உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟10


உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟10


"தேவி!... தேவி!..." என்று அம்மா எழுப்ப, எழுந்து அமர்ந்த தேவி,


"அம்மா! அம்மா!... அது போயிடுச்சா?" என்று படபடப்பாகச் சுற்றிலும் பயந்த பார்வையை ஓட்டியவாறு தேவி கேட்க,


"எது டா?" என்று கனிவுடன் கேட்டார் தேவியின் அம்மா.


"என் பக்கத்துல உட்கார்ந்திருந்துச்சும்மா… என்னைக் கட்டிப்பிடிச்சுச்சு." என்று நடுங்கிய கைகளால் தன் தோளைத் தடவியவாறு கூற,


"எதாவது கெட்ட கனவு கண்டியா தேவி?" என்ற அம்மாவிடம், 


"இல்லம்மா. நிஜமாவே என்னைக் கட்டிப்பிடிச்சுச்சு. அதுனாலதான் நான் பயந்து கத்துனேன்" என்று தேவி கூறியதும்,


அதைக்கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்த செவிலிப்பெண், "இந்த வயசுல இந்தமாதிரி கனவு வர்றது சகஜம்தான்… படுத்துத் தூங்குங்க தேவி. சரியாயிடும்." என்ற சொவிலிப்பெண்ணின் குரல் கேட்டதும்,


"இல்ல சிஸ்டர்! நான் கனவு காணல… வந்து… பயந்து கண்ணெல்லாம் இருட்டி கீழே விழுந்துட்டேன்." என்ற எப்படிப் புரியவைப்பது என்று தடுமாறிய தேவியிடம்,


"நீங்க சத்தம் போடவுமே நான் ரூமுக்குள்ள வந்துட்டேன் தேவி, அப்ப நீங்க கட்டில்லதான் தூங்கிக்கிட்டிருந்தீங்க. எனக்கு முன்னாடி உங்கம்மா பதறியடிச்சு எந்திரிச்சு உங்க பக்கத்துல நின்னுகிட்டிருந்தாங்க." என்று ஆதரவாக செவிலிப்பெண் பேச,


"ஆமாடா! நீ பயந்து கத்தவுமே எந்திரிச்சுப் பார்த்தேன். நீ கட்டில்லதான் படுத்திருந்த." என்று அம்மாவும் ஆமோதிக்க,


"அம்மா… வந்தும்மா… இந்தத் தண்ணி ஜக்கை கட்டினது யாரு? எங்கூட நடந்தது யாருன்னு பாருங்கம்மா ப்ளீஸ்" என்ற தேவியைப் பார்த்து,


"ஓ… அதுதானா? அது என் தலைவலிங்க… எனக்குக் குடைச்சல் கொடுக்க யாரோ பண்ணின வேலை. அதையே நினைச்சுப் படுத்திருப்பீங்க… அதான் கெட்ட கனவு வந்திருக்கும். தண்ணி குடிச்சுட்டுப் படுத்துத் தூங்குங்க. " என்று கூறிவிட்டு செவிலிப்பெண் வெளியே செல்வதற்காகக் கதவைத் திறக்க,


'எல்லோரும் தூங்கினதும் 'அது' மறுபடியும் வந்துட்டா என்ன பண்றது?' என்று பயந்த தேவி,


"ஒரு நிமிசம் சிஸ்டர்!" என்று அழைக்க,


*ம்ம் சொல்லுங்க தேவி" என்று அருகில் வந்தார்.


"வந்து… எனக்கு என்னவோ போல இருக்கு… நீங்க இங்க ரூமுக்குள்ளயே இருங்களேன். அம்மாவால ராத்திரி பூரா கண்ணு முழிக்க முடியாது… ப்ளீஸ்" என்றதும்,


தேவியின் முகத்தில் தெரிந்த பயம் செவிலிப்பெண்ணை இளக வைத்தது.


"சரி!" என்று கூறி அதே அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, தேவிக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த தேவியின் அம்மாவிடம்,


"நீங்க தூங்குங்கம்மா… நான் துணைக்கு இருக்கேன்" என்றதும்,


'சரி' என்பதுபோல் தலையசைத்துவிட்டு, தேவியிடம்,


"அம்மாவும் இங்கதான் இருக்கேன்… எனக்குத் தூக்கம் வரும்போது படுத்துக்கிறேன்… நீ பயப்படாம நிம்மதியா தூங்குடா" என்று கூறிவிட்டு,


அவருக்கான படுக்கையில் சென்று அமர்ந்தார்.


தேவியும், அவள் அம்மாவும் உறங்காமல் விழித்தபடி அமர்ந்திருக்க,


"என்ன? இன்னைக்கு உங்களுக்கும் நைட் டியூட்டியா?" என்று சிரித்தார் செவிலிப்பெண்.


"தூக்கம் வரல" என்று தாயும் மகளும் ஒரே நேரத்தில் கூற,


"சும்மாவே உட்காந்து இருந்தா அப்படித்தான் இருக்கும். மனசு எதையாவது போட்டு உலட்டும். எதையாவது பேசிகிட்டு இருந்தா நேரமாக, ஆக டையர்ட் ஆகி தூங்கிடுவீங்க." என்று செவிலிப்பெண் கூறினார்.


'என்ன பேசுவது?' என்று தெரியாமல் தாயும் மகளும் விழிக்க, 


செவிலிப்பெண்ணே எடுத்துக் கொடுத்தார்.


"உங்களுக்கு இந்த ரெண்டு பொண்ணு மட்டும் தானாம்மா" என்று தேவியின் அம்மாவிடம் கேட்க,


"ஆமா சிஸ்டர்" என்று தேவியைப் பார்த்தவாறு புன்னகைத்தார்.


"இவங்க அப்பாவ நான் பாக்கலையே. அவர் எங்க இருக்கார்?"


"அவர் வெளியூர்ல வேலை பார்க்கிறார். காலைல கிளம்பினா ராத்திரிதான் வருவார். அதுனாலதான் இங்க வரமுடியல… அவர்ட்ட, நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன்" என்று சிரிக்க, 


”ஆமா… ஆமா… அப்புறம், உங்களுக்கு எப்படி சிங்கப்பூர் டாக்டரைத் தெரியும்? ரொம்பக் கெட்டிக்காரராமே… அவர் ஆபரேஷன் ஃபெயிலியர் ஆனதே இல்லையாம்" என்று கண்களை அகல விரித்து ஆச்சரியமாக செவிலிப்பெண் கேட்க,


"அப்படித்தான் சொல்றாங்க… அந்த டாக்டரை, நமக்குத் தெரிஞ்ச பிள்ளை மூலமாதான் தெரியும்."


"ஓ… தேவிக்கு எப்படிக் கண்ணுல பிரச்சனை வந்துச்சு?"


"அது பெரிய கொடுமைமா..‌. ஒரு வருசத்துக்கு முன்னாடி, ஒரு நாள்…" என்று நடந்த விசயங்களைச் சொல்ல ஆரம்பித்தார் தேவியின் அம்மா.


ஒரு வருடத்திற்கு முன்னால்…


"ஒன்னுக்கு ரெண்டு பொண்ணு பெத்தும் காலைல நான் மட்டும் அடுப்படில அல்லாட வேண்டியிருங்கு" என்று தேவியின் அம்மா புலம்பியபடியே,


சட்னிக்குத் தேவையான பொருட்களை எடுத்துவைத்து அதை வதக்குவதற்காக அடுப்பில் வாணலியை வைத்து,


அதில் இரண்டு ஸ்பூன் கடலெண்ண்ணை ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிவைத்திருந்த பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கும்போது அடுப்படிக்கு வந்த நந்திதாவிடம்,


"என் செல்லம்ல இந்தச் சட்னிய வதக்கு. நான் அப்பாவுக்கு டிபன் கட்டிக் கொடுத்துடுறேன்" என்று கூறி கரண்டியை மகளிடம் நீட்ட,


"எனக்குச் சட்னி எப்படிச் செய்யத்தெரியும்? நானே காலேஜுக்கு நேரமாச்சுன்னு கிளம்பிக்கிட்டிருக்கேன்" என்று நந்திதா சிணுங்கும்போதே அங்கு வந்த தேவி,


"நீ போ! நான் பார்த்துக்கிறேன்" என்று கூறி அம்மாவிடமிருந்து கரண்டியை வாங்க.


"நீ என்ன பார்த்துக்குவ? பல்லுகூட விளக்காம அப்படியே அடுப்படிக்குள்ள வந்துட்ட… போ! போ! போய்ப் பல்லு விளக்கிட்டு ஆபீஸ்க்குக் கிளம்பு" என்று கூறி தேவியின் கையிலிருந்து கரண்டியை வாங்கினார்.


"என்ன ஒரு ஓரவஞ்சனைம்மா இது? எங்கிட்ட சட்னிய வதக்கச் சொல்றீங்க… அக்காவ மட்டும் ஆபீஸ்சுக்கு கிளம்பச்சொல்றீங்க… ம்ம?" என்று நந்திதாவை,


"ஏய் வாலு எதையாவது உளராம கிளம்பு" என்று தன் தங்கையின் முதுகில் கைவைத்துத் தள்ளிக்கொண்டு சமையலறைக்கு வெளியே கொண்டு போய் விட்டுவிட்டு,


மீண்டும் அம்மாவின் கையிலிருந்து கரண்டியைப் பறித்து,


"நான் பல்லு விளக்கினேனான்னு ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு, அங்க ஹிட்லரோட சத்தம் கேட்குது என்னன்னு போய்ப் பாருங்க" என்று தன் தந்தையை தேவி, ஹிட்லர் என்றதும்,



 மகளை முறைத்து விட்டு, கணவர் அறைக்கு ஓடிய அம்மா அடுத்த செகண்ட் சமையலறைக்கே வந்து மதிய உணவை டிபன் பாக்ஸில் எடுத்து வைக்க,


"ம்ம் வெங்காயம் வதங்கிடுச்சு அடுத்து என்ன?" என்ற தேவியை முறைத்து,


"ஏழு கழுத வயசாச்சு.‌.. இன்னும் சட்னி அரைக்கத் தெரியாது. எவன் வீட்ல போயி குப்ப கொட்டப் போறியோ? அந்தக் கரிவேப்பிலைய போட்டு ரெண்டு கிளறு கிளறீட்டு, தக்காளியையும் மிளகாய் வத்தலையும் போட்டு வதக்கு. இதோ வந்துடுறேன்." என்று கூறி டிபன் பாக்ஸ்சைத் தூக்கிக் கொண்டு கணவர் அறையை நோக்கி ஓடினார்.


அடுத்த இரண்டாவது நிமிடத்தில் திரும்பியவர்,


"சட்னி வதக்கியாச்சா?" என்றதும்,


"நீங்க சொன்னதொல்லாம் போட்டு வதக்கீட்டிருக்கேன்.”


"நல்லா செஞ்ச, எவ்ளோ நேரம்? நீ போயி மிக்ஸி ஜார எடுத்துட்டு வா" என்று கூறிவிட்டு,


வதங்கிய பொருளுடன் சிறிது புளி, உப்பு சேர்த்து வதக்கி மிக்ஸியில் கொட்டி,


"நல்ல பிள்ளைல இத அரைச்சுடுடா… அம்மா சட்னி தாளிக்க ரெடி பண்ணிடுறேன்… அப்பா டைனிங் டேபிள்ல உட்கார்ந்துட்டார்." என்று தேவியிடம் மிக்ஸி ஜாரைக் கொடுக்க,


இத ஆற வைக்க வேணாமா? அப்படியே மிக்ஸில போட்டுட்டீங்க?" என்ற தேவியிடம்,


"அதுக்கெல்லாம் நேரமில்ல அரை" என்று கூறிவிட்டு, 


அதே வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், சிறிது கறிவேப்பிலையைக் கசக்கிப் போட்டு, ஒரு மிளகாய் வத்தலைக் கிள்ளிப்போட்டு கிளறும்போது,


தேவி, அரைத்த சட்னியை கிண்ணத்தில் மாற்றிக் கொடுக்க,


தாளித்த பொருட்களைச் சட்னியில் போட்டுவிட்டு மீண்டும் டைனிங் டேபிளுக்கு அம்மா ஓடினார்.


"டைனிங் டேபிள்ல உட்கார்ந்திருக்கிறது அப்பாதானே? சிங்கமா இருக்கு? இந்த லட்சணத்துல இவங்களுக்கு அவர ஹிட்லர்னு சொன்னா கோபம் வருது" என்று கிண்டலடித்தபடி, 'அடுப்பு அணைக்கப்பட்டுவிட்டதா?' என்று பார்த்துவிட்டு,


பாத்ரூமிற்கு வெளியே உள்ள வாஷிபேசினுக்கு வந்து வாயைக் கொப்பளித்துவிட்டு,


தனது பிரஷ்சை எடுத்து, பேஸ்ட்டை பிதுக்கும்போது, முதுகில் ஏதோ விழவும் பேஸ்ட்டை பிரஷ்சில் அழுத்தி வைத்து எடுத்தாள்., பிரஷ்சில் இருந்த ப்ரிசில்ஸ் (bristles) பேஸ்ட்டை வைத்து அழுத்தியதால் மடங்கி, எடுத்ததும், ப்ரிஸில்ஸ் சட்டென்று எழும்ப,


ப்ரிஸில்ஸ்சில் இருந்த பேஸ்ட் தேவியின் கண்களில்  தெறித்துவிட்டது…


"ஆ...‌ ஆ… ஆ… அம்மா" என்று தேவி அலற,


ஓடிவந்த அம்மா, "என்னடா? என்னாச்சு?" என்று பதறினார்.


"கண்ணுல பேஸ்ட் பட்டுருச்சும்மா ரொம்ப எரியுது" என்று கூறவும்,


"நந்து… அடியே நந்து" என்று தன் இளய மகளை அழைக்க, 


அம்மாவின் குரலில் இருந்த அவசரம் ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்ட நந்திதா வேகமாகக் கொல்லைப்புறத்துக்கு வந்தாள்.


அங்கே தேவி கண்ணில் கையை வைத்துக்கொண்டு அழ,


அச்சச்சோ… என்னாச்சுக்கா?" என்று தவிப்போடு  கேட்டவளிடம்,


"கண்ணுல டுத்பேஸ்ட் விழுந்துடுச்சாம்" என்று தன் மகளின் வலியைத் தாங்கமுடியாமல் தன் வலியாகக் கூற,


"டூத்பேஸ்ட் எப்படிக் கண்ணுல விழுகும்?" என்று சற்றுக் குழப்பமாக நந்திதா கேட்க,


"இப்ப அது ரொம்ப முக்கியம். என்ன செய்யறதுன்னு பாருன்னா… அவ துடிச்சுக்கிட்டு இருக்கும்போது உனக்கு இல்லாத கேள்விலாம் வருது?" என்ற தன் இளைய மகளிடம் தேவியின் அம்மா எகிற, 


"சரி சரி இருங்க" என்று கூறிவிட்டு, வேகமாக சமையல் அறைக்குச் சென்று, ஒரு கிண்ணம் நிறையத் தண்ணீரை பிடித்து, 


"அக்கா இந்தத் தண்ணிக்குள்ள நல்லா கண்ண முக்கி, கண்ணை நல்லா திறந்து, மூடி, மூடித் திற. அப்புறம் படபடன்னு கண்ணச் சிமிட்டு!" என்று கூறினாள்.


தேவியும் நந்திதா கூறுவது போல் தண்ணீருக்குள் கண்களை வைத்து நன்றாகத் திறந்து திறந்து மூடி, பிறகு படபட வென்று கண்களைச் சிமிட்டி நிமிர்ந்தவளின் கண்களை, தயாராக எடுத்து வந்த துண்டால் ஒற்றி எடுத்தாள் தங்கை. பிறகு


சமையலறையிலிருந்து கொல்லைப்புறத்திற்கு இறங்கும் படியில் தேவியை அமர வைத்து,


"மெல்ல கண்ணத் திறக்கா!" என்று கூறினாள்.


தேவி மெல்ல கண்களைத் திறக்க ஓரளவு எரிச்சல் குறைந்திருந்தது. ஆனால் கண்கள் மட்டும் சிவந்து காணப்பட்டது.


"என்ன நந்து? கண்ணு ரொம்ப சிவந்து இருக்கே?" என்று அம்மா வேதனை பட,


"எரிச்சலா இல்லைலக்கா?" என்று தேவியிடம் கேட்டாள் நந்திதா. 


"எரிச்சல் நல்லா குறைஞ்சிருச்சு டா. ரொம்பவே குறைந்திடுச்சு." என்று கூறவும்,


"இனி பயமில்லைம்மா. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய்க் காமிச்சா, ட்ராப்ஸ் குடுப்பாங்க. அதக் கண்ணுல போட்டா சரியாயிடும்." என்று கூறினாள் நந்திதா.


"சரி நந்து! நான் அக்காவைக் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போறேன். நீயா காலேஜ்க்குக் கிளம்பிப் போயிடுறியா?" என்று நந்திதாவிடம் அம்மா கேட்க, 


"சரிங்கம்மா! நானே கிளம்பிப் போயிடுவேன்." என்று கூறி தாயிடனும் அக்காவுடன் சேர்ந்து வீட்டின் பொதுக்கூடத்திற்கு வர,


அதே நேரத்தில் சாப்பிட்டு முடித்துவிட்டு வேலைக்குச் செல்லத் தயாராகி அவருடைய அறையை விட்டு வெளியே வந்த அப்பா,  


"மூணு பேரும் எங்கே போய்க் கூத்தடிச்சிட்டு வரீங்க?" என்று கேட்டார். 


அதற்கு அம்மா, "தேவி கண்ணுல டூத் பேஸ்ட் பட்டுருச்சுங்க. பாருங்க, கண்ணெல்லாம் எப்படி சிவந்திருக்குன்னு?" என்று தேவியின் கண்களைக் காட்ட, 


"அதுக்கு? ஒரேயடியா கொல்லைப்புறத்திலேயே உட்கார்ந்திருவீங்களா? மனுஷன் வேலைக்குப் போறதா? வேண்டாமா? ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க? என் வாட்ச் எங்க இருக்குன்னு தெரியல. அத வந்து எடுத்துக்கொடு. எனக்கு நேரமாச்சு. மனுஷன் அவ்வளவு நேரமாக் கூப்பிடுறது கூடக் கேட்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று தன் மகளின் வலியைக்கூடப் பொருட்படுத்தாமல் கத்திக் கொண்டிருந்தார் தேவியின் அப்பா.


அதைக் கேட்டு தேவியும், தேவியின் அம்மாவும் முகம் வாட,


 நந்திதா வேகமாகச் சென்று அவளுடைய அப்பாவின் கைக்கடிகாரத்தைத் தேடி எடுத்துவந்து அப்பாவிடம் கொடுத்து,   


"இந்தாங்கப்பா. வேற என்ன வேணும்?" என்று கேட்டாள்.


"உன் ஒருந்திக்காவது  எனக்கு எடுத்துக் கொடுக்கணும்னு தோணுச்சு பாரு. எவ்வளவு சொல்லியும் மரம் மாதிரி நின்னுகிட்டு இருக்கா நொம்மா." திட்டிக் கொண்டே அவர் வேலைக்குக் கிளம்பினார். 


"உங்க அப்பாவப் பார்த்தியா நந்து? அக்காவுக்குக் கண்ணுல பேஸ்ட் பட்டுருச்சுன்னு நான் கதறிக்கிட்டு இருக்கேன். கொஞ்சமாவது பிள்ளை மேல பாசம் இருக்கா?" என்று மனம் நொந்து பேச, 


"அக்கா பிறந்து எத்தனை வருஷம் ஆச்சு? நான் பிறந்தே இருபது வருஷம் ஆகுது. என்னமோ இப்பதான் புதுசா அவர் பேசுற மாதிரி ரியாக்ட் பண்ற? எப்பவுமே அவர் இப்படித் தானேம்மா பேசுவார்? இதுக்கெல்லாம் போய்க் கவலைப்பட்டுக்கிட்டு. அக்காவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல்ல போய்க் காட்டிட்டு வா. நான் காலேஜ்க்குக் கிளம்புறேன்." என்று மென்மையான சிரிப்புடன் கூறிவிட்டு, தனது அறையை நோக்கிச் சென்றாள்.


தலையைக் கோதி, கொண்டை போட்டு, கையில் ஒரு கூடையையும் பர்சையும் எடுத்துக் கொண்டு தேவியுடன் கண் ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்காக ஆட்டோவில் ஏறினார் தேவியின் அம்மா.


"என் ஆசைய குழிதோண்டிப் புதச்ச உன்ன, சந்தோசமா இருக்கவிடுவேனா?, ஆஸ்பத்திரிக்குப் போறியா தேவி? போ! போ! உனக்கு எப்படிக் கண்ணு கிடைக்குதுன்னு பார்க்கிறேன்." என்று தேவியை வன்மமாகப் பார்த்து உறுமியது ஒரு ஜென்மம்.


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் கல்லூரியிலிருந்து கிளம்ப, 


சுபத்ரா மற்றும் நேத்ரா தங்களுடைய டூ வீலரை உருட்டிக்கொண்டு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து வெளியே வரும்பொழுது, 


அங்கே நின்று கொண்டிருந்த விபாட்சு, "வீட்டுக்குத் தானே போறீங்க?" என்று கேட்டான். 


அதற்கு சுபத்ரா, "இல்ல ரோட்டுக்குப் போறோம்!" என்று கூறவும், குஷியான விபாட்சு சிரித்துக்கொண்டே,


"ரோட்டுக்குப் போயிட்டு, எங்கே போறீங்க?" என்று தலை சாய்த்துக் கண்களில் குறும்பு மின்னக் கேட்டான். 


"எல்லாரும் எங்க போவாங்களோ? அங்க தான் நாங்களும் போறோம்." என்று சுபத்ரா வெடிக்கென்று கூற,


"அப்படியா? அதோ அங்கே ஒரு குரூப் போயிட்டு இருக்கு பாரு. அவங்க எல்லாரும் ஏதோ 'பார்' க்குப் போறாங்க. நீங்களும் அங்கயா போறீங்க?" என்ற உதட்டை மடித்து சிரித்தபடியே விபாட்சு கேட்க,


 "அங்கே நீங்க  போங்க. நாங்க எங்க வீட்டுக்குப் போறோம்." என்று சீறிய சுபத்ராவை,


"சும்மா இரு சுபா!" என்று கண்களாலும் அடக்கிவிட்டு,  


"வீட்டுக்குப் போறோம்!" என்று அமைதியாகக் கூறினாள் நேத்ரா. 


"நாங்களும் வீட்டுக்குத்தான் போறோம்." என்று பாபி கிருஷ்ணாவும் கைலாஷீம் கோரஸ் பாட, 


"என்ன ஒரு ஆச்சரியம்? வீட்டுக்குப் போறாங்களாம்ப்பா!" என்று அவர்களைக் கலாய்த்தாள் சுபத்ரா.


அதற்கு பாபி கிருஷ்ணா, நேத்ராவைப் பார்த்து, "நீங்களும் வீட்டுக்குத்தான் போறீங்க. நாங்களும் வீட்டுக்குத்தான் போறோம். நம்ம பிரண்ட்ஸாகி எவ்வளவு நாள் ஆச்சு? உங்க வீட்டுக்கு எங்களைக் கூப்பிட மாட்டீங்களா? எங்க வீட்டுக்கு நீங்க வர மாட்டீங்களா?" என்று கண்களில் ஆர்வம் தெறிக்கக் கேட்டான்.


பாபிகிருஷ்ணாவின் அடிமனதில் நேத்ராவின் குடும்பத்தையும் குடும்ப நிலவரத்தையும் தெரிந்து கொள்ள ஆவல் இருப்பதை உணர்ந்த விபாட்சுவும், 


"என்ன? அவன் வாயவிட்டே கேட்டுட்டான். ரெண்டு பேருமே வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுற மாதிரித் தெரியலையே?" என்று இரு பெண்களின் கண்களையும் பார்த்தான். 


அதற்கு நேத்ராவும் சுபத்ராவும், "மூணு பசங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி இன்ட்ரோ பண்ணா, வீட்ல என்ன நினைப்பாங்க? நீங்க பசங்க. உங்களுக்குப் பிரச்சனை இல்லை. நாங்க ரெண்டு பேரும் பொம்பள பிள்ளைங்க. இல்லையா!" என்று ஒரே மாடுலேசனில் கேட்டனர். 


அதற்கு விபாட்சு, "நீங்க என்ன இன்னும் எண்பதுகளிலேயே இருக்கீங்களா? இது 2கே மா!! ஃபிரண்ட்னு சொன்னா புரிஞ்சுப்பாங்க." என்று கூறினான்.  


நேத்ராவிற்கும் விபாட்சுவைத் தனது வீட்டிற்குக் கூட்டிச் சென்று, அறிமுகப்படுத்த ஆசை எழ, ரகசிய புன்னகையுடன் சம்மதித்தாள். 


'அவன், அவளுடையவீட்டிற்குச் செல்வதை நினைத்ததுதான் நேத்ராவின் ரகசிய புன்னகையின் காரணம்,' என்று பாபி கிருஷ்ணாவும், கைலாஷும் நினைத்துக் கொண்டனர்.


கல்லூரிக்கு அருகிலேயே விபாட்சுவின் வீடு இருக்க, எல்லோரும் முதலில் அங்கு சென்றனர்.


வீடு என்று சொல்ல முடியாது மாளிகை என்று வேண்டுமானால் சொல்லலாம். 


வெளிப்புற கேட்டிலிருந்து கிட்டத்தட்ட கால் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தது அந்த அழகிய மாளிகை.


கேட்டுக்கு அருகே கூர்க்காவிற்கு என்று தனி இடம். 


இருபுறமும் சோலைபோல் மரம், செடி, கொடி வகைகள் சீராக வளர்க்கப்பட்டிருக்க.


ஆங்காங்கே வண்ண வண்ண பூக்களும், காய்களும் கனிகளும் கண்ணுக்கு விருந்தளிப்பதாய் இருந்தது.


தென்புற சோலையின் நடுவில் செயற்கை நீரூற்று.


இந்த இடத்தில் நீரூற்று வரச் சாத்தியமில்லை என்பதால்மட்டும்தான் அதைச் செயற்கையாக அமைக்கப்பட்டது எனச் சொல்ல முடியும். 


ஏனென்றால் எங்கிருந்தோ சிறு பாறைகளை எடுத்து வந்து முறையாக அடக்கி, அவற்றினூடே சில செடி கொடி வகைகளை வளர்த்துப் படரவிட்டு, அந்தப் பாறைகளின் வழியாக வடிந்த தண்ணீர், கீழே ஒரு சிறு குட்டை போல் சேர்ந்திருப்பது போன்ற ஒரு தோற்றம். இயற்கையாகவே அந்த இடத்தில் நீரூற்று இருப்பதுபோல் தோன்றியது.


அந்தச் சின்னக் குட்டையிலும் தாமரைகள் வளர்ந்திருந்தன.  அதில் இரண்டு வாத்துக்களும் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. 


அவை போக, சில பறவைகள் நீருக்காகவோ அந்த இடத்தின் சூழ்நிலையில் ஈர்க்கப்பட்டோ அந்தக் குட்டையைச் சுற்றி இருந்த சிறு தடுப்புத் திட்டின் மேல் அமர்ந்துகொண்டு தண்ணிர் குடித்துக் கொண்டிருந்தன.



இரு பக்க சோலையின் நடுவில் கான்கிரீட் தட்டுஓடுகளால் ஆன பாதை போய்க் கொண்டிருந்தது. 


ஒரு வழியாக அனைத்தையும் ரசித்தவாறு அவரவர் இருசக்கர வாகனங்களில் வீட்டின் போர்டிகோவில் வண்டியை நிறுத்த,


ஒரு வேலைக்காரன் ஓடி வந்து அனைவரின் சாவிகளையும் வாங்கிக்கொண்டு, "நீங்க உள்ளே போங்க! நான் வண்டியை எடுத்து வைக்கிறேன்." என்று மாறாத புன்னகையுடன் கூறினான்.


வெளிப்புற கேட்டிலிருந்து பரந்து விரிந்த சோலையின் அழகையும், அழகிய நீரூற்றையும், பார்த்து மிரண்டு, போர்டிகோவரை வந்ததிலேயே சுபத்திராவிற்குக் கண்ணைக் கட்டியது.


மாளிகையின் முன்புறத் தோற்றம் பார்த்து அரண்டே விட்டாள்.


மெல்ல நேத்ராவின் கைகளைப் பற்றி, "வா! நம்ம வீட்டுக்குப் போகலாம்!" என்று குரல் கூட வெளியே வராமல் காற்றோடு கலந்து கூற, 


"ஏன்?" என்பது போல் பார்த்தாள் நேத்ரா. 


கண்களால் அந்த மாளிகையை ஒருவித பயத்துடன் பார்த்த சுபத்ரா, "நம்ம வீட்டுக்குப் போயிருவோமே?" என்று கெஞ்சுவதுபோல் கேட்க,


சுபத்ராவின் பயம் புரிந்த நேத்ரா, "இது நம்ம விபாவோட வீடு சுபா! இங்க வரதுக்கு உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இல்ல பயம்?!!" என்று ஆச்சரியமாகக் கேட்க, 


"ஒரு மாதிரி மிரட்டல?" என்று சுபத்ரா கேட்டாள்.


"நீயே சொல்லு. இந்தப் பரமக்குடியில் இவ்வளவு பெரிய வீடு! அதுல இவ்வளவு பெரிய சோலை இருக்கும்னு கனவிலயாவது நம்ம நினைச்சுப் பார்த்திருப்போமா? நம்மளும் ஒன்னும் ஒண்டுக்குடித்தனத்தில் வாழல. ஆயிரத்து நானூறு சதுரடி வீட்டில் தான் இருக்கோம், இல்லன்னு சொல்லல. என்ன பெயருக்கு ஒரு சின்னத் தோட்டம்…" என்று கூறியும் சுபத்ராவின் கரங்கள், நேத்ராவின் கையைப் பிடித்த பிடி இன்னும் இறுக,


"நீயே நினைச்சுப் பாரு. விபா இல்லாம இந்த வீட்டுக்குள்ள நம்மனால வர முடியுமா? இந்த மாதிரி வீடுகள் எப்படித்தான் இருக்குன்னு பார்ப்போமே? உனக்கு இந்த வீட்டைப் பார்க்க ஆசையா இல்ல? எவ்ளோ அழகா இருக்கு பாரு!!  ரசிச்சு பாரு சுபா! அழகான ஒரு விஷயத்தை ரசிக்கிறதுக்கு மனசு மட்டும் போதும். பயம் தேவையில்ல." என்று சிரித்தவாறு நேத்ரா கூற,


அவர்களையும் உரையாடலையும் கேட்டவரே வந்த விபா, "என்ன ஆச்சு? என்று கேட்டான். 


"இல்ல… நா… நா… நாங்க எ...எ.‌.. எங்க வீட்டுக்குப் போறோம்!" என்றாள் சுபத்ரா.


'வாயைத் திறந்தால், அலை ஓசைபோல் வார்த்தைகளால் ஓயாது அடிக்கும் சுபத்ராவா இது?' இன்று ஆச்சரியப்பட்டுப் பார்த்த விபாட்சு,


அவள் கண்களில் இருந்த அலைப்புறுதலும், லேசாகக் கலங்கிய கண்களும், நேத்ராவின் கையை இறுகப்பற்றி இருந்த விதமும் அவளுடைய மனதை வெளிப்படுத்த,


முதன்முதலாக விபாவிற்குத் தன்னுடைய வீடு பயமுறுத்தியது.


இதுவரை அவன் வீட்டிற்கு அழைத்து வந்த பெண்களின் கண்களில் இருந்த பேராசை, அவனுக்குக் கர்வத்தையே கொடுத்திருந்தது.


முதல் முறையாக, நேத்ராவின் கண்களில் தெரிந்த ரசனையும், சுபாவின் கண்களில் தெரிந்த பயமும் இரு பெண்களின் மீது பெரிய மரியாதையை உருவாக்கினாலும்,


"இவள் ஏன் இப்படிப் பயப்படுகிறாள்? எட்டாத உயரம் என்று நினைக்கிறாளோ? தப்பு செஞ்சிட்டோமோ? இவள இப்பவேக் கூட்டிட்டு வந்திருக்கக் கூடாதா?" என்று நினைத்து வருந்திய விபாட்சுவின் தோளில் கை வைத்த பாபி கிருஷ்ணா, 


சுபத்ராவிடம், "பிரண்ட்ஸ்க்குள்ள ஏற்றத்தாழ்வு கிடையாது சுபா! அத எங்களோட பேரன்ட்ஸும் புரிஞ்சுப்பாங்க. நீங்க இன்னைக்குத் தான முதல்தடவையா விபா வீட்டுக்கு வர்றீங்க. ஆனா நானும் கைலாஷும் இத்தனை வருஷ நட்புல எத்தனை தடவை இந்த வீட்டுக்கு வந்து இருப்போம் தெரியுமா?"


"..." 


"இங்க இருக்கிற வேலைக்காரங்க கூடச்  சின்னதா முகம் சுழிக்கிறது கிடையாது. இப்போ நம்ம வண்டிச் சாவியை வாங்கினாரே மூர்த்தி அண்ணே அவர் நம்மள அன்பா பார்த்துச் சிரிக்கத்தான செஞ்சாரு?" என்று பாபி கிருஷ்ணா கேட்டதும்,


"ஆமாம்" என்பது போல் பார்த்தாள் சுபத்ரா.


"நம்ம விபாவோட அப்பா அம்மா அவ்வளவு நல்லவங்க. நீங்க எல்லாம் என் வீட்டுக்கு வரலாமா? அப்படிங்கற மாதிரி, கர்வமா ஒரு பார்வை பார்த்தது கிடையாது. அப்படியொரு மோசமான உணர்வ எங்களுக்கு ஏற்படுத்தி இருந்தா, இவ்வளவு இயல்பா நாங்க இங்க வந்திருப்போமா சொல்லு?" என்றவனை,


 "அப்படியா?" என்பது போல் பார்த்தாள்.


"நாங்களும் உன்ன மாதிரி மிடில் கிளாஸ்தான் சுபா." என்று நல்ல நண்பனாகக் கூறி, 


"வா!" என்று சொல்லி உள்ளே அழைக்க, 


பாபிகிருஷ்ணாவின் வார்த்தைகள் சுபத்ராவிற்கு, பயத்தைப் போக்கவில்லை என்றாலும், 


சிறு தைரியத்தைக் கொடுத்து இருந்தது.


ஆனால் சுபத்திரவால் விபாவை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை. 


'சரி! நேத்ரா சொன்ன மாதிரி, இவ்வளவு அழகிய மாளிகையைப் பார்க்கிறதுக்கு வந்ததாக நினைச்சுக்குவோம்!" என்று எண்ணியபடியே வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்தாள்.


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️






Post a Comment

0 Comments