இசக்கி அம்மன்

  

இசக்கி அம்மன்



 ஒரு நடன மங்கை பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இசக்கி என்று  ஒரு மகள் இருந்திருக்கிறாள்... 


   பணத்திற்கு ஆசைப்பட்ட ஒரு கொடூரன், இசக்கியிடம் காதல் என்று  நடித்திருக்கிறான். ..  பாவம் அந்தப் பெண்ணும் ஏமாந்து, அவன் நல்லவன் என்று நம்பி பழகியிருக்கிறாள்...


  ஒருநாள் காட்டுக்கு வரச்சொன்னான் அந்தக் கயவன். இரவு முழுவதும் கோயிலில் நடனமாடிய இசக்கி, அந்தக்  கயவனிடம் சென்று, "நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றாள்." அதற்கு அந்தக் கயவன், "கோயிலில் நடனமாடும் மங்கையை மணந்தால் ஊர் என்னை பழிக்கும்." என்றான். 

"நான் நடன மங்கையாக பிறந்திருந்தாலும் உம்மை மட்டுமே விரும்பினேன். உம்முடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். நாம் வேறு ஊருக்கு சென்று விடுவோம். வேறு ஊர் சென்று வாழத் தேவையான அளவு பொன் கொண்டு வந்துள்ளேன்..." என்று பொன் முடிப்பைக் காட்டினாள். அதைப் பார்த்த கயவன், "சரி." என்று சொல்ல, அதை நம்பியவள்,  "இரவு முழுவதும் நடனமாடியதால் எனக்கு உறக்கம் வருகிறது." என்று கூறினாள். 

"சரி என் மடியில் தலை வைத்து உறங்கு." என்றான். 

அவள் நன்கு உறங்கியதும், அருகில் மணலால் சிறிய மேடு செய்து, அவளை அந்த மணல் மேட்டில் தலை வைத்துப் படுக்குமாறு செய்தவன். அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் போட்டுவிட்டான். இறக்கும் தருவாயில், "நம்பி வந்த என்னை மோசம் செய்த உன்னை பலிவாங்காமல் விட மாட்டேன்." என்று கூறி இறந்தாள்.   

    இசக்கி அணிந்திருந்த நகைகள் மற்றும் அவள் கொண்டுவந்த பொன் துடிப்பையும் எடுத்துக் கொண்டு வடதிசை நோக்கி நடந்தான்.  சிறிது நேரத்தில் அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. சற்று தொலைவில் ஒரு கிணறு இருப்பதைக் கண்டவன். அங்கு சென்று, அருகில் கிடந்த பனை ஓலையில் தொன்னை செய்து,  அதை ஒரு கொடியால் கட்டி கிணற்று நீரை இறைத்தான். அப்பொழுது  காலுக்கடியில் இருந்த கல்லின் மீது அவன் கால்வாய்கள்,  அதன் அடியில் இருந்த பாம்பு அவனைக் கடித்து இறந்து விட்டான் என்கின்றனர் சிலர்...



   காட்டிற்கு சென்ற அந்தப் பெண் வீடு திரும்பாமல் காட்டிலேயே அலைந்ததாகவும்... ஒரு நாள் காட்டிலிருந்து இடுப்பில்  பிள்ளையுடன்  வந்த இசக்கி, ஊர் பஞ்சாயத்து கூட்டி, அந்தக் கயவன்தான் தன் குழந்தைக்கு தந்தை என்று முறையிட்டிருக்கிறாள்... ஆனால் அவன் ஒத்துக் கொள்ளவில்லை... பஞ்சாயத்தார், "கூட்டத்தின் நடுவில் இடுப்பிலிருந்த குழந்தையை இறக்கி விடு." என்று கூறினர், அவள் குழந்தையை இறக்கி விட்டதும் அந்தக் குழந்தை, அந்தக் கயவனை "அப்பா" என்று அழைத்து அவன் அருகில் போய் நின்றது... இதைக் கண்ட பஞ்சாயத்தார்,

"குழந்தை பொய் சொல்லாது, நீதான் இந்தக் குழந்தையின் தந்தை." என்று தீர்ப்பு கூறிவிட்டதோடு, இசக்கியையும் அந்தக் கயவனையும் குழந்தை யோடு ஒரு குடிசையில் அடைத்து வைத்து விட்டனராம். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த இசக்கி, கையிலிருந்த கத்தியால் அந்தக் கயவனை குத்திக் கொன்றுவிட்டாள் என்றும்  கூறுகின்றனர்..


  இசக்கி அம்மனிடம், குழந்தை வரம், மாதவிடாய்க் கோளாறுகளுக்கு வேண்டினால், கோளாறுகளுக்கு நீங்கி விடுகிறது. இன்று வரை அவள் பக்தனின் ஆசையை நிறைவேற்றுகின்றாள்.



  நல்லனுக்கும், நல்லவன் போல நடிக்கும் கயவனுக்குமே வித்யாசம் தெரியாத அந்த அப்பாவிப் பெண்ணிற்கு, வரங்கள் கொடுக்கவும், வியாதிகள் தீர்க்கவும், சக்தி எங்கிருந்து வந்தது?


  அவளுக்குள்ளே சக்தி இருந்தது. ஆனால் அந்தப் பெண் உணரவில்லை... இறந்த பிறகு, தன் சக்தியை உணர்ந்ததால், அல்லது அவளுக்கு செய்த பாவத்தால், தண்டனை அனுபவித்தவர்கள், தங்கள் வம்சத்தைச் காக்குமாறு வேண்டி, அவளுடைய மனதைக் குளிர வைத்து, வரங்கள் கேட்டு அவளுடைய சக்தியை உணரைவைத்ததால்,

  தன்னைப் போன்ற பெண்கள் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணி தனது சக்தியை வரங்களாகத் தருகிறாள். 


  பெண்தானே அவளால் என்ன செய்து விடமுடியும்? என்ற தைரியத்தில் பெண்ணைக் கொடுமைப் படுத்தும் கயவர்கள், அவளுக்குள் இருக்கும் ஆத்ம சக்தி தன் வம்சத்தையே அழித்துவிடும்..என்பதை அறிவதில்லை...


மீண்டும் ஒரு பெண் தெய்வத்துடன் சந்திக்கிறேன்...

அடுத்த அத்யாயத்தில். ..


-------- ********* -------- 


  


Post a Comment

0 Comments