உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟5

உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟5


ஆறாம் எண் அறையிலிருந்து வெளியே வந்த செவிலிப் பெண் மற்ற செவிலிப் பெண்களிடம், "ஆறாவது ரூம்ல இருக்குற பேசன்ட்டுக்குக் குடுக்க வேண்டிய தண்ணி ஜக்கை கயித்துல மாட்டி விட்டது யாரு?" என்று விசாரித்தார்.


"எப்ப?"


"நேத்து ராத்திரிதான்"


"அவஅவ வேலைய பாக்கவே இங்க நேரமில்லையாம்… இதுல நைட் டூட்டி வேற. உன் கிட்டச் சொல்லாம யாரு உன் ரூமுக்குள்ள போயிருப்பா?" என்று மற்றொரு செவிலிப்பெண் கேட்க,


"இல்ல சிஸ்டர்! யாரோ நேத்து நைட்டு ஆறாவது ரூமுக்குள்ள போய்ப் பேசன்ட் தண்ணி கேட்கவும், தண்ணி ஜக்கை எப்படி மாட்டியிருக்காங்கன்னு வந்து பாருங்களேன்." என்று கூறி ஆறாம் எண்ணான தேவியின் அறைக்கு வந்து கயிற்றில் கட்டப் பட்டிருந்த ஜக்கைக் காட்டினாள்.


எல்லா செவிலியருமே கண்களை அகலவிரித்து, வாயில் கொசு போவது கூடத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க,


"நல்ல ஐடியாவா இருக்கே?!!" என்று ஒரு செவிலி பெண் ஆச்சரியப்பட,


"இப்ப அதுவா முக்கியம்? யார் வந்து இப்படிச் செஞ்சிருப்பா? உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள் தேவியின் அறை செவிலிப்பெண்.


"இவ்வளவு கெட்டிக்காரத்தனம் இருந்திருந்தா, நான் ஏன் ராத்திரி நேரத்துல இங்கே உட்கார்ந்து வேலை பார்த்துட்டு இருக்கப் போறேன்?" என்றொருத்தி சலித்தாள்.


செவிலியரிடமிருந்து பதில் வராமல் போகவே, அனைவரையும் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் தேவியின் அறை செவிலிப்பெண்.


"ரூமை கிளீன் பண்ண வந்த யாராவது இப்படிச் செஞ்சாங்களான்னு கேட்டுப் பாரு." என்ற ஒரு செவிலி பெண் கூற,


"அதை நான் அப்பவே ஃபோன் பண்ணிக் கேட்டுட்டேன். ராத்திரில பேசன்ட்டோ, நர்ஸ்சோ கூப்பிடாம நாங்க வரமாட்டோம்ங்கிறது உங்களுக்குத் தெரியாதா? நாங்க யாரும் வரலன்னு சொல்லிட்டாங்க"


"ரிசப்ஷன்ல வேற யாரும் வந்ததுக்கான என்ட்ரி எதுவும் இருக்கான்னு செக் பண்ணியா?" என்று கேட்டாள் மற்றொரு செவிலிப்பெண். 


அதற்குத் தேவியின் அறை செவிலிப்பெண், "அதையும் ரிசப்ஷனுக்கு ஃபோன் பண்ணிக் கேட்டுட்டேன். ஆறாம் நம்பருக்கு எந்த ஒரு அட்டெண்டரோ, டாக்டரோ யாருமே வரல. எந்த என்ட்ரியுமே இல்லை அப்படின்னு சொல்லிட்டாங்க."


"இதென்ன புது வம்பா இருக்கு. இந்தக் காரிடார்ல இருக்குற சிசிடிவி கேமரால போய்பாரு."


"அச்சச்சோ அவங்க பதிவு செஞ்ச வீடியோவ நமக்குக் காட்டுவாங்களா?" என்று தேவியின் அறை செவிலிப்பெண் கேட்க,


"இந்த நேரத்துல செக்யூரிட்டி ரூம்ல, ஒருத்தர் தான் முழிச்சுக்கிட்டிருப்பாங்க. அவர சமாளிச்சா போதும்… இந்த விசயம் டீன் னுக்குத் தெரிஞ்சா, நல்லா வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும்." என்றொரு செவிலிப்பெண் பயமுறுத்தவும், 


நேராக செக்யூரிட்டி அறைக்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறி, "முதல்நாள் இரவு குறிப்பிட்ட நேரத்தில். ஆறாம் எண் அறைக்கு வந்தது யார்னு பார்க்கனும்" என்று கூற,


முதலில் மறுத்த செக்யூரிட்டி ஆபீசர், செவிலிப்பெண்ணின் பயமும், குடும்பச் சூழ்நிலை பற்றியும் தெரிந்ததும்,


"நான், இந்த மாதிரிக் கேமராவில் ரெக்கார்ட் பண்ணினத யார்கிட்டயும் காட்டக் கூடாது… உனக்குப் பிரச்சனை ஆயிடக்கூடாதுங்கிறதுக்காகத்தான் இதச் செய்றேன்..‌.  ஆனா, இப்போ நீ வீடியோல யாரப் பார்த்தாலும், இந்தக் கேமரா மூலமா கண்டுபிடிச்சதா யார்ட்டயும் சொல்லக் கூடாது. அப்படிச்சொன்னா எனக்குப் பிரச்சனையாகிடும். புரியுதா?" என்ற நிபந்தனையுடன், பதிவாகியிருந்த காட்சிகளைக் கணினியில் ஓடவிட்டார்.


தேவியின் அறைக்குள்ளிருந்து செவிலிப்பெண் முதல்நாளிரவு  வெளியே வந்த நிமிடத்திலிருந்து காலையில் பணி முடிந்து செல்லும்வரை யாரும் ஆறாம் அறைக்குள் செல்லவும் இல்லை. அறைக்குள்ளிருந்து யாரும் வரவும் இல்லை!! 


குழப்பத்துடன் செவிலிப்பெண் நகரவும்,


"நீ போம்மா… நான் மறுபடியும் நீ இன்னைக்கு டுயூட்டிக்கு வந்த நேரம்வரைக்கும் பார்த்து வைக்கிறேன். யாராவது, ஆறாவது ரூம்முக்குள்ள போயிட்டு வந்தா உன்னைக் கூப்பிடுறேன்." என்று செக்யூரிட்டி ஆபீசர் கூற,


தனது இடத்துக்கு வந்த செவிலிப்பெண், தேவியிடம் சென்று, "நல்லா யோசிச்சுச் சொல்லும்மா… நேத்து நைட்டா இந்த ஜக்கைக் கட்டினாங்க?" என்று கேட்க, 



தேவியும் "ஆமா" என்றாள்.


"ஆனா யாருமே இந்த அறைக்குள்ள வரவுமில்ல… இந்த அறையிலிருந்து போகவுமில்லம்மா." என்றதும்,


"அப்புறம் எப்படி சிஸ்டர் ஜக் கட்டப்பட்டிருக்கும்?" என்று தேவி கேட்டதும்,


தேவியின் அம்மாவைப் பார்த்து, "நீங்க நல்லா யோசிச்சுச் சொல்லுங்கம்மா. ஒருவேளை நீங்க கட்டிவிட்டீங்களா?" என்று கேட்டாள் செவிலிப்பெண்.


"நீங்க இவ்வளவு சீரியஸா விசாரிக்கும்போது நான் சொல்லாம இருப்பனா சிஸ்டர்?"


"இல்ல… வந்து… நாங்க எதுவும் சொல்லிடுவோம்னு நீங்க தயங்கியிருக்கலாம்ல?"


"இல்ல சிஸ்டர்… அப்படியே இருந்தாலும், இவ்வளவு ஹைட்ல இருக்கிற ஸ்டாண்ட்ல என்னால எப்படிக் கட்ட முடியும்?" என்ற தேவியின் அம்மா,


அந்த ஸ்டாண்ட்டில் ஜக்கைக் கட்டுவதற்காகப் போடப்பட்டிருந்த முடிச்சைத் தன்னால் எட்டித் தொடக்கூட முடியாது என்பதை எம்பி எம்பிக் காட்டினார்.


முடிச்சிடப்பட்டிருந்த இடம், தேவியின் அம்மாவிற்கு எட்ட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த செவிலிப்பெண், 


மிகவும் யோசனையாய் அறை முழுவதும் பார்வையால் துழாவ,


"இத ஏன் இவ்வளவு சீரியசா எடுத்துக்கிறீங்க சிஸ்சர்? உங்களுக்குப் பிரச்சனையாகும்னா நாங்க யார்கிட்டயும் சொல்லல" என்று தேவியின் அம்மா கூற,


"சிஸ்டர் நேத்து வந்தவங்க, என்னோட இடது கையைப் பிடிச்சுக் கயிற்றைத் தொட்டு இழுக்க வைச்சாங்க… ஜக் எனக்கு நேரா ஏறி வந்ததும், என் வலது கையைப் பிடிச்சு ஜக்கின் கைப்பிடியை பிடிக்க வச்சாங்க. எனக்கு எங்கம்மாவோட டச் தெரியாதா? அது எங்கம்மா இல்ல" என்று தேவி கூறவும்,


"அப்போ என் டச் உனக்குத் தெரியலையா? உன்னைத் தொட்டது நான்னு உன்னால உணரமுடியலையா? என்னை மறந்தே போனாயா?" என்று கண்ணீர் விட்டது அதே அறைக்குள் இருந்தபடி நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த உருவம்.


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


"நீங்க ரெண்டு பேரும் எத்தனை வருசமா ஃபிரண்ட்ஸ்?" என்று விபாட்சு கேட்க,


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டு விபாட்சுவிடம்…


"பிறந்ததுலருந்தே… எங்கம்மா ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல பிரசவம் ஆகி ஒரே நாள்ல பிறந்தோமாம்…" என்று நேத்ராவும்,


"எங்க ஆச்சி, தாத்தாட்டக் காட்டுறதுக்கு முன்னாடியே எங்க ரெண்டு பேரையும் குளிக்கு ஊத்தி, பக்கத்துப் பக்கத்துலதான் படுக்க வச்சிருந்தாங்களாம்." என்று சுபத்ராவும்,


"அதுமட்டுமில்ல… நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் கைய இன்னொருத்தர் இறுக்கிப் பிடிச்சுக்கிட்டோமாம்… நர்ஸால கூட எங்க கையப் பிரிக்க முடியலையாம்."


"அப்படியே ரெண்டு பேரையும் தூக்கிட்டு வந்து பெட்ல படுக்கவச்சு, இவங்க கைய எடுத்து விடுங்கன்னாங்களாம்."


"எங்களப் பெத்தவங்களுக்கும் அப்பத்தா தாத்தாக்களுக்கும் எங்களைப் பிரிக்க மனசில்லையாம்"


"அப்புறம் கைய இறுக்கிப் பிடிச்சிருந்ததாலயே குட்டிக் குழந்தைகளான எங்களுக்குக் கை வலிக்கவும், அழுதோமாம். ஆனா கையை மட்டும் விடலையாம்"


"அப்புறம் எங்க அப்பத்தா வருடிக் கொடுத்து, கைகளை எடுத்து விட்டாங்களாம்" என்று நேத்ராவும், சுபத்ராவும் மாறி மாறித் தங்களின் நட்பு ஆரம்பித்த கதையைச் சொல்லி முடிக்க,


நண்பர்கள் மூவருக்கும் சிலிர்த்துவிட,  "நிஜமாவே சூப்பர் ங்க" என்று கோரஸாகக் கூறினர்.


அப்பொழுதும் நேத்ராவும் சுபத்ராவும் கைகளைக் கோர்த்திருக்க,


"கை வலிச்சிடப் போகுது. இன்னும் ஏன் ரெண்டு பேரும் கையைப் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க? உங்க அப்பத்தாவோட ஃபோன் நம்பராவது குடுத்துட்டுக் கையப் புடிச்சுக்குங்க" என்று விபாட்சு கலாய்த்தாலும்,


தோழிகள் உட்பட அனைவருமே ரசித்துச் சிரித்தனர்.


"ரெண்டு பேரும் அப்புறம் எப்படி சந்திச்சீங்க?" என்று கைலாஷ் ஆர்வமுடன் கேட்க,


"ம்ம்ம்? ஏழு மலை, ஏழு கடல் தாண்டி சந்திச்சுக்கிட்டாங்களாம்… விபா… இவன் சென்டிமென்ட்க்குள்ள போயிட்டான் டா விபா… " என்று சிரிக்க ஆரம்பித்த பாபி கிருஷ்ணாவை முதுகில் தட்டிவிட்டு, 


"ம்ம் சொல்லுங்க" என்று விபாவும் ஆர்வமாக,


"யூ டூ விபா? வேறெங்கடா சந்திச்சிருக்கப் போறாங்க ஸ்கூலாத்தான் இருக்கும்." என்ற பாபி கிருஷ்ணாவிடம்,


"அவ்வளவு மொக்கையாலாம் நம்ம சந்திப்புதான் இருக்கும்…" என்ற கைலாஷ், பாபி கிருஷ்ணாவின் வாயை மூடிக்கொண்டு,


"பாபி வேற மொக்கயா ஏதாவது சொல்றதுக்குள்ள நீங்களே சொல்லிடுங்களேன்" என்று கைலாஷ் போலியாகக் கெஞ்ச,


"நீங்க எதிர்பார்க்கிற அளவு இன்ட்ரஸ்ட்டா எதுவும் கிடையாதுங்க… அடுத்து நாங்க பார்த்துக்கிட்டது கோயில்லயாம்."


"எத்தனை வருசம் கழிச்சு?"


"குழந்தை பிறந்து முப்பதுநாள் கழியவும் கோயிலுக்குக் கூட்டிட்டு போவாங்கல்ல? அப்ப." என்ற நேத்ராவை மேலும் கீழும் கிண்டல் பார்வை பார்த்த, பாபி கிருஷ்ணா,


"அது உங்க சந்திப்பு இல்லைங்க… உங்க பேரண்ட்ஸ்சோட சந்திப்புன்னு வேணும்னா சொல்லலாம்" என்றதும்,


"நான்தான் சொன்னேனே… நீங்க எதிர்பார்க்கிற அளவு இருக்காதுன்னு" என்று சிரித்துகொண்டே சொன்ன நேத்ராவை,


"இவர் கிண்டல் பண்ற அளவுலாம் இல்ல… கோயில்ல சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கும்போது குழந்தையான எனக்கு ரொம்ப வியர்த்துக் கசகசன்னு இருந்ததால அழுதேனாம்… எங்க அம்மாவாலயே என்னைச் சமாதானப்படுத்த முடியவில்லையாம் எங்க அப்பா மட்டும் என்னைத் தூக்கிக்கிட்டுக்  கோயில் வெளிப்பிரகாரத்துக்கு வந்தும், நான் அழுகிறத நிறுத்தவே இல்லையாம்."


"அதுக்குப் பதிலா தான் இப்ப வாயே திறக்கிறது இல்லையா?" என்று விபாட்சு கிண்டலாகக் கேட்க, 


அவனை ஒரு முறை முறைத்து விட்டு, "வெளிப் பிரகாரத்திற்கு வந்த ஒரு அஞ்சு நிமிஷத்துல திடீர்னு என்னோட அழுக நின்னுடுச்சாம். எங்க அப்பாக்கு கூட ஆச்சரியமா போச்சாம். 'என்ன திடீர்னு அழுகைய நிறுத்திட்டா? ஒரு வேளை வெளிப்பிரகாரத்தில் ஜிலு ஜிலுன்னு காத்து வந்ததுனால அமைதியா இருக்கேனோன்னு நினைச்சுப் பார்த்தா, என் பக்கத்துல நேத்ராவோட அப்பா நேத்ராவை தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தாங்களாம். நேத்ராவோட கைய நான் புடிச்சிருந்தனாம்"


"ம்ம்… நான் ஒன்னு சொன்னா வம்புக்கு பேசுறதா நினைக்கக் கூடாது." என்று ஆரம்பித்த விபாட்சு, 


'நீங்க பேசினாலே வம்புதான்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கே!" என்று போலியாக ஆச்சரியப்பட்ட சுபத்ராவை,


'சும்மா இருக்கமாட்டியா?' என்பதுபோல் பார்த்துவிட்டு, நேத்ரா "சரி" என்று விபாட்சுவிடம் தலையாட்ட, 


"பொதுவா ஒரு குழந்தை இன்னோரு குழந்தையைப் பார்த்தால் சிரித்து விளையாடுறது சகஜம்தான் இல்லையா?"


"ஆ…மா… ஆ…மா… இப்பக்கூட எனக்கு இந்தக் காலேஜ்ல யாரையுமே தெரியாது. நேத்ராவ மட்டும்தான் எனக்குத் தெரியும். அதனாலதான் இவ கூடவே இருக்கேன்னு கூடச் சொல்லலாமே? இதுக்கு ஃபிரண்ட்டா தான் இருக்கனும்கிற அவசியம் இல்லையே." என்று சுபத்ரா கூறியது பாபி கிருஷ்ணாவிற்கு புரியவில்லை.


"என்னவாம் விபா?" என்று பாபி கிருஷ்ணா விபாட்சுவிடம் கேட்க,


"நான் சொன்னேன்ல, அது எதார்த்தமா நடக்கிறதுனா, இப்பக்கூட இவங்க பழக்கம் ஃபிரண்ட்ஸ் இல்லைனும், எதார்த்தம்னும் சொல்றாங்க."


"உங்கள யாரு ஃபிரண்ட்ஸ்னு சொன்னது! ட்வின் சிஸ்டர்ஸ்னுதானே பரவலா பேசிக்கிறாங்க"


"ம்ம் கேள்விப்பட்டோம். ஆனா… எங்களப் பார்த்தா ட்வின்ஸ் மாதிரியா தெரியுது?" என்று ஆச்சரியமாக நேத்ரா கேட்க,


"முகஜாடை ஒருசில கோணத்துலதான் ஒத்துப்போகுது. ஆனா உங்க பேர்தான் கன்ஃபார்ம்மே பண்ணுது."


"சுபத்ரா, நேத்ரா. ரெண்டுலயும் ‘த்ரா’ன்னு முடியிறதாலயா?"


"ஆமா…"


"இது வம்பா இருக்கே எங்க க்ளாஸ்ல பவித்ரானு கூடத்தான் ஒரு பொண்ணு இருக்கா. அதவிட எங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குத்தான் ‘த்ரா’னு முடியு..." என்று சுபத்ரா சொல்லி முடிக்கும்முன்பே


"யாரு? அந்தத் தர்பூசணி பழமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் பாபி கிருஷ்ணா.


"தர்பூசணி யா?"


"பூசணிக்காய்னு சொன்னா மனசு கஷ்டப்படும். தர்பூசணினு சொன்னா ஸ்வீட்டா இருக்காங்கன்னு சொல்லிக் கூல் பண்ணிடலாமே." என்று விபாட்சு விளக்க,


"பூசணினு சொல்லவே இல்லைனா இன்னும் நல்லா இருக்குமே. அது இருக்கட்டும்… அப்போ பவித்ராவும் எங்க சிஸ்டரா?" என்று மீண்டும் விஷயத்துக்கு வந்தாள்.


"அவளோடயா நீங்க சுத்துறீங்க? நீங்க ரெண்டுபேர் மட்டும் தான ஒன்னா திரியிறிங்க?" என்ற கைலாஷிடம்,


"சிஸ்டர்ஸ்தான் சேர்ந்து சுத்தனுமா?”


“ஆனா பேர் ஒத்துப்போகுதே” என்ற விபாட்சுவிடம்,


“இப்போ உங்கள எல்லோரும் எப்டி கூப்பிடுறாங்க?" என்று சுபத்ரா கேட்க,


ஏதோ வில்லங்கமா சொல்லப்போறான்னு புரிஞ்சுகிட்ட விபாட்சு அமைதி காக்க, 


முந்திரிக்கொட்டையாய் பதிலளித்தான் கைலாஷ். "விபா!"


"என்னை எல்லோரும் எப்டி கூப்பிடுறாங்க"


"குயிலு"


"ஆங்‌‌…" என்று முகத்தைச் சுண்டிக் கேட்ட சுபத்ராவிற்கும், கைலாஷிற்கும் நடுவில் வந்து விபாட்சு நின்றுகொண்டு,


"வேணாம் டா... வாய விடாத" என்று எச்சரிக்க,


விபாட்சுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கைலாஷிடம்,


"அந்தப் பஞ்சாயத்த அப்புறம் கேட்கிறேன். இவர் "விபா" நான் "சுபா. ஆமாதானே?"


"வாட் எ டிராஜடி" என்று பாபி கிருஷ்ணாவும்,


"ஐ… நாங்க இத யோசிக்கவே இல்ல" என்று விபாட்சுவும் கூறிய விதமே, ‘இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.’ என்று கூறுவதுபோலிருக்க,


"என்ன ஒரு பொருத்தாமான பேரு?!!" என்று கூறிய கைலாஷின் வாயை மூடி, தோழிகளைப் பார்த்து விபாட்சு அசட்டுச் சிரிப்பு சிரித்துவைத்தான்.


"ஆமால்ல!... சுபத்ரா, நேத்ரா மாதிரி. அதுக்காக நான் இவரோட சிஸ்டர்னு சொல்லிடுவீங்களா!" என்று சுபத்ரா கேட்டதும்.


"என்னா…து… சிஸ்டரா? ஹெஹ்ஹேய்… நீங்க ஹாஸ்பிடல்லயே நர்ஸா வேல பார்த்தாலும் சிஸ்டரனுலாம் கூப்பிட முடியாது." என்று விபாட்சு கொந்தளிக்க,


"அடங்குடா" என்று விபாட்சுவை ஹஸ்கி வாய்சில் உதடு பிரியாமல் கூறிய கைலாஷ்,


தோழிகளைப் பார்த்து,


"நாங்க எதுக்கு இங்க வந்தோம்? என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்?" கேட்க,


"அந்த விவரத்தை எங்கட்ட சொல்லிட்டா வந்தீங்க?" என்று சட்டென்று பேசிய சுபத்ராவைப் பார்த்துச் சிரித்த கைலாஷ்,


"சைக்காலஜிகலா ஒருத்தவங்க நம்மகூடச் சும்மாச் சும்மா, பார்க்கிறப்பலாம் அடிக்கடி சண்டைக்கு வர்றாங்கன்னா, அதுக்கு அர்த்தம்' 'நீ என்னை மட்டும் கவனி' ங்கிறதுதானாம்." என்று கைலாஷ் கூறவும், 


விபாட்சுவின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய,


"ம்ஹுஹ்ஹும்! நெனப்புதான் பொழப்பக் கெடுத்துச்சாம். ஒரு சிலர பார்த்தாலே எரிச்சலா இருந்தாலும் சண்டைக்குதான் வருவாங்க." என்று சுபத்ரா கூறவும்,


பதறிய விபாட்சு நேத்ராவிடம், "அப்டியா நேத்து" என்று கேட்டதும் நேத்ராவின் முகம் சிவப்பதைக் கவனிக்காத சுபத்ரா,


"நேத்துவா? ஏன்? விட்டா, இன்னைக்கு நாளைக்கு நாளன்னைக்குன்னு சொல்வீங்க போல! ஏதோ சீனியராச்சே அவங்களா வலிய வந்து பேசுறாங்களேன்னு பேசுனா நிக் நேம்லாம் வச்சுக் கூப்பிடுவீங்களா?"


"ஏம்மா… அங்க ஷட்டௌன்னாகி இருக்கயில, இங்க ஏம்மா ஷாக் அடிக்குது?" என்று பாபி கிருஷ்ணா நேத்ராவைக் கண்களால் காட்டி கூறவும், எகிறப் போன சுபத்ரா, 


ஒரு நிமிடம் தன் தோழி நேத்ராவின் முகத்தைப் பார்த்திருந்தால் பெரிய விபரீதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.


ஆனால் விதி?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


Post a Comment

0 Comments