உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟12


உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟12




இரவு படுக்கும்முன் சொட்டுமருந்தை கண்ணில் விட்டதும், தேவிக்குக் கண் எரியத்தொடங்கியது.


எரிச்சல் தாங்காமல், கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்ட, 


அருகில் படுத்திருந்த அம்மாவை எழுப்பலாமா? என்று யோசித்தவள், கனவுலகில் சஞ்சாரம் செய்ததால் சிரித்தபடி தூங்கிக் கொண்டிருந்த தங்கையை எழுப்பினாள்.


நல்ல கனவைப் பாதியில் கெடுத்து, தன்னை எழுப்பியது யார்? என்று எரிச்சலோடு பிரிக்கமுடியாமல் கண்களைப் பிரித்துப் பார்த்தாள் நந்திதா‌.


நந்திதாவின் கட்டிலில் அமர்ந்து கண்களைத் தொட்டுத் தொட்டு கையை உதறிக்ககொண்டிருந்த தேவியைக் கண்டதும்,


"ஏங்க்கா என்னை நிம்மதியா ஒரு நல்ல கனவுகாண விடமாட்டியா? நீதான் கல்யாணமும் பண்ணமாட்டேன்னு இருக்க. அட்லீஸ்ட் கனவுலயாவது என்னை ரொமான்ஸ் பண்ண விடுறியா? இப்பத்தான் என் ஹீரோ என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான். அது உனக்குப் பொறுக்கலையா? ம்ஹும்" என்று கொட்டாவி விட்டவளிடம்,


"சரி தூங்கு. நான் பார்த்துக்கிறேன்" என்று தேவி பரிதாபமாகக் கூற,


எழுந்தே உட்கார்ந்து விட்டாள் நந்திதா.


"அடிப்பாவி அக்கா‌... என்னைய தூங்குன்னு சொல்றதுக்கா என் ரொமான்ஸ்சைக் கெடுத்த?" என்று கொதித்தவளிடம்,


"என்ன ரொமான்ஸ்சு? யார் கெடுத்தா? என்ன? ரெண்டு எருமையும் தூங்காம உட்கார்ந்திருக்கீங்க? இதுகளும் தூங்காதுக, நம்மளயும் தூங்கவிடாதுக… ஒரு நல்ல கனவு… ம்ஹூம்…. கனவுல கூட நிம்மதியா இருக்கவிடுதுகள்ல்ல…" என்று புலம்பிக் கொண்டே விட்ட இடத்திலிருந்து கனவைத் தொடரப்போன அம்மாவைப் பார்த்து,


"என்னது உங்களுக்கும் நல்ல கனவா?" என்று நந்திதா அதிர,


"ஏன் அம்மா கனவு காணக்கூடாதா?" என்று அம்மாவிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த தேவியை நிஜமாகவே முறைத்தாள் நந்திதா.


"என்னைய எழுப்பி உட்காரவச்சுக் கதாகாலட்சேபமா பண்ற? உனக்கு மனசாட்சியே இல்லையாக்கா?" என்று கூறும்போதே,


"என்னன்னு தெரியலை நந்து… காலைல இருந்து ட்ராப்ஸ் போடுறேன் அப்பலாம் ஜில்லுன்னுதான் இருந்துச்சு… இப்ப ஊத்தவும் பயங்கரமா எரியுது."


"அக்க்காஆ… இன்னைக்குத்தானே ட்ரப்ஸ் போட ஆரம்பிசிருக்கோம். ரெண்டு நாளாவது தொடர்ந்து போட்டாத்தானே சரி ஆகும். ரெண்டு நாள் வீட்ல ரெஸ்ட் எடுன்னு சொல்ல நினைச்சேன்… நீ கேட்கவும் மாட்ட… அதோட நிக்காம, காலேஜுக்குத் தினமும் போறது எப்படின்னு எனக்குக் க்ளாஸ் எடுக்க ஆரப்பிச்சுடுவ…" என்று நந்திதா ஏதோ பேசும்போதே,


"ஏய் பன்னிமாடே… என் கண்ணு எரியிதுபிள்ள.‌‌.." என்று கத்தினாள் தேவி.


"ட்ராப்ஸ் வேலை செய்றதுனால எரியுமா இருக்கும்… கொஞ்சம் பொறுத்துட்டு தூங்கப் பாரு… நான் வேணும்னா ஐஸ் க்யூப் எடுத்துட்டு வர்றேன். ஒத்தடம் கொடுப்பமா?" என்று ஃபிரிட்ஜ்ஜை நோக்கி நடந்தபடி கேட்க,


"நீ டாக்டருக்குத்தான படிக்கிற? இதெல்லாம் தெரியாதா?" என்று வேகமாகக் கேட்ட தேவியை, ஒரு மார்க்கமாகப் பார்த்த நந்திதா,


"லூசாக்கா நீ? நான் படிக்கிறது சித்தவைத்தியம்… அதுலயும் பொது மருத்துவத்துல செகண்ட் இயர்தான் படிக்கிறேன்… ஆப்டோமெட்ரி யா படிக்கிறேன் கண் டாக்டர் ஆகுறதுக்கு? எனக்கென்ன தெரியும்?" என்றதும்,


"சரி… ஐஸ் க்யூப்பையே எடுத்துட்டு வா… கண்ணு இவ்ளோ நேரமாவா எரியும்?" என்று தேவி எரிச்சல் தாங்காமல் புலம்பும் போதே, 


ஐஸ்க்யூப்பை பருத்திதுணியில் மூடி, தேவியின் கண்களில் வைக்கவும்,


"ஆஆஆஆ" என்று நந்திதாவின் கையைத் தட்டிவிட்டவள்,


"ஸ்ஸ்ஸ் ஆஆஆ… எரியுது… அம்மா… பொறுக்க முடியல… வலிக்கிற அளவுக்கு எரியுது நந்து…" என்று அழ ஆரம்பிக்கவும், பயந்துபோன நந்திதா, தங்களது தாயை எழுப்ப,


அவர் எழுந்து "எங்கே கண்ணத்திற" என்று கூறி கண் இமைகளைப் பிரித்தவர் அதிர்ச்சியடைந்து, உடனே கைகளைக் கண்ணிலிருந்து எடுத்து விட்டார்.


அம்மா தேவியின் இமைகளைப் பிரிக்கும்போது, எட்டிப்பார்த்த நந்திதா, தேவியின் கண்கள் முழுவதும் ரெத்தமெனச் சிவந்திருக்க, அதைக் கண்ணீருடன் சேர்ந்து  பார்க்கயில் கண்களில் இரத்தம் தேங்கி நிற்பதைப் போல இருந்ததைக் கண்டு பயத்தில் கைகால் உதற, தொப்பெனக் கீழே விழுந்தாள்.


நந்திதா விழுந்ததில் மேலும் பதறிய அம்மா,


"ஏய் உனக்கென்ன ஆச்சு?" என்று பதறியவர்,


‘நந்திதா பயத்தினால் அதிர்ச்சி அடைந்திருக்கிறாள்’ என்று புரிந்ததும், “இதெல்லாம் டாக்டராகி….” என்று நொந்தபடி,


"நந்து. இது பயப்படுற நேரமில்ல… அக்காவுக்கு என்ன பண்ணலாம்? ஏன் இப்படிச் செவந்திருக்கு கண்ணு?" என்று நந்திதாவை உலுக்க,


தேவியின் வலி ஞாபகம் வந்ததும், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்த நந்திதா, 


“ஆஸ்பத்திக்குப் போயிடலாம்” என்று வேகமாகச் சொல்லிவிட்டு கைபேசியை எடுத்து.


பரமக்குடியில் இருக்கும் கண் ஆஸ்பத்திரிக்கு ஃபோன் பண்ணி விபரங்கள் கேட்டு, தெரு முனையில் இருந்த ஆட்டோ நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவை ஃபோன் பண்ணி வரச் சொல்லிவிட்டு வருவதற்குள்,


தேவியின் அம்மா, இதற்கு முன் டாக்டரிடம் பார்த்த மருந்துச் சீட்டுகளையும், பர்ஸ்சையும் எடுத்துக்கொண்டு, கணவரிடம் சொல்லிவிட்டு வரவும், 


மூவரும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினர்.


இரவு நேரமென்பதால் துணை மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர்.


தேவியின் கண்களைப் பரிசோதனை செய்த துணை மருத்துவருக்கு, 'எதானால் கண்கள் இப்படிச் சிவந்திருக்கிறது?' என்று கண்டுபிடிக்க முடியவில்லை.


"டாக்டர் எழுதிக் கொடுத்த ட்ராப்ஸ்சை எத்தனை தடவை போட்டீங்க?" என்று டாக்டர் கேட்க,


"நாலு மணிநேரத்துக்கு ஒரு தடவை" என்றாள் தேவி.


"பகல்ல ட்ராப்ஸ் போடும்போது இப்படி எரியலையா?"


"இல்ல டாக்டர்… அதவிட, சாயந்திரத்துக்கு மேல கண் எரிச்சல் சுத்தமா இல்ல… கண்ணும் வெள்ளைக் கலரில் இருந்துச்சு" என்று தேவி கூற,


"இப்ப ஊத்தும்போதுதான் எரிஞ்சுச்சா?" என்று கேட்டார்.


"ரொம்ப எரிஞ்சிருச்சு‌.‌.. மிளகாய்ப் பொடிய கண்ணுல போட்ட மாதிரி."


"மருந்து எதையும் மாத்தி ஊத்திட்டீங்களா?"


"இல்ல… இந்த மருந்தைத்தான் ஊத்தினோம்." என்று மருந்து டப்பாவை மருத்துவரிடம் கொடுக்கவும்,


வாங்கிப் பார்த்தவர், 


"ட்ராப்ஸ் விடும்போது வேற ஏதாவது காத்துல பறந்து வந்து கண்ணுல விழுந்துச்சா?"


"இல்ல"


"மறுபடியும் டூத் பேஸ்ட் கண்ணுல விழுந்துடுச்சா?"


"இல்ல"


"சரி… எரிச்சல் குறையிறதுக்கு மருந்து ஊத்தீருக்கேன். பெரிய டாக்டர் வந்து பார்க்கட்டும்" என்று கூறிவிட்டுச் சென்றவர்,


டாக்டருக்கு ஃபோன் செய்து விபரம் கூறினார்.


இரவிலேயே கிளம்பி மருத்துவமனைக்கு வந்த பெரிய டாக்டர், மீண்டும் தேவியின் கண்ணைப் பரிசோதனை செய்து,


"எதுனால இப்படி ஆச்சுன்னு தெரியல… நேத்து செக் பண்ணும்போதுகூடக் கண்ணுல நரம்பெல்லாம் நல்லாதான் இருந்துச்சு… மதுரைல இருக்கிற அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்குப் போங்க. அங்க எல்லாவித எக்யூப்மண்ட்ஸ்சும் இருக்கும்… அங்க இருக்கிற டாக்டருக்கு லெட்டர் தரேன். நம்ம ஹாஸ்பிடல் வேன்ல இப்பவே மதுரைக்குக் கிளம்புங்க." என்று அவசரமாக அனுப்பி வைக்கவும்,


"ஏன் டாக்டர்? ஏதாவது பிரச்சனையா? இப்பவே மதுரைக்குப் போகனுமா? நான் வீட்டுல போய் ட்ரெஸ்லாம் எடுத்துட்டு வந்துடுறவா?" என்று பயமும் பதற்றமுமாக தேவியின் அம்மா கேட்க,


"நீங்க உங்க பொண்ணக் கூட்டிட்டு இப்பவே கிளம்புங்க… வீட்டுல இருக்கிற வேற யாரையாவது தெவையானத எடுத்துட்டு மதுரைக்குப் போகச்சொல்லுங்க" என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.


அடுத்த ஒரு மணிநேரத்தில் மதுரை கண் மருத்துவமனையில் எமர்ஜென்சியாக அட்மிட் செய்து பரிசோதனை நடந்தது.


வெளியே அமர்ந்திருந்த அம்மாவிற்கு டாக்டர்களின் முகத்தின் இறுக்கமே பயத்தை உண்டாக்க, தெரிந்த, தெரியாத கடவுள்களையெல்லாம் வேண்ட ஆரம்பித்தார்.


அடுத்தநாளும் வேறு வேறு மருத்துவர்கள் வந்து, அதுவரை பரிசோதனை செய்திருந்த விபரங்கள் அடங்கிய கோப்பையும், கணினியையும் மாறி மாறிப் பார்ப்பதும், சம்மந்தப்பட்ட மருத்துவர்களுடன் ஆலோசனை செய்வதுமாய் இருந்தவர்கள், தேவியின் அம்மாவை அழைத்து,


"கண்ணுல டூத் பேஸ்ட் தான் பட்டுச்சா? வேற ஏதாவது?... நீங்க உண்மையைச் சொன்னாத்தான் சரியான ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்" என்றதும்,


"உங்கள்ட்ட நான் ஏன் சும்மா சொல்லப்போறேன் டாக்டர்? எம் பொண்ணுக்கு என்னாச்சு?"


"டுத் பேஸ்ட் பட்டா இந்த அளவுக்குக் கண் நரம்புகள் டேமேஜ் ஆயிருக்காது… ஒருவேளை டாக்டர் கொடுத்த ட்ராப்ஸ்சோட கை மருந்து, பாட்டி மருந்துன்னு எதையாவது கண்ணுல ஊத்திட்டீங்களா?" என்று கோபமாகக் கேட்க,


"டாக்டர் குடுத்த ட்ராப்ஸ் தவிர வேற எதயும் நாங்க கண்ணுல விடல" என்று தேவியின் அம்மா மற்றும் தேவி கூறியதை மருத்துவர்கள் நம்பவில்லை.


”நீங்க, டாக்டர் சொன்னபடி செஞ்சிருந்தா உங்க பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்காது… உங்க பொண்ணுக்குக் கண் தெரியக்கூடிய வாய்ப்பு ரொம்ம்பக் கம்மி. எல்லா முக்கியமான நரம்புகளும் ரொம்ப மோசமா பாதிக்கப் பட்டிருக்கு." என்று கூற,


"என்ன டாக்டர் இப்படிச் சொல்லிடீங்க? உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன். டாக்டர் ப்ளீஸ் எப்படியாவது சரிபண்ணிடுங்க… அவ சின்னக் குழந்தை… நாங்க உண்மையிலேயே தப்பா எதுவும் பண்ணல…" என்று தேவியின் அம்மா பதறித்துடித்து, கண்கலங்கிக் கூறவும்,


"அப்போ உங்களுக்கேத் தெரியாம ஏதோ கண்ணுல விழுந்திருக்கு. நாங்க முடிஞ்சவரை பார்க்கிறோம்." என்று நம்பிக்கை இல்லாமல் கூறிவிட்டு மருத்துவர் நடந்து சென்றார்.


ஐந்தாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய தேவிக்குக் கண் தெரியவில்லை…


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


இறகுப்பந்தாட்டம் எனும் பேட்மிண்டன் விளையாட கார்த்திக், கௌதமி, விபாட்சு, நேத்ரா, சுபத்ரா, பாபி கிருஷ்ணா, கைலாஷ் அனைவரும் திடலுக்கு வந்தனர்.


ஒரு பக்கத்துக்கு இருவராக விளையாடலாம் என்று முடிவு செய்தபின்னர்,


தோழிகளை ஒரு அணியாக விளையாட அழைக்க, 


"நீங்க இதுவர எப்பவும் எப்படி விளையாடுவீங்களோ? அப்படியே விளையாடுங்க‌… முதல்ல வேடிக்கை பார்க்கிறோம்… அப்புறம் நாங்க ஜாய்ன் பண்ணிக்கிறோம்." என்று தோழிகள் கூறவும்,


பாபி கிருஷ்ணாவும், விபாட்சுவும் ஒரு அணியாகவும்,


கார்த்திக்கும், கைலாஷும் மற்றொரு அணியாகவும் விளையாடினர்.


சுபத்ரா விபாட்சு அணிக்கும், நேத்ரா கார்த்திக் அணிக்கும் ஆதரவளிக்க, கௌதமி இரு அணிகளும் நன்றாக விளையாடும்போது, இரு அணிகளுக்குமே தோழிகளுடன் சேர்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்.


சுபத்ரா தன் அணிக்கு ஆதரவாகக் கைதட்டும் குஷியில் விபாட்சு அதிரடியாக விளையாட,


கார்த்திக்கே அசந்து போனார்… 'இவன் இந்த அளவுக்குப் பிரமாதமாக விளையாடக்கூடியவனா? அப்டீனா இதுநாள்வரை எனக்கு விட்டுக்கொடுத்தானா?' என்று யோசிக்க ஆரம்பித்தார். 


அடுத்தடுத்து விளையாட்டில் விறுவிறுப்புக் கூடிக்கொண்டே இருக்க, சுபத்ராவும், நேத்ராவும் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று, கமாண்ட் பண்ணிக் கொண்டும், கைதட்டியும் தங்கள் அணிக்கு ஊக்கமளித்தனர்.


இறுதியில் விபாட்சு அணி வெற்றி பெற, 


எல்லோரும் "ஹே…!" என்று ஆர்ப்பரிக்கும்போது சுபத்ரா மட்டும் அமைதியான புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள்.


அதை விபாட்சு யோசனையாகப் பார்க்க, 


அதைப்பார்த்த கார்த்திக் சுபத்ராவிடம்,


"என்ன பேபி? உன் டீம் ஜெயிடுச்சு… இதுவரை குதிச்சிக்கிட்டிருதவ, ஜெயிச்ச பின்னாடி அமைதியாயிட்ட?" என்று கேட்க,


"வெற்றிங்கிறது சந்தோசத்தை மட்டும்தான் பேபி குடுக்கனும்." அமைதியான புன்னகையுடன் கூறினாள்.


"எக்ஸாட்லி!" என்று கார்த்திக் தோள்களைக் குலுக்க,


"நான் இப்ப சந்தோஷத்துல குதிச்சா எனக்குப்பிடிச்ச ரெண்டு இதயம் காயப்படும்" என்று மூக்கையும் கண்களையும் சுருக்கியபடி கூறினாள்.


"அப்போ என் ஃபீலிங் பத்தி உனக்கு எதுவுமேயில்லையா?" என்று விபாட்சு வருந்த,  


"புரியல பேபி" என்று கார்த்திக் சுபத்ராவின் முகத்தைப் பார்க்க,


"நானும் நேத்ராவும் எப்பவுமே ஒரே டீம்க்குத்தான் சப்போர்ட் பண்ணுவோம். ஆனா இன்னைக்கு நான் ஒரு டீம்முக்கும், ஆப்போசிட் டீம்முக்கு நேத்ராவும் எதுக்காக என்கரேஜ் பண்ணினோம்?" என்று சுபத்ரா அர்த்தமுள்ள பார்வை பார்க்க,


"எதுக்காக பேபி?" என்று அறிந்துகொள்ளும் ஆவலுடன் கேட்டார் கார்த்திக்.


"நீங்களும், விபாவும் ஏன் பேபி ஒரே டீம்மா இல்ல…" என்று எதிர்கேள்வி கேட்டாள் அதே பார்வையுடன்.


"அது அது வந்து" என்று சிரித்துக்கொண்டே சிறு தலையசைப்புடன் பசங்களைக் கார்த்திக் பார்க்க,


"இது தெரியாதா? எங்களுக்குள்ள நல்ல ஃப்ரண்ட்ஷிப்  ஃபீல் மட்டும் இருக்கனும்னுதான்" என்ற கைலாஷைப் பார்த்து சுபத்ரா சிரித்துவிட்டு,


"அதே மாதிரிதான் எனக்கு உங்க நாலுபேரோட வெற்றியும் முக்கியம். ஐ மீன் உங்க நாலுபேரோட நட்பும் வேணும்."


"ஓஓ… ஓஹோன்னானாம். அதாவது உங்க டீம்மோட வெற்றிய நீங்க பெரிசா காட்டினா, அப்பாவும், கைலாஷும் வருத்தப்படுவாங்க‌. அதானே? ஹேய்… நாங்க ஜெயிச்சாதான் அப்பா ரொம்ப சந்தோசப்படுவார்." என்று பாபி கிருஷ்ணா சிரிக்க,


சுபத்ராவைப் ப்ரியமுடன் பார்த்தார் கார்த்திக்.


"அப்பா… இதுல இன்னொரு விசயமும் இருக்கு." என்று பாபி கிருஷ்ணா கூற,


எல்லோருமே சுபத்ராவை "அப்படியா?" என்பது போல் பார்க்க,


கண்களில் ஆமோதிப்புடன் இதழ்களை மடித்து சுபத்ரா சிரித்தவிதமே, பாபி கிருஷ்ணா கூறியது நிஜமென்று பறைசாட்டியது.


“அது என்ன?” என்று பாபி கிருஷ்ணாவிடம் கார்த்திக் கேட்க,


"ரொம்ப சிம்பிள் ப்பா… நேத்ராவொட டீம் ஜெயிக்காதபோது இவ சந்தோஷமா சிரிச்சா, நேத்ரா மனசும் நோஓஓஓகுமாம்" என்று சிரித்த விபாட்சுவை,


'சுபா சந்தோசமா சிரிக்கிறது இருக்கட்டும். நீ எப்படா சிரிச்ச? இதுவரை மூஞ்சிய தூஊஊக்கி வச்சிருந்த?'' என்பதுபோலக் கார்த்திக்கும் ஃப்ரண்ட்ஸ்சும்  பார்க்க,


"விடுங்க விடுங்க… அதான் உங்களுக்குத் தேவைப்பட்ட ரீசன் கிடைச்சுடுச்சுல்ல? அடுத்த கேம்முக்கு போவோம்… ஓகே?!" என்று பேச்சைத் திசைதிருப்பிய விபாட்சுவை,


"ஓஓஓ… அந்த ரீசனைக் கேட்டுத்தான் ஐயா குஷியாயிட்டீங்களோ?" என்று அனைவரும் ஒரே குரலில் ராகமிழுக்க,


'தான் வெற்றி அடைந்திருக்கும்போது சுபத்ரா அதைக் கொண்டாடாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு வருந்திய விபாட்சு, நட்பில் சின்னக் காயம்கூட வந்துடக் கூடாதுகிறதுதான் அதற்குக் காரணம் என்று சுபத்ரா சொன்ன பிறகே சிரிக்கிறான்' என்று நினைத்துக் கலாய்க்க,


நேத்ராவோ,


'விபாவோட அணிக்கு ஆதரவாக நின்ன சுபா, விபாவோட வெற்றியைக் கொண்டாடாம இருந்ததுக்கு என் மனசு கஷ்டப்பட்டுடும்கிறதுதான் காரணம்னு சொன்னதும் விபாட்சு சந்தோஷப்படுகிறான்னா, அவனோட வெற்றிக் கொண்டாடத்தை விட, என் மனசு நோகக்கூடதுங்கிறதுதான் முக்கியம்னு நினைக்கிறான்னுதானே அர்த்தம்? அப்படினா அவன் என் ஃபீலிங்ஸ்தான் பெருசுன்னு நினைக்கிறான்.' என்று நினைத்து சந்தோஷமாக விபாட்சுவைப் பார்க்க, 


விபாட்சு, நேத்ராவைப் பார்த்துப் புருவங்களை ஏற்றி இறக்கி சிரிக்க,


'என் சந்தோஷம் தான் உன் சந்தோஷமா விபா? உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?' என்று நினைக்கும் போதே மனம் குதூகலிக்க, விபாட்சுவைப் பார்க்க ஆசை தூண்ட, மெல்ல நிமிர்ந்து பார்த்தவளை நாணம் தடுத்தது.


மனதின் படபடப்பை வெளியே யாரும் அறியா வண்ணம் தடுக்கப் பெரிய போராட்டமே நடத்தவேண்டியிருந்தது.


சுபத்ரா தன்னைக் கவனித்துவிடக்கூடாதே என்று, மெல்ல பக்கவாட்டில் நின்றிருந்த சுபத்ராவைப் பார்க்க, 


அவள் கார்த்திக்குடனும், பாபி கிருஷ்ணாவுடனும் வாயாடிக்கொண்டிருந்தாள்.


‘நல்லவேளை அவள் பார்க்கல. இல்லைனா “பணக்காரவங்க சமந்தம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு” அவளும் பயந்து, என்னையும் குழப்பிடுவாள்.’ என்று எண்ணிய நேத்ரா,


மெல்ல மூச்சை உள்ளிழுத்து, கொஞ்ச நேரம் பிடித்து வைத்து, மீண்டும் “உஷ் உஷ்” என்ற சப்தத்துடன் மூச்சுக் காற்றை வெளியே விட, 


மனம் கொஞ்சம் சமநிலைக்கு வந்தது. 


ஏனோ விபாட்சு முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்க மனம் துடித்தது. நேத்ராவிற்கே தன் மனநிலையை எண்ணி வியப்பாக இருந்தது. 


'விபாவோட முகத்தைத் தினமும்தானே பார்க்கிறேன். எப்போதும் இல்லாமல் இப்ப என்ன புதுவிதமான தத்தளிப்பு.' என்று தவிப்புடன்,

 

மீண்டும் விபாட்சுவின் முகத்தைப் பார்ப்பதற்குள் நாலுமுறை எச்சில் விழுங்கி,  ஏழுமுறை உதட்டை ஈரம் செய்து, லப்… டப் எனத் துடிக்கும் இதயம் "லப்டப்லப்டப்" எனக் கூட்ஸ் வண்டிபோல் துடிக்க, அதில் கை வைத்து சாந்தி பண்ண முயற்சித்து முடியாமல், படபடவென சிறகடிக்கும் இமைகளைக் கட்டுப்படுத்தி, கன்னம் சிவந்து காதுவரை சூடேற, 


'புன்னகையில் கூட நாணம் கலந்து இதழ்கள் துடிக்கக் கூடுமா?' என்று அதிர்ந்து, நட்பாய் புன்னகைக்க முயற்சித்தவாறு நிமர்ந்தாள்,


'இவள் படும்பாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த விபாட்சு இத்தனை ப்ரயத்தனமும் யாருக்காக?' என்று நினைத்துக் கண்களில் குறும்புடன் நேத்ராவின் முகத்தையே பார்த்திருக்க,


அதைக்கண்டதும், சட்டென்று தலையைக் கவிழ்த்தி, 'அம்மாடி மாட்டிக்கிட்டேனே! குறுகுறுன்னு என்னையே பார்த்துக்கிட்டு இருக்கானே! என் முகத்திலிருந்து எதையாவது கண்டுபிடிச்சிருப்பானோ?' என்று நினைத்தவளுக்குப் படபடப்பில் கையெல்லாம் நடுங்க,


அருகில் வந்தவன், மேலும் அவளை அவஸ்தைக்குள்ளாகும்படி  அவள் காதருகில் குனிந்து,


"விளையாடியது நாங்க… உனக்கு ஏன்மா மூச்சிறைக்குது?… சப்போர்ட் பண்றது எதிரணிக்கு… பார்வை இந்தப்பக்கமாவே இருக்கேன்னு அப்பவே நினைச்சேன்! கன்ட்ரோல் பண்ணு… அப்பா பார்த்தாரு உன் மனசுல மட்டுமில்ல… உன் மூளைக்குள்ளயும் என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சுடுவாரு…" என்று உணைர்வுகளை மேலும் தூண்டும் வகையில் ஹஸ்கி வாய்சில் கிசுகிசுக்க,


உலகத்தில் உள்ள அத்தனை இன்பமும் பூமழையாய் பொழிய, கண்கள் மூடித் தன் இதயத்துடிப்பின் இனிய இசையைக் கேட்டாள்.


அது "விபா… விபா…" என்று துடித்துக் கொண்டிருந்தது…


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


Post a Comment

0 Comments