சிம்டாங்காரன்: அத்தியாயம்- 29

 

29

தனித்துப் போராடி

தளர்ந்து ஓய்ந்த வேளையில்

தோள் கொடுக்க வந்தாயோ?

🌹🌹🌹🌹🌹🌹

 

மேகனும், மிருத்திகாவும் வீட்டிலிருந்த பொழுது, திறந்து வைத்திருந்த வாசல் கதவை, யாரோ தட்டுவது போலத் தோன்ற, வேகமாக வெளியே எட்டிப் பார்த்த மிருத்திகா பயத்தில் பின்வாங்கி, மேகனின் பின்னால் மறைந்து கொண்டாள்.

 

"யார் ரித்தி? கதவு திறந்து தானே இருந்தது?" என்று மேகன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே, உள்ளே வந்த பாலசௌந்தரி,

(மிருத்திகாவின் அம்மா!)

 



"நினைச்சேன்... இப்படி தான் நடக்கும் னு.... வீட்ல பெரியவங்க இருந்தா கண்டிப்பாங்க...இப்படி கண்டவனோட திரிய முடியாதுன்னு தானே, பெரிய இவ மாதிரி பெரியவங்களோட சண்டை போட்டுட்டுத் தனியா வந்த? வந்ததே இதுக்குதானே? நீயல்லாம் ஒரு பொண்ணு! த்தூ!! கொஞ்சமாவது கூச்ச நாச்சம் வேண்டாம்... அடுத்த ஆம்பளையோட உன்னை இங்க விட்டுட்டு, இந்த வீட்டு சிறுக்கி என்ன பண்றா? அடியேய்! இதுக்குத்தான் இங்க கூட்டிவந்தியா?" என்று மேலும் அந்த இடத்தில் ஒரு ஆண் இருக்கிறான் என்ற எண்ணமில்லாமல் காது கூசும் படியான வார்த்தைகளில் திட்டியபடி அடுப்படி வரை சென்ற பாலசௌந்தரி, வீட்டில் யாருமில்லாததைக் கண்டு, மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியபடி மிருத்திகாவை ஆங்காரத்துடன் நெருங்கி, மிருத்திகாவின் தலைமுடியை பிடிக்க எட்டும் நேரத்தில், பாலசௌந்தரி கையைப்பற்றிய மேகன்,

 

"ஏய் ! யார்நீ? இங்க வந்து என்ன பண்ற?" என்று அதட்ட,

 

'அவர்கள் வீட்டு ஆண்களைப்போல் வேடிக்கை பார்ப்பான்... அல்லது மிருத்திகாவின் அண்ணன்கள் போல கெஞ்சி சத்தம் போடுவான். .. நாம மேற்கொண்டு சப்தம் போட்டு, ஊரைக்கூட்டி அசிங்கப்படுத்தித் துரத்தி விடலாம்' என்று எண்ணிய பாலசௌந்தரிக்கு, மேகன் அவள் கையைப் பற்றியதே, மணிக்கட்டு எரிய, அவன், பேசிய வார்த்தைகளையும் சப்தமில்லாமல் மென்று துப்பியதை எதிர்பார்க்கவில்லை... மேகனிடமிருந்து கைகளை விடுவிக்கவே முடியாத கோபத்தில் அவள் கத்த தொடங்க, மேகனின் பின்னால் நின்ற மிருத்திகா,

 

"இவங்க என் அம்மா!" என்றாள். உடனே பதறி பாலசௌந்தரியின் கையை விடுவித்த மேகன்,

 

"ஸாரி அத்தை! நீங்க மிருத்திகாவோட அம்மான்னு எனக்குத் தெரியாது... நான் மேகன்.." என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

 

மேகன் சற்று இறங்கிப் பேசவும்,

 

"பெரிய இவன்... போடா! இவளச் சொல்லனும்... " என்று ஏதோ கத்தியபடி, மீண்டும் மிருத்திகாவை நெருங்க,

 

"அத்தை அவளத் தொடாதீங்க.."

 

"யாரு அத்தை? உன் அப்பன்கூடவா பிறந்தேன்? இவளத் தொட்டா என்ன பண்ணுவ? இவ கழுத்தை நெரிச்சு கொன்னுகூட போடுவேன்... நீ யாரு அதைக் கேட்க?"

 

"எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசத்தான், உங்க ரெண்டு மகன் குடும்பமும் எங்க வீட்டுக்கு போயிருக்காங்க... " என்று மேகன் சொல்லி முடிப்பதற்குள்,

 

"அவங்க யாரு இவளுக்கு கல்யாணம் பேச? எத்தனை வருஷமானாலும் நான் பாக்கிறவனைத்தான் இவ கட்டிக்கனும். .. " என்று பாலசௌந்தரி பேசிக்கொண்டிருக்கும் போதே...

 

"கொஞ்சமாவது ஒரு அம்மா மாதிரி பேசுங்க... இவ என்னைத்தான் விரும்புறாள்னு தெரிஞ்சும் இன்னொருத்தனுக்குக் கல்யாணம் பண்ணலாமா?"

 

"அவ உன்னைக் கல்யாணமே பண்ணியிருந்தாலும், அறுத்துவிட்டு வேற கல்யாணம் பண்ணிவைப்பேன்..."

 

"ஏங்க லவ் பண்ணது தப்பா? உங்க சம்மதத்துக்குத் தானே காத்திருக்கோம்... பின்ன ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?"

 

"உன்னை எனக்கு புடிக்கல..."

 

"என்னாஆது?!!" என்று புருவங்கள் நெரிபட, அதிர்ச்சியுடன் சிரிப்பும் ஒருசேரக் கேட்ட மேகனிடம்,

 


"சொல்றது காதுல விழல? உன்னை எனக்கு புடிக்கல.."

 

"உங்க பொண்ணுக்குப் புடிச்சிருக்கே? "

 

"அவளுக்கு புடிச்சா போதுமா?"

 

"சரி! உங்களுக்கு பிடிக்கனும்னா நான் என்ன செய்யனும்?"

 

"நீ இமயமலையவே கொண்டு வந்தாலும், எனக்கு உன்னை புடிக்காது..."

 

"இமயமலையா? ஏங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா? உங்களுக்கே இது வீம்பா தெரியல?

 

"அது அப்படித்தான்... நீ ஓடிப்போயிடு... இல்ல மரியாதை கெட்டுப் போயிடும்."

 

"இவ என் பொண்டாட்டி... நான் எதுக்கு போகனும்?"

 

"ஒழுங்கா சொன்னா போகமாட்ட... இல்ல? இரு ஊரைக்கூட்டி உன் மானத்தை வாங்குறேன்.."

 

"ரொம்ப நல்லது. முதல்ல அதை செய்யுங்க... அதே ஊர சாட்சியாவச்சு, இவ கழுத்துல தாலி கட்டிடுறேன். .."

 

'இவன் இதுக்கெல்லாம் அசர மாட்டான் போலிருக்கே? சொல்லும் போல ஊர கூட்டினா, இவன் சொல்றது தான் நடக்கும்... நான் பெத்த தறுதலை சரியில்லையே... இப்ப எப்படி இவனை விரட்டுவது?' என்று யோசித்தவள் கண்களில் மிருத்திகா பட ,

 

"இவள மிதக்கிற மிதியில நீ தானா ஓடிப்போகனும் இல்ல இவளைக் கொன்னே போட்டுடுவேன்..." என்று கூறியபடி மீண்டும் மிருத்திகாவை நோக்கி பாய்ந்த பாலசௌந்தரியை வழிமறித்து நின்றவனை,

 


"வழிய விடு இல்ல..." அருகில் கிடந்த கட்டையை எடுத்து மிருத்திகா மேல் வீச, இதை மிருத்திகா எதிர்பார்க்கவில்லை என்றாலும், அனிச்சை செயலாக விலக, நல்லவேளையாக அவள்மேல் படவில்லை. பதறி மிருத்திகாவின் அருகில் வந்தவனுக்கு உயிரே போய் விட்டது... அவன் இதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் எழ,

 

"பொம்பளை, அதுவும் மிருத்திகாவுக்கு அம்மான்னு பொறுமையா பேசிக்கிட்டிருக்கேன்... எவ்வளவு தைரியம் இருந்தா, என் முன்னாடியே அவள அடிக்க கட்டைய வீசுவீங்க? போங்க! போய் அந்த நாற்காலியில் உட்காருங்க. இல்ல இதே கட்டைய வச்சு..." என்று சொன்னபடி மிருத்திகா மேல் வீசிய கட்டையை எடுத்து அருகில் இருந்த தூணில், தனக்குள் அடங்கியிருந்த ஆத்திரத்தையெல்லாம் திரட்டி ஓங்கி அடிக்க, கட்டை ரெண்டாக சிதறியது... அதே ஆத்திரத்துடன் திரும்பி பாலசௌந்தரியை மேகன் பார்க்க,

 

ஆடிப்போயி மேகன் காட்டிய நாற்காலியில் அமர்ந்தாள் பாலசௌந்தரி. ‘அம்மாடிஈஈ! அவ்வளவு பெரிய கட்டையவே உடைச்சுட்டானே... கட்டைய ஒடச்சிட்டு என்னை எப்படி முறைக்கிறான். .. இதே மாதிரி என்னையும் அடிச்சுடுவேன்றானோ? இவன் அடிச்சா என் தலை திரும்பிவிடும் போலயே? பயங்கர மொரட்டுப் பயலா இருக்கானே! இவனிடம் நம்ம வேலை நடக்காது...இவனை வேற வழியில போயி தான் பிரிக்கனும். ... மொரட்டுப் பயல வச்சு என்னையே மிரட்டப்பாக்கிறாயா? இருடி! இவனை உங்கிட்டயிருந்து பிரிக்கிறேன்...' என்று நினைத்தவளுக்கு எதிர் நாற்காலியில் மேகன் அமர்ந்து, மீண்டும் பாலசௌந்தரியிடம் பேசினான். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் அடமாக இருக்கவே,

 

"உங்க வீம்புக்கு அவ வாழ்க்கையை ஏன் கெடுக்கிறீங்க? உங்களுக்கு பிடிச்ச அந்தப் பையன், நல்லவங்களா இருந்தா, வேற ஒருத்தரை விரும்பும் பெண்ணை, கட்டாயப் படுத்த மாட்டாங்க..."

 

"அவன் எப்படிப் பட்டவனா இருந்தாலும் அதப்பத்தி எனக்குக் கவலையில்ல..."

 

"உங்க பொண்ணு வாழனும்னு நினைக்கவே இல்லையா?"

 



"அதப் பத்தி நீ பேசத்தேவையில்ல... நீ, போ!"

 

"எங்கிட்டயிருந்து பிரிச்சு, அந்த ரெண்டுங்கெட்டான் கூட அனுப்ப உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?" என்று மேகன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே

 

"அவளுக்கு அதெல்லாம் இல்ல தம்பி! அவளுக்கு என்ன தேவைன்னே தெரியல...." என்று கூறிய மிருத்திகாவின் அப்பாவை அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தார்கள், மிருத்திகாவும் மேகனும்.

 

அப்பாவைப் பார்த்ததும் ஓடிப்போய் தன் அப்பாவின் அருகில் நின்று கொண்டாள் மிருத்திகா...உடனே சுதாரித்த பாலசௌந்தரி,

 

"வர்றதுக்கு இவ்வளவு நேரமா?... எம் பொண்ணு, எம் பொண்ணுன்னு தலையில் தூக்கிவச்சு கொண்டாடினீங்களே? இவ என்ன பண்ணீருக்கா பாருங்க... வீட்ல யாருமில்லாத நேரத்தில, ஒரு முரட்டுப்பயல கூட்டிட்டு வந்து, கூத்தடிச்சுக்கிட்டு இருக்கா... கேட்டதுக்கு என்னை மிரட்டி, அந்தா.... அந்த கம்பை, இந்த தூண்ல அடிச்சுட்டு, என்னைப் பார்த்தான் பாருங்க ஒரு பார்வை... வயித்துக்குள்ள “கிர்ர்ர்”னு ஆயிடுச்சு... அப்புறம், இந்த நாற்காலியில உக்காருன்னு அதட்டினான். நான் பயந்துபோய் உக்காந்திருந்தேன். என் கையைப் பாருங்க... கையைப் புடிச்சு முறுக்கி..."

 

"இல்லப்பா அம்மா என் தலைமுடியை பிடிச்சு அடிக்க வந்தாங்க... இவர் தடுக்கத்தான் அம்மா கைய புடிச்சார். அதுவும் இவங்க என் அம்மான்னு நான் சொன்னதுமே, கையை விட்டுட்டார்ப்பா." என்றாள் மிருத்திகா.

 

"பாத்திங்களா! பெத்த அம்மாவ, அடுத்தவன அடிக்கவிட்டு, வேடிக்கை பார்த்ததுமில்லாம, உங்ககிட்ட சொல்லித்தர்றா" என்று மிருத்திகாவின் அம்மா, மிருத்திகாவின் அப்பாவிடம் அழ ஆரம்பித்தார்.

 

"வந்ததும் வேலைய காட்டிட்டீங்களாம்மா?" என்று கேட்டபடி, அப்பாவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் விக்னேஷ். அவன் பின்னால் நின்ற கதிர், தீபா, நித்யா மூவரையும் பார்த்துவிட்டு,

 

"வாடா! வா! எங்க ஊரச்சுத்த போயிட்ட? இங்க இதுக ரெண்டையும் தனியா விட்டுட்டு... உன் பொண்டாட்டியோட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்டியா? எங்க உன் பொண்டாட்டி?" என்று கேட்டுவிட்டு, தீபாவை நோக்கி,

 

"ஏண்டி நல்ல குடுபத்துலதான பிறந்த?" என்று மேலும் ஏதோ பேசப்போனவரிடம் கதிர்,

 

"அம்மா! போதும் மா! . நம்ம வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளை இங்கேதான் இருக்கார். கொஞ்சமாவது" என்று கூறிக் கொண்டிருந்தவன் முன் வந்த பாலசௌந்தரி,

 

"யாரு டா மாப்பிள்ளை? இவனா? இன்னைக்கு, என்னைக் கட்டையால அடிக்கவந்தவன், உங்களையெல்லாம் அடிக்க எவ்வளவு நேரமாகும்? இத்தனை வருஷத்துல என்னை 'தள்ளி நில்லுங்க!'ன்னு, அழகுசுந்தரம் (ஒன்னு விட்ட அண்ணன்) சொல்லியிருப்பானா? அவன் தான் மாப்பிள்ளை."

 

"நான் இவரதான் கட்டிக்குவேன்" என்று மிருத்திகா கூறவும்,

 

தன்னுடைய, மகன்கள், புருஷன் அருகிலிருக்கும் தைரியத்தில், பாலசௌந்தரி,

 

"ஏண்டி .... எவனோ ஒருத்தன புருஷன்னு சொல்ல..." என்று கத்தியபடி மிருத்திகாவை அடிக்க வந்த, பாலசௌந்தரியின் குறுக்கே வந்து நின்றான் மேகன்.

இரண்டடி பின்னெடுத்த பாலசௌந்தரியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த தன் குடும்பத்தினரிடம்,

 

"பாத்தீங்களா? இத்தனை பேர் இருக்கீங்க... என்னை மெரட்டுறான்." என்றதோடு, மேகனைத் தள்ளிக்கொண்டு மிருத்திகாவின் கன்னத்தில் பாலசௌந்தரி அரைய,

சட்டென்று அருகிலிருந்த மிருத்திகாவின் அப்பா கழுத்தருகில், கழுத்தை நெரித்து விடுவதைப் போல கை வைத்த மேகன்,

 

"என் பொண்டாட்டி மேல, இனிமே விரல் நுனி பட்டாலும், உங்க புருஷனை நீங்க உயிரோட பார்க்க முடியாது." என்று கர்ஜித்த மேகனைப் பார்க்கும்பொழுது, நரசிம்ம அவதாரத்தைப் பார்த்தது போலிருந்தது அனைவருக்கும்...

 

மிரண்டு பின்வாங்கிய பாலசௌந்தரி,

 

"விடு அவர விடு!" என்றபடி மகன்களைப் பார்த்து,

 

"அப்பாவ விடச்சொல்லுங்கடா..." என்று கத்தவும்,

 

"என்னை மன்னிச்சுடுங்க மாமா!" என்று மிருத்திகாவின் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, “இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் மிருத்திகா மேல் யார் கையும் படக்கூடாது... அவளை, முறைப்படி என் வீட்டுக்குக் கூட்டிப்போக நினைக்கிறேன். இல்லைனா இவங்க கிட்ட என் பொண்டாட்டிய விட்டுட்டுப் போக எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்ல. நான் அவளுக்காக எதையும் செய்வேன்றதை ஞாபகம் வச்சுக்கச் சொல்லு... இல்ல... நான் வேற மாதிரி ஆயிடுவேன்.” என்ற மேகனுக்கு, தனக்காகத்தான் அம்மாவிடம் அண்ணி திட்டு வாங்குறாங்கன்னு மிருத்திகா சொன்னது நினைவில் வரவும், ‘மேகன் வெளியே சென்ற பிறகு, மிருத்திகாவை ஒன்னும் செய்ய முடியவில்லை என்ற ஆத்திரத்தில், பாலசௌந்தரி தீபாவை கஷ்டப்படுத்திவிடக்கூடாது’ என்று நினைத்தவன், “அதே மாதிரி என் அக்கா தீபா மேலயும் கை படக் கூடாது... " என்று கூறி விட்டு பாலசௌந்தரியைப் பார்த்தான்.

அம்மா சகலமும் அடங்கி அமர்ந்து விட்டாள்.

 



 

நேராக மிருத்திகாவிடம் வந்தவன், தன் கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி அவள் கழுத்தில் போட்டுவிட்டு, "நீ என் பொண்டாட்டி... உன்னை அடிக்க வந்தா எங்க வீட்டுக்கு வந்துடு... புரியுதா? எதைப்பற்றியும் கவலைப்படாம வந்துடு... சடங்கு சம்பிரதாயமெல்லாம் மனிதர்கள் வாழதான். .. புரியுதா? இனி யாரா இருந்தாலும் என்னைத்தாண்டித்தான் உன்னை நெருங்க ழுடியும். நான் கிளம்புறேன். .. "என்று கூறி விட்டுச் சென்று விட்டான்.

 

வீடே புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. அனைவரும் அங்கிருந்து நகர, பாலசௌந்தரி மட்டும் அங்கேயே அமர்ந்திருந்தார். அவரை சமாதானப்படுத்தும் நோக்கில், மிருத்திகா அவரை நோக்கிச் செல்ல,

 

"நில்லு மீரா! அப்படியே விட்டுவிடு இனியாவது உன்னை துன்புறுத்தாம இருக்கட்டும்." என்று கூறி அழைத்துச் சென்றான் கதிர்.

 

இனிமேலாவது மிருத்திகா கொடுமைகளிலிருந்து மீட்கப் படுவாளா?

 

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

❤❤❤❤❤

Post a Comment

0 Comments