உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟2

 உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟2


பரமக்குடி, விஜய கிருபாகரபூபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கான வரவேற்பு விழா முடிந்து ஒரு வாரமாகியும் நேத்ரா, சுபத்ராவின் தைரியம் கல்லூரி முழுவதும் பேசப்பட்டது.


பின்னே?!! முதுகலை வணிக நிர்வாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான விபாட்சுவின் பாடலை ரசித்து,


அப்பொழுதுதான் கல்லூரியில் இளங்கலை வணிக மேலாண்மையில் டூரிசம் பிரிவில் சேர்ந்திருக்கும் மாணவிகள் இருவர் மேடையேறிப் பாடுவதற்கு தில் வேணும்தானே?


"யார்டா அந்தப் பொண்ணுங்க? காலேஜ் வந்த அன்னைக்கே பிரபலமாயிட்டாங்க?" என்று சில மாணவர்களும்,


"இன்னும் சரியா தெரியலடா" என்று பலரும், சிறுசிறு குழுக்களாகப் பேசியவாறிருந்தனர்.


அதில் ஒரு மாணவ குழு,


"விபாவோட ஃபிரண்ட்ஸ்தான் அந்தப் பொண்ணுங்ககிட்டப் பேசியிருக்காங்க" என்றொருவனும்,


"ஒருவேளை ஏற்கனவே விபா ப்ரோவுக்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ?"


"வாய்ப்பே இல்ல… இந்தியாவின் முதல் பத்து பிசினஸ் மேக்னட்ல ஒருத்தர், விபாவோட அப்பா. இந்தப் பொண்ணுங்களப் பார்த்தா மேக்ஸிமம் அப்பர் மிடில் க்ளாஸ் மாதிரிதான் தெரியுது" என்று பொறாமையில் கொந்தளித்த மாணவியிடம்,


"ரொம்ப வயிறு எரியுதோ? முகம்வரை கருகிப் போயிடுச்சு!!" என்று ஒருவன் கிண்டலடிக்க


"இதுல எனக்கென்ன எரிச்சல்? நீ கேட்டதுக்குப் பதில் சொன்னேன்" என்றாள் பின்னலை அசால்ட்டாகப் பின்னால் தூக்கிப் போட்டவாறு.


"ஹை ஹை யார்ட்டமா கதை விடுற?" மேலும் அந்த மாணவிக்குக் கடுப்பேற்றிவிட்டான் அவன். 


"இப்ப இவள கிண்டல் பண்ணத்தான் உச்சி வெயில்ல நின்னு பேசுறோமா?" என்றொரு மாணவி எரிச்சலடைய,


"அவ்வளவு அவசரம்? ம்ம்ம்? அந்தப் பொண்ணுங்களப் பத்தித் தெரிஞ்சு என்ன பண்ணப்போற?" என்ற மாணவனிடம்,


"வேறென்ன சீனியர்ங்கிற கெத்துல அந்தப் பொண்ணுங்களக் கூப்பிட்டுவச்சு அட்வைஸ் பண்ணுவா" என்றாள் இரண்டாவதாகப் பேசிய மாணவி.


"ஹேய்... அந்தமாதிரிலாம் பண்ணிடாத… உண்மையிலேயே விபாவோட ரிலேட்டிவ்ஸ்சா இருந்துடப் போறாளுங்க." என்று முதலில் பேசிய மாணவியிடம் எச்சரித்த சக தோழனிடம்,


"நீ கன்ஃபார்ம்மே பண்ணிட்டியா?" என்று அதிர்ச்சியுடன் கேட்ட முதல் மாணவியைத் தன் புறம் திருப்பி, 


"நீயே யோசி, நாமளும்தான் ரெண்டு வருசமா அவர் பாட்டைக் கேக்கிறோம் ஒருதடவையாவது, அட்லீஸ்ட் அவர்ட்ட போயி, ‘பாட்டு நல்லாருக்கு’ன்னாவது சொல்லீருப்போமா?" என்றாள் இரண்டாம் மாணவி.


"நீங்க மட்டுமா? இதுவரை ஜூனியர்ஸ் யாருமே விபாட்ட நெருங்குறதே இல்லையே"


"அப்போ… நிஜமாவே அவளுங்க ரிலேட்டிவ்ஸ்தானா? ஒருவேளை விபாவோட சிஸ்டர்ஸ்சோ?" என்ற முதல் மாணவியைப் பார்த்து அனைவரும் சிரிக்க,


"அப்பவும் விடுறாளா பாரேன்! அத்தை பொண்ணுங்கதானம்மா முறைப்பையனை கலாய்க்கிறது, ரசிக்கிறதுலாம் பண்ணுவாங்க" என்று கலாய்த்தான் ஒருவன்.


"ஏன்டா ஏன்? நாங்க உனக்கு என்ன கெடுதல் பண்ணோம்?" மறுபடியும் இரு மாணவிகளும் எகிற


"விட்டா என்னை, கையில மொபைல் ஃபோனை ஏந்தி சபிச்சுடுவா போலிருக்கே?"


"ஹாங்… சபிக்கிறதுக்கு மொபைல் ஃபோன் எதுக்கு?"


"கண்ணகிகிட்ட சிலம்பு இருந்துச்சு… இப்போ மொபைல் ஃபோன் தானே உங்க கையில் இருக்கு"


"ஐயே… அறிவுக்கொழுந்தே" என்று ஒருவருக் கொருவர் வாரிக்கொண்டிருக்கும் போதே இவர்களை நோக்கி அவசரமாக நடந்து வந்தனர் நேத்ராவும், சுபத்ராவும்.


"சீனியர்! விபா க்ளாஸ் ரூம் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" என்று இருவருமே கேட்க,


அந்த மாணவ குழு வாயடைத்து நின்றது.


அதில் ஒருத்தி, "ஏய்! நீங்க ஃபர்ஸ்ட் இயர்தானே? விபான்னு பேரச் சொல்றீங்க?"


"அதில்ல சீனியர்! வந்து... வெறுமனே சீனியர்னு விபாவ மென்சன் பண்ணிக் கேட்டா, நீங்க எந்த சீனியரை நினைப்பீங்க? அதான் பேர சொல்லவேண்டியதாயிடுச்சு..."


"ஓ...ஹொ… தெனாவட்டு ரொம்ப ஜாஸ்தியாத் தெரியுதே? நீஙக என்ன விபாவோட ரிலேட்டிவ்ஸா?" என்ற மாணவியிடம்,


"ஸாரி சீனியர்… நாங்க தெரியாம..." என்ற சுபத்ராவின் கைகளை இறுகப் பற்றியபடி,


"ஆமா நாங்க விபாவோட மாமன் பொண்ணுங்க தான்… இப்ப்ப க்ளாஸ் எங்க இருக்குன்னு சொல்றீங்களா?" என்று நேத்ரா எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துக் கேட்டதும், 


மாணவிகள் சிலையாகினர்.


அவர்களின் நிலையறிந்த மாணவ நட்பூக்கள்,


விபாவின் வகுப்பறைக்குச் செல்லும் வழியை அவசரமகக் கூறினர்.


அதற்கும் கடுப்பாகி,

"அதான் க்ளாஸ்ரூம் எங்க இருக்குன்னு சொல்லியாச்சுல்ல… உங்க பேரச் சொல்றது" என்ற சீனியர் மாணவியைப் பார்த்துப் புன்னகை ததும்ப, 


நான் சுபத்ரா




இவ நேத்ரா





என்று சுப்தரா தங்களை அறிமுகம் செய்துகொண்டாள்.


"ரெண்டு பேருமே விபா ப்ரோவோட மாமா பொண்ணுங்களா?" என்று ஒருவன் ஜொள்விட,


"ஆமா!" என்று கூறிவிட்டு விபாவின் வகுப்பறையை நோக்கி ஓடினர்‌.


"ம்ஹும்… இருந்தா விபா மாதிரி பிறக்கனும்டா… மாமா பொண்ணுங்க ரெண்டு பேருமே தேவதை..‌." என்று போலியாக ஒருகண்கள் சொருக,


"ஒழுங்கா பேசமாட்டியா? விபாவோட ஃபிரண்ட்ஸ் காதுல விழுந்துச்சு தினமும் நமக்கு ராகிங் தான்… தேவையா?" என்று மற்றவன் எச்சரிக்க,


"வாங்க டா க்ளாஸ்சுக்காவது போவோம்… ஃபிசிக்ஸ் மேம் நல்லா தாலாட்டு பாடுவாங்க… நாம கவலை மறந்து தூங்கலாம்." என்று அவர்கள் வகுப்பறையை நோக்கி, சுபத்ரா நேத்ராவை அவரவர் எண்ணங்களோடு பொருத்த முடியாமல், அவர்களையே பார்த்தபடி நடந்தனர்.


சுபத்ராவும், நேத்ராவும் நாலு கட்டிடங்கள் கடந்து சென்றபோது,


ஐந்தாவது கட்டிடத்தின் முதல் தள நடைபாதையில் அமைந்துள்ள கைப்பிடிச் சுவர்மேல் அமர்ந்து, தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த விபாவைப் பார்த்து விட்டனர்.


விபாவைப் பார்த்தபிறகு இரண்டடிகூட எடுத்துவைக்க முடியவில்லை சுபத்ராவிற்கு.


நெஞ்சம் படபடக்க அப்படியே நின்றுவிட்டாள்.


இருபதடி தூரம் சென்ற பிறகே நேத்ரா, சுபத்ரா தன்னுடன் சேர்ந்து வராததை உணர்ந்தாள். திரும்பிப் பார்த்தாள்.


அங்கே சுபத்ரா தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கியவாறு நின்றுகொண்டிருந்தாள்.


'அப்படி எதை இவள் பார்க்கிறாள்?' என்று நேத்ராவும் சுபத்ராவின் காலடியைப் பார்க்க,


கால் கட்டைவிரலை நிலத்தில் அழுத்த ஊன்றி, இரு கைக் கட்டை விரல்களை, மற்ற நான்கு விரல்களுக்குள் வைத்து, இறுக மூடி விரைப்பாக நின்று கொண்டிருந்த சுபத்ராவைப் பார்த்த நேத்ராவிற்கு சுபத்ராவுடைய இந்த வித்தியாசமான கோலம் புதிதாய் இருந்தது.


விடுவிடுவென்று சுபத்ராவிடம் சென்ற நேத்ரா


"எதையாவது கீழே போட்டுட்டியா? ஏன் இப்படி நின்னுட்டுருக்க?" என்று கேட்டாள்.


சுபத்ராவிடமிருந்து பதில் வராமல் போகவே, சுபத்ராவின் முகத்துக்கு நேராகக் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தாள் நேத்ரா. 


சுபத்ராவோ, இதழ்களை அழுத்தி மூடி, கண்களில் அலைப்புறுதலுடன் நின்றுகொண்டிருந்தாள்.


"என்ன சுபா? ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற?" என்று கேட்டபடி சுபத்ராவின் தோள்களைப் பிடித்து நேத்ரா உலுக்க,


சட்டென்று தன்னிலை பெற்ற சுபத்ரா,


"ம்ம்… நேத்ரா… நாம இப்பவே அந்த விபாவ பார்க்கனுமா?" என்று மிகவும் தயங்கிக் கேட்க,


"ஏன்? இப்ப என்ன?" 


"வந்து… அது வந்து… நேத்ரா…" என்று சுபத்ரா திக்கித் திணறுவதைப் பார்த்த நேத்ரா,


"மாதாந்திரப் பிரச்சனையா சுபா?" என்று கனிவுடன் சுபத்ராவின் கைகளைப் பற்ற,


"இல்லையில்லை…" என்று அவசரமாக மறுத்தவளின் தத்தளிப்பு நேத்ராவிற்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது.


"பின்ன என்ன? விபாவப் பார்த்து, அவரோட பாட்டையும், பாடும் விதத்தையும், ஈர்க்கும் குரலையும் பாராட்டிட்டு வரலாம்னுதானே க்ளாஸ்லருந்து அடிச்சுப்புடிச்சு வந்தோம்?" 


"ஆ…மா… ஆனா… வந்து… நாம இப்பதான் பி.பி.ஏ சேர்ந்திருக்கோம்… விபா எம்.பி.ஏ ஸ்டூடண்ட்… சீனியர்..."


"இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சதுதானே"


"வந்து… நாம கொஞ்சம் ஓவரா போற மாதிரி இல்ல?"


"முதல்ல, இந்த வந்து, சந்தல்லாம் நிறுத்திட்டுப் பேசுறியா?… இப்ப என்ன ஓவரா பண்ணிட்டோம்?"


"இல்ல… விபாவப் பத்தி சொல்றவங்கல்லாம் அவர்ட்ட பேசவே… வந்… பேசினதே இல்லையாம்"


"..."


“நம்ம சீனியர்ஸ்கூட, அவ்வளவு ஏன்? எம்.பி.ஏ ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் கூட அவர்ட்ட பேச..."


"நானும் கேள்விப்பட்டேன்… அது அவங்களோட ப்ராப்ளம்… அத நாம ஏன் ஃபாலோ பண்ணனும்?"


"என்னவோ தெரியல… ப்ளீஸ்… வா போயிடலாம்… நாளைக்குக் கூட வந்து பேசலாம்."


"ஏன் நாளைக்குதான் நல்ல நாளா?" என்று ஒரே சமயத்தில் ஆண்குரலோடு நேத்ரா குரலும் கேட்க, சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கீழே விழுந்துவிடுமளவு பிதுங்கின.


"என்ன பதில காணோம்? இங்க என்னைப் பார்க்கத்தானே வந்தீங்க?" என்று இருவரையும் கண்களில் சிரிப்போடு பார்த்தபடி ஸ்டைலாக நின்றிருந்தான் விபாட்சு.


"அ… அதெல்லாம் ஒன்னுமில்லையே" என்று சுபத்ரா வேகமாக மறுக்க,


"இட்ஸ் ஓகே… நான்கூட என்னைத் தேடித்தான் வந்தீங்களோன்னு நினைச்சு வந்தேன்." என்று கூறித் திரும்பியவனை அழைப்பதற்காக நேத்ரா வாயைத்திறக்கும் போதே,


சற்றுமுன் சுபத்ரா நேத்ராவிற்கு, விபாவின் வகுப்பறைக்கு வழி கூறிய மாணவர்களில் ஒருவன் வந்து,


"ஹாய் ட்வின் சிஸ்டர்ஸ்! விபா ப்ரோவப் பார்த்துட்டீங்களா?" என்று உண்மையை உடைக்க,


சுபத்ரா திருட்டுக்கோழி தவிட்டை முழிங்கிய மாதிரி விழிக்க,


நேத்ரா, 'இது தேவையா?' என்பது போல் சுபத்ராவைப் பார்த்தாள்.


விபாட்சுவோ, கண்களில் குறும்பு மின்ன சுபத்ராவையும், நேத்ராவையும் பார்த்தபடி, அந்த மாணவனின் தோள்மீது கை போட்டு,


*என்ன நண்பா? இவங்க என்னைப் பார்க்க வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?"


"எங்ககிட்டதான் ப்ரோ, உங்க க்ளாஸ் எங்க இருக்கு?ன்னு கேட்டாங்க… உங்க மாமா பொண்ணுங்க வேற… கண்டுபுடிச்சுட்டாங்களா இல்லையான்னு பார்க்க வந்தேன்" என்று கூறவும், 


”போச்சுடா” என்று இருகைகளையும் தலைக்குமேல் வைத்துவிட்டாள் நேத்ரா.


"மாமா பொண்ணுங்களா? உனக்கு எப்டித் தெரியும்?" என்ற விபாவிடம்,


"உங்க ரிலேட்டிவ்னு நாங்களே யூகிச்சோம் ப்ரோ… ஆனா அவங்களே எங்கட்ட சொல்லிட்டாங்க."


"அவங்களே சொல்லிட்டா...ங்க...ளா?" என்று விபா முகம் முழுவதும் பிரகாசிக்க,


சுபத்ராவிற்கு, ‘பூமிக்குள்ளேயே போய்விட மாட்டோமா?’ என்றாக,


நேத்ராவால்தான் விபாட்சுவின் குறும்பு மின்னும் கண்களைச் சந்திக்கவும் இயலாமல், போட்டுக்கொடுத்த சீனியர் மாணவனை முறைக்கவும் முடியாமல் 


"ஷிட்" என்று காலால் நிலத்தை உதைத்து விட்டு, 


சற்றே குனிந்து, வலது கையை மூக்கை மூடுவதுபோல் போலியான பணிவுடன் நின்று, போட்டுக் கொடுத்த மாணவனிடம், "அண்ணா! வந்த காரியம் சிறப்பா முடிஞ்சிருச்சுல கிளம்ப வேண்டியதுதானே" என்று கேட்க,


விபாட்சுவும் அம்மாணவனின் தோள்களில் தட்டி, "ஓகே… உங்கள்ட்ட அப்புறம் பேசுறேன்." என்று கூறவும்,


தலையாட்டிவிட்டு நகர்ந்த மாணவனிடம், "எனி வே தேங்க்யூ ப்ரோ!" என்று சுபத்ரா நேத்ராவைப் பார்த்தவாறே விபா சப்தமாக நன்றி நவிழ,


இதற்குமேல் அங்கு நிற்கும் திராணியற்ற சுபத்ரா, நேத்ராவை இழுத்துக் கொண்டு வந்தவழியே ஓட்டம் பிடித்தாள்.


"இவ்வளவு தூரம் என்னைப் பார்க்க வந்துட்டு ஏன் ஓடுறீங்க, மாமா பொண்ணுங்களா?" என்றவன், 


நேத்ரா மட்டும் திரும்பிப் பார்க்கவும்,


"உங்க ட்வின் சிஸ்டரையும் கூட்டிட்டு வாங்க" என்று கூற,


சுபத்ரா இழுத்த இழுப்பிற்கு ஓடிய நேத்ரா அப்படியே திரும்பி நின்று,


"நாங்க சிஸ்டர்ஸ் இல்ல… ஃபிரண்ட்ஸ்" என்று கூற,


"எந்த டிபார்ட்மென்ட்?"


"இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்." என்றவள் சிரிக்க,


"உங்க மூலமா தெரிஞ்சுக்கிற மாதிரி வருமா?"


"பி.பி.ஏ. டூரிசம்" என்றவள், உங்க பாட்டு சூப்பர்!" என்று சின் முத்ரா காட்டி சிரிக்க,


"ஹ! அத இப்டியா சொல்வாங்க?" என்றதும், 


சுபத்ராவை நிறுத்திய நேத்ரா, "வா சுபத்ரா! பக்கத்துல போய்ப் பேசிட்டு வரலாம்" என்று கூறியும் சுபத்ரா தயங்க, அவளையும் இழுத்துக்கொண்டு விபாவை நோக்கி நடந்தாள்.


'சுபத்ரா சீனியரிடம் பேச பயப்படுகிறாளோ?' என்றெண்ணிய விபாட்சு தானும் தோழிகளை நோக்கி முன்னேறினான்.


மூவரும் அருகருகே நெருங்கிய சமயத்தில் கல்லூரிக்கு வந்த முதல்நாள் தோழிகளை ராகிங் செய்த மாணவர்களில் இருவர் வந்து சேர்ந்தனர்.


"உங்கள்ல யார் சுபத்ரா? யார் நேத்ரா?" என்று விபாட்சு இருவரையும் பார்த்துப் புன்னகையுடன்  கேட்க,


"இவங்க சுபத்ரா, அவங்க நேத்ரா" என்றான் ராகிங் செய்தவர்களில் ஒருவன்.


'உங்களை யார் கேட்டா?' என்பதுபோல் பார்த்துவிட்டு, "நாங்கள் மூவரும் கொஞ்சம் பேசனும் நீங்க கிளம்புறீங்களா சீனியர்?" என்று நேத்ரா கேட்க,


"இவனுங்க என் ஃபிரண்ட்ஸ்… இங்க இருக்கட்டுமே?" என்று விபாட்சு கூறிய போதும், அந்த நண்பர்களைப் பார்த்தவாறே விபாட்சுவிடம்,


"உங்க முழுப்பேர் என்ன?" என்று கேட்டாள் நேத்ரா.


"விபாட்சு"



"வித்யாசமா இருக்கே? விபாட்சுன்னா என்ன அர்த்தம்?"


"ஆக்சுவலா விபாட்சுங்கிறது அர்ஜுனரோட ஒரு பேரு‌… இதுக்கு,  எப்போதும் நியாயமான முறையில போர்கள்ல ஈடுபடுபவர்னு மீனிங்க்காம்."


"ஓஹோ? அதாவது இக்கட்டான சூழ்நிலைல கூட நியாயமா நடந்துக்குவீங்கன்னு இந்தப் பேர் வச்சிருப்பாங்களோ?" என்ற நேத்ராவிடம்,


"ஏன்? விபா சொன்ன மீனிங்ல பேர் வச்சதா தானே, அவன் அப்பா சொல்லீருக்கங்க."


"இந்தக் காலத்துல தன்னோட மகன், போருக்குப் போகனும்னா நினைப்பாங்க? ஒருவேளை… உங்கப்பா மிலிட்டரி மேனா?" என்ற நேத்ராவிடம்,


"இல்லை! எங்கப்பா பிஸினஸ் மேன்." என்று விபாட்சு கூறியதும்,


"நாட்டோட எல்லைல கூட எப்பவாவதுதான் போர் வருது… ஆனா வீட்ல?… ஒருவேளை வருங்கால வைஃப் கூடப் போடுற சண்டைல நியாயமா நடந்துக்குவான்னு இந்தப் பேர் வச்சாங்களோ என்னவோ?" என்ற மற்றவனிடம்,


"ரொம்ப நல்ல எண்ணம்" என்றாள் நேத்ரா இடக்காக,


தன்னுடைய நண்பர்களுக்கு நேத்ரா கடுப்பாக பதில் கூறுவதைக் கண்ட விபாட்சு,


"இவனுங்க ராகிங் பண்ணியத உங்களாலால மறக்க முடியலன்னு நினைக்கிறேன்… பட் இவங்க நல்ல பசங்கதான்… ஜஸ்ட் ஃபன் க்காக விளையாடியிருப்பாங்க. எனி வே, இவன் பாபி கிருஷ்ணா,





இவன் கைலாஷ்.




என்றதும் ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லி சினேகமானார்கள்.


"நீங்க ஹாஸ்ட்டலரா? டேஸ்ஹாலரா?" என்று பாபி கேட்க,


"டேஸ்ஹாலர்தான்…"


"இவ்வளவு அழகான பிள்ளைகளப் பெத்து எங்க காலேஜுக்கு அனுப்பிவச்ச அந்தக் குல தெய்வங்கள நாங்க கேட்டோம்னு சொல்லுங்க" என்று பாபி கிருஷ்ணா கூறியதும்


நேத்ரா திருதிருவென விழிக்க,


பாபி கிருஷ்ணாவின் தோளை சினேகமாகத்தட்டி,


"உங்க அப்பாம்மாவத்தான் அப்டி சொல்றான்!" என்று விபாட்சு சிரிக்க,


நேத்ரா பாபிகிருஷ்ணாவை முறைத்தாள்.


அருகில் அமைதியான புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்த கைலாஷ்சைக் காட்டி,


"இவரும் உங்க ஃபிரண்ட்தானே? வந்ததுலருந்து எவ்வளவு அமைதியா இருக்கார்" என்ற நேத்ராவிடம்,


"நீங்களும் ஏமாந்துட்டீங்களா? நானாவது பேசத்தான் செய்வேன்… இவன் இருக்கானே…" என்ற பாபிகிருஷ்ணாவின் கழுத்தில் கையைப்போட்டு இறுக்கி,


"நம்ம ஃபிரண்ட் ஐ இப்படியா சொல்லுவ? உளராம இரேன்டா" என்று பாபிகிருஷ்ணாவின் காதில் கிசகிசுத்தான் விபாட்சு…


நண்பர்களுக்குள் இருந்த நெருக்கம், நேத்ராவுடனான குறும்பான பேச்சுக்கள் என்று கலகலப்பான சூழலை அமைதியாகப் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் சுபத்ரா.


விலோசனம் தொடர்ந்து வரும்…


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


Post a Comment

0 Comments