உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟7


உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟7


காலை உணவு முடித்ததும், அறைக்குள் வந்த பகல் வேளையில் தேவியின் அறைக்குப் பொறுப்பேற்கும் செவிலிப்பெண்,


"என்ன தேவி? ராத்திரி நல்லா தூங்குனீங்களா?" என்ற சம்பிரதாயக் கேள்விகளைக் கேட்டபடியே தேவியின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலையை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.


தேவி சிரித்துக்கொண்டே "ம்ம்ம்" என்று தலையசைத்தாள்.


"சரி! நான் வாசல்லதான் இருக்கேன் உங்களுக்கு ஏதாவது தேவைன்னா, அந்த ஸ்விட்ச்சைத் தட்டி என்னைக் கூப்பிடுங்க." என்ற கூறி நகரப் போனவரிடம், 


"சிஸ்டர் படுத்தே இருக்கிறது எனக்கு ஒரு மாதிரி உடம்பு வலிக்குது. ராத்திரி தூக்கம் வரமாட்டேங்குது. எங்கம்மா கைய புடிச்சுக்கிட்டு இந்த ஹாஸ்பிடல்லை சுத்தியாவது சும்மா நடந்து கொடுக்கவா அப்பப்போ?" என்று கேட்க.


"ஏன் உங்களுக்கு இந்தக் கொலைவெறி? ஏற்கனவே நைட்டூட்டி சிஸ்டர், ஜக் விசயத்துல எப்ப திட்டுவாங்கப் போறாங்கன்னு தெரியாம திரியிறாங்க… இப்ப நான் உங்களை வெளியே நடமாட விட்டு நானும் திட்டு வாங்கணும். அதானே உங்க ப்ளான்? ஒரு முடிவோட தான் இருக்கீங்களா?' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.


"கொரியன் சீரிஸ்ல எல்லாம் பாத்திருக்கீங்களா? ஹாஸ்பிடல்லையே வாக் பண்ணிட்டு இருப்பாங்க. " என்று தேவி ஆர்வமாகக் கூற,


"அதுக்கு நீங்க கொரியாவில் பிறந்து இருக்கனும்." என்று மடக்கினாள் செவிலிப்பொண்.


"நான் யாரையும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். டாக்டர்ஸ் ரௌண்ட்ஸ் வரதுக்குள்ள ரூமுக்கு வந்துடுவேன்… ப்ளீஸ் சிஸ்டர். படுக்கையிலேயே இருக்கிறது உடம்பு வலிக்குது."


"இந்த ரூமுக்குள்ள வேணேம்னா நடங்க… வெளியே நடக்குறதுலாம் அலவ்டு கிடையாது. யாருக்கும் இன்ஃபக்ஷன் ஆயிடக் கூடாது…  ஆனா… உங்களுக்குக் குடுக்கிற மருந்துகளுக்கேத் தூக்கம் வருமே?…" என்று கூறிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேற.


"உடம்பு ரொம்ப வலிக்குதாம்மா?" என்று தேவியின் அம்மா கவலையோடு கேட்டார்.


"ஆமாம்!* என்று கூறினால் மீண்டும் அம்மா காலைப் பிடித்து விட வந்துவிடுவார்களோ?' என்று எண்ணிய தேவி,


"இல்லம்மா… ரொம்ப போரடிக்குது… அதச் சொன்னா வெளியே விடமாட்டாங்கன்னு இப்படிச் சொன்னேன்." என்று தேவி சமாளிக்கவும், 


'இவ என்ட்ட சும்மா சொல்றா' என்று நினைத்தவர்,


"நான் கை, காலைப் பிடிச்சுவிடுறேன் தூங்குறியா?" என்ற தேவியின் அம்மாவின் வார்த்தைகளில் தெரிந்த வலி, தேவியையும் தாக்க,


"அம்மா… எனக்கு இப்பதான் கண்ணு தெரியாமப் போச்சா? ஒரு வருசமாவே கண்ணு தெரியாமத்தானே இருக்கேன்?… ஆனா, நான் அத பெரிசா எடுத்துக்காம எவ்வளவு ஆக்டிவ்வா இருந்தேன்?" என்று உற்சாகமாகக் கூறிய தேவியிடம்,


"அதசரி… ஆனா நல்லா தூங்குனும்னு சொல்றாங்களே… ராத்திரி உடம்ப பிடிச்சு விடுறேன் நல்லா தூங்கு." என்று கூறியபடி தேவியின் கட்டிலுக்கு அருகில் தனது நாற்காலியை இழுத்துப் போட்டார்.


"ஏம்மா… நான்தான் நேத்து ராத்திரியே என் காலைப் பிடிச்சு விடாதீங்கன்னு சொன்னேன்ல?" என்று வேகமாகத் தடுத்த  தேவியைப் பார்த்து,


"அதுனால என்ன?" என்று கேட்டார்.


"நீங்க தெம்பா இருந்தாத்தான் நான் தைரியமா இருக்க முடியும்… நான், நந்து வந்ததும் இந்த ரூம்முக்குள்ளயே நடந்துக்கிறேன்." என்று கூறிச் சிரித்தாள்.


தன் மகளின் சிரிப்பைப் பார்த்து, கண்கலங்கிய தேவியின் அம்மா,


'ஆண்டவா! இவ்வளவு தங்கமான பொண்ணுக்கு ஏன் இப்படியொரு சோதனை? இப்பயாச்சும் கண்ணைக் குடுத்துடு கடவுளே' என்று மனமுறுகி வேண்டியவர்,


தேவி படுக்கையில் சாய்ந்து படுக்கவும்,


"உனக்குப் போரடிக்குதுன்னியே நான் வேணும்னா கதை புக் வாசிச்சுக் காட்டவா"' என்றதும்,


"சூப்பரான ஐடியாம்மா! ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி கதை படிச்சீங்கன்னா நல்லா தூங்கிடுவேன்" என்று கூற,


"சரி… இன்னும் கொஞ்ச நேரத்துல நந்து வந்துடுவா, நான் போயிட்டு வரும்போது உனக்குக் கதை புக் கொண்டு வர்றேன்" என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே


நந்திதா வந்துவிட, அம்மா கிளம்பவும்,


"அம்மா இங்கயே கேன்டீன்ல சாப்பிட்டுக்கலாம்மா. நீங்க அலைய வேண்டாம்… எவ்வளவு வேலைதான் பார்ப்பீங்க?" என்றதும்,


"அதெல்லாம் உடம்புக்கே ஒத்துக்காது… அப்புறம் உங்க அப்பாவுக்கு என்ன பண்ண?" என்று கூறிவிட்டு வெளியேறினார்.


"நந்து எனக்கு மேலு, காலெல்லாம் ரொம்ப வலிக்குது. இந்த ரூமுக்குள்ளயே நடப்போமா?" என்று தங்கையிடம் கேட்க,


"உடம்ப கெடுத்துக்காதக்கா… வேளாவேளைக்கு நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு… உடம்பு குண்டானாலும் பரவாயில்ல… இன்னும் பன்னெண்டு நாள்ல கண்கட்ட பிரிச்சுட்டா கண்ணு தெரிஞ்சுடும்… அப்புறம் நீயே ஆசப்பட்டாலும் இப்படி ரெஸ்ட் கிடைக்காது"


"ஐயே வாடின்னா… வா?" என்று தேவி வற்புறுத்த,


"நான் டாக்டர் ட்ட கேட்காம எதுவும் செய்யமாட்டேன்…"


"எரும… சிஸ்டர் தான் சொன்னாங்க. ரூமுக்குள்ள நடந்துக்கலாம்னு."


"எனக்கு ரொம்ப பயமாயிருக்குக்கா… எங்காவது தட்டி விழுந்துட்டா நான் என்ன செய்வேன்?"


"உன் கையத்தானே பிடிச்சுக்கிட்டு நடக்கப்போறேன்? பின்ன என்ன?"


”ப்ளீஸ்க்கா… பேசாம உட்காரு நான் காலேஜ்ல நடந்த காமடியெல்லாம் சொல்றேன்."


"பயந்தாங்கொள்ளி… இப்ப வர்றியா நானா எந்திரிச்சு நடக்கவா?"


"ஏன்க்கா இப்படிப் பண்ற? இரு! நான் சிஸ்டர்ட்ட கேட்டுட்டு வர்றேன்… அதுக்குள்ள கட்டிலவிட்டு எந்திரிச்சுடாத… ப்ளீஸ்… உனக்குக் கண்ணு தெரியனும்னு நாங்க பாடா படுறோம். நீ எதையாவது பண்ணிடாத ப்ளீஸ்… இரு வர்றேன்." என்று கூறியதோடு கட்டிலின் இரு பக்கமும் இருக்கும் ஸ்டாண்ட்டை ஏத்தி விட்டு,


திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு சென்றவள்,


"எனக்காகவாவது நான் சொல்றது கேளு… நான் வர்றவரை கீழ இறங்கிடாத" என்று கூற,


"சரி…" என்று சிரித்த தனது அக்காவைக் கவலையுடன் பார்த்தவாறே கதவைத் திறந்து நந்திதா வெளியேறினாள்.


மீண்டும் கதவு திறக்கும் ஓசை கேட்டதும்,


"என்ன? சிஸ்டர் நடக்கலாம்னு சொல்லிட்டாங்களா? வா!வா! என் கையப் பிடி." என்று தேவி கூற,


படுக்கையின் பக்கவாட்டு ஸ்டாண்ட்டை இறக்கிவிட்டு, தேவியைப் பத்திரமாகக் கட்டிலை விட்டு இறக்கி நடத்திக் கொண்டு செல்லவும்,


"எங்கங்க எந்தப் பொருள் இருக்கும்? எவ்வளவு தூரம் ஸ்பேஸ் இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டா நானே நடந்துக்குவேன்." என்று கூறிவிட்டுத் தனது தங்கையின் திட்டுக்காகக் காத்திருந்த தேவி,


"என்ன கொபமா? பேசாம வர்ற?" என்று கூறியும் பதில் வராமல் போகவே,


"பரவாயில்ல என் தங்கச்சி வளர்ந்துட்டா… கோபம்லாம் வருது" என்று சிரித்தவளின் கையை நடக்கும் வழியில் தட்டுப்படும் பொருட்கள்மீதும் சுவரின் மீதும் தோட்டுப் பார்த்துக்கொள்ள வைத்து, மீண்டும் கட்டிலுக்குத் திரும்பி, கட்டிலைத் தொட வைத்து, திரும்பி, கதவுவரைக் கூட்டிச்சென்று கதவையும் தொட்டுப் பார்க்க வைத்து, மீண்டும் கட்டிலுக்கு வரவைத்ததும்,


"சூப்பர் டா! ரொம்பத் தேறிட்ட… மறுபடியும் ஒரு தடவ எல்லாத்தையும் காட்டிட்டேன்னா நானா நடந்துக்குவேன்" என்றதும் மீண்டும் ஒரு சுற்று சுற்றி முடித்து வந்தனர்.


"சரி… நீ என்னைத் தொடாமல் வா… நானா நடந்து பார்க்கிறேன்… எது மேலயாது இடிச்சுக்கப் போனா மட்டும் என்னைப் பிடிச்சு நிறுத்து. சரியா?" என்று கேட்டும் பதில் வரவில்லை.


தேவியும், நந்திதாவின் கோபத்திற்கு மரியாதை குடுக்கும் விதமாய் அவளை பதில் பேசும்படி வற்புறுத்தாமல், தேவி மட்டும், தன்னுடைய ஸ்டிக்கை உபயோகித்துத் தனியாக நடந்து சென்று படுக்கைக்குத் திரும்பி,


மீண்டும் கதவுப் பக்கம் செல்ல,


கதவு திறக்கும் ஓசை கேட்டு நின்றாள்.


"ஏம்மா… நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களா? உங்க சிஸ்டர் என்ட்ட பேசிட்டு வெளிய போயிட்டு வர்றதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு? நீங்களா தனியா நடந்து கிட்டு இருக்கீங்க?" என்று செவிலிப்பெண் தேவியை அதட்ட,


"என் தங்கச்சி கையைப் பிடிச்சு நடந்து பார்த்துட்டுத்தான், தனியா நடந்து பார்க்கிறேன் சிஸ்டர்… ஒரு வருசமா இந்த ஸ்டிக்க புடிச்சுக்கிட்டுத்தான நடக்கிறேன்." என்ற தேவியின் கையைப் பிடித்துப் படுக்கையில் அமர வைத்துவிட்டு,


"என்கிட்டயே பொய் சொல்றீங்க பார்த்தீங்களா? என்கிட்ட நீங்க நடக்கலாமான்னு கேட்க வந்த உங்க தங்கச்சியை மருந்து வாங்கிட்டு வர அனுப்புனதே நான்தான். இன்னும் மருந்தே கொண்டு வரல… நீங்க என்கிட்ட கதை விடுறீங்க." என்று செவிலிப் பெண் கூறியதைக் கேட்டதும் தேவிக்குத் தூக்கிவாரிப்போட்டது.


'இவ்வளவு நேரம் என்னை நடக்க வச்சது யார்? நான் என்னென்னவோ கேட்டும் அவங்க ஏன் பதில் சொல்லல?' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே,


அறைக்குள் வந்த நந்திதா, "நீங்க இங்க இருக்கீங்களா சிஸ்டர்? நான் உங்களக் காணாமத் தேடுறேன்." என்று கூறி செவிலிப்பெண் வாங்கிவரச் சொன்ன மருந்துகளை அவரிடம் கொடுத்து விட்டு,


"இப்ப டாக்டர் ரௌண்ட்ஸ் வர்ற நேரமாங்க்கா… டாக்டர் வந்து போன பின்னாடி நாம நடக்கலாம்" என்று கூற,


மூன்று நாட்கள் பழக்கத்தில் நந்திதா பற்றி அறிந்து கொண்ட செவிலிப்பெண்,


"அக்கா தங்கச்சிக்குள்ள எவ்வளவு வேற்றுமை பாரு… தங்கச்சி சின்ன விசயத்துக்கூடப் பயப்படுறீங்க… ஆனா உங்கக்கா? இவ்வளவு நேரமும் அந்த ஸ்டிக்கைப் பிடிச்சுக்கிட்டு தனியா நடந்துக்கிட்டு இருந்தாங்க" என்று கூற நந்திதா அழுதே விட்டாள்.


தேவிக்கும் சிஸ்டருக்கும் நந்திதாவை சமாதானம் பண்ணுவதே பெரிய காரியமாகிவிட,


"அச்சச்சோ டாக்டர் வந்துடுவாங்களே… நான் மருந்தெல்லாம் ரெடியா வச்சுக்கனுமே" என்று அவசரமாக செவிலிப்பெண் கதவைத் திறக்கச் செல்லும்போது,


அறைக்குள் வந்த டாக்டர்மீது மோதி மருந்துகளைக் கீழே போட்டு உடைக்க,


டாக்டருக்கு மட்டுமல்ல, அதே அறையில் இருந்த அந்த உருவத்தின் கண்களும் கோபத்தில் சிவந்திருந்தது.


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


"ஓகே… இப்போ விஷயத்துக்கு வருவமா” என்று சிரித்து முடித்துவிட்டு விபாட்சு கேட்க,


 அனைவருமே "என்ன விஷயம்" என்று கேட்டனர்.


"இண்டிபெண்டன்ஸ் டேக்கு நீங்க என்ன செய்யப் போறதா உத்தேசம்?" என்று கேட்டான்.


"அதுதான் தெரியல. ஆனா பாட்டுங்கறது தேவையில்லாத ரிஸ்க்" என்று தோழிகள் இருவரும் கோரசாகக் கூறினர்.


"வேற என்ன… ட்ராமா, பேச்சுப் போட்டி, வேற எதாவது காம்பெடிஷன், ஸ்போர்ட்ஸ் இதுல ஏதாவது?"


"ஸ்போர்ட்ஸ்ல பேட்மிட்டன் ஓகே ஆனா இங்க வந்தபிறகு நாங்க எந்தப் பிராக்டிஸ்சும் பண்ணல"


"வேற?"


"சுபத்ரா பயங்கரமா ஓடுவா. இதுவரைக்கும் அவ ஓடி யாருமே அவளைப் பிடிச்சது இல்லை" என்று நேத்ரா கூறியதும், 


ஆச்சரியமாக "அப்படியா" என்று நண்பர்கள் மூவரும் கேட்க, 


"எனக்கு அதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லப்பா" என்று கூறினாள் சுபத்ரா.


"வேடிக்கையாவது நல்லா பாப்பிங்களா?" என்று பாபி கிருஷ்ணா கேட்க.


"ஓ நல்லாவே வேடிக்கை பார்ப்போமே! ஒன்னைத் தவிர… அதாவது நீங்க கலந்துருக்கிற எதையும் நாங்க பாக்க மாட்டோம்"


"ஏனாம்?"


"தேவையில்லாத வயித்து வலி"


"யூ மீன்?"


"அளவுக்கு மீறி சிரிச்சா வயிறு வலிக்காது?"


"இப்படியொரு வீக் பாயிண்ட் இருக்கா உங்களுக்கு? இருங்க இருங்க நான் பார்ட்டாஸிபேட் பண்ற புரக்ராம்ல, உங்கள சேர்ல கட்டி போட்டுடுறேன்"


"நீங்க எதுல கலந்துக்குறீங்க? என்று நேத்ரா சீரியஸாகக் கேட்க,


"ஸ்போர்ட்ஸ்ல பேஸ்கட் பால் அப்புறம் டான்ஸ் ப்ரோக்ராம் தான். வழக்கம்போல விபாட்சு  படவும் செய்வான்." என்று கைலாஷ் கூற,


"டான்ஸ் என்ன மாதிரியான டான்ஸ்? கிளாஸிகல்லா  இல்ல…"


"எங்க டான்ஸ்க்கு பேர் எல்லாம் கிடையாதுப்பா. கிளாஸ்கல்லாவும் இருக்கும். டிஸ்கோ மாதிரி தெரியும். டப்பாங்குத்து மாதிரியும் தெரியும். இன்னும் என்னென்ன மாதிரியான  டான்ஸ் இருக்கோ அத்தனையும் தெரியும். ஏதாவது ஒரு நல்ல பாட்டு செலக்ட் பண்ணிக்குவோம். அந்தப் பாட்டுக்கு எப்படி ஆட முடியுமா அப்படியே ஆடிடுவோம்." என்று கைலாஷ் கூற.


"நீங்க மூணு பேரு மா"


"இன்னும் ரெண்டு பேர்"


"சுபா நம்மளும் டான்ஸ் பண்ணுவோமா?" என்று நேத்ரா கேட்க,


"ஏய் டான்ஸ் என்கிறது சும்மா இல்லம்மா. நீங்க பண்ணா அதுக்குப் பேரு காக்கா வலிப்பு." என்ற பாபி கிருஷ்ணாவும், 


"டான்ஸ்ல காமெடி ப்ரோக்ராம் எதுவும் இருக்கா என்ன?" என்று கைலாஷும் காலை வர,


"ஆளப் பாரு! நாங்க ரெண்டு பேரும் பெரிய கிளாசிக்கல் டான்ஸர்ராக்கும்" என்று கெத்தாக  முகத்தை வைத்துக்கொண்டு சுபத்ரா கூறினாள்.


"அப்படியா?" என்று விபாட்சு நேத்ராவிடம் கேட்க, 


"என்னைப் பார்த்தால் பொய் சொல்ற மாதிரி தெரியுதா?" என்ற சுபத்திராவிடம், 


"அப்படியெல்லாம் இல்லை…"


"பின்ன என்னிடம் கேட்க வேண்டியதுதானே? நான் தானே சொன்னேன்."


"இதெல்லாம் சண்டை வளர்க்கறதுக்கு ஒரு காரணமா? ரொம்ப மொக்கையா இருக்கு." என்று பாபி கிருஷ்ணா சிரிக்க,


"எனக்கு சண்டை போடுற மூடு இல்ல" என்ற சுபத்ராவின் தோளில் தட்டி விட்டு, 


"ஆமா! நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா கிளாசிக்கல் டான்ஸ் ஆடுவோம்" என்று நேத்ரா கூறினாள். 


"கிளாசிக்கல் டான்ஸ்னா எது?" என்று கேட்ட  விபாட்சுவிடம்,


"பரதநாட்டியம்" என்றனர் இரு பெண்களும் கோரசாக. 


"பரதநாட்டியம்மா?" என்று மூன்று நண்பர்கள் ஆச்சரியத்தில் கூச்சலிட,


"ஆமா"


"அப்போ அதையே பண்ணலாமே"


ஆனா மேம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க பரதநாட்டியம் ஆடுறேன்னு சொல்லிட்டு, வேற எதையாவது ஆடி மானத்தை வாங்கிடுறாங்க அப்படின்னாங்க."


"நான் சொல்லிப் பார்க்கிறேன்!' என்று கூறிவிட்டு மூன்று தோழர்களும் குடியரசு தின நாள் நிகழ்ச்சிகளை வழங்கும் ஆசிரியை நோக்கிச் சென்றனர்.


அந்த ஆசிரியையிடம் பல கூட்டிக் கரணங்கள் அடித்து சுபத்ரா, நேத்ரா வரவேற்பு நடனமாக பரதநாட்டியம் ஆடுவதற்கு சம்மதம் வாங்கி வந்து தோழிகளிடம் கூறினர்.


"வாவ் சூப்பர் பா!!!" என்ற நேத்ராவும்,


"சீனியர் என்றால் எல்லாம் ஓகே சொல்லிவிடுவார்கள்" என்று சுபத்ராவும் கூற,


"அப்படி இல்ல பேசுற விதமா பேசணும்" என்ற விபாட்சுவிடம் 


"அட! பெண்களிடம் எப்படிப் பேசினா நினைச்சத சாதிக்கலாங்கிற வித்தை தெரிஞ்ச பெரிய கிருஷ்ண பரமாத்மாவோ?" என்று சுபத்திரை கேட்க 


"நான் இல்ல கிருஷ்ணா. இவன் தான் கிருஷ்ணன்." என்று பாபி கிருஷ்ணாவைக் காட்டிவிட்டு விபாட்சு சிரித்தான்.


"அவரப் பார்த்தாலே தெரியுது" என்ற சுபத்ராவிடம்,


"ஏம்மா? ஏன் எப்பவுமே என்னோட வம்புக்கு வர்றீங்க? அப்புறம் நா ஏதாவது சொல்லிட்டா கண்ணு நிறைய கண்ணீர் கட்டும்… அதுசரி, என்னைய பார்த்தா ஏன் உங்களுக்கு அப்படித் தெரியுது? என்னைச்சுத்தி கோபியர்களா இருக்காங்க?" என்று பொரிந்து தள்ளிய பாபி கிருஷ்ணாவிடம், 


"ஸாரி… நிஜமாவே இதுவரை நேத்ரா தவிர வேற யார்கூடவும் நான் நெருங்கிப் பழகினதில்ல… உங்க கூட மட்டும்தான் இவ்வளவு தூரம் பேசுறேன் அதான் சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்." என்று மிகவும் இரங்கிப் பேசிக் கொண்டிருந்த சுபத்ரா,


டக்கென்று நிமிர்ந்து கண்களில் கேலியான பார்வையோடு உதடு சுழித்து பாபி கிருஷ்ணாவைப் பார்த்து,


"இப்டீலாம் கேட்பேன்னு நினைச்சீங்களா? நீங்க மூனு பேரும் எத்தனை வருசமா ஃபிரண்ட்டா இருக்கீங்க?  ஃபிரண்ட்ஸ் சிப்ல மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்லாம் சகஜமப்பா…" என்று கூறிவிட்டு விபாட்சுவை நோக்கி, 


'உனக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் பேசத் தெரியுமா? எங்களுக்கும் தெரியும்!' என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.


தன்னைப் போலவே சுபத்ரா பேசிக்காட்டியதில் விபாட்சுவின் முகம் மலர்ந்து, கண்கள் ஜொலிக்க சுபத்ராவைப் பார்த்தான்.


"என்னை இமிடேட் பண்ற அளவுக்குக் கவனிக்கிறாளா? ஒருத்தரை இமிடேட் பண்ணனும்னா கொஞ்சமாவது சம்மந்தப்பட்டவங்க மேல நமக்குப் பிரியம் இருக்கணும். இல்லையா?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவனுக்குக் காரணம் புரியாமல் முகமும் அகமும் மலர சிரித்தான்.


விபாட்சுவின் இந்தப் பேரானந்தச் சிரிப்பிற்கு சுபத்ரா மட்டுமே காரணம் என்று நன்கு உணர்ந்த பாபி கிருஷ்ணா, கைலாஷின் பார்வை மெல்ல நகர்ந்து சுபத்ரா அருகில் தனது நாணத்தை வெளியே தெரியாமல் மறைக்க, இமைகளை, பறவைகள் தம் இறகுகளை அடித்துக் கொள்வதைப் போல் படபடத்துக் கொண்டிருந்த நேத்ராவின் மென்மையான அழகு வதனத்தில் படர்ந்து நிலைத்தது.


அவளுக்கான இந்த நாணம் யாருக்கானது என்பதை உணராமல்


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


Post a Comment

0 Comments