உனது விழியில் எனது விலோசனம்…அத்தியாயம்🌟16


உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟16


தேவிக்குக் கண்ணு தெரிஞ்சிடக் கூடாது." என்று கூகை ஃபோனில்  சொல்ல, 


கோபம் வந்து எழுந்த ஆத்மாவிற்கு தேவியின் சிரித்த அப்பாவி முகம் ஞாபகத்திற்கு வர, அப்படியே நின்றது.


'கூகையை ஏதாவது செய்துவிட்டால் அது உஷாராகிவிடக்கூடும். பிறகு தேவிக்கு என்ன நடந்தது யாரால் நடந்தது என்ன காரணத்துக்காக நடந்ததுன்னு கண்டு பிடிக்கிறது சிரமமாயிடும்' என்று தோன்ற, தனது ஆத்திரத்தை அடக்கி,


என்னதான் பேசுகிறார்கள் என்று காத்திருந்தது.


 எதிர்முனையில் இருப்பவர் என்ன கூறினார் என்று தெரியவில்லை.


"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆஸ்பத்திரிக்குள்ள நிச்சயம் யாராவது உங்களுக்கு உதவுவாங்க. அப்படிப்பட்ட ஆளப் புடிங்க. அவங்கள வச்சே, தேவிக்குக் கண்ணு தெரியுமோ, தெரியாதோ அதெல்லாம் இனி நாம பார்க்க வேண்டாம்.  நாம மறுபடியும் அதே மாதிரி அந்த மருந்த அவளுக்குக் கொடுத்து இனிமே எந்த ஜென்மத்திலும் கண்ணு தெரிய விடாம பண்ணிருவோம்." என்று கூறவும்,


"அடப்பாவிகளா? அப்போ தேவியோட கண்ண நீங்கதான் கெடுத்தீங்களா? எப்படி?" என்று ஆங்கரமாய் எழுந்த ஆத்மா,


'கூகையை முடக்கிப்போட ரொம்ப நேரமாகாது. கூகை ஏன் இப்படியொரு கொடூரத்தை தேவிக்கு செஞ்சதுன்னு தெரியவேணாமா?' என்ற எண்ணம் மேலிட, தன் கோபத்தை அடக்கிக் கூகை பேசுவதைக் கவனித்தது.


 எதிர்முனையிவ் இருந்தவர்கள் சம்மதித்தார்களோ என்னவோ? மொபைல் ஃபோனை  வைத்துவிட்டு அமர்ந்திருந்த வஞ்சினம் கொண்ட கூகையின் முகத்தைப் பார்க்கும்பொழுது, 


'மானிதர்கள் பேயைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்? இதோ என் எதிரே இருக்கும் உயிருள்ள ஒரு மானிடப் பிறவி! இதன் முகத்தில்தான் எவ்வளவு குரூரம்? அப்படி என்ன வெறி ஒரு அப்பாவிப் பெண்ணின் கண்ணைப் பறிப்பதில்? இவ்வளவு ஒரு விகாரமான முகமுள்ள, குணமுள்ள மானிடப்பிறவியை விடவா ஆத்மாக்கள் மோசமாகி விடுகின்றன?' என்று தோன்ற,


'இந்தக் கூகை யாருடன் பேசுகிறது? என்பதைக் கண்டறிய வேண்டும்' என்று யோசித்தது. 


அதேநேரம் கூகை படுக்கையிலிருந்து எழுந்து கழிவறைக்குச் செல்லவே,


படுக்கை அறையில் இருந்த படியே கழிவறையின் கதவுகளை வெளிப்பக்கமாக ஆத்மா தாழிட்டது.


பிறகு கூகை கடைசியாகப் பேசிய நம்பரை பார்த்தது.


அந்த நம்பரை மனப்பாடம் செய்ததோடு மீண்டும் அதே நம்பருக்கு கூகையின் மொபைல் போனிலிருந்தே கால் செய்தது ஆத்மா. 


ஃபோன் எதிர்பக்கம் எடுத்தவுடன் ஒரு ஆண் குரல்,


"நான் தான் நீ சொன்ன மாதிரி ஆஸ்பத்திரிக்குள்ளேயே ஒரு ஆள தேடுறேன்னு சொல்லிட்டேன்ல? தேவிக்குக் கண்ணு தெரியுமா? தெரியாதான்னு பார்க்கக் காத்திருக்க வேணாம். கண்ணு தெரிஞ்சாலும் சரி, தெரியாட்டாலும் சரி, இந்த மருந்தக்

கொடுத்துடுவோம்னு நீ எப்ப சொல்லிட்டியோ… அதுக்கப்புறம் எனக்கு வேற வேலை? சீக்கிரமாக நீ சொன்ன வேலையை முடிக்கிறேன்." என்று சொன்னது அந்த ஆண் குரல். 


"இவன் யார்? இவன் ஏன் இந்தக்  கூகைக்கு உதவுகிறான்?" என்று ஆத்மாவிற்குத் தோன்ற,


கூகையின் குரலில் ஆத்மா, எதிர்முனை ஆணிடம் பேச ஆரம்பிக்கிறது.


"எனக்கு ஒரு சின்ன சந்தேகம் எப்பவுமே இருக்கு. நான் தேவியோட கண்ணைப் பறிக்கிறதுல இவ்வளவு தூரம் வெறியா இருக்கேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆனா நீங்க ஏன் எனக்கு இந்த அளவுக்கு உதவுறீங்க? அது… எங்கிட்ட நீங்க சொன்ன காரணம் மட்டும் தானா?" என்று நைசாக அவன் வாயிலிருந்து விசயங்களைக் கறக்க எண்ணி கேட்டது.

.


"இப்பதான் தூங்கி எந்திரிச்சிருக்கியா? இல்ல குடிச்சிருக்கியா? நான் எதுக்காக உனக்கு ஹெல்ப் பண்றேன்னு உனக்குத் தெரியாதா? உனக்குத் தெரிஞ்சது தவிர வேறு என்ன காரணம் எனக்கு இருக்க முடியும்னு நீ நினைக்கிற? நமக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் நம்பிக்கை இருந்தா மட்டும்தான் நாம எதையுமே செய்ய முடியும். சும்மா எதையாவது போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்காதே." என்று அதிகார தோரணையில் பேசி ஃபோனை வைத்துவிட்டான்.


'இவன் பேசுவதைப் பார்த்தால் இவனுக்கும் தேவியின் கண் பறிபோவதில் ஏதோ ஆதாயம் இருப்பது போல் தெரிகிறதே?' இவன் யாரென்று முதலில் கண்டறிய வேண்டும்.'


என்று எண்ணிய ஆத்மாவிற்குக் கழிவறையிலிருந்து கூகை கதவைத் தட்டும் சப்தம் வர,


ஆத்மா அந்தக் கதவை ஒரு பார்வை பார்த்ததும் தட்டும் சப்தம் வெளியில் கேட்கவில்லை. 


"அங்கேயே இருந்து தொலை!" என்று உறுமிய அந்த ஆத்மா, 


"எவ்வளவு பெரிய கெட்ட காரியமெல்லாம் பண்ற? உனக்கு இந்தச் சின்னத் தண்டனை போதுமா?" என்று தோன்ற, 


"இந்தக் கூகைய என்ன செஞ்சா தேவல" என்று பல வகையான தண்டனைகள் ஆத்மாவின் கண்முன் தோன்றி மறைய,


'எதற்காக இந்தக் கூகை இவ்வாறெல்லாம் செய்கிறது என்று தெரியாமல் இந்தக் கூகைய நாம ஏதாவது பண்ணிட்டோம்னா அப்புறம் காரணமே தெரியாமல் போய்விடும். இதுக்குப் பின்னாடி இன்னும் எத்தனை பேர் இருக்காங்கன்னு வேற தெரியல. ஏன் இப்படிப் பண்றாங்கன்னும் தெரியல…" என்று யோசித்த ஆத்மா, 


அந்தக் கழிவறைக் கதவையே எரித்துவிடுவதைப் போல் பார்த்ததும் கழிவறையின் பிளாஸ்டிக் கதவில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது.


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


சுபத்ராவையும் நேத்ராவையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டைவிட்டு வெளியே வந்த நண்பர்கள் மூவருக்கும் அவர்களை எங்கே, எப்படி சந்திப்பது என்று தெரியாமல் நிற்கும்போது,


"நான் ஐடியா கொடுக்கட்டுமா?" என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தவர்கள் அரண்டே போயினர்.


பேண்டு பாக்கெட்க்குள் இரு கைகளை விட்டுக் கொண்டு குறும்பான புன்னகையுடன் கார்த்திக் நின்று இருந்தார்.


அப்பா நீங்களா?


அப்பா!!! 


அப்ப்பா… 


என்று மூவரும் வித்தியாச வித்தியாசமான பாவனையில் அலற, 


"கூல்! கூல்! அப்பாவே தான் உங்க பிரச்சனை என்னடா? ஏன் இப்படித் திருதிருன்னு முழிச்சிக்கிட்டு நடுரோட்டுல நிக்கிறீங்க" என்று கூலாகக் கேட்டார்.


"அது வந்து அப்பா… அது வந்து… என்று நண்பர்கள் இழுக்க,


"உங்க கேர்ள் ஃபிரண்ட்ஸ்சை எப்படிப் போய்ப் பார்க்கிறதுன்னு தெரியல. அதான உங்க பிரச்சனை?


மீண்டும் மூன்று நண்பர்களும், "அப்பா!" என்று ஒரே குரலாக அலற,


"ஏன்டா இத்தனை வருஷமா லீவு விட்டா நீங்க என்ன செய்வீங்கன்னு கூடத் தெரியாமலா இருப்பேன்? திடீர்னு இன்னைக்குக் காலைல எந்திரிச்சு நீங்க வெளியே கிளம்புறீங்கன்னா எதுக்குப் போறீங்கன்னு கூடவா எனக்குத் தெரியாது? உங்க வயசக் கடந்து தானடா நானும் வந்தேன்." என்று சிரித்தார் கார்த்திக்.


பாபி கிருஷ்ணா முன்னே வந்து, "ஓகே பேபி! இப்ப உங்ககிட்ட ஏதாவது ஐடியா இருக்கா?" என்று ஆர்வமாகக் கார்த்திக்கின் முகத்தைப் பார்த்துக் கேட்க, 


"நீ என்னை பேபின்னு கூப்பிடாதே! அது என்னோட பேபிஸ் கூப்பிடுறது. அப்பான்னே நீ கூப்பிடு!" என்று அவன் வயிற்றில் லேசாகக் குத்தியபடி கூறிவிட்டு, 


"அப்பான்னு கூப்பிட்டாலும் ஐடியா கொடுப்பேன்!" என்று சிரிக்கிறார் கார்த்திக்.  


விபாட்சுவும் கைலாஷ்சும் தயங்கியபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,


பாபிகிருஷ்ணா மட்டும், "சொல்லுங்கப்பா… ஏதாவது ஒரு ஐடியா எடுத்து விடுங்கப்பா. நீங்கதான் அந்தக் காலக் கிருஷ்ண பரமாத்மாவாச்சே." என்று கார்த்திக்கின் மிக அருகில் சென்று கேட்க,


"அப்படிப்போடு உன் வால எங்கிட்டயே நீட்டுற… டேய்… என்னையவே வார்ற பாத்தியா?" என்று மீண்டும் அவன் புஜத்தில் செல்லமாகக் கார்த்திக் தன் முஷ்டியால் குத்த, 


தன் புஜத்தைத் தடவியவாறே, "சாரிப்பா! சாரிப்பா! உங்கள நிறையப் பொண்ணுங்களுக்குப் பிடிச்சிருக்கல்ல? அதான்… வந்து… கிருஷ்ணா பரமாத்மாவத்தானே இன்னைக்கும் பெண்களுக்குப் பிடிச்சிருக்கு." என்று புருவங்களைச் சுழித்து, பின்ந்தலை முடியை மேலும் கீழும் அசைத்தபடி சமாளிப்பதாக நினைத்து உளறிக் கொட்டினான். 


"பொழச்சுப் போ… சரி… உங்க ஃபிரண்ட்ஸ் நேத்துக் கிளம்பும்போது, அடுத்து எப்ப பார்க்கலாம்னு ஏதாவது சொன்னாங்களா?" என்று மூவரையும் பார்க்க,


"இல்ல…"


"ஒரு ஃபார்மாலிட்டிக்குக் கூடச் சொல்லலையா?"


"இல்ல"


"நீங்க ஃபோன் பண்ணிக் கூப்பிடலாமே?"


"இன்னும் நம்பர் வாங்கல"


"என்னது?!!" என்று அதிர்ச்சி அடைந்தவர், மூவரையும் ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தார்.


பிறகு சாலையின் ஓரமாக நிறுத்தியிருந்த தனது காரின் பேனட்டில் குதித்து ஏறி அமர்ந்தபடி,


"ஓகே! உங்க பிரெண்ட்ஸ்க்கும் இப்போ உங்கள பாக்கணும்னு தோணும் இல்லையா?" என்று கேட்க,


"அப்பா… வந்து அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே?" என்ற கைலாஷ்சைப் பார்த்து சிரித்தவர்,


"மனசுக்குள்ள பொண்ணு வந்துட்டா மூளை வேலை செய்யாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் இப்பதான் பாக்குறேன்."


"அப்பா…"


"அப்பப் புடிச்சு 'அப்பா' என்கிறதத் தவிர வேற ஏதாவது பேசுறியா நீ?" என்று கூறி சிரித்தவர், 


"அந்த ரெண்டு பொண்ணுங்கள்ல யாரவது ஒரு பொண்ணுக்காவது உங்க மூணு பேர்ல ஒருத்தரப் புடிச்சி இருக்கணும்"


"எப்படிப்பா சொல்றீங்க?" என்று மூவருமே கண்கள் மின்னக் கார்த்திக் அருகில் சென்று கேட்க,


"அவங்க, உங்க மூணு பேரையுமே காலேஜ் மெட்ஸ் அப்படிங்கிற அளவுக்கு, இல்லைனா ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்ங்கிற அளவுக்குப் பழகி இருந்தா இந்நேரம் அவங்க நம்ம வீட்டுக்கு வந்து இருப்பாங்க."


"எப்படிப்பா சொல்றீங்க?" என்ற கைலாஷ்சிடம்,


"நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு வந்துரலையா?" என்று கேட்டார் கார்த்திக் 


"அப்பா நாங்க பசங்க!" 


"ஆனா நீங்களும் ஃப்ரெண்ட்ஸ் தானே? அவங்களும் ஜஸ்ட் பிரண்ட்ஸா இருந்திருந்தா இன்னைக்குப் போரடிச்சிருக்கும்ல? கிளம்பி வந்து இருப்பாங்க." என்று நிச்சயமாகக் கூறினார். 


"ஒருவேளை போரடிக்காம அவங்க தூங்கி இருந்தா?" என்று பாபி கிருஷ்ணா கேட்க, 


திரும்பி அவனல ஒரு பார்வை பார்த்தார்.


"உனக்கெல்லாம் செட் ஆகிறது ரொம்பக் கஷ்டம்டா!" என்று சொல்ல,


"அப்பா…" 


"டேய்! மாடுலேஷனையாவது மாத்தி கூப்பிடுடா!" என்று கலாய்த்துவிட்டு, மூவரையும் பார்த்து,


"அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்கு உங்கள புடிச்சிருந்தாலே போரடிக்கலைனாலும் உங்கள பாக்கணும்னு அவங்களுக்குத் தோணும்."


"அப்படியா?" என்று வாயைப் பிளந்தனர் மூவரும். 


"நிச்சயமா" என்று நண்பர்களின் முகபாவத்தைப் பார்த்து சிரித்தபடி,


"அப்போ அவங்க உங்களை எங்கே போய்ப் பார்ப்பாங்கன்னு நினைக்கிறீங்க?" என்று கேட்டார்.


"எங்கே?" என்ற மூன்று நண்பர்களிடம், 


"அதையும் நான்தான் சொல்லனுமா? உங்க வீட்டுக்குப் பக்கத்துல ஏதாவது பொதுமக்கள் அதிகமாகக் கூடுற இடத்துலதான் அவங்க நிச்சயமா இருப்பாங்க." என்று கூறியவர்,


"அவ்வளவு தான்… ஓகே! பாய்!" என்று கூறிவிட்டு பேனட்டிலிருந்து இறங்கி காரில் ஏறினார்.


"அப்பா! என்னப்பா? பாதியில் விட்டுட்டுப் போறீங்க? என்று பாபி கிருஷ்ணா கேட்க, 


காரின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவர்,


"நான் கோடு தான் போட முடியும். ரோடு நீங்க தான் போட்டுக்கணும்.  நான் ரோடும் போட்டுக் கொடுத்தேன்னா, உங்க கேர்ள் ஃபிரண்ட்ஸ் எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிடுவாங்க. பரவாயில்லையா?" என்றவர் கெக்கொலி கொட்டிச் சிரிக்க,


'வாய்ப்பு நிறைய இருக்கு மச்சான்' என்று நினைத்த மூவருமே,


"அப்பப்ப அநேகன் படக் கார்த்திக்கா மாறிடுறீங்கப்பா! போய்ட்டு வாங்க. பாய்‌!" என்று கூறி கார்த்திகை வழியனுப்பி வைத்தனர்.


மூன்று நண்பர்களும் கூடி, "அப்பா சொல்றபடி பார்த்தா, அவங்க ரெண்டு பேருக்குமே பாபிகிருஷ்ணா வீடும் கைலாஷ் வீடும் தெரியாது. என் வீடு மட்டும்தான் தெரியும். இல்லையா?"


"ஆமா ஆமா" 


"அப்போ… இந்த ஏரியாவுல தான் ஏதாவது ஒரு மால் அல்லது தியேட்டர்ல இருப்பாங்க." என்று விபாட்சு கூறவும்,


முதலில் அருகில் இருக்கும்

பார்க்குக்குச் செல்கின்றனர் மூவரும் தனித்தனியாகச் சென்று தேடியும் அங்கே சுபத்ராவும், நேத்ராவும் இல்லை. 



"நேத்ராவாவது கொஞ்சம் மாடர்ன் கேர்ள். ஆனா சுபத்ரா, பிரண்ட்ஸோட சேர்ந்து பார்க்குக்கும் தியேட்டருக்கும் போற மாதிரி தெரியல. அதனால நம்ம மால்ல போய்ப் பார்ப்போம்" என்று விபாட்சு கூற,


அதுவும் சரிதான் என்று சொல்லி மூவரும் மாலுக்குப் போக, 


என்ன ஆச்சரியம்! அங்கு நேத்ராவும் சுபத்ராவும் விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள்.


இருவருமே எதுவுமே வாங்க வந்தவர்கள்போல் தெரியவில்லை. சும்மா வேடிக்கை பார்க்க வந்தவர்கள் போல்தான் ஆர்வமே இல்லாமல் பொருட்களைப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தனர்.


அதைப் பார்த்த நண்பர்கள் மூவருக்கும் கார்த்திக் சொன்ன அந்த முத்தான வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. 


அந்த ரெண்டு பெண்களும் உங்களிடம் ஜஸ்ட் பிரண்ட்ஸாகப் பழகி இருந்தா நம்ம வீட்டுக்கு வந்திருப்பாங்க. அப்படி இல்லாம அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்காவது உங்க மூணு பேர்ல யாராவது ஒருத்தரப் புடிச்சிருந்தா மட்டும்தான் உங்களுக்காக வேறொரு இடத்தில காத்துக்கிட்டு இருப்பாங்க!"


அப்படின்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்ததும் மூணு பசங்களுமே, சந்தோஷத்தில் திக்குமுக்காடி "வாவ்" என்று கூறி  ஹைஃபை செய்து கொண்டனர்.


பாபி கிருஷ்ணா இன்னும் கொஞ்சம் மேலே போய் விபாவை தூக்கி, "அப்பா உண்மையிலேயே கிருஷ்ண பரமாத்மா தான்டா பொண்ணுங்களோட மனச அப்படியே ஸ்கேன் எடுத்து வச்சிருக்கார்." என்று கூறி ஒரு சுற்று சுற்றி இறக்கி விட்டான்.


"ஓகே! ஓகே! நாமும் எதார்த்தமா வந்தமாதிரி கடைகளப் பார்த்துக்கிட்டு நிப்போம்… அவங்க நம்மல பார்த்து வரட்டும்" என்று கூறிய விபாட்சு அருகில் இருந்த ஸ்வீட் கார்ன் கடையில் ஆளுக்கொரு கார்ன் ஆர்டர் செய்ய,


"அவங்க நம்மல பார்க்கலைனா?" என்று பாபி கிருஷ்ணாவும்,


"பார்த்தாலும், நாம போய்ப் பேசட்டும்னு எதிர்பார்த்து அவங்களும் இங்க வராட்டா?" என்று கைலாஷ்சும் காதைக் கடிக்க,


"அவங்க ஏரியால இல்லாத கடையாடா? இங்க நம்மல பார்க்கத்தான்டா வந்திருக்காங்க… நிச்சயமா நம்மல பார்த்ததும் வந்துடுவாங்க" என்று விபாட்சு கூற,


"நீ சொல்றது நேத்ராவுக்குத்தான் பொருந்தும் விபா. சுபத்ரா? தானா பேச வருவான்னா நினைக்கிற?" என்று பாபி கிருஷ்ணா சந்தேகிக்கவும்,


"நீ சொல்றது சரிதான்… ஆனாலும் நாம இங்கிருந்த படியே வாட்ச் பண்ணுவோம். நீ சொல்ற மாதிரி அவங்களும் அங்கயே நின்னுக்கிட்டிருந்தா நாம போய்ப் பேசிடுவோம்" என்று விபாட்சு தன் முன்னால் இருந்த கண்ணாடி வழியாகத் தோழிகளைப் பார்த்தவாறே கூற,


"இது எதுக்கு வேண்டாத வேல… நேரா போய்ப் பேசிடலாம். இந்த ஈகோதான் பலர் காதல்ல பெரிசா ஆப்பு அடிச்சிருக்கு." என்ற கைலாஷின் வார்த்தைகளையும் விபாட்சு கொஞ்சம் கேட்டிருக்கலாம்.


"இத ஈகோன்னு ஏன் எடுத்துக்கிற? சும்மா ஒரு இதுக்குதானே?" என்ற விபாட்சுவைப் பார்த்து,


"இவ்வளவு நாள் நாமலா போய்தானே பேசினோம்? இப்ப மட்டும் என்ன வந்துச்சு? யாரோ ஒரு பொண்ணா இருக்கயில வழிய போய்ப் பேசுறது, நம்மல சைட் அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் பிகு பண்ணிக்கிறதெல்லாம் காதலுக்கு செட் ஆகாது விபா..‌. வா போய்ப் பேசுவோம்." என்று அழைக்க,


"இரு இரு இரு… அவங்க நம்மல பார்த்துட்டாங்க… ரெண்டு நிமிஷம் பார்ப்போமே"


"நீ வெறும் பிம்பத்த மட்டும்தான் கடைசிவரை காதலிக்கப் போறியா?" என்று நல்ல நேரத்தில் பாபி கிருஷ்ணா வாயை வைத்தான்.


என்ன ஆகும்?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



Post a Comment

0 Comments