உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟8


உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟8


செவிலிப்பெண் அப்பொழுதுதான் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த டாக்டர்மீது மோதி, கையில் இருந்த அத்தனை மருந்துகளையும் கீழே தவறவிட்டாள்.  


செவிலிப்பெண்ணின் காலடியில் மருந்துகளும் கண்ணாடித் துண்டுகளும் சிதறிக் கிடந்தன.


 டாக்டர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி, "எவ்வளவு காஸ்ட்லியான மருந்து தெரியுமா?  பேசன்ட் ரூமுக்குள்ள இவ்வளவு வேகமாகவா வர்றது?" என்று அடிக்குரலில் உறும,


கண்களிலிருந்து கண்ணீர் வராதவண்ணம் கண்களைச் சிமிட்டி, பயத்தில் எச்சில் விழுங்கிவிட்டு, "சாரி சார்" என்று அவளுக்கே கேட்காத வகையில் மன்னிப்பு கோரினாள்.


"இப்ப இந்தப் பொண்ணுக்குக் கொடுக்கிறதுக்கு மருந்து இருக்கா? இல்லையா?" என்று கேட்டார். 


அதற்கு செவிலிப்பெண், "இல்லை!" என்று கண் கலங்கி, தலை குனிந்து தலையாட்ட, 


"சரி! நான் அடுத்த ரெண்டு ரூமுக்குப் போயிட்டு வரதுக்குள்ள மருந்த அரேஞ்ச் பண்ணி வைக்கிறீங்க. ஓகே?' என்று சீறிவிட்டு வெளியேறினார்.


கிளீனரை ஃபோனில் அழைத்து, அறையைச் சுத்தம் பண்ணவரச் சொல்லிக்கொண்டே அறையை விட்டு வேகமாக வெளியேறினாள் செவிவிப்பெண்.


செவிலிப்பெண் வெளியேறுவதைப் பார்த்தபடி தனது அக்கா தேவியின் அருகில் அமர்ந்த நந்திதா,


"என்னைய மருந்து வாங்கச் சொல்லி அனுப்பிட்டு, இந்த நர்ஸ் எதுக்குக்கா ரூமுக்குள்ள வந்தாங்க?" என்று கேட்டாள்.


"டாக்டர் வரதுக்குள்ள எனக்குப் பிரஷர் செக் பண்ணிரலாம்னு வந்தாங்க. பாவம்…" என்ற தேவியிடம்,


"கொஞ்ச நேரம் வாசல்லயே எனக்காக இருந்திருக்கலாம். ப்ச்சு, கீழ இருக்குற மருந்துக்கடையில, வேகமாப் போய் வாங்கிட்டு வந்தேன். இப்ப மருந்து ஃபுல்லா வேஸ்ட் ஆயிடுச்சு. இந்த மருந்து கொடுக்குறதுக்கு டைமிங் எதுவும் இருக்கா அக்கா?" என்று நந்திதா கேட்க,


தான் கீழே இறங்கி அவசரமாக வாங்கி வந்த மருந்து கொட்டிவிட்ட கோபத்தைக்கூடக் கவலையாக வெளிப்படுத்திய நந்திதாவின் கையைப் பிடித்து,


"அதெல்லாம் இல்லன்னு தான் நினைக்கிறேன் நந்து. எப்பவுமே அந்த இன்ஜெக்ஷனை டாக்டருக்கு முன்னாடி தான் போடுவாங்க." என்று ஆறுதலாகக் கூறியவளிடம்,


"ஓ… ஆனா… நான் பக்கத்து ரூம் பேசன்ட்டோட வைஃப்ட்ட விசாரிச்சேன்… அவங்களுக்கெல்லாம் டாக்டர் வந்துதான் ஊசி போடுறது, நர்ஸ் தான் டேப்லட் குடுக்கனும்னு இல்லயாங்க்கா… பேசன்ட்க்குத் துணைக்கு இருக்கிறவங்க கையில மருந்து, மாத்திரைகள குடுத்து, வேளாவேளைக்குப் பேசன்ட்டுக்குக் குடுத்துடச் சொல்லீருக்காங்க… உனக்குத் தான் எல்லாமே அவங்க கைல வச்சிருக்காங்க… இது ஒரு மாதிரி, ஏதோ வித்தியாசமா இல்ல?" என்று யோசனையுடன் கூறிய நந்துவைப் பார்த்து,


"அவங்களுக்கு சாதாரணமான ஆப்ரேஷனா இருக்கும் நந்து" என்று கூறினாள் தேவி, 


"அப்படி இல்லக்கா. இந்த வார்டு ஃபுல்லா, ஆக்சிடென்ட்டலா கண்ணு பாதிக்கப்பட்டவங்களுக்குத் தான் ஆப்பரேட் பண்ணி இருக்காங்க." என்று கூறினாள் நந்து.


"உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?" என்ற தேவியிடம்,


"எல்லாமே டாக்டர்ஸ் கைல வச்சிருக்காங்கனதும் ஒரு சின்ன டவுட்டுக்கா. அதான், வீட்டுக்குத் திரும்பிப் போறேன் இல்லையா? அப்பலாம் அடுத்தடுத்த அறைல துணைக்கு வந்தவங்கட்ட விசாரிக்கிறேன்." என்று மிகவும் கவலையாகப் பேசிய நந்திதாவிடம்


"நீ தேவையில்லாம குழப்பிக்கிற நந்து. இங்க எல்லாம் சரியாத்தான் போயிட்டு இருக்கு" என்ற தேவியிடம்,


"அப்படிங்கற? அப்பசரி! உனக்கு ஏதாவது வேணுமா?" என்று கேட்கும்போதே நந்திதாவிற்கு,


அறைக்குள், தேவி தனியாக நடந்துகொண்டிருந்ததாக செவிலிப்பெண் கூறியது ஞாபகம் வர,


"அக்கா ப்ளீஸ் தனியாலாம் நடக்காதக்கா ப்ளீஸ்… இப்பதான் ஆபரேசன் பண்ணி மூன்றுநாள் ஆகுது…" என்று நந்திதா கெஞ்சவும், 


தேவிக்கு, அவள் தனியாக இருக்கும்பொழுது அவள் நடப்பதற்கு உதவியது யார்? என்ற சந்தேகம் எழ,


"எனக்காக நர்ஸ்ட்ட கேட்கப்போனவ, நர்ஸ் இங்க இருக்கும்போதுதான் வந்தியா நந்து?" என்று நந்திதாவிடம் கேட்டாள்.


"ஆமாக்கா. ஏன்?" என்று, தான் கொண்டு வந்த பேக்கில் எதையோ எடுத்தவண்ணம் கேட்டாள்.


"இல்ல, நீ போன கொஞ்சநேரத்திலேயே நீ திரும்பி வந்துட்ட மாதிரி இருந்துச்சு. நீ இங்கதான் இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு நடந்துட்டேன்" 


"என்னக்கா நீ? அப்பவே நான் வந்திருந்தா  உன் கையப்பிடிச்சுத்தானே நடக்க வச்சிருப்பேன்? தனியா நடக்கவிடுவேனா?" என்ற நந்திதாவின் பயம், அவள் குரலில் தெரிய,


'சொல்லும்போல இந்தத் தொடைநடுங்கி என்னைத் தனியா நடக்கவிட்டிருக்காது' என்று எண்ணிய தேவி, 


நந்திதா தன்னைத் தொடும் உணர்வை அறிய முற்பட்டு,


"எங்கே என் கையைப் பிடி" என்று தன்னுடைய கையை நந்திதாவின் முன் நீட்ட,


"ஏன்க்கா?" என்று கேட்டுக்கொண்டே, நந்திதா, தேவியின் கையைப் பற்றினாள்.


அப்பொழுதுதான் தேவிக்கு, 'தன் கையைப்பிடித்து நடக்க வைத்தது நந்திதாவே இல்லை' என்று ஊர்ஜிதமானது.


நந்திதா எப்பொழுதுமே அழுத்தமாகப் பிடிக்கமாட்டாள். 


'இறுக்கிப் பிடித்தால் கை வலித்துவிடுமோ?' என்பதுபோல் மிகவும் மிருதுவாகப் பிடிப்பவள்…


'ஆனா… சிறிது நேரத்திற்கு முன் என்னைப் பற்றிய கை, நன்றாக இறுக்கிப் பிடித்திருந்தது…' 


'நான் தடுமாறினாலும் விழுந்து விடாத அளவுக்கு அந்தப் பிடி இருந்தது…'


'அதேபோல் இவள் கை இளவம் பஞ்சைவிட மென்மையாக இருக்கிறது…'


அதோடு, தன் தங்கை விரும்பும்  லாவண்டர் மணமிக்க பெர்ஃப்யூம் வாசனை கூடத் தன்னை நடத்தி சென்றவர்களிடமிருந்து வரவில்லை என்பதையும்,


'அவர்கள்மீது ஏதோ மருந்து நெடி தான் வந்தது' என்றும் அறிந்து கொண்டாள்.


'மருந்து நெடிலாம் டாக்டர்ஸ், நர்ஸ்கிட்ட கூட அவ்வளவா வருமா வராதான்னு தெரியல. ஆனா இன்னொரு பேசன்ட்கிட்ட மருந்து நெடி வர வாய்ப்பு இருக்கே?' என்று தோன்றவும், 


'அப்படினா அக்கம் பக்கத்துல இருக்கிற ரூம்ல இருந்து எந்தப் பேஷண்டாவது வந்து, எனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பாங்களா?' என்று சந்தேகம் வரும்போதே, 


'அது எப்படி முடியும்? ஒவ்வொரு ரூம் கதவுக்கிட்டயும் நர்ஸ் இருப்பாங்களே? அவங்களுக்குத் தெரியாம எப்படி ரூமுக்குள்ள வர முடியும்? கடவுளே என்னதான் நடக்குது இங்க?' என்று யோசித்த தேவி, 


நந்திதாவின் மொபைல் ஃபோனில் சார்ஜ் ஏறிவிட்டதா? என்று ஆராய்ந்து கொண்டிருந்த நந்திதாவிடம்,


"நான் தனியா நடந்ததால என்மேல கோபமா நந்து? பேசாம இருக்க?" என்று மேலும் துருவ,


"நீவேற ஏன்க்கா? உங்கூட என்னைக்காவது நான் பேசாம இருந்திருக்கேனா? நீ என்னைய அடிச்சாக்கூட உங்கூடப் பேசாம இருக்க முடியுமாக்கா என்னால?" என்று ஃபோனைக் கீழே வைத்துவிட்டுப் பேசிய நந்திதாவின் குரல் லேசாக உடைய,


"சரி நீ ரெஸ்ட் எடு… நான் ரெண்டு ரௌண்ட் வாக் பண்ணிடுறேன்."


"அக்காஆஆஆ… உடம்பு குண்டாயிடும்னு பயப்படுறியா? உனக்குக் கண்ணு தெரிஞ்சதும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து யோகா, ப்ராணாயாமம்லாம் பண்ணி, ஸ்லிம் ஆயிடலாம்க்கா… ஓகேயா?" என்று கேட்பவளிடம் மறுக்கத்தோன்றாமல் படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு,


"இங்க ஏதாவது புக்ஸ் ஆர் நியூஸ் பேப்பர் இருந்தா வாசிக்கிறியா? சும்மாவே இருக்கிறது ரொம்பக் கஷ்டமாயிருக்கு." என்று தேவி கூறவும்,


"எனக்கு வாய்விட்டுப் படிக்கிறதுலாம் ஒத்துவராது… இரு, என் செல்ஃபோன்ல பாட்டு கேட்கிறியா?" என்று ஆர்வமாகக் கேட்டதும்,


"பாட்டுச் சத்தம் வெளியே கேட்டா மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும் நந்து" என்று தேவி வருத்தமுடன் கூற,


"ஹெட்செட்ல போட்டுக் கேளு!" என்று கூறி, தனது மொபைல் போனில் ஹெட் செட்டைப் பொருத்தி தனது அக்காவின் கைகளில் கொடுத்து, 


மொபைல் போனில் பாடல்கள் அடங்கிய ஃபோல்டரைத் தேர்வுசெய்து தேவியிடம்  கொடுத்துவிட்டு, 


தனக்கென உள்ள இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.


நந்திதாவின் மொபைல் ஃபோனில் மாட்டப்பட்டிருந்த ஹெட்செட் ஐக் காதில் பொருத்திய தேவி, 


பாடலைக் கேட்க ஆரம்பித்தாள்.


"காதலா காதலை

காதலால் சொல்லடா

மௌனமாய் கொல்வது

நல்லதல்லடா…


உயிரிலே உயிரிலே

சடுகுடு ஆடினாய்

உண்மையில் உண்மையை

புரியாமல் போகிறாய்…"


என்ற பாடல் முடிந்ததும்,


"கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை 

என் கண்களைப் பறித்துக்கொண்டு

ஏனின்னும் பேசவில்லை…"


அடுத்து,


"ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதலன் நான்தான் என்று….

அந்தச் சொல்லில் உயிா் வாழ்வேன்…"


என்று அடுத்தடுத்து இதே ரீதியில் பாடியதும்,


தன்து தங்கை நந்திதாவை யோசனையுடன் பார்த்தாள் தேவி.


நந்திதா ஒரு கதை புத்தகத்துடன் அவளுக்கான படுக்கையில் சாய்ந்து அமர்ந்து, முகமெல்லாம் பளபளக்க இளம் புன்னகை இதழ்களில் உறைந்திருக்க, வெளியுலகம் மறந்து படித்துக்கொண்டிருந்தாள்.


'அது என்ன கதை? இவ்வளவு சந்தோஷமாகப் படிக்கிறாளே?' என்று எண்ணிய தேவி கதையின் தலைப்பைப் பார்த்தாள்.


பிரபல எழுத்தாளர் ரமணிச்சந்திரன் அவர்கள் எழுதிய "எல்லாம் உனக்காக!!" என்று அச்சிட்டிருந்தது.


'நந்துட்ட நிறய மாற்றம் தெரியுதே? அவளோட மொபைல்ல சோகமான காதல் பாடல்களை  மட்டும்தான் பதிஞ்சு வச்சிருக்கா… அதுவும் பெண்பாடகிகள் குரல்ல மட்டும்… படிக்கிற கதையும் காதல்கதை!!.' என்று தனது தங்கையின் முகத்தையே பார்த்தாள்.


'கதை படிக்கும் இவள் முகம் ஏன் இவ்வளவு பிராகாசமா இருக்கு? இவளோட கண்ணுல கனவு தெரியுதே…' என்று யோசனையாகப் பார்த்தவள்,


'நந்து யாரையாவது லவ் பண்றாளா?' என்று எண்ணியபடியே நந்திதாவின் முகத்தைப் பார்த்து,


மேலும் விபரம் தெரிந்து கொள்ள "யார் எழுதுன புக் நந்து?" என்று கேட்டாள்.


சட்டென்று தன் கையிலிருந்த  புத்தகத்தை, எமுதுகுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டு தேவியைப் பயத்தோடு பார்த்தாள்.


தேவி தன்னையே பார்க்கவும், 

வியர்வைத் துளிகள் சரியான நேரத்தில் அவளது மனதை காட்டிக் கொடுப்பதுபோல் அருவியாய் பெருக்கெடுக்க,


துப்பாட்டாவால் வியர்வையை ஒற்றி எடுத்தாள். 


"இது அக்கா… வந்து, அப்துல் கலாம் சார் எழுதுன "அக்னிச் சிறகுகள்"க்கா." என்றதும்.


'இதுக்கு ஏன் பொய் சொல்றா? காதல்கதை படிக்கிறது தப்பா?… நான் அவளப் பார்க்கிறது தெரிஞ்சும் எப்படிப் பொய் சொல்றா?' என்ற எண்ணம் ஓடும் போதே, 


தேவியின் மனசாட்சி, 'ஏன்னா உனக்குக் கண்ணு தெரியாது' என்று நிதர்சனத்தை எடுத்துக்காட்ட, 


அனிச்சைசெயலாகத் தன் கண்களைத் தொட, கண்களில் போடப்பட்டிருக்கும் கட்டுக்களில் விரல்கள் படர்ந்தது.


தனக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட உணர்வு வந்ததும், தேவிக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.


'எது உண்மை?' 


'எனக்கு எப்படிக் கண்ணுல இருக்குற கட்டை மீறி நந்து புக் படிக்கிறது தெரியுது?'


'ஒருவேளை என்னோட கற்பனை வடிவமா இருக்குமோ?' என்று தோன்றும் பொழுதே


'ஒரு வருசமா இருளடைஞ்சு கிடக்கிற என் கண்களுக்குப் புது ஒளி வரப்போறதால ஏற்பட்ட இல்யூசனோ?' என்ற சந்தேகம் எழ,


'அப்படித்தான் இருக்கும். நானாவே கற்பனை பண்ணிக்கிறேன்…

கட்டை மீறிக் கண்ணையேத் திறக்க முடியல… பின்ன எப்டி நந்து படிச்சுக் கிட்டிருக்கிறதும், படிக்குற புத்தகத்தோட தலைப்பும் தெரியும்?' என்று உண்மையை உணர்ந்தாலும்


'எனக்கு எப்டி இப்படிலாம் கற்பனையா தோணுது?' என்ற சந்தேகமும் 


'ரமணிசந்திரன் அவர்கள் எழுதிய இந்தக் கதையை நான் படிச்சதேயில்லையே? அவ்வளவு ஏன்? அந்தப் புத்தகத்தோட அட்டையைக் கூட இப்பத்தானே பார்க்கிறேன்!!!… பின்ன எப்படி?' என்று குழம்பியவளுக்குத் தலை வலிப்பதுபோலிருக்க,


"நல்ல விசயங்களை யோசிங்க, கவலைப்பட்டா தலைவலி வந்துடும்… கண்ணுல ஆபரேஷன் பண்ணீருக்கும்போது தலை வலிச்சா, கண்ணையும் பாதிக்கும்." என்று டாக்டர் கூறியது நினைவில் வந்து எச்சரிக்கவும்,


அப்படியே சரிந்து படுத்தாள்.


கவனத்தைத் திருப்பினால் குழம்பம் மறைந்து தலைவலிப்பதும் சரியாகிவிடும் என்று எண்ணி,


யோகா வகுப்பில் கற்றுக்கொடுத்த தியானத்தை செய்ய முயற்சித்துக் கண்களை மூடினாள்.


அவளுக்கு மிகவும் பிடித்த பச்சை ஆடை உடுத்திய ஓங்கி உயர்ந்த மலையின் அடிவாரம் செம்மண் பூசி சிவந்திருக்க,


அங்கே நின்று அதன் அழகைக் கண்டு ரசிக்கும்போதே மூலிகை நறுமணத்துடன் தவழ்ந்து வந்த குளிர்ந்த தென்றல் தேவியை அணைக்க,


சிறிய தொங்கட்டான் ஆடும் செவிகளில் மிக அருகில் ஓடும் நதியின் சலசலப்பு மோகன ராகம் பாட… 


அந்தச் சப்தத்தில் ஈர்க்கப்பட்டு நதியருகில் சென்று கண்ணாடிபோல் பளபளக்கும் நதியில் பாதம் பதித்தவளின் பாதத்தை இதமாக வருடிச் சென்றது வைகை.


மரகதக்கல் போல் கண்களுக்குக் குளிர்ச்சியளிக்கும் பச்சைமலை, கமகமவென வீசும் நறுமணத்தால் நுரையீரலை நிரப்பும் மூலிகைக் காற்று, மனதையும் நிரப்ப, பலவித பறவைகளின் இனிய கானம் இதழ்களில் புன்னகையாய் விரிய, கால்களைத் தொட்டுத்தழுவும் தெளிந்த நதி… இதைவிடப் பேரின்பம் தரும் சொர்க்கம் என்று ஒன்று இருக்க முடியாது… 


என்று ஆழ்ந்து கொண்டிருந்த தேவியின்


தலையையும் நெற்றியையும் அந்த உருவம் இதமாகப் பிடித்துவிட,


இதுவும் தேவியின் தியானத்தைக் கலைக்காமல் இன்னும் சுக அனுபவத்தையே கொடுத்தது.


மூலிகை வளம்மிக்க மலையடிவார ஆற்றங்கரை மணற்பரப்பில் யோகா செய்யும் விரிப்பின் மீது தேவி படுத்திருக்க,


மாலை நேர கதிரவன்கூட இனிய உணர்வுகளைத் தூண்டிவிட, கண்களை மூடி அந்த இனிய அனுபவத்தை அனுபவிக்கும் அழகான தருணத்தில்,


அவள் விரும்பும் வாலிபன், தேவியைத் தன் மடியில் கிடத்தி, அவளது தலையையும், நெற்றியையும் மசாஜ் செய்துவிட,

தியானம் என்பதையும் மறந்து உறங்கச் சென்றவளை,


எங்கோ தூரத்தில் கேட்ட மனதிற்கினிய இசை எழுப்பியது.


கொஞ்சம் விழிப்பு வரவுமே, தான் தியானத்தில் ஆழ்ந்திருப்பதும், அப்படியே உறங்கி விடக் கூடாது என்றும் தோன்ற,


அவளது தலைவலியும் பஞ்சாய்ப் பறந்திருக்க, தியானத்திலிருந்து எழுவதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கனவுலகத்திலிருந்து வெளியேறினாள்.


அழகிய சொர்க்கத்திலிருந்து வெளியே வந்து, மருத்துவமனையில் படுத்திருப்பது வரை உணர்ந்தாலும், 


அவளது தலையை மசாஜ் செய்யும் உணர்விலிருந்து மட்டும் தேவியால் வெளியே வர இயலாமல் மெல்ல கண்விழித்தாள்.


நன்றாக சுய உணர்வு வந்தும், நிஜமாகவே தன்னுடைய தலையை யாரோ பிடித்துவிடுவதை அவளால் நன்றாக உணர முடிந்தது.


"நந்து போதும்! தலைவலி சரியாகிடுச்சு நான் எழுந்துக்கிறேன்" என்று கூறியபடி தன் தலையில் வைத்திருந்த அந்த உருவத்தின் கைகளை விலக்குவதற்காகத் தோட,


"என்னடாமா? எந்திரிச்சுட்டியா? அம்மா சாப்பாடு கொண்டு வந்துட்டேன். வா! சாப்பிடுவோம்" என்ற அம்மாவின் அன்புகலந்த குரல் கேட்டது.


"நீங்களாம்மா? நந்து கிளம்பிட்டாளா? பாவம் என்னால அவளுக்கும் அலைச்சல்." என்ற தேவி கவலை கொண்டது பொறுக்காமல்,


தேவியின் கைகள், நெற்றியை 'சுடுகிறதா?'1 என்று தொட்டுப் பார்த்தபடி "நீ வேற அந்த ஊமைக்கோட்டான் வீட்டு வேலையிலிருந்து தப்பிச்சுக்கிறத்தான் இங்க வருது" என்று, அம்மா சிரித்துவிட்டு.


தேவிக்கு உணவு பரிமாறத் தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.


எழுந்து அமர்ந்த தேவி, கட்டிலிலிருந்து இறங்க,


அம்மா பதறிப்போய் ஓடிவந்து, "தனியா கட்டிலவிட்டு இறங்கலாமா தேவி?" என்று அதட்ட,


"ஹ… யாருன்னு நினைச்சீங்க இந்த தேவிய? கைய விடுங்க… இப்ப பாருங்க எப்டி ரெஸ்ட்ரூம்முக்குப் போறேன்னு" என்று அலட்டியவளை,


"இது விளையாடுற இடமுமில்ல, விளையாடுற நேரமுமில்ல. ஒழுங்கா என் கையப் புடிச்சே நட" என்று தேவியின் கையைப் பிடித்துக் குளியலறைக்கு அழைத்துச் சென்றார்.


தலையைப் பிடித்து விட்டது தனது தாய் என்று நம்பும் தேவி, அறைக்குள் உலாவும் அமானுஷ்ய உருவத்தை அறிவாளா?


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


குடியரசு தினவிழா கோலாகலமாக ஆரம்பமானது.


"இந்தக் கல்லூரியிலேயே படித்து, இன்று, பெரிய்ய பங்குச்சந்தை ஆலோசனை நிறுவனத்தை மதுரையில் ஸ்தாபித்தது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் சிலவற்றில் கிளைகளையும் உருவாக்கி, அவற்றைத் வெற்றிகரமாகத் திறம்பட நடத்தும் இளம் தொழிலதிபர் திரு. வெற்றி மாறனை சிறப்பு விருந்தினராக மகிழ்வுடனும், பெருமையுடனும் வரவேற்கிறோம்" என்று மைக்கில் ஒரு பெண்ணின் குரல் நான்கு திசையிலும் ஒலிக்க,


ஆடி காரிலிருந்து இறங்கினான் முப்பது வயதைத் தொடும் வெற்றிமாறன்‌.


அவனை, மாலை மரியாதை செய்து மேளதாளத்துடன் மேடையை நோக்கி அழைத்துச் சென்று, அவனுக்கான இருக்கையில் அமர வைக்க,


"நமது கல்லூரி மாணவ மாணவியர் இப்போழுது தங்களின் இனிமையான குரல்வளத்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழாவைச் சிறப்பிக்க உள்ளனர்." என்று அறிவிக்கவும், 


மேடைக்கு எதிரில் உள்ள திடலில் நின்றுகொண்டு,


மாணவ மாணவிகள் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.


"அடுத்ததாக, நம் குடியரசு தின விழாவிற்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் விதமாக நம் கல்லூரி மாணவிகளான நேத்ரா, சுபத்ரா பரதநாட்டியம் ஆடி மகிழ்விக்கப் போகிறார்கள்." என்று அறிவிக்க,


அதே திடலில் பரந்து விரிந்து கிளைபரப்பிய வேப்பமரங்களின் நிழலில் பரதநாட்டியம் ஆடுவதற்கேற்ப வண்ண விரிப்புகள் மற்றும் திரைச்சீலைகள் போன்ற ஏற்பாடுகள் வேகமாக நடந்தது.


நாட்டியத்திற்குப் பாடல், நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகளுடன் இசைக்கலைஞர்கள் விரிப்பின் ஒருபுறமாக அமர்ந்தனர்.


நடனம் ஆடுபவர்களான சுபத்ரா, நேத்ரா மற்றும் நான்கு மாணவிகள்  விரிப்பின் மையப்பகுதியில் தயார் நிலையில் இருக்கத் திரை விலக்கப்பட்டது.


மாணவமாணவியர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய அனைவரது கண்களும் சுபத்ரா நேத்ராவை ஆர்வமாக நோக்க,


விபாட்சுவின் பார்வையில் சுபத்ராவும், 


அவனுடைய இரு நண்பர்களான  பாபி கிருஷ்ணா மற்றும் கைலாஷின் பார்வையில் நேத்ராவையும் பார்க்கும்போது பரதநாட்டிய அலங்காரத்தில் இருப்பதுபோல் இல்லாமல், கல்யாண அலங்காரத்துடன், மணமேடையில் நிற்பதுபோல் தோன்றியது.


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



Post a Comment

0 Comments