26
மேகங்களுடன் சரசமாடும்
பால் நிலவே...
மேகனுக்கு தூது செல்ல
பாஷை யற்றுபோனாயோ?
🌹🌹🌹🌹🌹🌹
மிருத்திகா
ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தது வரை சொன்ன கதிர், கண்களில் கண்ணீர் முட்ட திரும்பி
நின்றான். அப்பொழுது அருகில் உள்ள மரத்தடியில் நின்றவாறு யாரோ தாங்கள் பேசுவதை
கேட்கின்றனர் என்று உணர்ந்து, மிருத்திகா, செண்பகம், விக்னேஷ் ஆகியோரிடம் சொல்ல,
மற்ற மூவரும் திரும்பி பார்த்ததும் மரத்தடியில் நின்றவர்கள், இவர்களை நோக்கி வர,
நால்வரும் சற்று கூர்ந்து கவனித்தனர்.
இருட்டான மரத்தடியை விட்டு அவர்கள் வெளிவர நிலவின் ஒளி, மேகன், சிபி
இருவரையும் நன்றாக அடையாளம் காட்டியது.
"இவர்கள்தான்
வீட்டிற்கு சென்றார்களே! எப்பொழுது இங்கு வந்தனர்?" என்று நால்வரும்
யோசிக்கும் பொழுதே மேகனும், சிபியும் வந்து விட்டனர்.
"இங்க என்ன பண்றீங்க?" என்று
விக்னேஷும், கதிரும்,
"வீட்டுக்குப் போகலையா?" என்று
மிருத்திகா வும்,
"எப்ப வந்தீங்க?" என்று
செண்பகமும் ஓரே நேரத்தில் கேட்டனர்.
"ஆச்சி கொடுத்து விட்ட புடவை பைகளை காரிலேயே விட்டுட்டு
வந்துட்டீங்க. அத கொடுக்கத்தான் வந்தோம். நீ ஆக்ஸிடெண்ட் நடந்ததற்குப் பிறகு,
நீங்கள் தென்னாங்கூர் போனதை பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே
வந்துட்டோம். ..அடுத்து நீ சொன்ன விஷயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில்
நின்றுவிட்டோம். . அடுத்தடுத்து உனக்கு நடந்த கொடுமைகள் எங்களை, அங்கேயே நிற்பதா?
இல்லை உங்கள் அருகில் வருவதான்னு தெரியாதஅளவு மரத்துப் போகச் செய்தது. வெளி உலகம்தான்
உன்னை காயப் படுத்தி இருக்கும்னு நெனச்சோம். ஆனா ... நீங்கள் திரும்பி பார்க்கவும்தான் எங்களுக்கு உணர்வு வந்து
உங்களிடம் வந்தோம்". என்று சிபி கூறிக்கொண்டிருந்தான்.
ஆனால் மேகன்
இன்னும் மனதளவில் மிகவும் நொருங்கிப் போயிருந்தான். அவன் கண்கள் இரண்டும் கோவைப்
பழங்களாக சிவந்திருந்தன. அதனால் கண்களில் திரண்டிருந்த கண்ணீர், ரத்தம் போன்று
சிவப்பாக தெரிந்தது. பற்களைக் கடித்தபடி, கைவிரல்களை இருக்கி மூடியிருந்தான்...
முகம் ரெத்த ஓட்டத்தை நிறுத்தி வெளிறியிருந்தது...
நெற்றி பொட்டில்
நரம்புகள் புடைத்து தெரிய, அவன் நிலையை பார்த்த மிருத்திகாவின் கண்கள் விரிய, அவள்
பார்வையைத் தொடர்ந்து, மேகனைப் பார்த்த சிபி, அரண்டுவிட்டான்.
'இவனை கவனிக்காம
போயிட்டேனே! இப்படியே விட்டால் தலைவலி வந்துடுமே!' என்று பயந்த சிபி,
"மேகா!
டேய்! கையை தளர்த்து... பல்ல கடிக்காதடா ப்ளீஸ்!" என்று பதறி அருகில் இருந்த
கல் மேடையில் மேகனை அமரவைத்து,
"தண்ணி இருக்கா?" என்று
கேட்டான் மற்ற நால்வரிடமும்.
மிருத்திகா என்ன
செய்வதென்று தெரியாமல் உறைய, செண்பகம் தன் கைப் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை
எடுத்துக் கொடுத்தாள்.
"இந்தா
குடிடா! என்று சொல்லியும் அவன் வாயைத் திறக்காமல் இருக்கவே ஓங்கி மேகனின்
கண்ணத்தில் அரைந்தான் சிபி,
"ஏய்! என்ன
செய்ற?"என்று பதறி தடுத்த அண்ணன்கள், சிபி அரைந்ததால் மேகன் தன்னிலை
திரும்பி, தலையைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்ததைப் பார்த்து,
"என்ன ஆச்சு?" என்று
கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே,
சட்டென்று
எழுந்த மேகன், திருதிரு வென முழித்துக் கொண்டிருந்த மிருத்திகாவை இழுத்து இறுக்கி
அணைத்துக் கொண்டான்.
‘என்ன நடக்கிறது?’
என்று மற்றவர்கள் உணர்ந்து, மேகனைத் தொடப் போக, செண்பகம் தடுத்தாள். 'கொஞ்ச நேரம்
விடுங்கள்.' என்று சைகை காட்டினாள்.
"என்னை மன்னிச்சுடு
ரித்தி! என்னால் தானே உனக்கு இவ்வளவு கஷ்டம்! நான் கோழை ரித்தி! அன்றே ஆஸ்பத்திரில
உள்ள வந்து பாத்திருக்கனும். எனக்கு, அவர்கள் சொன்ன நிலையில் உன்னைப் பார்க்கும்
தைரியம் இல்லை!... அதன் பிறகாவது இங்கு வந்திருக்கனும்... நீயில்லாத இந்த ஊர்
எனக்கு நரகமாக தோன்றியது... இங்கேதான் என் உயிர் இருக்கிறது என்பதை அறியாமல்,
நடைப்பிணமாக அலைந்தேன். சிபி மட்டும் வற்புறுத்தவில்லைனா இங்கே வந்திருக்க
மாட்டேன்... என் உயிரான நீ! இங்கே வதைபட்ட போது, நான் அங்கே ஏனென்றே தெரியாமல்
துடித்தேன். தினமும் உன்னையே நினைத்து, என்னை நானே வதைத்துக் கொண்டதற்கு, ஒருமுறை
நான் இங்கே வந்திருக்கனும் ரித்தி... நீ இங்கே துடித்தது என் உள்ளுணர்வு
உணர்த்திக் கொண்டேதானிருந்தது. ஆனால் மூளை அதை ஏற்க மறுத்தது, தினமும் மனதிற்கும்
முளைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் நான் பைத்தியக்காரனாக அழைந்தேன் டா... நீ என் உயிர், கண்ணம்மா!... இனி என்னை மீறி
காற்றையும் உன்னை நெருங்க விட மாட்டேன்." என்று பிதற்றிக் கொண்டே மிருத்திகாவை
அணைப்பிலிருந்து விடாமல் இருந்தான்.
"டேய்!
போதும் டா! நாங்கல்லாம் இருக்கோம்." என்று மனம்விட்டு சிரித்தவாறு, தன் உயிர்
நண்பனைக் கலாய்த்தான் சிபி!
ஆனால்
மிருத்திகாவின் அண்ணன்கள் இருவருமே சிலையாக நின்று விட்டனர். தன் தங்கை மேல் மேகன்
வைத்திருக்கும் அன்பின் ஆழம் புரிந்து, அவர்கள் இருவரையும் பிரிக்காமல் நின்றனர்.
தன் தங்கை பாதுகாப்பான கரங்களில் இருக்கிறாள்... இனி இவன் பார்த்துக் கொள்வான்.
இவனை மீறி யாராலும் தன் தங்கையை நெருங்க முடியாது என்பதை நன்றாக புரிந்து இதுவரை
தங்கள் நெஞ்சில் இருந்த தீராத வலி மறைந்த சந்தோஷத்தில் சிலையானர்.
ஒருவாறு
மேகனையும், மிருத்திகாவையும் சமாதானப் படுத்தி நிற்க வைத்து விட்டு திரும்பிய
சிபி, கண்கூட சிமிட்டாமல் நின்றுகொண்டிருந்த அண்ணங்களைப் பார்த்து,
"இவங்களுக்கு
என்ன ஆச்சு?!! டேய் கதிர்! என்னடா ராத்திரி ஒன்பது மணிக்கு மோகினிய
பாத்துட்டீங்களா? என்னங்கடா ஆளாளுக்கு சிலையாகிட்டீங்க? " என்று சிபி
அண்ணன்களை கலாய்க்க,
"என்னது?
ஒன்பது மணியா? அய்யோ வீட்ல தேடுவாங்களே?" என்று செண்பகமும்,
"ஒன்பது
மணியா? ஹாஸ்டல் ல உள்ள விட மாட்டாங்களே?" என்று மிருத்திகாவும்.
"ஒன்பது
மணியா? என் பொண்டாட்டி திட்டப் போறா!" என்று இரு அண்ணன்களும் பதற.
"இதுலயுமாடா ஒன்னா உளறுவீங்க?!!! நிறுத்துங்க
உங்க ராமாயணத்த! நானும் பாக்கறேன் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அதிர்ச்சி
ஆயிட்டுருக்கீங்களே? என்னை என்ன நினைச்சு கிட்டீங்க? ஒருபக்கம் சரியானா மறுபக்கம்
சத்தம் போடுறீங்க. .. நீங்களும், பைத்தியமாகி என்னையும் ஏன்
பைத்தியமாக்குறீங்க?... நான் பேசி முடிக்கும் வரை யாரும் பேசக்கூடாது." என்று
கூறிய சிபி சோர்ந்து போய் கல் மேடையில் அமர்ந்தான்.
அவனைப் பார்த்து அனைவரும் சிரிக்க,
"சிரிப்பீங்கடா
சிரிப்பீங்க! தெளிவாயிட்டீங்கள்ல? என்னைப் பார்த்தா சிரிப்புதான் வரும்"
என்று சோகமாக கூறினான் சிபி. பிறகு செண்பகத்தைப் பார்த்து,
"வா!
முதலில் உன்னை உன் வீட்டில் டெலிவரி பண்ணிட்டு போறேன்." என்ற சிபியிடம்.
"அதானே
என்னடா அடங்கி இருக்கானே னு நினைச்சேன்.. என்னை ஏன்டா வம்பிழுக்குற?" என்று
செண்பகம், சிபியுடன் சண்டைக்குப் போக,
"மணி
ஒன்பது பதினஞ்சு! வீட்டுக்கு போகலயா? என்னை விரட்டிக் கிட்டு இருக்கப்
போறியா?" என்று சிபி கிண்டலடித்தான்.
‘மிருத்திகா எங்கே போவால்?’
என்று மேகனுக்கு தோன்ற மிருத்திகாவிடம், "நம்ம வீட்டுக்கு வந்துடு."
என்றான் மேகன்.
"அதுசரி
பட்டு வராது.. முறைப்படி உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். .. இப்ப எங்கள்
வீட்டிற்கு அழைத்துச் செல்கிறோம்." என்று வழக்கம்போல ஒரே மாதிரி சொன்னார்கள்.
"உங்க
பொண்டாட்டி திட்டுவாங்க னு தொடை நடுங்கினீங்களே?" என்று சிபி கிண்டலடிக்க,
"எங்களத்தான்
திட்டுவா... மீரா வ திட்ட மாட்டா" என்று மீண்டும் ஒரே மாதிரி கூற,
"கொஞ்சம்
இருங்க! உங்க ரெண்டு பேருக்கும் என்ன வியாதி? தனித்தனியா பேசமாட்டீங்களா?"
என்று ஆர்வமாக கேட்டவாறு மீண்டும் அமர்ந்தான் சிபி.
"ஒன்பதரை மணி" என்று மேகன்
நினைவூட்ட, ஆளுக்கொரு திசையாய் நகர,
செண்பகத்தை அவள்
வீட்டினரிடம், நேரமானதற்கு மன்னிப்பு கேட்டு விட்டுவிட்டு, விக்னேஷ் வீட்டில்
மிருத்திகாவையும் விட்டுவிட்டு, கதிர் வீட்டை நோக்கி கார் சென்றது.
"அதுக்குள்ள ஏன்
கதிர் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எங்கள பாருங்க! யாருக்கும் பதில் சொல்ல
தேவையில்லை ... முரட்டு சிங்கிள் நாங்க!" என்று மேகன் ஜாலியாக கூற.
"எத்தனை நாளைக்கு?
என் தங்கை வரும் வரை தானே? அதுக்கப்புறம் பார்ப்போம்..." என்று சிரித்தான் கதிர்.
"நாந்தான்பா! எதிலயும் சிக்கல். .. " என்று சிபி கூறவும்,
"சாமியாரா
போகப்போறீங்களா ப்ரோ? உங்கள பாத்தா எனக்கும் அப்படிதான் தோணுது.. ஏன்னா? உங்களுக்கு
எல்லாம் ஒரு பொண்ணு பத்தாது" என்று கதிர் கலாய்க்க.
"ஆஹா! என்னப்பத்தி உன் கணிப்பு
சூப்பர் ப்ரோ!"
"இங்க
ஒருத்திக்கு வழி இல்லயாம். .. இதுல" என்று மேகன் வாய்மூடி சிரிக்க...
"இத நீயா டா சொல்றது? யாரு எத சொல்றது ன்னு இல்லையாடா?"
"நான் சொல்லாம வேற யாரால சொல்ல முடியும்?"
“எங்கடா விட்ட? சரியா
நான் வேலைக்குப் போயி செட்டில் ஆக நினைக்கும் நேரத்தில் ஆஸ்திரேலியா வந்து
சேர்ந்தாய்... அஞ்சு வருஷமா ஒரு பொண்ண சைட் அடிக்க விட்டிருப்பாயா? அதுவா வர்ற பொண்ணுங்க ட்ட கடலை போட்டு, ஓகே ஆயிடும் போலிருக்கே னு
நினைச்சு திரும்பி பார்த்தா...
"கடவுள் மனிதனாக
பிறக்க வேண்டும்!
அவன் காதலித்து வேதனையில்
வாட வேண்டும்! "
என்ற ரேஞ்சுக்கு நீ ஃபீல் பண்ணிக்கிட்டிருப்ப... அந்த முகத்த பாத்த
யாருக்காவது காதல் வருமாடா?
உன் ஆளை பாத்த பின்னாடி தானடா வயலின்
வாசிக்கிறத நிப்பாட்டிட்டு இருக்க? இல்லைனா செண்பா வ நான் கலாய்க்கும் போது
சிரிப்பியா?!!" என்று சிபி கூறிக்கொண்டிருக்கும் போதே,
"டேய் அது கல்யாணம் ஆன பொண்ணு!" என்று மேகன் கூறவும்,
"என்னவோ எனக்கு அவள
பாத்தாலே கலாய்க்க தோணுது டா." என்று சிபி கூறியதும் சட்டென்று கதிர் திரும்பி
பார்ப்பதை ரியர்வியூ கண்ணாடி மூலம் பார்த்த மேகன்,
"டென்ஷன் ஆகாதீங்க. .. இவன் அப்படித்தான்.. " என்று
சிரித்தான் மேகன்.
"ஆமா ப்ரோ. தேர இழுத்து தெருவில விட்டுடாதீங்க.. அப்புறம் ரௌடிபேபி என்னை
கொட்டிடுவா."
"ரௌடிபேபி யா? ஹாஹாஹா!
கொட்டிடுச்சாஆஆ... ஹாஹாஹா!" என்று கதிர் சிரிக்க,
"உன் வீடு
வந்துடுச்சு. அடக்கி வாசி! வாசல்ல நிக்கிறது தான் உன் ஆளா? ஆல த பெஸ்ட் ப்ரோ”.... என்று கூறி சிபி சிரித்தபடி காரை கதிர் வீட்டு வாசலில் நிறுத்தினான்.
வாசலில் காத்திருந்த நித்யா, ‘யாரு இந்த நேரத்துல?’ என்று
பார்த்தவள் கண்களுக்கு கதிர் தெரிந்ததும், சட்டென்று வீட்டினுள் சென்றபடி,
கதிர் மனைவி நித்யா
"உள்ள வாங்க
வச்சுக்கிறேன். .." என்று மேலும் ஏதோ பேசியபடி சென்று விட்டாள்.
"ஒளிமயமான
எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்று இரு நண்பர்களும் பாட, சிரித்தபடி
விடைகொடுத்தான் கதிர்.
இருவரும் மேகன் வீட்டை
நோக்கி காரை செலுத்தினர்.
நடுநிசி தாண்டியும்
மேகனுக்கு தூக்கம் வரவில்லை. அருகில் படுத்திருந்த சிபி இந்திரலோகத்தில் யாரிடமோ
அடிவாங்கிக் கொண்டிருந்தான். அப்படி ஒரு முகபாவம் சிபிக்கு... அவனைப் பார்த்து
சிரித்து விட்டு படுக்கையை விட்டு எழுந்தவன், பால்கனியில் நின்று நிலவைப்
பார்த்தான்.
நிலா மேகனைப்
பார்த்து, "ஆர் யூ ஓகே பேபி?" என்று கேட்பதைப் போல தோன்றியது மேகனுக்கு... "இப்ப அவ என்ன
பண்ணிட்டிருக்கா? அவளும் என்னை நினைத்தபடி முழிச்சுக்கிட்டு இருக்காளா? "
என்று நிலவிடம் கேட்டான். அப்பொழுது எங்கிருந்தோ இரவின் அமைதியுடன் தவழ்ந்து
வந்தது அந்தப் பாடல்...
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம்
ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்
காற்றினில் சாரல் போலப் பாடுதே
பூக்களில் தென்றல் போலத் தேடுதே
நீ வரும் பாதையில்
கண்களால் தவம் இருப்பேன்
உன்னைப் பார்த்த நாளில் தான்
கண்ணில் பார்வைத் தோன்றியது
உந்தன் பேரைச் சொல்லித் தான்
எந்தன் பாஷை தோன்றியது
உன்னை மூடி வைக்கத் தான்
கண்ணில் இமைகள் தோன்றியது
உன்னைச் சூடிப் பார்க்கத் தான்
பூக்கள் மாலை ஆகியது
நீ என்னைச் சேர்ந்திடும் வரையில்
இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில்
யாருக்கும் இடமே இல்லை
பார்த்து பார்த்து ஏங்கிய சொந்தம்
வாசலில் வந்துச் சேர்ந்ததே
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்
உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்றுப் போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில்
வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்றுப் போனாலும்
காதல் நின்றுப் போகாது
எங்கெங்கோ தேடிய வாழ்வை
உன் சொந்தம் தந்தது இங்கே
சந்தங்கள் தேடிய வார்த்தை
சங்கீதம் ஆனது இங்கே
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே...
என்று பாட மேகனுக்கு ஏதோ
மிருத்திகா வே நிலவில் நின்று பாடுவதைப் போல் தோன்ற, அவள் கிடைத்துவிட்ட
சந்தோஷமும் சேர்ந்து சிரித்தபடி நிலவுக்கு நன்றி கூறிவிட்டு, படுக்கை அறைக்குள் சென்றான்.
அதே வேளையில் மிருத்திகாவும்
வழக்கம்போல நிலவிடம் பேசிக்கொண்டிருந்தவள் காதுகளில் அதே பாடல் ஒலிக்க, தானும்
கூடவே சேர்ந்து பாடினாள்.. பாடி முடித்து நிலவைப் பார்த்தவளுக்கு, நிலவில், இவள்
பாடியதைக் கேட்டு சிரித்துக் கொண்டிந்தான் மேகன்..
'எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது நாம் இருவரும் சந்தோஷமாக பேசி! ஹாஸ்டல்
போன பிறகு உன்னிடம் பேசவே தனிமையும் இல்லை. மனமும் இல்லை...' என்று நினைத்தவள்
உறங்கச் சென்றாள்.
அவர்கள் உறங்கட்டும்... நாமும், நிலவில், நாம் மிஸ் பண்ணும் யாராவது தெரிகிறார்களா? என்று பார்ப்போம்...
அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம். ...
❤❤❤❤❤❤
0 Comments