உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟11
பரமக்குடி கண் ஆஸ்பத்திரியில் மருத்துவர் தேவியின் கண்களைப் பரிசோதித்து விட்டு,
"ஒன்னும் பிரச்சனை இல்லம்மா… நான் குடுக்கிற ட்ராப்ஸ்ச, கண்ணுல சிவந்துருக்கிறதும், எரிச்சலும் அடங்குறவரைத் தொடர்ந்து போடுங்க… ஆனா இந்த மாதிரி அடுத்து நடக்காமப் பார்த்துக்குங்க. சரியா?" என்று கூறி அனுப்பினார்.
கண்ணில் சொட்டு மருந்து போடப்போட ஒரே நாளில் கண்எரிச்சல் அடங்கி, கண்களும் பழைய நிறத்துக்குத் திரும்பியது.
அடுத்தநாள் அலுவலகத்திற்குச் செல்வதற்கான உடைகளை இரவு எட்டுமணிக்கு இஸ்த்திரி செய்துகொண்டிருந்தாள் தேவி.
ஜன்னலோரம் இருந்த டேபிளில் நின்றுகொண்டு இஸ்த்திரி போட்டவளின் மீது இரவுநேர ஊதக்காற்று இதமாக மோத,
அதன் சிலிர்ப்பில் உடல் புல்லரித்தவளுக்கு, ஜன்னலோரக் காற்றோடு, தேனிசைப் பாடல்களையும் கேட்டவாறு இஸ்த்திரி போட ஆசை வந்து வானொலிப் பெட்டியை உயிர்ப்பித்தாள்.
வானொலிப் பெட்டியில் ஹலோ எஃப்எம் இரவு நேரத்தின் ஏகாந்தத்தைக் கலைக்காவண்ணம் மெல்லிசைப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.
திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்துவிடு
காதலா… என் காதலா… என் காதலா…
என்று பாடவும்,
"ப்ச்சு இது வேற" என்று சலித்தவள், எழுந்து சூரியன் எஃப்எம் க்கு மாற்றிவிட்டு மீண்டும் இஸ்த்திரி செய்ய,
என் நெஞ்சிலே இனி
ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான்
தத்துப் பிள்ளை
என் காதலி...
உன்போல என்னாசை
தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி
"கடவுளே! ஏன் இன்னைக்குன்னு இப்படிப் பாடிக்கிட்டிருக்கு." என்று
மதுரை எஃப்எம் க்கு மாற்ற,
நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒன்னாச்சு
நம்ம யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு
"ம்ஹும்… இது சரிவராது…" என்று
ஆல் இந்தியா ரேடியோவிற்கு மாற்றிவிட்டு, "நீயாவது ஒழுங்கா பாடேன்." என்று கூறும்போதே,
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள்மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்…
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
"அ…அ…அ…வேற பாட்டே போடமாட்டான்களா? ராத்திரி ஆயிட்டாலே அழ ஆரம்பிச்சுடுறானுங்க… ச்சை" என்று எரிச்சலாகி ரேடியோவை அணைத்துவிட்டு இஸ்த்திரி போடத் திரும்புகையில்,
"இந்தாடா சொட்டு மருந்து… மறந்துடாம போட்டுக்க…" என்று கூறி சொட்டுமருந்து டப்பாவை அம்மா தேவியின் கையில் கொடுக்க,
அதை வாங்கி ஜன்னலோரத் திட்டில் தேவி வைத்தாள்.
"சரி! அம்மா போய்ப் படுக்கவா?" என்று அம்மா கேட்கும் வேளையில் தேவியும் தனது தாயைப் பார்த்துச் சிரித்தவண்ணம் இஸ்த்திரி போட,
ஜன்னல் வழியாக உள்ளே வந்த ஒரு கரம் தேவியின் சொட்டு மருந்தைத் தொட்டு எடுக்க முயன்றது.
படுக்கையைச் சரிசெய்தகொண்டே, "அந்த மருந்தக்குடு… நீ அப்படியே வச்சுட்டு மறந்துடுவ. நான், நம்ம தலை மாட்டுல வச்சுக்கிறேன்." என்று அம்மா கூறவும்,
சொட்டுமருந்தை எடுக்கவந்த கை, சட்டென்று கையை வெளியே இழுத்துக்கொண்டது.
தேவி மருந்து டப்பாவை எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள்.
கட்டிலை ஒட்டியிருந்த ஜன்னலில் சொட்டு மருந்தை வைத்துவிட்டு, அதன் அருகே இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தவர்,
"ஏன்டா? நல்ல நல்ல பாட்டாத்தான பாடுச்சு… ரேடியோவப் போடு! பாட்டு கேட்டுக்கிட்டே படுத்தா சுகமா தூக்கம் வரும்" என்றதும்,
"யம்மா… நீங்க வேற ஏம்மா?"
என்று தாயிற்கும் மகளுக்கும் பாடல்கள்பற்றிய ஊடல் நடந்துகொண்டிருக்க,
ஜன்னல் வழியாக அதே கை உள்ளே வந்து, அங்கே இருந்த சொட்டு மருந்து டப்பாவை எடுத்துக் கொண்டு, அதே போன்ற வேறொரு டப்பாவை வைத்தது.
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
நண்பர்கள் மூவருடன் நேத்ராவும், சுபத்ராவும் பெரிய வரவேற்பறைக்குள் செல்லவும்,
பணிப்பெண் வந்து நால்வருக்கும் பழச்சாறு கொடுத்துவிட்டு,
"வேறெதுவும் கொண்டு வரவா தம்பி?" என்று ஐவரையும் பார்த்துச் சிரித்தபடி விபாட்சுவிடம் கேட்க,
"சாப்பிடுற மாதிரி எதாவது கொண்டு வாங்கக்கா" என்றான் கைலாஷ்.
"ஸ்னாக்ஸா? டிபன்னா?"
"ஸ்னாக்ஸே கொண்டு வாங்க" என்று பாபி கிருஷ்ணா கூறும்போதே,
"ஃப்ரூட் சாலட் சாப்பிடலாமா கய்ஸ்?" என்று உற்சாகக் குரல் கேட்டு ஐவரும் குரல் வந்த திசையைப் பார்க்க, மாடிப்படிகளிலிருந்து இரண்டு இரண்டு படிகளாகத் தாவி இறங்கி வந்துகொண்டிருந்தார் நாற்பதுகளிலிருந்த ஒருவர்.
அவரைப் பார்த்ததும் நண்பர்கள் மூவரும் ஓடிச்சென்று அவர் அருகில் நின்று கொண்டு, "ஹாய் ப்பா! என்ன ஆச்சரியம்? வீட்ல இருக்கீங்க! என்று கோரஸாகக் கேட்டனர்.
"சிம்பிள்! இன்னைக்கு எப்படியும் நீங்க ஃபங்ஷன் முடிஞ்சதும் நம்ம வீட்டுக்கு வருவீங்கன்னு தெரியும். அதான். பசங்களோட சேர்ந்து விளையாடி ரொம்ப நாளாச்சு இல்லையா? சோ, உங்களுக்கு முன்னாடியே வந்துட்டேன்" என்று குஷியாகவும் துள்ளலாகவும் பேசியவர்,
நேத்ராவையும் சுபத்ராவையும் பார்த்து, "நம் வீட்டுக்குப் புதுசா இரண்டு தேவதைகள் வந்திருக்காங்க. அப்பாவுக்கு இன்ட்ரோ பண்ண மாட்டீங்களா?" என்று மூவரையும் மாறி மாறிப் பார்த்துக் கேட்டார்.
அவர் பேச்சில் மட்டுமல்ல நிற்கும்போதுகூட ஒரு துள்ளல் இருப்பதைக் கண்டதும், அவரைப் பார்த்துக்கொண்டாருந்த பெண்களுக்கும் அவருடன் பழகுவது எளிதாக இருக்கும் என்று தோன்ற,
அவரை நோக்கி சுபத்ராவையும் இழுத்துக்கொண்டு சென்ற நேத்ரா,
"ஹாய் பேபி! நான் நேத்ரா, இவ சுபத்ரா. நாங்க ஃபர்ஸ்ட் இயர் டூரிசம் மேனேஜ்மென்ட்." என்று அறிமுகப்படுத்திக் கொள்ள,
"வெல்கம் மை ஸ்வீட் பேபிஸ்… நான் கார்த்திக். விபாவோட" என்று கார்த்திக் முடிக்கும் முன்பே,
"அது அப்போ!" என்று குறும்பாக இடைமறித்த நேத்ராவிடம் போலியான அதிர்ச்சியைக் காட்டி,
"வாட்? இப்போ?!!" எனத் தோள்களைக் குலுக்கிக் கேட்க,
"மை பாய் பெஸ்ட்டி"
"வாவ்… சூப்பர், சூப்பர்." என்று குஷியானவர்,
"பிபிஏ ஃபர்ஸ்ட் இயர்ரும், எம்பிஏ ஃபைனல் இயர்ரும் எப்டி ஃபிரண்ட்ஸ் ஆனோம்னு கேட்கமாட்டீங்களா பேபி?" என்ற நேத்ராவிடம்,
"நீயும் நானும் ஃபிரண்ட்ஸ் ஆன மாதிரிதான்… இதெல்லாம் ஒரு கேள்வியா பேபி?" என்று கூறிய கார்த்திக்,
"என்னோட கேர்ள் பெஸ்டீஸ்க்கு என் கேர்ள் பிரண்ட் ஐ இன்ட்ரோ பண்றேன் வாங்க" என்று கூறி,
சுவரில் அழகுற மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று,
மரம்போல் வடிவமைத்திருந்த மரச் சட்டத்தில் கலைநயத்துடன் பொருத்தப்பட்டிருந்த புகைப்படங்களுக்கு நடுவில், பெரிய அளவில் இருந்த, திருமணமான புதிதில் கார்த்திக்கும் அவரது மனைவியும் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படத்தைக் காட்டி,
"இவதான் என் தேவதை! எப்படி இருக்கா?" என்று கேட்க,
"ம்ம்ம்" என்று, கண்களை விரித்து, புருவங்களைத்தூக்கி, இதழ்களைக் கீழ்நோக்கி வளைத்து, வலது கையின் ஆள்காட்டி விரலால், பெருவிரலைத் தொட்டுக்கொண்டு, மற்ற மூன்று விரல்களை நேராக நீட்டி, சின் முத்ரா காட்டி, சிரித்ததும்.
"வெரி லவ்வபுள் ஏஞ்சல்" என்று கூறிவிட்டு,
மாடிப்படியை நோக்கிக் கார்த்திக் திரும்ப,
படிகளின் முடிவில் அழகான, மங்கலகரமான பெண், மெல்லிய புன்னகையுடன், இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளித்து விடுமோ என்பதுபோல் இறங்கிக் கொண்டிருந்தார்.
பார்வையில், சிரிப்பில், நடையில்கூட கார்த்திக்கிற்கு அப்படியே நேரெதிராக இருந்தார் மனைவி.
"டார்லிங் இவங்க மை கேர்ள் பெஸ்ட்டீஸ்… நேத்ரா, சுபத்ரா." என்று தன் மனைவியிடம் அறிமுகப்படுத்திவிட்டு,
"ஷி ஈஸ் மை ஏஞ்சல்…" என்று தோழிகளிடம் தன் மனைவியின் பெயரைச் சொல்லும்முன்,
"ராதா?" என்று நேத்ரா கேட்க,
"ஹேய்… நாட்டி கேர்ள்!" என்று கார்த்திக் சிரிக்க,
"கௌதமி" என்று குரலில் கூட இவ்வளவு சாந்தமாகப் புன்னகை ததும்பப் பேசமுடியுமா? என்று ஆச்சரியப்படுமளவு பேசினார் கார்த்திக்கின் மனைவி.
அதற்குள் ஃப்ருட் சாலட் வர,
"கமான், கமான், கமான்… இட்ஸ் மை ஃபேவரைட்." என்று கூறி கார்த்திக் முன்னே நடக்க, அவரைப் பின்தொடர்ந்தனர் அனைவரும்.
சுபத்ரா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை...
கார்த்திக்கும் கௌதமியும் பழகுவதில் மட்டுமல்ல… ஆடை அலங்காரத்தில் கூட மிகவும் எளிமையாக இருந்தனர்.
இந்த அளவிற்கு, ஏற்கனவே பழகிய நல்ல நண்பர்கள்போல் பழகுவார்கள் என்று சுபத்ரா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
'பாபி கிருஷ்ணா கூறியது ரொம்ப சரி.' என்று நினைத்தவாறு பாபி கிருஷ்ணாவைப் பார்த்து மிகமிக மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள்.
மகனுடைய நண்பர்களைத் தங்களுடைய நண்பர்களாக்கி இணைவது அவ்வளவு சாத்தியமில்லை…
கார்த்திக்கின் துள்ளல், குதூகலமான சிரிப்பு எதுவுமே செயற்கைத்தனமாக இல்லாமல், அவரது இயல்பே இதுதான் என்பது ஐயமின்றி உணரமுடிந்தது.
அதேபோல் வாடாத தாமரை போன்ற சிரித்தமுகம் கௌதமிக்கு.
கணவனுக்கும் மனைவிக்கும் இதழ்கள் மட்டுமல்ல கண்களுடன் முகமே மலர்ந்து சிரித்தது.
நண்பர்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று சொல்லாமல் சொன்னது அவர்கள் காட்டிய அன்பு.
"பேபி! நீ என்ன வந்ததிலிருந்து அமைதியா இருக்க?… ஆனா மண்டைக்குள்ள வண்டு ஓடுது போலயே… பாய் பெஸ்ட்டி வீட்டுக்கு வந்தமாதிரி இல்லாம, ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்குப் போனமாதிரி 'கம்'முன்னு உட்கார்ந்திருக்க? எனி ப்ராப்ளம்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டபடி சுபத்ராவின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவரிடம்,
ஒன்றுமில்லை என்பதுபோல் சுபத்ரா தலையசைக்க,
"இல்லையே… உன் அமைதிக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாம ல்ல உன் கண்கள் பேசுது" என்ற கார்த்திக்கிடம்,
"கரெக்டா சொன்னீங்கப்பா… ஆரம்பத்துல நாங்களும் இப்படித்தான் அமைதியின் சொரூபம்னு நெனச்சு ஏமாந்தோம்… ஆத்தா மகமாயி வாயத்திறந்தா…" என்று ஏதோ சொல்லப்போன பாபி கிருஷ்ணாவை
"த்ச்சூ…" என்றுவிட்டு, கார்த்திக்கிடம் நேத்ரா,
"அப்படியில்ல பேபி. சுபாவோட நேச்சரே இதுதான்… கொஞ்சம் பழகினபிறகுதான் பேசுவா." என்றதும்,
"அதுக்குப் பேரு பேசுறதில்லம்மா கௌண்ட்டர் குடுக்கிறது…" என்று நேத்ராவிடம் கூறிவும்,
"இன்ட்ரஸ்டிங்!!" என்ற
கார்த்திக்கைப் பார்த்து "அப்பா! வார்த்தைக்கு வார்த்தை கலாய்ச்சுக்கிட்டே இருப்பா ப்பா" என்று பாபி கிருஷ்ணா கூறவும்,
சட்டென்று அவனை நிமிர்ந்து ஒரு வெட்டும் பார்வைதான் பார்த்தாள் சுபத்ரா.
"வாவ் வாவ் என்ன ஒரு பார்வை? சான்சே இல்ல… மனுசன் வாய மூடிறனும். கரெக்டா பேபி?" என்று கார்த்திக் சுபத்ராவிடம் கேட்க,
அவரைப் பார்த்து சினேகமான புன்னகை ஒன்றை வீசினாள் சுபத்ரா.
இவ்வாறு ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டு பயங்கர அரட்டைக் கச்சேரியுடன் எல்லோரும் ஃப்ரூட் சாலட்டைக் காலி பண்ண,
கௌதமிக்குத் தன் மகன் விபாட்சுவின் அமைதி ஆச்சரியப்படுத்த, மகனை கவனித்தவருக்கு,
ஒரு விசயம் தெளிவாகப் புரிந்தது…
ஒவ்வொரு நொடியும் சுபத்ராவின் எண்ண ஓட்டத்தை அறிந்தவாறே அமர்ந்திருந்தான் விபாட்சு.
அதற்கான காரணம் சுபத்ராவின் முகத்திலும், தயங்கித் தயங்கிச் சிரித்த சிரிப்பிலும், கைகளைப் பிசைவதிலுமே தெரிந்தது… இன்னும் அவள் இந்த நட்பு வட்டத்துக்குள் வரமுடியாமல் தயங்கி நிற்கிறாள் என்று.
'எல்லா வீடுகள்லயும் போல, தன்னோட பிள்ளைகளின் ஃபிரண்ட்ஸ்சையும் பிள்ளைகளாக நடத்துவோம்னு நினைச்சிருப்பா, கார்த்திக் அடிக்கிற லூட்டில ஷாக் ஆகி நின்னுட்டா போலிருக்கு' என்று எண்ணி மனம் கனிந்த கௌதமி, விபாட்சுவைப் பார்க்க,
அவனோ, சுபத்ரா தனது தாய் தந்தையுடன் ஒட்டாமல், எல்லோரும் சிரித்துப் பேசுவதில்கூடக் கலந்துகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதைக் கண்டு,
'அப்பாவப் பார்த்ததும் மாறிடுவா ன்னு நினைச்சேன்… இவள இப்படியே விடுறது நல்லதில்லையே என்ன பண்ணலாம்?' என்று யோசித்தவன்,
'இவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முன்னாடி வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கக் கூடாது.' என்று கவலையோடு சுபத்ரா வைப் பார்த்தவனின் மனசாட்சி,
'அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சு என்ன பண்ணப்போற விபா? முதல்ல உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டியா?' என்று இடிக்க,
'அது… அது… அவ மனசுல என்னைய பத்தி… வந்து… நல்ல அபிப்பிராயம்?'
'இந்த வெங்கயம்லாம் இதுவரை பழகுன பொண்ணுங்கட்ட எதிர்பார்த்தியா என்ன?' என்று மனசாட்சி நக்கலடிக்க,
'அவங்கல்லாம்… ம்ம்… எனக்கு ஃபிரண்ட்ஸ் கூட இல்லையே? க்ளாஸ்மெட் தானே? அவங்க என்னைப் பத்தி என்ன நினச்சா எனக்கென்ன?'
'நேத்ரா உன் ஃபிரண்ட் தானே?' என்று மனசாட்சி கிடுக்கிப்பிடி போடவும்,
யோசனையுடன் நேத்ராவைப் பார்த்தான்.
நேத்ராவோ, சமீபத்தில் பார்த்த திரைப்படத்திலிருந்த மொக்க விசயங்களைக் கூறி கார்த்திக்குடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்க,
'பாரு… அவ எங்க வீட்டுல ஒருத்தியா மாறிட்டாளே?'
'நேத்ராவுக்கும் சுபத்ராவுக்கும் உன் மனசப் பொருத்தவர வித்தியாசமில்ல… அப்படியா?' என்ற மனசாட்சிக்கு,
"ஆமா!" என்று கூறவும் முடியாமல், "இல்லை!" என்று ஏன் தன்னால் கூறமுடியவில்லை என்பதும் விளங்காமல் உட்கார்ந்திருந்தவனின் முகம் குழம்பித் தவித்தது.
விபாட்சுவின் தவிப்பைக் கண்ட கௌதமி,
'சுபத்ராவின் ஒதுக்கம் விபாட்சுவை ஏன் இந்த அளவிற்கு பாதிக்கிறது?' என்று எண்ணியபடியே இருவரையும் அவ்வப்போது கவனித்தார்.
அத்தனை விளையாட்டான பேச்சிலும், கௌதமியை நெருங்கி,
"இப்படி வச்சகண் வாங்காம பார்க்காத டார்லிங்…" என்று ரொமாண்டிக்காகக் கார்த்திக் கூற,
சுபத்ரா வையும் விபாட்சுவையும் பார்ப்பதைத்தான் கார்த்திக் கூறுகிறார் என்று புரிந்தாலும்,
தன்னை கௌதமி சைட் அடித்ததைப் போல் பாவித்து, கார்த்திக் கூறிய விதத்தில் அனைவரும் சிரிக்க,
கௌதமி அழகாக வெட்கப்பட்டார்.
"ஹைய்யோ! எவ்வளவு அழகா வெட்கப்படுறாங்க? சோ… ஸ்வீட்… யூ ஆர் வெரி லக்கி பேபி" என்று நேத்ரா கார்த்திக்கிடம் கூற,
மீண்டும் சிரிப்பலை…
"அப்பா கேரம் விளையாடலாமா?" என்று கைலாஷ் கேட்க,
"அதெல்லாம் நீங்க வராதபோது நான் மட்டும் விளையாடுறது. நம்ம பேட்மிண்டன் விளையாடுவோமா?" என்றதும் அனைவரும் குஷியாகி,
வீட்டின் பின்புறம் இருந்த திடலுக்குச் சென்றனர்.
"என்ன நேத்ரா? பின்பக்கமும் இவ்ளோ பெரிய இடமிருக்கு! காம்பௌண்ட் சுவத்தையே காணோமே?" என்று கேட்ட சுபத்ராவை 'மறுபடியும் பயந்துவிட்டாளோ?' என்று நேத்ரா திரும்பிப் பார்க்க,
சுபத்ரா சுற்றிலும் பனை, தென்னை மாமரங்களோடு இரண்டு பசுவுடன் கூடிய கொட்டிலையும், நடுவே அமைந்த பெரிய மண் திடலையும், அதற்கடுத்து இருந்த நீச்சல்குளத்தையும் அதன் ஒரு பக்கம் இருந்த சிறிய அறைகளையும் கண்டு வியந்தாள்.
"பயங்கர மூளைப்பா" என்றவளிடம்,
"எனக்குத்தானே? தேங்க்யூ தேங்க்யூ" என்று சிரித்தமுகத்துடன் கூறிய விபாட்சுவைப் பார்த்தவள்,
"அப்பாடி நார்மலாயிட்டான்." என்று முகமலர்ந்து சிரித்தபடி,
"நான் இந்த பங்களாவை வடிவமச்ச கொத்தனாரைச் சொன்னேன்." என்று வாரியவளைப் பார்த்து விபாட்சு நிம்மதி பெருமூச்சுவிட,
"பேபி! கொத்தனார் திறமையானவர்தான்… ஆனா இந்த மாளிகையின் ஒவ்வோரு அமைப்பிலும் நான், அம்மா, விபாவோட கற்பனையாலதான் நெறஞ்சிருக்கு. சோ, நீ எங்களைத்தான் பாராட்டனும் பேபி" என்று கூறியவரிடம் வந்த பாபி கிருஷ்ணா,
"பார்த்தியா விபா? அப்பா எத்தனை தடவ பேபிங்கிறாங்க… இதே நான் சொன்னா எகிறி எகிறி சண்டை போடுறா." என்ற பாபி கிருஷ்ணா வைக் குறும்பாகப் பார்த்தபடி,
கார்த்திக்கின் கைகளோடு தன் கையைக் கோர்த்து, "அதுக்கெல்லாம் கொஞ்சமாவது நல்ல மூஞ்சி வேணும்." என்று கலாய்க்க,
"ஏன் எங்க மூஞ்சிக்கென்ன குறைச்சல்? காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க என்னை விரட்டுதுக தெரியுமா?"
"அதான் எனக்கேத் தெரியுமே?" என்று கலகலவெனச் சிரித்தவளை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த் விபாட்சு.
அவன் சுபத்ராவின் வாயாடித்தனத்தை ரசிப்பதைக் கண்ட கௌதமி,
சுபத்ராவும் தன் மகனைக் கடைக்கண்ணால் பார்த்தபடி குஷியாக வாயாடுவதையும்,
'அவள் என்னைப் பார்த்து, நான் அவளை கவினிக்கிறேன்னு தெரிஞ்சுதான் கடலை போடுகிறாள்.' என்று புரிந்துகொண்ட விபாட்சு சந்தோஷ நாணத்தால் குனிந்து புன்னகைப்பதையும் யோசனையுடன் கண்டாள்.
விபாட்சுவின் மனதில் இருப்பதை கௌதமியாவது சரியாகக் கணிப்பாரா?
தேவியின் மருந்தை மாற்றிவைத்தது யார்?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
0 Comments