சிம்டாங்காரன்: அத்தியாயம்-25

25

 போராடவில்லை உன்

இதயத்தில் இடம் பிடிக்க...

போராடுகிறேன் என்

இதயத்தில் நீ இருக்கும் தைரியத்தில்

🌹🌹🌹🌹🌹🌹

மிருத்திகாவின் அம்மா, அவளை அடிப்பதும், சூடு போடுவதும், பொறுக்க முடியாமல், அவளுடைய அப்பாவும் அண்ணன்களும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

 

மிருத்திகாவின் பெரிய அண்ணன், கோயில் புதூரில் வேலை பார்ப்பதால், தென்னாங்கூரிலிருந்து, வேலைக்கு வந்து சென்றான். ( கோயில் புதூர் - கதை இதுவரை நடக்கும் ஊர். தென்னாங்கூர் - ஆக்ஸிடெண்ட் க்குப் பிறகு மிருத்திகா குடும்பம் ஷிஃப்ட் ஆகி சென்ற ஊர்)

 

இனி....

 

மிருத்திகா, செண்பகத்திடம் கூறுவது ....

 

"இந்த ஊரில் நாங்கள் முன்பு இருந்த, எங்களுடைய பழைய வீட்டை விற்று, எங்கள் அண்ணன் அலுவலகம் அருகே ஒரு வீட்டை வாங்கி, அங்கே பெரிய அண்ணனை தனிகுடித்தனம் வைத்து விட்டு, அங்கேயே என்னையும் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று முடிவெடுத்தனர். இதனால், எங்க அண்ணியும் நிம்மதியா இருப்பார்கள் என்று நினைத்தனர். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம். என்றும் உறுதி செய்து கொண்டனர்.

 

ஆனால் ஒவ்வொன்றையும் செயல் படுத்துவதற்குள் பெரும்பாடாகி விட்டது. முதலில் பெரிய அண்ணன், தனிக்குடித்தனம் போவதாக மட்டும் தெரியப்படுத்தினார். அத சொன்னதும் எங்கம்மா , என் அண்ணியை,

 

"என் குடும்பத்தை பிரிச்சுட்டாளே" ன்னு, வர்ற போறவங்க கிட்டயெல்லாம் பயங்கர அழுகை. ஆனால் 'தனிக்குடித்தனம் செய்ய போவதை நிறுத்த முடியாது' என்று தெரிந்ததும், எங்கப்பா ட்ட, அம்மா உடம்புக்கு சரியில்லைனு நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

 

"பெரியவன் தனியா போயிட்டா இந்த குடும்பத்தை என் ஒருத்தியால் எப்படி பாத்துக்க முடியும்?" என்றார்கள்.

 

"பரவாயில்லை நாம சமாளிச்சுக்குவோம்" னு அப்பா சொன்னதும்.

 

அண்ணி வீட்டிற்கு ஃபோன் செய்து வரவச்சு பெரிய பஞ்சாயத்து பண்ணிட்டாங்க. ஆனால் அண்ணி தனக்கு நடந்த கொடுமைகளையும், தன்னை எங்க அம்மா, துடைப்பத்தால் அடிப்பதையும் கூற, பஞ்சாயத்து பண்ண வந்தவர்கள், அண்ணன் தனிக்குடித்தனம் போகட்டும் என்று கூறியதோடு,

 

"அந்த பெண்ணை கை நீட்டி அடிக்கலாமா? உன் மருமக தப்பா எதுவும் பண்ணிக்கிட்டா என்ன ஆகும்? அதோட நீ பண்ணிய கொடுமை அக்கம்பக்கத்தினருக்கு தெரிஞ்சிருக்கு. எதார்த்தமா அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆனா கூட உன்னைத்தான் சந்தேகப்படுவாங்க. இது எதுக்கு உனக்கு தேவையில்லாத விஷயம்? அவன் தனிக்குடித்தனம் போகட்டும்" என்றனர்.

 

அதே நேரத்தில், கதிருக்கு பாத்த பெண், ஈஸ்வரியின் அப்பா, எங்க அம்மாகிட்ட அம்மாவுக்கு சாதகமாக ஐடியா சொல்லியிருக்கிறார் ,

 

எங்க பெரிய அண்ணன் வெளியேறி விட்டால், கதிர்க்கு பார்த்த பெண் ஈஸ்வரியை, எங்க அம்மாவுக்கு வீட்டு வேலைக்கு துணையா அனுப்பி, கதிர் மனசையும் மாத்திடலாம், என்னையும் அவங்க ஒன்னு விட்ட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடலாம்.. னு அவங்க சொன்னத கேட்டு, எங்க அம்மா கோயில் புதூரில் வீடு வாங்கி, கிரகப்பிரவேசம் சிறப்பா நடந்தவரை அமைதியா இருந்தாங்க.

 

ஒரு வாரத்தில அண்ணன், ஊருக்கு போயிடுவான் என்ற நிலையில், அதுவரை எனக்குள் பூட்டி வைத்திருந்த பயம் வெளிவந்தது. நான் என் அண்ணியிடம் அழவும்,



 அண்ணிக்கும், என் ரெண்டு அண்ணன்களும், அப்பாவும் போட்ட திட்டம் தெரியாததால், அண்ணனிடம் போய், என் நிலை பற்றி வருந்தினார் கள். 'திட்டம் பற்றிய உண்மையை யாரிடமும் சொல்லவேண்டாம்' என்று அவர்களுக்குள் முடிவாகி இருந்ததால்,

 

"இப்ப தான் அம்மா ஒன்னும் சொல்றதில்லைல அப்புறம் என்ன?" னு சொன்னதும்,

 

"நீங்க இப்படி சுயநலமாக இருக்க கூடாது" னு அண்ணி, அண்ணனிடம் விவாதம் பண்ண,

 

'எங்கே என் அண்ணன் தனிக்குடித்தனம் போகாமல் இருந்து விடுவானோ? அப்படி இருந்து விட்டால், கதிருக்கு பாத்த ஈஸ்வரியை எங்க வீட்டுக்கு வரவைக்க முடியாம போயிடும் னு பயந்த எங்க அம்மா,

 

"இனி யாரிடமும் வம்பு பண்ற நிலைல நான் இல்லடா" னு ஆஸ்கர் அவார்டு வாங்குற அளவு நடிப்ப போட,

 

நானே நம்பிட்டேன்... "சரி போயிட்டு வாங்க" னு சொல்லிட்டேன்.

 

ஒரு வாரம் எங்க வீடு பழையபடி அமைதியாக இருந்தது. எல்லோருமே எங்க அம்மாவை நம்பி விட்டனர்.

 

"சரிடா பேசியபடி நீயும், தீபாவும் மட்டும் தனிக்குடித்தனம் போங்க" என்று என் அப்பாவே கூறும் அளவுக்கு எங்க வீடு பழைய நிலைக்கு மாறியிருந்தது.

 

நாளை எங்க அண்ணாவும் அண்ணியும் மட்டும் தனிக்குடித்தனம் போவதற்கு தயாரான நிலையில், எதார்த்தமாக எங்க அம்மாவுக்கு வந்த ஃபோனை எங்கப்பா எடுத்துட்டார்! என் நல்ல நேரம், எங்கப்பா , "ஹலோ!" சொல்லும் முன்னாடி, ஈஸ்வரியின், அதான் எங்க கதிர்க்கு பார்த்த பெண்,

அவங்களொட அப்பா,

 

"விக்னேஷ் போயிட்டானா? ஈஸ்வரியை எப்ப உன் வீட்டுக்கு அனுப்பி வைக்க?" என்று கேட்டதும்,

 

எங்க அப்பாவுக்கு அவங்க திட்டமும், எங்க அம்மாவின் அமைதிக்கான காரணமும் புரிய, ஆடிப்போய் விட்டார்.

 

எங்க அப்பா, ஒன்னும் தெரியாதது போல இரவு முழுவதும் அமைதியாக இருந்து விட்டு, அடுத்த நாள் பொழுது விடியும் முன், எங்க அம்மா எந்திரிக்கும் முன்னாடியே, என்னையும் எங்க அண்ணனோட அனுப்பி வைத்து விட்டார்.

 

திருடி போல இந்த ஊருக்கு (கோயில் புதூர்) மறுபடியும் வந்தேன்.. "மாத்து துணி எடுத்து வச்சா அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுமோ' ன்னு, எங்கப்பா கட்டின துணியோட அனுப்பி வைத்தார். மாத்து உடை கூட இல்லாம இந்த ஊருக்கு வந்தேன்." என்று கூறிய மிருத்திகாவிற்கு, அந்த நாளின் ஞாபகத்தில் கண்கலங்கி, தொண்டை அடைக்க, அவள் நிலை புரிந்து கதிர் சொல்ல ஆரம்பித்தான்.

 

"காலை ல எந்திரிச்ச எங்க அம்மா மீரா வ தேட, எங்கப்பா உண்மையைப் போட்டு உடைத்தார்... அவ்வளவுதான் ரணகளமாகியது எங்க வீடு...

 

மறுபடியும் "ஓடுகாலி ஓடுகாலி" னு எங்கம்மா மீரா வ திட்ட,

 

அப்பாவும் நானும் வீட்டிலிருந்து வெளியே வந்து அங்கிருக்கும் பாண்டுரங்கன் கோயிலில் போய் உட்கார்ந்துட்டோம். சாயந்தரம் எங்கள தேடிவந்த எங்க அம்மா,

 

"இனி இப்படி நடக்காதுன்னு"  சொன்னதும், வீட்டுக்கு போயிட்டோம்.

 

ஆனா அடுத்த நாளே ஈஸ்வரி எங்க வீட்டுக்கு வந்துட்டா. எங்க அம்மாவை உக்கார வச்சிட்டு எல்லா வேலையும் இழுத்து போட்டு பண்ணினா. எங்க அம்மா சேலையை கூட தொவச்சு போட்டதும், 'இவள மாதிரி ஒரு பொண்ணு கிடைக்குமா? என்று, எங்க அம்மா என்னை நச்சரிக்க ஆரம்பிச்சாங்க... முன்னாடி மாதிரி திட்டி ஆட்டம் போடாம, அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சாங்க... ஈஸ்வரி அப்படியே இருந்திருந்தா கூட அவள கல்யாணம் பண்ணியிருப்பேன். ஆனா எங்க அம்மா என்னை பலவிதமாக வற்புறுத்தவும், ஈஸ்வரியும், எங்க அம்மாவும் பண்ற எல்லாமே நடிப்பா இருக்குமோ னு தோணிச்சு. ஒரு வேளை அந்த கண்ணோட்டத்துல பார்த்ததால ஈஸ்வரியின் பணிவிடைகள் எனக்கு பொய் மாதிரி தோணுச்சு." என்று சிறிது நேரம் அந்த நினைவில் அமைதியாக இருந்த கதிர் மீண்டும் ஆரம்பித்தான்.

 

"இருந்தாலும், நல்ல பொண்ணாதான் தெரியிறா, அம்மாவுக்காக இதக்கூட செய்யமாட்டோமான்னு, கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். . அடுத்த அரை மணி நேரத்தில் ஈஸ்வரி வீட்டினரை அழைத்து நிச்சயம் பண்ண எங்க அம்மா ஏற்பாடு பண்ண..

 

"ஏன் இப்படி அவசரப்படற? கதிர்தான் சம்மதிச்சுட்டானே." என்று அப்பா கூறியது எதையும், காதில் வாங்கவில்லை எங்க அம்மா.

 

இந்த அவசரமும், அடிக்கடி எங்க அம்மாவும் ஈஸ்வரியும் தனியாக போய் ஃபோன் பேசுவதும், என்னுடைய சந்தேகத்தை உறுதி படுத்தியது. எங்களுக்குத் தெரியாமல் இவர்களுக்குள் என்ன ரகசியம்? இதில், வேறு ஏதோ இருக்கிறது போலவே என்று எண்ணி,

ஈஸ்வரியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எங்க அப்பாகிட்ட சொல்லிட்டேன்.

ஈஸ்வரி வீட்டினர் வந்ததும்,

"பெரியவன் இல்லாம நிச்சயம் பண்ண முடியாது. நல்ல நாள் பார்த்து வச்சுக்குவோம் னு எங்க அப்பா கண்டிப்பா சொல்லிட்டாங்க.

 

எங்க அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொன்னதை ஈஸ்வரி குடும்பத்தாரிடம் ரகசியமாக சொல்ல,

 

"சரி கல்யாணம் முடியுற வரை ஈஸ்வரி எங்க வீட்டுல இருக்கட்டும் னு கூட்டிட்டு போயிட்டாங்க...

 

அவ்வளவுதான் எங்கம்மா மறுபடியும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..

 

கிட்டத்தட்ட ஒரு மாசம், ஈஸ்வரியின் கவனிப்பில், சாப்பிட்ட தட்டை கூட சுத்தம் பண்ணாம இருந்துட்டு, ஈஸ்வரி போனதும் எல்லா வேலையும் பாக்க வேண்டியிருக்கேன்னு எங்கம்மா, எவ்வளவு சீக்கிரம் எனக்கு கல்யாணம் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ண வேண்டும் என்று படுத்தி எடுத்துட்டாங்க..

நானும்,எங்கப்பாவும், ‘எங்க அம்மா பாவம், வீட்டு வேலை பாக்க முடியாம தான் திட்றாங்க னு நம்பினோம் .

 

இந்த நேரத்துல, அண்ணன், "மீரா வ காணோம்" னு ஃபோன் பண்றான்.

 

பதறிஅடிச்சு நானும் அப்பா, அம்மாவும் இங்க வந்து, ஆளுக்கொரு பக்கமா தேடினோம். மறுபடியும் எங்க அம்மா, "மீரா ஓடிட்டா" னு சொல்லி திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

 

"எங்களுக்குத் தெரியாம எங்கயும் போக மாட்டா" னு அண்ணன் சொன்னதும்,

 

"இதுக்கு தான் அவள கூட்டிட்டு வந்தியா? யாரோட ஓட்டிவிட்டா உன் பொண்டாட்டி? என்று தாறுமாறாக அண்ணியை அம்மா திட்டவும்,

 

"அவ நேத்து காலைல அவங்க சைடு கேதத்துக்கு போயிட்டு இன்னைக்கு காலைல தான் வந்தா." என்று சொல்லியும் சமாதானம் ஆகவில்லை.

 

நானும் அண்ணனும் மேகன் வீட்டிற்கு போய் பாத்த போது, "மூன்று மாசத்துக்கு முன்னாடி மேகனுக்கு விபத்து ஏற்பட்டு, கோமா நிலைக்கு போயிட்டார்.. அதனால ஆஸ்திரேலியாவுக்கே எல்லோரும் போனவங்க தான் இன்னும் திரும்பல" என்றனர்.

 

மற்றபடி யாருக்குமே ஆஸ்திரேலியா பற்றிய விபரம் தெரியவில்லை. கோயிலில் விசாரித்த போது, மேகனுக்கு சுயஉணர்வு வரவில்லை னு இன்றும் விஷேச பூஜை நடப்பதாக கூறினர்.

 

மேகனுக்கு பார்த்த ஆஸ்பத்திரில விசாரிச்சப்ப, "மேகனுக்கு சுயஉணர்வு வர சான்ஸ் இல்ல. அதான் ஆஸ்திரேலியாவுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க" னு சொன்னாங்க...

 

"மேகனுக்கு இப்படி இருக்கும் நிலையில் மீரா அங்க போக சான்ஸ் இல்ல. எங்களாலேயே ஆஸ்திரேலியா முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை." என்று எங்க அம்மாவிடம் கூறவும்,

 

"அவ எவங்கூட ஓடினாளோ?" என்று திட்ட ஆரம்பித்தார்கள்.

 

ஆனால் எங்களுக்கு வேறு பயம், 'மேகனைத் தவிர யாரும் மீரா மனசுல இல்ல. அப்போ எங்க போயிருப்பா?'

 

எங்கப்பா பயத்தில் மயக்கமே போட்டு விட்டார். போலீஸ் ட்ட போகவும் சங்கடமாக இருந்தது. இதற்கிடையில் அம்மாவின் ஆட்டம்வேற எங்கள யோசிக்கவே விடல.

 

"அவ தொலைஞ்சு போயிட்டா. வாங்க! நாம ஊருக்கு போவோம். இவனுக்காவது கல்யாணம் பண்ணுவோம்." என்று அம்மா அசால்டா ஊருக்கு புறப்படவும் தான்,

 

எங்களுக்கு, 'எங்க அம்மாவுக்கு மீரா இருக்குமிடம் தெரியுமோ?' ன்னு சந்தேகம் வந்தது. என்னதான் மகள் மேல கோபம் இருந்தாலும், அவ எங்க போனா னு தெரியாம, காணாம போயிட்டா திட்டிக்கிட்டாவது தேடச் சொல்ல மாட்டாங்களா? பயம் இருக்காதா? சரி விடு நம்ம வேலையை பார்ப்போம் னு போகமுடியுமா?!!!

 

எங்கப்பா, எங்கம்மா ஃபோன வாங்கி பாத்தாங்க... ஈஸ்வரியின் பெரியப்பா நம்பருக்கு மூணு, நாலு தடவை அம்மா ஃபோன் பண்ணியிருப்பது தெரிய,

 

"ஈஸ்வரி பெரியப்பாவுக்கு எதுக்கு ஃபோன் பண்ணின?" னு அப்பா கேட்டும், அம்மா சரியான பதில் சொல்லல. அப்பா, தன்னோட கழுத்தை அறுத்துக் கொள்வேன்னு பயமுறுத்தவும், அம்மா, அப்பா சொன்னபடி ஸ்பீக்கர் மோடில் வைத்து, ஈஸ்வரி பெரியப்பா வுக்கு ஃபோன் செய்து,

 

"மீரா எங்க இருக்கா?" னு கேட்க,

 

"அவ எங்க இருக்கானு தெரியாது. ஆனா தெரிஞ்சவங்க வீட்ல தானிருப்பா." னு ஈஸ்வரி பெரியப்பா சொல்ல.

 

நாங்க தெரிந்தவர்கள் வீட்டில் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிச்சோம். அப்பொழுது தான், பக்கத்து ஊரில் இருக்கும், எங்க பெரியம்மா வீட்டில் மீரா இருப்பது தெரிய வந்தது. மீராவை அழைத்து வந்து கேட்டால்.

 

"ஈஸ்வரியின் அப்பா, ஈஸ்வரியின் ஒன்னு விட்ட அண்ணனை மணந்து கொள்." என்று வற்புறுத்தியதாகவும் மீரா மறுத்ததால்,

 

"உன்னால் தான் கதிர் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறான். உன் வாழ்க்கையைத் தான் கெடுத்துக்கிட்ட, கதிராவது கல்யாணம் பண்ணிக்கட்டுமே." னு சொல்லியிருக்கார்.

 

உடனே மீராவும், "கதிர் கல்யாணத்துக்கு நான் தடையாக இருக்க மாட்டேன். நானே அண்ணாட்ட பேசுறேன்." னு சொவ்லீருக்கா.

 

"நிறைய பேசியாச்சு, உன் அண்ணனுக்கும் ஈஸ்வரியை பிடிச்சிருக்கு. முந்தாநாள் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டவன், திடீர்னு,

 

"மீராவுக்கு நல்ல வாழ்க்கை அமையாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்." னுட்டான். நீயும் வேற பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிற. உங்க அம்மா, அப்பா வையாவது யோசிச்சுக் பாரு." ன்னு சொல்லவும்,

 

"என்னய என்ன தான் பண்ணச் சொல்றீங்க?" ன்னு மீரா கேட்டதற்கு,

 

"கதிர்க்கு கல்யாணம் முடியுற வரை எங்காவது போய் இருந்துக்க. . நீ, உனக்கு பிடிச்சவனோட வாழ போயிட்டேன்னு நினைச்சு, கதிர் கல்யாணத்துக்கு ஒத்துக்குவான். கல்யாணத்தன்னைக்கு நானே, உன்னை கூட்டிட்டுப் போயி எல்லோருக்கும் விளக்கமா சொல்லி புரிய வைக்கிறேன்" னு சொன்னத நம்பி, 'தன்னால் எதுக்கு இந்த பிரச்சினை?" னு பெரியம்மா வீட்டிற்கு போயிட்டேன்னு சொன்னா.

 

"ஏன் அவட்ட இப்படி ஒரு பொய் சொன்னாங்க?" னு நாங்க அம்மாவிடம் கேட்டதுக்கு,

 

"மீராவையும் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைப்போம். மறுத்தா எங்காவது மறைஞ்சுக்க சொல்லிட்டு, கோயில் நிர்வாகி யோட பேரனோட ஓடிட்டான்னு, சொல்லி ஊர நம்ப வச்சுடனும். பிறகு கதிர் கல்யாணத்துக்கு, மீராவ திரும்பி வரவச்சு,

 

"உன் பேரு கெட்டு போச்சு, ஈஸ்வரியின் ஒன்னுவிட்ட அண்ணனை கல்யாணம் பண்ணிக்க. இல்லைனா கதிரின் வாழ்க்கை கெட்டது மட்டுமில்லாம ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை பண்ணிக்கிறத தவிர வேற வழியில்ல" னு மிரட்டி, மீராவுக்கும் கல்யாணத்த முடிச்சுடலாம்னு பேசிவச்சதா அம்மா சொன்னாங்க..

 

"என்னடா இவ்வளவு கேவலமாக திட்டம் போட்டிருக்கானுங்க?!! னு அப்பா கொதிச்சு போயிட்டார்.

 

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பெரிய சண்டை. இது எல்லாத்துக்கும் காரணம் மீராதான் னு, மீராவுக்கு எங்கம்மா சாபமே குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க .

 


 

எங்க அப்பாவே "பாவி! எம் பொண்ணுக்கு சாபமே கொடுக்க ஆரம்பிச்சுட்டா டா... இனி எம்பொண்ணு இவ வாயில விழவேண்டாம் டா... எம் பொண்ண இவ கண்ணுல படாத இடத்துக்கு அனுப்பி வச்சுடுங்கடா... எவனோ ஒரு தெருநாய் பேச்ச கேட்டு, எம் பொண்ண தலைமறைவா போகச் சொல்லி.... நாம இருக்கும் போதே எம் பொண்ணை அநாதையா யார் வீட்டுக்கோ அடைக்கலம் தேடி போக வச்சுட்டா... எம் பொண்ண இந்த நிலையில பாக்க முடியல டா. னு அன்னைக்கு எங்க ரெண்டு பேரையும் கட்டிக்கிட்டு எங்கப்பா அழுதது..... ஐயோ!!! அந்த நாளை எங்க யாராலும் மறக்க முடியாது.

 

அதன் பிறகு மீராவுக்கு, எங்களுக்குத் தெரிந்தவர்கள் சிபாரிசோட உங்க ஸ்கூல்ல வேலை வாங்கிக் கொடுத்து, அருகில் இருந்த ஹாஸ்டலில் சேர்த்து விட்டு, என்னையும், எங்க அண்ணனையும் தவிர யார் வந்தாலும் மீராவை பார்க்க அனுமதிக்காதிங்கன்னு சொல்லி எங்க மீரா வ அநாதையா விட்டுட்டுப் போயிட்டோம் னு சொல்லி முடித்த கதிருக்கு அதற்கு மேல் சொல்ல முடியாமல் திரும்ப,

 

பேசுவது கேட்கும் தூரத்தில், இருட்டில், யாரோ தங்களை கவனிப்பதை பார்த்த கதிர்,

 

"அந்த மரத்தடியில் நின்னு யாரோ நாம பேசுறத கேட்டுக்கிட்டு இருக்காங்க," என்று ஹஸ்கி குரலில் கூறினான்.

 

மிருத்திகா, செண்பகம், விக்னேஷ் மூவரும் சேர்ந்து பார்க்க, இருட்டாக இருந்ததால் யார் என்பது தெரியவில்லை அங்கே இருந்த உருவங்கள் மெல்ல இவர்களை நோக்கி வந்தது...

 

யார் அவர்கள்?

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...

 

❤❤❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments