உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟9


உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟9


இரவு  ஒன்பது மணிக்கெல்லாம் மருத்துவமனையில் மனிதநடமாட்டம் குறைந்திருந்தது. 


விளக்குகளும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்ததால் இருளும், ஒளியும் கலந்து இரவின் மிரட்டலுக்குத் துணைபோயின…


பணியிலிருக்கும் செவிலியர் கூட அவரவர் இடத்தில் ஓய்வாக அமர்ந்து இருந்தனர்.


"அதென்னவோ ராத்திரி நேரத்துல ஆஸ்பத்திரியப் பார்த்தாலே மனசுக்குள் சின்ன பயம்!" என்று சொல்லிக்கொண்டே அறையின் ஜன்னல்கள் மூடியிருக்கிறதா? என்று சரிபார்த்தார் தேவியின் அம்மா.


"இருட்டா இருக்கிறதாலயாம்மா?" என்ற தேவியிடம்,


"ராத்திரில, கோயில்கூட இருட்டாதானடா இருக்கும்… ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு அதிர்வு இருக்கும்…" என்று சொல்லிவிட்டு, பாத்ரூமை எட்டிப்பார்த்து, குழாய் மற்றும் விளக்குகளைப் பார்த்து விட்டுக் கதவை மூடினார்.


"நம்ம மனசுதான்மா காரணம். இங்கயும் நல்லதுதானே பண்றாங்க? பின்ன எப்டி எதிர்மறையான அதிர்வு வரும்?"


"அதான் தெரியல." என்றபடி தேவியின் படுக்கையை சரிசெய்தார்.


"அஞ்சே நிமிசத்துல  படுக்கைய கலைச்சுடுவேன்… தேவையில்லாம சரிபண்ணிக்கிட்டிருக்காம போய்த் தூங்கிமுழிங்கம்மா."



"ஒரே மணிநேரத்துல வெளியேறிடுங்கிறதுக்காகத் தண்ணி குடிக்க மாட்டியா என்ன?" என்று மகளைக் கலாய்த்துவிட்டு, 


தனது படுக்கையில் அமர்ந்துகொண்டு, இறைவனிடம் பெரிய லிஸ்ட்டை வாசித்து அவரை மிரளவைத்துவிட்டுப் படுத்துக்கொண்டார்.


அம்மாவிடமிருந்து வந்த சீரான மூச்சு சப்தத்தை வைத்தே தனது அம்மா உறங்கிவிட்டார் என்று உணர்ந்த தேவிக்கு, உறக்கம் எனும் பறவை அவளருகில்கூட வராமல் எங்கோ தூரத்தில் பறந்து சென்றுவிட,


வெறுமனே கண்களைமூடிப் படுத்திருந்தவளுக்கு, அருகில் யாரோ அமர்ந்து தன்னையே குறுகுறு வென்று பார்ப்பதுபோல் தோன்றியது.


'யாராயிருக்கும்?' என்று எண்ணியவள், அசையாமல் படுத்துக்கொண்டே சப்தங்களை கவனிக்க ஆரம்பித்தாள்.


அவளது தாயிடமிருந்து சீரான சுவாச சப்தம் கேட்டுக் கொண்டிருந்ததால் அருகில் அமர்ந்திருப்பது அம்மா இல்லை என்பது தேவிக்கு உறுதியானது.


'செவிலியர்களும் அருகில் உட்காரமாட்டார்கள். அப்போ இது யாரு? ஒருவேளை, இன்னைக்குக் காலைல யாரோ எனக்கு நடக்க உதவினாங்களே அவங்களா?' என்று நினைக்கும் போதே,


மனம் :திக்திக்' என்று அடிக்க, 'யார் இது? இப்ப எதுக்கு என்கிட்ட உட்கார்திருக்காங்க?' என்று யோசனை ஓடியதும்,


சற்றுமுன் தன் தாய் கூறிய, 'ஆஸ்பத்திரினாலே ராத்திரி நேரத்துல பயம்தான்' என்ற வார்த்தைவேறு தேவையில்லாத நேரத்துல ஞாபகத்துக்கு வந்து  மேலும் பயமுறுத்த,


ஏற்கனவே இதயத்தில் ஓட ஆரம்பித்த ரயில் இப்பொழுது, மோசமான நிலையிலிருக்கும் பாலத்தில் ஓடுவதுபோல் "டமடம டமடம டன்டன்டன்…" என்று சீராக இல்லாமல் ஓடியது.


ஆனால் அருகில் இருந்தவர் தேவியைத் தொடக்கூட இல்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது.


'ஆனாலும் ஏன் இப்படி அகால நேரத்துல இங்க வரனும்? ஏதாவது பேசினாலும் பரவாயில்ல… சும்மா உட்கார்ந்து இருந்தா இன்னும் பயம் ஜாஸ்தியாகுதே' என்று எண்ணும்போதே,


காலையில் தேவி பேசும்போதும் அவர்களிடமிருந்து பதில் வராதது ஞாபகம் வர,


'ஒருவேளை ஊமையோ?' என்று தோன்றவும், 


'நாம் பேசிப் பார்க்கலாமா?' என்று நினைத்து,


'உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள். தன் குரல் நடுங்குவது தேவிக்கே அப்பட்டமாய்த் தெரிய,


வழக்கம்போல் எதிரிலிருந்தவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.


"இங்க எதுக்கு உட்கார்ந்திருக்கீங்க? ஏதாவது பேசினாதாதானே எனக்குப் புரியும்?" என்று கொஞ்சம் தைரியமாகக் கேட்க,


அப்பொழுதும் பதில் இல்லை.


'நிஜமாவே ஊமை தானா? ஆனா நான் பேசுறதுக்கு எந்த வகையிலயாவது பதில் வந்திருக்கணுமே?' என்று தோன்றும் போதே, 


'வாய் பேச முடியாதவங்க சைகையில தானே அவங்க நினைக்கிறத சொல்ல முடியும்? எனக்குக் கண்ணு தெரியாது. இவங்ககிட்ட நான் எப்படிப் பேசுறது?' என்று யோசித்தவளுக்கு இன்னொரு சந்தேகமும் வந்தது.


'வெறும் ஊமையா இல்ல காதும் கேட்காதா?' என்று நொந்தவள், 


அதை ஊர்ஜிதப்படுத்துவதற்காகத் தன் தலைமாட்டில் இருந்த ஒரு  பிளாஸ்டிக் டப்பாவைத் தடவித் தடவிப் பார்த்து, எடுத்துத் தரையை நோக்கி வீசினாள்.


டப்பாவை எடுத்து வேகமாக வீசி எறிந்த பிறகுதான், தன்னுடைய அம்மா தூங்கிக் கொண்டிருப்பது ஞாபகம் வந்து, 'அச்சோ… சத்தம் கேட்டா எந்திரிச்சுடுவாங்களே!' என்று தோன்ற, 


தன் தாய் படுத்திருந்த படுக்கையின் பக்கம் திரும்பி, அம்மா எழுந்துகொள்கிறார்களா என்று கவனித்தாள்.


அதைக் கவனித்த அந்த உருவம் தேவி எரிந்த டப்பாவை கீழே விழும்முன் கையில் பிடித்தது.


கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கழிந்தும் தேவிக்கு, அவள் எரிந்த டப்பா கீழே விழுந்த ஓசை கேட்கவுமில்லை. அம்மா எழவும் இல்லை.


மேலும் பதட்டமாகியது தேவிக்கு. 'நான் எரிஞ்ச டப்பா எதுமேலயாவது மோதி இருக்கனுமே? நான் எந்தப் பொருளும் இல்லாத வெறும் தரையை எய்ம் பண்ணித்தானே வீசினேன்? ஒன்னு அந்த டப்பா தரையில விழுந்திருக்கனும். இல்ல சுவத்துல பட்டுத் தரையில் உருண்டிருக்கனும். எப்படியா இருந்தாலும் சத்தம் வந்திருக்குமே?' என்று அதிர்ச்சியானவள், 


'ப்ளாஸ்டிக் டப்பா கீழே விழுற சத்தம், காதுகேட்காதவங்களுக்குக் கேட்காது சரி… எனக்கு ஏன் கேட்கலை?' என்று குழம்பி,


'இதுவர என் வாழ்க்கையில நான் பார்க்காதது எதாவது இப்ப நடக்குதோ?' என்று பயந்தவளுக்கு இதயத்தின் துடிப்பு தாறுமாறாக, வியர்த்துக் கொட்டியது.


நெற்றிப்பொட்டில் இருக்கும் நரம்புகள் விறைத்தன…


அருகில் அமர்ந்திருப்பவரிடமிருந்து மூச்சுவிடும் சப்தம் கூட தேவிக்குக் கேட்காமல் போகவே, பயத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தேவி ஆளானாள்‌.


இதுதான் என்று நிச்சயமாகப் புரியவில்லை என்றாலும் ஏதோ தப்பாகத்தான் நடக்கிறது என்று உணர்ந்த தேவிக்குக் கை கால்கள் நடுங்கின. 


பயத்தில் மூச்சடைத்தது. அனிச்சையாகப் பிடிமானம் தேடி படுக்கை விரிப்பை இரு கைகளும் இறுக்கிப் பிடித்தன. 


கால் பெருவிரல் மற்ற விரல்களோடு ஒட்டிக்கொண்டு மடங்கின.


எச்சில் விழுங்கியதால் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.


பற்கள் இறுக்கமாகக் கடித்திருந்தன…


 இதற்கு மேல் எதையும் சோதித்துப் பார்க்கும் சக்தியற்று


"அம்மா… அம்மா…" என்று பயந்து தனது தாயை எழுப்ப,


அந்த உருவம் தன்னுடைய கையால், தேவியுடைய இதழ்களைை மென்மையாக மூடியது.


அதை உணர்ந்த தேவி பயந்து அலறி "யார் நீங்க?" என்று சத்தமாகவே கேட்க,


தேவியை இழுத்து அணைத்து, தேவிக்கு மட்டும் கேட்கும் தொனியில்,


"உனது விழியில் எனது பார்வை

உலகைக் காணுமே…

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் உயிரும் வாழுமே…

என் உயிரும் வாழுமே…"


'பாட்டுல கொஞ்சம் வித்யாசம் இருக்கே?' என்று நினைத்தவள், 

 

யார் அணைப்பில் இருக்கிறோம் என்று தோன்றவும்  அந்த உருவத்தைப் பிடித்துத் தள்ளி, மருத்துவமனையே கிடுகிடுக்கும் அளவுக்குப் பெருத்த அலறலோடு மயங்கிச் சரிந்தாள்.


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


நாட்டியத்திற்குப் பாடல் பாடுபவர், நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகளுடன் இசைக்கலைஞர்கள் விரிப்பின் ஒருபுறமாக அமர்ந்தனர்.


நடனம் ஆடுபவர்களான சுபத்ரா, நேத்ரா மற்றும் நான்கு மாணவிகள்  விரிப்பின் மையப்பகுதியில் தயார் நிலையில் இருந்தனர்.


" வருகவே வருகவே 

நல்லோரே வருகவே

ஏழு ஸ்வரங்களில் 

ஜதி சொல்லி ஆடியே

அழைக்கின்றோம் வருகவே" 


எனத் தொடங்கும் கர்நாடக சங்கீதப் பாடலை இசைக்குழு மாணவ மாணவியர் இசையோடு பாட, 


சுபத்ராவும், நேத்ராவும் நடுவில் நிற்க அவர்களின் இரு புறமும் இரு மாணவிகள் நின்றுகொண்டு அபிநயம் பிடித்து ஆட ஆரம்பித்தனர்.


ஆடும்பொழுது ஒவ்வொரு அசைவிலும் நேத்ராவும், சுபத்ராவும் வித்தியாசம் இல்லாமல், கொஞ்சம் கூட மாறாமல் ஒரே மாதிரி ஆடினர்.


தோழிகள் இருவரின் முக பாவமோ சொல்லொண்ணா விஷயத்தை நமக்குக் கூறுவது போன்று இருந்தது…


பாடல் எவருக்கும் புரியவில்லை என்றாலும், அவர்களின் நடனம், அந்தப் பாடலின் அர்த்தத்தை எல்லோருக்கும் புரிய வைத்தது…


முத்திரை பிடிப்பது, பார்க்கும் பார்வை, சிரிக்கும் சிரிப்பு இன்று ஒவ்வொன்றும் அற்புதம். 


அவர்களின் கால் அசைவுகளைக் கண்ட அனைவருக்கும் பரதம் ஆட ஆசை பிறந்தது…


பரதநாட்டியத்தில் இவ்வளவு நளினமா? இத்தனை கம்பீரமா?... காணும் கண்கள் நிலைத்திருக்க, இதழ்கள் மூடாமல் பிரிந்திருக்க மூச்சு விடும் சப்தத்தைத் தவிர வேறு எந்தவொரு சப்தமும், சுற்றி இருந்தவர்களிடமிருந்து வரவில்லை.


விண்ணுலக மங்கைகள் ஆடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். எத்தனையோ திரைப்படங்களில் பார்த்தும் இருக்கிறோம். 


ஆனால் இன்றுதான், விண்ணுல மங்கைகள் ஆடினால் எப்படி இருந்திருக்கும் என்பதை அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர் என்று அனைவரும் கண்ணாரக் கண்டார்கள்.


ஆடல் முடிந்தும், சுபத்ரா, நேத்ரா குழுவினர் அபிநயத்தால் வணக்கம் தெரிவித்தும் சுற்றி இருந்தவர்களின் கண்கள் அவர்களை விட்டு அகலவே இல்லை.


சுபத்ரா, நேத்ரா குழுவினர், ‘என்னடா இது எவனும் கைதட்டவில்லை?’ என்று திரு திருவென விழிக்க, 


இது கூட ஏதோ ஒரு அபிநயமோ என்று அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்தனர்.


அந்த மாயக் கட்டிலிருந்து முதலில் வெளிவந்தது விபாட்சுதான்.


தன் நண்பர்களையும் தட்டி சுய உணர்வுக்கு வரச்செய்து எழுந்து நின்று கை தட்டினான்‌.


விபாட்சு கைதட்டலுடன் சேர்ந்து  அனைவருமே கரகோஷம் செய்து.


“நாட்டியத்தாரகைகள்!…”

“ நடனதேவிகள்!…” 

“அபிநய சுந்தரிகள்!” என்று பல அடைமொழிப் பெயர்களோடு வண்ணத்தாள்களும் விண்ணை நோக்கிப் பறந்தன…


தங்களது நண்பர்களை ஊக்கப்படுத்துவதற்காக  வைத்திருந்த மேள தாளங்களை, நேத்ரா, சுபத்ராவின் நடனத்தில் ஈர்க்கப்பட்ட மாணவ மாணவிகள், ஆரவாரமாய்  இசைத்து, தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.


அடுத்ததாகக் கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக முடிய,


விபாட்சு குழிவினரின் நாடகம் ஆரம்பமானது.


சுதந்திரமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள், பல நூற்றாண்டுகளாகப் போராடி வாங்கிய சுதந்திரத்தை எவ்வாறு பேணிக்காப்பது என்பதை மிக அற்புதமாக,  குழந்தைக்கும் விழிப்புணர்வு வரும் அளவிற்கு நடித்துக் காட்டினர்.


நாடகத்தின் பொருள் உணர்ந்த மாணவர்கள் மெய்சிலிர்த்து, கரகோஷத்துடன் விசில் அடித்தும் தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.


"அறுசுவை உணவைக் காரசாரமாக உண்டபிறகு, ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப்போல், நம் கல்லூரி மாணவமணிகள் நமக்கு வழங்கிய கலைநிகழ்ச்சி எனும் அறுசுவை உணவு உண்ட கழிப்பில் இருக்கும் நாம், இறுதியாக ஐஸ்கிரீமை சுவைப்பதைப் போல், நம் கல்லூரியில் எம்பிஏ படிக்கும் மாணவர் விபாட்சுவின் பாடலுடன் கலைநிகழ்ச்சியை நிறைவு செய்வோம். நன்றி!" என்று அறிவிக்க,


விபாட்சு வரும் முன்னரே கரகோஷம் செவிப்பறையைக் குசலம் விசாரித்தது.


இசைக்கும் மாணவர்களிடம் பேசிவிட்டு சுபத்ரா, நேத்ராவைப் பார்த்தான்.


அவர்கள் இருவரும் கட்டைவிரலை உயர்த்திக் காட்ட,


சிரித்தபடி,


"எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று 

காலம்தான் சொல்லுமா

பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் 

தேதிதான் சொல்லுமா


சோலை எங்கும் சுகந்தம் 

மீண்டும் இங்கே வசந்தம்

நெஞ்சம் ஏன்தான் மயங்கும் 

கண்கள் சொன்னால் விளங்கும்


ஒரு மௌனம் தீர்ந்தது 

சுதியோடு சேர்ந்தது

ஒரு தாளம் ராகம் சொல்ல 

சந்தம் பொங்கும் மெல்ல

மாயம் அல்ல மந்திரம் அல்ல


இளஞ்சோலை பூத்ததா 

என்ன ஜாலம் வண்ணக்கோலம்

இளஞ்சோலை பூத்ததா 

என்ன ஜாலம் வண்ணக்கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட 

சில மேகங்கள் நீரூற்ற

இளஞ்சோலை பூத்ததா…


என்று தோழிகளைப் பார்த்தபடியே பாடி முடிக்க,


மீண்டும் கரகோஷம் எழுந்தது.


மாணவ மாணவியர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அனைத்து கலைநிகழ்ச்சிகளும் முடியவும், 


மேடையில் ஒவ்வொருவராகத் தங்களது வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும், ஊக்கப்படுத்தும் உரைகளையும் நிகழ்த்த,


"அடுத்து நமது சிறப்பு விருந்தினர் திரு.வெற்றிமாறன் அவர்களை அழைக்கிறோம்." என்ற அறிவித்ததும்,


மைக்கைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் எதுவும் பேசாமல் மாணவ மாணவியர்களைப் பார்வையிட்டபடி வெற்றிமாறன் நிற்க,


*என்ன தலைவா… 'பிட்' ட மறந்து வச்சுட்டு வந்துட்டீங்களா?" என்றும்,


"உங்க மைன்ட் வாய்சுலாம் மைக்ல கேட்காது ப்ரோ" என்றும்


"ஒஹோஓஓஓ..‌. இதுக்குப் பேர்தான் பார்வையாலயே பேசுறதாஆஆஆ" என்றும்,


"பத்துநாளா மனப்பாடம் பண்ணியும், மேடைல ஏறினதும் அத்தனையும் மறந்துபோச்சா… நீங்க என் இனம் சகோ…" என்றும்


"ஹேய்… யாரும்மா அது… சாப்பிட்டுக்கிட்டிருந்தவர பேசக் கூப்பிட்டது… பரவாயில்ல நண்பா வாய்ல வச்சிருக்கிறத சாப்பிட்டுட்டே  பேசுங்க" என்றும்,


"என்னா மலரும் நினைவுகளாஆஆ" என்றும் பலவாறாக மாணவ மாணவியர் கோஷமிட,


செறுமிவிட்டு, "நம்ம நண்பர் சொன்னமாதிரி பேச நினைச்சுட்டு வந்த அத்தனையும் மறந்துடுச்சு..‌." என்று வெற்றிமாறன் ஆரம்பித்ததும் மீண்டும் மாணவர்களின் ஆரவார ஒலி விண்ணை முட்டியது.


"பொதுவா குடியரசு தினநாள் ஃபங்சன்னா நம்ம நாட்டோட பெருமை, சுதந்திரத்திற்காக நம் மக்கள் செய்த அரிய தியாகங்கள்… என்று அதைப் பற்றி மட்டுமே கவைநிகழ்ச்சிகள் இருக்கும்…"


"திரும்பத் திரும்பக் கேட்டு, பார்த்து, போரடிச்சிருச்சா சார்" என்று ஒரு மாணவன் கத்த,


"அப்படியில்லை… நான் எதிர்பார்த்து வந்தது அதைத்தான் என்றேன்… ஆனால் நீங்கள் சுதந்திர இந்தியாவின் பெருமைகளோடு அதை இனிமேல் எப்படிப் பேணிக் காப்பது என்பதை ஒரு நாடகம்மூலம் வெளிப்படுத்திய விதம் உங்கள் தலைமுறையின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள்…"


“வி…பா!”


“வி…பா!”


“வி…பா!”


மீண்டும் மாணவர்களின் ஆரவாரம்…


"என்னால் இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றையும் கண்டேன்… பரதநாட்டியம்!… இதைப் பற்றிப் பெருமையாக நினைத்ததுண்டு… ஆனால் இவ்வளவு லயித்து நான் நின்னதில்ல… "


"உட்கார்ந்து ல இருந்தீங்க?" என்று ஒரு குசும்பன் கத்த,


"ஹஹ்ஹஹ்ஹா ஆமா… ஆனா அதுவே மறக்குமளவு அப்படியொரு நடனத்தை நான் எதிர்பார்க்கவில்லை…"


"ஹோஓஓஓ சமாளிப்பிகேசன்னாஆஆஆ" என்று மாணவர்கள் மீண்டும் கத்த,


ஆசிரியர் ஒருவர் மைக் கை வாங்கி,


"தயவுசெய்து மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..‌. நாம எப்பவும்தான் பேசிக்கிட்டிருக்கோமே. அதைக் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, இன்னைக்கு ஒருநாள் சிறப்பு விருந்தினரின் வாழ்த்துக்களைப் பெறுவோம். நன்றி!" என்று கூற,


அவரிடம் "பரவாயில்ல  சார்… காலேஜ் லைஃப அபூர்வமானது… கிடைக்கும்போது அனுபவிச்சிடனும்… இன்னைக்கு நானும் என்ஜாய் பண்ணிட்டுப் போறேனே" என்று வெற்றி மாறன் கூறியதுதான் தாமதம்


மீண்டும் கோஷமிட ஆரம்பித்தனர் மாணவர்கள்.


"நம்ம காலேஜ் பொண்ணுங்க நடனத்தப் பத்தி நான் சொல்லவேண்டாமா?" என்று வெற்றிமாறன் மீண்டும் ஆரம்பிக்க,


"எஸ் பாஸ்" என்று ஒரு குழு எழுந்துநின்று சல்யூட் அடித்தது.


அவர்களுக்குத் தன் புன்னகையைப் பரிசளித்துவிட்டு,


"உங்களோடு சேர்ந்து அந்த நடனத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது… இந்த ஜென்மத்தில் மறக்கமுடியாத நாட்டியம்… அவர்கள் இருவரா ஒருவரான்னு எனக்குப் பெரிய டௌட்டே வந்துச்சு"


"உங்களுக்குமா? காலேஜ்ல அவங்களுக்குப் பேரே ட்வின்ஸ்தான் சகோ" என்று மாணவர்கள் ஆர்ப்பரிக்க,


"சகோதரிகளா?" என்று ஆச்சரியமாகக் கேட்ட வெற்றிமாறனிடம்,


"இல்ல…"


"ஆமா…"


"நட்பூக்கள்" 


என்று பல பதில்கள் வந்து விழுந்தது.


"ஓகே! எதுவாக இருந்தாலும் இருவரின் நடனத்தை நாம் பாராட்டியே ஆகனும்… நம் மூளை சொல்வதை நம் கை, காலே கேட்காது ஆனா ஒரு இடத்தில் கூட மாற்றமில்லாம ஒரேமாதிரி ரெண்டு பேர் ஆடுறது பெரிய விசயம்தான்" என்றதும்,


"அபிநய தேவிகள் வாழ்க!" என்று ஒரு கூட்டம் கோஷமிட,


"அருமையான புனைப்பெயர்… இதையே அவர்களிவருக்கும் வைத்துவிட வேண்டி நான் முன் மொழிகிறேன்…" என்றான் வெற்றிமாறன்.


"வாவ் சூப்பர்… நாங்கள் வழி மொழிகிறோம் சகோ" என்ற மாணவ மாணவியருக்கு, சந்தோஷமாகத்  தலை தாழ்த்தி, நன்றி கூறிவிட்டு,


"எங்கள் கல்லூரியின் அபிநய தேவிகள் மேடைக்கு வந்தால் என் மனம் மகிழும்" என்று சுற்றிலும் பார்வையை ஓட்டியபடி வெற்றிமாறன் அறிவிக்க,


"நேத்ரா… நேத்ரா… நேத்ரா…"


"சுபத்ரா… சுபத்ரா… சுபத்ரா"


"நேத்ராவும் சுபத்ராவும் மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று மைக்கில் அறிவிப்பு கேட்டதும்,


தங்கள் குழுவுடன் நேத்ராவும், சுபத்ராவும் மேடையேறினர்.


சம்பிரதாய சம்பாசனைகளுக்குப் பிறகு,


"நான் சும்மா பெருமைக்காகச் சொல்லல. நிஜமாவே இந்த ஜென்மம் முழுசும் உங்க நடனம் என் கண்ணுல உறைஞ்சிருக்கும்‌. எனக்கு நம்பிக்கை இருக்கு. மறுபடியும் நான் உங்கள் நடனத்தைப் பார்ப்பேன்…  அந்த நடனத்தைப் பார்க்கிறதுக்காகவே ஒருமுறை இறந்து, பிறக்கவும் செய்வேன் தேவி." என்று வெற்றிமாறன் இருவரில் ஒருவரைப் பார்த்துச் சிரித்த நொடியில் அருகில் உள்ள கோயிலில் பூஜைக்கான மணி ஒலித்தது…


மேடையிலிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் கோயில் இருந்த திசையைப் பார்த்தனர்.


இந்த மணியோசை உணர்த்துவது எதை?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



விபாட்சு பாடிய பாடல் இடம்பெற்ற திரைப்படம் : உனக்காகவே வாழ்கிறேன்.


பரதநாட்டியத்திற்கான பாடல் பாடியவரின் பெயர் தெரியவில்லை.


Post a Comment

0 Comments