16
நீ என்னை நேசித்ததையே
மறந்தாய்...
நான் உன்னை
நேசிப்பதற்காகவே
வாழ்கிறேன்...
வருவாயா சிம்டாங்காரா?...
🌹🌹🌹🌹🌹🌹
யாரோ வந்து
மோதியதும், "இந்த ஊர்ல யாருமே பார்த்து நடக்க மாட்டிங்களா?" என்று கேட்டபடி
மேகன் நிமிர்ந்து பார்த்தான்.
யாரோ ஒரு பெண், மோதிய வேகத்தில்
தடுமாறிக்கொண்டிருந்தவள், .
"ஏன் நீங்க பாத்து வர்றது
தானே?" என்று கோபமாக நிமிர்ந்தவள்,
"சார்
நீங்களா? எப்படி சார் இருக்கீங்க? அந்த பொண்ணயே கல்யாணம் பண்ணிக்
கிட்டிங்களா?..." என்று மேலும் தொடர்ந்து பேசியவளை,
"அம்மா
தாயே கொஞ்சம் நிறுத்து... நான் பதிலே சொல்லத் தேவையில்லையா? முதல்ல நீங்க யாரு?
என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று கேட்டான்.
"என்ன சார்
என்னை மறந்துட்டீங்களா?" என்று ஏதோ பல நாள் பழகிய காதலி போல் கேட்டாள்.
"நீங்க யாருன்னே
தெரியல, இதுல மறந்துட்டியா? பறந்துட்டியான்னு.. .நானே செம கடுப்புல இருக்கேன்....
ஏதாவது நூதனமான திருட்டு கோஷ்டியா? ஸாரி நான் பணம் கொண்டு வரல."
"இப்ப,
நீங்க கொஞ்சம் நிறுத்துறீங்களா? பாவமேன்னு கூப்பிட்டு பேசினா திருடிங்கிறீங்க...
"
"இன்னும் நீங்க யாரு ன்னு
சொல்லல"
"சார் நான் நர்ஸ் சார்..."
"இருந்துட்டு போம்மா. .."
"இன்னுமா ஞாபகம் வரல" என்று
அந்தப் பெண் கேட்டதும்,
"கடவுளே
இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சுட்டு வந்தேன் னு தெரியலயே" என்றவன் அந்தப்
பெண்ணைக் கடந்து செல்ல முற்பட்டான். ஆனால் அந்தப்பெண் மேகனின் கையைப் பிடித்து
தடுக்க, நிமிர்ந்து முறைத்தான்.
அந்தப் பெண் அதை கண்டு கொள்ள வில்லை.
மேலும்,
"மூணு,
நாலு வருசத்துக்கு முன்னாடி உங்க காதலிக்கு ஆக்ஸிடன்ட் னு எங்க மருத்துவ மனையில தானே சேத்தீங்க.
.. இப்ப அவங்க எப்படி இருக்காங்க?"
"எனக்கு
சுத்தமா ஒன்னும் புரியல... உங்க ஆஸ்பத்திரில சேர்த்ததுவரை நீங்க சரியாதான்
சொல்றீங்க .... ஆனா அவ..." என்று சொல்லும்போதே, அந்த நர்ஸை அடையாளம் தெரிந்து
விட்டது மேகனுக்கு.
"ஸாரி
சிஸ்டர், இப்ப உங்கள ஞாபகம் வந்துடுச்சு." என்றான்.
"அப்பாடி...
ஆமா! நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கிட்டிங்களா? இப்ப அவங்க எப்படி இருக்காங்க?"
"நீங்க யார
சொல்றீங்க? நிறைமதி தான் ஆஸ்பத்திரியிலயே சிகிச்சை பலனளிக்கவில்லை னு. ... நீங்க
தானே சிஸ்டர் எனக்கு ஆறுதல் சொன்னிங்க. ..?"
"என்ன
சொல்றீங்க சார்? இன்னும் உங்களுக்கு உண்மை தெரியாதா?" என்று நர்ஸ்
அதிர்ச்சியுடன் கேட்க,
"என்ன உண்மை? " என்று
ஆர்வமில்லாமல் கேட்டவனிடம்,
"உங்க
நிறைமதி உயிரோடதான் இருக்காங்க... கொஞ்சம் என்னோட ஆஸ்பத்திரிக்கு வர
முடியுமா?" என்று கேட்டுவிட்டு அந்த நர்ஸ் முன்னால் நடக்க,
மேகனுக்கு அந்த
நர்ஸ் என்ன சொல்றாங்க ன்னே புரியவில்லை... ஒரு நிமிடம் அவன் கண்முன்னால்
சிரித்தபடி நிறைமதியின் முகம் வந்து போனது. மேகன் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் அதே இடத்தில் நின்றான்.
"ஸாரி சார்
அன்னைக்கு பெரிய தப்பு நடந்துடுச்சு... பேர் ஒரே மாதிரி இருந்ததால ஏற்பட்ட
குழப்பம். உங்க காதலியை சேர்த்த அன்னைக்கே இன்னொரு பொண்ணுக்கும் ஆக்ஸிடெண்ட் ஆனதால
ஐசியூ வில் சிகிச்சை நடந்தது. அந்தப் பெண்ணின் கணவர் பெயரும் மோகன் தான்..."
என்று சொல்லிக் கொண்டு போனவளை நிறுத்தி,
"எம்பேரு மேகன். மோகன் இல்லை. நான்
தான் சொன்னேனே... நீங்க வேற யாரோன்னு நினைச்சு பேசுறீங்க."
"ஸார்
தப்பா எடுத்துக்காம எங்கூட வாங்க! பேருதான் தப்பு. ஆனா நான் சொன்ன விஷயம் உண்மை.
அன்னைக்கி, என்கிட்ட தண்ணி கேட்டுட்டு, நான் கொண்டு வர்றதுக்குள்ள எங்கேயோ
போயிட்டீங்க. உங்கள தேடி வந்து ரிசப்ஷனில விசாரிச்சேன். அந்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்குள்ள
உங்க காதலியோட குடும்பம் வந்து, அவங்க பொண்ண பத்தி கேட்டாங்க... நீங்க அந்தப்
பெண்ணோட பேர மாத்தி குடுத்ததால, அப்படி யாரையும் அட்மிட் பண்ணலைன்னு சொன்னோம்.
அப்ப, ‘அவங்களுக்கு தெரிஞ்சவர், அட்மிட் பண்ணிவிட்டு ஆள் அனுப்பி சொன்னதா
சொன்னாங்க.’ அதே நேரம் இறந்து போன பெண்ணின் கணவர் மோகன் என்னிடம் வந்து, அவர்
மனைவி எப்படி இருக்காங்க ன்னு கேட்டார். ‘உங்க மனைவி பெயர் என்ன?' னு கேட்டதுக்கு,
கவிதான்னு சொன்னார்... எங்கேயோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
அவரையும், நிறைமதி குடும்பத்தினரையும் ஐசியூ விற்குள் கூட்டிட்டு போன பிறகுதான்,
நாங்க உங்கள்ட்ட தப்பான ரிசல்ட் சொல்லிட்டோம்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்கள தேடி
பாத்தேன் காணல. சரின்னுட்டு மற்றொரு நர்ஸ்கிட்ட விஷயத்தை சொல்லி நீங்க வந்தா
சொல்லச் சொல்லிட்டு, எனக்கு ஷிஃப்ட் முடிந்து புறப்பட்டு போனபோது தான், உங்களுக்கு
ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுன்னு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தாங்க.... மறுபடியும் அதே நர்ஸ் கிட்ட
உங்கள்ட்ட அந்தப் பொண்ணு உயிரோட இருக்கும் விஷயத்தை சொல்லச் சொல்லிட்டு வீட்டுக்கு
போயிட்டேன்." என்று அவள் சொல்லி முடிப்பதற்கும் ஆஸ்பத்திரிக்குள் போவதற்கு ம்
சரியாக இருக்க...
அந்த நர்ஸ்
நிறைமதி உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்ட, அதில் மேகனின் பெயரை திருத்தி
மோகன் என்றும், நிறைமதி என்ற பெயரை அடித்து "மிருத்திகா" என்றும்
எழுதியிருந்தது. இந்தப் பெயரை சமீபத்தில் யாரோ சொன்னாங்களே என்று மேகன் நினைக்கும்
போதே 'தீபிகா தன்னுடைய மேம் பெயர் மிருத்திகா.' என்று சொன்னது ஞாபகம் வந்தது.
அதே நேரம்,
நர்ஸ்சுடன் ஆஸ்பத்திரிக்கு வரும்போதே, மேகன் சிபிக்கு ஃபோன் பண்ணி சொன்னதால், சிபி
ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிக்கொண்டான்
மேகன்
"நிறைமதி உயிரோட இருக்காடா."
என்று மேகன் குரல் நடுங்க சொன்னான். சிபியை அவன் அணைத்து இருந்ததே, 'பிடித்துக்
கொள்ளா விட்டால் விழுந்து விடுவேன்' என்ற மேகனின் பயத்தைக் காட்ட, சிபிக்கு
மேகனின் மனநிலை புரிந்து அவன் முதுகை ஆதரவாக தடவி விட்டான்.
"ஓகே! ஓகே!
ரிலாக்ஸ்.... அமைதியாகுடா. ..." என்ற சிபியை அணைப்பிலிருந்து விடுவித்து, “வா!”
என்று ரிசப்ஷனுக்கு அழைத்துச் சென்று, நர்ஸ் காட்டிய ஆதாரங்களைக் காட்ட, மேகனின்
படபடப்பால் மருத்துவமனையில் இருந்தவர்கள் திரும்பிப் பார்க்கவும், ரிசப்ஷனில்
நின்று கொண்டிருந்த நர்ஸ், மேகனையும் சிபியையும் அருகில் இருந்த அறைக்கு அழைத்துச்
சென்று,
"தயவுசெஞ்சு இங்கே
உக்கார்ந்து பாருங்க." என்றதும் கோபத்தில் கொதித்து விட்டான் சிபி.
"ஏன்? நாங்க ரிசப்ஷனில
நின்னா உங்க வண்டவாளம் தண்டவாளத்தில ஏறிடுமோ? எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க
தெரியுமா? உங்க மருத்துவமனை தலைமை மருத்துவர நான் பாக்கனும்." என்று வலியுடன்
சிபி சத்தம் போட்டதும்,
"தயவுசெஞ்சு கொஞ்சம்
அமைதியா இருங்க.. இதோ போய் சொல்றேன்." என்று வேகமாக வெளியேறினாள்.
சிபி, மேகனைப் பார்க்க,
அவன், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான். 'இவனை முதலில் கவனிக்கனும்...
இந்த ஆஸ்பத்திரிய அப்புறம் பாத்துக்கலாம்' னு நினைத்த சிபி, மேகன் அருகில் வந்து
அமர்ந்தான்.
சிபிக்குமே
மிகவும் கவலையாக இருந்தது. ‘அஞ்சு வருஷமாகுது... அந்தப் பொண்ண எப்படி கண்டு
பிடிக்கிறது? அவள் இருந்த வீட்டிற்கு மேகன் போய் கேட்டப்ப அக்கம் பக்கத்தினர், அவள், இறந்து
விட்டதாக சொல்லி யிருக்காங்க... என்ன செய்றதுன்னே தெரியலையே’....என்று நினைத்த
சிபி, மேகன் காட்டிய ஆதாரங்களை எல்லாம், அவர்கள் இரண்டு பேரின் மொபைல்
ஃபோனிலும் பதிவு செய்து கொண்டான். அதற்குள் மேகனை அழைத்து வந்த நர்ஸ்
அறைக்குள் வந்தாள்.
"சார் தப்பு
நடந்துடுச்சு... ஆனா இத்தனை வருஷம் கழிஞ்சும் நான் அதை உங்க நண்பர்ட்ட சொல்லி
கூட்டிட்டு வந்ததுக்காகவாவது, பிரச்சனை பண்ணாதிங்க சார் ப்ளீஸ்! என்று சிபியிடம்
கெஞ்சிக் கேட்டதும்,
"அதை பிறகு
பாக்கலாம். என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா?" என்று சிபி கேட்டதும்,
'என்ன நடந்துச்சுன்னு தெரியாமலா இவன்
மிரட்டுறான்’.. என்று நினைத்தாள்.
“ஒரே நேரத்தில் ரெண்டு ஆக்ஸிடெண்ட் கேஸ் சார், ரெண்டு பேருமே
பெண்கள்.... இரண்டு பெண்களின் கணவர் பெயரும் மோகன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.
உங்க நண்பர் மேகன் என்றுதான் அட்மிஷன்
ஃபார்ம் ல எழுதியிருக்கிறார். ‘பெயரை பதட்டத்தில் தவறாக எழுதிவிட்டார்’ என
நினைத்து இங்கு வேலை பார்க்கும் நர்ஸ் ‘மேகன்’ ஐ ‘மோகன்’ என்று மாற்றியது தான்
குழப்பத்திற்கான காரணம். உண்மையான மோகனின் மனைவிக்கு சிகிச்சை பலனளிக்காமல்
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். கணவரை வந்து பார்க்கச் சொன்னார்கள் டாக்டர். நான்
ரிசப்ஷனில் ஐசியூவில் இருக்கும் பெண்ணின் கணவர் மோகன் யார்? என்று கேட்டதும்,
உங்கள் நண்பரைக் காட்டியதும், இவர் போய் சீக்கிரம் மனைவியை பார்க்க வேண்டுமே என்ற
பதட்டத்தில், இவர் மனைவியின் பெயரை இவரிடம் கேட்காமல் கூட்டிச் சென்று டாக்டரிடம்
அமரவைத்து விட்டு வெளியே வந்து நின்றேன். டாக்டரிடம் பேசிவிட்டு வந்த உங்க நண்பரை
நான் ஐசியூ அறைக்கு கூட்டிச்சென்றேன்... இவர் ஐசியூ அறைக்கு வெளியே உள்ள நாற்காலியில
உக்காந்து விட்டு குடிக்க தண்ணீர் கேட்டதும், நான் போய் தண்ணீர் எடுத்து வந்து
பார்த்தால் மேகன் எங்கேயோ போயிட்டார். அவர தேடி வந்து ரிசப்ஷனில விசாரிச்சேன். அந்த
நேரத்தில் ஆஸ்பத்திரிக்குள்ள அவருடைய காதலியோட குடும்பம் வந்து, அவங்க பொண்ண பத்தி கேட்டாங்க... மேகன்
சார், அந்தப் பெண்ணோட பேர மாத்தி குடுத்ததால, அப்படி யாரையும் அட்மிட்
பண்ணலைன்னு சொன்னோம். அப்ப அவங்களுக்கு தெரிஞ்சவர், அட்மிட் பண்ணிவிட்டு ஆள்
அனுப்பி சொன்னதா சொன்னாங்க. அதே நேரம் இறந்து போன பெண்ணின் கணவர் என்னிடம் வந்து,
அவர் மனைவி எப்படி இருக்காங்க ன்னு கேட்டார். உங்க மனைவி பெயர் நிறைமதியான்னு
கேட்டதுக்கு, இல்லைன்னு சொல்லி வேற பேர் சொன்னார்... எங்கேயோ தப்பு
நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவரையும், நிறைமதி குடும்பத்தில் ஒருவரையும்
ஐசியூ விற்குள் கூட்டிட்டு போன பிறகுதான் நாங்க மேகன் சார்கிட்ட, தப்பான ரிசல்ட்
சொல்லிட்டோம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவர தேடி பாத்தேன் காணல. அவர் செல்லுக்கு கால்
பண்ணினேன் எடுக்கவில்லை... சரின்னுட்டு மற்றொரு நர்ஸ்கிட்ட விஷயத்தை சொல்லி மேகன்
சார் வந்தா சொல்லச் சொல்லிட்டு, எனக்கு ஷிஃப்ட் முடிந்து புறப்பட்டு போனபோது தான்,
மேகன் சாருக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுன்னு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தாங்க.... நானே இருந்து
அவருக்கு அட்மிஷன் போட்டு விட்டு, ரிசப்ஷனில, மேகன் சார் முழிச்சதும், ‘நிறைமதி
நல்லா இருக்காங்கன்னு சொல்லிடு’ னு சொல்லிட்டு டியூட்டி முடிஞ்சதால வீட்டுக்கு போயிட்டேன்.
அடுத்த நாள் வந்து பார்த்த போது, மேகனை டிச்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு
போயிருந்தாங்க... அதுக்கு பின்னாடி இன்னைக்கு தான் நான் இவர பாக்குறேன். இவர்
சொன்ன பிறகுதான் நிறைமதி பத்தி இவருக்குத் தெரியவில்லை னு தெரிஞ்சு, நடந்தத சொல்லி
கூட்டிட்டு வந்தேன். ரிசப்ஷனில 'ஏன் இவர்கிட்ட விஷயத்த சொல்லலைனு கேட்டேன்.
"நான் போயி பாக்கும் போது, அவருக்கு மயக்கம் தெளியல, அவர்
இருந்த கண்டிஷனுக்கு, குறைஞ்சது ஒரு வாரமாவது இங்கே இருப்பார், அவருக்கு சுயஉணர்வு
வந்ததும் சொல்லிக்கலாம்னு நினைச்சேன். ஆனா அடுத்த நாளே அவர டிஸ்சார்ஜ் பண்ணி வேற
ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்விட்டது தெரிஞ்சதுன்னு சொல்றாங்க." என்று முடித்தார்.
"சரி! நிறைமதி யோட முகவரி இருக்கா?" என்று சிபி நர்ஸிடம்
கேட்க,
சிபியைத் தன் பக்கம் திருப்ப மேகன்,
"அவ பேரு மிருத்திகா
வாம்டா. அனேகமா தீபி யோட மேம் னு நினைக்கிறேன். எதுக்கும் போய் பார்த்து விட்டு
வந்துடுவோமாடா?" என்று சிபியிடம் கேட்க, அந்த மேம், இவனைத் தெரியாதுன்னு
சொன்னதை மேகனிடம் சொல்லாமல்,
"வா! உடனே போகலாம்" என்று சிபி கூறினான்.
இருவரும் தீபிகாவின் பள்ளி ரிசப்ஷனில்,
"பத்தாம் வகுப்பு டீச்சர் மிருத்திகா வை பாக்கனும்."
என்று கூற
அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட்,
" நீங்க வரவேற்பறையில் இருங்க. நான் சொல்லி அனுப்பறேன். " என்றார்.
இருவரும் வரவேற்பறையை
நோக்கி திரும்ப, ரிசப்ஷனில பேசிக்கொண்டிருந்த பெண், இருவரையும் நிறுத்தி, "நீங்க
யாரு? எங்கிருந்து வர்றீங்க" என்று கேட்டாள்.
"நான்
ஆஸ்திரேலியாவிலிருந்து வர்றேன்." என்று கூறிவிட்டு, ‘தான் யார் என்று எப்படி
சொல்றது’ ன்னு மேகன் யோசிக்கும் முன்,
"ஆஸ்திரேலியாவிலிருந்தா?
சிங்கப்பூர் ல இருந்து மாறிட்டிங்களா? மிருத்திகா மேம், நீங்க சிங்கப்பூரில் வேலை
பாக்குறதா சொன்னாங்க?" என்று அந்தப் பெண் கூறியதும் இரு நண்பர்களுக்கும்
ஒன்றும் புரியவில்லை. ‘வம்பு பேசுபவளாக இருக்குமோ?’ என்று நினைத்த மேகன்,
"நீங்க யாரு?" என்று கேட்க,
"என்ன பத்தி அவங்க சொன்னதில்லையா? நான் செண்பகம். மிருத்திகா வோட தோழி .
" என்றதும்,
"இவ யாரு புதுசா?" என்று
நினைத்த மேகன், அமைதியானான்
"நீங்க
வந்திருக்கிறீங்க ன்னு இன்னைக்கு கூட எங்கிட்ட அவங்க சொல்லல. இப்ப தான்
வர்றீங்களா?"
"ஆமாம்!"
"அவங்க
கணவர் ஜாலி டைப் னு சொன்னாங்க... உங்கள பாத்தா அப்படி தெரியலை..." என்று
சிரித்துக் கொண்டே தலையில் இடியைத் தூக்கிப் போட்டாள்.
"கணவரா? மிருத்திகாவிற்கு
கல்யாணம் ஆயிடுச்சா?" என்று மேகன் கேட்க,
"ஐய்ய்ய்யோ!
நீங்க மிருத்திகாவோட கணவர் இல்லையா? ஸாரி! ஸாரி! அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவர் சிங்கப்பூரில்
இருக்கிறார். கொஞ்சம் காத்திருங்க... இப்ப அவங்க வந்துடுவாங்க." என்று கூறி
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டாள்.
இதை எதிர்பாராத இரு நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
'ஓ! அதுனாலதான், மேகனை
தெரியாது என்று மிருத்திகா கூறியுள்ளார்.' என்று நினைத்த சிபி, 'கடவுளே இவனுக்கு மட்டும் ஏன்
இவ்வளவு சோதனை?...என்று வேண்டிக் கொண்டவனிடம்,
"வாடா போயிடுவோம்." என்று மேகன் அழைத்ததும்,
'கொஞ்சம் பொறு.
அவங்கள பாத்துட்டே போயிடுவோம். என்று சொல்ல நினைக்கும் பொழுதே, ‘மிருத்திகா எந்த வில்லங்கத்தை
சொல்லப் போகிறாளோ’ என்று தோன்றியது. ‘ஓரே நாளில் எத்தனை அதிர்ச்சியைத் தான்
தாங்குவான்? மிருத்திகா இருக்கும் இடம்தான் தெரிஞ்சுடுச்சே... இவனை மனதளவில் தயார்
படுத்தி விட்டு, நாளை வந்து பார்க்கலாம்’ என்று நினைத்தவன், மறுப்பு கூறாமல்
எழுந்து சென்றான் சிபி.
இனி என்ன ஆகும்?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். ..
❤❤❤❤❤❤❤❤
0 Comments