உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟13

உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟13


நான்கு நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அழித்தும் தேவியின் கண் குணமாவதற்கான அறிகுறியே இல்லாமல் போக,


ஐந்தாம் நாள் காலை பரிசோதித்தபொழுது கண்கள் முழுவதும் பார்க்கும் திறனை இழந்துவிட்டதைப் புரிந்து கொண்ட மருத்துவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது…


மீண்டும் சிறப்பு மருத்துவர்கள் கூடி தேவியின் பரிசோதனை முடிவுகளை ஆராய… 


'ஏற்கனவே பற்பசையால், கண்கள் பலவீனமாக இருந்தநிலையில் ஏதோ ஒரு மோசமான பொருள் கண்களில் விழுந்திருக்க வேண்டும்' என்று அனுமானிக்க முடிந்ததே தவிர, 


'இதுதான் நிகழ்ந்திருக்கிறது' என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.


இருப்பினும் கடைசி முயற்சியாக தேவியின் அம்மாவை அழைத்து,


"நாங்க எதிர்பார்த்ததை விடக் கண்ணு முழுசா மோசமான நிலைக்கு வந்துருச்சு. இப்பவாவது சொட்டு மருந்து விடும்பொழுது கைமருந்து எதையும் கண்ணுல போட்டுட்டீங்களா?ன்னு சொன்னா வேறு ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம்." என்று டாக்டர் கேட்கவும், 


தேவியின் அம்மா பழைய பதிலையே கூறினார்கள். 


"நிஜமாகவே, பரமக்குடி டாக்டர் கொடுத்த ட்ராப்ஸ் தவிர வேறு எதையும் நாங்கள் போடல டாக்டர். ப்ளீஸ் நம்புங்க டாக்டர்! நீங்க இவ்வளவு தூரம் சொல்லும்போது என் பொண்ணோட கண்ணு விசயத்துல நான் பொய் சொல்லுவனா? எனக்கு ரொம்ப பயமாயிருக்கே… கடவுளே! என் அடி வயிறெல்லாம் கலங்குதே… என் பொண்ணோட கண்ணைக் காப்பாத்து" என்று கதற, 


அந்தத் தாயின் பரிதவிப்பையும், உயிரே பிரிந்தது போன்று நின்ற அவரது நிலையையும் பார்த்து மருத்துவர்களால் வருத்தப்படத்தான் முடிந்ததே தவிர தேவியின் பார்வையைக் காப்பாற்றித் தர முடியவில்லை. 


வயதுப்பெண்ணின் பிற்கால வாழ்வை எண்ணி, இறுதியாக மீண்டும் மாலை வேளையில் தேவிக்குப் பரிசோதனை செய்து பார்த்தனர். 


'இனி ஒரு சதவீதம் கூடப் பார்வை திரும்ப வாய்ப்பில்லை!' என்று  அறிந்து,


தேவியின் அம்மாவை அழைத்து, "டூத் பேஸ்ட் பட்டதால் ஏற்கனவே கண்ணு பலவீனமா இருந்த சமயத்துல, கண்ணுல படக்கூடாத விஷத்தன்மை உடைய ஏதோ விழுந்திருக்கு." 


"டாக்டர் நாங்க நிஜமாவே கண்ணுல வேற எந்த மருந்துமே போடல." என்று தேவியின் அம்மா கூறவும்,


"இதுதான் எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு. உங்க டாக்டர் உங்களுக்குக் கொடுத்த ட்ராப்ஸ் கண்ணுக்கு நல்லது தான் செய்யும். ஓகே… ஏதோ, எங்கேயோ, தப்பு நடந்திருக்கு. ஆனா இப்ப உங்க பொண்ணோட கண்ணுல என்ன ஆயிருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் இப்ப நான் பேசிட்டு இருக்கேன்."


மருத்துவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நெஞ்சம் படபடக்க, கண்களில் பயத்துடன், "சொல்லுங்க டாக்டர்?' என்று கூறினார் தேவியின் அம்மா.


"நாம கண்ணால பார்க்கிற பொருளைப் பத்தின தகவல்களை மூளைக்கு அனுப்புறதுதான் பார்வை நரம்பு.  அந்தப் பார்வை நரம்பை கண் நீர் அழுத்த நோயானது பாதிச்சிருக்கு."


"அது என்ன நோய்? எதுனால இப்படி ஆச்சு?" என்று பயமும் குழப்பமுமாக தேவியின் அம்மா கேட்க,


"சொல்றேன்… சொல்றேன்… கண் நீர் அழுத்தத்துனால கண்ணுல ரொம்ப அழுத்தம் ஆகும்போது, படிப்படியா பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, பார்வையிழப்பு

ஏற்பட்டுடும். பார்வை பாதிக்கப்பட்டா முழுசா குணப்படுத்த முடியாது. எங்கனால முடிஞ்சவரை இப்பவும் முயற்சி செஞ்சோம். ஆனாலும் பார்வையத் திருப்பிக் கொண்டுவர முடியல. இருந்தாலும் ஒரு மூனு மாசம் கழிச்சு மறுபடியும் வாங்க. ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அதுக்குள்ள உங்க பொண்ணோட கண்ணுல வேற ஏதாவது விழுந்திருக்க வாய்ப்பு இருக்கான்னு வீட்டில் இருக்கிறவங்களோட கலந்து பேசிட்டு வாங்க." என்று கூறி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லி விட்டனர்.


ஐந்தாம்நாள் இரவு வீடு திரும்பியபோது தேவிக்குக் கண்கள் தெரியவில்லை.


வீடே சூன்யமானது. தேவியின் அப்பாவுக்காக மட்டுமே சமையல் நடந்தது… மூன்று பெண்களுமே, பேருக்கு ஏதோ சாப்பிட்டு, கிடைச்ச நேரத்தில் தூங்கி எழுந்தனர். யாருக்கும் எதிலுமே ஈடுபாடு இல்லாமல் போனது…


…என்று அன்றைய நினைவில் பேசிக்கொண்டிருந்த தேவியின் அம்மா கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருந்தது.


"அதான் இப்ப சரியாயிடுச்சுல்ல! அழுகாதீங்கம்மா…" என்ற தேற்ற முயற்சித்த செவிலிப்பெண்ணிடம்,


"இப்பவும் சந்தேகம்னுதான சிஸ்டர் சொல்லீருக்காங்க."


"நல்லதையே நினைப்போமே… அதுமட்டுமில்ல. நீங்க முயற்சி செஞ்சு கூட்டிவந்த சிங்கப்பூர் டாக்டர் ரொம்ப கைராசிக்காரராம்… அவருக்குப் பழய கால மருத்துவ முறைலாம் கைவந்த கலையாம். நிச்சயமா கண்ணு கிடைச்சுடும். கவலப்படாதீங்க" என்று ஆறுதலாகக் கூறிய செவிலிப் பெண்ணிடம்,


"கடைசி நம்பிக்கை சிஸ்டர் இது… அந்தப் புள்ள மட்டும் உதவலைனா எங்களுக்கு அந்த சிங்கப்பூர் டாக்டர எப்படித் தெரியும்? அந்தப்புள்ள காலம்பூரா நல்லா இருக்கட்டும்!" என்று கண்ணீர் மல்க ஆசீர்வதித்து விட்டு, தொடர்ந்தார்.


"சிங்கப்பூர் டாக்டர உங்களுக்கு அறிமுகப்படுத்தினவங்க உங்க சொந்தக்காராங்களா ம்மா?"


"இல்ல சிஸ்டர்… தேவியோட ஃபிரண்ட்டு…"


"ஓ… தேவிக்கு இப்படியாகி ஒரு வருசமிருக்கும்ல!"


"ஆமாம் சிஸ்டர்… ஒரு வருசமாயிடுச்சு… எங்களுக்கு நம்பிக்கையே அத்துப்போச்சு… பொம்பளப்பிள்ளைய இந்த நிலையில யாரு கட்டிக்குவா? நான் எத்தன காலத்துக்குப் பார்த்துக்க முடியும்னு கவலைப்பட்டே என் அரை ஆயுசு குறைஞ்சிருச்சு." என்று கண்ணீரைத் துடைத்தபடி தேவியின் அம்மா கூற,


"ரொம்பக் கஷ்டம்தான்ம்மா… அதோட தேவிக்கும் எதிர்காலத்த நெனச்சு, பயம் இருந்திருக்கும்." என்று தேவியைப் பார்த்தவாறு செவிலிப்பெண் வருத்தமாகக்  கூற,


"இல்ல சிஸ்டர்… இவ பயப்படல… அது ஒன்னுதான் என் மனசுக்குக் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்திருந்துச்சு. ஏன்னா தேவி முதல்ல ரெண்டு மாசம்தான் ஸ்தம்பிச்சு உட்கார்ந்திருந்தா. ஆனா அதுக்கடுத்து கண்ணு தெரியாதவங்க  எழுதிப்படிக்கப் பழகும் இடத்துக்குப் போயி கத்துக்கிட்டா. அடுத்து வேலைக்குப் போனா."


"சூப்பர் ம்மா…" என்று தேவியைப் பார்த்துப் பெருமிதமாக செவிலிப்பெண் கூற,


அதைக்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியாமல்,


"ம்ம்…" என்று சோர்வாகச் சொன்னவர், வெற்றுசுவரைப் பார்த்தபடி தொடர்ந்தார்.


"ஆமா… கண்ணு தெரியிறவங்களை விட இவ பெட்டரா எல்லா வேலையும் செஞ்சா. ஒரு தடவை, ஒரு இடத்தைக் கவனிச்சுட்டானா, அடுத்தத் தடவ அந்த இடத்தை ரொம்ப ஈஸியா கடந்துடுவா… இதுதான் லைஃப்… இனி இந்தக் கண்ணை வச்சுக்கிட்டு எப்படி பெட்டரா பெர்ஃபாம் பண்ணறதுன்னு யோசிச்சு அவளுடைய குறையை அசால்டா எடுத்துக்கிட்டதுதான் எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. ஆனா கல்யாணம் பண்ணிவைக்கனுமே?" என்று கண்களில் மரணபீதியுடன் செவிலிப்பெண்ணிடம் கேட்க,


"அது… புரியுது… இந்தக் காலத்துல அவ்வளவு நல்லவங்க எங்க இருக்காங்க?"


"ஆனா… அவ எனக்குத் தைரியம் சொன்னா சிஸ்டர். 'கல்யாணம்தான் வாழ்க்கையாம்மா? ஏன் என்னைக் கடைசிவரை என்னால பார்த்துக்க முடியாதா?'ன்னு எங்கிட்ட கேட்டப்ப மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தாலும், சரி! அவளுக்குன்னு ஒருத்தன் வர வரைக்கும் காத்திருந்தேன்." என்று விரக்தியான சிரிப்புடன் கூறிய தேவியின் அம்மாவிடம்,


"ஒரு வருஷமா இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க. சிங்கப்பூர் டாக்டர இன்ட்ரோ பண்ணிய தேவியோட ஃபிரண்டு அப்ப வரலையா?" என்று கேட்டார் செவிலிப்பெண்.


அதற்கு தேவி என்ன பதில் கூறினாள்?



❣️️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


விபாட்சு அணி வெற்றி பெற்றதும் அடுத்து விளையாட ஆயத்தமாயினர்.


அப்போது,


பாபி கிருஷ்ணா, கைலாஷின் காதைக் கடிக்க,


"அப்படி என்னடா ரகசியம் பேசுறீங்க?" என்றபடி அருகில் வந்தார் கார்த்திக்.


"சுபாவையும் நேத்ராவையும் ஒரு அணியாகவும், நம்மல்ல ரெண்டு பேர் ஒரு அணியாவும், விளையாட வேணாம் ப்பா…" 


"ஏன்டா?" என்று தோழிகளைப் பார்த்தபடி பாபி கிருஷ்ணாவிடம் கேட்டார்.


"ஒருவேளை அவங்க ரெண்டு பேரோட டீம் தோத்துட்டாங்கன்னா அழுதாலும் அழலாம்… வீண் மனக்கஷ்டம்…"


"அப்படி ஏன் நினைக்கிறீங்க அவங்க நம்மல விட அட்டகாசமாவும் விளையாடலாமே?" என்ற கார்த்திக்கிடம்,


"அவங்க ரெண்டு பேரும் எப்படி விளையாடுவாங்கன்னு நமக்குத் தெரியாதே? எதுக்கு ரிஸ்க்?"


"இது ஜஸ்ட் கேம்தானே பாபி?" என்று கார்த்திக் சிரிக்கவும்,


"பொதுவாவே, பெரும்பாலும் பெண்கள் தோத்துப் போயிட்டா அழுதுடுவாங்கல்ல ப்பா…  இதுல சுபா தொட்டாச்சிணுங்கி. ஒரு மாதிரி நினைச்சத சாதிக்கிற ரகம்" என்று கைலாஷும் கூற,


"அப்டீங்கிற?" என்று கார்த்திக் சுபத்ராவைப் பார்த்தபடி யோசிக்க,


"அதவிட, இதோட மறந்துட்டா பரவாயில்ல ப்பா… அடுத்த தடவ நம்ம வீட்டுக்கு அவங்களக் கூப்பிடும்போது, கில்ட்டியா ஃபீல் பண்ணிக்கிட்டு வரலைனு சொல்லிட்டா என்ன பண்றது?" என்று பாபி கிருஷ்ணா கேட்டதும்,


"யோசிக்கவே வேண்டாம்… என்ன செய்யலாம்? சொல்லுங்க." என்ற கார்த்திக்கிடம்,


வேறென்ன ரெண்டு பேரையும் எதிரெதிர் அணில சேர்த்துடுவோம்"


"அப்பவும் யாராவது ஒருத்தர் தோத்துத்தானே போவாங்க?" என்று சிரித்த கார்த்திக்கிடம்,


"அப்பா! அவங்களோட பலமே ரெண்டு பேரோட ஒற்றுமைதான்… அவங்க ரெண்டு பேருல ஒருத்தர் ஜெயிச்சாலும் ரெண்டு பேருமே சந்தோசப்படுவாங்க." 


"வாவ்!... சூப்பர்ல?" என்று ஆச்சரியமாகத் தோழிகளைப் பார்த்தவர்,


"இப்ப நீங்களும் வாங்க பேபி…" என்று கார்த்திக் மரநிழலில் நின்றுகொண்டிருந்த தோழிகளை அழைக்கவும்,


இருவரும் வந்து, ஒரே அணியாக நிற்க,


"ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து விளையாடுறதுல என்ன கிக் இருக்கு? வேற வேற டீம்மா இருந்தா ஆட்டம் செமயா இருக்கும்! எப்படி?" என்று கார்த்திக் புருவங்களை ஏற்றி இறக்கிக் கேட்டது, தோழிகளுக்கும் சரியானதாகப்பட எதிரெதிர் டீமில் விளையாடச் சம்மதித்தனர்.


முதன்முறையாக எதிரெதிரே நிற்பதை விதியும் பார்த்தது.


பேட்மிண்டன் விளையாடி முடிந்ததும் ஜூஸ் வர அனைவரும் திடலிலேயே அமர்ந்து பருகினர்.


"சரி வாங்கபா… இங்கேயே இவ்வளவு நேரமாயிடுச்சு. இனி மத்தவங்க வீட்டுக்குப் போயிட்டு, அவங்வங்க வீட்டுக்குப் போக மிட்நைட் ஆயிடும். வாங்க வாங்க" என்று அழைத்துக்கொண்டு எழுந்த சுபத்ராவிடம்,


"இன்னைக்கு நம்ம வீட்டிலேயே என்ஜாய் பண்ணலாம் பேபி… அடுத்தடுத்து வர்ற ஹாலிடே ல ஒவ்வொரு ஃபிரண்ட்ஸ் வீட்டுக்குப் போயிட்டா போச்சு" என்று கார்த்திக் கூறவும்,


யோசனையாக மற்றவர்களை சுபத்ரா பார்க்க, 


யாருக்குமே விபாட்சு வீட்டிலிருந்து கிளம்ப மனசே இல்லை.


"நமக்காவே இன்னைக்கு ஹோம் தியேட்டர்ல ஒரு கொரியன் காமடி மூவி வச்சிருக்கேன்…. அத பார்த்துட்டு, நைட் நம்ம வீட்லயே சாப்பிட்டுட்டு. எய்ட் ஓ க்ளாக்குக் கெல்லாம் அவங்கவங்க வீட்ல டிராப் பண்ணிடுறோம். ஓகே யா?" என்று கார்த்திக் கேட்கவும்,


சுபத்ரா தவிர மற்ற எல்லோரும் குஷியாய் சம்மதிக்க,


வேறு வழியின்றித் தானும் சம்மதித்தநோடு தன்னுடைய வீட்டிற்குத் தகவல் கொடுத்தாள் சுபத்ரா.


எல்லோரும் குளித்துவிட்டு வருவதற்குள் காபி டிபன் தயாராகி இருக்க,


ஹோம் தியேட்டடரில் அமர்ந்தனர்.


கார்த்திக் கொண்டு வந்த கொரியன் திரைப்படத்தின், ஆடியோ நல்ல நிலையில் இல்லாததால் அனைவரும் சேர்ந்து இளைய தளபதி நடிப்பில் வெளிவந்த  காவலன் திரைப்படத்தைப் பார்த்தனர்.


படத்தின் கதாநாயகன் பூமிநாதனிடம், மொபைல் ஃபோனில் உண்மையான பெயர் சொல்லாமல் கதாநாயகி மீரா பேச,


"நல்ல ஐடியா! இல்ல?" என்று சுபத்ராவிடம் கிசுகிசுத்தாள் நேத்ரா.


"ஏன்?... இந்தப் படம் ஏற்கனவே பார்த்திருக்கோம்ல?"


"அது பத்து வருசம் முன்னாடி பார்த்தது. நாம ஃபோர்த் படிச்சிருப்போமா? அப்ப என்னத்த ஃபீல் பண்ணீருப்போம்?" என்ற நேத்ராவின் கண்களில் தெரிந்த பாவனையில்,


'அச்சச்சோ… இவ மூஞ்சி ஏன் கன்னாபின்னானு ஆகுது? இவளுக்கு என்னாச்சு? நமக்குத் தெரியாம எவனையும் சைட் அடிக்கிறாளா என்ன?' என்று யோசித்தவள்,


"அடச்சீ! மொகத்த மாத்து… யாராவது பார்த்துட்டு, உனக்கு வயித்துக்குச் சரியில்லைன்னு நினைக்கப் போறாங்க." என்று, திரைப்படத்தில் மீரா கொஞ்சிப்பேச, பூமி நாதன் கெஞ்சுவதைப் பார்த்தபடியே கலாய்த்தாள்.


வேகமாக முகத்தைச் சாதாரணமாக மாற்றுவதற்கு நேத்ரா முயற்சி செய்தபடி சுபத்ரவை பார்த்துச் சிரித்தாள். 


அதைப் பார்த்து அதிர்ந்த சுபத்ரா, "இதுக்கு முன்னாடி இருந்த சிரிப்பே பரவால்ல." என்று மீண்டும் கலாய்க்க, 


"இப்ப அதுவா முக்கியம்? இந்த ஐடியா நல்லா இருக்கா? நல்லா இல்லையா?" என்று நேத்ரா தீவிரபாவனையில் கேட்டாள்.


"ஃபோர்த் ஸ்டாண்டர்டு படிச்சாலும், இந்தப் படத்தோட கதை, ஞாபகம் இருக்கு தானே?" என்று கேட்டாள் சுபத்ரா. 


"பக்காவா! எத்தனை தடவை பார்த்தோம்! நம்ம ரெண்டு பேரும் மட்டும் தனியாவே நாலு தடவ பார்த்தோமே! அப்புறம் பேரன்ட்ஸ் கூட வேற போனோம். அப்போ கதையை ஞாபகம் இல்லாம இருக்குமா?" 


"அப்புறம் ஏன்? படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயிலா?ன்ற மாதிரி, எந்த தைரியத்துல பேர் சொல்லாம போன் பண்ணிப் பேசணும்னு நினைக்கிறே? நீ பேசி அவன கவுத்தி வைக்க, வேற எவளாவது லவட்டிட்டு போயிடப் போறா." என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் சுபத்ரா. 


அதைக்கேட்டு அதிர்ந்த நேத்ரா, நிமிர்ந்து திரைப்படத்தில் மீராவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அவளது தோழி மாதுவைப் பார்த்துவிட்டு, மெதுவாகக் கண்களை மட்டும் திருப்பி விபாட்சுவைப் பார்த்தாள்.


'இல்லல்ல… அந்த மாதிரிப் பேர் சொல்லாம பேசுறதெல்லாம் சரிப்பட்டு வராது.' என்று முடிவெடுத்துத் திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.


திரைப்படத்தில், பூமிநாதன் தன்னுடன் ஃபோனில் பேசும் அம்முக்குட்டி என்று பொய்ப்பெயரில் பேசிய மீராவை சந்தித்து தனது காதலைச் சொல்ல ஆர்வமுடன் கிளம்பும்போது,


மீராவும், மாதுவும் குறுக்கே வந்து பேசும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.


"இல்ல… அவ என்னைப் பார்த்திருக்கா நான்தான் இன்னைக்குப் பொண்ணு பார்க்கப் போறேன்" என்று பூமிநாதன், மீராவிடமும், மாதுவிடமும் கூற,


விபாட்சு, 'எல்லோரும் சினிமா பார்க்கிறார்களா?' என்று ஒருமுறை பார்த்துவிட்டு,


தலையைக் கோதுவதுபோல் வலது பக்கம் அமர்ந்திருந்த சுபத்ராவைப் பார்த்தான்.


அவள் அந்தக் காட்சி ஏற்படுத்திய சந்தோஷத்தில் இமைதட்டாமல் திரையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


'இங்க வீட்டுக்குள்ள வந்தவுடனே, இவள் பயந்ததும் நான் நடுங்கிவிட்டேன். நல்லவேளை அப்பா, அம்மா பழுகும் விதத்தைப் பார்த்ததும் மாறிவிட்டாள்.' என்ற எண்ணம் மனதிற்கு அளவில்லா ஆனந்தத்தைத் தரவே,


"நானும் பொண்ணுதான் பார்க்கிறேன்" என்று கிசுகிசுப்பாகப் பேச,


"அதை உங்கப்பா பார்க்காதவரை நல்லது" என்றான் விபாட்சுவின் அருகில் அமர்ந்திருந்த கைலாஷ்.


"ஏன் அப்பா பார்த்தா என்ன? என் காதலுக்குத் தடையா சொல்லிடப்போறார்?" என்று ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்துவிட்டுக் கேட்டான்.


"காதல்தான்னு முடிவே பண்ணிட்டியா?" என்று மறுபக்கம் அமர்ந்திருந்த பாபி கிருஷ்ணா கேட்க,


"என் வரைக்கும் தெளிவாயிடுச்சு… என் மனசுல சுபா நர்த்தனமே புரியிறா"


"பாஆஆஆர்த்து… அவ மனசும் தெரியனும்தானே?"


"நிச்சயமா!"


"அப்போ அதுவரை அடக்கிவாசி"


"ஏன்"


"என்ன ஏன்? காலைல நம்ம வீட்டுக்கு வந்ததும் அவ நடந்துக்கிட்ட விதத்தப் பார்த்தேல்ல? இப்பதான் நம்மலோட சகஜமா உட்கார்ந்து இருக்கா… அதுக்குள்ள உள்ள புகுந்து எதையும் கெடுத்துடாத."


"அப்டீனா?"


"சுபா மனசுல என்ன இருக்குன்னு தெரிகிற வரைக்கும் உங்க அம்மா அப்பாவுக்கும் விசயம் தெரியாம இருக்கிறதுதான் நல்லது விபா"


ஆனால் விபாட்சுவின் உள்ளுணர்வோ, "நாளைக் கடத்தாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுபாவிடம் சொல்லிவிட வேண்டும்" என்று எச்சரித்தது.


'முதல்ல என் மனசுல அவ மேல இருக்குறது காதல்தானான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன். அப்புறம் அவ கிட்ட சொல்றேன்.' என்று தன் உள்ளுணர்வை அடக்கினான் விபாட்சு.


பல தருணங்களில் நம் உள்ளுணர்வு சொல்வதை நாம் கேட்டிருந்தால், பல விபரீதங்களிலிருந்து நாம் தப்பித்திருப்போம்.


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️




Post a Comment

0 Comments