சிம்டாங்காரன்: அத்தியாயம்-14

 

14

கண்கள் கூட கவிதை பெசும்

உன் பார்வையில்

கவிதை கூட கண்ணீர் சிந்தும்

உன் பிரிவில்

வருவாயா சிம்டாங்காரா?...

🌹🌹🌹🌹🌹🌹

"அடுத்து வரும் முகூர்த்த நாளில் ‘சிவகாமி’ ங்கிற பெண்ணைப் பாக்கப் போகலாமா?" என்று புரோக்கர் கேட்டதும், குடும்பத்தினர், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

"என்னங்கய்யா? ஏற்கனவே பார்த்த பெண், ரெண்டு பேருல ஒரு பெண்ணை புடிச்சுகிருச்சா?" என்று தாத்தாவைப் பார்த்து கேட்டார் கல்யாண புரோக்கர்.

 

"வீட்டுல கலந்து பேசிட்டு ஃபோன் பண்றேன்." என்று கூறி அனுப்பி வைத்தார் தாத்தா.

 

குடுத்தினர் அனைவரும், ஹாலில் இருந்தனர். மாடியில் இருந்து மேகன், சிபியுடன் வந்து அமர்ந்தான். புரோக்கர் வந்து போன விவரத்தை பிறைசூடன் கூறினார்.

 

"இதுவரை பார்த்த பெண்களில் யாரையும் உனக்கு பிடிச்சிருக்கா ப்பா? என்று மரகதம் கேட்டார்.

 

"நான் இன்னும் என் மனைவியைத் தேடும் மனநிலைக்கு வரல ஆச்சி. என்னால அவங்க ரெண்டு பேரையுமே எனக்கு வரப்போகும் மனைவியாக பாக்கமுடியல... தயவுசெஞ்சு புரிஞ்சுக்குங்க..." என்றான் மேகன்.

 

பேச்சை மாற்ற நினைத்த சிபி, "அடுத்து பாக்க போற பொண்ணு பேரென்னப்பா?" என்று பிறைசூடனிடம் கேட்டான்.

 

அவன் பேச்சை மாற்றுவது புரிந்து, "அது.. எதோ. .. டக்குன்னு ஞாபகம் வரல.. காந்தி காலத்திலயே தடை பண்ணிய பேரு டா..." என்றார் சிரித்தபடி.

 

"ஏன் அந்த பேருக்கென்ன? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் படிப்பு முடிஞ்சு வந்தவாசிக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருந்தேன். அங்க எதிர் வீட்டுப் பொண்ணு பேரு சிவகாமி... பாக்க அப்படியே..." என்ற தாத்தா அருகில் "உஷ் ... உஷ்ஷ்ஷ்" என்று சப்தம் வரவும் திரும்பிப் பார்க்க,

மேகன் குறும்பாக சிரித்தபடி இருந்தான். சிபியும் பிறைசூடனும் கண்களால் சைகை செய்ய... "அவர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டவாறே மகளைப் பார்த்தார். ஷோபனா கண்களில் சிரிப்பு தெரிய...

"என்ன? எல்லோரும் திருட்டு முழி முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க?" என்று கேட்டார்.

 

"திருட்டு வேலை யார் பாத்தாங்ங்கன்னு இப்ப தெரிஞ்சுடும்....

நீங்க சொல்லுங்க." என்று மரகதம் ஆச்சி சொன்னதும் சிரித்தபடி மேலும் ஏதோ சொல்வதற்காக திரும்பி தன் மனைவியைப் பார்த்தவர், மனைவியின் முகத்தில் சாட்சாத் காளிதேவியே தெரிய,

 

'ஆஹா உளறி விட்டேனா' என்று நினைத்தவர், "ம்ம்ம் அப்புறம் என்ன சொன்னேன்? ஆஆங் வந்து சிவசாமின்னு.."

 

"ஒரு பொண்ணு இருந்தாளா?" என்று மரகதம் எடுத்துக் கொடுக்க,

 

"ஆமாம்! இல்லையில்லை என் தோழன் இருந்தான் அவன் ரொம்ப நல்லவன்னு சொல்லவந்தேன். .."

 

"அவ அப்படியே யாரு மாதிரியோ இருப்பதாக சொன்னீங்களே?" என்று மரகதம் ஆச்சி விடாமல் கேட்க,

 

"கே.ஆர். விஜயா மாதிரி" சட்டென்று உளறி விட்டார்.

 

ஒட்டுமொத்த குடும்பமே சிரிக்க... தாத்தாவும் சேர்ந்து சிரித்து மழுப்பினார்.

 

மரகதம் பேசாமல் அமைதியாக பார்க்க, 'தொலஞ்சடா மவனே' என்று மீண்டும் சிரித்தார்.

 

"சரி!சரி! விடு டார்லிங்... சின்னப்பய ஏதோ தப்பு பண்ணிட்டான்" என்று மரகதத்திடமும்,  மேகன் சமாதானமாக கூற,

 

"நான் எங்கடா தப்பு பண்ணேன்?"

 

"அப்ப தப்பு பண்ணலையா தாத்தா?"

 

"அடேய் ராஸ்கல்."

 

"நான் சமாதானம் தானே பண்றேன் தாத்தா! அதுக்கு ஏன் கொந்தளிக்கிறீங்க?"

 

"இதுவாடா சமாதானம்?"

 

"சரி விளையாடினது போதும்... பொண்ணு எப்ப பாக்க போறோம்? " என்று ஷோபனா கேட்க,

 

"விளையாடுறாங்களா?" என்று தாத்தா   "அடிப்பாவி நீயுமா! என்பதைப் போல தன் மகளைப் பார்த்து கேட்டார்.

 

மரகதம் ஆச்சி முறைக்கவும், தாத்தாவும் சீரியஸாக பேச்சில் கலந்து கொண்டார்.

 

'சிவகாமி' பெயர் தான் கொஞ்சம் பழயதாக இருந்தது. ஆனால் பெண் நன்றாக நாகரிகமாக இருந்தாள். சிவகாமியை பார்த்தும் மேகனுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படவில்லை. பெண்வீட்டாரிடமிருந்து விடை வீட்டை விட்டு வெளியே வந்து அனைவரும் காரில் ஏற, மேகனும் ஏற முற்படும் போது,

 

"இதே வேலையாத்தான் திரியிறீங்க போல?" என்று நிறைமதியின் குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பியவன் தலை காரில் இடித்தது.

 

"பார்த்து! பார்த்து!" என்று எல்லோரும் பதறினர்.

 

இது எதையும் கவனிக்காமல் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான். யாரோ ஒரு பெண் எதிர்வீட்டிற்குள்  திரும்பிப் பார்க்காமல் சென்று  கொண்டிருந்தாள். மேகன் யாரையோ தேடுவது புரிந்த சிபி,

 


"யார பாக்குற?" என்றான்

 

‘என்ன சொல்றது? எப்படி சொல்றது? நிஜமாகவே பேசினார்களா? இல்லை மனபிரம்மையா?’ என்று குழப்ப,

 

"யாருமில்ல நீ ஏறு." என்று மேகன் கூறினான்

 

வீட்டிற்கு வந்தும் நிறைமதியின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

 

"என்னடா? வந்ததுல இருந்து எதையோ யோசிச்சுக்கிட்டிருக்க?" என்று சிபி கேட்டான்.

 

மேகன் நடந்ததைக் கூறி, "எனக்கு நிச்சயமா சொல்லத்தெரியலடா... ஆனா நிறைமதி குரல் மாதிரியே இருந்தது."

 

"அவங்களோட ரெண்டு மூணு தடவ தானடா பேசிறிருப்ப? குரல் எப்படி ஞாபகத்துல இருக்கும்?.

 

"மறந்தா தானடா.. தினமும் என் காதுல அவ பேசிய வார்த்தைகள் கேட்டுகிட்டே தான இருக்கு.." என்றான் மேகன்.

 

'இவன் இப்படி இருந்தா எப்படி இன்னொரு பொண்ண பிடிக்கும்?' என்று நினைத்த சிபி,

 

“ஒருவேளை தினமும் நீ நினைக்கிறதால தான் அவங்க குரல் கேக்கிற மாதிரி இருக்கோ என்னவோ...”

 

"எனக்கும் அப்படித் தான் தோணுது... ஆனா நிஜமாவே பேசின மாதிரி இருக்குடா."

 

"அவங்க எப்படி பேசமுடியும்? சரிவிடு கற்பனைனே நினைச்சுக்குவோம்... இன்னும் ஒரு பொண்ணுதான் அந்தப் பொண்ணையும் சீக்கிரம் பாத்துட்டு நம்ம ஊருக்கு கிளம்புவோம் டா. .." என்று எதிர்பார்த்த, எதுவும் நடக்காத விரக்தியில் பேசினான் சிபி.

 

"கட்டாயம் அந்தப் பொண்ணையும் பாத்தே ஆகனுமாடா? நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்றேன்டா. ஒவ்வொரு பொண்ணு வீட்லயும் நம்பிக்கையோட பேசும்போது, தப்பு பண்ற மாதிரி இருக்குடா. ஒரு உண்மைய சொல்லட்டுமா? இப்ப கடைசியா ஒரு பெண்ணை பாக்கப் போனோமே... அந்தப் பொண்ண உண்மையிலேயே எனக்கு பிடிச்சிருக்கான்னு பாத்தேன்டா.. ஆனா எனக்கு அப்படி தோணவே இல்லடா... "

 

"சரிவிடு ரொம்ப குழப்பிக்காதே... நான் பெரியவங்கட்ட பேசுறேன்." கூறிவிட்டு நேராக, சிவகாமி (கடைசியாக பார்த்த பெண்) யின் எதிர் வீட்டிற்கு அருகில் இருந்த டீக்கடையில் டீ வாங்கிக் குடித்தபடி, அந்த எதிர் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் சிபி.

யாரும் வெளியே வருவதாகத் தெரியவில்லை... பிறகு அவனே சென்று எதிர்வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, நடுத்தர வயது ஆண் கதவைத் திறந்தார்.

 

"எதிர் வீட்டு சிவகாமியை பெண் பார்த்துச் சென்றோம். கொஞ்சம் அவங்க குடும்பத்தைப் பற்றி தெரிஞ்சுக்க வந்திருக்கேன்." என்று சிபி கூறியதும் கதவைத் திறந்து ஹாலில் அமரவைத்து, சிவகாமியைப் பற்றியும் அவங்க குடும்பத்தைப் பற்றியும் நல்லவிதமாகவே கூறினார். வீட்டில் வேறு யாரும் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை.

 

"உங்க பேர் என்ன சார்? இந்த வீட்டில நீங்க மட்டுமா சார் இருக்கீங்க?" என்று சம்பிரதாயமாக கேட்பது போல கேட்டான்.

 

அவர் சிரித்தபடி, "எம்பேரு தன்ராஜ். என் வீட்டில இருக்கிறவங்க வெளிய போயிருக்காங்க." என்று கூறினார்.

 

'இதற்கு மேல் என்ன பேசுவது? உங்க வீட்ல, காலைல ஒரு பெண்ணை பார்த்தேன்... அந்தப் பெண் யாருன்னா கேட்க முடியும்? தர்மஅடி விழுந்துடாது?!!’   என்று நினைத்து விடைபெற்றான் சிபி.

 

மாலை நான்கு மணிக்கு சிபி, தீபிகாவின் பள்ளிக்கு சென்று தீபிகாவை விசாரித்து அவள் அருகிலேயே அமர்ந்தான்.

 

"மேகன் மாமா வரலையா சித்தப்பா?" என்று சிபிக்குப் பின்னால் தேடியபடியே தீபிகா கேட்டாள்.

 

"இல்லடா. "

 

"ஏன்?"

 

"நான் இங்க வந்ததே அவனுக்குத் தெரியாது. அதுசரி உங்க கிளாஸ் மேம் யாரு?"

 

"இப்ப போனா பாக்க முடியாது சித்தப்பா. எங்க கிளாஸ் பசங்க கலந்துகிட்ட போட்டி முடிந்ததும் கூட்டிட்டு போறேன். மேகன் மாமா தான எங்க மேம் ஐ பாக்க ஆசைப் பட்டாங்க? நீங்க மேகன் மாமாவுக்கு ஃபோன பண்ணி வரச்சொல்லுங்க சித்தப்பா." என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே சிபி மேகனுக்கு ஃபோன் செய்து பள்ளிக்கு வரச் சொன்னான்.

 

இருபது நிமிடத்தில் மேகன் அவர்களுடன் இருந்தான்.

 

"ஆமா உங்க மேம் பேரு என்ன?" என்று மேகன் கேட்டான்.

 

"ஆஆமாமாம்! யாரு பேர தெரிஞ்சுக்கனுமோ அவங்க பேர தெரிஞ்சுக்காத... இப்ப இந்த மேம் பேரு நமக்கு ரொம்ப முக்கியமா?" என்று மேகனைக் கலாய்த்தான் சிபி.

 

"இவன் ஏன் இவ்வளவு டென்சன் ஆகிறான்? என்னைய கழட்டி விட்டுவிட்டு வந்திருக்கான். பேர கேட்டாலே கொந்தளிக்கிறானே!' என்று சிபி யைப் பற்றி நினைத்த மேகன், மீண்டும் தீபிகாவிடம்,

 

"உங்க மேம் க்கு என்ன வயசிருக்கும்?” என்று கேட்டான்.

 

"சிபி சித்தப்பா தான் எனக்காக வரல. எங்க மேம் ஐ பாக்க வந்தாங்க... நீங்களுமா மாமா?" என்று தீபிகா கேட்டாள்.

 

மேகன் சிரித்தபடி சிபியைப் பார்க்க, அவன் ரொம்ப மும்முரமாக விளையாட்டு போட்டியைக் கவனித்துக் கொண்டிருப்பதைப் போல் பாவனை செய்தான்.

 

'ஆஹா பையன் மாட்டிக்கிட்டான் போலிருக்கே!... அடடா பாக்காமலே காதலா?!!' என்று நினைத்தபடி தனக்குள் சிரித்துக் கொண்டான் மேகன்.

 

தீபிகா ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் மிகவும் குதூகலமாக இருந்தாள். அவளுடைய வகுப்பு தோழிகளுக்கு மேகனையும், சிபியையும் அறிமுகப் படுத்தினாள். ஆனால் வகுப்பு டீச்சரை மட்டும் கண்ணில் கூட காட்டவில்லை... சிபிக்கு பொறுமை குறைய,

 

"உன் மேம் எங்க தீபி?" என்று கேட்டான்.

 

மேகன் சட்டென்று சிரித்துவிட,

 

"இப்ப எதுக்குடா சிரிக்கிற?" என்று சிபி மேகனிடம் கேட்டான்.

 

"ஒன்னுல்லை!" என்று கூலாக இரு தோள்களையும் ஏற்றி இறக்கினான்.

 

"வாவ்! மாமா இப்ப நீங்க பண்ணது ரொம்ப நல்லாயிருக்கு... மறுபடியும் செஞ்சு காட்டுங்களேன்." என்றாள் மேகனிடம் தீபிகா.

 

மேகனும் செய்து காட்டவே அவள் உற்சாகமாக கை தட்டினாள்.

 

“உன் வகுப்பு பசங்க கலந்து கிட்ட போட்டி முடிஞ்சுருச்சுல? வா உங்க மேம் ஐ காட்டு." என்றான் சிபி.

 

இரு தோழர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக விசாரித்தபடி சென்றாள் தீபிகா. அவளிடம் ஒரு வித்தியாசம் மிகத் தெளிவாகவே தெரிந்தது சிபிக்கு.

 

பார்ப்பவர்களிடமெல்லாம் மேகனையும், சிபியையும் அறிமுகப் படுத்தியதில் உள்ள வித்யாசம் சிபிக்கு  எதையோ உணர்த்தியது...

 

      'சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது... வரவர எல்லா விஷயத்தையும் வேற கோணத்தில பாக்க ஆரம்பிச்சுட்ட . ..' என்று மனதிற்குள் தன்னையெ திட்டிக்கொண்டான் சிபி.

 

      தீபிகா பள்ளியை சுற்றி சுற்றி வந்தாள்... ஆனால் அவளுடைய மேம் ஐ மட்டும் காணோம். .. 'காணோமா?  அல்லது அறிமுகப் படுத்த விருப்பமில்லையா?' என்று நினைத்த மனதை மீண்டும் அடக்கினான் சிபி.

 

      எதிரில் வந்த, தன்னுடைய வகுப்பு  மாணவிகளிடம் மேகனையும் சிபியையும் அறிமுகம் செய்தாள். மேகனை அறிமுகம் செய்யும் போது மட்டும் தீபிகாவின் முகத்தில், பெருமை அப்பட்டமாக தெரிந்தது. புருவங்கள் முடிச்சிட தீபிகாவைப் பார்த்த சிபிக்கு ஒரு சந்தேகம் எழ, தீபிகாவின் தோழிகளிடம் நேரடியாக, "உங்க கிளாஸ் மேம் எங்க இருக்காங்க ம்மா?" என்று கேட்டான்.

 

      "எங்க கிளாஸ் ல தான் அண்ணே இருக்காங்க." என்று கூறினர்.

 

 'இது தீபிக்குத் தெரியுமா? தெரியாதா?' என்று யோசனையுடன் சிபி தீபிகாவைப் பார்க்க. தீபிகா திருட்டு முழி முழித்து, ‘தனக்கு மேம் இருக்குமிடம் தெரியும்’ என்பதை உறுதி படுத்தினாள்.

 

      'ஏன் அறிமுகப் படுத்த மறுக்கிறாள்?' என்று நினைத்தவனுக்கு மீண்டும் தீபிகாவின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தை நன்கு உணர்ந்தான்...

 

சிபி உணர்ந்தது என்ன? தீபிகா வின் மேம் ஐ தோழர்கள் பார்த்தார்களா?

 

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்

 

❤❤❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments