உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟21
அடுத்தநாள் மாலையிலிருந்து தினமும், நேத்ராவிற்குக் கார் ஓட்டச் சொல்லித்தருவதாக விபாட்சு ஒத்துக்கொண்டதால், 'குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது விபாட்சுவை அருகிலிருந்து பார்க்க முடியும்' என்ற நினைவு தந்த சந்தோசத்தில், சுபத்ராவிற்கு இரவு பதினோரு மணியாகியும் சுத்தமாகத் தூக்கம் வரவில்லை…
'எப்போதடா விடியும்?' என்று ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தாள்.
தூக்கம் வருவதற்கான அத்தனை பயிற்சியும் பண்ணியாகிவிட்டது… கந்தர் சஷ்டி கவசம் சொல்லியாச்சு, ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணியாச்சு… அடுத்தநாள் என்னகலர் சுடிதார் அணியலாம்? என்று ஆரம்பித்து நெயில் பாலிஷ் வரை யோசித்துவிட்டாள்… ம்ம்ஹும்… தூக்கம் வரவில்லை…
'சும்மாவாவது கண்களை மூடிப் படுத்திருப்போம்' என்று முடிவுக்கு வந்தாள் சுபத்ரா.
அடுத்தநாள் மாலைநேரம் கல்லூரி முடிந்து வெளியே வந்தனர் ஐவரும்.
விபாட்சு கார் ஓட்டச் சொல்லித்தர, நேத்ரா, அவன் சொல்லிக்கொடுப்பதைப் பின்பற்றிக் கவனமாக ஓட்டினாள்.
நேத்ராவிற்குப் பின்னால் அமர்ந்திருந்த சுபத்ராவிற்கு விபாட்சு பேசுவது எதுவும் சரியாகக் காதில் விழவில்லை… ஆனாலும் அவன் முக அசைவுகள் மட்டுமே சுபத்ராவிற்குப் போதுமானதாக இருந்தது.
விபாட்சு கார் ஓட்டச் சொல்லித்தருவதில் மும்முரமாக இருப்பதால் தன்னை கவனிக்கமாட்டானென்ற நம்பிக்கையில் சுபத்ரா, வைத்தகண் வாங்காமல் விபாட்சுவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஏதோ ஒரு உணர்வில் சுபத்ராவைத் திரும்பிப் பார்த்துவிட்டான் விபாட்சு.
சட்டென்று பார்வையை மாற்றும் வழியறியாமல் சுபத்ரா திருதிருவென விழிக்க,
அவள் மனம் புரிந்த விபாட்சு யாருமறியா வண்ணம் கண்ணடித்துவிட்டான்…
அவ்வளவுதான் சுபத்ராவிற்குப் படபடவென ஆகிவிட்டது…
அவள் நிலை புரிந்தவன் மேலும் அவளைச் சீண்ட எண்ணி, புருவத்தை மெதுவாக, என்ன? என்பதுபோல் ஏற்றி இறக்க,
சுபத்ராவிற்குத் தொண்டைக்குழி வறண்டது…
எச்சிலைக்கூட்டி விழுங்கியவளிடம், 'நீ இங்கே வருகிறாயா?' என்பதுபோல் கண்களால் தன்னருகில் வரும்படி ஜாடை காட்ட,
'ம்ஹூம்' என்று வேகமாகத் தலையசைத்தாள் சுபத்ரா.
'ஏன்?' என்பதுபோல் கேட்டவனிடம் சுற்றியிருந்த நண்பர்களைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தலை கவிழ்ந்தாள்.
விபாட்சு ஒரு பக்கமாகச் சாய்ந்து அமர்ந்து இடது கையில் ஸ்டியரிங்க்கைப் பற்றிக்கொண்டு, வலது கையை இருக்கைகளில் இடையில் நீட்டி சுபத்ராவின் விரல்களைத் தொட,
நெஞ்சுக்கூட்டில் பட்டாம்பூச்சி பறந்தது… வெட்கமும், ஆசையும் நடத்திய போரைச் சமாளிக்க வழியின்றி இறுகக் கண்களை மூடிக்கொண்டாள்.
விரல்களில் ஆரம்பித்த நடுக்கம், உள்ளங்கால்வரை பரவ, படபடக்கும் உணர்வின் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு, உடல் முழுவதும் சிலிர்த்துத் தூக்கிவாரிப் போடச் சட்டென்று கண்விழித்தாள்.
சுற்றிலும் இருள் பரவியிருக்க ஜன்னல் வழியே தெரிந்த நட்சத்திரங்கள், 'காதல் கனவெல்லாம் காண ஆரம்பிச்சுட்ட? நடத்து நடத்து' என்று நகையாட,
விபாட்சுவின் முகம் மீண்டும் நினைவில் வந்து கண்ணடிக்க, மீண்டும் நாணம் வந்து சுபத்ராவைக் கொல்ல, குப்புறப் படுத்துக்கொண்டு கண்களை மூடியவளுக்கு மனதின் ஏதோ ஒரு மூலையில் எப்போதோ கேட்ட பாடல், நாவின் நுனி தீண்ட,
இரவின் ஏகாந்தமும், காதல் தந்த கதகதப்பும் சேர்ந்து பாடச்சொல்ல, மெதுவாக யாருக்கும் கேட்காத வகையில் பாடினாள்.
"உயிரே என் உயிரே
என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்கிறதே
ஓ ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே
எங்கேயோ உன் முகம்
நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்…"
என்று பாடும்போதே, ஒரு மாதிரியான நிழல் உருவங்கள் சுபத்ராவின் கண்களுக்குள் தெரிய,
கார் ஆக்ஸிடென்ட் ஆகி யாரோ ஒரு மனித உருவம் காரிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தலையில் பெரிதாக அடிபட்டுச் சாய,
இரத்தம் நெற்றி வழியோடி கண்களை மறைத்ததும் சட்டென்று அந்த உருவத்தின் கண்கள் திறந்து,
"உனது விழியில் எனது பார்வை
உலகைக் காணுமே…"
"உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
உயிரும் வாழுமே"
என்று பாட பதறி எழுந்தாள் நேத்ரா…
"என்ன இது? யாருக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு? அது எந்தப் பாட்டு?" என்று குழம்பியவளுக்குத் தொண்டை வறண்டு, ஏசியிலும் வியர்க்க,
எழுந்து தண்ணீர் குடித்தவளுக்கு இன்னும் நெஞ்சில் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அச்சத்தைக் கிளப்பியது…
வழக்கம்போலப் பல சர்ப்ரைஸ்களை வைத்துக்கொண்டு காலைப் பொழுது மலர,
தோழிகள் இருவருக்கும் ஒரே கனவு வந்ததை அறியாமல், கனவைச் சுத்தமாக மறந்து கல்லூரிக்குக் கிளம்பினர் தோழிகள்.
நேத்ரா கார் ஓட்டிப் பழக ஆசை என்று கூறவும், விபாட்சு தனது பென்ஸ் காரைக் கல்லூரிக்கு எடுத்து வந்திருந்தான்.
அன்று சாயங்கால வேளையில் கல்லூரி முடிந்ததும் நண்பர்கள் அனைவரும், ஒரு அரிசி ஆலைக்குச் சொந்தமான பெரிய திடலுக்கு விபாட்சுவின் காரில் சென்று இறங்கினர்.
நேத்ராவிற்கு, பென்ஸ் காரைப் பார்த்ததும் பயமாகிவிட்டது.
"சாதாரணக் கார் ஏதாவது எடுத்துட்டு வந்திருக்கலாமே விபா? இது… ஓட்டிப் பழகுவதற்கு இவ்வளவு எக்ஸ்பென்சிவ் கார் தேவையா?" என்று தயங்கிக் கேட்க,
அதற்கு விபாட்சு, "இந்தக் கார்தான் பழகுவதற்கு வசதியானது. பென்ஸ் கார்னா, உள்ளே ஏர் பலூன் இருக்கு. ஓட்டிப் பழகும்போது சின்ன சின்னத் தப்பு பண்ணாலும் பெரிய அளவுல அடிபடாமல் இருக்கும். அதான்!" என்று கூறிச் சிரித்தான்.
"இருந்தாலும் இவ்வளவு விலை உயர்ந்த கார்ல ஓட்டிப் பழக எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு." என்று நேத்ரா கூற,
"நான் தானே பழகிக் கொடுக்கப் போறேன்? உன் பக்கத்துலயே இருப்பேன். அப்புறம் என்ன?" என்று விபாட்சு கேட்கவும்,
அரை மனதுடன் சம்மதித்தவளை ஓட்டுனர் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு, அதை ஒட்டிய இருக்கையில் விபாட்சு அமர்ந்துகொள்ள,
பின் ஷீட்டில் பாபி கிருஷ்ணா, கைலாஷ், சுபத்ரா மூவரும் ஏறினர்.
"ஏய் நீங்க எதுக்கு டா ஏறுறீங்க? நீங்க இப்படி நிழலில் உட்கார்ந்து பேசிட்டு இருங்க. நாங்க ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வர்றோம்." என்று விபாட்சு கூற,
"அதுக்கு எதுக்கு நாங்க? சும்மா எங்களையும் உட்கார வச்சு ஓட்டுங்கடா…" என்று பாபி கிருஷ்ணா கூற,
எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டு நேத்ராவிடம் "உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?" என்று கேட்க,
அவள், சுபத்ராவைப் பார்த்து, "நானே இப்பத்தான கத்துக்கப் போறேன்… இதுல… நீங்க ஏன்?"
"நாங்க வர்றதுல உனக்கென்ன எரும? நீயா தூக்கி சுமக்குற?" 'எங்கே விபாட்சுவை சைட் அடிக்க முடியாம போயிடுமோ' என்ற பதற்றத்தில் சுபத்ரா கேட்க,
"நானே, நல்ல கார் என்னாகப்போகுதோன்னு உதறல்ல இருக்கேன்… இதுல நீங்க வேற ஏன்?" என்று கெஞ்ச,
"அதுதான் ஏன்" என்ற கைலாஷ்சிடம்,
"ஏதாவது… வந்து… ஓட்டும்போது தெரியாம எங்காவது முட்டிக்கிட்டேன்னா கஷ்டம்ல?" என்று கேட்டவளை,
"ஏன் ஆரம்பிக்கும்போதே அபசகுனமா பேசித்தொலைக்கிற? ம்ம்?" என்ற பாபி கிருஷ்ணாவிடம்,
"உங்க நல்லதுக்குத்தானே சொன்னேன்" என்றதும்
இரு நண்பர்களின் மனதிலும் பனிச்சாரல் விழ,
சுபத்ரா, "என்ன பேச்சுன்னு பேசிகிட்டு இருக்க? நம்ம எல்லோரும் சேர்ந்துதான வந்தோம்? எதுவா இருந்தாலும் நம்ம எல்லாருக்குமே நடக்கட்டும். சும்மா ஏதாவது பேசாத." என்று நேத்ராவைக் கண்டித்தவள்,
"அவ கெடக்கா வாங்க! நாமளும் சேர்ந்து சுத்துவோம்." என்று பாபி கிருஷ்ணாவிடமும் கைலாஷ்சிடமும் கூறிவிட்டுக் காரில் ஏறினாள்.
"எல்லாம் ஓகே! ஆனா ஒரே ஒரு கண்டிஷன். கார்ல நீங்க மூணு பேரும் எங்கள எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. பாட்டுப் பாடுறது, சந்தோசமா விளையாடி எங்க மேல விழுகிறது, இந்த மாதிரிலாம் செய்யக் கூடாது. சரியா?” என்று விபாட்சு கேட்க,
"இப்ப என்ன? நாங்க அமைஐஐஐதியா வரணும். அவ்வளவுதானே? ஒரு சத்தம் கேக்குதானு பாருங்க!" என்று கூறிய சுபத்ரா, 'சைட் அடிக்கிறதுக்குக் கண்ணு போதுமே! பேசிச் சிரிக்கணுமா என்ன?' என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
இவ்வாறாக ஒவ்வொரு நாள் மாலையும் விபாட்சு கார் ஓட்டச் சொல்லித்தர,
நேத்ரா கார் ஓட்டக்கற்றுக்கொள்ள,
பின் சீட்டில் பாபி கிருஷ்ணா, கைலாஷ், சுபத்ரா மூவரும் அமர்ந்து, அவரவர் ஆட்களை சைட் அடித்தபடி அமைதியாக வர,
இரண்டு வாரங்களில் கார் ஓட்ட நன்றாகக் கற்றுக்கொண்டாள் நேத்ரா.
இரண்டு வாரங்கள் கழிந்த அடுத்த நாள்,
நேத்ரா ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும், அவளருகில் அமர்ந்த விபாட்சு,
"இன்னைக்கு நீயா ஓட்டு… நான் உதவி செய்யவே மாட்டேன் ஓகே?" என்றதும்,
இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மிக நன்றாகக் கார் ஓட்டியதால், நேத்ரா சந்தோஷமாக, "ஓகே" என்றாள்.
மற்றவர்களும் பின்னால் ஏறவும், விபாட்சுவிற்கு ஏதோ ஒரு வகையான எதிர்மறை உணர்வு எழுந்தது. எனவே நண்பர்களிடமும், சுபத்ராவிடமும்,
"இன்னைக்கு நானும் நேத்ராவும் மட்டும் ஒரு ரௌண்ட் போயிட்டு வர்றோம். நீங்க இறங்கிக்குங்க" என்று விபாட்சு கூறினான்.
"ஏன்? இதுவரை நாங்களும் உங்ககூடத்தானே வந்தோம்" என்று விபாட்சுவையும், நேத்ராவையும், பின் இருக்கையில் இருந்த முவரும் மாறி மாறிப் பார்த்துக் கேட்க,
"இத்தனைநாள் நேத்ரா கார் ஓட்டினாலும் நான்தான் எல்லாவற்றையும் கன்ட்ரோல் பண்ணனேன். ஆனா இன்னைக்கு நேத்ரா ஓட்டும்போது ஜஸ்ட் பக்கத்துல உட்கார்ந்திருப்பேனே தவிர உதவ மாட்டேன்."
"அதுக்கு?" என்று இரு நண்பர்களும்,
"என்ன விபா இப்படிச் சொல்றீங்க? நீங்க இருக்கும்போது எங்களைமட்டும் கலட்டிவிடுறது சரியில்லை…" என்ற சுபத்ராவிடம்,
"நான் சொல்றத நீ சரியா புரிஞ்சுக்கல… இவ்வளவு நாள் என் கன்ட்ரோல்ல கார் இருந்தது… நீங்க பின் சீட்டில் உட்கார்ந்து அரட்டை அடிச்சாலும், என் கவனத்தத் திசை திருப்பாது. ஆனா நேத்ரா, இப்பத்தான் பழகுறா… அவங்களுக்கு நீங்க கூட இருக்கிறது கொஞ்சமாவது டென்சன் ஆகும்… சோ"
"சோ?" என்று கேட்டான் கைலாஷ்.
"நாங்க ஒரு ரௌண்ட் போயிட்டு வந்துடுறோம்." என்ற விபாட்சுவிடம்,
"எதுவா இருந்தாலும் நானும் வருவேன்." என்று சுபத்ராவும் அடம்பிடிக்க,
தனது நண்பர்களை, 'புரிஞ்சுக்கிட்டுக் கொஞ்சம் சமாளிங்களேன்டா' என்று கெஞ்சும் பாவனையில் விபாட்சு பார்த்தான்.
"சரி வா சுபா! நாம கோல்ட் காஃபி குடிப்போம்" என்று அவர்கள் சுபத்ராவை சமாதானபடுத்திக் கீழே இறங்கிக் கொண்டனர்.
கார் திடலை நோக்கிச் செல்வதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி காஃபி கடைக்குள் மூவரும் சென்றனர்.
நேத்ரா மிக நேர்த்தியாகக் கார் ஓட்ட,
விபாட்சு, 'இனி யார் கைடன்ஸ்சும் தேவையில்ல நேத்ரா… நல்லா ஓட்டுற' என்று கூறினான்.
விபாட்சுவும், நேத்ராவும் மட்டும் சென்றது ஏனோ மனதிற்குள் சிறு சஞ்சலத்தை இரு நண்பர்களுக்குமே உருவாக்க,
அது பொசஸிவ்னஸ்சால் உருவானது என்று புறந்தள்ளிவிட்டு, ஜில்ல்லென்றிருந்த காஃபியைக் குடிக்க ஆரம்பித்தனர்.
அதேவேளையில் சுபத்ராவிற்கும் மனமும், வயிறும் கலங்க,
அவளும் பொறாமையால் வந்த கலக்கம் என்று புறந்தள்ளினாலும்,
அவளால் நிம்மதியாக அமரக்கூட முடியவில்லை…
'எருமேமாடே! விபாகூடப் போயிருக்கிறது நேத்ரா! அவ உன்னோட உயிருக்கும் மேலானவ இல்லையா? ஏன் கிடந்துத் தவிக்கிற?' என்று தன்னையே திட்டும்போது,
அவளது வலது கண் துடிக்க, 'என்ன இது?' லேசாக மனம் நடுங்கியது.
'இதெல்லாமா நம்புவ?' என்று தன்னைத்தானே கிண்டல் அடிக்க முயன்று தோற்றவளுக்கு,
'நீயும் போயிருக்கனும் சுபா… இன்னைக்கு விபாவவோட கைடன்ஸ் இல்லாம கார் ஓட்டுறா நேத்ரா' என்று மனம் படபடத்தாலும்,
'அறிவுகெட்டவளே! அவ கூடத்தான் விபா இருக்கானே' என்று மூளை அறிவுறுத்தியும்,
மனதில் "ஏதோ நடக்கப் போகிறது' என்று பயமுறுத்தியதால், மாலைநேரத் திறந்தவெளிக் கடையிலும் வியர்த்துக் கொட்ட,
யாரிடமும் எதுவும் கூறாமல், தனது ஸ்கூட்டியில் விபாட்சுவின் கார் சென்ற திடலுக்குள் சென்றாள்.
காரின் பின்னால் வரும் வண்டிகளை ஓட்டுனர் காண்பதற்கான கண்ணாடி (ரியர் வியூ மிரர்) வழியாக சுபத்ரா டூவீலரில், தங்களது காரின் பின்னால் வருவது தெரிந்து, சுபத்ராவைப் திரும்பிப் பார்த்து, நேத்ரா கையசைக்க,
விபாட்சுவும், 'இவளுக்கு என்னைவிட்டு இருக்க முடியாது.' என்று சிரித்தபடி, தங்களது கார் ஓடும் வழியில் எந்த ஒரு வாகனமும் வரவில்லை என்பதைப் பார்த்து உறுதி செய்துகொண்டு, சுபத்ராவைக் காண பின்னால் திரும்பிப் பார்க்கும் வேளையில்,
பக்கவாட்டிலிருந்த குடொனிலிருந்து எதிர்பாராத விதமாக லாரி வர,
அது ஒரு அரிசி ஆலைக்குரிய திடலானதால், ஆலையிலிருந்து அரிசிமூட்டைகளை லாரியில் ஏற்றி வந்த லாரியிலிருந்தவர்களும், 'அந்தத் திடலில் எதிரே ஒரு கார் வரும்' என்று எதிர்பார்க்காததால், காரோடு மோதிவிடாமலிருக்க, வேகமாக லாரியை இடப்பக்கமாக ஒடிக்க,
அதே நேரத்தில் எதிரே வந்த லாரியைப் பார்த்துவிட்ட நேத்ரா, பிரேக் போட்டாலும் லாரிமீது கார் மோதிவிடும் என்ற பயத்தில், காரை லாரி திரும்பிய பக்கமே திருப்ப,
'தப்பிக்க முடியாது' என்பதை அறிந்துகொண்ட நேத்ரா, ஒரு நொடிகூடத் தாமதிக்காமல், பின்னால் வந்த சுபத்ராவைப் பார்த்தபடி வந்த விபாட்சுவைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டாள்.
விபாட்சு திடலின் சிமெண்ட் தரையில் "பொத்" தென்று விழ,
லாரி பிரேக் போட்டும், நேத்ராவின் கார், லாரியோடு நேருக்கு நேர் மோதியது…
விலோசனம் தொடர்ந்து வரும்…
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
0 Comments