உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟6
தேவியின் அறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் செவிலிப்பெண்ணிற்கு ஒன்றுமே புரியவில்லை…
'அறைக்குள் யாரும் வந்து போகவில்லை… அறையிலிருப்பவர்களும் தண்ணீர் ஜக்கை அவ்வாறு கட்டவில்லை.'
'பிறகு எப்படி? ஜக் தானாகக் கட்டிக்கொள்ளுமா என்ன?'
'யாரோ என் வேலைக்கு உலை வைக்க முடிவு பண்ணிட்டானுங்க போலிருக்கு… சிசிடிவி கேமராவ ஏமாத்துற சகல வித்தைகளையும் தான் சினிமாவும், இன்டெர்னெட்டும் கத்துக் கொடுத்துடுதே?!! லேசா கண்ணயர்ந்த நேரத்துல எவனோ பண்ற வேலை… மாட்டுவான் என் கையில.' என்று பலவாறாகக் குழப்பி, தானே ஒரு முடிவுக்கு வந்து, தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
இதமான குளிர் பரவிய இரவில் ஈரக்காற்று வீச,
நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த செவிலிப்பெண்ணிற்கு உறக்கம் கண்களைக் கட்டியது.
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள், "அம்மாடி! இன்னைக்குத் தூங்கவே கூடாது. இந்த ரூமுக்கு யார் வர்றாங்கன்னு பார்த்துரனும்." என்று நிமிர்ந்து உட்கார்ந்ததும் மறுபடியும் உறக்கம் வந்து தாலாட்ட, தூங்கித் தூங்கி விழுந்தாள்.
"இது சரிப்பட்டு வராது" என்று நினைத்தவள், தூக்கம் வராமலிருக்கத் தனது தாத்தா கூறிய விஷயம் எழுந்து சென்று வாஷ்பேசில் சிறிது தண்ணீரை எடுத்துக் காது மடல்களின் பின்புறம் நனைத்து, உடனே துடைத்துக் கொண்டு,
தன் இருக்கைக்குத் திரும்பியவள், பக்கத்து அறைகளில் இருந்த செவிலியர்களை அழைத்து,
"இன்னைக்குத் தூங்காம இருக்கணும்னு நினைக்கிறேன். உங்கள்ல யாராவது ஒருத்தர் மாத்தி மாத்தி என் கூட ஏதாவது பேசிகிட்டு இருந்தோம்னா எனக்கு உதவியா இருக்கும். ப்ளீஸ்!' என்று கேட்க,
செவிலியர்களும் "சரி!" என்று ஒத்துக் கொண்டனர்.
'எதுக்கும் ஒரு முறை பார்த்து வைப்போம்!' என்று நினைத்தவள் அறையின் கதவை லேசாகத் திறந்து அறையினுள் இருந்த தாயையும் மகளையும் பார்த்தாள்.
தேவியும் அவள் அம்மாவும் கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் நிம்மதி அடைந்து சப்தமெழுப்பாமல் கதவைச் சாத்திவிட்டு,
செவிலியர்களுடன் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்தாள்.
அறைக்குள் நன்கு உறங்கிக் கொண்டிருந்த தேவிக்கு யாரோ கதவைத் திறப்பது போல் சப்தம் எழ,
கண்களைத் திறந்து பார்த்தாள்.
அறைக்குள் யாரும் வரவில்லை.
'அம்மா எதுக்காகவாவது கதவைத் திறந்திருப்பாங்களோ?' என்று எண்ணி தனது தாய் படுத்திருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தாள்.
தேவியின் அம்மாவும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்.
'கதவு திறக்கும் சப்தம் நன்றாகக் கேட்டதே?' என்று, மூடி இருந்த கதவையே சிறிது நேரம் பார்த்துவிட்டு,
'சரி ஏதோ கனவு போலிருக்கிறது' என்று நினைத்து மீண்டும் கண்களை மூடி உறங்கப் போனவளுக்குச் சட்டென்று ஒன்று தோன்ற, தூக்கிவாரிப் போட்டு எழுந்தாள்.
'எனக்குத்தான் கண்ணு தெரியாதே? இதுல, ஆபரேஷன் பண்ணி, கண்களைச் சுத்தி கட்டுவேற போட்டிருக்காங்களே? பின்ன எப்படிக் கதவு திறக்கப்படாம மூடி இருக்கிறதும், அம்மாவோட படுக்கையில அம்மா முதுகு காட்டி அசந்து தூங்குறதும் தெரிஞ்சுச்சு?" என்று அரண்டவள்,
பயந்துகொண்டே மீண்டும் இமைகளைப் பிரிக்க, இமைகளைப் பிரிக்க முடியாமல் கண்கள் இறுக மூடியிருந்தது.
"ச்சே… கண்ணையே திறக்க முடியல… பின்ன எப்படித் தெரியும்? கனவுதான் கண்டுகிட்டு இருக்கேன்' என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு உறங்க எத்தனித்தாள்.
'தூக்கம் வந்து தொலைக்கவில்லை. நாள் முழுக்கப் படுக்கையிலேயே இருப்பது வேறு உடம்பெல்லாம் வலிக்கிறது.' என்று எண்ணியவாறு, புரண்டு புரண்டு படுத்தவள்,
நிமிர்ந்து மல்லாந்து படுத்துக் கொண்டு, வலியெடுத்த கால்களை விறைத்து நீட்டுவதும், தளர்த்துவதுமாக இருந்தாள்.
சில நிமிடங்களில் அவளுடைய படுக்கையில் கால்மாட்டில் யாரோ அமர்வது போல் உணர்ந்தவள்,
'நர்ஸ், என் படுக்கையில் உட்கார மாட்டாங்க. அம்மாதான், நான் புரண்டு புரண்டு படுத்த சத்தத்துல எந்திரிச்சுட்டாங்க போல' என்று எண்ணியவள்,
"அம்மா நீங்க போய்த் தூங்குங்க." என்று கூறும்போதே,
தேவியுடைய கால்களை இதமாகப் பிடித்துவிட ஆரம்பித்தார்கள்.
பதறி எழுந்த தேவி, "அம்மா நீங்க போய் என் காலைப் பிடிச்சு விடலாமா? விடுங்க…" என்று தன் கால்களில் படிந்திருந்த தாயின் கைகளை எடுக்கப் போகவும், கை தானாக விலகிக் கொண்டது.
"நீங்க தூங்குங்கம்மா" என்று கூற,
அவளுடைய தாயின் படுக்கையில் அசையும் சப்தம் வர,
தன் தாய் தூங்கச் சென்றுவிட்டார்கள் என்று நினைத்து, சிறிது நேரம் அமர்ந்திருந்தவள்,
தனது பாதம் முழுவதும் இரு கை கட்டைவிரல்களால் நன்கு அழுத்திக் கொடுத்தாள். பிறகு பாதத்திலிருந்து முழங்கால்வரை அழுத்திப் பிடித்து விட்டாள்.
கால் வலி குறைய ஆரம்பித்ததும் மல்லாந்து படுத்து, கால்களை நேராக நீட்டி, பாதங்களை நேராக வைத்து, கால் கட்டை விரல்களை இணைப்பதும், பக்கவாட்டில் சாய்ப்பதுமாகப் பத்து எண்ணிக்கைவரை செய்தாள்.
பிறகு கால்களை நீட்டியவாறே பாதங்களை மட்டும் முன்னோக்கியும் பின்னோக்கியும் மிகவும் மெல்ல அசைத்தாள். பத்து எண்ணிக்கை முடிந்ததும்,
பாதங்களை மட்டும் வட்டவடிவில் மிக மெதுவாகச் சுழற்றினாள்.
கால்வலி நன்றாகக் குறையவும் கண்களைத் தூக்கம் தழுவ கண்ணயர்ந்தாள்.
அரைத்தூக்கத்தில் இருந்த தேவியின் தலை பாசத்துடன் கோதப்பட்டது. மறுக்க மனமின்றி தேவி ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள்.
தேவி அசந்து தூங்கவும் அவளுடைய நெற்றில் முத்தமிட்ட அந்த உருவம்,
"உனக்கு நிச்சயம் கண்ணு தெரிஞ்சிடும்." என்று புன்னகைக்கும் போதே விருட்டென்று இருண்ட பகுதியை வெறித்துப் பார்த்துக்கொண்டு,
"உன் ஆட்டம் இனி செல்லாது… நீ பசுத்தோல் போர்த்திய கொடிய மிருகம்கிறத நிரூபிக்கிறேன்." என்று உறும,
அந்தக் கரிய உருவத்தின் கண்கள் ரெத்தமெனச் சிவந்து அது பார்த்த திசையை நோக்கி நெருப்பைக் கக்க,
இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் படுக்கையில் அமர்ந்தபடி நமக்கு முதுகுகாட்டி அமர்ந்து, யாருடனோ ஃபோனில்,
"தேவிக்குக் கண் தெரிஞ்சுடுமா?" என்று வெறிபிடித்துக் கத்த,
எதிர்முனையில், "ஒரு ப்ரசெண்ட் கூட வாய்ப்பில்ல…" என்றதும்,
"சிங்கப்பூர்லருந்து வந்த டாக்டர், பெரிய ஐ ஸ்பெசலிஸ்ட்டாமே, அவர் தொட்ட கேஸ் ஃபெயிலியர் ஆனதில்லையாமே?" என்று அலற,
"அந்தக் கண்ணபுர நாயகியே வந்து ஆபரேஷன் செஞ்சிருந்தாலும் தேவிக்குக் கண்ணு தெரியாது"
"ஆனா ஆஸ்பத்திரீல ஐம்பது ப்ரசெண்ட் கண்ணு தெரிய வாய்ப்பிருக்குன்றாங்களே"
"ஐம்பது பிரசண்ட்தானே? அதெல்லாம் சும்மா… அவளுக்குக் கண்ணு தெரியாது. என்ன நம்பு. அந்தச் சிங்கப்பூர்காரனவிட நான் பெரிய வித்தைக்காரன் நான் கொடுத்த மருந்து ஆயுசுக்கும் அவளுக்குக் கண்ணு தெரியவிடாது"
"அவள நெனச்சாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது" என்று அலறிய நொடியே, அமர்ந்திருந்த படுக்கை நெருப்பில் திகுதிகுவெனப் பத்திக் கொண்டு எரிய ஆரம்பித்தது…
"நீ தேவிக்கு செய்ய நினைக்கும் அனைத்தையும் நான், உனக்கே செஞ்சு காட்டுறேன்" என்று நினைத்து மிகக் கோரமாகச் சிரித்தது தேவியின் தலையைக் கோதிக்கொண்டிருந்த உருவம்.
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
பாபி கிருஷ்ணா என்ன கூறுகிறான் என்பது சுபத்ராவிற்குக் கொஞ்சமும் கவனத்தில் இல்லை…
சுபத்ராவின் கவனம் முழுவதும் அவன் "ஏம்மா", என்று அழைத்ததிலேயே சிக்கிக்கொண்டது.
"சீனியர்னு தானே நா உங்களக் கூப்பிடுறேன்? 'தாத்தா'ன்னா கூப்பிடுறேன்… ஒன்னு என் பேரச்சொவ்லிக் கூப்பிடுங்க… பேரு ஞாபகத்துல இல்லைனா ஜூனியர்னு கூப்பிடுங்க." என்று பேசிக்கொண்டே போனவளை,
"உங்க வீட்ல உங்கள மலர்ன்னு கூப்பிடுவாங்களா?" என்று கேட்டான் விபாட்சு.
"ஏன்?"
"இல்லை விபா. வீட்ல இவள சுபான்னுதான் கூப்பிடுவாங்க ஏன்?" என்ற நேத்ராவிடம் சிரிப்பை அடக்கிக்கொண்டு,
"மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா" ன்னு
ஒரு கவிஞர் எழுதியிருக்கிறது உங்க ஃபிரண்ட்டுக்கு ரொம்பப் பொருந்துதே?" என்று சிரிக்க அவனது நண்பர்களும் சேர்ந்து சிரிக்கவும்
லேசாகக் கண்ணீர் வர, வேறு புறம் திரும்பி நடக்கச் சென்றவளைப் பார்த்த நேத்ராவிற்கு இரத்தம் கொதித்தது.
அதுவரை நண்பர்களின் கேலி கிண்டலை ரசித்துச் சிரித்த நேத்ராவிற்கு, தன் தோழியின் கண்கள் பனித்ததைக் கண்டதும்.
சிரிப்பு மறைந்து கோபமாகியது.
கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாததாலும்,
விபாவும் அவன் நண்பர்களும் சுபத்ராவுடன் மல்லுக்கட்டுகையில் தானும் நண்பர்களுடன் சேர்ந்து சிரித்ததாலும்,
ஏற்பட்ட குற்ற உணர்வு மேலிட நண்பர்களைத் திரும்பியும் பாராது, சுபத்ராவுடன் சேர்த்து நடந்தாள்.
நேத்ராவின் கோபத்தை யாரும் எதிர்பார்க்காததால், 'ரொம்ப அதிகமாயிடுச்சோ?' என்று எண்ணிய விபாட்சு,
வேகமாகத் தோழிகளின் வழியில் குறுக்கே வந்து நின்றவன்,
"சாரி! நீங்களும் ஜாலியா எடுத்துக்குவீங்கன்னு நெனச்சுட்டேன்… ரொம்ப ஹர்ட் பண்ணிட்டோம் சாரி!" என்று கெஞ்சிய விபாட்சு, சட்டென்று நிமிர்ந்து,
"இப்படீலாம் கெஞ்சிக் கேட்பேன்னு நினைச்சீங்களா? லூசு… நாம என்ன சீனியர், ஜூனியர் மாதிரியா பழகுறோம்?" என்று நேத்ராவைப் பார்க்க,
அவள் கண்கள் பளீரிட "இல்லை" என்று தலையசைத்தாள்.
"என்னவோ கருவுல இருந்ததிலிருந்தே ஃபிரண்ட்ஸ்சுங்கிறீங்க. ஃபிரண்ட்ஸ் சுக்குள்ள கலாய்ச்சுக்க மாட்டீங்களா? மனசுல என்ன தோணுதோ அத ஃபிரண்ட்ஸ்ட்ட மட்டும் தானே ஷேர் பண்ணிக்க முடியும்? அது வலியா இருந்தாலும் கேலியா இருந்தாலும்…" என்ற விபாட்சு சுபத்ராவைப் பார்க்க,
அவள் எதுவும் பேசுமல் அமைதியாக இருக்கவும்,
"முதல்ல நம்ம கூடப் பழகுறவங்க எப்படிப்பட்டவங்கன்னு புரிஞ்சுக்குங்க… நா யார்கிட்டயாவது இப்படி வாயாடிப் பார்த்திருக்கீங்களா?" என்று சுபத்ராவைப் பார்த்துக் கேட்க,
தலை கவிழ்ந்து நின்றிருந்தாலும் விபாட்சு தன்னைத்தான் கேட்கிறான் என்று உணர்ந்த சுபத்ரா "இல்லை" என்பதுபோல் தலையாட்ட,
"இல்ல… நீ எங்கூட மல்லுக்கு நிக்கிறியே அந்தமாதிரி எந்தப் பொண்ணாவது எங்கிட்ட வம்பு பண்ணிப் பார்த்திருக்கியா?"
மறுபடியும் "இல்லை" என்பதுபோல சுபத்ரா தலையாட்டினாள்.
சுபத்ரா சண்டைபோடாமல் அமைதியாகத் தலைகவிழ்நது, தான் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிய விதம் விபாட்சுவின் இதயத்தில் சாரலடிக்க,
முகம் மலர்ந்து சிரித்தவன், "நமக்குள்ள, நாம ஒருத்தர ஒருத்தர் காயப்படுத்துறதுக்காகப் பேசுறதில்ல. ஜஸ்ட் ஃபார் ஃபன்… உங்கள கலாய்க்காம வேற யார நாங்க கலாய்ப்போம்?" என்று இளகிய தொனியில் நேத்ராவைப் பார்த்துக் கேட்க,
அவளின் செவ்விதழ் மேலும் சிவந்து விரிய புன்னகைத்தாள்.
அவளுக்கு ஒரு இதமான புன்னகையைப் பரிசளித்துவிட்டு, சுபத்ராவிடம்,
"நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க கிட்டதான் நம்ம சந்தோஷத்தையும், துக்கத்தையும் மட்டுமில்ல, கேலியையும், கோபத்தையும் கூடக் காட்ட முடியும். ஆமாதானே?" என்றதும்,
அதற்கும் விழி உயர்த்தாமல் தலையாட்டிய சுபத்ராவை சீண்டத்தூண்டியது விபாட்சுவிற்கு.
"நான் வேணும்னா நம்ம நேத்ரா மாதிரி உன் கையைப் பிடிச்சு கண்களுக்குள்ள பார்த்து, முடிஞ்சா கட்டி அணைச்சு" என்று கூறியபடியே குறும்பாக சுபத்ராவின் முகம் பார்த்தவன்,
அவள் சட்டென்று பாம்பு படமெடுத்தாற்போல் கோபமாய்த் தலை உயர்த்தவும்,
"ஹப்பாடா ! கோபம் போயிடுச்சுடா." என்று விபாட்சு சிரித்தான்.
அதே நேரத்தில் விபாட்சு சுபத்ராவிடம், "நம்ம நேத்ரா" என்று கூறியதைக் கேட்ட நேத்ராவிற்கு பின்னணியில் இனிமையான காதல் பாடலின் இசை கேட்டது.
அதுவரை சுபத்ரா, நேத்ராவின் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டோமோ என்று மிகவும் மனம் கலங்கி நின்ற பாபி கிருஷ்ணாவும், கைலாஷும் அதுவரை தம் கட்டியிருந்த மூச்சை,
"உஷ்" சென்று வெளியிட்டனர்.
அவர்களின் இந்தச் செயல் பாபி கிருஷ்ணா, கைலாஷின் மனநிலையைப் பளிச்சென்று வெளிச்சம் போட்டுக்காட்ட,
'நல்லவேளை சின்ன மனஸ்தாபத்தில் நல்ல நண்பர்களை இழந்திருப்பேன்.' என்ற குற்ற உணர்வு குறுகுறுத்தாலும் அதைத் தொண்டைக்குழியோடு அழுத்திவிட்டு,
"ஹா…ங் இப்டீலாம் பெருமூ…ச்சு விட்டுட்டா நீங்க நல்ல பசங்க ஆயிடுவீங்களா? நீங்க கெட்டப் பசங்கதான்" என்று சுபத்ரா சிரிக்க,
அந்த இடமே ஆனந்தத்தால் நிறைந்திருந்தது…
ஆண்கள் தங்களுக்குள் பார்த்துச் சிரித்துக்கொள்ள,
இரு பெண்களும் விபாட்சுவை இமைக்காமல் பார்த்த காரணத்தால், அப்பெண்களின் நெஞ்சுக்கூட்டில் ஏதோ ஒன்று பந்துபோல் அடைக்க,
அளவுக்கு மீறிய சந்தோஷத்தில் கூட இதயம் படபடத்து நெஞ்சை அடைக்கக்கூடும் என்று முதன்முறையாக உணர்ந்த பெண்கள்,
இந்த ஜென்மம் முழுவதுக்கும் தேவையான ஆனந்தம், விபாட்சுவின் அழகான, வெட்கம் கலந்த, லேசாகக் கண்கள் பனிக்க, அவன் சிரிக்கும் சிரிப்பில் இருப்பதை உணர்ந்தார்கள்.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
0 Comments