சிம்டாங்காரன்: அத்தியாயம்- 11

 

11

நீதானே நான் தேடும்

பிருந்தாவனம்…

🌹🌹🌹🌹🌹🌹

 

       தொடர்ந்து ஒரு வருடம் அதே கனவு வந்தால், "உனக்காக அந்தப் பெரியவர் சொன்னபடி நடக்கிறேன்" என்று  சிபியிடம் கூறிய மேகனால் அவன் சொன்னபடி செய்வது இயலாததாகியது.

 

      ஏனென்றால் அதே கனவு அடிக்கடி வந்தது... ஆனால், பெயர் கூட உண்மையானது இல்லை... அவளும் இல்லை... பிறகு எதற்கு தேவையில்லாமல் பெண் பார்க்க போகனும்? நான் அவளுடைய  பெயரையா விரும்பினேன்? என்று நினைத்து, அந்தப் பெரியவர் சொன்னதைச் செய்யாமல் தவிர்த்தான்.

 

யாரோ கூறினார்கள் என்று யோகா வகுப்புக்குச் சென்று மூச்சுப்பயிற்சியும், தியானமும் கற்று வந்து, தினமு‌ம் கற்றபடி செய்தும் வருகிறான். ஆனால் கனவை மட்டும் நிறுத்தவே முடியவில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது....

 

ஒரு நாள் அதிகாலை....

.....இளம்காலைப் பொழுது மிக அழகாக விடிய.... ஜில்லென்று குளிர் மேகனைத் தாக்கியது.... அந்த இனிமையான சூழலை கண்மூடி ரசிக்கும் பொழுது.... முதுகில் கதகதப்பான உணர்ந்து, மேகன் கண்களைத் திறந்து பார்க்கும் பொழுது, அவள், மேகனை பின்புறமாக அணைத்து அவன் முதுகில் தலை சாய்த்துக் கொண்டாள்.

 


அவளிடமிருந்து கஸ்தூரி மஞ்சள் வாசமும், மல்லிகைப் பூவின்  வாசமும் கலந்து வந்து அந்த சூழ்நிலையை மேலும் இனிமையாக்கியது. .. அவள் கைகளைப் பற்றி, தன் முன்னால் கொண்டு வந்தவன், அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவள் சிணுங்கி ஓட, அவள் கையைப் பிடித்து மேகன் இழுக்கவும் அவன் மேலேயே வந்து விழுந்தவள்,

 

எத்தனை காலம் தான் இப்படியே கழிப்பது? எப்ப வந்து என்னை பெண் கேட்பீர்கள்?" என்று கேட்டவள் நிறைமதியாக மாற, சட்டென்று கண்விழித்தான். ...

 

வழக்கமான கனவுதான் ஆனால் முதன்முறையாக பேசிவிட்டாள்...  உடலெங்கும் வியர்வை அருவியாக ஓடி இரவு உடையை நனைத்தது. ... 'இன்றைக்கு என்ன? இவ்வளவு தீவிரமான கனவு?'  என்று எழுந்து அமர்ந்தவன். அருகில் இருந்த தண்ணீர் ஜாடியிலிருந்து தண்ணீரைக் குடித்தும் பதட்டம் குறையவில்லை... படுக்கையில் இருந்து எழுந்து அருகில் இருந்த சோபா வில் அமர்ந்தான்... அப்பொழுதும் வியர்வை நிற்கவில்லை... ஏசியை அணைத்து விட்டு ஜன்னல் கதவுகளைத்திறந்தான்.... மனம் இன்னும் சமநிலை அடையாததால், தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்து மீண்டும் சோபாவில்  அமர்ந்தான்....

(படம் : உனக்காகவே வாழ்கிறேன்  )

 

கண்ணாஆஆ..... கண்ணாஆஆ. ....

கண்ணாஆஆஆ. .

"கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

கண்ணீர் இன்னும் ஓயவில்லை

கன்னங்களும் காயவில்லை

கண்ணா உன்னை தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா....

 

.....என்று பாட தொலைக்காட்சியை ஆஃப் செய்து விட்டு பால்கனியில் வந்து நின்றான்.

 

மீண்டும் மீண்டும்” கண்ணாஆஆஆ.... கண்ணாஆஆஆ”  என்ற ஒரு பெண்ணின் வலி நிறைந்த குரல் எட்டு திசையிலும் எதிரொலிப்பது போலிருந்தது...

 

       அந்த பாடல்  அதிகாலை நான்கு மணி நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு உயிருக்குள் இறங்கியது... மேகனுக்கு ஏதோ சொல்ல முடியாத வலி உயிரையே உலுக்க... அந்த பாடலை நிறைமதியே பாடுவது போன்ற தோற்றம் மனதில்   உருவானதும் வேகமாக படியிறங்கி அம்மா, அப்பா அறையைக் கதவைத் தட்டினான்....

 

       இருவரும் வேகமாக எழுந்து கதவைத் திறக்க, மேகன் நின்றுகொண்டிருந்த நிலையைப் பார்த்தவர்கள்.. "என்ன மேகா? உடம்புக்கு  என்ன செய்யுதுடா? என்று கேட்டபடி அறைக்குள் அழைத்துச் சென்று அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர். ...  ஷோபனா, மேகனின் முதுகை இதமாக தடவிக் கொடுக்க, சிறுவயது ஞாபகம் வந்து, ஷோபனா வின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டான். பிறைசூடனுக்கு மேகனைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. தாய், தந்தை இருவருக்கும் கண்களில் கண்ணீர் வர மகனைப் பார்த்தவாறு எதுவும் கேட்காமல் அமர்ந்திருந்தனர்....

 

   சிறிது நேரத்தில் மேகன் உறங்கிவிட, பெற்றவர்கள் தூக்கத்தை துறந்தனர்.

 

       காலையில் சிபிக்கு ஃபோன் செய்தார் பிறைசூடன். காலையில் நடந்ததைக் கூறி,

 

  "உனக்குத் தெரியாமலிருக்காது... அவனை கஷ்டப்படுத்துவது எது?"

 

  "அப்பா!"

 

      " நான் அவனிடம் கேட்டாலும் சொல்லுவான்... ஆனால் அதை கிளறிவிட கஷ்டமா இருக்குடா... நீ சொல்...." என்று மிகவும் வருந்திக்கேட்டதாலும், மேகனிடம் நேரில் கேட்டால், அவன் படும் துயரத்தைக் காண சகிக்காமல்தான், தன்னிடம் கேட்கிறார் என்று அறிந்ததாலும், நிறைமதியைப் பற்றி கூறினான்.

 

      "அஞ்சு வருஷமாகப் போகுது. இன்னுமாடா அவளையே நினைத்து வருத்திக் கொள்வான்?"

 

      "அது மட்டுமில்லப்பா.... அவனுக்கு அடிக்கடி ஒரே கனவு வருதுப்பா. ... " என்று கனவைப் பற்றியும், டாக்டர்கள், "பிரச்சனை எதுவும் இல்லை" என்றதையும் சிபி, பிறைசூடனிடம் கூறினான்.

 

  "என்னப்பா சொல்ற? கனவு எல்லாருக்குமே வர்றது தானே?"

 

"ஒரே கனவு கிட்டத்தட்ட நாலு வருஷமா வர்றது, அதில் அந்த பொண்ணும் வர்றது சகஜமான விஷயமில்லையேப்பா..."

 

"இதுக்கு என்னப்பா பண்றது? அந்த கனவாலதான் நேத்து அவ்வளவு கஷ்டபட்டானா? இந்த கனவு வர்றத எப்படிப்பா தடுக்க முடியும்? "

 

  "ஒரு வழி இருக்குப்பா ஆனா மேகன் அதை நம்ப மாட்டேங்கிறான்."

 

      "என்னன்னு எங்கிட்ட சொல்லுடா" என்று பிறைசூடன் கேட்டதும், அந்தப் பெரியவர் பற்றி சொல்லி, மூன்று வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்ததையும் அவர் கூறியதையும் சொன்னான்.

 

      "அதையும் பார்த்துடலாம்டா." என்று கூறியவர், மேகனின் தாத்தா விற்கு ஃபோன் செய்து, மேகனுக்கு பெண் தேடச் சொன்னார் கண்டிஷன்களையும் கூறி .

  

ஐந்து மாதங்களுக்குப் பிறகு....

 

   மேகனின்  தாத்தா வீட்டில் ஃபோன் அழைக்க எடுத்து,

 

      "ஹலோ! நான் அப்பா தாம்மா பேசுறேன்... வீட்டில எல்லோரும் நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டார் மேகனின் தாத்தா.

 

"நல்லா இருகாகோம்பா... நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க? அப்புறம் நம்ம மேகனுக்கு ஜாதகம் வந்துருக்குன்னு அம்மா ஃபோன் பண்ணாங்க. .. என்னாச்சுப்பா?" என்று மேகனின் அம்மா ஷோபனா கேட்டார்.

 

      "எங்களுக்கென்ன நல்லா இருக்கோம்மா. .. இங்கே கல்யாண புரோக்கரிடம் சொல்லி வச்சோம்ல, அவர் வந்து நம்ம கேட்டபடி  அஞ்சாறு பொண்ணுங்களோட ஜாதகம் கொடுத்தார்... அதுல நாலு பொண்ணுங்க ஜாதகம் நம்ம மேகனுக்குப் பொருந்தியிருக்கு...   நீங்க மூணு பேரும் கிளம்பி வந்தீங்கன்னா நல்ல நாளா பார்த்து, பொண்ணு பார்த்துட்டு வந்துடலாம்... மாப்பிள்ளைகிட்டயும் மேகன் கிட்டயும் பேசிட்டு எனக்கு ஃபோன் பண்ணும் மா...." என்று கூறினார்.

 

“அந்தப் பெண்களின் பெயர் எல்லாம் மேகன் சொன்னது தானப்பா?"

 

"ஆமாம் ம்மா! ஒரு பொண்ணு பேரு சுந்தரி, இன்னொரு பொண்ணு பேரு சிவகாமி, அடுத்த பொண்ணு நிறைமதி, அடுத்தது அகிலா. சரி தானம்மா? மத்த விபரங்களை நேரில் சொல்றேம்மா "

 

  "அந்தப் பொண்ணுங்களோட ஃபோட்டோவை வாட்ஸ் அப் ல் அனுப்புங்கப்பா... நான் பிறகு ஃபோன் பண்றேன். இப்ப ஃபோனை வைக்கிறேன்ப்பா!" என்று கூறி ஷோபனா  ஃபோனை வைத்தார்.

 

"என்னங்க? எப்ப வர்றாங்களாம்?" என்று இதுவரை தன் கணவர் ஃபோன் பேசியதை கவனித்த மரகதம் கேட்டார்.

 

      "தெரியலை, பொண்ணுங்க போட்டோவ செல்ஃபோன்ல அனுப்ப சொன்னா... அதான் அனுப்பிக் கிட்டிருக்கேன்.

 

      "நாலும், நல்ல வரன், மேகனுக்கு பிடிக்கனுமே? !!" என்று மரகதம் வருத்தப்பட்டார்.

 

      "அவன் ஒரு பொண்ணத்தானே விரும்பினான்னு நினைச்சேன்... படவா நாலு பொண்ணுங்கள விரும்பி இருக்கான்" என்றார் தாத்தா.

 

      "விளையாட்டுக்குக் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க....  இதுல வேற ஏதோ இருக்கும்..." என்றவர், "ஆமா?....  உங்கள மாதிரியே மேகன்  இருக்கான்னு பெருமை பீத்துவிங்களே, நீங்க இப்படித்தான் பண்ணிங்களா?"

 

      "உனக்கு ஏன் இந்த வயசுல யோசனை எங்கேயோ போகுது? என் பேரன் ஒருத்தியைத் தான் விரும்பியிருப்பான்"...என்று தாத்தா கூறவும்,

 

      "பிளேட்டை அப்படியே திருப்பி போடாதிங்க. .. ஆனா குறிப்பிட்ட பேருள்ள பொண்ணுங்களை ஏன் தேடுறாங்க?  ஒரு பொண்ணுக்கு நாலு பேரா வைப்பாங்க?" என்று கேட்டார்...

 

  "எனக்கும் எதுவும் தெரியலடி."

 

      "அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி விபத்துல இருந்து காப்பாத்தினானே அந்தப் பெண் பெயர் தெரியுமா உங்களுக்கு?"

 

  "இல்லடி எனக்கு சரியா ஞாபகமில்ல! ஆனா, அந்த பொண்ணு பேரு வேற..."

 

  "ஒரு விஷயம் முழுசா தெரிஞ்சாதானேங்க நாம உதவ முடியும்?"

 

  "பிள்ளைகள், ஊருக்கு வந்ததும் கேட்டு தெரிஞ்சுக்கலாம்..."

 

       சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி, ஊருக்குச் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தனர், மேகன் குடும்பத்தாரும் சிபியும்.

 

       ஊர் நெருங்கும் போதே பார்க்கும் இடமெல்லாம் நிறைமதி போல தெரிந்தது, மேகனுக்கு.

 

      "அவள் வீட்டிற்குச் சென்று வருவோமா?" என்று மேகன், சிபியிடம் கேட்டான்.

 

      "நிச்சயமா போவோம்! ஆனா நம்ம வந்த வேலை முடிந்ததும், சரியா?" என்றான் சிபி.

 

      சிபியை அவனுடைய அண்ணன் வீட்டில் இறக்கி விட்டு, தாத்தா வீடு நோக்கி கார் சென்றது.

 

       வீட்டிற்கு வந்ததும் மேகன் மாடிக்கு சென்று விட்டான். நடந்தது அனைத்தையும் தாத்தாவிடமும் மரகதத்திடமும் கூறினர் மேகனின் பெற்றோர்.

 

      "மேகன் சொல்றதும் சரிதானேம்மா? நாலுமே உண்மையான பேரும் இல்லை... எந்த நம்பிக்கையில் இதெல்லாம் செய்றோம்?" என்று கேட்டார் தாத்தா.

 

      "பெரியவர் காரணமில்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள்.... ஒருவேளை, இந்த நாலு பெண்களில் ஒரு பெண்ணை மேகனுக்கு பிடிக்கலாம்.... நல்லது நடக்கும்னு தான் எனக்கும் தோணுது...." என்றார் மரகதம்.

 

       அடுத்து வந்த நல்ல நாளில் சுந்தரியை பெண் பார்க்க, மேகன், மேகன் குடும்பத்தார், சிபி ஆகியோர்  சென்றனர்.

 

      பெண் வீட்டினர் வாசலில் நின்று வரவேற்று, வீட்டிற்குள் அமரவைத்தனர்... அறிமுக படலம் நடந்தது... பின் சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்தனர். சிபி அனைவரிடமும் சகஜமாக பேச, மேகன் எதிலும் ஆர்வம் காட்டாமல் அமர்ந்திருந்தான்.

 

      "டேய்! எல்லாரும் உன்னைத் தான் பார்க்கறாங்க. ..  இயல்பா இரு... " என்றான் சிபி, மேகனிடம்.

 

      சிபியை பார்த்து சிரித்தான் மேகன்... அதே நேரம் தன்னை யாரோ குறுகுறு வெனப் பார்ப்பது போல் உணர்ந்தவன்... 'மணப்பெண்ணாக இருக்கும்' என்று நினைத்து,  மீண்டும் எதையும் கவனிக்காமல் அமர்ந்திருந்தான்.

 

   பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர்...

 

      "பெண்ணை சம்பிரதாயமாகவாவது பார்!" என்றான் சிபி. சும்மா பெண் இருக்கும் திசையைப் பார்த்து விட்டு, சிபியிடம் பேசுவதுபோல் திரும்பியவனுக்கு, பெண்ணின் அருகில் நின்ற யாரோ அதிர்ந்து பார்த்ததைப் போல உணர்ந்தான். அதேநேரம் சிபியும்,

 

      "டேய்! இங்கே வேற ஒரு பெண் உன்னை வச்ச கண்  வாங்காம பார்க்குறாடா. .. என்று சொல்லி சிரித்தான்.

 

  ‘யாரா இருந்தா எனக்கென்ன?’ என்று அமர்ந்திருந்தான் மேகன்...

 

       எல்லோரிடமும் விடைபெற்று காரில் ஏறும் போதும் மேகனின் பின்னால் யாரோ உறுத்து பார்ப்பது போல் தோன்ற, ‘சுந்தரி, நிறைமதி போல இருப்பாளோ?’ என்று தோன்ற சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்... ஆனால் யாரோ ஜன்னல் வழியாக இதுவரை பார்த்திருந்து விட்டு, தலையை உள்ளே இழுத்து கொண்டார்கள். ... 

 

யாராக இருக்கும்? நிறைமதிக்கு தெரிந்தவர்களா? 

அல்லது மேகனுக்குத் தெரிந்தவர்களா?

 

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்

 

❤❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments