உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟14


 உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟14


"ஒரு வருஷமா இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க. சிங்கப்பூர் டாக்டர இன்ட்ரோ பண்ணினாங்களே தேவியோட ஃபிரண்டு, அவங்க இவ்வளவு நாளா வரலையா?" என்று செவிலிப்பெண் கேட்டார்.


அதற்கு தேவி, "காலேஜ் முடிஞ்சுட்டா அவங்கவங்க லைஃப்ஐ பார்த்துப் போயிடுவோம் இல்லையா? அந்த மாதிரி தான் என் பிரண்டும் வேலை விஷயமா சிங்கப்பூர் போக வேண்டியது ஆயிடுச்சு சிஸ்டர்."


"இப்போ உலகமே கைக்குள்ள தானே தேவி? ஏன் நீங்க உங்க ஃபிரண்டுக்கு இந்த மாதிரி பிரச்சனைனு இன்பார்ம் பண்ணலை?" என்று ஆதங்கத்துடன் செவிலிபெண் கேட்க, 


"எனக்கு அவங்களோட கான்டாக்ட் நம்பர்ஸ், அட்ரஸ் எதுவும் தெரியல."


"அடக்கடவுளே! பின்ன எப்படி இப்போ வந்தாங்க இந்த ஃபிரண்ட்?" 


"என்னோட இன்னொரு ஃபிரண்ட் சிங்கப்பூர்ல இருக்கிறா, அவதான் இந்த ஃபிரண்ட்ஐ சிங்கப்பூர்லயே பார்த்து, இந்த மாதிரி எனக்குக் கண் அஃபெக்ட் ஆயிருக்கிறதா சொல்லி இருக்கா. இதுல ஆச்சரியம் என்னன்னா, அவளோடயும் எனக்கு இதுவரை கான்டக்ட் கிடையாது… அவளுக்கு எப்படி எனக்குக் கண்ணு தெரியாத விசயம் தெரிஞ்சுச்சுன்னே தெரியல."


"இங்க இருக்கிற யாராவது சொல்லீருப்பாங்க." 


"இருக்கலாம்… அவ சொல்லித்தான் இந்த ஃபிரண்ட், என்னை வந்து பார்த்தாங்க." என்று கூறவும், 


"இந்தக் காலத்துல ஃப்ரெண்ட்ஸ் தான் நமக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்காங்க இல்லையா? என்று செவிலிப்பெண் கேட்க, 


"ஆமாம்" என்று சிரித்தாள் தேவி. 


"உங்க ஃபிரண்டு இங்கே உங்களைப் பார்க்க வரவே இல்லையே? நான் பாக்கல?" என்று கேட்க, 


"அவங்க இவ்வளவு தூரம் எனக்கு உதவி பண்ணதே பெரிய விஷயம் சிஸ்டர். இதுல அவங்க வேலை எல்லாம் விட்டு நம்மகூட இருக்கணும்னு எதிர்பார்க்கிறது ரொம்ப அதிகம் இல்லையா?" என்று தேவி சிரித்தாள்.


"இருந்தாலும் வேலை முடிஞ்சு வந்து பார்த்திருக்கலாம். இல்லையா?" என்று செவிலிப்பெண் திருப்பிக் கேட்க. 


"அவங்க எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க நம்ம நாட்டுல இருக்கிறதே பெரிய விஷயம். அதுல நம்ம ஊர்ல இருந்து, என்னை வந்து பார்க்கிறது எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தானே? இந்த உதவியே எங்களுக்குப் பெரிய உதவிதானே? இதுவே போதும்." என்ற தேவி நன்றி கலந்த புன்னகையுடன் கூற,


"ஓ! அப்ப சரி. அவங்களோட அவ்வளவு கெடுபிடிலயும் உங்களுக்கு டாக்டரை இன்ட்ரோ பண்ணி இருக்காங்களே!" என்ற செவிலிப்பெண் கூறவும்,


"ஆனாலும் ஃபோன்ல என்கிட்டயும் டாக்டர்கிட்டயும் சிகிச்சை பத்தி விசாரிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க." என்று அந்த ஃபிரண்ட்டுக்காகவும் தேவி பேசினாள்.


இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கரிய உருவம்,


"ஒரு டாக்டர் கொடுத்த மருந்து ஊத்தி கண்ணு கெட்டுப்போயிடுச்சா? நம்புறமாதிரி இல்லையே? ஒருவேளை தேவியோட கண்ணைக் கெடுக்கிறதுக்காகவே யாரும் தப்பான வேலை பார்த்துட்டாங்களோ?" என்று தேவியைப் பார்த்து யோசித்தது.


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️

இரவு உணவை விபாட்சு வீட்டில் முடித்துவிட்டு, வீட்டிற்குத் திரும்புகையில் நேத்ராவிற்கு மட்டுமல்ல சுபத்ராவிற்குமே அந்த வீட்டை விட்டு வருவதற்கு மனமே இல்லை.


'இந்த வீட்டிற்குள் வருவதற்கு எவ்வளவு பயந்தோம்!' என்று தோன்ற, செல்லமாகத் தன் தலையில் அடித்துக்கொண்டு  தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள் சுபத்ரா.


இப்பொழுது கொஞ்சம் கூடத் தயக்கமோ பயமோ இல்லை…


மனசுக்கு நெருக்கமான, அன்பான தோழி வீட்டுக்குப் போய்விட்டுக் கிளம்பும்போது, 'இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமா?' என்று தோன்றுமே அதே போன்றதொரு உணர்வு மேலிட, 


வீட்டினுள் இருந்தவர்களைப் பிரியமுடன் நோக்கினாள்.


கனத்த மனதுடன் வீட்டு வாசலை நோக்கிச் சென்றவள், விடுவிடுவென உள்ளே வந்தாள். 


சுபத்ரா வந்த வேகத்தையும், முகத்தில் தெரிந்த பாவத்தையும் பார்த்து,


‘விபாட்சுவைக் கட்டியணைக்கப் போகிறாள்’ என்று பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும் பதற,


விபாட்சுவோ சுற்றுச்சூழல் மறந்து விண்ணில் பறந்தான். முகமெல்லாம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் பிரகாசமாக மாற,


கண்களோ மின்னல் ஒளியைக் கடன் வாங்கிக் கருவிழியில் நிறுத்தியதைப் போன்று பார்ப்பவருக்குக் கண்கூசச் செய்து கொண்டிருந்தது…


தன்னை ஓடி வந்து அணைப்பவளைத் தானும் அணைக்கத் தயாராக விபாட்சுவின் கைகள் எழுந்தன.


உடம்பெங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற புத்துணர்ச்சி பர பர வெனத் துடிக்க,


தன் மனதிற்கினியவளின் இதயத்துடிப்பைத் தானும், தன்னுடைய இதயத்துடிப்பை அவளுக்கும் உணர்த்தத் தாயாராகி ஆவலுடன் காத்திருந்தான்.


சுபத்ராவோ, வந்த வேகத்தில் கார்த்திக்கிடம் சென்று, "போயிட்டு வரேன் பேபி! மறுபடியும் பார்ப்போம்" என்று சிரித்தபடி அவருடைய கைகளைப் பிடித்தவண்ணம் கூற,


பாபி கிருஷ்ணாவிற்கும், கைலாஷ்சுக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை‌.


விபாட்சுவின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?


கண்களைச்சுருக்கி நண்பர்களை முறைத்துவிட்டு,


'இறைவா! வயசுப்பயனுக்கு இப்படியொரு அசிங்கமா? ஆஅஅஅ' என்று எண்ணி இடது உள்ளங்கையில் வலது கை முஷ்டியால் குத்திக்கொண்டு சுபத்ராவைப் பார்த்து,


'அடிப்பாவி, இங்கே இளங்காளையான நான் ஆரத்தழுவக் காத்திருக்க, என் அப்பன் கையப்போய்ப் பிடிச்சுக்கிட்டு அன்பை பொழி பொழின்னு பொழியிறியேடி' என்று வெதும்பியவன், தனது தந்தையைப் பார்க்க,


கார்த்திக்கோ, ஒருகையால் சுபத்ராவையும், மறுகையால் நேத்ராவின் தோளிலும் கை போட்டுப் பாசமழை பொழிய,


'யோவ் அப்பா! இது ரொம்ப அநியாயம்! இன்னும் 'வருசம் பதினாறு' கார்த்திக் நினைப்பிலேயே இருக்கியேய்யா…' என்று புலம்பும்போதே,


அவனுக்குப் பின்னாலிருந்து, பெரிய சூறாவளியே வருவது போன்று, "புஷ் புஷ்ஷ்ஷ்" என்று அனல் காற்று வீச,


'இருக்கிற பிரச்சனை பாத்தாதுன்னு இது என்ன புதுசா?' என்று திரும்பிப் பார்த்த விபாட்சு,


வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.


அங்கே, ரயில் எஞ்சினுக்குக் கரி அள்ளிப் போட்டுவிட்டு, அதே அனலில் தகித்தவர்களாய் பாபி கிருஷ்ணாவும், கைலாஷும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி நின்றிருந்தனர்.


"அப்பா… நீங்க இன்னும் எல்லோருக்கும் ஹீரோதான். இல்லைனு சொல்லல… ஆனா எங்களுக்கு ஏன் 'அனேகன்' படக் கார்த்திக் மாதிரி வில்லனாயிட்டீங்க?" என்று பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும் கொந்தளிக்க,


நண்பர்கள் மூவரின் பொறாமைக்கு‌, தாங்கள் நிற்கும்விதம்தான் காரணம் என்று பெண்கள் மற்றும் கார்த்திக் மூவருக்குமே புரிந்தது.


சுபத்ராவிற்கும், நேத்ராவிற்கும் இந்தச் சூழ்நிலையில் விபாட்சுவின் முகத்தில் தெரிந்த பொறாமைஉணர்வு, ஜில்லென்று வீசும் பனிக்காற்றில், உல்லன் போர்வைதந்த கதகதப்போடு உலாவியபடி, சுடச்சுடக் காபி குடித்ததைப் போன்று இதமாக இருக்க,


இருவருமே கடைக்கண்ணால் விபாட்சுவைப் பார்த்தனர்.


சுபத்ரா, உச்சந்தலைமுதல் பட்டுப்  பாதம்வரை காதலைச் சுமந்தபடி தன்னைக் கடைக்கண்ணால் திருட்டுப் பார்த்தது விபாட்சுவின் உணர்வுகளைக் கிளற,


தலை குனிந்து சிரித்தவன், நிமிர்ந்து அவளின் கண்களைக் குறுகுறுவெனப் பார்த்தபடி, அவள் மனதில் அவன் இருப்பதைப் புரிந்துகொண்டதால் உண்டான புன்னகையை வாய்மூடி மறைத்து, சற்றே கீழ்தாடையை இறக்கி, தன் நாவால் கன்னத்தின் உட்சுவரில் கோலமிட,


அந்த ஒரு ரொமாண்டிக் பார்வையில் சுபத்ரா, நேத்ரா இருவருமே விழுந்தனர்.


தோழிகள் இருவருக்குமே, 'விபாட்சு தன்னைத்தான் இவ்வாறு பார்க்கிறான்!' என்று எண்ணியதால் உண்டான உவகையில் கன்னம் காதுவரை சிவக்க,


இமைகள் படபட வெனக் கொட்டி, அவனுடைய காதலின் வெப்பத்தைக் குறைக்க முயன்று,


முடியாமல் போகவே, முகத்தோடு கண்களும் சிவந்து, இளமாலைநேர அடி வானம்போலக் குளிர்ந்தும், கனன்றும் நின்றனர்.


இவர்கள் கூத்து இப்படியிருக்க,


கார்த்திக், தன்னிடம் எகிறிய நண்பர்களைப் பார்த்து,


"உங்களுக்கு என்னாச்சுடா? ஏன் இப்படி பிகேவ் பண்றீங்க" என்றதும்,


"ம்ஹும்… எங்க பிரச்சனை எங்களுக்கு… நீங்க என்ஜாய் பண்ணுங்கப்பா…" என்று கைலாஷ்சும்,


"எந்தப் பொண்ணுக்கும் உங்களப் பிடிச்சுடுதே? அது எப்படிப்பா? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லலாம்ல?" என்று பாபி கிருஷ்ணாவும் கேட்கவும்,


தன்னருகே நின்றிருந்த நேத்ரா, சுபத்ராவைப் பார்த்துச் சிரித்துவிட்டு, பாபி கிருஷ்ணா அருகில் சென்று அவன் தோளில் கை போட்டபடி,


"ஃப்ர்ஸ்ட், இவங்க உங்களுக்குத்தான் ஃப்ரண்டஸ்… அப்புறம் தானேடா எனக்கு ஃபிரண்ட் ஆனாங்க?" என்றதும்,


"சொல்லறதுக்கு ஒன்னுமில்ல" என்று பாபி கிருஷ்ணா பெருமூச்சு விட்டான்.


விபாட்சுவை உசுப்பேற்றும் எண்ணத்துடன், சுபத்ரா மீண்டும் கார்த்திக் அருகில் வந்து நின்று,


"அவங்க அப்படித்தான் பேபி… கண்டுக்காதீங்க…" என்று விபாட்சுவைப் பார்த்தவாறே சிரிக்க,


"இவ்ளோ நேரம் நீ என்கிட்ட பேசவேயில்ல பேபி… தயங்கித் தயங்கிச் சின்னதா ஒரு சிரிப்பு மட்டுந்தானே வந்துச்சு?… இப்பக் கிளம்புற நேரத்துல மனசத் தொடுறியே பேபி! உனக்குக்  கிளம்பும்போதுதான் என்னை பேபின்னு கூப்பிடத்தோணுச்சா பேபி?" என்று கார்த்திக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேச,


"சாரி பேபி! நீங்கலாம் எப்படிப் பழகுவீங்களோன்ற தயக்கம்… சாரி பேபி…" என்று கெஞ்சும் பாவனையில் சுபத்ரா பேசவும்,


"ஓகே பேபி… நமக்குள்ள இந்த சாரி லாம் தேவையா பேபி!" என்று குஷியாகக் கார்த்திக் கேட்க,


"நோ பேபி… இனி சாரி இல்ல… ஹாய் மட்டும் தான். ஓகே பேபி?"


"ஓ…கே!" என்று சுபத்ராவுடன் கார்த்திக் ஹைஃபை பண்ண, 


அதைப் பார்த்து அனைவருமே ஒருவருக்கொருவர் ஹைஃபை செய்து சிரித்து மகிழ்ந்தனர்.


விபாட்சு சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றான்.


பின்னே? தனது தந்தைக்கு அவன் விரும்பும் பெண்ணைப் பிடித்திருப்பது சாதாரண விஷயமா என்ன?


ஒரு வழியாக அனைவரும் விடைபெற,


எல்லோரும் புறப்படும்போது கௌதமி, பெண்களுக்குக் குங்குமம் வைத்துவிட்டு, முல்லைப்பூ கொடுத்து, "கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கட்டும்" என்று ஆசீர்வாதம் செய்தார்.


கௌதமி தனக்குக் குங்குமம் வைத்துவிட்டதும் உடல் சிலிர்க்க விபாட்சுவைப் பார்த்தாள் நேத்ரா.


அதேநேரம் எதார்த்தமாக சுபத்ராவும் விபாட்சுவைப் பார்க்க,


அவன் தலைசாய்த்து, இரு தோள்களையும் ஏற்றி இறக்கிச் சிரித்ததைப் பார்க்கையில், 


"எனக்கும் குங்குமம் வச்சுவிட ஆசைதான். என்ன பண்ண?" என்று கேட்பது போல் இருந்தது தோழிகள் இருவருக்குமே,


விபாட்சு தன் நெற்றியில் குங்குமம் வைத்துவிடுவதுபோல் சுபத்ராவிற்கு எண்ணம் உண்டாகவும்,  நாணத்தால் முகம் சிவந்து வேறுபுறம் திரும்பிக்கொள்ள,


நேத்ரா, சிறிது குங்குமத்தை எடுத்து யாரும் அறியாவண்ணம் சுபத்ராவின் கையில் வைத்து,


"இத அவர வச்சுக்கச் சொல்லு" என்று முகமெல்லாம் பூரித்தபடி கொடுத்தாள்.


"அச்சச்சோ நான் மாட்டேன் ப்பா… யாராவது பார்த்தா என்னாகிறது? நீயே குடு" என்று கிசுகிசுத்துத் தன் கையில் நேத்ரா கொடுத்த குங்குமத்தை  நேத்ராவிடம், நாணம் கலந்த புன்னகையுடன் திருப்பிக் கொடுக்கும் அந்த நல்ல வேளையில் விபாட்சு, சுபத்ரா நேத்ராவிடம் குங்குமம் கொடுப்பதைப் பார்த்து விட்டான்.


'என்னையப் பார்த்துக்கிட்டே நேத்ராட்ட, என்னத்தக் கொடுக்கிறா? அதுக்கு ஏன் இவ்வளவு வெட்கப்படுறா?' என்று விபாட்சு யோசிக்க,


விபாட்சு பார்ப்பதைப் பார்த்த நேத்ரா, கண் ஜாடையாக ‘அருகே வா’ என்று அழைக்கவும்,


விபாட்சு நேத்ரா அருகில் செல்ல, நேத்ரா யாரும் அறியாவண்ணம், விபாட்சுவிற்கு முதுகாட்டி நின்றபடி குங்குமத்தை விபாட்சுவிடம் கொடுத்துவிட்டு, சுபத்ரா அருகில் சென்று நின்று கொண்டு விபாட்சுவைப் பார்த்தாள்.


அதைப் பார்த்த விபாட்சு, சுபத்ரா தனது  கையிலிருந்த குங்குமத்தை நேத்ராவிடம் கொடுத்து, தனக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறாள் என்று நினைத்து,


அந்தக் குங்குமத்தைத் தன் நெற்றியில் இட்டுக்கொண்டு, "ஓகேயா?" என்பது போல் சுபத்ராவைப் பார்க்க,


சுபத்ரா வெட்கத்தில் தலை குனிந்து கொள்ள, 


நேத்ரா "ம்ம்ம்" என்று, அற்புதமாக இருக்கிறது என்பது போல் தலையசைத்தாள்.


இங்கே இப்படியிருக்க, கௌதமியிடம் பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும் வம்பு செய்து கொண்டிருந்தனர்.


"ஹை! அம்மா!!!... இதென்ன? இத்தனவருசமா இல்லாம அவங்களுக்கு மட்டும் ஆசீர்வாதமெல்லாம் பண்றீங்க? எங்களுக்கெல்லாம் எதுவுமில்லையா?" என்ற பாபி கிருஷ்ணாவின் காதைச் செல்லமாகத் திருகிய கார்த்திக்,


"ஆசீர்வாதம் தானே? வா! நான் பண்றேன்… படவா வீட்டுக்கு வர்ற பொண்ணுங்களுக்குக் குங்குமம் கொடுக்கிறது எல்லார் வீட்லயும் வழக்கம்தானடா. உனக்குத் தெரியாதா?" என்று செல்லமாக அவர்களின் புஜத்தில் குத்துவிட,


"அப்பா… அது தெரியும்… ஆனா, எங்களுக்கு ஆசீர்வாதமா ஏதாவது…" என்றனர், வலிக்காதபோதும் கார்த்திக் குத்தியை இடத்தைத் தடவியவாறு.


"அவ்வளவுதானே? இதோ…" என்ற கார்த்திக், விபாட்சுவைக் குறும்பாகப் பார்த்தபடி அழைத்து,


"விபா! பிள்ளைகளுக்கு பூஜைரூமில் இருக்கும் ருத்ராட்சத்தைக் கொடுக்கலாம் எடுத்து வா!" என்றதும்,


"அப்ப்ப்பா… இது அநியாயம்! பெண்களுக்குத் 'தீர்க்கசுமங்கலி பவ!' எங்களுக்கு 'காசிக்குப் போகக் கடவாய்' யா?" என்று கைலாஷ் சிணுங்க,


"நோ, நோ… உங்கள அவ்வளவு கஷ்டப்படுத்துவேனா? எதுக்குக் காசிவரை போகனும்? பரமக்குடியிலிருந்து இராமேஸ்வரம் பக்கத்துலதானே இருக்கு? ஜஸ்ட் டூ ஆர் ஒன்லி! அங்க போகலாம்" என்று தீவிர பாவனையில் கூறியவரிடம்,


"அப்டினா எங்களோட நீங்களும் வாங்கப்பா!" என்றான் பாபி கிருஷ்ணா வேகமாகத் தலையாட்டியபடி,


"நான் குடும்பஸ்தன் டா… பிரமச்சாரி இல்ல." என்று தோள்களைக் குலுக்கிய கார்த்திக்கைத் தள்ளிக்கொண்டு,


"இப்ப என்னங்க டா? ஆசீர்வாதம் தானே வேணும்?" என்ற கௌதமி,


மூன்று பசங்களுக்குமே குங்குமம் வைத்துவிட்டு,

"தீர்க்காயிசோட, தீர்க்கசுமங்கலியா வாழுங்கடா!" என்று வாழ்த்த,


"என்னா…து? தீர்க்க… சுமங்கலியா? நா…ங்களா?" என்று விபாட்சு அலற,


மற்ற இருவரோ, "ம்ம்ம் அது!" என்று கௌதமியைப் பார்த்துக் கூறி சிரித்தனர்.


பிறகு அனைவரும் சந்தோசமாகப் பிரியாவிடைபெற,


நண்பர்களுடன் விபாட்சுவை அனுப்பி வைத்துவிட்டு,


நேத்ரா, சுபத்ராவை தனது விருப்பத்துக்குகந்த வாகனமான சிவப்பு நிற செவ்ரோலேட் தவேராவில் அமரவைத்துத் தானே ஓட்டிச்சென்றார் கார்த்திக்.


காலமோ இதுவரை விபாட்சு வீட்டில் நடந்ததை எண்ணிப்பார்த்தது.


சுபத்ராவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததால் விபாட்சுவுக்கும், 


நேத்ராவை மட்டும் பார்த்த பாபி கிருஷ்ணா, கைலாஷ்சுக்கும், 


நேத்ரா விபாட்சுவைத்தான் பார்க்கிறாள் என்று தெரியவில்லை. 


சுபத்ராவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்… அவளுடைய எண்ணங்களும் பார்வையும் விபாட்சுவைச் சுற்றியே இருந்தது. அதனால் சுபத்ராவும் நேத்ராவின் செயல்பாடுகளைக் கவனிக்கவில்லை.


நேத்ராவும் ஒவ்வொரு முறை விபாட்சுவைப் பார்க்கும் போதும் மற்ற இரு நண்பர்களையும் சுபத்ராவையும் ஒருமுறை பார்த்துவிடுவாள். 


காரணம், நேத்ரா விபாட்சுவை சைட் அடிப்பதை மற்றவர்கள் கவனிக்கிறார்களா? என்று உஷாராக இருக்கிறாளாம்!!!


அவ்வாறு விபாட்சுவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நேத்ரா மற்ற இரு நண்பர்களையும் பார்த்ததாலயே, நேத்ரா தங்களை விரும்புவதாக பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும் எண்ணக் காரணம் ஆனது. 


அதுவே நேத்ரா மனதில் இருப்பவர் யாரென்று நண்பர்கள் அறியமுடியாமல் போனதற்கு முக்கியக் காரணமாகியது.


அதேபோல் தோழிகளின் விதி, நேத்ரா பார்க்கும் போதெல்லாம், சுபத்ரா தலை குனிந்து விபாட்சுவை எண்ணிக் கண்களைத் திறந்தபடி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பாள். 


அதனால் நேத்ராவிற்கு சுபத்ராவின் மனதைப் புரிந்துகொள்ள முடியாமல் போனது.


இது எங்கே போய் முடியும்? என்று நான் காலத்தைப் பார்க்க, அது சிரித்தது…


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



Post a Comment

0 Comments