சிம்டாங்காரன்: அத்தியாயம்- 15

15

கலைந்து போக நீ

என் கனவுகளிலில்லை…

உயிருள்ளவரை தொடரும்

உண்மைக் காதல்…

வருவாயா சிம்டாங்காரா?...

🌹🌹🌹🌹🌹🌹

பள்ளி முழுவதையும் தீபிகாவுடன் சேர்ந்து சிபியும், மேகனும் சுற்றி வந்த பிறகு தீபிகாவின் வகுப்பு மாணவியிடம் மேம் இருக்குமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான் சிபி.

 

"உன் வகுப்பு எங்கே இருக்கு" என்று தீபிகாவிடம் சிபி சற்றே கோபமாக கேட்டான்.

 

"மூன்றாவது மாடியில், படி ஏறியதும் இடது பக்கம், நான்காவது அறை." என்றாள் தீபிகா.

 

"வா" என்று கூறி சிபியும், மேகனும் நடக்க, தீபிகா அதே இடத்தில் நின்றாள்.

 

"என்னாச்சு?" என்று சிபி கேட்டான்.

 

"நா வரல."

 

"ஏன்டா?" என்று மேகன் கேட்டான்.

 

"மேஜை, நாற்காலிகளை எடுத்து வை! இத எடு! அத எடு ன்னு வேலை ஏவி கிட்டே இருப்பாங்க சித்தப்பா... எல்லோரும் வீட்டுக்கு போன பின்னாடியும் எல்லாத்தையும் ஒதுங்கவை ன்னு ரொம்ப லேட்டாதான் வீட்டுக்கு விடுவாங்க..." என்றாள் தீபிகா சோகமாக.

 

'இதுக்கு பயந்து தான் இப்படி நடந்து கொண்டாளா? அடக்கடவுளே பிள்ளையை தப்பா புரிஞ்சுக்கிட்டேனே. ... ச்சே! நான் ரொம்ப மோசம்." என்று சிபி தன்னைத்தானே திட்டிக்கொண்டான்,

 

"சரி நாங்களே போய் பாத்துக்குறோம்." என்று தீபிகாவிடம் கூறிவிட்டு, மேகனைப் பார்த்து,

"வாடா போவோம்." என்று அழைத்தான்.

 

"நீங்க மட்டும் போயிட்டு வாங்க சித்தப்பா. மேகன் மாமா எனக்கு துணையா எங்கூட இருக்கட்டும். நான் தனியா இருந்தாலே யாராவது வேலை சொல்லுவாங்க..."

 


"நீ என்ன இவ்வளவு சோம்பேரியா இருக்க?" என்ற சிபி, மேகனைப் பார்த்து, "சரி! நீ தீபி கூட இரு. நான் பார்த்துவிட்டு வரேன்." என்று கூறி விட்டு இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறியவன், திரும்பி இறங்கி வந்து,

 

"மேம் பேர் என்ன?" என்று கேட்டான்.

 

"பேர்கூடத் தெரியாமலாடா இந்த ஓட்டம் ஓடிக்கிட்டு இருக்க?" என்று மேகன் கேட்டதும்,

 

"எதையாவது கற்பனை செய்யாத." என்று விட்டு தீபிகா வைப் பார்த்தான்.

 

"மிருத்திகா" என்றாள் தீபிகா.

 

"கிருத்திகா வா?"

 

"இல்லை! மிருத்திகா."

 

மீண்டும் படிகளில் தாவி ஏறினான்.

 

அவனை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த மேகன், தீபிகாவிடம்,

"இவன் எப்பலயிருந்து இப்படி பைத்தியம் ஆனான்?" என்று கேட்டான்.

 

தீபிகாவும் சிரித்துக் கொண்டே, "அது கொஞ்ச நாளாவே நடக்குது மாமா." என்றாள்.

 

"வாங்க மாமா, நாம அப்படி போய் உட்காருவோம்." என்று கூறி மரத்தடியில் இருக்கும் கல் பெஞ்ச்க்கு சென்று, அமர்ந்தாள்.

 

"நாம விளையாட்டு போட்டி நடக்குற இடத்துக்கு போவோம் வா." என்று அழைத்தான் மேகன்.

 

"இங்கேயே சிபி சித்தப்பா வரும் வரை காத்திருப்போம் மாமா ப்ளீஸ்!"

 

"இதுக்கு எதுக்கு ப்ளீஸ் போடுற? " என்று கூறி தீபிகா அருகிலேயே அமர்ந்து விட்டான்.

 

மாடிக்கு சென்ற சிபி, தீபிகாவின் மேம் ஐ தூரத்தில் இருந்து பார்த்தான். இருபத்தி மூணு, இருபத்தி நான்கு வயதிருக்கும். சிரிக்கவே தெரியாதது போல இறுகிய முகம். ‘டீச்சர் என்றால் சிரிக்கக் கூடாதோ?’ என்று நினைத்தவன், அருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

"தப்பா எடுத்துக்காம கொஞ்சம் வெளியே வரமுடியுமா?” என்று கூறி பால்கனிக்கு அழைத்து வந்தான்.

 

"அதோ அந்த மரத்தடியில் உக்காந்து இருக்காளே அந்த தீபிகாவின் சித்தப்பா நான்." என்று கூறி விட்டு, ‘மேம் மேகனைப் பார்க்கிறார்களா?’ என்று கவனித்தான்.

 

      அவர்கள் இருவரையும் மேம் பார்த்து விட்டு, "அதான் வந்ததும் சொல்லிட்டீங்களே? தீபிகா என் வகுப்பு மாணவிதான்." என்றார்.

 

"ஒருவேளை ரெண்டு தீபிகா இருந்தா? அதான் அடையாளம் தெரிஞ்சுக்க அழைத்து வந்தேன்... மன்னிச்சுடுங்க." என்று கூறி அந்த மேம் உடன் வகுப்பறைக்கு சென்றான்.

 

‘படிப்பு சம்மந்தமாக ஏதாவது பேசப்போகிறான்’ என்று நினைத்து மேம் அவனைப் பார்க்க,

 

"நீங்க தான் பாட்டு போட்டிக்கு பாட்டு சொல்லி தந்ததா தீபிகா சொன்னா... உங்களுக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டா மேம்?" என்று சிபி கேட்டதும்,

 

"இதைக் கேக்க தான் இவ்வளவு தூரம் வந்திங்களா?" என்று மேம் கேட்ட விதத்திலேயே, ‘சிபி கேட்ட கேள்வி பிடிக்கவில்லை’ என்று தெரிந்திருந்தது.

 

"மேம் நான் சின்ன பையன் இல்ல... ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான் இங்கே வந்திருக்கேன். தயவுசெஞ்சு என்னை சகோதரனா நினைச்சு, தப்பா எடுத்துக்காம எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்!" என்று சிபி கெஞ்சும் பாவனையில் கேட்டதும் அந்த மேம் இறுக்கம் தளர்ந்து சிபியைப் பார்த்தார்.

 

"அங்கே தீபிகா பக்கத்துல இருந்தவனை நீங்க எங்காவது பாத்திருக்கீங்களா?" என்று சிபி கேட்டதும் ஜன்னல் வழியாக மேகனும், தீபிகாவும் அமர்ந்திருப்பதை மீண்டும்  பார்த்தவர், 

 


"இல்ல. அவர் யார்? அவருக்கு நான் ஏதேனும் உதவனுமா ?"

 

மேகனைப் பார்த்ததும், மேம் எந்த ரியாக்சனும் இல்லாமல் இருந்த போதே சிபிக்கு, மேகனை மேம் க்கு தெரியவில்லை என்று புரிந்தது. ஆனாலும் கேட்டான்.

 

"உங்களுக்கு நிறைமதி, சிவகாம சுந்தரி, அகிலா அல்லது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ன்னு யாரையாவது தெரியுமா மேம்?"

 

"என் வகுப்புல இந்த பெயர்ல எந்த மாணவியும் இல்ல..."

 

"அவங்க முணு பேரு இல்ல மேம், ஒரே ஆள் தான். அவங்களுக்கு உங்க வயசுதான் இருக்கும்."

 

"இல்ல அப்படி யாரையும் தெரியாது. நீங்க பிரச்சனை என்னன்னு சொன்னா தான் என்னால உதவ முடியும்." என்றார்..

 

'ம்ஹூம்! இவங்களுக்கும் மேகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அந்த பாடல் எல்லாமே ஜஸ்ட் கோஇன்சிடன்ஸ்..’. என்று புரிந்து கொண்டு அந்த மேம் க்கு நன்றி கூறி படிகளில் இறங்கினான்.

 

வீட்டிற்கு வந்து சோர்ந்து அமர்ந்து விட்டான்... 'மேகனுக்கு வர்றது வெறும் கற்பனை... நிறைமதி சம்மந்தப்பட்ட எதுவும் கிடைக்கவில்லை. என்று நினைத்தவன், கடைசி முயற்சியாக, மேகனுக்கு ஃபோன் செய்து,

 

"நிறைமதி வீட்டுக்கு போகணும் னு சொன்னியே, நாளைக்குப் போகலாமா?” என்று சிபி கேட்டதும்,

 

"நான் போயிட்டு வந்துட்டேன் டா. அவங்க யாரும் அந்த வீட்ல இல்ல." என்றான் மேகன்.

 

"எப்படா போன? அதுசரி அவங்களப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்க முடியலையா?" என்று சிபி கேட்டதும்,

 

"குற்றாலத்தில இருந்து வந்தோமே அன்னைக்கு போனேன். நீ டயர்டா இருப்பேன்னு நான் தனியா போனேன். பக்கத்து வீட்டுகள்ல விசாரிச்சப்ப ஒருத்தர், 'அவங்க பொண்ணுக்கு விபத்து நடந்து ஆஸ்பத்திரில இருக்குறதா போனாங்க. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல. யார் முகமும் சரியில்ல. கல்யாணத்துல விருப்பமில்லாமல் அந்த பொண்ணு தற்கொலை பண்ணி இறந்து விட்டதாகவும், அதனால ஒரு வாரத்தில வீட்ட காலி பண்ணிட்டு போயிட்டாங்க ன்னும் தெரிஞ்சவங்க சொன்னாங்க’ ன்னு அவங்க பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் சொன்னார் டா. .. ம்ச்சு! விடு! வேற ஏதாவது பேசு." என்றான் மேகன்.

 

சிபிக்கு மிகவும் வேதனையாகஇருந்தது. 'அந்த பெரியவர் சொன்னத நம்பி இவ்வளவு தூரம் வரவழைச்சு மேலும் கஷ்டத்த கொடுத்துட்டேனே' என்று வருந்தினான்.

 

இனி இங்கிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, மேகன் குடும்பத்தினரிடமும் கலந்து பேசி இரண்டு நாளில் ஆஸ்திரேலியா போவதாக முடிவெடுக்கப்பட்டது.

 

சிபியின் வீட்டிற்கு வந்து,” தாங்கள் மீண்டும் ஆஸ்திரேலியா போறோம்” என்று சொல்லி விட்டு செல்ல வந்தான் மேகன்.

 

யாராலும் எதுவும் பேச முடியவில்லை. பிறகு சிபியின் அண்ணி,

 

"இவ்வளவு தூரம் வந்து ஒரு பிரயோசனமும் இல்லைன்னு நினைக்காத தம்பி. அந்த பொண்ணுக்காக எதோ முயற்சி செய்தோம்னு நினைச்சுக்குவோம். என்ன பண்றது?.... இனி அந்த பொண்ண மறந்துட்டு வேற ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க... உனக்காக இல்லைனாலும் உன் குடும்பத்துக்காகவாவது மனசு மாறு." என்று ஆறுதல் கூறினார்.

 

மேகனும், சிபியும், சிபி அறைக்கு சென்று சும்மா பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த தீபிகா, சிபியிடம்,

 

"அம்மா, இந்த சாமான் வாங்கிட்டு வர சொன்னாங்க." என்று ஒரு பேப்பர் துண்டைக் கொடுத்து விட்டு போய்விட்டாள்.

"நானும் வரேன்." என்ற மேகனிடம்,

 

"இரு இப்ப வந்துடுவேன்." என்று சொல்லிவிட்டு சிபி கடைக்கு கிளம்பினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்த அறைக்கு வந்த தீபிகா,

 

"ஏன் மாமா ஊருக்கு போறீங்க? எனக்காக இங்க இருக்கலாமே." என்றதும் மேகன் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்.

 

"மாமா உங்க நிறைமதி அக்காவ விட நான் உங்களை அதிகமா விரும்புறேன். உங்கள அழ விட்டுட்டு நான் செத்து போக மாட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக்கங்க மாமா." என்றாள்.

 

 


இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத மேகன் அதிர்ந்து விட்டான். எதிரில் இருப்பது சிறு குழந்தை. ‘தன்னைப் பற்றி இந்த வீட்டில் பேசியதைக் கேட்டு பெரிய மனுஷி போல வந்து பேசுறா' என்று நினைத்தவன் சிரித்தபடி,

 

"நீ என்ன பேசுற ன்னு உனக்கே புரியாத குழந்தை நீ. நான் கஷ்டப்படுறேன்னு நினைச்சு ஏதேதோ பேசுறடா நீ! பெரியவளான பிறகு இப்ப நீ பேசினத நினைச்சா, உனக்கே சிரிப்பு வரும். சிபிக்கு அண்ணன் பொண்ணு ன்னா எனக்கும் அப்படி தானே? அண்ணன் பொண்ணு வேற, எம் பொண்ணு வேறயாடா? போ! போய் படி, விளையாடு ம்ம்? எனக்காக பெரிய மனுஷி மாதிரி தியாகம்லாம் வேண்டாம் ஓகே!" என்று கேட்க,

 

"நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல... விளையாட்டு போட்டிக்கு வந்திங்கல்ல அன்னைக்கு உங்களையும் என்னையும் சேர்த்து  பாத்துட்டு, நம்மை எங்க கிளாஸ் பிள்ளைகள், ‘நல்ல ஜோடிக் பொருத்தம்’ னு சொன்னாங்க தெரியுமா?"

 

"அப்படியா? அடடா நீ குழந்தை னா உன் தோழிகள் மட்டும் தொண்டு கிழவிகளா?" என்று கூறி மேகன் சிரிக்கும் போதே, பணம் எடுக்க மறந்துவிட்டு கடைக்கு போன சிபி இங்கே நடந்தது அனைத்தையும் கேட்டபடி உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் தீபிகா ஓடிவிட்டாள்.

 

"எப்படி டா குழந்தை ல இருந்து கிழவி வரைக்கும் உன்னை பிடிக்குது?" என்று சிபி கிண்டலடித்தான்.

 

"உடனே வந்துடுவியே என்னை கலாய்க்க! சரி! நான் கிளம்புறேன்டா" என்று சொல்லி மேகன் போய்விட்டான்.

 

வீட்டிற்கு செல்ல மனம் வராமல் கடற்கரைக்குச் சென்றான்.

கடற்கரை காற்று இதமாக வீச, கடலைப் பார்த்து, "நீங்க தான் அவள எனக்கு அறிமுகம் செஞ்சிங்க. .. என்னை தனியா பொலம்ப விட்டுட்டு, பிரிச்சும் கூட்டிட்டு போயிட்டிங்க. .. ஆனாலும் உங்கள கடைசியா பாக்க வந்திருக்கேன்... எம் மேல உங்களுக்கென்ன அப்படி ஒரு கோபம்?" என்று கேட்டான்.

 

தூரத்தில் இருந்த காரபொரி கடையிலிருந்து பாடல் கேட்டது.

 

“காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்ன ஆனாள்

நான் காற்று வாங்க போனேன்..”

 

-என்று பாட, "என்னைப் போல இன்னும் நிறைய பேர அழ வச்சிட்ட போல?" என்று கடலிடம் கூறிவிட்டு எழுந்தவன் மீது, யாரோ வந்து மோதினார்கள்...

 

யார் அது?

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்

 

                                                       ❤❤❤❤❤❤❤❤ 

Post a Comment

0 Comments