்டத்துல தண்டனைதாம்மா தருவாங்க."
இவ்வாறு இங்கு நடக்கும் அதேநேரத்தில் மேகன், அழகுசுந்தரம் வீட்டிற்குச்
சென்றுவிட்டான். விக்னேஷ் காலிங்பெல் லை அழுத்த, மேகன் ஓங்கி எட்டி உதைத்துக்
கதவைத்திறந்தான்.
அதிர்ச்சியானாலும் மேகனைப் பின்தொடர்ந்து
வீட்டிற்குள் சென்றனர் சிபியும், விக்னேஷும்.
சத்தம்கேட்டு அழகுசுந்தரத்தின் அப்பா
வெளியே வந்தார்.
"இவர்தான் அழகோட அப்பா!" என்றான் விக்னேஷ்.
"ஓ! இவர்தான் நம்ம மிருத்திகாவ மிரட்டி ஓட வைச்சவர் அப்படித்தானே? "
என்று கேட்டான் மேகன். அவன் கண்கள் சிவந்திருந்த விதமே மேகனின் கோபத்தைக்காட்ட,
"இப்ப நாம வந்த வேலைய பாப்போம் மேகன் ப்ளீஸ்!" என்று இறைஞ்சினான்
விக்னேஷ். அதற்குள்,
"உங்க மகன் எங்கே?" என்று கேட்டான் சிபி.
"அவன் தோட்டத்துக்குப் போயிருக்கான்." என்றவர், விக்னேஷைப் பார்த்து,
"இவங்க ரெண்டு பேரும் யாருப்பா?" என்று கேட்டார்.
"ம்ம் உன் மகனோட மச்சான்ங்க! கூப்பிடுயா அவன... இல்ல மிருத்திகா எங்க
இருக்கான்னு சொல்லு" என்று உறுமினான் மேகன். அவனைத் தொட்டு
அமைதிப்படுத்திவிட்டு,
"இவர்தான் எங்க மீராவை கட்டிக்கப் போறவர். மேகன்." என்று விக்னேஷ்
அறிமுகப்படுத்தியதும்,
"ஓ! உடம்புக்கு முடியாத பிள்ளையை 'அம்போ'ன்னு ஆஸ்பத்திரில விட்டுட்டு போனவன்?
"
"மரியாதை இருக்கட்டும்." என்று விக்னேஷ் கூறியதும்,
"இந்தாளுட்டலாம் மரியாதைய எதிர்பாக்காதிங்க விக்னேஷ்." என்று கூறி
விட்டு,
"உம்மகன் எங்க?" என்று மேகன் அவரை நெருங்க போனதும்,
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் அழகுசுந்தரம். அவனைப் பார்த்ததுமே
மேகனுக்குப் ஞாபகம் வந்துவிட்டது.
"டேய்! நீ தானே இன்னைக்குக் காலைல டாக்ஸியில் போனது." என்று அவனை நோக்கிச்
சென்றான் மேகன்.
"எந்த டாக்ஸில? நான் காலைலயிருந்தே வீட்ல..." என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவன் சட்டையைப் பிடித்துவிட்டான் மேகன்.
"பொய் சொன்ன? மவனே" என்று கூறி
அவனை ஓங்கி அரைவிட்டான் மேகன். மேகனின் உள்ளங்கை கொஞ்சம் பெரியதாகவும், முரட்டுத்தனமாகவும்
இருக்கும்.. இதில் கோபமும் சேர்ந்து, விட்ட அரையில் தள்ளிப் போய் விழுந்தான்
அழகுசுந்தரம். பதறி, அவனைத் தூக்கச்சென்ற அழகுசுந்தரத்தின் அப்பாவைத் தடுத்த சிபி.
"பாத்திங்கள்ல? உங்களுக்கு ஒன்னு வேணுமா? இந்த வயசுல அவன்ட அடிவாங்கினா நேரா
பரலோகம்தான். கொலவெறியில இருக்கான்... உண்மையை
சொல்லிட்டு தப்பிக்கப் பாருங்க..." என்றான்.
"விக்னேஷ்! இதெல்லாம் என்ன?" என்று அழகு அப்பா கேட்க,
"மீரா எங்க?" என்று கேட்டான் விக்னேஷ்.
"இங்க வந்து கேட்கிற? எங்களுக்கு என்ன தெரியும்?" என்று அழகு அப்பா
கேட்டதும், அவரை நோக்கி வந்த மேகனைத் தடுத்து,
"சிபி இவர பிடி! அமைதியா பேசி
பாக்கறேன்... உண்மை வரலைன்னா பாத்துக்கலாம்." என்று கூறிய விக்னேஷ், அழகின்
அப்பாவைப் பார்த்து,
"இங்க பாருங்க! பொய் சொல்லி அடிவாங்காதிங்க. .. இன்னைக்கு உங்க மகன் எதுக்கு
என் வீட்டுப் பக்கம் டாக்ஸியில வந்தான்.?"
"அந்த ஊர்ல நீ மட்டும் தான் இருக்கியாப்பா?
என் தம்பி வீடும் அங்க தான இருக்கு? "
"அது யாரு?" என்று மேகன் விக்னேஷிடம் கேட்க,
"ஈஸ்வரியோட அப்பா. அவங்க வீடு நம்ம வீட்டுக்கு முந்தைய பஸ் நிறுத்தத்துக்கு
பக்கத்துல இருக்கு." என்று மேகனிடம் கூறிவிட்டு,
"அப்போ ஏன் அழகு ' எந்த டாக்ஸி ன்னு' பொய் சொல்றான்?" என்று விக்னேஷ் கேட்டுக்
கொண்டிருக்கும் பொழுதே மேகன் பொறுமை இழந்து,
"மிருத்திகா ஆஆ! மிருத்திகா ஆஆ!
என்று வீடே நடுங்கும்படி குரல் கொடுத்தவாறு, வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாக தேடிப்
போனான்... அவன் கூடவே சிபியும் செல்வதைப் பார்த்த அழகு அப்பா.
"என்னப்பா இது அவங்க பாட்டுக்கு வீட்டுக்குள்ள போறாங்க?" என்று
விக்னேஷிடம் கேட்டார்.
"உங்ககிட்ட கேட்டுட்டு உள்ளபோற பொறுமை எங்களுக்கு இல்லைன்னு அர்த்தம்... நான்
கேட்டதுக்கு பதில் இன்னும் வரலயே? " என்று விக்னேஷ்
கேட்டான்
"அப்பாவுக்குத் தெரியாது மச்சான்." என்று அழகு சொல்லும்போதே,
எங்கிருந்தோ வந்தது மேகனின் உறுமல்
"மச்சான்! கிச்சான்னு சொன்ன, பல்லு மொத்தத்தையும் கலட்டிடுவேன். யாருக்கு
யாருடா மச்சான்?" என்று கேட்டான்.
குரல் வந்த திசையைப் பார்த்துவிட்டு, விக்னேஷிடம் திரும்பிய அழகு,
"நான் சித்தப்பா வீட்டுக்குப் போயிட்டு திரும்பி வரும்போது, நாங்க வந்த
டாக்ஸி, மேகனோட வண்டில மோதிடுச்சு. அவருக்கு என்ன ஆச்சோன்ற பதட்டத்துல டாக்ஸி
டிரைவர், வண்டிய வேகமா விட்டுட்டான். நான்தான் பயந்து போயி எட்டிப்பாத்தபோது, அவர்
நின்றபடி எங்க வண்டிய பாத்துக்கிட்டு நின்னாரு. .. அதான் வண்டில இடிச்சதுக்கு
சண்டை போட வந்துட்டீங்கன்னு நெனச்சு அப்படிப் பொய் சொன்னேன். மத்தபடி மிருத்திகா
எங்க இருக்கான்னு எனக்குத் தெரியாது. எங்க வீடு முழுக்க நல்லா
பாத்துக்குங்க." என்றான்.
"உன் சித்தப்பா வீட்டுக்கு எதுக்கு போன?" என்று விக்னேஷ் கேட்டதும்,
அப்பாவை ஒருமுறை பார்த்து விட்டு, "என் ஃபிரண்ட்டுக்கு ஈஸ்வரியை
பிடிச்சிருக்கு. அதான் ஒரு டாக்ஸி பிடிச்சு சும்மா போற மாதிரி போயி, ஈஸ்வரி கிட்ட
சம்மதம் கேட்க போனோம்... இதெல்லாம் எங்க வீட்டு பெரியவங்கட்ட சொல்லலை."
என்றான் அழகு.
இவன் சொல்றது உண்மையா? இல்ல நடிக்கிறானா? என்று விக்னேஷ் அவனையே பார்த்துக்
கொண்டிருக்கும் போது, வீடு முழுதும் நன்கு தேடிவிட்டு வந்தனர் மேகனும் சிபியும்.
"இவனையும் கூட்டிக்கிட்டு நீங்க ஒருதடவை வீடு முழுசும் பாத்துட்டு வாங்க
விக்னேஷ்" என்ற மேகன், அழகுசுந்தரத்தைப் பார்த்து விட்டு,
"போய் பாத்துட்டு வாங்க
மச்சான்!" என்றான் அழுத்தமாக.
விக்னேஷும் தேடிவிட்டு வந்தான். மிருத்திகா இல்லை.
"என்னை, இவன் உங்க வீட்டுக்கு பக்கத்துல பாத்துட்டான். அதனால நாம
தேடிவரும்வோம்னு வேற எங்காவது கூட மிருத்திகாவை மறைச்சு வச்சிருக்கலாம்."
என்று மேகன் கூறியதும் சரியாக படவே, அழகுவிடம் திரும்பிய விக்னேஷ்,
"அந்த டாக்ஸிகாரனை எங்களுக்கு காட்டு வா!” என்று அழைத்துச் சென்றனர்.
அந்த டாக்ஸிகாரனும், அழகுசுந்தரத்தின் ஃபிரண்டும், அழகுசுந்தரம் சொன்னதுபோலவே
சொன்னார்கள்.
மிருத்திகாவின் அப்பா, ஈஸ்வரி வீட்டிற்கு சென்று இருப்பதால், அவருடன் சென்ற
செண்பகத்திற்கு ஃபோன் செய்து விசாரிக்க, அவளும், ஈஸ்வரியிடம்,
"அழகு இன்னைக்கு இங்க வந்தானா?" என்று கேட்டுவிட்டு, அழகுசுந்தரம்
கூறியதைப் போவவே ஈஸ்வரியும் சொன்னதாக கூறினாள். மேலும் ஈஸ்வரி வீட்டிலும், நன்றாகத் தேடிவிட்டதாகவும் மிருத்திகா அங்கே இல்லை என்றும் கூறினாள்.
மீண்டும் அழகு வீட்டிற்கு வந்து,
"மிருத்திகாவை எங்காவது மறைச்சு
வச்சிருந்தா சொல்லிடுங்க... நானா கண்டுபிடிச்சேன்னா. .. அதுக்கப்புறம் வாழ்க்கை
முழுவதும் ஜெயில்தான்." என்று அழகு விடமும். அவன் அப்பா, அம்மா
இருவரையும் மிரட்டிவிட்டு வெளியே வந்த மேகன், திரும்ப உள்ளே போயி, அழகுக்கு கன்னம்
பழுக்க இன்னொரு அரை! அரைந்துவிட்டு,
"நீயா இருப்பியோன்ற சந்தேகத்துக்கே இந்த அடி! உண்மை வெளிவந்தது... இருக்குடா
உனக்கு." என்று அழகுவிடம் கூறியபடியே அவனுடைய பெற்றோர்களையும் எச்சரிக்கைப்
பார்வை பார்த்துவிட்டு வெளியே வந்தான்.
' இங்கேயும் இல்ல... ஈஸ்வரியின் வீட்டிலும் மிருத்திகா இல்லைன்னா வேற எங்க
இருக்கா?" என்று நினைக்கும் போதே மேகனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
மூவருமே மனமுடைந்து போய்
அமர்ந்துவிட்டனர். ..
விக்னேஷ் வீட்டில் கதிர்,
பாலசௌந்தரியிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்...
"அழகு நல்லவன்னு தான் சொன்னேன்... அவன் வீட்ல மீரா இருக்கான்னு சொல்லல... எனக்கே
தெரியாது மீரா எங்க இருக்கான்னு. .. ஆமா நீ எதுக்கு எங்களுக்கு முன்னாடி மேகனுக்கு
தகவல் கோடுத்த?"
"ஏம்மா? அவர்தானே கட்டிக்கப்போறவரு... அதுமட்டுமில்ல நான் ஒன்னும் அவர
கூப்பிடல. .. அவருதான் என்னை இங்கே வரச்சொன்னார்."
"என்னடா சொல்ற? அவன்தான் உன்னை கூப்பிட்டானா?"
"ஆமா நம்ம வீட்டுல நாம எல்லாரும் இருந்தப்ப மேகன் ஃபோன் பண்றாருன்னு போய்
பேசினேனே. அப்ப அவருதான் என்னை இங்க வரச்சொன்னார்."
"அவன் எப்படிடா நமக்கு முன்னாடி இங்க வந்தான்? மாடிக்கு தானே
போனான்.?"
"எனக்கென்ன தெரியும்? ஏறிக்குதிச்சு வந்திருப்பார். இப்ப அதுவா
முக்கியம்?"
"அடப்பாவி! நாங்க என்ன விஷயம்னு கேட்டதுக்கு ஒன்னுமில்லை ன்னு சொல்லிட்டு
வந்த?"
"என்ன சொல்லச் சொல்ற? ரெண்டு பேரும் கலந்துட்டாங்க வாங்கன்னா? ஏம்மா நீ
வேற" என்று கதிர் உளறி விட்டான்.
"என்னடா சொல்ற?"
"கடவுளே! உளறிட்டீங்க." என்று நித்யா பதற,
"நித்யா என்ன சொல்ற? என்ன நடந்தது?" என்று தீபாவும் பதறி கேட்க,
எப்படிச் சொல்வதென்று தெரியாமல் கதிரும், நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து
முழித்தனர்.
"டேய்! அறிவுகெட்டவனே! இங்க நான் கத்திக்கிட்டு இருக்கேன் அங்க என்ன பாக்குற?
நீ சொன்னது எனக்குத் தெளிவா கேட்டுடுச்சு. சொல்லு என்ன ஆச்சு?" என்று
பாலசௌந்தரி, காளிரூபம் எடுக்கவே,
'இனி மறைக்க முடியாது' என்று நினைத்து,
மேகன் கூறிய விஷயங்களைக் கூறினான்.
"நீயெல்லாம் ஒரு அண்ணனாடா? நம்ம பொண்ண ஒருத்தன் தொட்டிருக்கான்...
எல்லாரையும் கூட்டிவந்து அவனை வெட்டிப்போடாம நின்னு ஆரத்தி
எடுத்தியோ?" என்று பாலசௌந்தரி கத்த,
"கிழிச்சோம்! சத்தமா பேசாதம்மா.... மேகனை நீ வெட்டிடுவ? ம்ம்? என்னவோ மேகன்
மட்டும் தப்பு பண்ண மாதிரி குதிக்கிற? நீதானே ஐடியா எடுத்துக் கொடுத்தது?"
என்று கதிர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாலசௌந்தரி மயங்கிச் சரிந்தார்.
பாலசௌந்தரிக்கு
என்ன ஆனது?
மிருத்திகா எங்கே?
அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம். . .
❤❤❤❤❤❤
0 Comments