கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்

 

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்



தன் உயிரை விட தன் நாட்டு அரசியின் உயிரே மேலானது என்று தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அரசிக்கு வந்த ஆபத்தை தன் தலையில் சுமந்த கன்னிப்பெண். தனக்காக உயிர்விட்ட பெண்ணுக்காக ஆலயம் அமைத்து வழிபட்ட அரசி. எங்கே நடந்தது இப்படி ஓர் அற்புதம். எங்கே இருக்கிறது அந்த ஆலயம். சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரியாக்குறிச்சி என்னும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் ஆலயம்தான் அது. ஆலயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக,கோயில் உருவான வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.


வெள்ளையர்களை எதிர்த்து, முதலில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது தென்னகத்தில்தான். அந்நாட்களில்  இந்தப் பகுதியே போர்க்கோலம் பூண்டிருந்தது. அப்போது சிவகங்கைச் சீமையை முத்துவடுகநாதர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் எதிரிகளால் கொல்லப்படவே, அவருடைய மனைவி வேலு நாச்சியார், தனது படைத்தளபதிகளான மருது சகோதரர்களின் உதவியோடு, அரியாக்குறிச்சி வழியாக தப்பிச் சென்றார். வெள்ளையர் படை அவர்களைத் தேடி அலைந்து திரிந்தது.


அரியாக்குறிச்சியில் கன்னிப் பெண்ணொருத்தி ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டனர் வெள்ளையர்கள். அந்தப் பெண்ணிடம் வேலுநாச்சியார் பற்றி விசாரித்தனர். அவள் வேலுநாச்சியார் சென்ற விபரம் அறிந்திருந்தும், தகவல் சொல்ல மறுக்கவே அடுத்தகணமே அவளின் தலையைத் துண்டித்தனர். அப்பெண் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தாள்.


தகவல் அறிந்து அங்கு வந்த வேலுநாச்சியார் அவளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வழிபடத் தொடங்கினார். தனது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாக அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


வெட்டுப்பட்ட உடையாள்தான் வெட்டுடையாளாக மாறி இன்றளவுக்கும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள் என்று மெய்சிலிர்க்கிறார்கள் காளியின் பக்தர்கள்.


தீர்க்கமான கண்களுடன் கருணை பொங்கும் முகத்தோடு தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கிறாள் அம்மன். வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறாள் காளி. நம் கண்களுக்கு தெய்வீக ஒளியாகக் காட்சி அளிக்கும் காளியம்மன், நம்மைப் பாதுகாக்க எட்டுக் கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.


மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் மாங்கல்யத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிச் செல்கின்றனர். கணவன் -மனைவி, உறவினர்கள், இப்படி யாரிடமாவது சண்டை போட்டு வெகுநாட்கள் பிரிந்து இருப்பவர்கள், இங்கு வந்து திருநீறு பூசி ஒன்று சேரும் இடமாகவும் இக்கோயில் திகழ்கின்றது.


குழந்தை வரம் வேண்டுவோர் கோயிலில் உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்வர்.

மற்றுமொரு சிறப்பு தொலைந்துபோன அல்லது காணாமல் போன பொருட்கள் மீண்டும் திரும்ப கிடைப்பதற்கு இந்த சக்தி வாய்ந்த அம்மனிடம் வேண்டி காரியசித்தி பெற்றவர்கள் ஏராளம்.  பக்தர்கள் நினைத்தது நடப்பதால், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகையானது பெருகி வருகின்றது.


மனிதர்களாய்ப் பிறக்கும் பிறப்பை அரிய பிறவியாக அறிந்து கொள்ளாமல் பலர் அநீதி புரிவது, அடுத்தவர்க்கு தீங்கிழைப்பது, நம்பியவர்களைக் கைவிடுவது, துரோகம் செய்வது,  ஏமாற்றுவது போன்ற பல தீயசெயல்களைச் செய்து வருகின்றனர்.


சமூகத்தில் கொலை, கற்பழிப்பு, களவு போன்றவை சகஜமாகிவிட்டன. குற்றம் புரிந்தவர்களையோ, நம்மை ஏமாற்றுபவர்களையோ தட்டிக் கேட்பதற்கும் தண்டனை கொடுப்பதற் கும், நீதி வழங்குவதற்கும் நாம் என்ன செய்கிறோம்?நீதிமன்றத்துக்குப் போகிறோம்; வழக்கு தொடுக்கிறோம்; நீதி கேட்கி றோம். அங்கே எப்போது நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. அங்கே சந்தர்ப்ப சாட்சியங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. 


நிரபராதி தண்டனை பெறுவதும், குற்றவாளி விடுதலை ஆவதும் பல வழக்குகளில் நடந்து வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.பணம் எனும் சக்தியால் நியாயத்தை விலைக்கு வாங்கி அநியாயத்தை நிலவ விடும் அவலமும் நடைபெற்று வருகிறது. 


ஆனால் பணத்தினாலோ... வேறு எந்த சக்தியாலோ தப்பிக்க முடியாத வகை யில் தவறு செய்பவர்களைத் தண்டிக்க வும், திருத்தவும் செய்யும் சக்தி கொல்லங் குடியில் கோவில் கொண்டிருக்கிறது!


நீதி கேட்டு இந்தக் காளியம் மனிடம் சென்றால் மிகச் சீரான தீர்ப்பு கொடுப்பாள் என்பதை நிரூபணம் செய்யும் வண்ணம் பல உண் மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது அம்மனின் திருவிளையாடல்களில் ஒன்று'' என்று 

.நீதிமன்றத் தீர்ப்பு தவறாக இருக்கலாம். ஆனால் இந்த அம்மனின் தீர்ப்பு மிகச் சரியாக இருக்கும்.




கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.


இந்நாட்களில் காளி கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக் குதிரை ஆகிய வாகனங்கங்களில் பவனி வருவது உண்டு. விழாவின் 9-ம் நாளில் தேர் பவனியும் நடைபெறும். இக்கோயிலில் ஆடிப்பெருக்கு அன்று சந்நிதி முழுவதையும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். கோயிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.



வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதை! துடிப்பான தெய்வம்! அம்மனை வேண்டிக்கொண்டால், துன்பங்கள் பறந்தோடும்; வாழ்க்கை சிறந்தோங்கும்!


   ஒரு சிறிய கிராமத்தில்,  ஆடுமேய்த்துக் கொண்டிருந்த கன்னிப்பெண் எப்படி நியாயம் வழங்கும் தெய்வமானாள்.


    உயிரே போனாலும் இன்னொரு பெண்ணைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற தீவிர வைராக்கியம் தான் சக்தியா?


  சிறு வயதுமுதலே நியாய தர்மத்திற்காக அந்தப் பெண் போராடியிருப்பாள்.... அநீதி நடந்தால் கொதித்திருப்பாள்... பல சந்தர்ப்பங்களில் அநீதி யிலிருந்து மக்களைக் காத்திருப்பாள்... நல்லது நிறைய செய்திருப்பாள்... 


   வீரக்கல் நடப்பட்டவர்கள் எல்லாம் தெய்வங்களாக விட வில்லை... அதற்கு பிறகும் உடையாளை ஊர் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்...

"நீ இருந்த வரை அடங்கியிருந்த அநீதி, இன்று தலைவிரித்து ஆடுகிறது." என்ற புண்பட்ட மனிதருக்கு நீதி வழங்கியிருப்பாள்...  


  இன்று நம்முடன் எத்தனை உடையாள்கள் வாழ்கிறார்களோ ! 


மீண்டும் ஒரு பெண் தெய்வத்துடன் சந்திக்கிறேன்

 அடுத்த அத்யாயத்தில்.


   ---------*********---------


Post a Comment

0 Comments