உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟4


உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟4


மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை…


உள்நோயாளி வார்டின் ஆறாம் எண் அறை…


காலை நேர ஷிஃப்ட்டில், ஆறாம் எண் அறைக்குப் பொறுப்பேற்கும் செவிலிப்பெண் காலை பத்துமணியளவில் அறைக்குள் பிரவேசித்து,


"இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்துடுவார்…" என்று கூறிவிட்டு படுக்கையைப் பார்க்க,


ஆபரேஷன் செய்துகொண்ட பெண் உறங்கிக்கொண்டிருந்தாள்.


"உங்க பொண்ணு ராத்திரி பூரா முழிச்சிட்டிருந்தாங்கன்னு நைட் ஷிஃப்ட் சிஸ்டர் சொன்னாங்க. ராத்திரி தூங்காம இப்ப தூங்குறாங்க பாருங்க… அவங்கள எழுப்பி, ரெஃப்ரஷ் பண்ணச் சொல்லுங்க." என்று கூறிவிட்டு வேகமாக அறையிலிருந்து வெளியேறினாள்.


"தேவி! எந்திரிம்மா… மணி பத்தாகப் போகுது… இப்ப டாக்டர் வந்துடுவாங்களாம்." என்று கூறியபடி தன் மகளை எழுப்பினார்.


தேவியைக் குளியலறையில் விட்டுவிட்டு வெளியே நின்றுகொண்டார்.


தேவி வெளியே வந்ததும் அவளைப் படுக்கையில் அமர வைத்துவிட்டு


"இங்கயே நான் பால் வாங்கிட்டேன். இந்தா நீ குடி. இன்னும் கொஞ்ச நேரத்துல தங்கச்சி டிபன் எடுத்துட்டு வந்துருவா" என்று கூறியவர்,


தண்ணீர் ஜக் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். 


அவர் தேவியிடம், "யார்மா தண்ணி ஜக்கை கயிறால கட்டினது?" என்று கேட்க, 


"நான் தேவைப்படும்போது எடுக்குறதுக்காக நர்ஸ்தாம்மா இந்த மாதிரி ஐடியா பண்ணிக் கட்டுனாங்க. இந்தக் கைல நான் கயிற இழுத்தேன்னா, தண்ணி ஜக் வரும் பாருங்க!" என்று தேவி செய்து காட்டவும், 


"ரொம்ப சந்தோசம் டா! தங்கச்சி வந்ததும் நான் கிளம்புறேன்." என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே,


ஆறாம் அறைக் கதவை ஒரு இளம்பெண் திறக்க முயல,


காலை நேர பொறுப்பிலிருந்த செவிலிப்பெண்,


"யார் நீங்க? யாரப் பார்க்கனும்?" என்று கேட்டதும்,


"என் பேரு நந்திதா. இந்த ரூம்ல அட்மிட் ஆயிருக்கிற தேவியோட தங்கச்சி."


"இது விசிட்டர்ஸ் டைம் இல்ல… இப்ப டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம்."


"நான் உள்ளே போனதும் அம்மா வெளியே வந்துடுவாங்க. அம்மா வீட்டுக்குப் போயி, குளிச்சு, சாப்பாடு பண்ணிட்டு வர்ற வரைக்கும் நான் அக்காவுக்குத் துணையா இருக்க வந்தேன்..."  என்று நந்திதா கூறினாள்.


"ரூம்குள்ள டாக்டர் வரும்போது ஒரே ஒரு ஆள்தான் இருக்கணும். அவங்க டாக்டர் சொல்ற இன்ஸ்ட்ரக்சன்சை ஃபாலோவ் பண்றவங்களா இருக்கணும். அதனால நீங்க விசிட்டர்ஸ் கால்ல வெயிட் பண்ணுங்க. டாக்டர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் நீங்க உள்ள போய், அம்மாவ வீட்டுக்கு அனுப்பலாம்" என்று டாக்டர் வரப்போகும் பதட்டத்தில் அவசர அவசரமாக செவிலிப்பெண் நந்திதாவிடம் கூறினார்.


"டாக்டர்ஸ் சொல்ற இன்ஸ்டிரக்சன்சை அம்மாவ விட நான்தான் நல்லா கவனிப்பேன். சரியா ஃபாலோ பண்ணவும் செய்வேன். நான் உள்ளே போயிட்டு 'டக்'குனு அம்மாவை வெளியே அனுப்பி வச்சிடுறேன்" என்று அனுமதி கேட்க, 


சற்றுத் தயங்கிய செவிலிப்பெண், பிறகு சம்மதித்தார். 


நந்திதா உள்ளே போனதும், தேவியின் அம்மா அறையிலிருந்து வெளியே வந்தார்.


ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், நந்திதா சிறுபெண் என்பதால் எந்த விபரமும் கூறாமல், செவிலிப்பெண்ணிடம்,


"பேசன்ட்டோட பேரன்ஸ்சை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்க" என்றதும்,


"எங்கிட்ட சொல்லுங்க டாக்டர் நான் புரிஞ்சுகிடுவேன். பி.எஸ்.எம்.எஸ் (சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில்  இளங்கலை) படிச்சுக்கிட்டிருக்கேன்" என்று நந்திதா மிகவும் மெல்லிய தொனியில் கூற,


நந்திதாவைப் பார்த்துச் சிரித்த டாக்டர், "ஒரு பேஷண்டப் பத்திச் சொல்றதுக்கு இன்னொரு டாக்டர் தேவையில்லம்மா. அந்தப் பேசன்ட்டோட பேரன்ஸ் தான் வேணும். நீ சின்னப் பொண்ணு. அம்மா வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லு." என்று கூறியதும்.


"எனக்கு ஒரு டவுட் கேட்கலாமா டாக்டர்?" என்று நந்திதா டாக்டரைப் பார்த்து மென்மையான புன்னகையுடன் கேட்க, 


"சொல்லுமா" என்ற 


"அக்காவுக்கு என்ன மருந்து, மாத்திரை கொடுக்கிறீங்கன்னு தெரியல… மூனு வேளையும் நர்ஸ்தான் குடுக்கிறாங்க…ஏன்? எங்ககிட்ட குடுத்தா கூட நாங்களே அக்காவுக்குக் கொடுப்போமே டாக்டர்" என்றதும்


அதற்கும் சிரித்தார் டாக்டர்.


"சாதாரணமா ஆபரேஷன் பண்ணி இருந்தா உங்க கையிலதான் கொடுத்திருப்போம். உங்க அக்காவுக்கு ரொம்பக் கிரிட்டிகல் சிச்சுவேஷன். உங்க அக்காவுக்குக் கண்ணு வர வாய்ப்பே இல்லைன்ற நிலை… சிங்கப்பூரிலிருந்து வந்த ஐ ஸ்பெசலிஸ்ட், அவரால முடிஞ்ச எஃபர்ட் போட்டுக் கண் ஆபரேஷன் பண்ணி இருக்கிறார். இப்பவுமே உன்னோட அக்காவுக்கு ஃபிஃப்ட்டி பிரசன்ட் தான் கண்ணு தெரிய வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி சூழ்நிலையில் அவங்களோட உடல்நிலையைப் பொறுத்துத் தான் நாங்க மெடிசின்ஸ் கொடுக்க முடியும். ஓகே?" என்றவரிடம்,


"அக்காவுக்கு நிச்சயமா கண்ணு தெரிஞ்சிரும்னுதான் சொல்லுங்களேன் டாக்டர்" என்றாள் நந்திதா கண்கலங்க.


"உன்ன மாதிரி ரொம்பப் பிரியமான சிஸ்டர், உங்க பேரன்ட்ஸ் அப்புறம் எங்களோட ப்ரேயர் லாம் பலிச்சு, உங்க அக்காவுக்குக் கண்ணு கிடச்சா சந்தோசம் தானே?" என்று கூறி விட்டு அறையை விட்டுச் சென்றார்.


இரவு  

இரவுப் பணி செவிலிப்பெண் அறைக்குள் வர, தேவியின் அம்மா மகளுக்குத் தேவையான சில விபரங்களை செவிலிப்பெண்ணிடம் கேட்டு விட்டு, 


தண்ணீர் ஜக்கைக் கயிற்றில் மாட்டிய ஐடியாவிற்கு நன்றி கூறினார். 


அப்பொழுதுதான் ஜக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பதைப் பார்த்த செவிலிப்பெண், 


"என்ன சொல்றீங்க? இந்த ஜக்ஐ நான் ஒன்னும் கட்டளையே! டாக்டர் இதப் பார்த்தாங்களா? ஒன்னும் சொல்லலையா?" என்று கேள்விகளை அடுக்க, 


தாயின் அருகில், படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த தேவி, 


"நேத்து நைட்டு நான் தண்ணி கேட்டதும் நீங்க தான சிஸ்டர்  ஜக்கை இந்த மாதிரி பண்ணி கொடுத்தீங்க?" என்று கூற, 


அதற்கு செவிலிப்பெண், "இல்லம்மா. நேத்து நைட்டு நீ எந்திரிச்சு உட்கார்ந்து இருந்தப்ப, உன்னைப் படுக்கச் சொல்லிட்டுப் போனேன் பாரு. அதுக்கப்புறம் காலைல ஷிஃப்ட் முடியும்போது செக் பண்ண வந்தேன்… அதுக்கப்புறம் இப்போதான் வரேன்." என்று கூறினார்.


"வேற யார் இப்படிப் பண்ணி இருப்பா?" என்று தேவியின் அம்மா கேட்க,


"ரூம் கிளீன் பண்றவங்க யாராவது இப்படிப் பண்ணாங்களா? நர்ஸ் தவிர வேறு யாரும் ரூமுக்குள்ள வந்தார்களா?" என்று தேவியிடம் கேட்டார் செவிலிப்பெண்.


"நீங்க என்னைய படுக்கச் சொல்லிட்டுப் போன கொஞ்ச நேரத்திலேயே நான் தண்ணி தவிக்குதுன்னு கூப்பிட்டேன் சிஸ்டர். அப்ப வந்தாங்க." என்று தேவி கூறியதும், 


செவிலிப்பெண் புருவங்களைச் சுருக்கி மிகவும் தீவிரமாக யோசித்தாள்.


'நான் இங்கேயேதான் இருந்தேன்? யாரும் வரலையே!' என்று நினைத்த செவிலிப்பெண்,


"வந்தவங்க உங்ககிட்ட ஏதாவது சொன்னார்களா? என்று கேட்டாள்.


அதற்கு தேவி, "இல்லை? என்கிட்ட எதுவுமே பேசல. நான் நன்றி சொன்னதுக்குக் கூட பதில் சொல்லாமல் போயிட்டாங்க." என்று கூற, 


"இனிமே யாரு வந்தாலும், யார்? என்னன்னு விசாரிங்கம்மா… இது டாக்டருக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும்." என்று பதட்டமாக செவிலிப் பெண் கூற,


"சரி விடுங்க! இப்ப என்ன? நல்லதுதானே பண்ணி இருக்காங்க." என்றார் தேவியின் அம்மா. 


"அப்படி விட முடியாதும்மா. ராத்திரி நேரத்துல ஒரு பேசன்ட்டோட ரூம்குள்ள யார் வந்தாங்கன்னு தெரிய வேண்டாமா எங்களுக்கு? நான் எதுக்கும் வெளியே போய்க் கேட்டுப் பார்க்கிறேன்." என்று கூறி அறையை விட்டுச் சென்றாள் செவிலிப்பெண்.


இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை தேவியும், தேவியின் அம்மாவும். 


வந்தது யார் என்று அறிந்தால் இவ்வாறு இருப்பார்களா?


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


ஆகஸ்ட் 15 குடியரசு தினத்திற்கு 


கல்லூரியே தயாராகிக் கொண்டிருந்தது.


ஒருபுறம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் முழு பலத்தையும், சமயோசித தன்மையையும் மெருகேற்றிக் கொண்டிருந்தனர்.


 மற்றொருபுறம் ஆடல், பாடல், நாடகம் என்று தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.


குடியரசு தினத்திற்குக் கல்லூரிக்கு வரவிருக்கும் சிறப்பு விருந்தினரை வரவேற்பதற்காக டிரம்ஸ் வாசிக்கும் மாணவர்கள் இசையோடு அங்க அசைவுகளும் ஒரே மாதிரி இருக்கவேண்டுமென்ற ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.


மேடையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் மாணவிகள் இருவர், வரவேற்புரை வாசிக்கும் மாணவன், நன்றியுரை நவிழும் மாணவன் போன்றோர் தங்களுக்கான உரைகளை உணர்வுப்பூர்வமாகவும் இயல்பாகவும் பேசிப் பழகிக்கொண்டிருந்தனர்.


கல்லூரியே, கோயில் திருவிழாவிற்குத் தயாராகும் கிராமம்போல் திரும்பும் இடமெல்லாம் மனதுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.


இவற்றையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு மாணவ மாணவியர் கூட்டம் கல்லூரியையே சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டிருந்தனர்.


அவர்களை ஆடிட்டோரியத்திற்குள் மட்டும் அனுமதிக்கவில்லை.


அனுமதி கிடைக்காத விசயத்தில்தானே மாணவ பருவத்தில் ஈர்ப்பு வரும்.


அதை உண்மையாக்கும் விதமாக எப்படியாவது உள்ளே நடப்பவற்றைக் கண்டு கழித்திட, இல்லாத வேலையெல்லாம் பார்த்தனர், குறும்புக்கார மாணவர்கள்.


அப்படி என்ன செய்கிறார்கள்? என்று நாமும் பார்ப்போமா?


ஆடல், பாடல், நாடகங்களை முழுவதும் பயிற்சி செய்து முடித்த மாணவர்கள் அதற்கான ஆசிரியரிடம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆசிரியருக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறதா என்று அறிவதற்காகக் காத்திருந்தனர்.


இன்னொரு புறம்,

இன்னும், எந்தவகையான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதையே முடிவெடுக்க முடியாத மாணவ மாணவியருக்கு ஆசிரியரின் ஆலோசனைகள் நடந்துகொண்டிருந்தது…


அங்கே…


"நேத்ராவும், சுபத்ராவும் பாடலாமே?" என்று ஆசிரியை கேட்க,


"மேம்! நாங்க ஸ்டேஜ்ல ஏறிப் பாடுற அளவுக்கு புரஃபசனல் சிங்கர்ஸ் இல்ல மேம்" என்று மறுத்துக்கொண்டிருந்தனர்.


"வெல்கம் ஃபங்சன்ல அருமையா பாடுனீங்களேம்மா" என்றுதும்,


'விபாவோட பாட்டுல மயங்கி ஏதோ பண்ணிவச்சோம்… இத இந்த மேம்ட்ட சொல்ல முடியுமா என்ன?' என்று யோசித்த நேத்ரா,


"அது… அது… வந்து…" என்று இழுக்க,


"என்ன? ஓகே வா?"


"அச்சோ!" என்றவள்,


'இப்படித் திடீர்னு கேட்டா என்ன பொய் சொல்லறதுன்னு  தெரியலையே? என் மரமண்டையில சட்டுனு பொய் வராது. ச்சை… இந்த மேம் வேற என் மூஞ்சியவே உத்துப் பார்க்கிறாங்களே…' மனதிற்குள் போராடிய நேத்ரா, 


அமைதியாக அவள் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுபத்ராவைப் பார்த்து முறைத்தபடி,


'ஏன்டி எரும! எனக்குச் சட்டுனு பொய் சொல்ல வராதுன்னு தெரியும்ல… நான் கிடந்து அல்லாடிக்கிட்டிருக்கேன். யாருக்கு வந்த விருந்தோன்னு நிக்கிற?' என்று மனதிற்குள் சுபத்ராவைத் திட்ட,


நேத்ராவால் சமாளிக்க முடியவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சுபத்ரா,


"மேம்… அன்னைக்குத் தான் நாங்க காலேஜுக்கு வந்த ஃபர்ஸ்ட் டே… அந்தக் குஷில எடுத்து, விட்டோம். மத்தபடி பாடலாம் தெரியாது மேம்" என்றதும்,


"இது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா? பிரிப்பேர் ரே பண்ணாம மேடையேறி, கை தட்டல் வாங்கிட்டீங்களே!" என்ற ஆசிரியையை, பரிதாபமாகப் பார்த்த நேத்ரா,


'அச்சோ அறிவுக்கொழுந்தே! அது, நாங்க பாடுனதுக்குக் கை தட்டல… விபா பாட்டைப் புகழ்ந்து பாடினதா நெனச்சு இந்த லூசுப் பசங்க பண்ணின வேலை' என்று மனதுக்குள் கலாய்க்க,


"மேம் நிஜமாவே நாங்க இதுவரை ஸ்டேஜ்ல பாடினதே இல்ல" என்று இதமான புன்னகையுடன் பேசிய சுபத்ராவைப் பார்த்த நேத்ரா,


'இவ ஒரு தனிஈஈஈ டைப்… இந்த மேம் குறுகுறுன்னு மூஞ்சிய பார்க்கும் போதுகூட எப்பிடி இவளால இவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டே பேச முடியுது?' என்று வழக்கம்போல சுபத்ராவின் குணாதிசயத்தில் வியந்து கொண்டிருக்க,


"எனக்கு அதெல்லாம் தெரியாது… அன்னைக்கு நீங்க பாடினது எல்லாருக்குமே புடிச்சிருந்தது… நிச்சயமா சீஃப் கெஸ்ட்க்கும் பிடிக்கும். நல்ல பாட்டா செலக்ட் பண்ணி நாளைக்குப் பாடிக் காட்டுங்க." என்று நகரந்தவரை,


'சீஃப் கெஸ்ட்டை ஓட ஓட விரட்டனும்னு ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க போலிருக்கு… விதி யார விட்டுச்சு… யார் பெத்த பிள்ளையோ எங்கள நம்பி பாடச் சொல்லிட்டுப் போகுது.' என்று மிகவும் பரிதாபமாக அந்த ஆசிரியையே நேத்ரா பார்த்துக் கொண்டிக்க,


"ஹாய்! என்ன திருவிழால காணமப் போன மொசக்குட்டி மாதிரி முழிச்சுக்கிட்டிருக்கீங்க?" என்று பின் பக்கமிருந்து ஆண்குரல் வர,


அது யாருடைய குரல் என்று அறிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாத நேத்ரா,


"ஹோ… இவன் யார்டா?… நாங்களே ஃபிசிக்ஸ் ப்ராப்ளத்தை விட மோசமான பிரச்சனைல இருக்கும்போது காமெடி பண்ணிக்கிட்டு" என்று புலம்பியபடி நேத்ரா திரும்ப,


அவள் எதிரே வழக்கமான மனதை வருடும் புன்னகையுடன் நின்றிருந்தான் விபாட்சு!


"அச்சச்சோ இவனா?' என்று நேத்ரா விழி பிதுங்க,


அந்த வளாகமே அதிர்ச்சியுடன் விபட்சு, நேத்ராவைப் பார்க்க,


"சாரி! சாரி! சாரி! ப்ளீஸ்… நான் என் க்ளாஸ் குரங்குல ஒன்னுன்னு நினைச்சுட்டேன்" என்று நேத்ரா கண்களைச் சுருக்கி, மூக்கைச் சுண்டி கேட்ட விதத்தில் சிரித்த விபாட்சு,


"எதுக்கு இத்தனை சாரி? உங்க க்ளாஸ் பசங்கள புகழ்ந்ததைவிட, என்னை ஒன்னும் பெரிசா சொல்லிடலையே?"என்று நேத்ராவை அவளுடைய வகுப்பு மாணவர்களிடம் மாட்டிவிட்டு,


சுற்றிலும் இருக்கும் மாணவர்களில் நேத்ராவின் வகுப்பு மாணவனைத் தேடியவாறு குறும்பாக நேத்ராவைப் பார்த்தான் விபாட்சு.


"இதுக்குப் பேசாம என் கன்னத்திலயே ரெண்டு விட்டிருக்கலாம்" என்று நேத்ராவும் தனது வகுப்பு மாணவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தவாறு கூற,


"ஹேய்… என்ன நீ? என்னதான் மாமன் பொண்ணா இருந்தாலும் இப்டியா நடு ஹால்ல வச்சு கன்னத்துல கிஸ் கேட்ப?" என்று மேடை ரகசியம்போல் அருகிலிருக்கும் மாணவ மாணவிக்குக் கேட்கும் தொனியில் விபாட்சு பேச,


அதிர்ச்சியில் கண்களை விரித்து நின்ற நேத்ராவைப் பார்த்த சுபத்ரா,


'ஐயே! இவ ஏன் இப்டி நிக்கிறா?' என்று நினைத்து, விபாட்சுவை நோக்கி,


"எதாவது வேணுமா சீனியர்?" என்று முன்னபின்ன பழகாத பாவனையில் அசால்ட்டாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.


மேலும் அதிர்ச்சியாகி நேத்ரா சுபத்ராவைப் பார்த்துக் கொண்டிருக்க.


சற்றும் எதிர்பாராத விதமாக சட்டென்று குனிந்து, விபாட்சு மிகவும் தீவிர பாவனையுடன், எதையோத் தேட,


உடனே கூடியிருந்த மாணவர்களுடன் சேர்ந்து பாபி கிருஷ்ணாவும், கைலாஷும் விபாட்சுவின் அருகில் வந்து,


"என்ன விபா? எதயாவது கீழ போட்டுட்டியா?" என்று கேட்டுவிட்டு அவர்களும் குனிந்து தேட,


"நான் எதத் தேடுறேன்னே தெரியாம நீங்க எல்லாரும் என்னத்தடா தேடுறீங்க?" என்று விபாவைச் சுற்றி நின்றுகொண்டு தரையில் பார்வையால் அலசிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் விபாட்சு கலாய்க்க,


'இவன் ஆர்ம்பிச்சுட்டான்' என்று சிலரும்,


'உனக்காகத் தானடா வந்தோம்' என்று சிலரும்,


'அப்படியாவது உன் பக்கத்துல நிக்கலாம்னு வந்தோம்' என்று சில மாணவிகளும் நினைத்தபடி அவரவர் இடத்தை நோக்கித் திரும்ப,


"விளையாடியது போதும் நீ எதத் தேடுற?" என்று தீவிரமாகக் கைலாஷ் கேட்டான்.


"ஓ… அதுவா? இங்க விலைமதிக்க முடியாத முத்துக்கள் சிதறியது… அதைத்தான் பார்த்தேன்." என்றதும்,


மீண்டும் அனைவரும் விபாட்சுவை நெருங்கி,


"முத்துக்களா?"


"முத்துக்கள்னா என்ன மாதிரியான ஜுவல்? ஆரமா? மோதிரமா?"


என்று கேட்டபடி மற்றவர்களும் இன்னும் வேகமாகத் தரையில் தேட,


"டேய்! டேய்… ஏன்டா இப்படி நம்ம மானத்த வாங்குறீங்க? போங்கடா அவனவன் இடத்துக்கு" என்று மற்ற மாணவர்களைப் பார்த்து, லேசாக நெற்றியில் அடித்தபடி கூறிவிட்டு,


அவர்கள் கலைந்து சென்றதும்,


தனது நண்பர்களைப் பார்த்துச் சிரித்தபடி, "கிருஷ் உனக்குக்கூடவா நான் சொன்னது புரியல?" என்று கேட்டுவிட்டு,


தன்னெதிரே நின்றிருந்த சுபத்ராவைப் பார்த்தவாறு,


"நம்ம சுபா இல்ல… சுபா… அவ என்ட பேசிட்டா டா" என்று கலகலவென விபாட்சு சிரிக்க,


"அதாவது நம்ம்ம சுபா பேசுறதுக்காகத் திருவாயைத் திறக்கவும் முத்து சிதறிக் கீழே விழுந்துடுச்சுன்றியா?" என்று பாபி கிருஷ்ணா விளக்கியதும்,


'இவ்வளவு நேரம் என்னைத்தான் கிண்டல் பண்ணியிருக்கானா?' என்று வெதும்பிய சுபத்ரா விபாட்சுவைக் கண்களால் பொசுக்க,


"அதுவா விபா… மேம் எங்களைப் பாடச்சொல்றாங்க" என்று வேகமாகப் பேச்சை மாற்றினாள் நேத்ரா,


அது நன்றாகத் தெரிந்தும், சுபத்ராவின் அக்னிப் பார்வைக்குப் பனி போன்ற பார்வையால் பதில் சொன்னபடி, "பாட வேண்டியது தானே?" என்றான் இயல்பாகத் தோள்களைக் குலுக்கி.


"எங்களுக்குப் பாடத் தெரியாது ப்பா…"


"ஹான்! முதநாள் பாடுனீங்களே?" என்று கைலாஷ் கேட்க,


"ம்ச்சு அது ஒரு ஃப்லோ ல வந்தது ப்பா"


"என்னாஆஆஆது ஃப்லோ வா?" என்று பாபி இழுக்க,


"ம்ம்ம்" என்றாள் நேத்ரா அப்பாவியாக,


"ஏன் இப்ப மட்டும் அந்த ஃப்லோ வராதா?" என்று பாபி கிருஷ்ணா நக்கலாகக் கேட்க,


அதற்கு சுபத்ரா, "வராது… அதுவும் நீங்க சொன்னா வரவே வராது* என்றாள் வெடுக்கென்று.


"அப்புறம் யார் சொன்னா வரும் பேபி?" என்ற கைலாஷை சுபத்ரா, நேத்ரா இருவருமே முறைக்க,


"கூல்… இப்ப என்ன பண்றதா உத்தேசம்?" என்று விசயத்துக்கு வந்த விபாவிடம்,


"உங்க ஃபிரண்ட் ஐ காப்பாத்துறீங்களாக்கும்? இவர பேபி ன்லாம் கூப்பிடக்கூடாதுன்னு சொல்லுங்க. சீ…னியர்" என்று சீனியரில் அழுத்தம் கொடுத்த சுபத்ராவைப் புன்னகையுடன் பார்த்தவன்,


"ஓகே… உங்களுக்குப் பிடிக்கலைனா சொல்லமாட்டான்" என்ற விபாட்சுவிடம்.


"இதுக்கு என்ன அர்த்தம்?' என்றாள் சுபத்ரா வீராப்பாக.


"நீங்க என்ன நினைச்சீங்க?" என்று கேட்டான் விபாட்சு குறும்பாக…


"ம்ம்?… அப்போ எங்களுக்குப் புடிச்சா…" என்று ஆரம்பித்த சுபத்ராவிடம்,


"கோபத்துல உளர்ற சுபா… எங்களுக்குப் புடிச்சா பேபின்னு கூப்பிடுவியான்னு தானே கேட்கவந்த? உங்களுக்கே புடிச்ச பிறகு கூப்பிடாம இருப்போமா?ன்னுவானுக" என்ற நேத்ராவின் கிசுகிசுப்பில் முகத்தை சரி செய்துகொண்டு வேறுபுறம் திரும்பிக் கொண்டாள் சுபத்ரா.


அவளின் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்த விபாட்சு,


"உங்க ஃபிரண்ட் எப்பவுமே இப்படித்தானா?" என்று சிரிக்க,


மீண்டும் கோபம் தலைக்கேறிய சுபத்ரா,


"ஆமா… என்ன பண்ணப்போறீங்க?" என்று எகிற,


"அம்மா தாயே! நீ பேசுறது எல்லாம் டபுள் மீனீங்கல வருது." என்ற கைலாஷிடம்,


"என்னது அம்மாவா?" என்று முறைத்த சுபத்ராவிடம்,


"தாயே! வ விட்டுடீங்க சுபா!" என்று எடுத்துக் கொடுத்தான் பாபி கிருஷ்ணா.


"பேபின்னும் கூப்பிடக் கூடாது அம்மான்னும் கூப்பிடக்கூடாதுன்னா என்னங்க பண்றது?" என்று மிக மெல்லிய கீரல் போன்று உதட்டை இழுத்து கைலாஷ் சிரிக்க,


"பேரச் சொல்றது…" என்றாள் வெடுக்கென்று.


"நாங்க ஸ்கூல்ல படிக்கிறப்ப, ஒரு பொண்ண நான், ஃபர்ஸ்ட் டைம், பேர் சொல்லிக் கூப்பிட்டபோது அந்த கேர்ள், 'நான் என்ன உன் பொண்டாட்டியா?' ன்னு எகிறினாள். ஆனா உங்களுக்குப் பரவாயில்லையா?' கண்களில் குறும்புடன் பாபி கிருஷ்ணா கேட்க,


கோபத்தின் உச்சிக்குச் சென்ற சுபத்ரா நல்லாத் திட்டுவதற்காக வாயைத் திறக்கவும், நேத்ரா சுபத்ராவின் கையைப் பிடித்து, 


சுபத்ராவின் கண்களை, "என்னாச்சு?" எனபதுபோல் பார்க்க,


சுபத்ராவின் கோபம் தணிந்து நேத்ராவைப் பார்த்து இதமான புன்னகை ஒன்றை வீசினாள்.


"பார்ரா! ஒரே பார்வையில கூல் பண்ணிட்டாங்க… அத எங்களுக்கும் சொல்லித்தாங்க நேத்ரா!" என்று விபாட்சு கலாய்க்கும் பார்வையை சுபத்ராமீது வைத்தபடி கேட்க,


விபாட்சுவைப் பார்த்துப் புருவம் சுருக்கித் தலையைச் சிலுப்பியவளின் தாடையைத் தன் பக்கம் திருப்பி சுபத்ராவின் கண்களைப் புன்னகைத்தவாறு நேத்ரா பார்த்ததும்,


நேத்ராவின் தோளில் சாய்ந்து நின்று கொண்டாள் சுபத்ரா.


இவர்களின் நட்பில் மெய்சிலிர்த்த விபாட்சு,


"நீங்க ரெண்டு பேரும் எத்தனை வருசமா ஃபிரண்ட்ஸ்?" என்று கேட்க,


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டு விபாட்சுவிடம்…


என்ன சொல்லியிருப்பார்கள்?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



Post a Comment

0 Comments