சிம்டாங்காரன்: அத்தியாயம்- 12

 

12

கண்களில் உன் நினைவுகளை விதைத்து,

கண்ணீரால் வளர்க்கிறேன் வருவாயா சிம்டாங்காரா...

🌹🌹🌹🌹🌹🌹

 

மேகன் படிகளில் இறங்கி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த அம்மாவிடமும் ஆச்சியிடமும்,

 

"நான் சிபியோட அண்ணா வீட்டுக்கு போயிட்டு வரேன்." என்று கூறி பைக்ஐ எடுத்து கிளம்பினான்.

 

சிபியின் அண்ணன் தமிழ்நாட்டு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, திருமணம் செய்து தமிழ்நாட்டிலேயே நிரந்தரமாக குடியிருப்பவர். சிபியின் அண்ணன் ஆதித்தன், அண்ணி ஜானகி, இவர்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன், தீபன் கல்லூரியில் முதல் வருடம் படிக்கிறான்... பொண்ணு தீபிகா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

 

சிபியின் அண்ணன் வீட்டினர் ஒவ்வொருக்கும் ஆஸ்திரேலியாவிலிருந்து பரிசுகள் வாங்கி வந்திருந்தான் மேகன். அதை அனைவருக்கும் கொடுத்து விட்டு, எல்லோரும் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

 

பிறகு சிபியையும், மேகனையும் தனியே விட்டுவிட்டு மற்றவர்கள் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றனர். சிபியும், மேகனும் வீட்டின் பின் பக்கமுள்ள தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, வேகமாக ஓடிவந்த தீபிகா,

 

"மாமா! என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்." என்று இருவரிடமும் பொதுவாக கூறிவிட்டு, அவர்களுக்குள் பின்னால் இருந்த மரத்திற்கு பின்புறம் ஒளிந்து கொண்டாள். யாரிடமிருந்து ஒளிந்து கொள்கிறாள் என்று ஃபரண்ட்ஸ் இருவரும் அவள் வந்த வழியைப் பார்க்க, பத்து நிமிடம் கழித்து தீபன் வந்தான். மேகனையும், சிபியையும் பார்த்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடினான்.

 

"தீபன், உன்னைத்தான் தேடுகிறானா? ஒழிந்து பிடிச்சு விளையாடுகிறீர்களா என்ன?" என்று சிபி, தீபிகாவிடம் கேட்டான். அதற்கு அவள்,

 

"உஷ்ஷ்ஷ்!" என்று குவிந்த உதட்டில் விரலை வைத்து சொல்லி விட்டு, மீண்டும் வீட்டின் கொள்ளைப் புற வாசலையே பார்த்தாள். அவள் கண்களில் சிறிது பயம் தெரியவே,

 

"ஏதாவது சேட்டை பண்ணிவிட்டு ஒழிஞ்சுக் கிட்டிருக்காயா?" என்று சிபி மீண்டும் கேட்க,

 

தீபிகா "இல்லை! " என்பதைப் போல் இடம் வலமாகத் தலையை ஆட்டினாள்.

 

சிறிது நேரத்தில் தீபன், "ஓகே தீபி, நான் தோத்துட்டேன். வெளியே வா!" என்று அழைத்த படி வீட்டை சுற்றி வந்தான். உடனே சட்டென்று வெளியே வந்த தீபிகா, "நான் தான் ஜெயிச்சேன்! எனக்கு அதைக் கொடு." என்று கூறியவாறு தீபனை நோக்கி ஒட, மேகனுக்கு நிறைமதியின் ஞாபகம் வந்தது.

 

வீட்டினுள் அண்ணி பிள்ளைகளை திட்டும் சப்தம் கேட்டு சிபியும், மேகனும் வீட்டின் உள்ளே சென்றனர்.

 

"என்ன அண்ணி ஏன் பிள்ளைகளைத் திட்டுறீங்க?" என்று சிபி கேட்டதும்,

 

"மேகன், தீபனுக்கு வாங்கிக் கொடுத்த பரிசு எனக்குத்தான் வேண்டும் என்று இந்த குட்டிப் பிசாசு அடம் பிடிக்குது." என்று கூறினாள்.

 

"மாமா! என்னோட கேம் பாக்ஸை நீ எடுத்துக் கொண்டு, எனக்கு உன் பாக்ஸைக் கொடுன்னு அண்ணாவிடம் கேட்டேன் தரமாட்டேனுட்டான்.  நான் அழுதேன், பிறகு அண்ணாவிடம்,   நான் எங்காவது ஒழிந்து கொள்கிறேன்! நீ கண்டுபிடிச்சுட்டா பாக்ஸ் உனக்கு. கண்டுபிடிக்கலைனா பாக்ஸ் எனக்குன்னு பெட் கட்டினேன் அவனும் ஒத்துக்கிட்டான்.... இப்ப,     நான் தானே ஜெயிச்சேன்! தீபன் என்னைக் கண்டு பிடிக்கலைல? அப்போ, சொன்னபடி அந்த கேம் பாக்ஸை எனக்குத் தானே தரணும்?" என்று தீபிகா கேட்டதும் மேகனுக்கு நிறைமதியின் இரண்டாவது சந்திப்பில் நடந்தது ஞாபகத்திற்கு வந்தது.

 

"உனக்கு எப்படி ம்மா இப்படி ஒரு ஐடியா வந்ததது?" என்று மேகன் கேட்டான்.

 

"எங்க க்ளாஸ் மேம் தான் சொன்னாங்க... அவங்க அண்ணன்களிடம் எதுவும் வாங்க வேண்டும் என்றால் இப்படி பெட் கட்டிதான் வாங்குவாங்களாம்." என்று தீபிகா சொன்னதும்,

 

‘ஒருவேளை நிறைமதியின் உறவினர்களாக இருப்பார்களோ? அவர்கள் குடும்பமே இப்படி தானா?' என்று நினைத்தவன்,

 

"உங்க மேம் ஐ எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாயா?" என்று மேகன் கேட்டதும்,

 

"நாளைக்கு சாயந்திரம் ஸ்கூல் முடியிற நேரத்துக்கு வாங்க மாமா, அறிமுகப் படுத்தி வைக்கிறேன். ஆனால் எங்க மேம் உங்களிடம் சகஜமா பேசமாட்டார்கள் மாமா... நல்லா பழகினவங்க கிட்டதான் சகஜமா பேசுவாங்க..." என்றாள்.

 

'என் நிறைமதி அப்படியில்லை பார்த்ததுமே சிரித்து பேசிவிடுவாள்.' என்று நினைத்தவன் மேலும், 'பேசாதவங்கிட்ட போய் என்ன பண்றது?’ என்று தோன்ற,

 

"நாளைக்கு வேண்டாம்... இன்னொரு நாள் வருகிறேன் சரியா?" என்று கேட்டான்.

 

"சரிங்க மாமா!" என்று விட்டு ஓடிவிட்டாள் தீபிகா.

 

      "ஆமா! நீ எதுக்கு தீபியோட டீச்சர பாக்கனும்னு சொல்ற?" என்று சிபி கிண்டலடிக்கவும்,

 

      "இதே மாதிரிதான் என் நிறைமதியும் அவ அண்ணன்களோட பெட் கட்டுவா அதான்... யாருன்னு போய் பாக்கலாம்னு நினைச்சேன்."

 

      "இதுதான் உண்மையான காரணம்னா அடுத்த வாரம் அவங்க ஸ்கூல்ல விளையாட்டு போட்டி நடக்குதாம். . அன்னைக்கு போவோம்." என்றான் சிபி.

 

      "நாம நிறைமதி வீட்டுக்கு போவோமாடா?  என்னவோ அவ வீட்டுக்கு போகனும் போல இருக்கு..."

 

      "கட்டாயமா போவோம்... ஆனா இன்னும் மூணு பொண்ணுங்க தான் அவங்கள பாத்துட்டு, அப்புறம் போவோம்."

 

      "பெண் பாக்கறதுக்கும், நிறைமதி வீட்டுக்குப் போறதுக்கும் என்னடா சம்பந்தம்?"

 

      "அவ வீட்டுக்குப் போனா உன் மனநிலை எப்படி இருக்கும்னு நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கனும்னு இல்ல... அப்புறம் எப்படிடா பெண் பார்க்க போகமுடியும்? உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்..." என்று முடித்தான் சிபி.

 

      அடுத்தநாள் அவர்கள் நிர்வாகத்திலிருந்த கோயிலுக்கு குடும்பத்துடன் மேகன் சென்றான்.

 

      அனைவரும் சன்னதிக்குள் செல்ல, இவன் பார்வை கதாகாலட்சேபம் நடக்கும், மண்டபத்திற்குச் செல்லும் வழியைப் பார்த்தது. முன்னால் சென்ற மேகனின் அம்மா ஷோபனா,

 

      "வாடா!" என்று சன்னதி வாசலிலேயே நிற்கும் மகனை அழைத்தார்.

 

      "நீங்க உள்ளே போங்கம்மா இதோ வரேன்.." என்று கூறியவன், நேராக கதாகாலட்சேபம் நடக்கும் இடத்திற்கு வந்தான். அங்கொருவர், இங்கொருவர் என்று சிலரே இருக்க, வெரிச்சோடி இருந்தது மேடை. அந்த மேடைக்கு எதிரில் அவன் அமர்ந்து இருந்த மண்டபத்திற்குச் சென்றான். அங்கே யாரோ ஒரு பெண் தனியாக அமர்ந்து இருந்தாள். கொஞ்சமே தெரிந்தாலும் அந்தப் பெண் கஷ்டத்தில் இருப்பது போல் மண்டபத்தில் விழுந்த நிழலைப் பார்த்தாலே தெரிந்தது.

 


'பாவம்! என்ன பிரச்சனையோ?' என்று நினைத்தவன், "கடவுளே அந்தப் பெண்ணின் அழுகையை நிறுத்தி சந்தோஷத்தைக் கொடுங்கள்" என்று வேண்டியதும் கோயில் மணி ஒலித்தது. ஒலி வந்த திசையைப் பார்த்தவனுக்கு சந்தோஷமாக இருந்தது. மீண்டும் திரும்பி அந்தப் பெண் இருந்த இடத்தைப் பார்க்க, அவளும் மணியோசை கேட்டு எழுந்து விட்டாள் போலிருக்கிறது... வேகமாக நடந்தாள்... ஏனோ அவளை அழைத்து, "உன் பிரச்சனை தீர்ந்து விடும்." என்று சொல்ல வேண்டும் என்று உள்ளுணர்வு உந்த, அவளை நோக்கி காலை எடுத்து வைத்தவன் தோளில் யாரோ கை வைக்கத் திரும்ப சிபி நின்றுகொண்டிருந்தான்.

 "சிபி! நீ எப்படா வந்த?" என்று மேகன் கேட்டான்.

 

      "வீட்டுக்கு போனேன். நீங்க எல்லாரும் இங்கே வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க, அதான் வந்தேன். ஆமா!  அந்தப் பொண்ணு யாரு?"

 

  "தெரியலை டா..."

 

      "தெரியாத பொண்ணையாடா அப்படிப் பார்த்துக்கிட்டு இருக்க... இந்த ஊர் காத்து உன்னை மாத்துதாடா. ...  ஆஸ்திரேலியாவில ரிஷ்யசிங்கர் மாதிரி பெண்கள் பக்கமே திரும்பி பார்க்க மாட்ட? "

 

      "போதும் விடுடா... ரொம்ப யோசிக்காதே. அவ வருத்தத்துல இருந்தா... கடவுள்ட்ட, "அவ கஷ்டத்த நீக்கு' னு வேண்டியதும் கோயில் மணி அடித்தது... அதான்..." என்றான் மேகன்.

 

      'இவனுக்காக கடவுளிடம் வேண்டவே  நேரமில்ல. .. இதுல இவரு ஊர்ல இருக்குறவங்களுக்காக வேண்டுறாராம். ..’  என்று நினைத்தவாறே சிபியும், மேகனும்  சன்னதியை நோக்கி சென்றனர்.

 

      அடுத்து வந்த நல்ல நாளில், ‘நிறைமதி’ என்ற பெயர் கொண்ட பெண்ணைப் பார்க்க புறப்பட்டனர்.

 

      "அந்த பெரியவர் சொன்னதுக்காக இல்லைனாலும் எனக்காகவாவது, இன்று பார்க்கப் போகும் பெண்ணைப் பார்." என்று பிறைசூடன் கெஞ்சும் தொணியில் கேட்கவும்,

 

      "ஏம்ப்பா?... நீங்க என்னிடம் இப்படி சொல்லனும்னு இல்லைப்பா... நீங்க சொன்னா நான் கேப்பேன் ப்பா.." என்று மேகன் வருத்தத்துடன் கூறினான்....

 

       பெண் வீட்டினருக்கு மேகனை மிகவும் பிடித்து விட்டது என்பது அவர்கள் நடவடிக்கையிலிருந்தே மேகன் குடும்பத்தாருக்குப் புரிந்தது.

'இவனுக்குப் பெண்ணை பிடிக்க வேண்டுமே' என்று அனைவரும் நினைத்தனர்.

 

       பெண் வந்து அனைவரையும் நமஸ்கரித்து விட்டு அமர்ந்தாள். மேகனுக்கு, அவனுடைய அப்பா கூறியது ஞாபகம் வர, பெண்ணை பார்த்தான். மாநிறமும், சுருள்முடியுமோ அல்லது மஞ்சள் பூசி, சிரித்த முகத்துடன் இருந்ததோ எதுவோ நிறைமதியைப் போலவே இருந்தது... மீண்டும் நன்றாக பார்த்தான்.

 

      "டேய்! போதும் டா... எல்லோரும் சிரிக்கிறாங்க பாரு... கொஞ்சம் பார்வையைத் திருப்புடா யப்பா! ..." என்று மேகனிடம் சிபி கிசுகிசுத்தான்.

 

      திரும்பி தோழன் முகத்தைப் பார்த்த பிறகு தான், 'ரொம்ப கூர்ந்து பார்த்துவிட்டோமோ? ' என்று தோன்ற, குனிந்து கொண்டு தனக்குள் சிரித்துக்கொண்டதைப் பார்த்த அனைவரும், 'மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்து விட்டது’ என்று சந்தோஷப் பட்டனர். அங்கிருந்த இரு பெண்களைத் தவிர...

 

      அதில் ஒருத்தி மேகன் குனிந்து சிரிக்கவும் முறைத்து விட்டாள்.... அவள் கண்கள் அனலைக் கக்கியதைப் பார்த்த சிபி, "டேய்! சட்டுன்னு திரும்பி பார்க்காத... அவங்க ஏண்டா உன்னை கொலைவெறியோட பார்க்கறாங்க?" என்று மேகனிடம் அந்தப் பெண்ணை சாதாரணமாக பார்ப்பது போல் அடையாளம் காட்டினான்.

 

      மேகனுக்கு, அந்தப் பெண் யாரென்றே தெரியவில்லை... எங்கும் பார்த்ததாக ஞாபகமே இல்லை! நான்கு வயது குழந்தை மடியில் இருந்தது... அந்தக் குழந்தை மேகனைப் பார்த்து சிரிக்க...

மேகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது...

அந்த சிறுமியின் சிரிப்பு அச்சு அசலாக நிறைமதி போலவே இருக்க, அரண்டு விட்டான்... அப்படி ஒரு உருவ ஒற்றுமை அந்தக் குழந்தைக்கும், நிறைமதிக்கும். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தலை வெடிப்பது போல தோன்ற... கண்கள் மங்கலாக தெரிய... அருகிலேயே நிறைமதி இருப்பது போல் தோன்றியது... கண்களைக் கசக்கிக் கொண்டு அந்த சிறுமியைப் பார்க்க, அந்தக் குழந்தை, மேகனைப் பார்த்து சிரித்தபடி தன்னுடைய நாக்கின் நுனியை மென்மையாக கடிக்க... அங்கே நிறைமதியே அமர்ந்திருப்பது போல தோன்ற, தலையைப் பிடித்தபடி அப்படியே சரிந்து விழுந்தான் மேகன்.

 

       அந்தக் குழந்தையின் சாயலும் செய்கையும் எப்படி நிறைமதியைப் போல அச்சு அசலாக இருக்கிறது?!!

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம் ...

 

❤❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments