உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟15

 உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟15


தேவியும், தேவியின் அம்மாவும் சேர்ந்து, தேவியின் கண் எவ்வாறு கெட்டுப்பொனது என்று நடந்த விஷயங்களைக் கூறி முடித்தனர்.


அவ்வளவு விஷயங்களையும் கேட்ட அந்த உருவத்திற்கு, ‘கண் டாக்டர் கொடுத்த மருந்தை ஊத்தினால் கண் தெரியாம போகுமா?’ என்ற சந்தேகம் வர,


தேவிக்கு ஆபரேஷன் முடிந்து வந்த சில நாட்களில், ‘தேவிக்குக் கண்கள் தெரிய விடக் கூடாது’ என்று ஃபோனில் பேசிய ஒரு மானுடத்தின் செயல் ஞாபகம் வர, 


'ஒரு வேளை அந்த மானுடப் பிறவியால்தான் தேவியின் கண்கள் பறிபோய் இருக்குமோ?' என்று சந்தேகம் வருகிறது.


அதற்குள் இருள் பிரிந்து விடியும் வேளை புலர,


விடிகாலையிலேயே அந்த மானுடத்தின் வீட்டிற்குச் செல்கிறது அந்த உருவம்.


அன்று ஒரு நாள் யாருடனோ போனில், "ஆபரேஷன் செய்திருப்பதால் தேவிக்குக் கண் கிடைத்துவிடுமா?" என்று ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்த அந்த மானுடம்,


தூங்கி எழுந்து படுக்கையில் அமர்ந்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. 


திடீரென்று காற்று வேகமாக வீச, ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக் கொண்டே இருந்ததால் யோசனை தடைபட,


எரிச்சலாகத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் யோசனையைத் தொடர்ந்தது அந்த மனுடப்பிறவி.


'நான் வந்த வேகத்தில் காற்று சுழன்றடித்தும் இந்த மானுடம் அசைகிறதா பார்?' என்று பார்த்தபடி உருவம் அறைக்குள் வர,


'யாரோ தன் அறைக்குள் வருவது போல் உணர்ந்த அந்த மானுடம், திரும்பி, சாத்தப்பட்டிருந்த அறைக்கதவைப் பார்த்தது.


'ப்ச்சு' என்று தலையை நோகாமல் சிலுப்பிவிட்டு மீண்டும் தீவிரமாக யோசித்தது.


'காலையில் எழுந்ததும் எத்தனையோ வேலைகள் இருக்கும் மனிதர்களுக்கு. அப்படி இருக்க, கிட்டதட்ட ஒரு மணி நேரமாகப் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் அமர்ந்தபடியே என்ன யோசித்துக் கொண்டிருக்கிறது இந்தக் கூகை? என்று அந்த உருவமும் அதே அறையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.


இனி அந்தத் தீய மானுடம் யார் என்று நமக்குத் தெரியும்வரை அதை நாமும் 'கூகை' என்றே அழைப்போம். அதே போல் அந்த உருவத்தை 'ஆத்மா'/ என்போம்.


விடியப்போகிறது என்று பறவைகள் பசுக்கள் அறிவித்து ரொம்ப நேரமாகியும் கதிரவனின் வருகையை அறிந்து ஓடி ஒளியும் இருள் இன்னும் விலகாமலிருக்க,


ஜன்னலைத் திரும்பிப் பார்த்த கூகைக்குக் காரணமே புரியாமல் இதயம் "தடக் தடக், தடக் தடக்" என்று துரிதகதியில் ஓட,


'ஏன் ஒரு மாதிரி ஆகுது எனக்கு?' என்று எண்ணிய கூகை,


தனது நெஞ்சில் கைவைத்துத் தடவிக் கொடுத்தது… கொஞ்சம் அசுவாசம் ஆனதும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து யோசிக்க முடியாமல் ஏதோ ஒன்று உறுத்துவதாக எண்ணிய கூகை யாரையோ திட்டியது. 


"வாட்ஸ்அப் ல மெசேஜ் அனுப்பி எவ்வளவு நேரமாச்சு? இன்னும் அந்தப்பாவி பார்க்கலையே? இன்னுமா தூங்குறான்? இவனுக்கு எப்படித் தூக்கம் வருது?" என்று வாய்விட்டுப் புலம்பிய கூகை, தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்க்கும் நேரத்தில்,


வெளியே மக்கள் புலங்கும் சப்தம் நன்றாகக் கேட்கவே கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தது.


அறையின் இருளிலும் ஒளிரக்கூடிய நியான் முட்கள் கடிகாரத்தில் எங்கே இருக்கின்றன என்று கூடத் தெரியாவண்ணம் இருளில் மூழ்கியிருக்க,


'பேட்டரி போச்சா? சுத்தம்…' என்று தலையில் கை வைத்தவள்,


மொபைல் ஃபோனில் மணி பார்க்க, காலை ஆறு பதினைந்து என்று இருக்கவும், அதிர்ச்சியாகி ஜன்னலைப் பார்த்தது கூகை. 


வெளியே கொஞ்சம் கூட வெளிச்சமே இல்லாமல் ஜன்னலில் கருப்புத் திரை போட்டதைப் போல் அப்பால் எதுவும் தெரியவில்லை…


’மழை வரப்போகுதோ? இருட்டிக்கிட்டு இருக்கே!' என்று எண்ணம் வரவும்,


"இப்ப இதுரொம்ப முக்கியம்?" என்று கூறிவிட்டு, மீண்டும் மொபைல் ஃபோனை வெறித்தது.


'ஒருவேளை இந்தக் கூகையால்தான் தேவிக்குக் கண் போயிருக்கும் என்றால், நல்ல பெண்ணான தேவியின் கண்கள் பறிபோனதில் இந்தக் கூகைக்கு அப்படி என்ன சந்தோசம்? அல்லது தேவை என்னவாக இருக்கும்?' என்று யோசித்தபடி ஆத்மா அந்தக் கூகையின் எதிரிலேயே அமர்ந்திருந்தது.


கூகை சட்டென்று நிமிர்ந்து தன் எதிரே அமர்ந்திருந்த ஆத்மாவைப் பார்க்க,


ஆத்மா கூகையின் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும், தன் எதிரே யாரோ அமர்ந்து தன்னையே பார்ப்பதுபோல நன்கு உணர முடிந்தது கூகைக்கு. 


மீண்டும் இதயம் படபடக்க, “ஏன் இந்த மாதிரித் தோணுது? என்று தன் கண்களைக் கசக்கி தன் எதிரே என்னதான் இருக்கிறது என்று உற்றுப்  பார்த்தபோது.


ஆத்மாவிடமிருந்து மருத்துவ மனையிலிருந்து வரக்கூடிய பிரத்யேக வாடை மூக்கைத் துளைக்க,


"ச்சே என்ன வாடை இது?... அந்தக் கபோதி தேவியைப் பத்தியே நினைக்கிறதால இந்த வாடை வருதோ!" என்று புலம்பியபடி மூக்கின் துவாரங்களைத் தேய்த்துக் கொடுத்தது கூகை.


கூகை தன் இருப்பை உணர்கிறது என்று புரிந்த ஆத்மா,


"இனி உன் விசயம் தெரியுறவர உன் நிழலாத்தான் இருப்பேன். நீதான்னு கன்ஃபார்ம் ஆச்சு… இந்த மாதிரி அமைதியா உட்கார்ந்திருக்க மாட்டேன்… அப்ப இருக்கு உனக்கு." என்று சிரித்தது ஆத்மா.


ஆத்மாவின் சிரிப்பால் எழுந்த அனல் காற்று கூகையின் முகத்தை வேகமாகத் தாக்க, கூகையின் உடல் ஒரு நொடி எரிந்து அடங்கியது.


'வெளிய மழை வர்ற மாதிரி இருட்டியிருக்கு… ஆனா அனல் காத்தா அடிக்குதே?' என்று சுற்றுப்புறத்தை யோசனையுடன் துழாவியது கூகை.


ஏழு மணி ஆனதும் அந்தக் கூகையின் அருகில் இருந்த மொபைல் போன் அழைக்க, எடுத்துக் காதில் வைத்த அந்தக் கூகை,


'நீங்க அந்த ஆஸ்பத்திரியில் விசாரிச்சீங்களா?"


"..."


"யாரையாவது பிடிச்சுத் தயவு செஞ்சு விசாரிங்க. எந்தக் காரணத்தாலும் தேவிக்குக் கண்ணு தெரிஞ்சிடக் கூடாது." என்று கூகை சொல்ல, 


'அடக் கேடு கெட்ட ஜென்மமே! நீயெல்லாம் ஒரு மனுசப் பிறவியா!…  இந்தக் கூகைய அப்படியே ஓங்கி ஒரு அரை அறைஞ்சா என்ன?' என்று ஆத்திரப்பட்டுச் சட்டென்று எழுந்தது ஆத்மா. 


“ஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்” 


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்த சுபத்ராவிற்கு, விபாட்சுவின் அப்பா, அம்மா பற்றியே நினைவுகள் சுழன்றது.


'என்னவோ தெரியல பார்த்த ஒரு வாரத்திலேயே அவர எனக்குப் பிடிச்சிருந்துச்சு. பணக்கார வீட்டுப்பையன்னு தெரிஞ்சதுமே, விலகி நின்ன நான், அவர் வீட்டப் பார்த்ததும், விபாவ ஃபிரண்டாக் கூட நெருங்கக்கூடாதுன்னு  முடிவுக்கே வந்துட்டேன். கிடைக்காதுன்னு தெரிஞ்சபின்னாடி பிரியம் வைக்கிறது நல்லதுக்கு இல்லைதானே?


ஆனா… அவரோட அப்பாவும் அம்மாவும் எவ்வளவு இயல்பா ஃபிரண்ட்லியா பழகுறாங்க. அப்படிப்பட்டவங்க, அவங்களோட ஒரே பையனோட காதலையா சேர்த்து வைக்கமாட்டாங்க?' என்று காதல் கொண்ட நெஞ்சம், எதையுமே தனக்குச் சாதகமாக எண்ணுவதைப் போல சுபத்ராவின் மனமும் நம்பியது.


'காதலுக்குத் தடையில்லை' என்று தோன்றவுமே, கனவுகளும் காதல் பாடல்களும் போட்டி போட்டு வரத் தொடங்கியது.


கண்ணை மூடினாலே விபாட்சு பல கோணங்களில் சிரித்தான். 


உடம்பில் புது ரெத்தம் பாய்ந்ததுபோல் ஜிவ்வ்வ்வென்று இருக்க சட்டென்று கண்களைத் திறந்தவளுக்கு, அகமும் முகமும் இணைந்து புன்னகைத்து மகிழ்ந்தது.


'ஆம்பளப்பையனுக்குச் சிரிப்பு அழகா இருந்து நான் பார்த்ததேயில்ல… இவர் என்ன இப்படிச் சிரிக்கிறார்? ஐய்யோ… மனசு அவரோட சிரிப்பிலும், சிரிக்கும் கண்கள்லயுமே சிக்கிக்குதே…' என்று சிணுங்கியவள், குப்புறப் படுத்துக்கொண்டு, தாடையில் கைவைத்தபடி விபாட்சுவின் சிரிக்கும் முகத்தை நினைத்தாள்.


'சிரிக்கிறதுல இத்தன வெரைட்டியா? அவன் மனசுல என்ன இருக்குங்கிறத சிரிப்பு வெளிப்படுத்துதே!! ரசிச்சுச் சிரிக்கிறது ஒரு விதம்னா, கிண்டல் பண்ணி சிரிக்கிறது வேறு ரகமா இருக்கு… சந்தோசத்துல ஒருமாதிரியும், கஷ்டத்துல ஒரு மாதிரியும் சிரிக்கிறார்…" என்று எண்ணிய சுபா, தவையணைக் கடியில் இருந்த மொபைல் ஃபோனை எடுத்து விபா போல் சிரித்துப் பார்த்தாள்.


"தலைஎழுத்து, ஒன்னு 'ஈஈஈ'ன்னு இழிக்கிற மாதிரி இருக்கு… இல்ல கேனை மாதிரி இருக்கு..‌. உனக்கு இதெல்லாம் தேவையா சுபா? உனக்குத்தான் விதவிதமா சிரிக்க வரலைல? பின்ன ஏன் அர்த்த ராத்திரில உன்னை நீயே பயமுறுத்துற?" என்று  மொபைலை வைத்துவிட்டு,


கண்களை மூட,


அவனுடைய பார்வையும் சிரிப்பும் பாடாய்ப் படுத்தியது. 


நெஞ்சுக்குள் வண்டு புகுந்து குடைவதுபோல் ஏதோ ஒரு குறுகுறுப்பு  அடிவயிறுவரைத் தாக்க,


"பாவி… என்னைத் தூங்கவிடுடா… நாளைக்கழிச்சு காலேஜ்ல பார்ப்போம்?" என்று கூறும்போதே,


காலேஜில் அவனைப் பார்க்கும்போது அவனுடைய துளைக்கும் பார்வை சிண்ட, சீண்டும் பார்வை மனதைத் துளைக்க, 


இருபக்க தாடையும் காதலன் தந்த வெட்கத்தில் இறுகி வலிக்க,


"அச்சோ என் தூக்கம் போச்சே…" என்று விட்டத்தைக் கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டு பார்க்கும்போது, 


தென்றலின் தழுவலால் சிலிர்த்திருந்த மேனியில் சூரியனின் கதிர் சுர்ர்ர்ரென்று சுட்டாற்போல் எதிர்மறையான உணர்வு ஏற்பட,


"இதென்ன காதல் எனும் இன்ப ஊற்றான உணர்வலையில் மெய்மறந்து மிதக்கும் வேளையில், ஏதோ டிஸ்டர்ப் பண்ணுதே" என்று திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.


அவளுக்கு எதிரிலிருந்த கட்டலில் படுத்தபடி அவளுடைய அம்மா சுபாவையே முறைக்க,


"ஹிஹ்ஹிஹ்ஹீஈஈஈ… அம்மா… நீங்க தூங்கல?" என்று கேட்டு மேலும் அம்மாவின் கோபத்தைத் தூண்டிவிட,


"அடிசெருப்பால, புரண்டு படுக்கிறேன் பேர்வழின்னு கட்டிலப் போட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டித் தூக்கத்தக் கெடுத்ததுமில்லாம, நடு ராத்திரில செல்ஃபி எடுக்கிறேன்னு பேய்  மாதிரி சிரிச்சு பயமுறுத்தி, மிச்ச தூக்கத்தையும் கெடுத்துட்டு, தூக்கம் வரலையான்னா கேட்கிற?"


"இல்லம்மா வந்து"


"மூடிட்டு படு… என்னையாவது தூங்கவிட்டுத்தொலை… இல்ல காலைல எந்திரிச்சு நீயே சமைச்சு எடுத்துட்டுப் போ" என்று விடிகாலையில் எழுந்து அடுப்படியில் சமைக்க வேண்டும் என்ற பிரம்மாஸ்திரத்தை அம்மா விட,


அதுக்கப்புறம் சுபத்ரா அசைவாளா என்ன? 


சமையலா? அதிகாலைக் காற்றை ஃபீல் பண்ணி காபி குடிச்சுட்டு காலேஜ்ஜுகுக் கிளம்பிற சுகத்தை விட்டுட்டு,


அதிகாலையிலும் அனலடிக்கும் அடுப்படியில் வெந்து, வேர்த்து வழிய காலேஜ் போறது எவ்வளவு பெரிய தண்டனை?!!


நான் இதைச் சொல்லி முடிக்கும்முன் உறங்கிவிட்டிருந்தாள் சுபத்ரா.


தூக்கம் தொலைந்த அவளது அம்மா மேனகா, "அவ அவ பத்துப் பிள்ளைய வச்சுக்கிட்டு நிம்மதியா தூங்குறா… இது ஒன்னு என் பக்கத்துல படுத்துத் தூங்க விடுதா பாரு" என்று புலம்பியபடியே உறங்க முயற்சித்தார். 


அங்கே நேத்ராவோ கொஞ்சம் கூடச் சலனமின்றி நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள். அவளது அறையில்.


அவளது படுக்கையின் மறு ஓரத்தில் படுத்திருந்த நேத்ராவின் அப்பத்தா பத்மினிக்குத்தான் சுத்தமாகத் தூக்கம் வராததால், நேத்ரா தூங்கும் அழகை ரசித்தபடி படுத்திருந்தார்.


'எவ்வளவு அழகான பொண்ணு என் பேத்தி, அழகையும், அறிவையும் அள்ளிக் கொடுத்த ஆண்டவன், தலைஎழுத்தை மட்டும் கிறுக்கிவிட்டானே?'


'இவளுக்கேற்ற மணாளன் எங்கே, எப்படி இருக்கானோ? கடவுளே! இவளாவது தீர்க்காயுசோட, மனசுக்குப் பிடிச்ச நல்ல கணவனோட தொங்கத்தொங்கத் தாலியும், அடுத்தடுத்துப் புள்ளகுட்டியா பெத்து நீண்ட நெடுங்காலம் 

சந்தோசமா வாழனும்.' என்று தினம்தினம் தன் பேத்தியை எண்ணிக் கவலை கொண்டு பிரார்த்தித்தார்‌.


அதே கவலையை, பகலில் தன் மனைவி பத்மினியிடமும், அருமை பேத்தி நேத்ராவிடமும் காட்டமுடியாத வேதனையைத் தனியே அமர்ந்து அனுபவித்தார் நேத்ராவின் தாத்தா கணேசன்.


குடியரசு தினத்தின் அடுத்தநாளும் விடுமுறையானதால்  காலை ஒன்பது மணியாகியும் விபாட்சு தூங்கிக்கொண்டிருக்க,


பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும் விபாட்சு வீட்டிற்கு வந்தனர். 


விபாட்சு உறங்குவதாகச் சொன்னதும், நண்பர்கள் இருவரும் விபாட்டு அறைக்குச் சென்றனர்.


அவர்கள் அறைக்குள் பிரவேசித்து எழுப்பியும்,


"டேய்!... நீங்கள்லாம் மனுசங்களாடா? லீவு அன்னைக்குக் கூடக் காலங்காத்தால எந்திரிச்சு வந்திருக்கீங்களேடா? லீவ என்ஜாய் பண்ணத்தெரியாத பசங்க" என்று தூக்கத்தில் புலம்ப,


"ஃபோர்த் ஸ்டாண்டர்டு்லருந்து இதே டயலாக் தானாடா?" என்ற கைலாஷிடம்,


"ஆனாலும் நீங்க இன்னும் திருந்தலயேடா"


"இவ்வளவு நாள் வேற டா… இப்போ அப்டியா?" என்று ஜன்னல் திரையை முறுக்கியவாறே கேட்டான் பாபி கிருஷ்ணா.


"ஏன் இப்ப என்ன ஆச்சு?" என்று போர்வையை மேலும் இழுத்து மூடியபடி விபாட்சு கேட்க,


"தெரியாதமாதிரியே கேட்பான்." என்று பாபி கிருஷ்ணாவைப் பார்த்தான் கைலாஷ்


"இத்தனை நாள் லீவுக்கும் இந்த லீவுக்கும் வித்தியாசம் இல்லையா?" என்று பாபி கிருஷ்ணா எகிற,


"அப்படியென்ன பெரிய வித்யாசத்தக் கண்டுட்டீங்க?" என்று கொட்டாவி விட்டபடியே விபாட்சு கேட்டதும்,


வெறுத்துப்போன குரலில், "சரி வாடா… இவனுக்குத்தான் எதுவுமில்லையே" என்று நண்பர்கள் இருவரும் அறை வாசலை நோக்கித் திரும்ப,


"நான் இல்லாம போயிடுவீங்களாடா?" என்று விபாட்சு தலையணையை நண்பர்கள்மீது எறிய,


"அப்படி வா வழிக்கு" என்று கைலாஷ்சும்,


"அப்ப சீக்கிரம் கிளம்பு… இப்பத்தான் எந்திரிக்கிற… போ! போ! ஓடிப்போய் ஃபிரஷ் அப் பண்ணிட்டு வா!" என்று கூறியபடி, நண்பர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, 


விபாட்சு ஜீன்ஸ், டீசர்ட் சகிதம் போர்வைக்குள் இருந்து வெளியே வந்தான். 


"ஏய் என்னடா இது? இப்படியேவா தூங்கிக்கிட்டு இருந்த?"  என்று ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள் நண்பர்கள், 


"எனக்கு விடியக் காலைலயே தூக்கம் வரலடா. என்ன பண்றதுன்னு தெரியல… சோ, குளிச்சு ரெடியாகி வந்தேன். அப்பவும் இந்த சோம்பேறி சூரியன் எந்திரிக்கல… நீங்க இன்னைக்குக் கட்டாயம் வருவீங்கன்னு தெரியும்… சும்மா படுத்தேன்… விடியிற நேரத்துல தூங்கிட்டேன் போல," என்று  மீண்டும் ஒருமுறை பிரஷ் பண்ணிவிட்டு, முகத்தைக் கழுவிவிட்டுக் கிளம்பினான்.


வீட்டைவிட்டு வெளியே வந்த மூவருக்குமே எங்கே போவதென்று தெரியவில்லை.


"என்னடா இப்படி ஆயிட்டோம்? பொண்ணுங்களப் பார்க்கிறதுக்காக லீவு அதுவுமா கிளம்பிவந்து தெருவுல நிக்கிறோமே" என்று மூவருமே புலம்ப,


"நான் வேணும்னா ஐடியா குடுக்கட்டுமா?" என்று நண்பர்களின் பின்னால் இருந்து குரல் வர, 


திரும்பிப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


யாரைப் பார்த்து பயந்தனர்?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


Post a Comment

0 Comments