உனது விழியில் எனது விமோசனம்🌟24
சுபாவின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது.
நேத்ரா எந்த அளவுக்கு விபாவை விரும்புகிறாள் என்பதை விபாட்சுவிடம் கூறியதை நினைத்து, நினைத்து அழுதாள்.
'இந்த அளவுக்கா நீ விபாவ விரும்புற? அத நான் எப்படி தெரிஞ்சுக்காம போனேன்?... இப்ப என்ன பண்ணுவேன்? எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணுமே… உங்கள்ல ஒருத்தர் இல்லாமக் கூட என்னால நிம்மதியான வாழ்க்கைய வாழமுடியாது.' என்று சிறிது நேரம் அழுதவள,
'எங்கிட்ட நீ ஏன் விபாவ விரும்புறத சொல்லல?' என்று எண்ணும்போதே தானும் நேத்ராவிடம், விபாட்சுவை விரும்புவதை சொல்லவில்லையே! ஏன்?' என்றும் தோன்ற,
'கடவுளே! இதென்ன சோதனை?… நேத்ராவுக்காக நான் எதையும் செய்வேன்… அதே மாதிரி தான், விபாக்காகவும் நான் எதையும் செய்வேன்… ஆனா… அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுட்டு,
அப்புறம் அவங்கள என்னால எந்த வித உணர்வும் இல்லாம பார்க்க முடியுமா? அட்லீஸ்ட் அவங்களப் பார்த்து மனசார சிரிக்க முடியுமா?" என்று கலங்கியவள்,
மேற்சொன்ன சந்தர்ப்பங்களின் படி நிகழ்ந்தால் என்ன ஆகும்? என்று பல முறை ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் சென்று வாழ்ந்து பார்த்து,
"இல்ல என்னால முடியல" என்று கதறி அழுதாள்.
இவ்வாறே இரண்டு நாட்கள் கழிந்தது.
மேனகாவும் ஒரளவு யூகித்து, 'சுபத்ரா நல்ல முடிவை எடுக்கட்டும்' என்று அவளுடைய தனிமையை கெடுக்காமல், நேத்ராவின் அப்பத்தா, தாத்தாவிற்கு உறுதுணையாக மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகும் சுபத்ராவின் மனம் தெளிவடையவில்லை…
'ஒருத்தர ஒருத்தர் விரும்பும் ரெண்டு பேருமே, வாழ்ந்தாலும் சரி, சாவதென்றாலும் சரி! சேர்ந்து இருப்பதைத்தானே விரும்புவார்கள்? ஆனால் நேத்ரா?... அவ இறந்தாலும் விபா வாழனும்னு நினைச்சிருக்காளே?' என்று எண்ணும்போதே,
தான் அந்த சூழ்நிலையில் இவ்வாறு செய்திருப்போமா? என்று அந்த சூழ்நிலைக்கே சென்று யோசித்துப் பார்த்தாள்.
'அவ்வளவு பெரிய லாரி! பக்கத்தில் மோதுவதுபோல் வந்ததும், பயத்தில் ஸ்டீயரிங்கைக் கூட விட்டுவிட்டு கண்களை மூடி இருப்பேன். இதைத் தவிர வேறு எதுவும் செய்திருப்பேனா தெரியவில்லையே.' என்று நினைத்துப் பார்த்தவள்,
'அந்த நிலையிலும், விபாவைக் காப்பாற்ற வேண்டும்' என்று நினைத்திருக்கிறாள்…
லாரியுடன் நேருக்கு நேர் மோதியதும், மோதினவங்க பிழைச்சுடுவாங்களான்னு அவங்களுக்கேத் தெரியாது. அப்படிப்பட்ட சிச்சுவேஷன்ல கூட, விபா எழுந்து வந்து நேத்ராவைப் பார்த்த பிறகே, தானும் வாழ வேண்டும் என்ற ஆசைப்பட்டதாக கூறுகிறாள்!
'அதற்கு என்ன அர்த்தம்? விபா வாழ்ந்தால் மட்டுமே அவளாலும் வாழ முடியும்னு தானே?... இப்படிப்பட்டவளால எப்படி விபாவை வேறொருத்திக்கு விட்டு தர முடியும்?' என்ற எண்ணமே எரிச்சலைத் தர,
'ச்சே என்ன இது? இவ்வளவு மோசமாயிட்டேன். அவ விட்டுக்கொடுக்கனும்னு நினைக்கிறேனே? விட்டுக்கொடுக்கக் கூடிய விசயமா காதல்? ஒருவேளை அவ எனக்கு விட்டுக்கொடுத்தாலும் அதுக்கப்புறம் அவ நிலை?! இதைப் பற்றி யோசித்தேனா?' என்று குழம்பும் போதே,
"அப்போ நீ விட்டுக்கொடுத்துடப் போறியா?" என்று மூளை கேட்ட மாத்திரத்தில்
நெஞ்சம் படபடக்க, இதயத்துடிப்பு எகிறி குதித்தது. ஒரு நிமிடத்தில் பலமுறை எச்சில் விழுங்கி, பரபரவென அலைமோதிய
கண்களை இறுக மூடியவளுக்கு,
காரிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஒரு மனித உருவம், தலையில் பெரிதாக அடிபட்டுச் சாய,
இரத்தம் நெற்றி வழியோடி கண்களை மறைத்ததும் சட்டென்று அந்த உருவத்தின் கண்கள் திறந்து,
"உனது விழியில் எனது பார்வை
உலகைக் காணுமே…
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
உயிரும் வாழுமே
என்று பாட, பதறி கண்களைத் திறந்தாள் சுபத்ரா.
'கடவுளே… இதென்ன கனவு மாதிரி இல்லையே… சும்மா கண்ணை மூடினாலே இந்த மாதிரி பயங்கரமான காட்சி தெரியுது! நேத்ரா கார் ஓட்டிப் பழகுறதுக்கு முதல் நாளும் இந்த மாதிரி தான் தோணுச்சு. அதே மாதிரி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு… ஆனா நல்லவேளை ரெண்டு பேருக்குமே எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிச்சிட்டாங்க… அந்த அதிர்ச்சில இருந்தே இன்னும் வெளிவர முடியாம தவிக்கிற, இந்த சிச்சுவேஷன்ல, மறுபடியும் இதே மாதிரி தோணுது…
அப்போ, அந்த இல்யூசன்ல அடிபட்டது, அவங்க ரெண்டு பேருக்கும் இல்லையா? வேற யாருக்கோ வா? யாரது?... யாரோ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க மாதிரி தெரியுதே… ஒரு வேளை அது நானோ?' என்று அதிர்ந்தவள்,
'ஒருவேளை ஏதாவது கெட்டது நடக்கப் போறதுன்னு உள்ளுணர்வு கொடுக்கும் எச்சரிக்கையோ?' என்று எதுவும் பிடிபடாமல் பயந்து கலங்க,
அதற்கு மேல் யோசிக்கும் திறனற்று இரண்டு கைகளாலும் காதுகளை இறுக்க முடி, கவிழ்ந்து அமர்ந்தாள்.
அவளது நினைவலையில் நேத்ரா வந்தாள்.
அவள் நினைவு வந்ததும், சுபத்ராவின் மூளையானது சுபத்ராவை வார்த்தைகளால் வறுக்க ஆரம்பித்தது.
"சிறு வயதிலிருந்தே அவள் உன் சந்தோசத்தையே பெரிதாக எண்ணி வாழ்ந்தவ. உனக்காக, அவ ஆசைப்பட்ட எல்லாத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறா " என்ற மூளையிடம்,
"உண்மைதான் நேத்ரா மாதிரி தோழி கிடைத்தது நான் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம்! ஆனா… அதற்காக என்னால விபாவ விட்டுக் கொடுக்க முடியுமா?" என்று மனம் மன்றாட,
"எவ்வளவு சுயநலம் உனக்கு? நீ ஒன்றை மறந்து விட்டாயா? நேத்ராவின் இந்நிலைக்கு நீதானே காரணம்?" என்று மூளை கோபமாகவும்,
'விபாட்சுவைப் பார்க்கும் ஆசையில், நேத்ரா கார் ஓட்டிப் பழகுவதற்கு நான் ஒத்துக் கொண்டது தப்பு தான். நல்லவேளை அந்த ஆக்ஸிடென்ட்ல நேத்ரா தப்பிச்சதாலதான் நான் நல்ல மனநிலையில் இருக்கேன்… இல்ல, பைத்தியமே பிடிச்சிருக்கும். ஆனா என்னாலயும் விபா இல்லாம வாழமுடியாதே…' என்ற மனதிடம்,
'உயிர் பொழச்சு வந்தவளுக்கு பரிசா உன் உயிர கேட்கலை… அவ ஏற்கனவே உன்னால பெருசா இழந்து நிக்கிறதுக்கு ஆறுதலாவாவது விபாவ விட்டுக் கொடுக்கலாம்ல?' என்று மூளை கெஞ்ச,
ஏற்கனவே சுபத்ராவால் நேத்ரா, எதை இழந்தாள்? என்று நாம் யோசிக்கும் வேளையில்,
மூளை கூறிய நிகழ்வை நோக்கி சுபத்ராவின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது…
அப்பொழுது நேத்ரா, சுபத்ராவிற்கு பத்து வயது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த வருடம் ஆறாம் வகுப்பு படிப்பதற்காக நேத்ராவை, பரமக்குடியில் உள்ள சிறந்த மாண்டிசொரி மெட்ரிகுலேஷன் பள்ளியான மகாத்மா பள்ளியில் சேர்த்து விடுவதற்கு, நேத்ராவின் பெற்றோரான நதியாவும் பிரபுவும் முடிவெடுத்திருந்தனர்.
இந்த விசயத்தை அறிந்த நேத்ரா தன் பெற்றோரிடம், "எனக்கு வேற ஸ்கூல் வேணாம்… சுபத்ராவை விட்டு வேறு ஸ்கூல்ல சேரமாட்டேன்" என்று அடம்பிடிக்க,
நேத்ராவை அருகில் அமரவைத்து, "நீ டாக்டர் ஆகனுமா வேண்டாமா?" என்று பிரபு கேட்டதும்,
"ஆகனும்!" என்ற நேத்ராவின் முகத்தில் டாக்டர் ஆகிவிட வேண்டும் என்ற வைராக்கியம் தெரிந்தது.
விலோசனம் தொடர்ந்து வரும்…
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
0 Comments