உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟25
நேத்ராவிற்கு, வருங்காலத்தில் சிறந்த மருத்துவர் ஆகவேண்டும் என்று நோக்கம் இருந்ததால், அவளை மகாத்மா மாண்டீஸ்வரி மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் சேர்த்து விட நினைத்தனர், நேத்ராவின் பெற்றோர்களான பிரபுவும் நதியாவும்.
தனது தோழி சுபத்ராவை விட்டு வேற ஸ்கூல் போக மாட்டேன் என்று கூறிய நேத்ராவிடம்,
"நீ டாக்டர் ஆகணும்னா, நிறைய மார்க் வாங்கணும். அதுக்கு நான் சொல்ற ஸ்கூல்ல படிச்சாதான் நல்ல மார்க் வாங்க முடியும்." என்று பிரபு கூற,
"இந்த ஸ்கூல்லயே நல்ல மார்க்தானே வாங்குறேன்." என்று ஒரு பக்கமாக தலை சாய்த்து கேட்ட நேத்ராவிடம்,
"ஆனா மகாத்மா ஸ்கூல்ல படிச்சா இங்க்லீஷ் சூப்பரா பேசுவடா" என்று நேத்ராவின் தலையை கோதியபடி கூறினார் பிரபு.
"அப்படியா?" என்று கண்கள் விரிய கேட்டவளிடம்
"ஆமா" என்றார்.
"அப்போ அதே ஸ்கூல்ல சுபத்ராவையும் சேரச் சொல்றேன்." என்று சுபத்ராவின் வீட்டிற்கு செல்வதற்காக ஓடப்போன நேத்ராவைப் பிடித்து நிறுத்திய பிரபு,
"சுபாவால அந்த ஸ்கூல்ல படிக்க முடியாது டா."
"ஏன்?"
"உனக்கு சொன்னா புரியாது நேத்ரா."
"அதெல்லாம் எனக்குப் புரியும்" என்ற நேத்ராவை, இதுவரை தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடந்த உரையாடல்களை கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்த நதியா, தன் மடியில் இருத்தி,
"அம்மா சொல்றத சுபத்ராட்ட போய் கேட்கக் கூடாது. அப்படின்னா நான் சொல்றேன்." என்று கூறவும்,
நேத்ரா, தந்தையையும் தாயையும் மாறி மாறி பார்த்து,
"ஏன் சொல்லக்கூடாது" என்று கேட்டாள்.
"அவ மனசு கஷ்டப்படும்" என்று கூற,
சிறிது நேரம் அமைதியாக தலை குனிந்து யோசித்த நேத்ரா,
"அவ மனசு கஷ்டப்படுற விஷயத்தை நான் சொல்ல மாட்டேன். சொல்லுங்க ஏன் மகாத்மா ஸ்கூல்ல சுபத்ராவால படிக்க முடியாது."
"அந்த ஸ்கூல்ல ஃபீஸ் ரொம்ப அதிகம். அதை சுபத்ரா அப்பா கொடுக்க மாட்டார்."
"ஏன்?" என்ற நேத்ராவிடம்,
'எவ்வாறு கூறுவது?' என்று நதியாவும், பிரபுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"எனக்குப் புரிஞ்சிருச்சு. அவங்க அப்பா கிட்ட காசு இல்லையா?" என்று நேத்ரா கேட்டாள்.
"அதெல்லாம் இருக்கு. ஆனா, அந்த ஸ்கூல்ல சேர்க்கிறதுக்கு பணம் கொடுக்க மாட்டார்."
"அதான் ஏன்?"
"அது… வந்து… அது அவங்க குடும்ப விவகாரம் பாப்பா! அதுல நாம தலையிட முடியாது." என்று கூறவும்,
சுபத்ரா வீட்டிற்குச் சென்ற நேத்ரா, "என்னை மகாத்மா ஸ்கூல்ல சிக்ஸ்த் சேர்க்கப் போறாங்களாம். நீ உங்க அப்பாம்மாட்ட கேளு!" என்று கூற,
சுபத்ரா தன் தாய் மேனகாவிடம் கேட்டாள்.
"அந்த ஸ்கூலில் அப்பா சேர்த்து விடமாட்டார். இப்ப படிக்கிற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல உன்னை சேர்த்ததுக்கே நான் உங்கப்பாட்ட நிறைய திட்டு வாங்குறேன்… நீ தேவையில்லாமல் அப்பாட்ட கேட்டு, அடி வாங்காத" என்று மேனகா முடித்து விட்டார்.
இதை நினைத்து தோழிகள் இருவருக்கும் மிகவும் கஷ்டமாகிவிட்டது. குழந்தையிலிருந்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள்…
"அடுத்த வருஷம் நம்ம ரெண்டு பேரும் வேற வேற ஸ்கூல்லா?" என்று மீண்டும் மீண்டும் கேட்டு இருவருமே அழுதனர்.
இந்தச் சூழ்நிலையில் பிரபு வேலை பார்த்த கம்பெனியின் முதலாளி இறந்துவிட, அந்த கம்பெனியை எடுத்து நடத்த அந்த முதலாளியின் மகன்களுக்கு விருப்பமில்லாததால், கம்பெனியை மூடினர்.
அதனால் பிரபுவிற்கு வேலை போய்விட, இனி உள்ளூரில் வேறு நல்ல ஒரு வேலை தேடி, அந்த வருமானத்தில் நேத்ராவை மருத்துவம் படிக்க வைக்க முடியுமா? என்று யோசித்த பிரபுவிற்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தது.
அதனால் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்ல முடிவு செய்தார்.
இதை அறிந்த தோழிகள் மிகவும் வருத்தப்பட்டனர். ஒரே ஊரில் வேற வேற பள்ளியில் படிப்பதற்கே ஒரு மாதமாக அழுது தீர்த்த தோழிகள், நேத்ரா இந்த நாட்டை விட்டே செல்வதை நினைத்தால் தாங்குவார்களா?
சுபத்ராவை விட்டு சிங்கப்பூர் செல்ல நேத்ராவுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால் பெற்றவர்கள் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.
'என்ன செய்வது?' என்று இரு தோழிகளும் கவலைப்படும் பொழுது,
தன் அப்பத்தாவிடம் பேசினாள் நேத்ரா.
"நான்… நான் உங்க கூடவே இருந்துடுறேன் அப்பத்தா! அப்பா கூட சிங்கப்பூர் போகல." என்று கூற,
அப்பத்தாவிற்கு கண் கலங்கிவிட்டது. "என்னால மட்டும் உன்னை அனுப்பிவிட்டு சந்தோசமா இருக்க முடியுமா? ஆனா உன் அப்பா நான் சொல்றத கேட்க மாட்டானே" என்று அப்பத்தா கூறவும்,
மீண்டும் சுபத்ராவிடம் வந்து அழுதாள் நேத்ரா. அப்பொழுதுதான் சுபத்ரா ஒரு திட்டத்தை கூறினாள்.
"அஞ்சாம் வகுப்பு படிக்கும் வரையாவது நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருப்போம் நேத்ரா. நீ போய் உங்க அப்பாட்ட ஸ்கூல்ல எக்ஸாம் நடக்குது, என்னால இப்ப வர முடியாது. ஐந்தாம் வகுப்பு முழு பரிச்ச முடிஞ்சதுக்கு அப்புறம் நான் வரேன்னு சொல்லு." என்று ஐடியா கொடுக்க,
நேத்ராவும் அப்படியே பிரபுவிடம் போய் கூறினாள்.
அப்பத்தாவும், தாத்தாவும் நேத்ராவிற்கு ஆதரவாகப் பேசினர்.
"மிஞ்சிப் போனா நாலு மாசம் இருக்குமா? நேத்ரா இங்கே இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் சிங்கப்பூர் போயி, வேலைல செட்டில் ஆகுங்க. அப்புறம் நல்ல வீடா பார்க்கணும், அதுக்கப்புறம் நல்ல ஸ்கூல் பார்க்கணும், நீங்க போய் இதெல்லாம் கவனிங்க. அதுக்குள்ள இந்த நாலு மாசம் ஓடிப் போய்விடும். இவளும் இதே ஸ்கூல்ல அஞ்சாம் கிளாஸ் முடிச்சிடுவா. சிக்ஸ்த் க்கு சிங்கப்பூர் கூட்டிட்டு போயிருங்க" என்று கூறவும்,
"இதுவும் சரியாகத்தான் தோன்றுகிறது!" என்று முடிவெடுத்த நதியாகவும், பிரபுவும் மட்டும் சிங்கப்பூர் செல்ல முடிவெடுத்தனர்.
இதை அறிந்த நேத்ராவிற்கும், சுபத்ராவிற்கும் சந்தோசத்திற்கு எல்லையே இல்லை.
எப்படியும் நான்கு மாதம் கழித்து பிரியப் போகிறோம் என்று அந்த பிஞ்சு நெஞ்சங்களுக்குப் புரியவில்லை.
'சுபத்ரா நல்ல ஐடியா கொடுத்தாள்' என்று அவளை கட்டிக்கொண்டு நேத்ரா குதூகலித்தாள்.
இதுதான் நேத்ரா பெற்றோர்களை பார்க்கும் கடைசி சந்தர்ப்பம் என்பதை யாரும் அறியவில்லை.
சுபத்ராவிற்காக, தன் பெற்றோரிடமிருந்து முற்றிலுமாக விலகப் போகிறோம் என்றும் நேத்ராவும் அறியவில்லை பாவம்.
அடுத்த வாரமே பிரபுவும் நதியாவும் சிங்கப்பூருக்கு விமானத்தில் ஏற, அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருவருமே இறந்தனர்.
ஒருபுறம், 'நல்லவேளை நேத்ரா மட்டுமாவது தப்பித்தாளே!' என்று முதிய தம்பதிகள் நினைத்தாலும்,
'தள்ளாத வயதில் இந்தப் பிஞ்சுக் குழந்தையை எவ்வாறு கரை சேர்க்கப் போகிறோம்?' என்ற பயமும் அவர்களுக்கு வந்தது.
ஆனால் நேத்ராவோ, "நானும் அப்பா அம்மாவோட போய் இருக்கனுமோ?" என்று மேனகாவிடமே கேட்டு அழுதாள்.
அவளை அணைத்து ஆறுதல் படுத்திய மேனகா, "நீயும் போய் இருந்தேனா, உங்க தாத்தா அப்பத்தாவுக்கு யார் இருக்கா? கவலைப்படாதே! உனக்கு அம்மாவா நான் இருக்கேன்!" என்று கூறினார்.
அப்பத்தா தாத்தாவிடமும், "இனி நேத்ராவும் என் மகள் தான். என்னால சுபாவிற்கு செய்ய முடியுமோ எல்லாத்தையும் நிச்சயமா நேத்ராவுக்கும் செய்வேன். ஆனாலும் நீங்க ஆரோக்கியமா இருந்தாதான் நேத்ராவுக்கும் நல்லது. நீங்க கவலைப்பட்டு உடம்பக் கெடுத்துக்காதீங்க." என்று வாக்களிக்கவே அம் முதிய தம்பதியர் நிம்மதி அடைந்தனர்.
ஆனாலும் அந்தக் கொடிய சம்பவம் நடந்ததற்கு பிறகு சுபத்திரா மிகவும் குற்ற உணர்ச்சிக்கு ஆளானாள். ஏதோ அவளால் தான் நேத்ரா தனது பெற்றோரை இழந்து விட்டாள் என்றே நினைத்தாள்.
அந்தக் குற்ற உணர்விலிருந்து வெளியேற, தன் தாயை நேத்ராவிற்கு முழுமையாக விட்டுக்கொடுத்தாள். அன்றிலிருந்து மேனகாவை நேத்ராவின் அம்மாவாகவே எண்ணி வாழப் பழகினாள்.
சாதாரணமாக பேசும்போது கூட நேத்ராவிடம், மேனகாவை, "என் அம்மா எங்கே?" என்று பேசுவதில்லை.
"எங்க நேத்ரா உங்கம்மாவ காணோம்?" என்று தான் கேட்பாள்.
அடுத்த இடியாக, நேத்ராவின் மருத்துவர் கனவும் கானலானது…
தாத்தாவிடம், நேத்ராவை மருத்துவம் படிக்க வைக்க நிதி வசதி இருந்தது. ஆனால் பெண் குழந்தையை அவ்வளவு பெரிய படிப்பு படிக்க வைத்து விட்டு, அவளை விட அதிகம் படித்த மாப்பிள்ளை தேடி திருமணம் முடிப்பதில் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்தனர்.
தங்கள் காலத்திற்குள் நேத்ராவை நல்லவன் ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று கலங்கி தவித்தனர்.
தான் கொடுத்த ஐடியாவால் நேத்ரா தனது பெற்றோரை மட்டுமில்ல, அவ டாக்டராகனும்கிற கனவையும் இழந்து விட்டாள்.
இந்த எண்ணமே சுபாவை பெரிதும் வாட்டியது… அதிலிருந்து தப்பிக்க, இதுவரை தனக்குக் கிடைத்த நல்லவை அனைத்தையும் நேத்ராவிற்கு அளித்தாள்.
இருவரும் பெரியவர்களாக வளர வளர, 'சுபத்ரா தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அனைத்தையும் தனக்கே தருகிறாள்' என்பது நேத்ராவிற்கு புரியவந்தது.
அதை சுபத்ராவிடமே சென்று, "நானும் பார்த்துக்கிட்டு தான் வர்றேன்… உனக்கு கிடைக்கிறது எதுவா இருந்தாலும் ஏன் எனக்குக் குடுத்துடுற?" என்று கேட்க,
இந்த நேரடியான கேள்வியை எதிர்பாராத சுபத்ரா,
"அப்படீலாம் ஒன்னுமில்லையே!" என்று சமாளித்தாள்.
"என்ன ஒன்னுமில்ல? உன்னோட ஃபேவரிட் கலர் யெல்லோ தானே?"
"ஆமா!"
"பின்ன ஏன் இந்த தீபாவளிக்கு எடுத்த யெல்லோ கலர் சுடிதாரை எனக்குக் கொடுத்துட்ட? எனக்கு எடுத்த சுடிதாரை விட உனக்கு எடுத்த யெல்லோ கலர் சுடிதார் ரொம்ப நல்லா இருக்குன்னு தானே?"
"இல்ல நேத்ரா! அப்படி இல்ல. என்கிட்ட யெல்லோ கலர்ல நிறைய சுடிதார் இருக்கு. மெரூன் கலர் தான் இல்ல. அதான் மாத்திக்கிட்டேன்."
"நான் ஒன்றும் குழந்தை இல்ல சுபா… கடைல நீ ரொம்ப ஆசைப்பட்டு தான் அந்த யெல்லோ சுடிதாரை எடுத்த, நான் செலக்ட் பண்ணின மெரூன் கலர் சுடிதார், கடைல பார்க்கும் போது நல்லா இருந்துச்சு. வீட்டுக்கு வந்து பார்க்கிறபோது அவ்வளவா நல்லா இல்ல…"
"சரி அப்படியே வச்சுக்குவோம்… நான் டிரஸ்ல, கலர்ஸ் மேட்ச் கூட அவ்வளவா பார்க்க மாட்டேன். எப்படி இருந்தாலும் போட்டுக்குவேன். ஆனா நீ? என்ன டிரஸ் போட்டாலும் நீட்டா இருக்கணும்னு கவனம் எடுத்து போடுறவ. சோ, நீ அந்த யெல்லோ சுடிதாரையே எடுத்துக்க" என்று சிரித்தாள் சுபத்ரா.
ஒன்றும் பேசாமல் சுபத்ராவையே பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா,
"நீ முன்னாடிலாம் இப்படி இல்ல… எங்க அப்பா அம்மா… வுக்குப் பின்னாடி தான் இந்த மாதிரி நடந்துக்கிற… என் மேல யாரும் இரக்கப்படுறது எனக்குப் புடிக்காதுன்னு தெரியாதா?" என்று ஒரு மாதிரி குரலில் நேத்ரா கேட்க,
பதறிப்போன சுபத்ரா, "ஹேய் லூசு… நான்… நான்… உனக்கென்ன பா அப்பத்தா, தாத்தா இருக்காங்க… நம்ம அம்மா கூட உன் மேல்தான ரொம்ப பிரியமா இருக்காங்க?"
"அம்மாவ கூட விட்டுக் குடுத்துட்டியோன்னுதான் தோணுது… நீ என் மேல் இரக்கப்படல ஓகே… ஆனா எதுவா இருந்தாலும் என் விருப்பத்துக்கு ஏன் முதலிடம் குடுக்கிற?" என்று நேத்ரா நேராக விசயத்திற்கு வரவும்,
என்ன சொல்வதென்று புரியாமல் திருதிருவென விழித்தாள் சுபத்ரா.
வார்த்தைகள்: 1050
விலோசனம் தொடர்ந்து வரும்…
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
0 Comments