சுவையான தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 1
சிவப்பு காய்ந்த மிளகாய். -2
கடுகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஈர்க்கு
தக்காளி - ½ கிலோ
சின்ன வெங்காயம் - 20
பூண்டு -10
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு -3
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் ரெண்டு ஸ்பூன்
கசகசா அல்லது பொரிகடலை
அல்லது முந்திரிப் பருப்பு - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சிவப்பு மிளகாய் - 4, 5
தேங்காய் சிறியது - அரை மூடி
செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் போட்டு ஒரு கிளறு கிளறவும்.
வெங்காயம் வதங்கவும் பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு வதங்கவும் சிவப்பு மிளகாய் போட்டு வதக்கி, கருவேப்பிலையை சேர்த்து வதங்கவும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் குறைந்த தீயில் கடலை பருப்பு சேர்க்கவும், கடலை பருப்பு லேசாக நிறம் மாறும் பொழுது சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, கசகசா, கசகசா இல்லை என்றால் ஒரு ஸ்பூன் பொரிகடலை அல்லது ஐந்து முந்திரிப்பருப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்த்து நன்றாக சிவந்து வந்ததும் அதை எடுத்து ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் வெங்காய கலவையுடன் சேர்த்து ஆறவிடவும்.
பிறகு வாணலையில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரை கிலோ தக்காளி பழத்தை சேர்த்து, கொஞ்சமாக உப்பும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கவும் அதனுடன் தேங்காய் துருவல் போட்டு, மஞ்சள் தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும். மல்லித்தூள் இல்லையென்றால் தனியாவை தக்காளிக்கு முன்பாக சேர்த்து லேசாக கிளறி விட்டு பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
முதலில் வதக்கிய வெங்காய கலவை மற்றும் மசாலா கலவையை நன்கு அரைத்து, அதன் பின் தக்காளி கலவையை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும், ஒரு ஸ்பூன் கடலை பருப்பு போட்டு லேசாக கலர் மாறவும், நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தையும், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், அரைத்த கலவையையும், குழம்புக்குத் தேவையான தண்ணீரையும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
குழம்பு நன்கு கொதி வரவும் உப்பு சேர்க்கவும்.
குழம்பு பச்சை வாடை போயி, எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
இந்த தக்காளிக் குழம்பு நல்ல வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
இந்தக் குழம்பை இட்லி, தோசை, சப்பாத்தி, சோறு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நன்றி🙏
0 Comments