உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟22



உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟22


எதிரில் வந்த லாரிமீது மோதப்போகிறோம், இனி தப்பிக்க முடியாது என்பதை அறிந்த நேத்ரா, விபாட்சுவைப் பிடித்துக் காரிலிருந்து கீழே தள்ளி விட்டாள்.


விபாட்சு திடலின் சிமெண்ட் தரையில் உருள,


லாரி ஓட்டுனரும் விபத்தைத் தடுக்கும் பொருட்டு சட்டென்று லாரியை நிறுத்தியும், நேத்ராவின் கார், லாரியோடு நேருக்கு நேர் மோதியது.


தள்ளிவிட்ட வேகத்தில் நெற்றியில் சிறு காயத்துடன் தப்பித்த விபாட்சு,


வேகமாகக் கார் அருகே சென்று காரின் உள்ளே பார்க்க,


ஏர் பலூன் இருந்தும் லாரியோடு வேகமாக மோதியதில் நேத்ராவிற்குப் பயங்கரமாக அடிபட்டிருக்கிறது… கண்ணைத் திறக்க வில்லையானாலும் உடலில் அசைவு இருக்க,


"நேத்ரா! நேத்ரா" என்று விபாட்சு அலறினான்.


முகமெல்லாம் ரெத்தம் வழிய, நேத்ரா லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.


நெற்றியில் சிறு காயத்தைத் தவிர விபாட்சு நலத்துடன் இருப்பதைப் பார்த்த நேத்ரா மிகக் கஷ்டப்பட்டு, கன்னத்தில் கண்ணீருடன் இரத்தமும் சேர்ந்து வடிய சிரித்தவள்,


"விபா… உங்களுக்கு ஒன்னும் ஆகலைல?" என்று உயிர் போகும் வேதனை கண்களில் இருந்தாலும், அதைவிட, 'விபாட்சு உயிர் பிழைத்துவிட்டான்' என்ற நிம்மதி தந்த புன்னகை மாறாமல், முகம் அப்படியே உறைந்திருக்க மயங்கினாள்.


நேத்ராவின் முகம் முழுவதும் ரெத்தம் வழிந்த நிலையில், அவளுடைய வலியை மறைத்து, சந்தோஷம் நிறைந்திருக்க,


'தன்னுடைய நலனில் இத்தனை சந்தோஷம் தாயைத்தவிர வேறொரு பெண்ணுக்கு வருகிறதென்றால், அவள் தன் உயிரைவிட என் நலனைத்தான் பெரிதாக எண்ணுகிறாள் என்றுதானே அர்த்தம்? தோழிக்கு இது சாத்தியமா? இவள் மனதில் என்ன இருக்கிறது?' என்ற சந்தேகம் முளைவிட, மனம் தந்த அதிர்ச்சியில் நேத்ராவின் முகத்தைப் பார்த்தபடி சிலையானான்.


காரின் பின்னால் வந்துகொண்டிருந்த சுபத்ராவும் எதிரில் லாரி வருவதைக் கவனித்துக் கத்தும்முன் நேத்ரா விபாட்சுவைக் காரிலிருந்து வெளியே தள்ளிவிட,


முதன்முதலாகக் கார் ஓட்டிப் பழகுவதற்காக ஐவரும் திட்டமிட்டிருந்த நாளன்று அதிகாலையில் சுபத்ரா கண்ட கனவு, கண்முன் நிஜமாக நடந்ததுபோலிருந்தது.


வண்டியைக் கீழே போட்டுவிட்டு "ஐய்யோ விபா!" என்று கதறியபடி விபாவை நோக்கி ஓடும்போதே,


"டொம்ம்" என்ற பெரும்சப்தத்துடன் காரோடு நேத்ரா, லாரிமீது மோதுவதைக் கண்டு, சுபத்ரா பயந்து அலற,


ஒருபுறம், காரிலிருந்து விழுந்த வேகத்தில் அடிபட்ட கைகால்களும், சிமெண்ட் தரையில் உருண்டு போய் கல் தடுப்பில் முட்டியதால் தலையிலும் இரத்தம் வழிய அசையாமல் குப்புறக்கிடக்கும் விபாட்சு…


மறுபுறம், லாரியின் பெரிய உருவத்துடன் நேராக மோதிய காருக்குள் துடித்துக்கொண்டிருந்த நேத்ரா…


ஓரே நேரத்தில் தன் அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட அக்கொடூர சம்பவம், சுபத்ராவிற்கு மிகப் பெரிய அளவில் மனதையும் மூளையையும் சட்டென்று உறையவைக்க, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.


திடீரென்று சுபத்ராவின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப் பட்ட உணர்வில் கண்திறந்தவளுக்கு இருளைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை.


"என்னாச்சு? எனக்குக் கண்ணு தெரியலையே!" என்று பயந்தவளை யாரோ தூரத்திலிருந்து,


"பயப்படாதே சுபா! கண்ணைத்திற! உனக்கு ஒன்னும் இல்லை" என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பார்வை தெளிய,


எதிரில் பதட்டமும் பயமுமான முகத்துடன் வியர்த்து வழிய கைலாஷ் நின்றுகொண்டிருந்தான்.


"கை… கைக்… கைலாஷ்! எப்டி வந்தீங்க? அங்க… நேத்ரா… விபா" என்று சொல்லும்போதே கண்முன் நடந்த கொடூர நினைவில் "ஆ…ஆ…ஆ" வென ஆகாயத்தைப் பார்த்தபடி வாயைத்திறந்து சுபத்ரா அழ,


"அழாத சுபா. இந்த நேரத்துல நாமளும் உடம்பக் கெடுத்துக்கக் கூடாது… உனக்கு இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்டபடி,


அவனது கைக்குட்டையால் வேகமாக சுபத்ராவின் முகத்தைத் துடைத்தவன்,


சுபத்ராவை எழுப்பி உட்கார வைத்து, "உன்னால எங்கூட இப்போ பைக்ல ஆஸ்பத்திரிக்கு வரமுடியுமா" என்று அவசரமாகக் கேட்க,


கைலாஷ்சின் முகத்திலிருந்த பதட்டமும், கவலையும் சுபத்ராவிற்கு அந்தநேரச் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்த,


சுபத்ரா சிறிது நேரத்திற்கு முன் தன் முன்னால் நடந்த பயங்கரத்திலிருந்து வெளிவர இயலாமல், விபரீதம் நடந்த இடத்தைப் பார்க்க, அங்கே விபத்துக்குள்ளான லாரியும், அதன் முன் நசுங்கிக்கிடந்த காரும் மட்டுமே இருக்க,


"ரெண்டு பேரும் எங்க?" என்று அழுகையுடன் கேட்டாள்.


"பாபி ஆம்புலன்ஸ்ல ரெண்டு பேரையும் ஏத்திக்கிட்டு, இங்க பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான்… ப்ளீஸ் சீக்கிரம் என் வண்டில ஏறு. நாமளும் அங்க போயிடுவோம்." என்று கூறியபடி தனது பைக்ஐ கைலாஷ் ஸ்டார்ட் பண்ண,


"அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?… நீங்க எப்படி இங்கே வந்தீங்க?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.


"அத அப்புறம் பேசலாம்… அவங்களுக்கு ஒன்னும் ஆகாது… நல்லா புடிச்சுக்கோ…" என்று சுபத்ராவிடம் திரும்பிப் பார்த்துக் கூறியவன், மருத்துவமனையை நோக்கி வண்டியைப் பறக்கவிட்டான்.


மருத்துவமனையில் காலை வைத்த சுபத்ராவிற்குக் கால்கள் நடுங்கித் தடுமாறி விழப்போனவளைத் தாங்கிப்பிடித்தான் தலையில் கட்டுடன் இருந்த விபாட்சு.


"விபா! நீங்களா? உங்களுக்கு ஒன்னும் ஆகலைல? நிஜமாவே நீங்கதானே? இல்ல, கனவு காணுறேனா?" என்று மிரண்டு விழித்த கண்களுடன் அலறி அரற்றியவள் மீண்டும் கீழே விழப்போக,


தூக்கி நிறுத்திய விபாட்சு மீதே விழுந்து, கட்டியணைத்துக்கொண்டு சுபத்ரா அழ,


"ஒன்னுமில்ல சுபா… இங்க பாரு. நான் நல்லாத்தான இருக்கேன்?" என்று அவளது நாடியைப்பிடித்து முகத்தை நிமிர்த்தியவனை விலகிநின்று பார்த்தாள்.


தலையில் சிறுகட்டு, வெள்ளை பேண்டேஜ் துணி கொண்டு கையைக் கட்டி கழுத்தில் தொங்க விடப்பட்டிருந்தது.


கால் மூட்டுகளிலும் கட்டு போடப்பட்டிருக்க,


கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தவளிடம், "நீ பயப்படும் அளவுக்கு ஒன்னுமில்ல சீக்கிரமே சரியாயிடும்." என்று ஆறுதலாகச் சிரிக்க,


"என்… என் நேத்ரா?" என்று கண்முன் லாரிமீது மோதிய நினைவில் மிரண்ட கண்களோடு சுபத்ரா கேட்டாள்.


அவளும் நல்லாதானிருக்கா… ஏர்பலூன் இருந்துச்சுல. அதுனால தப்பிச்சுட்டா… அவ என்னையப் பிடிச்சுத் தள்ளிவிட்டப்ப, அவளோட ஷீட் பெல்ட் உருவி, கொஞ்சம் எசகுபிசகா இருந்திருக்கா..‌.அந்த நிலையிலிருந்து நிமிருறதுக்கு முன்னாடி லாரிமேல மோதிட்டதாலதான் கொஞ்சம் அடி பலமா பட்டிருக்கு…"


"அச்சச்சோ இப்ப அவ எங்க இருக்கா? வாங்க! நான் நேத்ராவப் பார்க்கனும்"


"அவ ஐசியூல இருக்கா"


"ஏன்? என்னாச்சு" என்ற இதுவரை கூறிய எதுவும் ஞாபகத்தில் இல்லாதவளைப் போன்று மீண்டும் கேட்க,


"நான்தான் சொன்னேனே அடி கொஞ்சம் பலமா பட்டிருக்கு, உயிருக்கோ உடம்புக்கோ பெரிய ஆபத்தில்ல…"


"அப்புறம் ஏன் ஐசியூல இருக்கா"


"எவ்வளவு பெரிய ஆக்ஸிடென்ட்ல இருந்து அவ தப்பிச்சிருக்கா? இன்னைக்குப்பூராவும் டாக்டர்ஸ் அப்சர்வேசன்லதான் இருப்பா..‌."


"நான் அவள பார்க்கனும் விபா"


"நாளைக்கு நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க… அப்பப் பார்க்கலாம்… இப்ப அலோவ் பண்ண மாட்டாங்க" என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,


கார்த்திக் மருத்தவமனைக்குள் வர,


அவரிடம் நடந்ததை விளக்கியதும் டாக்டர்களைப் பார்த்துப் பேசிவரச் சென்றார்.


அடுத்தடுத்து மேனகாவுடன் நேத்ராவின் தாத்தா, அப்பத்தாவும் கண்ணீரும் கம்பலையுமாக வர,


அதுவரை விபாட்சுவின் அணைப்பில் சுருண்டு நடுங்கிக்கொண்டிருந்தவள், அவர்கள் மூவரையும் பார்த்ததும், அவர்களை நோக்கி ஓடினாள்.


சுபத்ரா சென்ற கோலம் பெரியவர்களைப் பயமுறுத்திவிடக் கூடாதென்று அவளுடன் விபாட்சுவும் சென்று நடந்த விபரங்களைப் பதட்டப்படாத வகையில் கூறினான்.


தாத்தாவும், அப்பத்தாவும் ஆடிப்போய் அப்படியே இருக்கையில் சரிந்து அமர,


"தாத்தா, நேத்ரா நல்லா இருக்காங்க… அதிர்ச்சியில மயங்கிக் கிடக்கிறாங்க… நாளைக்கு நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்கன்னு டாக்டர் சொன்னாங்க… நீங்கக் எமோஷனலாகி உடம்பக் கெடுத்துக்காதீங்க" என்று வேகவேகமாகக் கூறியவன், அப்பத்தாவின் நடுங்கும்கைகளைப் பற்றி,


"நீங்க ரெண்டு பேரும் தைரியமா, தெம்பா இருந்தாத்தானே நேத்ரா சந்தோஷப்படுவா.‌‌" என்று அனைவருக்கும் ஆறுதல் கூறினான்.


ஆனால் தனியாக வந்து டாக்டர் கூறியதை நினைத்துக் கலங்கினான்.


"இப்போதைக்கு ஒன்னும் தெரியல… அவங்க மயக்கத்திலிருந்து எழுந்தாத்தான் தெரியும்" என்று டாக்டர் கூறியது நினைவு வர,


மனதார கடவுளைப் பிரார்த்தித்தான்…


இத்தனைபேரின் வேண்டுதலுக்கு இறைவன் செவி மடுக்காமல் இருப்பாரா?


இரவு இரண்டு மணிக்கெல்லாம் நேத்ரா மயக்கத்திலிருந்து வெளிவர,


"சின்னச்சின்னக் காயங்கள் தவிர வேறெதுவும் பிரச்சனை இல்லை!" என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்…


ஆஸ்பத்திரியில் நேத்ராவிற்கு அவசரகாலச் சிகிச்சை முடிந்து சீரியஸ் கண்டிசன் தாண்டியபிறகு தனியறைக்கு மாற்றினார்கள்.


தனியறையில் இரண்டு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றதால்,


நேத்ராவின் அப்பத்தா, தாத்தா சென்று பார்த்துவிட்டு வெளியே வரவும்,


மேனகாவும், சுபத்ராவும் பார்த்து விட்டு வந்து வராண்டாவில் அமர்நதுகொண்டனர்.


பிறகு கைலாஷ்சுடன் விபாட்சுபோய்ப் பார்க்க,


"என்ன பயந்துட்டீங்களா? எல்லாருமே இங்கதான் இருக்கீங்க?" என்று நேத்ரா சிரிக்க,


"பாவி! ஒரு நிமிசம் உயிரே போயிருச்சு" என்று கைலாஷ் திட்ட,


"நான் என்னமோ வேணும்னே மோதுனமாதிரி பேசுறீங்க?" என்று கூறி மீண்டும் சிரிக்கும்போது அறையினுள் வந்த பாபி கிருஷ்ணா,


"எவ்வளவு நேரம்டா இருப்பீங்க? எனக்குக் கஷ்டமா இருக்காதா? யாராவது ஒருதன் வெளிய போங்கடா!" என்றதும்,


விபாட்சுவைப் பார்த்தான் கைலாஷ்.


விபாட்சுவோ, கண்களில் கோபமும் வேதனையுமாக நேத்ராவைப் பார்த்தபடி இருக்க,


'ச்சே… நானே வெளிய போறேன்… விபாவுக்கு, தன்னாலதான இவளுக்குப் பிரச்சனைனு நினைக்கிறான் போல.‌‌ அவன் இருந்து பேசிட்டு வரட்டும்' என்று நினைத்தபடி, விபாட்சுவின் தோளில் ஆறுதலாகத் தட்டிவிட்டு வெளியேறினான்.


"நல்லா ஓட்டக் கத்துக்கிட்ட பின்னாடி தனியா ஓட்டீருக்கலாம்ல? எவ்வளவு பயந்துட்டேன் தேரியுமா? இப்ப எப்படி இருக்கு?" என்று பாபி கிருஷ்ணா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக,


"நான் நல்லாத்தான் ஓட்டினேன்… அந்த பில்டிங்க்ல இருந்து லாரி வரும்னு நினைக்கல." என்றவள்,


அமைதியாகத் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த விபாட்சுவைப் பார்த்ததும் குறும்புத்தனத்தைக் கைவிட்டு, விபாட்சுவை லேசாகக் கலங்கிய கண்களுடன் பார்த்து,


அவன் வேதனைப்படுவதைப் பொறுக்க முடியாமல், விபாட்சுவின் கையை அதரவாகத் தடவிக் கொடுக்க,


வருத்தத்துடன் கையை உருவியவன்,


"ஏன் இப்படிப் பண்ண? என்னைய காப்பாத்திட்டு… உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என் நிலமைய யோசிச்சுப் பார்த்தியா?" என்ற விபாட்சுவின் வார்த்தைகள் நேத்ராவின் உயிர்வரைத் தொட,


"எனக்கு ஏதாவது ஆகியிருந்தா இவன் வாழ்றது கடினம்னு சொல்றான்னா! எவ்வளவு பயந்திருப்பான்? அவன் கண்ணப் பார்த்தாலே தெரியுதே அவன் பட்ட கஷ்டம், அவனுக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்குன்னு" என்று நினைத்தபடி,


விபாட்சுவைப் பார்க்க,


எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்கும் அவனது முகம், அவனது கசங்கிய சட்டை போலவே கசங்கி இருந்தது…


தலையிலும், கையிலும் கட்டு போடப்பட்டு,


தலையெல்லாம் கலைந்து, முகமெல்லாம் வியர்த்து, கலங்கிய கண்களில் சிறிது கோபமும், கசங்கிய சட்டையில் ரெத்தமும், கீழே விழுந்ததால் ஒட்டிக்கொண்ட அழுக்குமாய் நின்றவனைப் பார்க்கும் எவருக்கும்,


'இவனா விபாட்சு?' என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நின்றிருந்தான்.


'அப்டினா, விபா இன்னைக்குப் பூரா அவனைக் கண்ணாடில பார்க்கவே இல்லைனுதானே அர்த்தம்? ரெத்தக் கறை பட்ட சட்டையைக்கூட மாத்தலையே?!! என்னை நினைச்சு அவனோட புறத்தோற்றத்தைப் பத்திக்கூட யோசிக்காம இருந்திருக்கானா?!! இந்த அளவுக்கா என்னைக் காதலிக்கிறான்! இவனோட காதல் கிடைக்க நான் எவ்வளவு கொடுத்து வச்சிருக்கனும்?' என்று கலங்கியவள்,


"நீங்க பத்திரமா இருந்ததப் பார்த்ததுனால மட்டுந்தான், இப்ப நான் உயிர் பிழைச்சு வந்திருக்கேன்‌. நீங்களும் என்கூடச் சேர்ந்து லாரில அடி பட்டிருந்திருந்தா, உங்களுக்கு என்ன ஆச்சோன்ற தவிப்பிலயே, அந்த நிமிசத்துலயே என் உயிர் பிரிஞ்சிருக்கும்… காப்பாத்தி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து எனக்கு ஆபரேஷனே பண்ணினாலும் என் உடம்புல உயிர் தங்க வாய்ப்பேயில்ல…" என்று லேசாக மூச்சிரைக்க, பிசிறடித்த ஹஸ்கி வாய்சில் பேசினாள்.


"நேத்ரா…" என்ற விபாட்சுவிற்கு,


'நேத்ரா எந்த அர்த்தத்தில் இப்படிச் சொல்கிறாள்?' என்பது குழப்ப,


'இவ என்ன இவன்ட்ட உளர்றா? இன்னும் உடம்பு சரியாகாததால விபாவ நான்னு நினைச்சுக் கிட்டாளோ?' என்று யோசைனையுடன் பாபி கிருஷ்ணா நேத்ராவைப் பார்க்க,


அவளோ விபாட்சுவைப் பார்த்து, "என் உயிரவிட நீங்க எனக்கு ரொம்ப முக்கியம் விபா… நீங்க இல்லாம என்னால வாழமுடியும்னு நினைக்கிறீங்களா? நிச்சயமா முடியாது..‌. எனக்கு… எனக்கு…‌எப்டி சொல்றதுன்னு தெரியல… நீங்க என் கண்முன்னாடி இருக்கிறவரைக்கும்தான் சத்தியமா என்னால வாழ முடியும் விபா. உங்களுக்காக நான் எதையும் எதையும் செய்வேன்… ஆனா எதுக்காவும் உங்களை என்னால பிரிஞ்சிருக்கவே முடியாது விபா." என்று நேத்ரா கண்ணீரோடு பேசியதைக் கேட்ட பாபி கிருஷ்ணாவிற்கு மட்டுமல்ல விபாட்சுவிற்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.


"நேத்ரா… என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா? இல்ல… பழச மறந்துட்டியா? என்று கலங்கிப்போய் பாபி கிருஷ்ணா கேட்க,


"என்ன பாபி? உங்களுக்குமா என் மனசுல இருக்கிறது புரியல? எனக்கொன்னும் தலையில அடிபடல பழசெல்லாம் மறுக்குறதுக்கு."


"பின்ன… அப்புறம் ஏன்… நீ… யார்ட்ட? என்ன பேசிட்டிருக்க?" என்று தன் இதயம் நொருங்கும் சப்தத்தில் துடித்தபடி பாபி கிருஷ்ணா கேட்டதும்,


அவன் தோளைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பிய விபாட்சு, "ப்ச்சு… விடு பாபி… அவளே பெரிய அதிர்ச்சிலருந்து மீண்டு வந்திருக்கா… இப்பப் போய் இதெல்லாம் ஏன் கிளறணும்? சரியாகி வீட்டுக்கு வந்துறட்டும். அப்புறம் தெளிவா கேட்டுக்கலாம்." என்று, தன் நண்பனின் மனம் புரிந்த பரிதவிப்பில்,


'நேத்ரா எதுவும் தவறாகக் கூறி விடக்கூடாதே' என்ற அச்சத்தில் பாபி கிருஷ்ணாவின் பேச்சை நிறுத்த,


"எனக்கு ஒன்னும் இல்ல விபா. நான் ரொம்பத் தெளிவாத்தான் பேசுறேன். இப்ப கேட்டாலும் அததான் சொல்லுவேன். வீட்டுக்குப் போனபிறகு கேட்டாலும் அதேயேதான் சொல்லுவேன். என் மனசு பூ…ரா நீங்க மட்டுந்தான் விபா இருக்கீங்க." என்று நேத்ரா விபாட்சுவிடம் காதலைச் சொல்ல


தன்னுடைய தோழியிடம், விபாட்சுவும், பாபி கிருஷ்ணாவும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததால், தானும் உள்ளே வர நினைத்த சுபத்ரா, நேத்ரா பேசியது அனைத்தையும் கேட்டு விட்டாள்.


நேத்ரா எந்த அளவுக்கு விபாட்சுவை விரும்புகிறாள் என்று புரிந்துகொண்ட, சுபத்ராவிற்கு, 'யாருக்காக அழுகிறோம்?' என்று புரியாமலேயே கண்ணீர் வழிய ஆரம்பித்தது.


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️

Post a Comment

0 Comments