சிம்டாங்காரன்: அத்தியாயம்- 13

13

என் பிடிவாதத்திடம் தோற்று

உன் அன்பிடம் ஜெயிக்கிறேன்...

வருவாயா சிம்டாங்காரா?...

🌹🌹🌹🌹🌹🌹

 

"உடம்புக்கு ஒன்னுமில்லை! வெறும் மனச்சோர்வு (depression) தான்." என்றார் குடும்ப மருத்துவர்.

 

"இத வர விடாம பண்ணுங்க டாக்டர். மேகனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு இருக்கோம்." என்றார் தாத்தா.

 

"மனச்சோர்வுங்கறது வியாதி கிடையாது. மருந்து கொடுத்து சரி பண்ண... முதல்ல உங்க பேரன் ஒத்துழைக்கணும். .. ‘அந்தப் பெண் தன் அஜாக்கிரதையால் தான் இறந்தாள்’ என்ற குற்ற உணர்வுல இருந்து வெளி வந்துட்டாலே சரியாயிடும்... ஆனா இவர் மேலும் மேலும் மனச புண்ணாக்கிக்கிறார்... இதற்கு கல்யாணம் ஒரு நல்ல தீர்வா? என்பது மணப்பெண்ணைப் பொறுத்த விசயம்... அதனால அவசரப்படாம இவர் மனச புரிஞ்சு நடக்கிற பொண்ணா பாருங்க..." என்று கூறி விட்டு, அடுத்த நோயாளியைக் கவனிக்கப் போய்விட்டார்.

 

"காலையில நல்லா தானம்மா இருந்தான்..." என்று பிறைசூடன் வருந்தவும்,

 

"கொஞ்ச நாளைக்கு இந்த பெண் பார்க்குற வேலையை நிறுத்தி வைப்போமா?" என்று தாத்தா அனைவரிடமும் கேட்டார்.

 


"நிறுத்த வேண்டாம். அவனைத் தயார் படுத்துவோம். பின்னே எப்ப கல்யாணம் பண்றது? அஞ்சு வருசமா மறக்காதவன், இப்பமட்டும் மறந்துடுவானா? அவனுக்கு சரியான பிறகுதான் பொண்ணு பார்க்கனும்னா... ‘அலை எப்ப ஓயுறது கடல்ல எப்ப குளிக்கிறது’ ங்கற கதையாயிடும்." என்றார் மரகதம் ஆச்சி...

 

மரகதம் ஆச்சி சொன்னதும் சரியென்று பட்டதால், அனைவரும் அமைதியாக இருந்தனர்.

 

"ஒரு வேளை கல்யாணம் என்ற வார்த்தை அவனுக்கு சின்ன பாதிப்பைத் தரலாம்... அதனால சும்மா மன மாற்றத்துக்கு எங்காவது போயி சுத்தி பாத்துட்டு வாங்க... பிறகு பெண் பார்க்குறத வச்சுக்கலாம்." என்றார் மரகதம் ஆச்சி.

 

“இரண்டு பெண்களைப் பார்த்து விட்டோம். அந்தப் பெரியவர் சொன்னமாதிரி ஆக்கப்பூர்வமான விசயம் எதுவும் நடக்கவில்லையே? பிறகு எதுக்கு பெண் பார்க்க வேண்டும்?" என்றார் பிறைசூடன்.

 

"ஏன் அப்படி நினைக்கிறீங்க? அங்கே போனதால தான இந்த பிரச்சனை வந்தது? சில சமயங்களில் மருந்து குடிச்சா நோய் பெரிதான மாதிரி தோணும், அதுக்காக மருந்து குடிக்கிறது விட்டுடலாமா? அதுமாதிரி தான் இதுவும். ஆரம்பத்தில எனக்கும் பெருசா நம்பிக்கை இல்ல. ஆனா இப்ப நிச்சயம் நல்லதுநடக்கும்னு தான் தோணுது." என்றார் ஷோபனா.

 

"சரி நாமும் நம்பிக்கையோட அடுத்த அடி எடுத்து வைப்போம். நாளைக்கு எந்த ஊர் போகலாம்? " குஷியாக கேட்டார் தாத்தா.

 

"மொத ஆளா கிளம்புறாரு பாரு," என்ற மரகதம் ஆச்சி, "இப்ப குற்றாலத்தில் நல்ல சீசன். அங்க போகலாமா?” என்று அனைவரிடமும் கேட்டார்.

 

"முடிவே பண்ணிட்டியா? இப்ப எதுக்கு குற்றாலம் போகனும் னு சொல்ற?" என்று கேட்டார் தாத்தா.

 

"குற்றத்துல இப்பதான் நல்ல சீசன். முன்னாடியெல்லாம் குற்றாலத்துக்கு போகத் தானே செஞ்சோம்? எதுக்கு போனோம்? பல நேரங்களில உங்களுக்கு மூளை வேலை செய்ய மறுத்து விடுது. குற்றாலம்னா மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் போகனுமா? அப்போ அங்க போற எல்லோருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்களா?"

 

‘ஆஹா அவசரப்பட்டு வாய விட்டுட்டனோ?’ என்று நினைத்த தாத்தா, "நான் அப்படி சொல்லல." என்று மழுப்ப...

 

அவரை அமைதியாக அர்த்தமுள்ள பார்வை பார்த்தார் மரகதம் ஆச்சி.

 

"மக, மருமகனையெல்லாம் பக்கத்துல வச்சுக்கிட்டு, இப்படி பாக்காத மரகதம்..." என்று சூழ்நிலையை மாற்றுவதாக நினைத்து தாத்தா உளற,

 

எரிமலையானார் மரகதம். கண்களில் அனல் தெரித்தது.

 

"பாத்தியாம்மா! இப்பல்லாம் உங்க அம்மா என் ஃபீலிங்ஸ புரிஞ்சுக்குறதே இல்ல." என்று தாத்தா பொய்யாக வருந்த,

 

"ஷோபி! உங்கப்பாவ திருவாய மூடிக்கிட்டு இருக்கச் சொல்லு. இல்ல நான் பொல்லாதவளாயிடுவேன்." என்றார் மரகதம் ஆச்சி.

 

அப்பொழுது தான் எழுந்து வந்த மேகன் இங்கே நடந்த கூத்தைக் கவனித்து விட்டு, சிரிக்க ஆரம்பித்தான்.

 

"தாத்தா! கையை கட்டி வாயில விரலை வச்சு அமைதியா உக்காந்துடுங்க. இல்ல மரகதம் டார்லிங் கிட்ட உதை கிடைக்கும்." என்றான் மேகன் சிரித்தபடி.

 

இதைக்கேட்டு எல்லோரும் சிரிக்க அந்த இடமே ஆனந்த மயமானதாக மாறியது.

 

"நீ கோகுலத்து கிருஷ்ணன் டா... நீ இருந்தாலே அந்த இடம் சந்தோஷத்தில் நிறையும்." என்றார் தாத்தா.

 

"மரகதம் உன் வீட்டுக்காரர் பேச்ச மாத்துரார்... விடாத..." என்று ஆச்சியை குறும்பாக ஏத்திவிட்டான் மேகன்.

 

"உனக்கு ஏன்டா?" என்று தாத்தா பயந்தது போல் நடிக்க,

 

"ம்ம் இது இப்படியே இழுத்து புடி மரகதம். இல்லைனா இவர் தொல்லை தாங்காது" என்றான் ஆச்சியிடம் மேகன்.

 

"டேய் இது என்ன கெட்ட பழக்கம்! பெரியவங்கள பேர் சொல்லிட்டு கூப்பிடுவது?" என்று ஷோபனா அதட்ட,

 

"ம்ம்ம் வாடியாத்தா!.... உம்மகன் ஆயிரத்தெட்டு நாமாவளி பாடுறமாதிரி, நூத்தியெட்டு தடவை எம் பேர சொல்லும் போது கோமாவிலயா இருந்த?!! பேசி முடிச்ச பிறகு சாவகாசமா வந்து கண்டிக்கிற?!! எனக்குன்னு வந்து வாச்சுருக்குதுக பாரு..." சடைத்தார் மரகதம்.

 


குற்றாலத்தில், அங்கு போகும் பொழுதெல்லாம் தங்கும் இடத்தில் தங்கினர். வழக்கம் போல கூடவே சமையல்கார பெண்ணையும் அழைத்து வந்திருந்தனர். அருவியில் குளித்து விட்டு வந்ததும், சுடச்சுட வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் சுகமே தனி.

 

அங்கு கிடைக்கும் மூலிகை எண்ணெயை தேய்த்து, அருவியில் குளிப்பது, படகு சவாரி செய்வது என்று மிகவும் உற்சாகமாக மூன்று நாட்களைக் கழித்தனர். மூன்றாம் நாள் இரவு ஊர் திரும்புவதற்காக புறப்படத் தயாராயினர். மாலை ஐந்து மணிக்கு இரண்டாவதாக பார்த்த பெண் (வேறொரு நிறைமதி) வீட்டினர் ஃபோன் செய்து, திருமணத்தைப் பற்றி விசாரித்தனர். எல்லோரும் வெளியூர் வந்திருப்பதாகவும், பத்து நாள் கழித்து ஃபோன் பண்ணுவதாகவும் கூறி விட்டார் தாத்தா.

 

பெண் வீட்டினரிடமிருந்து ஃபோன் வந்ததை மேகனிடம் மறைத்து விட்டனர்.

 

ஊரிலிருந்து வந்ததும் சிபியின் அண்ணன் வீட்டிற்கு சென்றான் மேகன்.

 

தீபிகா விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பதால் “போட்டி நடக்கும் நாளில் பள்ளிக்குச் செல்லவேண்டாம்... வீட்டில் இருந்து படி” என்று பெற்றோர் கூறியதற்கு,

தீபிகா, “பாட்டுப் போட்டியில் கலந்து இரண்டாம் பரிசும், கட்டுரை போட்டியில் முதல் பரிசும் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளும் விளையாட்டு போட்டி முடிந்ததும் தருவார்கள். நான் கட்டாயம் போகனும்” என்றாள் தீபிகா.

 

"நீ பாட்டு வகுப்புக்கு போகிறாயா தீபி?" என்று கேட்டான் சிபி.

 

"இல்லை சித்தப்பா!"

 

"பாட்டு வகுப்புக்கு போகாமலேயே செகண்ட் ப்ரைஸ் வாங்கியிருக்கியா? சூப்பர் டா!" என்று பாராட்டினார்கள் சிபியும், மேகனும்.

 

"எங்க கிளாஸ் மேம் தான் சொல்லிக் கொடுத்தார்கள்."

 

"ஓ!" என்றனர் கோரஸாக தோழர்கள் இருவரும்.

 

"ஆமா பெரிய கர்நாடக சங்கீதத்தில பாடிட்டா நீங்க ரெண்டு பேரும் பாராட்டுறீங்க... அது ஒரு பாட்டு ன்னு மூணு நாளா அழு அழுன்னு அழுதா." என்றார் அண்ணி.

 

"அழுதாளா? ஏன்?"

 

"அழுகல சித்தப்பா பாட்டு பாடி பிராக்டிஸ் பண்ணியதை சொல்றாங்க."

 

"அது சினிமா பாட்டு தம்பி!" என்றார் அண்ணி.

 

இரு தோழர்களும் சிரிக்கவே, "அம்மாதான் கிண்டல் பண்றாங்க நீங்களும் சிரிப்பிங்களா? நான் நல்லா பாடாமலா பரிசு குடுப்பாங்க? நான் பாடிக்காட்டவா?" என்று தீபிகா கேட்டதும்,

 

"சரி" என்றனர் தோழர்கள்.

 

டீபாய் மேல் அமர்ந்து பாட ஆரம்பித்தாள்.

 


"கண்ணாஆஆஆ... கண்ணாஆஆஆ...

கண்ணாஆஆஆ.... "

-என்று தீபிகா ஆரம்பித்ததும் எழுந்து விட்டான் மேகன். பாடலை நிறுத்தி விட்டு, "நல்லா இல்லையா மாமா? என்று தீபிகா பாவமாக கேட்க,

 

"இல்ல, அப்படியில்லடா... " என்றவன் மீண்டும் அமர்ந்தான்.

 

"நான் பாடவா மாமா?"

 

"பாடு! தீபி பாடு! உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு

ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே தீபி! என்றான் சிபி.

 

"கிண்டல் தான் பண்றிங்க போங்க." என்று எழுந்தவளை அமரவைத்து பாடவைத்தான் சிபி.

 

"கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா "

 

-என்று தீபிகா பாட, பாட மேகனுக்கு மீண்டும் தலை வலித்தது. வியர்த்து கொட்டி. அவன் முகம் வேதனையை காட்ட, தீபி பாட்டை நிறுத்தி விட்டு விழி அகல மேகனைப் பார்த்து, "உங்களுக்கு உடம்புக்கு முடியலையா மாமா?" என்று கேட்டதும் தான் மேகனைத் திரும்பிப் பார்த்த சிபி,

 

"என்னடா செய்யுது? ஏன் இப்படி வேர்த்து கொட்டுது?" என்று பதறவும்,

 

"ஒன்னுமில்லை... கொஞ்சம் தண்ணி கொடு!" என்றான் மேகன்.

 

தண்ணீர் கொடுத்து விட்டு, "திடீர்னு ஏன் இப்படி ஆச்சு?" என்று கேட்டான் சிபி.

 

அந்தப் பாடலைப் பற்றி (11 ம் அத்யாயத்தில்) மேகன் கூறினான். சட்டென்று ஏதோ தோன்ற,

 

மேகனுக்கு உடம்புக்கு முடியவில்லையோ? என்று பயந்து போய் அடுப்படிக்குள் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த தீபிகாவிடம் சிபி,

 

"இந்த பாட்டை சொல்லிக் கொடுத்தது யார்?" என்று கேட்டான்.

 

"எங்க கிளாஸ் மேம்... அன்றைக்குக் கூட சொன்னேன்ல அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு அதே மேம்." என்று தீபிகா சொன்னதும்,

 

"நாளைக்கு விளையாட்டு போட்டிதானே, நான் உன்னோட ஸ்கூலுக்கு வரேன், எனக்கு அறிமுகப் படுத்தி வை." என்றான் சிபி.

 

மேகனை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் பள்ளிக்குச் சென்று அந்த மேடம் மை பார்ப்பது என்று முடிவெடுத்தான் சிபி.

 

சிபி அந்த மேம் ஐ சந்தித்தானா?

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்

 

❤❤❤❤❤❤❤

  

Post a Comment

0 Comments