உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟3
தூங்காநகரம் என்று பெயரெடுத்த மதுரை மாநகரம்…
தெருவிளக்குகளின் பிரகாசத்தில் நடுஇரவு ஒரு மணியில் கூட இரவு எட்டு மணிபோல் காட்சியளித்தது.
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்துகூட முழுவதும் அடங்கவில்லை…
தெருவிற்கு இரண்டு பரோட்டா கடைகள் பட்டப்பகல்போல் சுறுசுறுப்பாக வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொண்டிருந்தன…
தள்ளுவண்டிக் கடைகளில் சுடச்சுட தயாரிக்கப்படும் சைவம் மற்றும் அசைவ உணவுவகைகளின் வாசம் சாலையில் செல்வோரின் பசியைத் தூண்டியது.
அண்ணா பேருந்து நிலையத்தைக் கடந்து இடதுபுற சாலை திருப்பத்தில் உள்ள சாலையோரக் கடைகளில் ஏதேனும் வாங்கலாமா வேண்டாமா? என்ற யோசனையுடன் நடந்து செல்லும்போது பார்வைக்குள் விழுந்தது, அரவிந்த் கண் மருத்துவமனை!
மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை அங்காங்கே வெளிச்சப் புள்ளிகளுடன் இருளில் மூழ்கியிருந்தது…
வெளிநோயாளிகளுக்கான நுழைவாயிற் கதவு அடைக்கப்பட்டிருக்க,
உள்நோயாளிகளுக்கான பகுதி மட்டும் கொஞ்சம் நடமாட்டத்துடன் காணப்பட்டது.
சிறப்பு வார்டு அறைகளுக்கு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி மேஜையில் தங்களது கைகளையே தலையணையாக்கி தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தனர் சில செவிலியர்கள்.
ஒருசில செவிலியர்கள் மொபைல் ஃபோனில் பிரியமானவர்களுடன் கிசுகிசுவென்று சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒரு சிலர், அடுத்த அறை செவிலியருடன் அன்றைய தினம் மருத்துவமனையில் நடந்த விவரங்கள் மற்றும் வில்லங்கங்களைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தனர்.
அவ்வாறு மிகவும் சுவாரஸ்யமாகப் பக்கத்து அறை செவிலியருடன் பேசிக்கொண்டிருந்த ஆறாம் எண் அறைக்குப் பொறுப்பாக இருந்த செவிலிக்கு,
தன் பொறுப்பிலிருந்த அறையில் ஏதோ பொருள் கீழே விழும் ஓசை கேட்க,
இரண்டு மணிநேரமாகக் கொஞ்சம் கூட சலைக்காமல் சக செவிலியரோடு வெட்டி அரட்டையடித்துக் கொண்டிருந்தும்,
"கொஞ்சநேரம் நிம்மதியா பேச முடியுதா? இரு போயிடாத. என்னன்னு பார்த்துட்டு வர்றேன்" என்று சக செவிலியரிடம் கூறிவிட்டு,
தானியங்கிக் கதவை அழுத்தித் தள்ளிக்கொண்டு அறையினுள் நுழைந்தாள்.
மங்கலான இரவு விளக்கொளியில் நோயாளியின் படுக்கையைப் பார்த்தாள்.
நோயாளியிடமிருந்து எந்த அசைவும் இல்லாததால், நோயாளிக்குத் துணையாக அந்த அறையிலேயே தங்கிய நோயாளியின் தாயாரும் நன்கு உறங்குவதைக் கண்ட செவிலி,
'இவர்கள் இருவரும் உறங்கும்பொழுது வேறு எங்கிருந்து சத்தம் வந்தது?' என்று எண்ணி,
அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட்டியவளின் பார்வை நோயாளியின் படுக்கையைப் பார்த்ததும் 'திக்' கென்று தூக்கிப் போட்டது.
படுக்கையில் ஒரு கரிய உருவம் அமர்ந்தபடி செவிலிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தது.
தாழ்வாரத்திலிருந்து மிகவும் லேசாக கசிந்த ஒளி அந்த உருவத்தின் கண்களை மட்டும் காட்சிப்படுத்த,
அந்தக் கண்களோ, கருவிழிகள் இல்லாத வெள்ளை பகுதி மட்டும் பெரிதாய் முகத்தைவிட்டே வெளியே வந்து விழுமளவு புடைத்துக்கொண்டிருக்க,
பயத்தில் அலறப்போன செவிலி இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டாள்.
முகமெல்லாம் வியர்த்து கழுத்தில் வழிய, இதயமோ பாலத்தின் மீது ஓடும் ரயிலைப் போன்று தடதடத்தது…
தட்டுத் தடுமாறி நகர்ந்து, அறையின் விளக்குக்கான சுவிட்ச்சை அழுத்த, அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.
பயத்தில் கண்களை மூடியிருந்த செவிலி கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு லேசாக இமைகளைப் பிரித்து கரிய உருவத்தைப் பார்த்தாள்.
அங்கே…
படுக்கையில் கண் ஆபரேஷன் செய்துகொண்ட பெண் அமர்ந்திருந்தாள்.
அவளுடைய கண்களில் வெள்ளைநிறக் கட்டு போடப்பட்டிருந்தது.
அந்தக் கட்டே பெரிய விழிகள் போன்று மங்கலான வெளிச்சத்தில் தெரிந்திருப்பது புரிந்ததும்,
அவ்வளவு நேரம் பயத்தில் அடக்கியிருந்த மூச்சை மூக்கு மற்றும் வாய் வழியாக ஒரே நேரத்தில் வெளிட்டாள்.
"ச்சே!" என்று தலையை உலுக்கி, தன்னை நிலைபடுத்திக் கொண்டு,
"ஏம்மா தூங்காம உக்கார்ந்திருக்கீங்க? ரெண்டு நாள் முன்னாடி தான் ஆபரேஷன் பண்ணிய கண்ணு… கெடுத்துக்காதீங்க. படுங்க…" என்று அக்கறையோடு கண்டிக்க,
"எங்க அம்மா எங்கே?" என்று கேட்டாள் கண்களில் கட்டுடன் படுக்கையில் அமர்ந்திருந்தவள்.
"அவங்க அசந்து தூங்குறாங்க… உங்களுக்கு ஏதாவது வேணுமா? சொல்லுங்க, கொண்டு வர்றேன்." என்ற செவிலியின் பக்கம் திரும்பிய நோயாளிப் பெண்,
"இல்ல. ஒன்னும் வேணாம்" என்றதும்,
"அப்புறம் ஏன் எந்திரிச்சு உக்கார்ந்திருக்கீங்க?" என்று கேட்க,
"பழைய ஞாபகங்கள்… தூக்கம் வரல."
"தூக்கம் வரலைனாலும் பரவாயில்ல, படுங்க… ஆபரேசன் பண்ணுன கண்ணு… டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா?"
"அவர் நிறைய சொன்னார்… நீங்க எதச் சொல்றீங்க?" என்று ஆபரேஷன் பண்ணிக்கொண்ட பெண் புன்னகை தவழக் கேட்க,
அந்நிலையிலும் குறும்பாகப் பேசும் அந்தப் பெண்ணைக் கண்டு, செவிலியின் இதழ்களும் லேசாக விரிய,
"உங்களுக்கு ரோம்ப சிரமப்பட்டுத் தானே ஆபரேஷன் பண்ணினாங்க? ஆபரேசனுக்கு அப்புறமும் கண்ணு தெரியுமா என்னன்னே தெரியலைல?"
"ஆமா… ஃபிஃப்டி ப்ரசெண்ட் தான் கண்ணு தெரிய சான்ஸ் இருக்குன்னாங்க."
"அப்புறம்? பத்திரமா இருக்க வேண்டாமா? படுத்துக்குங்க… டாக்டருக்குத் தெரிஞ்சா கோபப்படுவார்" என்று கூறி,
நோயாளி படுத்துக்கொள்ளவும்,
"நான் கதவுக்கிட்ட தான் இருக்கேன்… எதுவா இருந்தாலும் அந்த ஸ்விட்ச் ஐ அழுத்துங்க வந்துடுவேன்…"
"சரி!"
"இடையில எந்திரிச்சா, உங்க தலைமாட்டுல இருக்குற லைட்ஐ போடுங்க… இருட்டுல உக்கார்ந்திருக்காதீங்க."
"ம்ம்… ஆனா எனக்கு எதுக்கு லைட்?"
"அது எனக்கு"
"ம்ம்… சரி!"
"எதையாவது நினைச்சுக்கிட்டிருக்காமத் தூங்குங்க" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு அறையின் கதவைச் சாத்திய பிறகு தனது இருக்கையில் தளர்ந்து அமர்ந்தாள்.
செவிலி வெளியே சென்றுவிட்டதை உணர்ந்த மறுநிமிடமே அந்தக் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது.
தனது அம்மாவின் படுக்கை பக்கம் திரும்பி, யாருக்கும் கேட்காத வகையில், "அம்மா!' என்று அழைத்தாள்.
அம்மா எழுவதற்கான சப்தங்கள் கேட்காமல் போகவே,
"பாவம்! பகல் பூராவும் ஓடிக்கிட்டும், ஊர்ல இருக்கும் எல்லா தெய்வங்களிடமும் மன்றாடிக்கிட்டும் இருந்தாங்க. தூங்கட்டும்!" என்று நினைத்தவள்,
மீண்டும் படுத்துத் தூங்க முயற்சி செய்தாள்.
நா வறண்டுபோய்த் தாகம் உறக்கத்தை நெருங்கவிடாமல் செய்தது… நாவில் உமிழ்நீர் சுரப்பதுகூடக் கஷ்டமாக,
மீண்டும் எழுந்து அமர்ந்தாள். கைகளால் துழாவியபடி தண்ணீர் ஜக்கைத் தேட, கையும் காலும் எதிலாவது முட்டி அடிபட்டது…
மறுபடியும் கஷ்டப்பட்டுப் படுக்கையில் அமர்ந்திருந்தவளுக்குத் தாகம் உயிரெடுக்க,
மீண்டும் "அம்மா" என்றழைத்தாள்.
தன்னருகில் யாரோ வருவதை உணர்ந்தவள்,
"எனக்கு ரொம்பத் தாகமா இருக்கும்மா" என்று கூறவும்,
அருகில் ஏதேதோ பொருட்கள் அசையும் சப்தம் வரவும்,
தண்ணீருக்காக அவள் காத்திருக்க, அவளுடைய இடது கையைப் பற்றி அருகிலிருந்த கயிற்றைப் பிடிக்க வைத்தார்கள்.
'தன்னைத் தொட்டுக்கொண்டிருப்பது தனது தாயுடைய கரம் இல்லை' என்று உணர்ந்தவள்,
'தனக்கருகில் இருப்பது செவிலியர்' என்று நினைத்து,
"எதுக்கு இந்தக் கயிறு?" என்று கேட்டவும்,
அந்தக் கயிறை இழுத்து, ஆபரேசன் செய்து கொண்ட பெண்ணின் வலது கையை எடுத்து ஜக்கின் கைப்பிடியில் வைக்க,
கயிறை இழுத்தால் தண்ணீர் ஜக் கைக்கு அருகில் வருவதை உணர்ந்த அந்தப் பெண்,
"வாவ் சூப்பர் சிஸ்சர்! தேங்க் யூ!" என்றாள்.
அதற்குப் பதில் வராமல் போகவே,
'தண்ணீரைக் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள் போல' என்று தனக்குத்தானே பதில் கூறிக்கொண்டு,
தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் கயிற்றை மெல்ல இறக்கிவிட்டு ஜக் எதன்மீதோ தட்டி நிற்கவும் கயிறை விட்டுவிட்டுப் படுக்கையில் சரிந்தாள்.
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
காலை நேர கல்லூரி வளாகம் ஆங்காங்கே மாணவச்செல்வங்களின் அரட்டைக் கச்சேரி இருந்தாலும் சற்றே சோம்பலுடன் காட்சியளித்தது.
சுபத்ரா, நேத்ராவின் வகுப்பறையில்,
ஆளுமை வளர்ச்சி மற்றும் தொடர்புத் திறன் (பர்சனல் டெவலப்மெண்ட் அண்ட் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) வகுப்பு நடந்துகொண்டிருந்தது.
சுபத்ராவிற்கோ பாடத்தில் கவனம் செல்லாமல் போரடித்தது.
பேராசிரியரின் வார்த்தைகள் எதுவும் காதில் கூட ஏறவில்லை…
ஒருசில நாட்களாக எதிலுமே கவனம் செலுத்தமுடியவில்லை…
ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச்செல்லும் முன் அடுத்த நாள் கல்லூரிக்கு அணிவதற்கான உடையைத் தேர்ந்தெடுத்து,
அதற்கேற்ப அணிமணிகள் தேர்வுசெய்வதுதான் அன்றைய தினத்தின் மிகக் கடுமையான வேலையாக இருக்கும் சுபத்ராவிற்கு.
வழக்கமாக குறைந்தது மூன்று வகை உடையையாவது தேர்ந்தெடுத்து விலக்கியிருப்பாள்.
ஆனால் இந்த ஒரு வாரமாக விரும்பி அணியும் ஆடைகள், ரசித்து உண்ணும் உணவுகள் எதிலுமே நாட்டமில்லை.
காரணமும் புரியவில்லை... மனதை ஏதோ ஒன்று பிராண்டிக் கொண்டிருந்தது.
அப்படி என்ன நடந்துவிட்டது? இந்த ஒரு வாரத்தில்… என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாதகுறையாகத் தலையை இருகைகளால் தாங்கியபடியே அமர்ந்திருந்தாள்.
சுபத்ரா தலையைத் தாங்கி இருப்பதைப் பார்த்த நேத்ரா,
"வா வெளியே போகலாம்" என்று கூறி,
ஆசிரியரிடம் அனுமதி கேட்டுக் கேன்டீன்னுக்கு வந்தார்கள்.
ஆளுக்கொரு காபிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கையில்
"காலேஜ்ல சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள க்ளாஸை கட் அடிச்சுட்டுக் கேன்டீல டேரா வா?" என்று குரல் கேட்டுத் திரும்ப,
அவர்களுக்குப் பின்னால் தன் இரண்டு நண்பர்களுடன் விபா நின்றிருந்தான்.
"அங்க மட்டும் என்ன? கட் அடிச்சுட்டுத் தான வந்திருக்கீங்க?" என்று நேத்ரா குஷியாகக் கலாய்க்க,
"நாங்க சீனியர் மா" என்று பாபி கிருஷ்ணா கூறவும்,
"ஓகே! எங்களோட கம்பனி குடுக்கிறீங்களா?" என்று நேத்ரா கேட்டதும்,
உடனே மூவரும் சுபத்ரா, நேத்ராவின் எதிர் இருக்கையில் அமர்ந்தனர்.
மீண்டும் மூன்று காபிக்கு நேத்ராவே ஆர்டர் குடுக்க.
"இன்னைக்கு ஏதாவது விசேசமா?" என்று விபா கேட்டான்.
"ஏன்?" என்று நேத்ரா கேட்க,
"எங்களுக்குக் காபி வாங்கித்தர்றீங்களே?" என்று் மூன்று நண்பர்களும் சிரிக்க,
விபாவின் அந்தச் சிரிப்பு நேத்ராவின் மனதில் ஏதோ ஒரு விதமான சந்தோசத்தைத் தந்தது.
அதே சந்தோசத்துடன் விபாவைப் பார்த்து, "இதுக்குப் பேர்தான் விருந்தோம்பல்…" என்றாள் நேத்ரா
"ஹேங்… என்னது?... என்ன பல்?" என்று விபா விழிக்க,
"ஸ்கூல்ல தமிழ் சப்ஜெக்ட் எடுத்ததில்லையா?"
"இல்ல… ஃபர்ஸ்ட் லாங்குவேஜ் இங்க்லீஷ் அடுத்து ஹிந்தி அல்லது ஃபரன்ச் சப்ஜெக்ட் எடுத்தோம். ஏன்?
"ஹஹ்ஹஹ்ஹா அதான்…" என்று நேத்ரா சிரிக்க, அவளுடன் சேர்ந்து சுபத்ராவும் சிரித்தாள்.
"போதும்! விசயத்துக்கு வர்றீங்களா?" என்று பாபி கிருஷ்ணா பொய்க் கோபம் காட்ட,
"ஸாரி! ஸாரி!" எனறு மூவரையும் பார்த்துக் கூறிவிட்டு,
"விருந்தோம்பல் னா, நாம இருக்கிற இடத்துக்கு, நமக்குத் தெரிஞ்வங்க வந்தா, அவங்க கூடச் சாப்பாடு ஷேர் பண்ணிக்கிறது."
"ஆமா… நீங்க எப்பலாம் கேன்டீன் னுக்கு வருவீங்க?" என்று பாபி கிருஷ்ணாவும், கைலாஷும் அவசரமாகக் கேட்க,
புருவங்களைச் சுருக்கிப் புன்னகையுடன் இரு நண்பர்களையும் பார்த்த நேத்ரா,
"எதுக்கு? சைட் அடிக்கவா?" என்றதும்,
"இல்லயில்ல எங்களுக்குச் சாப்பாடுதான் முக்கியம்… நீங்க வரும்போது நாங்களும் வந்தா காபி, டிபன்லாம் ஓசிதானே?" என்று சிரிக்க,
"அதெல்லாம் போங்காட்டம்… விருந்தோம்பல் ங்கிறது இரு தரப்புக்கும் பொதுவானது."
"அப்டீனா?"
"ஐயே… தமிழே தெரியாதா? ஒருநாள் நாங்க ஷேர் பண்ணுனா… அடுத்த நாள் நீங்க…"
"நோ… இதுதான் போங்கு… உங்க இடத்துக்கு நாங்க வந்தா நீங்க தானே விரு… ம்ம்ஹும்… விரிந்… சட்… ஏதோ ஒரு பல் பண்ணனும்." என்று விருந்தோம்பல் என்ற வார்த்தையைக் குதறியெடுத்துவிட்டு கேட்டான்.
"அப்படிப் பார்த்தா கிட்டத்தட்ட அஞ்சு வருசமா இது உங்க இடம் இல்லையா?" என்ற நேத்ராவிடம்
"அதெப்படி இந்த டேபிள் எங்களோடதுன்னு தெரிஞ்சது?" என்று பாபி கேட்டதும்,
"இப்ப நீங்கதானே சொன்னீங்க?"
"ஹேஏஏய்" என்று இரு நண்பர்களும் சிரிக்க,
"ஆ…மா… நான் சொன்னது இந்தக் காலேஜே அஞ்சு வருசமா உங்களோடதுதானேங்கிற மீனிங்க்ல சொன்னேன்… நீங்கதான் இந்த டேபிளே உங்க அப்பா வாங்கினதுங்கிற மாதிரி சொன்னீங்க."
"இந்த டேபிள் மட்டுமில்ல கேன்டீன்ல இருக்கிற எல்லா டேபிளுமே விபா அப்பாவோட பெரிய மனசுதான்."
"அப்டியா? எல்லா டேபிள் சேர்ரும் உங்கப்பா வாங்கினதா விபா?" என்று ஆச்சர்யமாக நேத்ரா கேட்க,
"அது… அதுவந்து…" என்று ஏன்டா? என்பதுபோல் தன் நண்பர்களைப் பார்த்துவிட்டு விபா தயங்க,
"அப்போ உடான்சே தானா?" என்று ஆள்காட்டி விரலை நண்பர்களை நோக்கி நீட்டியவாறு நேத்ரா சிரிக்க,
"இல்ல… இங்க ஒரு தடவ அப்பா என்னைப் பார்க்க வந்தப்ப கேன்டீன்ல ஸ்டீல் பென்ச்சும், அகலம் குறைந்த ஸ்டீல் டேபிளும்தான் இருந்தது."
"அதுவும் அங்க அங்க துருப்புடிச்சு… எந்த ஜென்மத்துல பெயிண்ட் பண்ணினதோ?" என்று பாபி கிருஷ்ணாவும்,
"அதெல்லாம் டேபிள்னே சொல்ல முடியாது… உக்காருர பெஞ்ச்சைக் கொஞ்சம் உயரமா வச்சிருந்தாங்க. சிக்ஸ் இஞ்ச் தான்க அகலம் இருக்கும்… " என்று கைலாஷும் சிரிக்க,
"போதும்டா…" என்ற விபா, நேத்ராவிடம்,"சோ? அப்பா ப்ரசெண்ட் பண்ணாங்க." என்றான் இயல்பாக.
நேத்ராவும், சுபத்ராவும் ஆச்சரியத்தில் புருவங்கள் மேலேற இமைகள் படபடக்கத் தங்களைச் சுற்றிலும் இருந்த டேபிள் சேர்களைப் பார்த்தனர்.
க்ரானைட் கல்லால் உருவாக்கிய மேல்புறமும், எவர்சில்வர் கால்களுமாய் வட்ட வடிவ மேஜைகளும், முழுவதும் எவர்சில்வரால் ஆன நாற்காலிகளும் அவற்றின் மதிப்பைக் காட்ட,
சுபத்ராவின் முகத்தில் இனம்புரியாத பயம்!
நேத்ராவோ, ஆச்சரியமாக ஒரே சமயத்தில் இரு தோள்களை ஏற்றிஇறக்கி, தலைசாய்த்து, மூடிய இதழ்களைக் கீழ்நோக்கிச் சற்றே வளைத்துச் சிரித்தாள்.
"பெரிய ஆள் ப்பா உங்கப்பா… பணத்துல சொல்லல. மனசுல… சூப்பர்… எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தயாள குணம்!" என்று மகிழ்ந்தாள்.
பணக்காரர் என்று ஆச்சர்யப் படாமல், அவருடைய பரந்த மனசை நேத்ரா புகழ்ந்தது மூன்று நண்பர்களுக்கும் அருமையானதொரு மனநிலையைத் தந்தது.
இதுவரை இந்த விசயம் கேள்விப்பட்ட மற்ற பல மாணவ மாணவிகள்,
"உங்கப்பா என்ன வேலை பார்க்கிறார்?"
"அவரோட வருமானம் எவ்வளவு?"
"கென்டீனுக்கே இவ்வளவு செலவு பண்ணீருக்கார்னா உனக்குப் பாக்கெட் மணி எவ்வளவு கொடுப்பார்?"
என்று எரிச்சலுட்டும் கேள்விகளையே சந்தித்த விபாட்சு,
முதன்முறையாகத் தனது இரு நண்பர்களைப் போல மனதைப் பெரிதாக எண்ணிய நேத்ராவை சினேகமுடன் பார்த்துச் சிரித்தான் விபாட்சு.
ஆனால் சுபத்ராவோ, 'இனி விபாவிடம் தள்ளி நிக்கனும்… எப்பவுமே பணக்காரங்க சவகாசம் பெண்களுக்கு நல்லது கிடையாது' என்ற பயத்தை மனதில் விதைத்தாள்.
0 Comments